Kathambari Novels
தமிழரசியின் அம்மா உமாமகேஸ்வரி!
உமா பிறந்து, வளர்ந்தது சென்னையில்தான். பிறந்ததிலிருந்தே நடைபாதை, ரயில்நிலையம் என்றுதான் அவள் வாழ்க்கை இருந்தது.
கிடைக்கும் வேலைகளைச் செய்து உணவிற்கு மட்டும் பார்த்துக் கொண்டு, பிள்ளைகளை வளர்த்திருந்தார்கள் உமாவின் பெற்றோர். பழையது என்று யாராவது தருவதுதான் உடைகளாக இருந்திருக்கிறது உமாவிற்கும், அம்மா, அப்பா, தம்பி என்றிருந்த அவளது குடும்பத்திற்கும்.
திருமணத்திற்குப் பின்னும், உமா வாழ்க்கை மாறவில்லை. நடைபாதைதான் வீடு என்ற நிலை அப்படியே தொடர்ந்தது. வாழ்வின்மீது பற்றே இல்லாமல், கஷ்டப்பட்டுக் கொண்டேதான் இருந்தாள்.
தமிழ் பிறந்த பின்தான் வாழ்க்கையில் உமாவிற்கு ஒரு பிடிப்பு வந்தது!
வாழ வேண்டும், மகள் வாழ்க்கை தரத்தையாவது உயர்த்த வேண்டும், உயர்த்தும் நிலைக்கு ஒரு கல்வியைக் கொடுத்துவிட வேண்டும் என்று முனைப்போடு ஓடிக் கொண்டிருந்தாள்.
அம்மா அப்பா இறந்த பின், இந்தப் பகுதிக்கு உமா வந்திருந்தாள். அதன்பின் வேறு எங்கும் செல்லவில்லை. இந்தப் பாலத்திற்கு அடியில் பெரியளவில் தொந்தரவு இல்லை. இங்குள்ளவர்களிடம் பழகுவதற்கு நன்றாக இருந்தது.
காலையில் ஐந்து மணிக்கு எழுந்துவிடுவாள். எட்டு மணி வரை பூக்கள் கட்டி கொடுப்பாள். திரும்பி வரும்வரை தமிழை ராணியிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுப் போவாள்.
உமாவிற்கும் ராணிக்கும் ஒரே வயதுதான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனம்விட்டுப் பேசிக் கொள்வார்கள்.
பூ கட்டி முடித்து வந்ததும், சோறு பொங்கிவிட்டு, மகளை எழுப்பிச் சாப்பிட வைத்து, தானும் சாப்பிட்டு எழும்பூர் ரயில் நிலையம் போவாள். மகளையும் தன்னுடன் கூட்டிக் கொண்டுச் சென்றுவிடுவாள்.
பத்து மணியளவில் போனால், இரவு எட்டு மணி வரை அங்குதான் இருப்பாள். வண்ணம் தீட்டும் புத்தகம், ஒட்டுப்படம் [Sticker], பேனா, பென்சில், அழிப்பான், விளையாட்டுப் பொருட்கள் சௌகார்பேட்டையில் இருந்து வாங்கி, எழும்பூர் ரயில் நிலையத்தில் விற்பாள்.
ஒவ்வொன்றும் பத்து அல்லது இருபது ரூபாய் மதிப்புள்ளதாக இருக்கும். அதற்குமேல் இருக்காது.
நெடுந்தூரம் போகும் ரயில் வந்ததுமே, உள்ளே ஏறி ஒவ்வொரு பெட்டியாய் போய் விற்பாள். எந்த நேரத்தில் எந்த நடைமேடையில் எந்த ரயில் வருமென அவளுக்கு அத்துபடி. சளைக்காமல் ஒவ்வொரு நடைமேடைக்கும் மாறி மாறி ஓடிச் சென்று பொருள்களை விற்க முயற்சிப்பாள்.
ரயில் நிலையத்தின் மக்கள் கூட்டத்திலும் விற்கப் பார்ப்பாள். குழந்தைகள் வைத்திருப்பவர்களைப் பார்த்தால், வாங்கச் சொல்லிக் கேட்பாள். இல்லை, வாங்குவார்களா என்று அவர்கள் இருக்கும் பக்கமே நடப்பாள்.
