Kathambari Novels
யாராவது பேசுவார்களா என்று பார்த்துக் கொண்டே இருந்தாள், தாரா. யாரும் எதுவும் பேசவில்லை. “ம்மா… ஏதாவது பேசுங்க” என்று கேட்டு விட்டாள்.
“பேசணுமா?” என்ற கீதா, “இந்தக் கல்யாணம் நடக்காது” என்றார் கோபமாக.
“கீதா…” என்று ராஜசேகர் ஏதோ பேச வருகையில், “வேண்டாம் ராஜ். இந்தப் பையன ஏன் பிடிக்கலைங்கிற காரணத்த அன்னைக்கே உங்ககிட்ட தெளிவா சொல்லிட்டேன்” என்று கீதா எழுந்துவிட்டார்.
“ம்மா ப்ளீஸ்” என்று கெஞ்சிக் கொண்டே தாராவும் எழுந்தாள்.
“ம்மா… அவ என்ன சொல்ல வர்றான்னு உட்கார்ந்து கேளுங்களேன்” என்று ஜெகன் சொல்லிப் பார்த்தான்.
“யாரு சொன்னாலும் இந்த கல்யாணம் நடக்காது” என்று போனவரை, “ஒரு நிமிஷம் உட்காருங்கம்மா. பேசணும்” என்று கைப்பிடித்து நிறுத்தினான் சரத்.
“என்னடா பேசணும்? என்ன பேசணும்?” என்று வேகமாகக் கேட்டார்.
“தாரா கல்யாணம் பத்திப் பேசணும்” என்றான் சரத் மெதுவாக.
“அதுலென்ன பேச இருக்கு சரத்”
“கல்யாணம் எப்படி நடத்தணும்னு பேசணும்” என்றான் அமைதியாக, ஆனால் உறுதியாக!!
“உனக்கு என்னாச்சுடா” என்றார் கீதா அதிர்ச்சியாக!
“எனக்கு எதுவும் ஆகலை! நீங்க முதல உட்காருங்க” என்றான்.
அவன் சொன்ன பின்னும் நின்று கொண்டிருப்பவரைப் பார்த்து எழுந்தான். நேருக்கு நேராக சரத்தும் கீதாவும் நின்று கொண்டிருந்தார்கள்.
“நீ ஏன் இப்படிப் பேசற சரத்? இந்தக் கல்யாணம் வேண்டாம்டா”
“ஏன்?”
“அந்தப் பையனை எனக்குப் பிடிக்கலை”
“அவளுக்குப் பிடிச்சிருக்கே ம்மா”
ஜெகன், தாரா… சரத்தை வித்தியாசமான பார்வைகள் கொண்டு பார்த்தனர். ஏன்… ராஜசேகரும்தான்!! கீதாவிடம் ஆச்சரிய அமைதிகள்!
“ம்மா… எதையும் யோசிக்காதீங்க. கல்யாணத்துக்கு ஒத்துக்கோங்க” என்று சம்மதம் கேட்டு நின்றான் சரத்.
“முடியாதுடா” என்றார் சட்டென்று!
“ஏன் முடியாது?”
“அந்தப் பையனோட வேலை?”
“என்ன வேலை? பாலிசி அனலிஸ்ட்! அதுக்கென்ன?”
“சரத்…” என்று ஏதோ சொல்ல வந்தவரை, “புரியுதும்மா! ஆக்டிவிஸ்ட்! அதான?” என்று சொல்லவிடாமல் தடுத்தான். ‘ஆம்’ என்று தலையாட்டினார்.
“அதனாலென்ன?”
“சரத்… உனக்கு எப்படிப் புரிய வைக்கன்னு தெரியலை? விட்ருடா… இந்தக் கல்யாணம் நடக்காது” என்று வருத்தப்பட ஆரம்பித்தார்.
“அப்படியெல்லாம் விட முடியாது. இந்தக் கல்யாணம் நடக்கும்”
“அவ வாழ்க்கை நல்லா இருக்கணும்னா இந்த கல்யாணம் நடக்க கூடாது”
“அவ வாழ்க்கை சந்தோசமா இருக்கணும்னா இந்தக் கல்யாணம் நடக்கணும்”
“அவனைக் கல்யாணம் பண்ணா வாழ்க்கை முழுசும் அழுதுக்கிட்டே இருப்பா. இது தேவையாடா?”
“அவரைக் கல்யாணம் பண்ணலைனாதான் அழுவா. இது தேவைதான்”
“அதிபனுக்கு ஆன மாதிரி… “
“ம்மா, இங்க எதும் நிரந்தரம் கிடையாது. அதனால அந்தப் பேச்சு வேண்டாம்”
“சரத்… அவனுக்கு குடும்பம் ரெண்டாம் பட்சம்டா”
“தாரா பார்க்கிற வேலையும், அந்த மாதிரிதான். ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சி நடந்துப்பாங்க ம்மா”
“உனக்கு என்னாச்சுடா? அம்மாவை எதிர்த்துப் பேசற?!”
“எதிர்த்துப் பேசலைம்மா, எடுத்துச் சொல்றேன்” என்று சொன்ன பின், கீதா பேசவில்லை. ஆனால் சரத் பேசினான்.
“மா… இதுவரைக்கும் அவளுக்குப் பிடிச்சது எதையாவது செஞ்சிருக்கீங்களா? இந்த ஒரு தடவை செஞ்சி பாருங்களேன்! நீங்க சொன்னதை என்னைக்காவது மீறி நடந்திருக்காளா? இப்பவும் அவளா மேரேஜ் பண்ணாம, உங்ககிட்ட வந்து கெஞ்சிக்கிட்டு இருக்கா!! புரிஞ்சிக்கோங்க” என்றான் சற்று கோபத்துடன்.
“சரத்… அம்மாகிட்ட இப்படிப் பேசாத” என்று தாரா குறுக்கிட்டாள்.
“நான், என் தங்கச்சிக்காக… என் அம்மாகிட்ட பேசிகிட்டு இருக்கேன். நடுவில நீ வராத! சரியா?” என்று பேசினவனைப் பார்த்து, “சரத், ஏன் அவகிட்ட கோபமா பேசற?” என்று ராஜசேகர் கேட்டார்.
