Kathambari Novels
வெற்றி தமிழை கூட்டிக்கொண்டு கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவிற்கு வந்திருந்தான். ஆட்டோவில் வந்து இறங்கியதும் உள்ளே செல்லாமல், பெரிய எழுத்துப் பொறிக்கப்பட்டிருந்த முகப்புச் சுவரில் அவளை நிற்கச் சொல்லி, புகைப்படம் எடுத்துக்கொண்டான்.
டீ-நகர் சாலையோர கடையில் தமிழுக்கென்று ஒரு கவுன் வாங்கியிருந்தான். அவளிடம் மொத்தமாக இருந்தது நான்கு கவுன்கள். நான்குமே சிறு பூக்கள் வடிவமைப்பு கொண்டது. மகளுக்கு இதுமாதிரி போடுவதுதான் உமாவிற்குப் பிடிக்கும் போல என்று, அவனும் அதேமாதிரி கவுன்தான் வாங்கியிருந்தான்.
சிறு வெள்ளை நிற பூக்கள் போட்ட, தேன் நிறத்திலான கையில்லாத காட்டன் கவுன். போட்டு விட்டதும் தமிழிடம், ‘பிடிச்சிருக்கா பேபி’ என்று கேட்டான். புத்தாடையை மெல்ல தொட்டுப் பார்த்தாள். பின் அதைத் தடவிப் பார்த்தபடி, ‘பிடிச்சிருக்கு’ என்று புது கவுன் போட்ட சந்தோசத்தில் தலையாட்டினாள்.
அடுத்து தமிழுக்கு அவன் தலை கட்ட போகும் போது, ‘கொடுங்க சார், நான் கட்டி வுடறேன்’ என்று உதவிக்கு வந்தாள் ராணி.
‘முதலதான் கஷ்டமா இருந்தது. இப்போ பழகிடுச்சி’ என்று மறுத்துவிட்டான்.
இப்போதெல்லாம் அவனுக்கும் தமிழுக்குமான உலகின் உள்ளே யாரையும் அனுமதிக்க அவனுக்கு மனமே இல்லை.
கடகடவென அவளுக்கு குடுமி போட்டு, வாங்கி வந்திருந்த பூவையும் வைத்துவிட்டுப் பார்த்தான். ‘என் கண்ணே பட்டுடும் போலயே’ என்று மனதில் சொல்லிக் கொண்டான். அங்கே வைத்தே அவளைப் புகைப்படம் எடுக்க நினைத்தான்.
அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று தோன்றியதால் எடுக்கவில்லை.
அதுதான் இங்கே வந்ததும் எடுத்துக் கொண்டான்.
க்யூ ஆர் கோட் ஸ்கேன் செய்து நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றான். அதற்கே பன்னிரண்டு ஆகியிருந்தது. சுற்றிப் பார்க்கும் முன்பே சாப்பிடலாம் என்று நினைத்தான். கார் நிறுத்தும் இடம் அருகே இருந்த ‘Zoo Café-க்குள் சென்றான்.
பிஸிபேளாபாத் வாங்கி அவளுக்கு ஊட்டிவிட்டான். சூடாக இருந்தது. ஊதி ஊதி கொடுத்தான். கொஞ்சம்தான் சாப்பிட்டாள். சுவை பிடிக்கவில்லை போல. வேண்டாம் என்றுவிட்டு, தண்ணீர் வேண்டுமென சைகை செய்தாள்.
இன்று வீட்டிலிருந்து வரும்போதே ஒரு பையில் தண்ணீர் புட்டியும், பிஸ்கட் பொட்டலமும் எடுத்து வந்திருந்தான். நாள் முழுவதும் வெளியே இருக்கப் போவதால் தேவைப்படலாம் என்று.