தமிழை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, தோளில் பையைப் போட்டபடி எழும்பூர் ரயில் நிலையம் முழுக்க நடையாய் நடப்பாள். சிலநேரம் மகளைத் தூக்கி வைத்துக் கொண்டு நடந்தபடி வியாபாரத்தைப் பார்ப்பாள்.
மத்தியானமும், இரவும் ரயில் நிலையத்தில் சாப்பிட்டுக் கொள்வாள். அவள் சாப்பிடுகிறாளோ இல்லையோ மகளுக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்து விடுவாள். இரவு எட்டு மணி போல் பாலத்திற்குத் திரும்புவாள்.
உமாவின் ஒவ்வொரு நாளும் இப்படித்தான் இருக்கும்.
வாழ்க்கை கஷ்டமாக இருந்தாலும், மகள் கஷ்டப்பட்டுவிடக் கூடாது என்று பார்த்து பார்த்து மகளை கவனித்துக் கொள்வாள் உமா.
தமிழ் பிறக்கும் போதே கேட்கும் திறன் குறைபாடு இருந்தது. அவள் பேச்சுத் திறனையும் அது பாதித்தது. திக்கித் திக்கி, அரையும் குறையுமாக அதுவும் ஓரிரு வார்த்தைகள்தான் தமிழ் பேசுவாள். அவ்வளவுதான் பேச முடிந்தது.
இரண்டு வயதாகியும் மகளுக்கு சரியாகப் பேச்சு வரவில்லை என்றதும் உமா மருத்துவமனையில் சென்று மகளை காட்டினாள். இது இதனால்தான் என்று காரணங்கள் சொல்லி அதற்கான அறுவை சிகிச்சை, அதற்காகும் செலவுகள் எல்லாம் சொன்னார்கள்.
அறுவை சிகிச்சைத் தேவைப்படும் என்றெல்லாம் உமா நினைக்கவில்லை. குழந்தை… அவளுக்குப் போய் அறுவை சிகிச்சையா என்று கவலைப்பட்டாள். சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் போது மருத்துவத்திற்குச் செலவு செய்ய எப்படி முடியும்?
இது உமாவின் கஷ்டத்தை மேலும் அதிகப்படுத்தியது.
என் மகளுக்கு ஏன் இப்படி என்று வருந்தினாள். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையில் உழன்றாள். வேறு வழி இருக்கிறதா என்று மீண்டும் மருத்துவமனைப் போய்க் கேட்டாள். செவித்திறன் கருவி பயன்படுத்திப் பார்க்கலாம், பேசும் திறனை வளர உதவும் என்றார்கள்.
சிறுகச் சிறுகச் சேமித்து வைத்து, அதையாவது வாங்கிவிடனும் என்றுதான் பூ கட்டும் வேலையையும் சேர்த்து செய்து வந்தாள்.
என்னதான் கஷ்டங்கள் இருந்தாலும், அம்மாவும் பொண்ணும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்!
ஒவ்வொரு ரயிலிலும் ஏறி இறங்குவதை, நடைமேடையில் நடப்பதை, குறிப்பிட்ட ஒரு கடையில் வந்து சாப்பாடு வாங்கி சாப்பிடுவதை என்று எல்லாவற்றையும் சிரித்த முகமாகத்தான் கடந்தார்கள்.
தமிழ் மற்றவர்களிடம் அதிகமாகப் பழகுவது இல்லை. அம்மா கூடவேதான் இருப்பாள். இருப்பதை விரும்பினாள். பாலத்தின் அடியில் வசிக்கும் சில குழந்தைகள் சிரித்து விளையாடும் போதும்கூட, தமிழ் அவர்களுடன் போய் விளையாடுவதில்லை.
உமாவும், ‘போ விளையாடு, அம்மா இங்கதான் இருப்பேன்’ என்று எவ்வளவோ சொன்னாலும் தமிழ் கேட்பதில்லை.