எப்போதும் அவர் இப்படிக் கேட்டால் எரிச்சல்படுவான். ஆனால் இன்று, “இனி அவகிட்ட கோபப்பட மாட்டேன். ஸாரிப்பா” என மன்னிப்பு கேட்டு நின்றான்.
தாராவும், கீதாவும் ‘இன்று இவனுக்கு என்னாயிற்று?’ என்ற ரீதியில் பார்த்து நின்றனர்.
“அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதானம் பண்ணிடுவேன்” என்றான், அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு!
ஜெகனிற்குப் புரிந்தது, சரத்திடம் ஏன் இந்த மாற்றம் என்று?!
“அவ என்கூட சண்டை போடறப்ப, என்னை பிடிக்காம சண்டை போடறான்னு நினைச்சேன். ஆனா அது அப்படியில்லை பா! என்மேல இருக்கிற உரிமையில சண்டை போட்டிருக்கா” என்றான் தாராவைப் புரிந்து கொள்ளா கவலையில்!
“அவளைப் புரிஞ்சிக்கிட்டேல! அது போதும்” என்றார் ராஜசேகர் நிறைவாக!
“அன்னைக்கு உங்களை எதிர்த்துப் பேசினதைப் பார்த்து… இவ எங்க ரெண்டு பேர்கூடவும் சேராம தனியா நிப்பான்னு நினைச்சேன். ஆனா இப்ப நான்தான் தனியா நிக்கிறேன்” என்றான் வருத்தத்துடன்.
ஜெகன் வந்து சரத் அருகில் நின்று, “ஏண்ணா இப்படிச் சொல்ற?” என்றான்.
“விடுங்க!! இதெல்லாம் முடிஞ்சுபோன விஷயம். இந்தக் கல்யாணம் நடக்கும். தாரா ஆசைப்பட்ட மாதிரியே நடக்கும். அதை நான் நடத்தி வைப்பேன். யார் சம்மதிச்சாலும், இல்லைனாலும். நான் நடத்துவேன். எனக்கு அந்த உரிமை இருக்கு” என்றான் சரத் அழுத்தமாக.
உடனே தாரா அவன் முன்னே வந்து நின்று கொண்டு… நன்றியுடன் வாய் மூடி அழுதாள்! சரத் பார்த்தான்.
“பாருங்கம்மா…” என்று கீதாவைப் பார்த்த சரத், “அண்ணன் நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்றேன். இப்படி அழுதுகிட்டு நிக்கிறா. அப்போ என்னை எந்த இடத்தில வச்சிருக்கான்னு பாருங்க?” என்றான் வேதனையாக!
கீதா… எதுவும் சொல்லாமல் அவரின் அறைக்குள் சென்று விட்டார்.
சரத், தாராவைப் பார்த்து, “ஏதாவது வேணும்னா என்கிட்டயும் கேளு. நானும் வாங்கிக் கொடுப்பேன்!” என்றான். கண்களில் கண்ணீருடன் தாராவும் தலையாட்டினாள்.
“இனி எங்க? அதான் கல்யாணம் முடிச்சுப் போகப் போற! எல்லா நாளையும் வேஸ்ட் ஆக்கிட்டேன்” என்று சரத் கண் கலங்கினான்.
சட்டென அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள் தாரா. மேலும், “ஏன் சரத் இப்படியெல்லாம் பேசற?” என்று கோபமாகக் கேட்டாள்.
“இனிமே எத பத்தியும் கவலைப்படாத. மேரேஜ் ரிலேட்டடா எல்லா வேலையும் நான் பார்த்துப்பேன். நாளைக்கே தேவாகிட்ட பேசுறேன். சரியா?”
“ம்ம், ஆனா அம்மா?” என்று நிமிர்ந்து பார்த்து கேட்டாள்.
“சொன்னேன்ல தாரா. நான் பார்த்துக்கிறேன்னு. நீ இதெல்லாம் யோசிக்காத. சந்தோஷமா இரு”
“ம்ம்ம்” என்று மீண்டும் சரத் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.
“இன்னொன்னு கேட்கணும். தேவா வேற யாரையோ லவ்…” என்று தொடங்கும் போதே, “இல்ல, இப்ப அது இல்ல. தேவாக்கு என்னைதான் பிடிக்கும்” என்றாள் படபடவென!
சரத்தும், ஜெகனும் சிரித்தனர்.
“ஏன் சிரிக்கிறீங்க?” என்று கேட்டாள். இருவரும் எதுவும் சொல்லவில்லை.
“நாளைக்கு நம்ம மூணு பேரும் எங்கயாவது போகலாம்” என்றான் சரத்.
“எங்க ண்ணா?” என்றான் ஜெகன் ஆர்வமாக! தாராவும் ‘எங்கே?’ என்ற ஆவலுடன் பார்த்தாள்.
“உனக்கு நிறைய வாங்கிக் கொடுக்கணும்னு தோணுது, தாரா” என்றான் சரத் ஆசையாக!
லேசாக விசும்பல் வந்ததும், தாரா மீண்டும் சரத் தோளில் சாய்ந்து கொள்ள, அவள் தோளில் வாஞ்சையுடன் தட்டிக் கொடுத்தான். ஜெகன் அவள் தலை கோதி தேற்றினான்.
மூன்று பேருக்கும் இடையே பாசவலை பின்னப்பட ஆரம்பித்தது. நிரப்பாமல் பாதியிலேயே நின்று விட்ட பாச உண்டியல் தன்னை நிரப்பிக் கொள்ள ஆரம்பித்தது.
சற்றுநேரம் சிறுவயது கதைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள். ராஜசேகர் முகத்தில் ஒரு சந்தோஷம் தெரிந்தது. மூவர் பேச்சுகளை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அரைமணி நேரத்திற்குப்பின், “போங்க போய் தூங்குங்க… லேட்டா ஆயிருச்சு” என்றான் சரத். தாரா, ஜெகன், ‘குட் நைட்’ என்று சிரிப்புடன் மாடிப் படியேறிச் சென்றனர்.
அதன்பின் அங்கே சரத், ராஜசேகர் மட்டும் நின்று கொண்டிருந்தனர்.
“ப்பா”
“நீ எதுவும் சொல்ல வேண்டாம். முதல போய் அம்மாகிட்ட பேசு” என்றார்.