அதிலும் சென்ற முறை கோயில் போனபோது பிரசாதம் சாப்பிட்டு முடித்து தமிழ் தண்ணீர் கேட்டிருந்தாள். கைவசம் இல்லை என்று அவன் விழித்தபோது ஒரு பெண்மணி, ‘குழந்தைய வெளிய கூட்டிட்டு வர்றப்ப எதுக்கும் கொஞ்சம் ஸ்நாக்ஸ், வாட்டர் பாட்டில் எடுத்து வரணும் தம்பி’ என்று சொல்லி இருந்தார்.
அதுதான் இன்று முன்னேற்பாட்டோடு வந்திருந்தான். தமிழுக்கு தண்ணீர் எடுத்துக் குடிக்க வைத்துவிட்டு மிச்சம் இருந்த பிஸிபேளாபாத்தை அவன் சாப்பிட்டுக் கொண்டான். ஒரு தயிர் சாதம் வாங்கினான். அதிலும் அவளுக்கு ஓரிரு வாய் கொடுத்துக் கொண்டே அவனும் சாப்பிட்டு முடித்தான்.
சாப்பிட்டு வெளியே வந்தபோதுதான் வெயிலின் உக்கிரம் தெரிந்தது. தமிழைத் தூக்கிக் கொண்டான். உள்ளேயே இருந்த கடையில் அவளுக்கு ஒரு தொப்பி வாங்கி மாட்டிவிட்டான். தலையில் என்னமோ போலிருக்க உடனே, ‘வேண்டாம்’ என்று கழட்டி அவன் கையில் கொடுத்தாள்.
‘வெயில் எப்படி அடிக்கு பாரு’ என்று மீண்டும் மாட்டிவிட்டான். இப்போது அவள் கழட்டவில்லை. ஆனால் எவ்வளவு நேரம் போட்டிருப்பாள் என்று தெரியவில்லை. தொப்பியுடன் அவளை புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
அவள் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான். பச்சைப் பசுமையென இருந்த சூழல் நன்றாக… இதமாக இருந்தது. வழிக்காட்டவென வைத்திருந்த வரைபடம் போர்டில் ஒரு முறை பார்த்துவிட்டு நடக்க ஆரம்பித்தான்.
பெரிய வேலிக்குள் புள்ளிமான்கள் இருப்பதைப் பார்த்ததும் தமிழ் அவன் கையை விட்டு ஓடிச் சென்று பார்த்தாள். அரணாக இருந்த வேலியில் சாய்ந்து மான்களைப் பார்த்து, ‘பாருங்க’ என்று கைநீட்டினாள் அவனிடம்.
அப்படியே அவளைப் புகைப்படம் எடுத்துவிட்டு, அவனும் வந்து நின்று கொண்டான்.
கட்டங்களாக இருந்த கம்பி வெளியில் முகத்தை அழுத்தி நின்று, மான்கள் ஓடுவதை, தாவுவதை ஆசையாகப் பார்த்தபடி நின்றாள். பத்து நிமிடத்திற்கு மேல் அதையே பார்த்து நின்றாள்.
“இங்கயே நின்னா எப்படி பேபி, வா வேற பார்க்கலாம்” என்று கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.
விதவிதமான பறவைகள் இருக்கும் பகுதிக்கு வந்திருந்தனர். சிறு கொக்கு, மஞ்சள் மூக்கு நாரை, அறிவாள் மூக்கன், கரண்டி வாயன் என்று அனைத்தின் முன்னும் அவளை நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
தமிழுக்கு மான் பார்க்கையில் இருந்த ஆர்வம் பறவைகளைப் பார்ப்பதில், இல்லை.
சரி, அடுத்து என்னென்னு பார்க்கலாம் என்று அவள் கைப் பிடித்து நடக்க ஆரம்பித்துவிட்டான்.
அடுத்து அவர்கள் சென்றது முதலைகள் இருக்கும் பகுதிக்கு. வெயில் அதிகம் இருந்ததால் முதலைகள் ஒன்றுகூட வெளிவரவில்லை.
ஐந்து நிமிடம் நின்று பார்த்துவிட்டு, “வா போலாம்” என்று அடுத்த பகுதிக்கு கூட்டிப் போனான்.