மற்ற குழந்தைகள் பேசுவதைக் கேட்க, அவள் பேச்சை அவர்களுக்குப் புரிய வைக்க தமிழுக்குச் சிரமமாக இருந்தது. தன் அம்மா மட்டும்தான் தன்னைப் புரிந்து கொள்ள முடியும் என்று அந்தக் குழந்தை மனதில் பதிந்திருந்தது.
உமாவிற்கும் மகளின் சிரமம் புரிந்தது.
அதனால் அதிகமாக, அழுத்தி எதுவும் சொல்வதில்லை. எப்படியாவது இந்தக் குறைபாட்டைச் சரிசெய்து, எல்லா குழந்தைகளையும் போல் தன் குழந்தையும் சிரித்து, விளையாட வேண்டும் என்று நினைப்பு மட்டும் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருந்தது.
மற்றவர்களிடம் ஒதுங்கியே இருந்த தமிழ் அம்மாவிடம் ஒட்டிக்கொண்டாள். சைகையில் அம்மாவுடன் பேசுவாள். அம்மா முகம் பார்த்தே, அம்மா என்ன நினைக்கிறாள் என்று தெரிந்துவிடுவாள். அம்மா உதடு அசைவதை வைத்து, என்ன பேசுகிறாள் என்று மகள் புரிந்தும் கொள்வாள்.
அப்படிப் புரிந்து கொள்ள மகளுக்குப் பயிற்சி கொடுத்தாள் உமா.
தூங்கி எழுந்ததிலிருந்து திரும்பத் தூங்கப் போகும் வரை அம்மாவுடன்தான். உறங்கப் போகும் போதுகூட அம்மா அவளுக்கு கதைச் சொல்ல வேண்டும். அம்மா மேல் கால் போட்டு கொண்டு, அம்மா முகத்தைப் பார்த்து கதையைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சமாகக் கண் சொருகிதான் உறங்குவாள்.
வேலைக்காக காலையில் எழும் போதும்கூட, தன்னை நெருங்கி அணைத்துப் படுத்திருக்கும் மகள் முழித்துவிடாமல், மெதுவாக அவளை நகற்றிப் படுக்க வைத்துவிட்டு உமா எழுவாள். சிறு குழந்தை அத்தனை காலையில் தூக்கம் கலைந்து எழ வேண்டுமா என்ற எண்ணம் உமாவிற்கு.
தமிழ் எழுந்துவிட்டால் அம்மாவுடன் வருவேன் என்று அழுது அடம் பிடிப்பாள். அவளைச் சமாளிக்க முடியாமல் உமா தன்னுடன் அழைத்துப் போகத்தான் வேண்டியிருக்கும்.
இப்படி அம்மா அம்மா என ஒவ்வொரு நொடியும் இருந்த தமிழுக்கு, இப்போது அம்மா இல்லாமல் போனது இருப்பதற்கு கஷ்டமாக போய் இருக்கிறது.
ஆறு மாதத்திற்கு முன்னே உமா சாலை விபத்தில் உயிரிழந்தாள். பாலத்தின் பக்கம் ஒரு கிளைச்சாலை இருக்கிறதே. அதைக் கடக்கையில்தான் விபத்து நடந்து இருந்தது. இரவு எட்டு மணிக்கு மேல் அந்தச் சாலையில் வாகனங்கள் வருவது வெகுவாகக் குறைந்துவிடும்.
சற்று கவனக்குறைவாக உமா சாலையைக் கடந்த நேரத்தில், அதிவேகமாக வந்த கார் மோதி அதே இடத்தில் உயிர் துடிதுடித்து இறந்து போனாள். விபத்து என்று தெரிந்ததும் அங்கிருந்தவர்கள் எல்லாரும் கூடிவிட்டனர்.
என்ன நடக்கிறது என்று தமிழுக்கு முதலில் புரியவில்லை. என்னமோ புரிந்து அவள் ஓடிவந்து பார்த்தபோது உமா உயிர் போயிருந்தது. அம்மாவை அந்த நிலையில் பார்த்ததும் அப்படியொரு அழுகை அழுதாள் தமிழ்.
அம்மா பக்கத்தில் போக வேண்டும், அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று அழுது, திமிறிக் கொண்டு போகப் போன தமிழை… ராணி விடவில்லை. ரத்த வெள்ளத்தில் இருக்கும் அம்மாவைப் பார்த்தால் குழந்தை மனம் பாதிக்கும். அதனால் ராணி தன்னுடன் தமிழைப் பிடித்து வைத்துக் கொண்டாள்.
