Kathambari Novels
அதன்பின்னர்… தாராவிற்கு இருந்த பணிச் சூழலில் தேவாவிற்கு அழைப்பு விடுக்கவில்லை. மேலும், தன் அழைப்பை ஏற்காததால் அவன் தன்னை எந்த இடத்தில் வைத்திருக்கிறான் என்று புரிந்தது.
எனவே அதற்கு அடுத்தடுத்து நாட்களிலும் தாரா அழைக்கவில்லை.
நாட்காட்டியில் ஒரு பதினைந்து நாட்களாய், தன்னை நிரப்பிக் கொள்ள நேர செலவிடல்கள் ஏதுமின்றி இருந்தது! – காதல் உண்டியல் feeling sad with தேவா and தாரா!!
பதினைந்து நாட்களுக்குப் பின்!
இன்று சாருவும், பாபியும் தங்களது வாழ்க்கைப் பயணத்தை துவக்கும் நாள். ஆதலால், சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். சாரு மாமியார் மாமானார் வீட்டு ஆட்கள் நிறைய பேர் வந்திருந்தனர்.
மற்றும் அவள் தோழி தாராவும் வந்திருந்தாள்!
பாபியின் பக்கமா… அவன் அப்பா, ஒன்றிரண்டு வழக்கறிஞர்கள், மற்றும் நண்பன் தேவாவும்!
மிஸ்டர் அன்ட் மிஸஸ் பாஸ்கரும் இருந்தனர். ஹேமாவின் உடல் நிலையில் ஏற்பட்ட ஒரு சில மாற்றங்களால், அவளால் வர இயலவில்லை. தேவாவின் அண்ணன், அண்ணி அவளுக்குத் துணையிருந்தனர். எனவே அவர்களும் வரவில்லை.
தேவாவும் தாராவும் பார்த்துக் கொண்டனர், ஆனால் பேசவில்லை.
பாபி, சாரு தங்களது முறை வரும் வரைக் காத்திருந்து, உள்ளே போனார்கள். சில விதிமுறைகள் நடந்தேறிய பின், பாபியும் சாருவும் கையெழுத்து இட்டுக் கைப்பிடித்துக் கொண்டனர்.
சுற்றிலும் நின்றவர்களைப் பார்த்து சாரு புன்னகைத்தாள். பின் கண்களில் லேசாக நீர் சுரக்கப் பாபியைப் பார்த்தாள். ‘இனி அழாத’ என்று சாருவிற்கு மட்டும் கேட்கும்படி சொன்னான்.
“ரிங் எக்ஸ்சேஞ் பண்ணு பாபி” என்று தேவா இருவருக்கான மோதிரங்களை எடுத்துக் கொடுத்தான்.
எதிரெதிரே இருவரும் நின்று கொண்டனர். ஒருமுறை நேசத்துடன் நிமிர்ந்து பார்த்துக் கொண்டனர். ஒருநொடி கண்களால் பேசிக் கொண்டனர். முதலில் சாரு விரல் பிடித்து பாபி மோதிரம் அணிவித்தான். பின் சாருவிடமிருந்து மாலியை அவன் வாங்கிக் கொள்ள, சாரு பாபிக்கு மோதிரம் அணிவித்தாள்.
சுற்றிலும் நின்றவர்கள் கரகோஷம் செய்து, அவர்கள் கரம்பிடித்த நிகழ்வைக் கொண்டாடினர். அக்கணம், “தாரா” என்றான் பாபி.
எல்லாரும் ‘எதற்கு?’ என்று யோசிக்கையில், “ஒரு நிமிசம் பாபி” என்று சிரித்துக் கொண்டே, டோட் பையிலிருந்து பரிசுத்தாள் சுற்றப்பட்ட ஒன்றை எடுத்துக் கொடுத்தாள்.
பாபி அதை வாங்கி, “ஒரு சின்ன கிஃப்ட்” என்று சாருவிடம் கொடுத்தான்.
“என்னது?” என்று வாங்கிக் கொள்ளாமலே கேட்டாள்.
“சாரு, வாங்கிப் பிரிச்சுப் பாரு” என்று பல குரல்கள்.