அடுத்ததாக அவர்கள் பார்த்தது மூடிய கண்ணாடி அறைக்குள் இருந்த பாம்பு வகைகளை. முதல் இரண்டு வகை பாம்புகள் பெரியளவு உடலில் நெளிந்து கொண்டு போவதைப் பார்த்ததுமே குழந்தைக்குப் பயம் வந்துவிட்டது.
வெளியே வந்திருக்கோம் என்று அதுவரை துள்ளிக் குதித்து நடந்து வந்தவள், ‘தூக்கு’ என்று அவனைப் பார்த்து கைகள் விரித்தாள்.
“அதுக்குள்ள டயர்ட் ஆகிட்டியா” என்று தூக்கிக் கொண்டு நடந்தான்.
அடுத்து மலைப்பாம்பு, நல்ல பாம்பு பார்த்ததுமே அழத் தொடங்கிவிட்டாள். அவன் தோளில் முகத்தை அழுத்தி வெளியே கைக் காட்டி காட்டி அழுதாள்.
பயந்துவிட்டாள் என்று புரிந்ததும் வேகமாக வெளியே செல்ல நடக்கையில், ‘பாம்ப பார்த்து பயந்துருச்சே போல’ என்று இருவர் சொல்லிக் கடந்தனர்.
அவன் வெளியே தூக்கி வந்த பின்னும் அழுது கொண்டே இருந்தாள்.
“அழாத பேபி, அழாத” என்று திரும்பத் திரும்பச் சொன்னான். இப்படி அவள் அழுவது இதுதான் முதல்முறை என்பதால், எப்படிச் சமாளிக்க, எப்படி அழுகையை நிறுத்த என்று தெரியாமல் திண்டாடினான்.
அவன் தோளில் இருந்தது முகத்தை எடுக்கவேயில்லை. அவன், ‘நம்ம வெளிய வந்திட்டோம் பாரு’ என்றாலும் கேட்கவில்லை. ‘ச்சே நான் யோச்சிருக்கணும்’ என்று அவனையே திட்டிக் கொண்டான்.
சற்றுநேரம் அவளை நெஞ்சோடு அணைத்துப் பிடித்து இருந்தான்.
அவள் அழுகை விசும்பலாகக் குறைந்ததும், அவளைத் தூக்கிக் கொண்டு குழந்தைகள் விளையாட்டுப் பகுதிக்கு வந்தான். சுற்றிலும் மரம், நடுவே சீசா, சறுக்கு, மேரி-கோ என்று இருந்த அந்த இடம் வெயிலுக்கு இதமாக இருந்தது. அங்கிருந்த மர இருக்கையில் அமர்ந்தான்.
அவளது விசும்பல்கூட நின்றிருந்தது. அப்போதும் சற்று நேரம் கழித்துதான் அந்த இடத்தை சுற்றிப் பார்த்தாள்.
கண்ணீர், வியர்வை என்று இருந்த அவள் முகத்தைத் துடைத்துவிட்டான். தண்ணீர் எடுத்து குடிக்க வைத்தான். இரண்டு பிஸ்கட் எடுத்துச் சாப்பிட வைத்தான்.
பயம் தெளிந்துவிட்டது என்றதும் இறக்கிவிட்டான்.
மெதுவாக ஒவ்வொரு விளையாட்டுச் சாதனத்தையும் தொட்டுப் பார்த்தாள். பின் ஒவ்வொன்றாக ஏறினாள்.
‘பார்த்து பார்த்து’ என்று அவளருகில் வந்து நின்று கொண்டான்.
சறுக்கில் ஏறி விளையாட ஆரம்பித்த பின் வேறு எதிலும் விளையாடவில்லை. மறுபடி மறுபடி அதிலேயே ஏறுவதும் சறுக்குவதுமாக இருந்தாள். சந்தோஷம் பொங்க அவள் விளையாடுவதை காணொளியாக எடுத்துக் கொண்டான்.
சற்றுநேரம் சென்றதும், “போதும் பேபி, மத்ததும் பார்க்கணும்ல” என்றான்.