தமிழுக்கு அம்மா என்ற நிஜம் இப்போது இல்லை. அதனால் நினைவுகளோடு அவள் இப்போது பயணிக்கிறாள். சிறுவயது என்றாலும் இந்த ரயில் பயணம் அவளுக்குச் சற்று பரிச்சயம்தான். அம்மாவுடன் தினமும் வந்து பழகியதால்.
என்னதான் பரிச்சயம் இருந்தாலும், அவள் குழந்தை. தனியாகச் செல்ல பயம் இருக்கும். எல்லா நேரமும் சரியாகப் பயணிக்க முடியாமல் போகும்.
சிலநேரம் எந்த ரயிலில் ஏற என்று தெரியாமல் வந்துவிடுவாள். சிலநேரம் இங்கிருந்து போகையிலே ஆயாவோ, பக்ஸோ பார்த்து நிறுத்திவிடுவார்கள். சிலநேரம் எழும்பூர் ரயில் நிலையத்தில் நின்றுவிடுவாள். ராணி போய் தேடிக் கூட்டிக் கொண்டு வருவாள். பக்ஸ், ‘ஏன் போன’ என்று திட்டுவான்.
இவ்வளவு நிகழ்ந்தும்… தமிழ் போவதை நிறுத்தவில்லை.
எழும்பூர் ரயில் நிலையத்தில்தான் நாளின் அதிக நேரம் தமிழ் அம்மாவுடன் இருந்திருக்கிறாள். அதனால் அவள் அடிக்கடி இங்கே வந்துவிடுவாள். அதுவும் அம்மா விட்டுப் போன தோள் பையை எடுத்துக்கொண்டு.
நடைமேடைகளைச் சுற்றி வருவாள். சிலசமயம் நெடுந்தூர ரயிலில் ஏறுவாள். வழக்கமாகச் சாப்பிடும் கடை முன் சென்று நிற்பாள். தோள் பையில் உமா விற்க வைத்திருந்த புத்தகம், பேனா, பென்சில் எல்லாம் எடுத்துப் பார்ப்பாள். நடைமேடை படிக்கட்டில் உட்கார்ந்திருப்பாள்.
தமிழுக்கு அம்மா இல்லாமல் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அம்மா இருந்தபோது செய்ததையே செய்து கொண்டிருக்கிறாள்.
இன்றும் அப்படித்தான் செய்தாள்.

அனிச்சையாக கை ஒரு பக்கம் வேலை பார்க்க, ராணியின் மனம் தமிழைப் பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தது. உமாவிற்கு விபத்து நடந்ததும், ‘ஐயோ’ என்று கத்தி, ராணிதான் முதலில் அவளருகே ஓடியிருந்தாள்.
அங்கே உமா உயிருக்குத் துடிதுடித்தக் கணத்தில், அவளது உதடுகள் திக்கித் திணறி உச்சரிக்க நினைத்தது தமிழ் பெயரைத்தான்.
உயிர் போய்விடும் என்ற நிலையில், மகளை இப்படித் தனியாக விட்டுப் போகிறோமோ, அவள் இனி என்ன செய்வாள் என்று தாய் மனம் என்ன பாடுபட்டிருக்கும்?
உமாவின் இறப்பு ராணிக்கு பெரும் மனக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறது. நன்றாகப் பேசிப் பழகி இருந்தவர்கள் அல்லவா? அடிக்கடி ராணியின் மனம் நினைப்பது, ‘உமா இருந்திருக்கலாம்’ என்றே.
அதிலும் தமிழைப் பார்க்கும் போதெல்லாம் மனத்தை என்னவோ செய்கிறது.
அம்மா இருந்த போதுகூட தமிழ் கொஞ்சம் பேசினாள்; குறைந்தபட்சம் பேச முயற்சித்தாள். இப்போது பேசுவதேயில்லை. அவள் முகம் பார்த்து ராணி பேசினாலும் அதைக் கேட்கிறாளா, அது புரிகிறதா என்றும் தெரியவில்லை.