சாருவும் வாங்கிப் பிரித்துப் பார்த்தாள். அந்தப் பரிசைப் பார்த்ததும், “பாபி” என்று சற்று உணர்ச்சிவசப்பட்டு அவனைப் பார்த்தாள். அவள் ஆசைபட்ட படிப்பிற்கான விண்ணப்பம்.
சந்தோஷத்தில், “நீ கூட சொல்லலை” என்று தாராவிடம் செல்லமாகக் கோபம் காட்டினாள் சாரு.
“இது சர்ப்ரைஸ் சாரு அன்ட் என்ட்ரன்ஸ்காக ப்ரிப்பேர் பண்ணு” என்றாள் தாரா சிரித்தபடியே!
மீண்டும் சாரு பாபியைப் பார்த்தாள். லேசாக அவளை அணைத்து எவருக்கும் உறுத்தல் இல்லாமல் அவள் நெற்றியில் ஓர் உதடு அழுத்தம் தந்தான் பாபி. பின் எல்லா உரிமையுடன் மாலிக்கு ஒரு முத்தம் தந்தான்.
சூழ்ந்திருந்தோர் முகங்களில் ஒரு நிறைவான புன்னகை. முக்கியமாக சாரு மாமியார், மாமனார் முகத்தில்!
அதன்பின்பு அனைவரும் வெளியே வந்துவிட்டனர். ஆகாயம் லேசாகத் தூறல் சிந்திக் கொண்டிருந்தது. வந்தவர்கள் அங்கங்கே குடைப் பிடித்து நின்று பேச ஆரம்பித்தனர். சிலர் விடைபெற்றுச் சென்றிருந்தனர்.
உறவுகளுக்கு வழிவிட்டு, நண்பர்கள் சற்று ஒதுங்கிக் கொண்டனர். அதாவது தாராவும் தேவாவும் தனியே நின்றிருந்தனர்! இருவருமே ஆளுக்கொரு ஒரு திசையில் நின்று கொண்டிருந்தனர்.
அன்று அடர் சாம்பல் நிற புடவை, அதற்கு ஏற்றார் போல அடர் சிவப்பு வர்ண சட்டை அணிந்திருந்தாள். அடர்சிவப்பு நிறத்தில் குதி உயர் காலனி. காதல் சொல்ல நினைத்த நாளில் அணிந்த அதே உடை!
மேலும் இன்று கூடுதலாக ஒரு குடை!!
தேவாவிடம், ‘ஏன் பேசவில்லை?’ என கேட்க வேண்டுமென அவனை நோக்கி முன்னேறி நடந்து வந்தாள். பாதித் தூரத்தைக் கடந்து வருகையில் தரையின் ஈரத்தால் தாராவின் கால் இடறியது.
“ஸ்ஸ்” என்று நின்றுவிட்டாள். மீதித் தூரத்தை வேகமாகக் கடந்து வந்த தேவா, “என்னாச்சு தாரா?” என்று கேட்டான்.
“நீங்க பேசிட்டிங்க” என்று சொல்லிக் கொண்டே, ஹீல்ஸைக் கழட்டினாள்.
“என்னாச்சு?” என்றான் மறுமுறையும்!
“ஸ்லிப் ஆகிடுச்சு” என்றாள் ஒரு கையில் குடையைப் பிடித்துக் கொண்டு, குனிந்து குதிங்காலை நீவி விட்டபடி!
“பெயின் இருக்கா?”
“ம்ம்ம், லைட்டா” என்றாள் நிமிர்ந்து நேராக நின்று!
“குடையைக் கொடுங்க… நான் வச்சிருக்கேன்” என்று வாங்கிக் கொண்டான்.
இருவருமே ஒரு குடைக்குள்! காதல் நிலையாலல்ல! காலநிலையால்!! அவன் அருகாமை… அருகாமை தரும் ஆனந்தம்… ஆனந்தம் தரும் அமைதி… அந்த அமைதியில், தன் அன்பை தாழிட்டு அடைத்து வைக்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டும் போல் இருந்தது, தாராவிற்கு!
எனவே பேச்சை ஆரம்பித்தாள். “அன்னைக்குத் திருப்பி கால் பண்ணறப்ப, ஏன் ஃபோன் அட்டன் பண்ணலை?”
“நீங்க அப்படிக் கேட்டது பிடிக்கலை”
“எனக்கு அப்படித் தோணுச்சு…. கேட்டேன். அதுல என்ன பிடிக்கலை?”