அப்போதும் தமிழ் விளையாடுவதை நிறுத்தவில்லை.
“தமிழ் வா, போகலாம்” என்றான். இதை முடித்துவிட்டுக் கடற்கரைப் போகவும் திட்டமிட்டிருந்தான். இங்கேயே இவ்வளவு நேரமானால் எப்படிப் போக கடற்கரைக்கு?
மீண்டும் மீண்டும் சொல்லி, ‘இன்னொரு நாள் நம்ம வரலாம்’ என்று உறுதி அளித்து அங்கிருந்து அழைத்துச் சென்றான். அடுத்து அங்கே வேறு எதுவும் பார்க்கவில்லை. உள்ளேயே இருந்த முயல் கப்பையில் அவனுக்கு ஒரு தேநீர் வாங்கிக் கொண்டு, தமிழுக்கு பன் பட்டர் ஜாம் வாங்கினான்.
சிறு குடில் மாதிரி அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டு முடித்தனர். அங்கே இருந்த ஒருவரிடம் சொல்லி, இருவரையும் சேர்த்து ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு, மெரினா கடற்கரைக்கு கிளம்பினான்.
சூரிய அஸ்தமனப் பொழுதாகும் கடலின் அழகில், கடற்கரை பொன்மணற் வெளியில் தமிழ் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான். கூட்டம் இருந்தது. அதனால் அவள் கையை இறுக்கமாகப் பிடித்திருந்தான்.
சில வினாடிகளுக்குப் பின் ஆட்கள் அதிகம் இல்லாத கடற்கரை பகுதிக்கு வந்திருந்தார்கள். அவன் அங்கே அமர்ந்து கொண்டான். ஊதுபை, குமிழி நீர் கேட்டிருந்தாள். வாங்கிக் கொடுத்திருந்தான்.
அவன் கையில் ஊதுபையைக் (ballon) கொடுத்துவிட்டு, குமிழி நீர் (bubbles) வைத்து விளையாடினாள்.
வட்ட முனையுள்ள குச்சியை குமிழி திரவத்தில் நனைத்து, மெதுவாக ஊதி ஊதி காற்றில் குமிழிகளைப் பறக்கவிட்டு தமிழ் விளையாட, வெற்றி அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பறக்கும் குமிழிகளை உடைத்துவிட்டு, அடுத்த முறை ஊதினாள். எட்டிப் போய் பறக்கும் குமிழிகளை அவள் பின்தொடர்ந்து போனால், “இங்கயே நின்னு விளையாடு தமிழ்” என்று போய் அவளைப் பிடித்து வந்தான்.
சூரிய அஸ்தமன கதிர்கள் ஊடுருவிச் செல்லும் காற்றுக் குமிழிகள் அருகில் தமிழ், அதை உடைத்துச் சிரித்து விளையாடும் தமிழ், குமிழிகள் உடைந்து சிதறும் நீரினால் லேசாக முகம் சுருக்கிடும் தமிழ் என்று அனைத்தையும் புகைப்படமாக எடுத்துக் கொண்டே இருந்தான்.
கடற்கரை மணலில் கவிஞன் போல்
வெற்றி அமர்ந்திருக்க
சூரியக் கதிர்கள் பொன்னிற
ஒளி வீச
நுரை பொங்க அலைகள் வந்து
இசை மீட்ட
நீர் நிறைந்த குமிழிகள் காற்றில்
நடனம் ஆட,
கவிஞனின் படைப்பான
கவிதை வரிகளாய்
ஒவ்வொரு பக்கத்திலும்
தமிழ் ஓடிக் கொண்டிருந்தாள்…
குமிழ் நீர் தீர்ந்து போன பின்தான் வந்து அவன் மடியில் அமர்ந்தாள். அவள் அமர்ந்ததும், உச்சந்தலையில் முத்தம் வைத்தான். பின்னால் தலை சாய்த்து அவன் முகம் பார்த்தாள். முன் நெற்றியிலும் முத்தம் வைத்தான்.