தமிழை எப்படிக் கவனிக்க என்று ராணிக்குப் புரியவில்லை. அவளுடைய கவனிப்பை தமிழ் ஏற்பதாக தெரியவில்லை. எப்படியாவது தமிழைச் சாப்பிட வைத்துவிடுவாள். மகளைக் குளிப்பாட்டும் போது, எண்ணெய் வைத்து தலை சீவி விடும்போது தமிழுக்கும் செய்துவிடுவாள்.
அவளின் நிலைக்கு தமிழைப் பார்த்துக் கொள்வது கடினம்தான். இருந்தும் பார்க்கிறாள். ஆனால் இதை எத்தனை நாள்கள் செய்ய முடியும் என்ற கேள்வி அவளுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.
பகவதியும் அந்தக் கேள்வியை மனைவியிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறான்!
அதுகூட பரவாயில்லை. இப்போதெல்லாம் தமிழ் ஓய்ந்து போய் இருப்பது ராணியை மிகவும் வருத்துகிறது. என்ன செய்ய என்று யோசித்தவள், தமிழ் அப்பாவை இன்று பார்த்துப் பேசலாம் என்று முடிவு செய்துவிட்டு, வேலையில் கவனம் செலுத்தினாள்.
வேலை முடித்துப் போகும்போது தமிழ் அப்பா குணாவைப் போய் பார்த்தாள். அவனிடம் தமிழுக்காக ராணி பேச வருவது இது முதல்முறையல்ல. உமா இறந்த பின்னிருந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறாள்.
குணாதான் காது கொடுத்துக் கேட்பதில்லை.
குணாவைத் திருமணம் செய்து சில மாதங்கள் வரை உமாவின் வாழ்க்கை சரியாகத்தான் போனது. குணா மெரினா கடற்கரையில் பலூன் விற்பான். எல்லாம் நாளும் விற்பனை ஒன்றுபோல் இருக்காது.
எவ்வளவு விற்கிறதோ அதில் தனக்குக் குடிப்பதற்காகக் காசு எடுத்துவிட்டு, முப்பதோ நாற்பதோ உமாவிடம் கொண்டு வந்து தருவான். அதை வைத்து அவள் சாப்பாட்டைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
காசு குறைவாக இருந்தாலும், உமா சமாளித்துக் குடும்பம் நடத்தினாள்.
ஆனால் குணா குடிப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை!
கணவனிடம், ‘குடிக்காதே’ என்று கோபப்பட்டுப் பார்த்தாள்.
அவன் கேட்கவில்லை. சண்டைபோட்டு அவளைத் திட்டத்தான் செய்தான்.
கடற்கரைப் பகுதி அருகே இருந்து நடைபாதையில்தான் அவர்கள் வாழ்க்கை. ‘இப்படி பிளாட்பாரம்லயே வாழ்க்கை இருக்கணுமா, நம்மளும் வீடு வாசல்னு வாழ வேணாமா’ என்று பொறுமையாகச் சொல்லிப் பார்த்தாள்.
அதைக் கேட்டு, இரண்டு நாள்கள் குடிக்காமல் இருப்பான். பின் திரும்பக் குடிக்கத் தொடங்கிடுவான். மீண்டும் சொல்லுவாள். ஓரிரு நாள்கள் கேட்டுக் கொண்டாலும், மறுபடியும் குடிக்கத்தான் செய்வான்.
உமாவிற்கு அவனிடம் சொல்லிச் சொல்லிச் சலித்துவிட்டது. அவனைத் திருத்த முடியாது என்று தெரிந்தது. அவள் அப்போது கர்ப்பமாக இருந்தாள். குழந்தை பிறந்தால் கணவன் சரியாகிவிடுவான் என்று நினைத்தாள்.
ஆனால் நாளாக நாளாக அவன் நடவடிக்கைள் சரியாகப்படவில்லை.
வேலை இருக்கிறது என்று இரண்டு நாள்கள் எங்கேயாவது போய்விடுவான். என்ன வேலை என்று கேட்டால் சொல்லவும் மாட்டான். ‘வேலைக்கு போனியே காசு எங்க, ஆஸ்பத்திரி போனும், நல்லதா சாப்ட தோனுது, காசு குடு’ என்று கேட்டால், கொடுக்கவும் மாட்டான். அதற்கு ஆயிரம் காரணம் சொல்லுவான்.