“ம்ம்ம்” என்று அம்மாவைப் பார்க்கப் போனான்.
அறையில் பால்கனியைப் பார்த்தபடி கீதா மெத்தையில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்க்கையிலே தெரிந்தது வருத்தப்படுகிறார் என்று.
வேகமாக சென்ற சரத் அவர் முன் மண்டியிட்டு அமர்ந்தான். “ம்மா” என்று சொல்லும் போதே அவன் குரல் உடைந்தது.
கீதாவின் பார்வை எங்கோ வெறித்திருந்தது.
“ம்மா, பேசுங்கம்மா” என்று கேட்டும், அவர் எதுவும் பேசவில்லை.
“இந்த ஒரு விஷயத்தில மட்டும், நீங்க சொல்ற மாதிரி என்னால நடந்துக்க முடியாது” என்றதும், பார்வையை அவன் புறமாகத் திருப்பினார்.
“தாரா விருப்பப்படிக் கல்யாணம் நடக்கட்டுமே! ப்ளீஸ் ம்மா” என்றதும், அவனைப் பார்த்தவர், அவன் பேச்சைக் கேட்க ஆரம்பித்தார்.
“உங்களை எதிர்த்து ஏதாவது பேசியிருந்தா மன்னிச்சிருங்க ம்மா” என்று அவர் மடிமேல் தலை சாய்த்துக் கொண்டான்.
“ஏன்டா, இப்படிப் பேசுற? அம்மாகிட்ட உனக்கு இல்லாத உரிமையா சரத்?!” என்றார் அவன் தலை கோதியபடியே!
“எனக்கு ஒன்னு மட்டும் புரியல. தேவா, தாராவ பிடிக்கலைனு சொன்னதுக்கு அப்புறமா… ஏன் அவளுக்குச் சீக்கிரமா கல்யாணம் முடிக்கப் பார்த்தீங்க?”
கீதா அதிர்ந்தார். அவன் தலை கோதுவதை நிறுத்திவிட்டார்.
“ஏதோ ஒரு உண்மை உங்க மூணு பேரை சுத்தியும் இருக்கிற மாதிரி இருக்கு. என்னம்மா அது?” என்று நிமிர்ந்து பார்த்துக் கேட்டான்.
கண்கள் கலங்க அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“அப்போ ஏதோ இருக்கு!”
“சரத்… அது வந்து… ”
“வேண்டாம்மா! நீங்க சொல்லவே வேண்டாம். உங்களைக் கஷ்டப்படுத்திற எந்த உண்மையும் எனக்குத் தேவையில்லை” என்று சொல்லிவிட்டு, மீண்டும் அம்மா மடியில் தலை சாய்த்துக் கொண்டான்.
“இந்தக் கல்யாணம் மட்டும் நடக்கணும். வேண்டாம்னு சொல்லாதீங்க”
“நீ நடத்துடா. உன் தங்கச்சி கல்யாணம். உன் விருப்பப்படி நடத்தி வை” என்று சம்மதித்தார்.
அவர் சம்மதித்த சந்தோஷத்தை நிமிர்ந்து பார்த்துக் காட்டிவிட்டு, மீண்டும் தலை சாய்த்தான். இருவரிடமும் ஒரு அமைதி.
“சரத், கல்யாணம் கொஞ்சம் கிரான்டா பண்ணலாம்லடா. இப்படி ரெஜிஸ்டர் ஆஃபிஸ்ல நடத்தனுமா? அப்பாக்காக கேட்கிறேன். சொசைட்டில அவருக்குனு இருக்கிற மதிப்பு, மரியாதைக்காக கேட்கிறேன்டா”
“ஆனா தேவா கண்டிப்பா ஒத்துக்க மாட்டாரு”
“ஏன்டா ஒத்துக்க மாட்டான்?”
“அதை விடுங்க ம்மா! மேரேஜ் இப்படியே நடக்கட்டும். நான் ரிசப்ஷன் வச்சி சமாளிச்சிருவேன். அதெல்லாம் நினைச்சி கவலைப்படாதீங்க”
“ம்ம்ம், ஆனா கல்யாணத்துக்கு நான் வரமாட்டேன்டா”
“ப்ச், இப்படிச் சொல்லாதீங்க ம்மா!”
“இல்லை சரத்! நான் சொல்றதைக் கேட்காம கல்யாணம் பண்றா, அதனால நான் வர மாட்டேன்” என்றார் கோபமாக!
திருமண நாளுக்குள் சம்மதிக்க வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில், சரத் அமைதியாக இருந்தான்.
“அதோட எனக்கு அவனைப் பார்க்க… அது… வேண்டாம்” என்றார் ஒரு மாதிரி குரலில்.
“இப்போ இதைப் பத்தி எதும் யோசிக்காதீங்க. லேட்டாகியிருச்சு. தூங்குங்க” என்று சரத் எழுந்ததும், கீதா மெத்தையில் தலை சாய்த்துக் கொண்டார்.
அவர் தூங்கும் வரை, அவர் கைப் பிடித்துக்கொண்டே இருந்தான்!
வெளியே! பிரம்மாண்ட வரவேற்பறையில் பெரிய சோஃபாவில் ராஜசேகர் தனியாக அமர்ந்திருந்தார். ஏதோ ஒரு வகையில் குடும்பம் ஒன்றுபட்டது போல், அவருக்குத் தோன்றியது.
ஆனால்… தான் இன்னும் தனித்து இருப்பது போலவே உணர்ந்தார்!
அடுத்த நாள் காலை! சரத் சொன்னபடி, மூன்று பேரும் வெளியே சென்றார்கள். தாரா கேட்டதை எல்லாம் சரத் வாங்கித் தந்தான். முதலில் இருவருக்குள்ளும் ஒரு தயக்கம் இருந்தது.
ஆனால் மருத்துவமனையில் இருவரும் பேசிக் கொண்டது. ஜெகன், சரத்திடம் பேசினது. தேவா, தாராவிடம் சொன்னது… இந்த நிகழ்வுகளால் தங்களுக்குள் இருந்த கசப்பான நினைவுகளை இருவரும் கடந்திருந்தனர்.