மழலைச் சிரிப்பு சிரித்தவள் எழுந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
அப்படியே குழந்தையை நெஞ்சில் சரித்துக் கொண்டு, கடற்கரை மணலில் சாய்ந்தான். வெகுநேரம் அப்படியே இருந்தார்கள்.
இருள் பூசத் தொடங்கி சூரியன் மறைந்து மஞ்சள் விளக்குகள் போட்டதும், “வா பேபி சாப்பிடலாம்” என்று அவளைத் தூக்கிக் கொண்டு நடந்தான். ஒரு சாப்பாடு வாங்கினான். மீனும் வாங்கினான்.
அவள் சோறு சாப்பிடவில்லை. மீன் மட்டும்தான் சாப்பிட்டாள். முள் இருக்கா என்று பார்த்து பார்த்து அவளுக்கு ஊட்டிவிட்டான். வேடிக்கை பார்த்தபடி, நீல நிற ஊதுபையை வைத்து விளையாடிக் கொண்டே சாப்பிட்டாள்.
நான்கு வாய் மீன் கொடுத்த பின், ஒரு வாய் சோறு கொடுக்கப் பார்த்தான். ‘வேண்டாம், மீன்தான் வேணும்’ என்று கை காட்டினாள். மீன் வேறு காரமாக இருந்தது. ‘ஷ், ஷ்’ என்று உதட்டால் உதடுகளை ஈரமாக்கி காரத்தைத் தாங்கி கொண்டு, சுவையை ருசித்து ருசித்துச் சாப்பிட்டாள்.
பார்க்க பார்க்க வெற்றிக்கு, என்னமோ இந்த ஜென்மத்தில் அவன் பிறந்ததே இந்த நேரத்தில் இப்படி அவளுக்கு மீன் ஊட்டிவிடத்தான் என்று தோன்றியது.
“போதுமே ரொம்ப வேண்டாம் பேபி’ என்று சொன்ன பின்னும் ஐந்தாறு வாய் வாங்கத்தான் செய்தாள். சோற்றில் மீன் குழம்பு ஊற்றி அவன் சாப்பிட்டுக் கொண்டான். சாப்பிட்டு முடிக்கவே நேரமானதால் உடனே கிளம்பிவிட்டான்.
இருவருக்கும் முகம் வாடிவிட்டது.
கடற்கரைப் போக்குவரத்து நெரிசல் தாண்டியதும் ஆட்டோ வேகம் எடுத்துப் போனது. ஓரமாக உட்கார்ந்து சாலையைப் பார்த்து அவள் வர, அணைவாகப் அவளைப் பிடித்தபடி அவன் இருந்தான்.
திடீரென அவன் மடியில் உட்கார வேண்டும் என்று அமர்ந்து கொண்டாள். தலையை நிமிர்த்து அவன் முகத்தைப் பார்ப்பதும், வெளியே பார்ப்பதுமாக இருந்தாள்.
ஆட்டோவில் இருந்த சிறு வெளிச்சத்தில் அதைக் கண்டவன், ‘என்ன’ என்று முகமொழியால் கேட்டான்.
ஒன்றுமில்லை என்பது போல் அவன் நெஞ்சில் மோதி சாய்ந்து கொண்டாள். சற்று நேரத்தில் மீண்டும் அவனைப் பார்த்தாள்.
“என்னடா, என்ன வேணும்” என்றான்.
அவன் முகத்தையே பார்த்து இருந்தாள்.
“நாளைக்கு நம்ம வெளில போலாம், சரியா?” என்றான்.
சரி என்று தலையை ஆட்டிக் கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
வழக்கமாக இப்படி வெளியே போய்விட்டு வரும்போதே தூங்கிவிடுவாள். ஆனால் இன்று தூங்காமல் இருந்தாள். உறங்கட்டுமென முடிக்கற்றைகளை ஒதுக்கி தலைகோதிவிட்டுப் பார்த்தான். அப்படியும் அவள் தூங்கவில்லை.