ஓரிரு நாள்கள் என்று அவன் போனது, வாரங்கள் என்று ஆனது.
அதன்பின்தான் உமாவிற்கு சந்தேகம் வந்தது. அவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதுவும் உமா, ‘எங்க போறனு சொல்லியே ஆகணும்’ என்று சண்டை போட்டபின், அவனே இதைச் சொன்னான்.
‘எவ்ளோ தைரியம் உனக்கு’ என்று ஒருமூச்சு திட்டித் தீர்த்துவிட்டு, அம்மா அப்பாவிடமும் சென்று சொல்லி அழுதாள்.
அவர்கள் குணாவிடம் பேசினார்கள்.
இனி இப்படி இருக்க மாட்டேன் என்று ஒழுங்காக இருந்தான். ஒரு வாரம்தான் அப்படி இருந்தான். மீண்டும் அந்தப் பெண்ணைப் பார்க்கப் போய் வரத்தான் இருந்தான்.
உமா திரும்பவும் அம்மா அப்பாவிடம் சென்று நின்றாள்.
அவர்கள், ‘இப்படிலாம் பண்ணிக்கினு இருக்காத குணா’ என்று அவனிடம் பேசினார்கள். அவர்களிடம் சரியென்று சொன்னாலும், அந்தப் பெண்ணைப் பார்க்கப் போகத்தான் செய்தான்.
மீண்டும் மீண்டும் உமா அம்மா, அப்பாவிடம் சொல்லி அழுதாள்.
மகளை எண்ணி வருந்தினார்கள். ஆனால் அவர்களுக்கு என்ன செய்யவென தெரியவில்லை. ஓடி உழைத்து ஓய்ந்திருந்தார்கள். இனி வேலை கிடைக்குமா, கிடைத்தாலும் பார்க்க முடியுமா, சாப்பாட்டிற்கு என்ன செய்ய, மருத்துவச் செலவுகள் எதுவும் வந்தால் எப்படிச் சமாளிக்க என்று கவலைகள் வேறு.
மகனிடம் சொன்னார்கள். ‘உங்கள நான் பார்த்துப்பேன், அக்கா வாழ்க்கைய அவதான் பார்த்துக்கணும்’ என்று ஒதுங்கிக் கொண்டான். மகன் சொன்னதை அப்படியே மகளிடம் சொன்னார்கள்.
உமா… தம்பி பேசியதை நினைத்து கஷ்டப்பட்டாள். என்ன செய்யவென்றும் தெரியாமல் தடுமாறினாள். ஏன் தனக்கு இப்படி என்று வாழ்க்கையின் மீது பிடிப்பே இல்லாமல் போயிருந்தாள். தமிழ் பிறந்தபின்தான் சற்று மாறினாள்.
மகள் பிறந்த பின்னும் குணா மாறவில்லை.
கணவன் இனி வரமாட்டான் என்று தெரிந்ததும் உமா, என் வாழ்க்கையை நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெளிவானாள். மகளைப் பார்க்கப் பார்க்க அவளுக்காக வாழ வேண்டுமென ஓட ஆரம்பித்தாள்.
குணாவை எதற்கும் உமா எதிர்பார்க்கவில்லை. இப்படிப்பட்டவன் எனக்குத் தேவையில்லை என்று முடிவிற்கு வந்திருந்தாள். தன் முடிவில் உறுதியாகவும் இருந்தாள்.
ஆனால் பெற்ற மகளைப் பார்க்க வராமல் இருக்கிறானே. இப்படி ஒருவன் கூடவா வாழ்ந்திருக்கிறேன் என்று வருந்தினாள்.
ஆம்! குணா தமிழை பார்க்கக் கூட வரவில்லை. மனைவியை எப்படிக் கண்டு கொள்ளவில்லையோ, அப்படித்தான் மகளையும் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் பற்றி நினைக்கவேயில்லை. அவனது நினைவில் இருந்ததெல்லாம் அந்த வேறொரு பெண்தான்.