“தாரா கூடப் பேசுறதுக்கு வேற யார்கூடவும் இருக்கிற பிரச்சனை காரணமா இருக்காது”
“புரியலை”
“அன்னைக்கு உங்க வாட்ஸ்அப் மெசேஜ் பார்க்கணும்னு பார்க்கல. தற்செயலா பார்த்தேன். அன்ட் பேசறப்போ நீங்களும் ஜாலியா பேசினீங்க, ஸோ நானும்…”
“ஓ! ஜஸ்டிபிகேஷன்?”
“இது ஜஸ்டிபிகேஷன் இல்ல, என்னோட கிளாரிஃபிகேஷன்”
“அதான் எதுக்கு?”
“எதுக்குனா? நான் என் லவ் பெயிலியர் மறந்து பேசிக்கிட்டு இருந்தேன். அதை நானே சொல்லியும் இருந்தேன். அப்படியிருக்கிறப்போ… அந்தப் பொண்ணு இல்லைனுதான் உங்ககிட்ட பேசறதா சொன்னா! எப்படி இருக்கும்?”
அமைதியாக நின்றாள்.
“நான் உங்ககூடப் பேசிறப்போ, என் மனசில என்ன தோணுதோ அதைத்தான் பேசியிருக்கேன். அது… ஃபர்ஸ்ட் டே ஆர்க்கியூமென்ட், ப்ரோபோசல் டேல நோ சொன்னது, அதுக்கப்புறம் ஸாரி கேட்டது, மால்ல பேசினது, ஃபோன்ல ஃபன் டாக்… எல்லாமே”
“….”
“வேற யார் கூடயோ இருக்கிற ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் வச்சி… தாராகூட பேசவும் மாட்டேன், எந்த ரிலேஷனும் ஸ்டார்ட் பண்ண மாட்டேன்”
“ஏன் அப்படி?” என்று தன்னை அறியாமல் கேட்டாள்.
“ஏன்னா?! தாரா எனக்கு அப்படிப்பட்ட ஒரு பொண்ணா தெரியிறாங்க” என்று அவளை அறிந்து சொன்னான்.
“நான்… தேவாவைச் சரியா புரிஞ்சிக்கலையோனு தோணுது”
“எனக்கு அப்படித் தோணலை”
“ஃபோன்ல பேசற மாதிரியே பேசலாமா? இது ஒருமாதிரி இருக்கு” என்றாள், எதையோ மறைக்க பிரயத்தனம் படுவது போன்ற குரலில்!
அவள் பிரயத்தனம் புரிந்தது. இரண்டு மூன்று நிமிடங்கள் அமைதியாக கழிந்த பின், அவளது ஹீல்ஸைக் காட்டி, “மாட்டிக்கோங்க” என்றான்.
தூறல் வலுத்திருந்தது. லேசாகப் புடவையைத் தூக்கி, மண் ஒட்டிய பாதத்தை, மழையில் காட்டி சுத்தம் செய்து கொண்டாள். ஹீல்ஸ் போடும் போது நிலை தடுமாறினாள். ஆதாரமாகப் பிடித்துக்கொள்ள அவனை நோக்கி அவள் கரம் சென்றது. அடுத்த நிமிடமே தயக்கம் வந்து அவள் கரத்திற்கு முன் நின்றது!
ஆதலால், “டூ யூ மைன்ட்?” என்று கேட்டாள்.
சற்றும் யோசிக்காமல், “நோ, ஐ டோன்ட் மைன்ட்” என்றான். அவனைப் பிடித்துக் கொண்டு ஹீல்ஸை மாட்டினாள்.
“எதுக்கு இவ்ளோ பெரிய ஹீல்?”
அவன் அப்படிக் கேட்டதும், “வெயிட் பண்ணுங்க” என்று இரண்டு ஹீல்ஸையும் நன்றாக மாட்டினாள்.
அடுத்து, இரு விரல்களால் தன் கண்களைக் சுட்டிக் காட்டினாள். பின்பு அதே இரு விரல்களால், அவன் கண்களைக் சுட்டிக் காட்டி, “உங்க கண்ண பார்த்துப் பேசறதுக்குத்தான்” என்றாள்.
தேவா சிரித்தான். அவன் பிடித்திருந்த குடையின் அடியில் நின்று… அவனைப் பிடித்திருக்கும் கரத்தை எடுக்காமல் அவளும் சிரித்தாள். அக்கணம் இரண்டு விடயங்கள் நடந்தன!