தயக்கம் போனதும் தாரா, ‘அது வேணும், இது வேணும்’ என்று கேட்க கேட்க, ‘ஏன்டா சொன்னோம்?’ என்ற சந்தோஷ சலிப்பு வந்தது சரத்திற்கு!
அடுத்தடுத்து வந்த நாட்காட்டியின் நாட்கள்!
சரத் மற்றும் ராஜசேகர், தேவா அண்ணன் வீட்டிற்குச் சென்று வந்தனர். அவன் அண்ணன், அண்ணி பெரிய ஈடுபாடு காட்டவில்லை. ஆனால் ஹேமா துள்ளி குதிக்காத குறைதான். அவ்வளவு சந்தோஷம் அவளிடத்தில்!
அவள் சந்தோஷத்தின் மற்றுமொரு காரணம், குழந்தைப் பிறக்கப் போகும் நாள் நெருங்கி வருவதால், அவள் கணவன் வந்திருந்தது.
எல்லோரும் சேர்ந்து திருமணத் தேதியைக் குறித்தனர். ராஜசேகர், அவர்களை வீட்டிற்கு வரும்படி அழைத்தார். இதன் பின்னர் ஒருநாள் தேவாவும் சரத்தும் சந்தித்து, திருமணத்திற்குத் தேவையான விடயங்கள் பற்றிப் பேசினர்.
திருமணத்திற்குப் பின் விமர்சையாக ஒரு வரவேற்பு வைக்க போவதாக சரத் சொன்னதற்கு, தனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை என்றான் தேவா
ஒருமுறை ஹேமாவும், அவள் கணவனும் தாரா வீட்டிற்கு சென்று வந்தனர். கீதாவைப் பார்க்கையில் ஹேமாவிற்கு எங்கோ பார்த்த ஞாபகம் இருந்தது. ஆனால் அவள் அதற்குமேல் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கவில்லை.
கீதா, தேவா சந்தித்துக் கொள்ள வாய்ப்பில்லாமல் நாட்கள் நகர்ந்தன. கீதா, அறிந்தே தவிர்த்து வந்தார். தேவாவிற்கு, ‘அக்கா சந்தித்தாயிற்று’ என்பதே போதுமானதாக இருந்தது.
தனக்குப் பிடிக்காத திருமணம் என்றாலும், மகளுக்குப் பிடித்த ஒரு வாழ்க்கை என்ற புள்ளியில் திருப்தி அடைந்தார் கீதா!
இதோ அதோ என்று… திருமண நாள் வந்தது.
ராஜசேகர் வீடு – காலை வேளை!
தாரா, ஜெகன், சரத்… கீதாவின் வரவிற்காக வரவேற்பரையில் காத்திருந்தனர்.
அறையில், “இது தப்பு. ரொம்பத் தப்பு. நீ செய்றது நியாயமே இல்லை” என்று கீதாவிடம் ராஜசேகர் சொல்லிக் கொண்டிருந்தார்.
“நான் வரல ராஜ். என்னய கம்பெல் பண்ணாதீங்க” என்று மறுத்துக் கொண்டே இருந்தார்.
வெகுநேரமாக, ‘வர மாட்டேன்’ என்று சொல்லும் கீதாவைச் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறார் ராஜசேகர்! வெளியே காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இது தெரியும்!!
“தாராவைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தியா?”
கீதா அமைதியாக இருந்தார்.
“நான் போய் சரத்தை வர சொல்றேன். அவன் சொன்னாதான் நீ கேட்ப” என்று வெளியே வந்துவிட்டார் ராஜசேகர்.
‘தான் ஏன் மறுக்கிறோம்?’ என்று எண்ணுகையில் கீதாவிற்கு கண் கலங்கியது. ஒரே பெண்! அவளது கல்யாணத்திற்குச் செல்ல கோடி ஆசை இருக்கிறது.
ஆனால் தேவாவை எதிர்கொள்ளும் தைரியம் கிஞ்சித்தும் இல்லை. இத்தனை நாட்களும் இல்லை! இன்றைய நாளில் நிச்சயம் இல்லை!!
மற்றுமொன்று… திருமணத்திற்குச் சென்றால் தேவாவிற்கு உண்மை தெரிய வரும். தன் மீதான கோபத்தில் தேவா திருமணத்தை நிறுத்தி விட்டால்?!
தாராவால் தாங்கிக் கொள்ள இயலுமா? எனவே திருமணத்தை தவிர்க்கிறார்.
இந்த நிகழ்வில் மகளுடன் நிற்க முடியாத தன் நிலையை எண்ணி… வருத்தம், கவலை, நிம்மதியின்மை என்ற உணர்வுகளில் உழன்று கொண்டு வந்தார். எனினும், தன் முடிவில் மாற்றமில்லை என்று உறுதியாக இருக்கிறார்.
ஏனென்றால், தன் நிலைமைக்குக் காரணம் ‘தானே’ என்று உணர்ந்திருந்தார்.
இதுவரைச் செய்தது எப்படியோ, ஆனால் இன்று மகளுக்குச் செய்வது நியாய கணக்கில் வராது என்று புரிந்து புழங்காகிதம் அடைந்தார்!
மொத்தத்தில் தாரா விருப்பப்படி திருமணம் நடக்க வேண்டும்! அதன்பின்னே தேவாவிற்கு எல்லா உண்மையும் தெரிய வர வேண்டும் என்று நினைத்தார்.
இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போது, சரத் உள்ளே வந்தான். அவன் வருகிறான் என்று தெரிந்ததும்… தன்னைச் சரிப்படுத்திக் கொண்டார்.
“ம்மா, கிளம்பலையா? என்று கீதா முன்னே வந்து நின்றான்.
அவர் முகத்தில் தெரிந்த பயம், கவலை, நிம்மதியின்மை எல்லாவற்றையும் படித்தவன், “என்னாச்சு ம்மா” என்றான்.
“சரத், நான் வரலை. நீங்க போயிட்டு வாங்க. நான் வந்தா… நான் வந்தா…” என்று தடுமாறினார்.
“என்னம்மா உங்க பிரச்சனை? தாராவை நினைச்சுப் பார்த்தீங்களா?”
“சரத், இப்பவும் அவளுக்காகதான் இந்த முடிவு. நீயாவது அம்மாவைப் புரிஞ்சிக்கோடா” என்று கண் கலங்கினார்.