அவளைத் திருமணம் செய்து கொண்டு, வாழ ஆரம்பித்துவிட்டான்.
ராணிக்கு இது எல்லாம் தெரியும். பேசும் போது உமா சொல்லியிருக்கிறாள். குணாவைப் பற்றி பேசினாலே, உமா குரலில் கோபம் தெறிக்கும். என்னை ஏமாற்றி இருக்கிறான். அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்று.
குணாவைப் பற்றி இவ்வளவு தெரிந்தும், மகள் இருக்கிறாள் என்ற நினைப்பே இல்லாமல் வாழ்பவன் என்று தெரிந்தும் ராணி பேச வந்திருக்கிறாள். அம்மா இல்லாமல் தவிக்கும் தமிழை விடமாட்டான், பேசப் பேசப் புரிந்து கொள்வான் என்று ஒரு எண்ணம் அவளுக்கு.
பார்த்துக் கவனமாக நடந்து வந்தாள் ராணி.
மிகக் குறுகிய தெருக்கள். முழுதும் சிமென்ட் சாலை போடப்பட்டு, அதில் முக்கால்வாசி பெயர்ந்து வந்திருந்த நிலையில் தெருக்கள் இருந்தன. சில இடங்களில் சாக்கடை நீர் தேங்கியிருந்தது.
அந்தப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தன. எல்லாமே ஒரு அறை மட்டும் உள்ள சிறு வீடுகள். நான்கு பக்கம் சுவர், மேலே ஆஸ்பராசீட். வீட்டின் வெளியேதான் சமையல். எல்லார் வீட்டுச் சுவர்களும் இடிந்து விழும் அளவிற்கு மோசமாக இருந்தன.
ராணி வருவது பார்த்ததும், “வா ராணி” என்றான் சிரித்த முகத்துடன் குணா. வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தான்.
இந்த வீடு குணா இரண்டாவதாக செய்து கொண்ட பெண்ணின் வீடு. அந்தப் பெண்ணின் பெயர் கோமதி. இவளைத் திருமணம் செய்தபின் இங்கே வந்து குணா தங்கிவிட்டான். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.
ராணியை குணாவிற்கு இப்போது எட்டு மாதகாலமாகத் தெரியும். அதாவது உமா இறந்த பின்பிருந்து. அதுவும் இவள் தமிழுக்காக வந்து பேசுவதினால். கையில் மகனைத் தூக்கி வைத்திருந்த குணா, கொசு கடிக்காமல் இருக்க விசிறிக் கொண்டே, “என்ன ராணி, நைட் நேரம் வந்து நிக்க” என்றான்.
அவன் மனைவி கோமதி அங்கேதான் சமைத்துக் கொண்டிருந்தாள். ராணி வந்ததும், ‘வா’ என்று தலையசைத்துவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்.
இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கினோமே என்ற குற்றவுணர்வு கோமதிக்கு இல்லை. எங்களுக்குப் பிடித்திருந்தது. திருமணம் செய்து கொண்டு வாழ்கிறோம் என்ற மனநிலைதான்.
அதே எண்ணம்தான் குணாவிற்கும் இருக்கிறது.
“எதுனா குடிக்கிறியா?” என்றான் ராணியிடம்.
மறுப்பாகத் தலையசைத்துவிட்டு, “ண்ணே தமிழ் ரொம்ப டல்லா ஆயிட்டு. அத பார்க்கவே பாவமா இருக்கு” என்று நேரடியாக விசயத்திற்கு வந்தாள்.
உடனே கோமதி, “அந்த புள்ளய பத்தி இங்க வந்து நின்னு பேசாதுனு உனக்கு எத்தினி டைம் சொல்லிருக்கேன். கேக்கவே மாட்டியா. என்ன அத எப்படியாது எங்க தலைல கட்ட பாக்கிறியா, நாங்க நிம்மதியா இருக்கிறது உனக்கு புடிக்கலயா” என்று படபடவென்று கோபப்பட்டாள்.
ராணி அமைதியாக நின்றாள்.