ஒன்று…
மிஸஸ் பாஸ்கர் இதைப் பார்த்து, “பாஸ்கர் அங்க பாருங்க” என்று தேவா, தாரா நிற்பதைக் காட்டினார். பார்த்ததும், மிஸ்டர் பாஸ்கரும் ஆச்சிரியப்பட்டார்.
“தேவாக்கு அந்தப் பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. இல்லையா பாஸ்கர்?”
“எஸ், யூ ஆர் கரெக்ட்” என்று குடையைப் பிடித்த வண்ணம், இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
இரண்டாவது,
திருமணம் முடிந்த தம்பதியினர்… மிஸ்டர் அன்ட் மிஸஸ் பாபி… முக்கால்வாசி பேர் வாழ்த்துச் சொல்லி விடைபெற்றுச் சென்றிருந்த பின், சாருவும் பாபியும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.
அந்த நேரத்தில்தான் தாரா தேவா நின்று கொண்டிருந்த தோற்றம் சாருவின் கண்களில் விழுந்தது.
“ஐயோ, என்ன பாபி நடக்குது?” என்றாள் பதறியடித்து! பாபியும் பார்த்தான்!
“நீ ஏன்மா அவங்களையே பார்க்கிற?” என்றான் பதற்றமே இல்லாமல்!
“என்ன இப்படிச் சொல்ற? இதலாம் தப்பில்லையா?” என்று படபடத்தாள்!
“எனக்கென்னமோ இதுதான் சரினு தோணுது” என்றான் பட்டும் படாமல்!
அவன் சொன்ன விதத்தைக் கேட்டு, “இது எங்க போய் முடிய போகுதோ?” என புலம்ப ஆரம்பித்தாள்.
“இதுதான் ஆரம்பம்” என்று பாபி சொல்ல, அவனை முறைத்துப் பார்த்தாள்.
“நமக்குந்தான்” என்றதும், முறைப்பை விட்டுவிட்டு, முறுவலைக் காட்டினாள்.
அவனும் முறுவலித்தான். சாருவின் ஒரு கையில் பெரிய குடை, மறுகையால் பாபியைப் பிடித்திருந்த விதம், பாபியின் தோளில் மாலி… பார்ப்பதற்கே அது ரசனைக்குரியதாக இருந்தது!
உறவினர்களுடன் சற்று நேரம் இருக்க, சாரு மாமியார் மாமானார் வீட்டிற்குப் பாபியை அழைத்தனர். அவனும் சரியென்றிருந்தான். அதன்படி கிளம்ப ஆரம்பித்தனர்.
பாபி கிளம்பும் முன் தேவாவிடம் வந்து, “நீயும் வர்றியா?” என்று கேட்டான்.
“ம்கூம், இது உனக்கான நாள். ஜஸ்ட் என்ஜாய். அப்பா வர்றாங்களா”
“ஆமா, சாரு வரணும்னு சொல்லிட்டா”
“சரி கிளம்பு, வீக்கென்ட்ல நானும் அக்காவும் வீட்டுக்கு வர்றோம்”
“ம்ம்ம் சரி” என்று இருவரும் விடைபெற்றுக் கொண்டனர். இதே போல் சாருவும் தாராவிடம் விடைபெற்றுக் கொண்டாள்.
திருமணத்திற்கு வந்த அனைவரும் சென்றபின், மீண்டும் தாராவும், தேவாவும் தனித்து நின்றனர். தேவா, தாரா அருகில் வந்தான். இருவரும் ஒரு புன்னகை பரிமாறிக் கொண்டனர்.
“அப்புறம்?” என்றான்.
“அடுத்து என்ன பிளான் தேவா?”
“இன்னைக்கு லீவ் எடுத்திருக்கேன். ஸோ பெருசா ஒன்னும் இல்லை”
“ஓ!” என்று யோசித்தாள்.
“நீங்க??”
இன்னும் யோசனையில் பிடியிலே நின்றிருந்தாள்.
“தாரா நீங்க?” என்றான் அழுத்தமாக!
“அன்னைக்கு நீங்க கால் அட்டன் பண்ணல. அப்புறம் என்கிட்ட பதினைஞ்சி பேசல” என்றாள்.