“இப்படியே சொல்லிச் சொல்லி தப்பான முடிவு எடுக்கிறீங்க!”
“தப்புதான். ரொம்பத் தப்புதான். ஆனால், இந்த நேரத்தில இதுதான் சரி”
“உங்க மூணு பேருக்குள்ள என்னவோ இருக்கு” என்று யோசித்தவன், “நீங்க தேவாகிட்ட ஏற்கனவே பேசியிருக்கீங்களா?” என்று கேட்டான்.
அமைதியாக இருந்தார்.
“ம்மா சொல்லுங்க”
“ஆமா அவன் பார்க்கிற வேலையை வச்சி திட்டிருக்கேன். அவன் கஷ்டப்படுற மாதிரி பேசிருக்கேன். இன்னும் இருக்கு. அப்புறமா சொல்றேன் சரத்” என்று உண்மையை ஒத்துக் கொண்டவர், ஓரிரு கண்ணீர் துளிகள் சிந்தினார்.
அதற்குமேல், கீதாவால் சரத்திடம் உண்மையை மறைக்க முடியாது! மறைக்கவும் மாட்டார்!!
“ம்மா அழாதீங்க” என்று அவர் கண்ணீரைத் துடைத்து, “முன்னாடியே சொல்லிருக்கலாமே. இப்போ என்ன செய்ய முடியும்” என்றான்.
“எதும் செய்ய வேண்டாம். தாராக்காக இந்தக் கல்யாணம் நடக்கணும்” என்று அழுதார்.
“கண்டிப்பா நடக்கும். நான் நடத்தி வைப்பேன். நீங்க நிம்மதியா இருங்க” என அவரைத் தேற்றினான். பின் சற்றுநேரம் அலைபேசியில் பேசிவிட்டு, “ம்மா, உங்களைப் பார்த்துக்க ஒரு நர்ஸ் வருவாங்க” என்றான்.
“எதுக்கு சரத்?”
“உங்களைத் தனியா விட்டுப் போக முடியாது. நான் மேரேஜ் முடிஞ்சதும் வந்துருவேன். சரியா? அதுவரைக்கும் டென்ஷனாகாம இருங்க”
“ம்ம்ம்” என்று தலையாட்டினார்.
“மேரேஜ் முடிஞ்சதும், இங்க கூட்டிட்டு வர நினைச்சேன். ஆனா தாரா அவ வாங்கியிருக்க வீட்டுக்குப் போகணும்னு சொல்றா” என்று பேசியபடியே விரிப்புகளைச் சரி செய்தான்.
“போகட்டும் சரத். விட்டுடு… அவங்க ரெண்டு பேரும் பேசட்டும். பேசணும்! பேசினாதான் நல்லது” என்றார்.
இருவருக்கும் புரிந்தது! தாரா, தன் தந்தை பற்றிப் பேசப் போகிறாள் என்று!
தாரா, அதிபன் மகளென்று தெரிந்தால் தேவா எப்படி எதிர்வினை புரிவான்? அதைத் தாரா எப்படி எடுத்துக் கொள்வாள் என்று கீதா கவலைப்பட்டார்.
ஆனால், இதுவரை இருவருக்கும் இடையிருந்து சேர விடாமல் தடுத்தாயிற்று! இனி விலகி நிற்பதே உகந்தது! என்று கீதா மனதைத் தேற்றிக் கொண்டார்.
கீதாவைப் பார்த்த சரத், “ம்மா, நீங்க…” என்று தொடங்க, “நான் என்னைப் பார்த்துக்கிடுவேன்! நீ அவளைப் பாருடா” என்றார்.
“நான் பார்த்துப்பேன். ஆனா அவ உங்களைத் தேட மாட்டாளா?”
நிச்சயம் ‘தான் இருக்க வேண்டும்’ என்று தாரா ஆசைப்படுவாள். ஆனால் தன்னிலமை? மீண்டும் முகத்தில் கலக்கம் தெரிந்தது.
“ம்மா, நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்” என்று அவருக்கு ஆறுதல் சொன்னான்.
அதற்கு மேல் அவன் கீதாவை வற்புறுத்த முடியாது! வற்புறுத்தவும் மாட்டான்! உள்ளத்தின் குற்ற உணர்வால் கீதா உடலைக் குறுக்கி படுத்துக் கொண்டார்.
“இப்போ கவலைப்படாம இருங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்று, அவர் தலைகோதி சொல்லிவிட்டு சரத் வெளியே வந்தான்.
வந்தவன் கண்களில் தாரா விழுந்தாள். ‘அம்மா, ஏன் இப்படி நடந்துக்கிறாங்க?’ என்ற ரீதியில் நின்றிருந்த தாராவைப் பார்த்தான். ‘இவளுக்கு என்ன ஆறுதல் சொல்ல?’ என்று நினைத்தவன் மனம் சுணக்கம் கொண்டது.
“என்னடா அம்மா வரலையா?” என்று ராஜசேகர் கேட்டார்.
‘இல்லை’ என்று தலையசைத்தான். தாரா எதுவுமே கேட்கவில்லை. அவளை நோக்கி வந்தவன், “ஒன்னுமில்லை! அம்மா கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸா பீல் பண்றாங்க. அதனால வீட்ல ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றான்.
“நான் பேசிப் பார்க்கவா?” என்று நம்பிக்கை இல்லா குரலில் கேட்டாள்.
நம்பிக்கை இல்லாத குரல்தான்! ஏன்? சரத் பேசியே வராதவர், தான் பேசியா வந்து விடப்போகிறார்… என்ற காரணத்தால்!
“வேண்டாம்! இந்த நேரத்தில எதும் பேச வேண்டாம்” என்றான் சமாதானமாக!
அவள் எப்படிச் சமாதானம் அடைவாள்? அப்படியே நின்றுகொண்டிருந்தாள்.
“தாரா, நான் இருக்கேன்! ஜெகன், அப்பா…” என்று சரத் சொல்லும்போதே, அவள் பார்வைக் கீதாவின் அறை நோக்கிச் சென்றிருந்தது.