மேம்பாலத்திற்கு வந்தபோதும் தமிழ் தூங்காமல் இருந்ததால் ஆட்டோவை அனுப்பிவிட்டு, அவளைத் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தபடி சற்றுதூரம் நடந்து நடந்து அவளைத் தூங்க வைத்தான்.
அப்படியும் படுக்க வைக்கையில் தூக்கம் கலைந்து முழித்து, அவன் முகம் பார்த்தாள்.
சற்றுநேரம் தட்டிக் கொடுத்தான். தலைகோதிவிட்டான்.
அப்போதும் அவள் தூங்கவில்லை. ஆனால் கண்களில் தூக்கம் இருந்தது. அதேநேரம் அந்தக் கண்களில்… தூங்கினால் அவன் போய்விடுவானோ என்ற பயமும் இருந்தது.
தமிழுக்கு, அப்பா பாசம் எப்படி இருக்கும் என்றெல்லாம் தெரியாது. ஆனால் வெற்றி அவளைத் தூக்கிக் கொண்டு சுற்றும் போது, வெளியே கூட்டிக் கொண்டு போகையில், கேட்டதை வாங்கிக் கொடுக்கையில், அவன் செல்லம் கொஞ்சுகையில் தகப்பன் பாசம் இப்படித்தான் இருக்குமென உணர்கிறாள்.
அந்த அன்பு, பாசம் எப்போதும் வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். அதற்குச் சிறு நேர இடைவெளி வருவதைக் கூட அந்தக் குட்டி மனம் விரும்பவில்லை.
இங்கே மற்ற பிள்ளைகளின் அப்பாக்கள் எல்லாம் அவர்கள் கூடத்தானே இருக்கிறார்கள்… அப்படித்தான் எனக்கும் வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.
குழந்தையின் மனம் அவனுக்குப் புரிகிறது. இதற்கு முன் சில நேரங்களில் படுக்க வைக்கும் போது விழித்திருக்கிறாள். அருகில் படுத்து… அவன் தட்டிக் கொடுத்தால் உறங்கிவிடுவாள். இன்று என்னவோ எவ்வளவு அரவணைப்பு தந்தும்… தூக்கம் இருந்தும், கண்ணை மூட மறுக்கிறாள்.
அந்தக் மழலைக் கண்களில் ஏக்கங்கள் மலையளவு இருந்தன.
‘வீட்டில பேசணும்… குணாகிட்ட பேசணும்’ என்று அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டுமென்றெல்லாம் தெரிந்தது. ஆனால் இந்த நிமிடம் ‘என்ன செய்ய, என்ன சொல்ல’ என்று தெரியாமல், ‘தூங்கு பேபி” என்றான்.
அப்போதும் அவனையே பார்த்திருந்தாள்.
“நாளைக்கு காலைல சீக்கிரமா வந்திடுவேன்” என்று சொல்லி முடிக்கும் முன்னே,
‘இல்ல அது வேணாம், இப்ப போ கூடாது’ என்பது போல் உதடு பிதுக்கிக்கினாள். தூக்கம் சொக்கும் அவள் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்துவிட்டது.
‘எனக்காக அழறாளா… என் பொண்ண நானே அழ விடலாமா’ என்று அவன் மனம் பதறிவிட்டது. சட்டென, “பேபி, அப்பா சொல்றேன்ல நாளைக்கு சீக்கிரம் வருவேன்னு, கண்டிப்பா வருவேன். இப்ப தூங்கு” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு… அவளுக்குச் சிறு கீற்றாய் புன்னகை வந்தது. அவன் அப்பா என்று சொன்னதைப் புரிந்தவள், அதை உச்சரிக்க முயன்றாள்.
சரியாக வரவில்லை. ஆனாலும் ‘ப்ப’ என்ற மெல்லிய ஓசை மட்டும் கேட்டது.
வெற்றிக்கு தன்னை அறியாமல் கண்கள் கலங்கிவிட்டன.