“பெரிய தப்புதான்! என்ன பண்ணலாம்?”
“பெனால்ட்டி இருக்கு”
“என்ன பெனால்ட்டி?”
“கொஞ்ச நேரம் பேசிட்டுப் போகலாமா”
‘சரியென்று’ தலையாட்டினான்.
“இங்க வேண்டாம். வேற எங்கயாவது போகலாமா?” என்றாள். ‘சம்மதம்’ என்ற உடல்மொழியுடன், “ஆனா எங்க” என்றான். இருவரும் யோசித்தனர்.
இங்கு இன்னொன்று! அன்றிருந்த குற்றவுணர்வு இன்று இருவரிடமும் இல்லை. காரணம் தேவாவின் காதல் தோல்வியைத் தழுவியதால்!
“உங்களுக்கு ஏதாவது பிளேஸ் தெரிஞ்சா சொல்லுங்க” என்றான்.
‘தெரியலையே’ என்பது போல் முக மாற்றங்களுடன் நின்றாள்.
“சரி, நான் ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போகவா” என்று கேட்டான்.
“ம்ம்ம், பைக்லயா?”
“மழை வரவும் போகவும் செய்தே… பைக்ல வேண்டாம்”
“அப்போ எப்படிப் போக?”
சற்றுநேரம் யோசித்துவிட்டு, “தாரா, ஒன்னு பண்ணலாம். நீங்க உங்க டிரைவர கூப்பிட்டு… பைக்க என் ஆபீஸ்ல விடச் சொல்றீங்களா?” என்றான்.
“ஓகே, அப்புறம்… ”
“உங்க கார்ல போகலாம்”
“ஓகே” என்று தேவாவிடமிருந்து சாவி வாங்கி, கோபியை அழைத்து, தேவா அலுவலகத்தில் வண்டியை விடச் சொல்லி, பைக் சாவியைக் தந்துவிட்டு, கார் சாவியை வாங்கிக் கொண்டாள்.
கோபி சென்றதும் கார் சாவியை தேவாவிடம் நீட்டியவள், சட்டென ஏதோ ஒரு தயக்கத்தில் பாதியிலே கையை நிறுத்தினாள்.
“என்ன தாரா?”
“நீங்க கார்…??” என்றாள் கேள்வியாக!
“ஏங்க, பாபியோட கார் டிரைவ் பண்ணிருக்கேன். நம்பிக் கொடுங்க”
“ஓ! பட், இது என்னோட ஃபேவரைட் கார். அதான் யோசிச்சேன்… “
“அப்படினா நீங்களே டிரைவ் பண்ணுங்க”
“டிரைவ் பண்ண தெரியும், ஆனா பண்றதில்ல” என்று சிறு முக மலர்தலுடன் அவனிடம் சாவியைக் கொடுத்தாள்.
பயணம் ஆரம்பமானது. போகும் போது தாரா மருத்துவமனைக்கு அழைத்துப் பேச ஆரம்பித்தாள். பேசிக் கொண்டிருக்கும் போதே, “சரத் சார் கேட்டா நான் சொல்லிக்கிறேன்” என கோபமாகச் சொல்லி வைத்துவிட்டாள்.
ஓர் அமைதி நிலவியது. அதன்பின், “சரத் யாரு?” என்றான்.
“ம்ம்ம் என்ன?”
“ஃபர்ஸ்ட் டே ஆக்சிடென்ட் கேஸ் கூட்டிட்டு வர்றப்பவும் இந்த பேர் கேட்டேன். அன்ட் இன்னைக்கும். அதான்… சரத் யாரு?”
“என் அண்ணன்” என்றாள் இயல்பாக!
“ஓ! ஆனா கோபமா பேசின மாதிரி இருந்தது”
“ஹாஸ்பிட்டல் விசயமா பேசறப்ப சண்டை வரும்” என்றாள் முகம் சுளித்து!
அதைக் கண்டவன், “அண்ணனைப் பிடிக்காதா” என்று கேட்டான்.
“ச்சே ச்சே! எனக்கு என் அண்ணனை ரொம்பப் பிடிக்கும். அவன் அம்மாகிட்ட பாசமா இருக்கிறது, ஹாஸ்பிட்டல் மேனேஜ் பண்றது, பார்க்க சூப்பரா இருக்கும். என்கிட்டதான் கோபப்படுவான்” என்றாள் வருத்தமாக!