சரத், அதற்கு மேல் பேசாமல் நிறுத்திவிட்டான். அவள் முகத்தைப் பார்த்தால், அவனால் எதுவும் பேச இயலவில்லை. அவனுக்கு மட்டுமல்ல! ராஜசேகரும் ‘என்ன செய்ய?’ என்று தெரியாமல் நின்றார்.
ஜெகன் மூவரையும் பார்த்தான். பின், “அக்கா” என்று அழைத்தான்.
தாரா அவன் அருகில் சென்று நின்று கொண்டு, “நீ அம்மாகிட்ட சொல்லேன்” என்று கேட்டுப் பார்த்தாள்.
“ஏன் சொல்லணும்? என்ன சொல்லணும்? கல்யாணம்னா வரத் தெரியாதா?” என்று கோபப்பட்டான். சரத் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான்.
இன்னும் சமாதானம் அடைய முடியாமல் நின்றவளைப் பார்த்து, “போகலாம் க்கா லேட்டாகுது. தேவாவைப் பார்த்தா, நீ சரியாடுவ… வா” என்று சமாதானப் படுத்தினான்.
தேவா என்ற வார்த்தை, அவளை சற்று வழிக்கு கொண்டு வந்தது. பின்னால் நின்ற சரத்தையும் ராஜசேகரையும், கண் அசைவால் ‘வாங்க’ என்று ஜெகன் அழைத்தான். பின் தாரா கைப்பிடித்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
கீதா அறையைப் பார்த்து நின்ற ராஜசேகரிடம், “வாங்கப்பா” என்றான் சரத்.
“ஏன் அம்மா இப்படி?” என்று வருந்தினார்.
“காரணம் இருக்கு! வந்து பேசலாம் ப்பா”
“அம்மா ஹெல்த்துக்கு எதுவும்?”
“இல்லைப்பா. பட் நர்ஸ் அரேஞ்ச் பண்ணிருக்கேன். இப்ப வந்திருவாங்க. நீங்க வாங்க” என்று அவர்களும் கிளம்பிவிட்டார்கள்.
சார் பதிவாளர் அலுவலகம்!
சரத், தாரா, ஜெகன் மற்றும் ராஜசேகர்… நால்வரும் வந்திருந்தனர். சரத்தும், ராஜசேகரும் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர்.
தாரா ஜெகன்… ஓரமாக மர நிழலில் நின்றதனர். அவன், அவளைப் பார்த்துக் கொண்டே நின்றான். ‘என்ன சொல்லி தேற்ற?’ என்று தெரியவில்லை.
தாராவிற்கு… அப்பா இல்லாதது இக்கணம் பெரும் குறையாகத் தெரிந்தது! இங்கேயே இருக்கும் அம்மாவும் வராதது பெரும் வேதனையாக இருந்தது!? தேவாவிடம் உண்மையை சொன்னால், எப்படி எடுத்துக் கொள்வானோ? என்ற கேள்வி வந்தது!
இதுதான் தாராவின் மனநிலை!
சற்று நேரத்தில், தேவா மற்றும் அவனைச் சார்ந்தோர் வந்தனர். பாபி, சாரு, மாலி, அண்ணன் அண்ணி குழந்தைகள், மிஸ்டர் அண்ட் மிஸஸ் பாஸ்கர், ஹேமா மற்றும் அவள் கணவன்… இப்படி எல்லாரும்!
ராஜசேகர் மற்றும் சரத்… இருவரும் சென்று அவர்களை வரவேற்றனர்.
வந்தவர்கள், ஒருவருக்கு ஒருவர் பேச ஆரம்பித்தனர். சற்று நேரம் பேசியபின், தேவா தாராவை நோக்கி வந்தான்.
“அக்கா தேவா வர்ராரு” என ஜெகன் சொன்னதும் தாரா நிமிர்ந்து பார்த்தாள். அவன் அருகில் வந்ததும், “ஹலோ தேவா” என்று ஒரு புன்னகைத் தந்துவிட்டு ஜெகன் நகர்ந்து கொண்டான்.
தேவா, “ஏன் தனியா நிக்கிற, எல்லார்கிட்டயும் வந்து பேசலாம்ல” என்றான். எதுவும் சொல்லாமல் நின்றாள்.
இங்கு ஒன்று, இடைப்பட்ட நாட்களில்… தேவா மனதின் விருப்பம் மிகுந்ததால், மரியாதை விகுதி விலகியிருந்தது.
தாராவிற்கு? என்றுமே தேவா மரியாதைக்குரியவன்! சாருவைத் தவிர மற்ற எல்லோர் முன்னிலையிலும்! அவன் உட்பட!!
தேவா, தாராவைப் பார்த்தான். அவள் முகத்தில் வாட்டம் கண்டு, “என்னாச்சு? ஏன் ரொம்ப டல்லா தெரியற?” என்றான் அக்கறையாக!
அமைதியாக நின்றாள்!!
“இப்பதான் உங்க அப்பா சொன்னாங்க ‘அம்மா வரலைனு’. அதான் கஷ்டமா இருக்கா” என்றான் பரிவாக!
பதிலேதும் இன்றி பரிதவித்தாள்!!
“கவலைப்படாத. இதெல்லாம் லவ் மேரேஜ்ல நடக்கிறதான்” என்றான் இதமாக!
இம்மியளவும் இதமாக உணர இயலாமல், இன்னல் கொண்டாள்!!
“இப்படி இருக்காத. அப்புறமா அவங்களைப் போய் பார்க்கலாம்” என்றான் ஆறுதலாக!
ஆறுதல் வார்த்தைகள் கூறியும், மன ஆற மறுத்தது!!
சூழலில் பார்வையைச் பதித்திருந்தவனை, “தேவா” என்று அழைத்தாள்.
“ம்ம்ம், என்ன தாரா?”
“ஹக் பண்ணி அழணும் போல இருக்கு” என்றாள், உயிரின் ஒவ்வொரு அணுவும் அலைப்புறும் குரலில்!
“கொஞ்ச நேரத்தில, மேரேஜ் முடிஞ்சிரும். அப்புறமா” என்றான், அவள் குரலை உணர்ந்து! புரிந்து! தெரிந்து!! மேலும், “ஆனா அழக்கூடாது. இது நம்ம லைஃப் ஸ்டார்டிங் டே! நீ சந்தோசமா இருக்கணும்” என்றான் மகிழ்ச்சியாக!