போக்குவரத்துக்கு குறைந்த சாலை! தெருவிளக்குகள் தரும் வெளிச்சத்தில் இரவு! அருகிலிருந்த கடைகள் எல்லாம் அடைக்கப் போகும் நேரம்! பாலத்தின் அடியில் இருந்த குடும்பங்களில் பெரும்பாலோனோர் உறங்கிருந்தனர். சிலர் பேசிக் கொண்டிருந்தனர்!
உலகம் இப்படி இருக்க, அப்பா… மகளுக்கான உலகத்தில் தமிழும் வெற்றியும் இருந்தனர்.
அவள் கண்ணோரம் கசிந்திருந்த கண்ணீரைத் துடைத்து, நெற்றியில் முத்தம் வைத்தவன், சிறு புன்னகையுடன், “தூங்குடா” என்று அவளை நெஞ்சோடு அணைத்து, முதுகில் தட்டிக் கொடுத்தான்.
சற்றுநேரத்தில் தூங்கிவிட்டாள்.
அவள் தூங்காவிட்டால் வீட்டிற்குப் போகாமல் இருக்கலாம் என்றிருந்தான். தூங்கியதால் இப்போது கிளம்ப நினைத்தான். அதுமட்டுமல்ல, கடற்கரையில் இருக்கையில் அவன் அக்காவும் அழைத்திருந்தாள். ஆட்டோவில் வரும்போது அவன் அப்பாவும் அழைத்திருந்தார்.
அவன் எடுக்கவில்லை என்றாலும் இருவரும் திரும்பத் திரும்ப அழைத்துப் பார்த்துதான் அழைப்பதை நிறுத்தியிருந்தார்கள். வேலை நாள்களில் இப்படி எல்லாம் அவர்கள் அழைத்ததில்லை.
ஏன் இன்று மட்டும் என்று அவன் மனம் அதை வேறு யோசிக்கத் தொடங்கியிருந்தது.
மெதுவாக அவளை விலக்கிப் படுக்க வைத்து, அதன்பின்னும் சற்றுநேரம் தட்டிக் கொடுத்துவிட்டு எழுந்து வந்து ஆயாவின் முன் நின்றான்.
மகளைத் தூங்க வைத்து, ராணியும் உறங்கியிருந்தாள். ஆயாவும், பக்ஸூம் தூங்காமல் இருந்தார்கள். வெற்றி வந்ததிலிருந்து அவனையும் தமிழையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
“தூங்கிட்டாளா” என்றார் ஆயா.
“ம் எந்திரிக்க மாட்டான்னு நினைக்கிறேன். ஒருவேளை எந்திரிச்சி என்னய தேடினா, எனக்கு ஃபோன் போடறீங்களா”
வெற்றி முகமே சரியில்லை. சரியாக அவர்கள் முகம் பார்த்துக்கூட அவன் பேசவில்லை. இப்படி இருக்கையில் எப்படி குணா பேசியது பற்றி சொல்ல?
அவன்தான் தினமும் வருக்கிறானே. நாளை வரும்போது சொல்லலாம் என்று, தமிழ் எழுந்து அவனைத் தேடினால் அழைப்பதாகச் சொன்னார்.
சிறு தலையசைப்புடன் வெற்றியும் கிளம்பிவிட்டான்.
ஆட்டோவில் போகையிலும் அவன் கண்கள் கலங்கித்தான் இருந்தன. இப்படி அவனும் கஷ்டப்பட்டு, அந்தப் பிஞ்சு மனதையும் கஷ்டப்படுத்தக் கூடாது. எல்லாரிடமும் உடனே பேச வேண்டுமென முடிவெடுத்தான்.
அம்மா ஞாபகம் வந்தது. அவர் இருந்தால் இது எல்லாம் எளிதாக நடக்கும் என்று தோன்றியது.
குணாவிடமோ, தன் வீட்டிலோ எதுவும் பேசாமல், தமிழைக் கூட்டிக் கொண்டு எங்கேயாவது போய்விடலாம் என்றுகூடத் தோன்றியது.
மகள் கஷ்டப்பட கூடாது என்று நினைத்தவன், அப்படியே போயிருக்கலாம்.