“ஓ! அப்போ அவர் மேல உங்களுக்குப் பாசம் இருக்கு…”
“நிறைய! ஆனா மனசுக்குள்ள! வெளில கோபத்த மட்டும்தான் காட்டுவேன்”
“ஓ!”
“அவனுக்கு எப்படின்னே தெரியலை?” என்றவளுக்கு, சரத்துடன் கோவையில் சிறு வயதில் விளையாடியது ஞாபகத்தில் வந்தது.
“ஒரு தடவைக் கோபத்தை விட்டுட்டு பாசத்தைக் காட்டிப் பாருங்களேன். அவர் எப்படின்னு தெரிஞ்சிடப் போகுது” என்றான் சாதரணமாக!
தேவா சொன்னதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தாள். எதன் பின் இப்படி மாறினோம் என்ற எண்ணம் திண்ணமாய் வந்து நின்றது.
“அண்ணன் மட்டும்தானா?” என்று கேட்டு அவள் எண்ணத்தைக் கலைத்தான்.
“ஒரு தம்பி இருக்கான். ஜெகன். நல்ல பையன். என்கிட்ட இருக்கிற ஒவ்வொரு திங்க்ஸூம், அவன்தான் வாங்கிக் கொடுத்தது. இந்த பேக், இயரிங்ஸ், சாரீஸ் எல்லாமே!” என்று சடுதியில் சந்தோஷம் கொண்டாள்.
“ரொம்ப பாசமோ… உங்க மேல”
சிரித்தபடி, “எஸ்! அதுக்காக எம்எஸ் படிக்க ஃபாரின் போகாம இருக்கானா பார்த்துக்கோங்களேன்” என்றாள்!
“வாட்?” என்றான் நம்பாமல்!
“நிஜமா! ஜெகன் என்னைத் தனியா விட்டுட்டு எங்கயும் போக மாட்டான்”
“ஒன்னு அந்த எஸ்ட்ரீம்ல இருக்கீங்க. இல்லைனா இந்த எக்ஸ்ட்ரீம்”
“புரியலை தேவா”
“பாசம் வைக்கிறதுல சொன்னேன்” என்றவன், “உங்களால அவர் ஃபியூச்சர் பாழாகுதுனு தோணலயா” என்று கேள்வி மட்டும் கேட்டு விட்டுவிட்டான்.
அவள்தான் பதில் எழுத வேண்டும். அதன் பின்னான பயணம், நிறைய நேரம் அமைதியில் பிரயாணித்தது. சற்றுநேரத்தில், அவன் அவளைக் கூட்டி வர நினைத்த இடம் வந்திருந்தது.
காரை ஓரமாக நிறுத்திவிட்டு, “இங்கதான்” என்று சொன்னான்.
சன்னல் வழியே குனிந்து பார்த்தவள், “theosophical society” என்று கேட்டாள்.
“ம், கிரேட் பேனியன் டீரி. இந்த வெதர்ல நல்லா இருக்கும். வாங்க” என்றான்.
இருவரும் இறங்கிக் கொண்டனர். அவன் அவளை அழைத்து வந்தது, நானூறு வருடங்கள் தாண்டி வாழ்ந்து வரும் அடையார் ஆலமரம் இருக்கும் இடம். அக்கணம் வானம் பூமியை ஈரமாக்காமல் இருந்தது.
இருப்பினும் குளிர் சாதனப் பெட்டிக்குள் குடிகொண்டது போல் தலைநகரின் வானிலை இருந்தது. இருவரும் மெல்ல உள்ளே சென்றனர். சீதோஷண நிலை காரணமாக சிலபேர் மட்டுமே வந்திருந்தனர்.
முன்னதாக பெய்த மழையினால் ஈரமாயிருந்த பாதைகளில் நடந்தனர்.
மழையைத் தொடர்ந்த மஞ்சள் வெயில் காலநிலை காரணமாக, அந்த இடமே ‘வின்டேஜ் எஃபெக்ட்டில்’ இருந்தது. இருவரும் முன்னேறிச் சென்றனர்.
“என்ன பேசவே மாட்டிக்கிறீங்க?” என்றான்.
அந்தக கேள்விக்குப் பின்னும் அவள் பேசவில்லை.