“ம்ம்ம்” என்றாள் சந்தோஷமே இல்லாமல்!
“பட், நான் சொன்னேன்ல! கன்வின்ஸ் பண்ண, முடியலைனா… நான் வந்து பேசறேன்னு. என்கிட்ட சொல்லிருக்கலாமே” என்று குறைபட்டுக் கொண்டான்.
“இல்ல தேவா… அது வந்து…” என்று விளக்கம் கொடுக்கப் போனவளை, “ஹே! நத்திங்க் ராங். விடு இத” என்று நிறுத்திவிட்டான்.
தாராவிற்கு, ‘இதற்கே இப்படி என்றால்… இன்னும் என்னென்ன இருக்கிறது?’ என்று பதற ஆரம்பித்தது.
“தேவா, நான் எதும் தப்பு பண்ணிருந்து, ஸாரி கேட்டா மன்னிச்சிருவீங்களா”
“அதெப்படி?! கண்டிப்பா முடியாது” என்றான் விளையாட்டாய்!
அவன் விளையாட்டை ரசிக்க முடியாமல் தவித்தாள், தாரா.
மென்னகையுடன், “டசன் டைம்ஸ் ஸாரினு கேட்கணும்” என்றான் விருப்பமாக!
தாராவால் சிரிக்க இயலவில்லை. தேவா, அவள் நிலை அறிந்து கொண்டான். ஆனால், அவளது அம்மாவை நினைத்துக் கலங்குகிறாள் என்று அர்த்தம் கொண்டான்.
சற்று நேரத்தில்… வாழ்நாள் முழுதும் வாழப் போகும் வாழ்வை கையெழுத்து இட்டு வரவேற்று, மற்ற நடைமுறைகளை முடித்துவிட்டு, வெளியே வந்தனர்.
சில நிமிடங்களுக்குப் பின்… ஹேமாவிற்கு ஒரு எண்ணம், தாரா அம்மாவைச் சென்று பார்த்துவிடலாம் என! ராஜசேகரிடம் சொல்லி பார்த்தாள். அவருக்கும் அது சரியென்று தோன்றியது.
ஆனால் தாராவின், ‘விருப்பம் என்ன?’ என்று ராஜசேகர் அவளைப் பார்த்தார். ‘முடியாது’ என்று தாரா தலையசைத்தாள். அவளுக்குத் தேவாவிடம் பேசியே ஆக வேண்டும்! இதற்கு மேல் உண்மையை தள்ளிப் போட முடியாது என்று எண்ணினாள்!
சரத், ஜெகன், தேவா… அவளிடம் கேட்டுப் பார்த்தனர். யார் சொல்வதையும் அவள் கேட்கவில்லை. கேட்கும் நிலையில் அவள் மனநிலை இல்லை.
தேவா, கொஞ்சம் ஒரு மாதிரி உணர்ந்தான். ‘ஏன் இந்த அடம்?’ என்று ஒரு சிறு கோபம் கூட வந்தது!
தாராவின் மறுப்பினால் அனைவரும் கிளம்பத் தயாராகினர்.தேவா அண்ணி, அண்ணன், மிஸ்டர் அன்ட் மிஸஸ் பாஸ்கர்… ராஜசேகர் மற்றும் தேவாவிடம் சொல்லிவிட்டு விடைபெற்றனர்.
போகும் முன் ஹேமா தம்பியிடம் வந்து நின்று, “தேவா… நானும் அவரும், என் மாமியார் வீட்டுக்குப் போறோம்” என்றாள்.
“பார்த்து இருந்துக்கோ க்கா”
“ம், இன்னொரு நாள் போய் அவங்க அம்மாவைப் பார்த்திடு”
“ம்ம்ம், சரி-க்கா”
“ரொம்ப சந்தோஷமா இருக்கு தேவா. வேற எதையும் நான் யோசிக்கல. நீயும் யோசிக்காத சரியா? சந்தோஷமா இரு” என்றவள், மேலும் சில அறிவுரைகள் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள்.
பாபியும், சாருவும்… இருவருக்கும் வாழ்த்துச் சொல்லி விடைபெற்றனர்.
சில நிமிடங்களுக்குப் பிறகு… தாரா, சரத், ஜெகன் மூவரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.மறுபக்கம், ராஜசேகரும் தேவாவும்!
ராஜசேகரின் முகத்தில் ஒரு நிம்மதியின்மை பரவிக் கிடந்தது.அதைப் படித்தவன், “என்னாச்சு மாமா?” என்று கேட்டுவிட்டான்.
அவன் விளிக்கும் விதமே, அவரின் நிம்மதியின்மையைப் பாதியளவு விரட்டி விட, “நீங்க… தப்பா எடுத்துக்காதீங்க. தாரா ஏதோ உங்ககிட்ட பேசணும்னு நினைக்கிறா போல! அதான் இப்படி!” என்றார்.
“பரவால்ல மாமா”
“ரிசப்ஷன் வைக்கிறப்போ, இந்த மாதிரி சின்னச் சின்ன குறையெல்லாம் இல்லாம பார்த்துக்கிறேன்”
“இதுல குறை என்ன இருக்கு? அத்தையைப் போய் பார்க்காம இருக்கிறது, மரியாதையா இருக்காதுன்னு நினைச்சேன். அவ்வளவுதான் மாமா”
இவர் இப்படி யோசிக்கிறார். ஆனால், இவரைக் கீதா எப்படிப் பார்க்கிறார் என்று நினைக்கையில் ஒரு மாதிரி இருந்தது, ராஜசேகருக்கு!
“நீங்க ஏன் இவ்வளவு யோசிக்கிறீங்க மாமா?”
“எல்லாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு போயிருந்தா, மேரேஜ் கம்பிளிட் ஆன பீல் கிடைச்சிருக்கும். யாரையும் சரியா கவனிக்க முடியலைனு ஒரு வருத்தம்”
“ஓ!”
“உங்க அண்ணா, அண்ணி எதுவும் நினைப்பாங்களா?”
“அவங்க இதெல்லாம் எதிர்ப்பார்க்க மாட்டாங்க மாமா”
“உங்க அக்கா?”
“அக்கா ஹெல்த் கன்டிஷனக்கு, அவ ரெஸ்ட் எடுக்கிறதுதான் நல்லது”
“பாஸ்கர் பேமிலி?”