குணாதான் மனைவியிடம், “ஏய் நீ என்ன இப்டி பேசற, ராணி கைல நாம மரியாதையாதான் பேசணும், போ… போய் ராணிக்கு டீ போடு” என்றுவிட்டு, ராணியைப் பார்த்து, “அவ கோபமாகி பேசல மா, டென்சனாகி பேசிட்டா, நீ ஒன்னியும் மனசில வெச்சிக்காத” என்று சமாதானமாகப் பேசினான்.
அவன் ஏன் இப்படிப் பேசுகிறான் என்று ராணிக்குத் தெரியும். மீண்டும், “அது அம்மாவ தேடுது ணா, அடிக்கடி டேசன் போய் போய் இருந்துக்குது. ஒழுங்கா சாப்ட மாட்டிக்கு. அப்பா இருந்தாலாவது ஆறுதலா இருக்கும்னு நினச்சிதான் உன்ட்ட பேச வந்தேன்” என்று தமிழுக்காகப் பேசினாள்.
“அதுக்கு நான் என்ன செய்ய? என்னால தமிழ வளக்க முடியாது. என் பையன், பொண்டாட்டி… இதான் என் பேமிலினு செட் ஆயிடுச்சி. இப்ப திடிர்னு வந்து தமிழ பார்த்துகோனு சொல்றது சரிவராது ராணி”
“உமா இருந்தா இப்டி கேட்டிருக்க மாட்டேன். அவ இல்லங்க போய்தான்”
“உமா உயிரோட இருக்கா, போயிட்டா அத்தெல்லாம் நான் யோசிக்கல. நான் தமிழ புறந்ததலிருந்து தொட்டு தூக்குனது கூட கிடையாது. என்ன அப்பனா அது நினைக்கக்கூட செய்யாது. அப்புறம் எப்டி அத பாத்துக்க சொல்லு”
கோமதி, “இன்னா சொல்ற, அப்ப அது உன்னய அப்பனா நினச்சா அத இங்க இட்டாந்து வெச்சிப் பாக்க போறியா” என்றாள் கோமபமாக.
“யார் சொன்னாலும் அத இட்டு வர்ற ஐடியா எனக்கு கிடையாது. பேசாம இரு நீ” என்று எரிச்சல்பட்டவன், ராணியைப் பார்த்து, “இங்க பாரு ராணி, நல்லா இருக்க புள்ளய வளக்கறதே கஷ்டம்.
இதுல தமிழுக்கு காதும் கேக்காது வாயும் பேச வராது, அத கூட்டி வந்து எப்டி பாத்துக்க சொல்லு. மொதல அத பாத்துக்கணும்னு எனக்கு தோனவேயில்ல. எத்தின டைம்தான் இத உனக்கு சொல்லவோ தெரில.
எனக்கு புரியுது, உன்னால தமிழ கவனிக்க முடியல. எனக்கு அத கவனிக்கவே இஷ்டமில்ல. ஒரு ஐடியா சொல்றேன் கேளு, பேசாம எதுனா ஆஸ்ரமத்தில் கொண்டு போய் தமிழ வுட்ரு. உனக்கும் பிரச்சன இல்ல. இங்க வந்து இப்படி என்னய தொல்லை பண்ண தேவை இருக்காது” என்றான்.
இவன் எல்லாம் ஒரு அப்பனா? எப்படி இப்படியெல்லாம் பேச முடிகிறது என்று கோபம் ராணிக்கு. அதை எப்படி வெளிப்படுத்த என்று தெரியவில்லை. “நான் கெளம்புறேன் ணா” என்றுவிட்டாள்.
அப்போது கோமதி டம்பளரில் தேநீர் எடுத்து வந்து நின்றாள். அதை வாங்கிய குணா, “இந்தா ராணி… டீ குடிச்சிட்டு போ” என்றான்.
திரும்பிப் பார்க்காமல் மறுத்துவிட்டு நடந்தாள். வரும் வழியெங்கும் தமிழைப் பற்றிய யோசனைதான் ராணிக்கு.
பாலத்திற்கு வந்த போது, நடைபாதைக்கு அணைவாக வைக்கப்பட்டிருந்த கம்பிகளுக்கு இடையே முகத்தை வைத்து, உமா விபத்து நடந்த இடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் தமிழ்.
ராணிக்கு பாவமாய் போயிற்று.