“ஃபோன் அட்டன் பண்ணலைனு கோபமா? அப்படியிருந்தா ஸாரி தாரா” என்று மன்னிப்புக் கேட்டான்.
“அப்ப நானும் கேட்டுக்கிறேன்! ஸாரி” என்றாள்.
“நீங்க இப்படிக் கேட்க மாட்டிங்களே!”
“ஓ! டசன் டைம்ஸ் ஸாரி” என்றாள் ஓர் இதழ் விரியா புன்னகையுடன்!
இப்படி பேசியபடியே நடந்து வந்து, அந்த பழமையான ஆலமரத்தின் அருகில் வந்திருந்தனர். பல்லாயிரம் சதுரஅடி பரப்பில், கிளை பரப்பிக் கிடந்தது.
சடைசடையாகத் தொங்கும் ஆலம் விழுதுகள். அது அத்தனையும் மழையில் நனைந்திருந்தன. நடப்பதை நிறுத்திவிட்டு ஒரு விழுதை பிடித்துக் கொண்டு தேவா நின்றான்.
“தாரா, உங்க வீட்ல தெரியுமா?”
நடந்தவள் நின்று, “எது?” என்றாள்!
“உங்க லவ்”
“ம்ம் தெரியுமே! ப்ரோபோசல் டே அன்னைக்கே தெரிஞ்சிடுச்சு”
“எப்படி?”
“நான் அழுதேனா… பேஸ் காட்டிக் கொடுத்திருச்சி. அப்புறம் ஜெகன் கேட்டான். நானும் சொல்லிட்டேன்” என்று சிரித்தாள்.
“அழுதீங்களா?”
“ம்ம்ம்”
“எனக்காகவா?”
“ம்ம்” என்று ஆழமாகத் தலையாட்டி நடக்க ஆரம்பித்தாள். தேவா நடக்காமல் தடைப்பட்டு நின்றான். கூடச் சேர்ந்து வராமல் நின்று கொண்டிருந்தவனைத் திரும்பிப் பார்த்து, “தேவா வாங்க” என்று அழைத்தாள்.
பிடித்திருந்த விழுதை விட்டுவிட்டு அவளுடன் நடக்க வந்தான். அந்தக் கணம், மத்தியான நேர வானம் மழை சொரியத் தொடங்கியது. பெரிய ஆலமரக் குடையின் கீழ், ஒரு சிறிய குடைப் பிடித்து இருவரும் நின்றுவிட்டார்கள்!
“இப்போ வீட்ல என்ன சொல்றாங்க?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.
“கல்யாணத்துக்கு ஃபோர்ஸ் பண்றாங்க”
“நீங்க என்ன முடிவு எடுத்திருக்கீங்க?”
“தேவா! நானும் உங்களை மாதிரி, என் மனசில இருக்கிறதைப் பேசிக்கவா?” என்று ஆசையாகக் கேட்டாள்.
“ம்ம்ம்”
“நீங்கதான் என் முடிவு” என்று ஆசையைச் சொன்னாள்.
இப்படிச் சொல்லிவிட்டு, குடைக் கம்பியிலிருந்து விழும் மழைத் துளிகளில் விளையாட ஆரம்பித்தாள். துளியளவும் அசையாமல் தேவா நின்றிருந்தான்.
ஐந்து நிமிடங்கள் கடந்த பின், “தேவா… மழை விட்ருச்சு. வாங்க நடக்கலாம்” என்றதும், குடையை மடக்கிவிட்டு நடக்கத் தொடங்கியவன், “அன்னைக்கே மறக்க முடியாதுனு சொன்னீங்கள?” என்றான்.
“ம்ம்ம்” என்றதோடு விட்டுவிட்டாள்.
இந்த நொடிகளில் அமைதியை துணைக்கு அழைத்துக்கொண்டு நடந்தனர்.
“தேவா, நீங்க உங்க லவ்வர மறந்தாச்சா” என்றாள் அமைதியைத் தூர விலக்கி நிறுத்தி!
ஒரு மென்னகை மட்டுமே அவனிடம்!