“அங்கிள் ஆன்ட்டி, என்னைக்குமே என பெர்ஷனல்ல தலையிட மாட்டாங்க”
அடுத்த கேள்வி ராஜசேகர் கேட்கும் முன், “பாபி-சாரு புரிஞ்சிப்பாங்க. விடுங்க மாமா” என்று சிரித்தான்.
ராஜசேகரும் சிரித்து, ‘வேறு யாரையும் விட்டுவிட்டோமா?’ என யோசித்தார்.
“மிச்ச இருக்கிறது நான் மட்டும்தான் மாமா” என்றான்.
மேலும் சிரித்தார். என்றுமே மற்றவர்களுக்காகப் பேசிப் பழகியவருக்கு, தனக்காக ஒருவன் பேசுவது… சந்தோஷத்தை தந்தது.
“மாப்பிள்ளை” என்றார் மனதார! மனது ஆற!!
“ஐயோ மாமா. இப்படிக் கூப்பிடாதீங்க. ரொம்ப ஒருமாதிரி இருக்கு” என்று கூச்சப்பட்டான்.
“எனக்கும் இப்படிக் கூப்பிடறது வித்தியாசமா இருக்கு. ஆனா உங்கள இப்படிக் கூப்பிடத் தோணுது. ஏதோ ஒரு திருப்தி மாப்பிள்ளை”
“ஜெகனே பேர் சொல்லிதான் கூப்பிடுறாரு… நீங்க…”
“அவன் எப்படியும் கூப்பிட்டுப் போறான். எனக்கு இப்படிக் கூப்பிடறதுதான், பிடிச்சிருக்கு. இது ஒரு ஆசைன்னு கூட வச்சிக்கோங்க”
“உங்க இஷ்டம் மாமா. ஆனா இதுல ஆசைப்படற அளவுக்கு என்ன இருக்கு?”
“உங்களுக்கு புரியாது. கூடிய சீக்கிரம் புரியலாம். புரிஞ்ச பின்னாடி, நீங்க மாறினாலும்… நான் மாற மாட்டேன் மாப்பிள்ளை” என்றார் உண்மைக்கு அந்தப் பக்கம் நின்று கொண்டு!
“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை மாமா” என்றான் உண்மைக்கு இந்தப் பக்கம் நின்று கொண்டு!
“விடுங்க மாப்பிள்ளை. தாரா வெயிட் பண்றா. கிளம்புங்க” என்றார் சகஜமாக!
சரியெனத் தலையாட்டினான். அதன் பின், தாராவும் தேவாவும்… சரத் ஜெகன் மற்றும் ராஜசேகரிடம் விடைபெற்றுச் சென்றனர். அவர்கள் சென்றதும், மற்ற மூன்று பேரும் கீதாவைப் பார்க்க கிளம்பிவிட்டனர்.
**********
தாரா வீடு!
அது, அடுக்குமாடிக் குடியிருப்பு! வீடு வரும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. உள்ளே வந்ததும், “ஏன் தாரா இப்படி?” என்று கேட்டான்.
“ஏற்கனவே சொல்லியிருந்தேனே தேவா”
“அது சரி. ஆனா மாமா எல்லார்கிட்டேயும் எக்ஸ்பிளேன் பண்ணிக்கிட்டு, பீல் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அதான் கேட்டேன்”
ராஜசேகரை… தேவா அழைக்கும் விதம் தந்த அசௌகரிய அமைதி, தாராவிடம்!
“இப்போ இங்க வர்றது அவ்ளோ அவசியமா?” என்று கேட்டான்.
‘ஆம்’ என்று தலையாட்டினாள்.
“அப்படி என்ன அவசியம்?”
“எனக்கு என் அப்பாகூட இருக்கணும்னு தோணிச்சு. அதான்” என்றாள், அழுத்தமாக! ஏக்கமாக! விருப்பமாக!!
“அப்பாவா? அப்படினா நீ மாமா கூட…” என்று தேவா ஆரம்பிக்கும் போதே, “அவர் என் அப்பா இல்லை” என்றாள், நிதானமாக! நிம்மதியாக!
புரியாமல் நின்றான். “ஒரு நிமிஷம் வாங்க” என்றாள். அவனும், அவள் பின்னே சென்றான். வரவேற்பறையிலிருந்த அதிபன் புகைப்படத்திற்கு முன் சென்று நின்றாள். அவனும் நின்றான்.
“இவர்தான் என் அப்பா” என்று புகைப்படம் நோக்கிக் கை காட்டினாள்.
தாரா கை காட்டிய திசை நோக்கி, தேவாவின் பார்வைச் சென்றது. அங்கே அதிபன்! அவனின் அதிபன் ஐயா புகைப்படம்!!
அதைப் பார்த்ததும்… கோபம் வந்தது! திக்கென்று இருந்தது! திகைப்பைத் தந்தது! புரியாமல் இருந்த ராஜசேகரின் வார்த்தைகள் புரிய ஆரம்பித்தன. மன்னிப்பு பற்றிய தாராவின் பேச்சு எதற்கு என்று தெரிந்தது.
சில நிமிடங்களில் தன்னை மீட்டுக் கொண்டான். சற்றுநேரம் அமைதியாக நின்றான். பின் சிரித்துக் கொண்டான்.
“ஏன் சிரிக்கிறீங்க?” என்று எதுவும் அறியாமல் கேட்டாள்.
“உங்க அம்மா கல்யாணத்துக்கு ஏன் வரலைனு இப்போ புரியுது” என்றான் அலட்சியமாக!
தாரா, அம்மா ஏன் வரவில்லையென தனக்கே புரியவில்லை. இவனுக்கு என்ன புரிந்தது? என்ற குழப்பத்துடன் நின்றாள்.
“உன்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டாங்களா?” என்றான், அவளைப் புரியாமல்!
“என்ன விஷயம் தேவா?” என்றாள் ஏதும் புரியாமல், தெரியாமல்!
“அத விடு. நீ ஏன் அதிபன் ஐயா பொண்ணுனு என்கிட்ட சொல்லலை” என்றவன் கண்களில் ஏக்கர் கணக்கில் ஏமாற்றம் கொட்டிக் கிடந்தது.