“கேட்கிற கொஸ்டின் பியான்ட் மை லிமிட்னா, ‘பாஸ்’ சொல்லிடுங்க. நான் புரிஞ்சிப்பேன்”
“மறக்கணும்னு நினைக்கிற அளவுக்கு ஞாபகம் எதும் இல்லை”
“புரியலை”
“இப்போ உங்க கூட இத்தனை நாள் பேசறேன். ஸோ ஐ ஹேவ் சம் மெம்மரிஸ். ஆனா அந்தப் பொண்ணோட அதுமாதிரி எதுவும் இல்லை” என்றதும், அவள் நின்றாள். அவனும் நின்றான்.
“ஓ! அப்ப, என்னை மறக்க மாட்டிங்களா?” என்று நேராக அவன் விழிகளைப் பார்த்து கேட்டாள்.
அவனுக்கு என்னவோ அவள் தன் இதயத்தின் வாசலில் நின்று கேட்பது போல இருந்தது. எனவே பதிலேதும் சொல்லாமல், “நடக்கலாமா?” என்று கேட்டான்.
‘சரி’ என்று விழி மூடித் திறந்தாள். மீண்டும் நடக்க ஆரம்பித்தனர். ஒவ்வொரு விழுதையும் விலக்கி விலக்கி நடந்தாள். சில நேரம் அவனுக்காக விழுதினை விலக்கித் தந்தாள்.
“ஏன் தேவா, உங்க வீட்ல உங்க மேரேஜ் பத்தி எதுவும் கேட்க மாட்டாங்களா?”
“அக்கா கேட்பா… ஆனா அண்ணா அண்ணி…” என்று நிறுத்தினான்.
“சொல்லுங்க”
“அடிக்கடி அண்ணி சொல்லுவாங்க, சேலரி முழுசையும் மத்தவங்களுக்குக் கொடுத்திட்டா, எந்தப் பொண்ணு கல்யாணம் பண்ணும்னு” என்றான்.
நடப்பதை நிறுத்தினாள். ‘என்ன?’ என்பது போல் பார்த்து அவனும் நின்றான்.
“உங்க அண்ணியை அடுத்து எப்போ மீட் பண்ணுவீங்க தேவா?” என்றாள் சம்மந்தமில்லாமல்!
“அக்காவைப் பார்க்கப் போறப்ப பார்ப்பேன். ஏன் கேட்கிறீங்க?”
“அப்போ நான் சொல்றதை அவங்ககிட்ட சொல்லிடுங்க”
“என்ன சொல்லணும்?” என்றான், அவளைப் புரிந்து கொள்ள முடியாமல்!
“தாரா-ன்னு ஒரு பொண்ணு என்னை மேரேஜ் பண்ணிக்க நினைக்கிறா. பட், நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்னு சொல்லிடுங்க” என்று இயல்பாக சொல்லிவிட்டு நடக்கலானாள்.
அவள் சொன்னதைக் கேட்டு நிற்பவனைக் கண்டவள், “வாங்க தேவா” என்று அழைத்தாள். நடந்து சென்று அவள்கூடச் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.
அருகருகே நடந்த இருவருக்குமிடையே நீளமான ஒரு அமைதி நிலவியது!
சற்றுநேரத்திற்கு வான் குடையின் கீழ், பெரிய பெரிய ஆலம் விழுதுகளுக்கு இடையே நடந்து வந்தார்கள்! சாரல்கள் சலசலக்க ஆரம்பித்ததும் மீண்டும் வண்ணக் குடையின் கீழ் வந்துவிட்டார்கள்!
மேலும் நின்றுவிட்டார்கள். வானில் வெள்ளை வெயிலும், கருப்பு மேகங்களும் ஒன்றாய் தெரிந்தன. அது அப்படியே தலைநகரிலும் பிரதிபலித்தது. ஆதலால், அந்த இடமே ஒரு ‘ப்ளாக் அன்ட் வொயிட் எஃபெக்ட்டில்’ இருந்தது.
நிறமில்லா காற்று செல்லும் திசைக்கு ஏற்ப பறக்கும், நிறமேற்றப்பட்ட அவள் கூந்தல் சுருள்கள்! அதைக் கட்டுக்குள் வைக்க அவள் கரங்களின் முயற்சி!!
நனைந்து மடிந்த இமைகளில்லாமல்… மஸ்காராவில் நனைத்த இமைகள்! நாசியின் மூச்சிற்கு ஏற்ப அசையும் மூக்குத்தி! தாராவைப் பார்ப்பதற்கு ரசனையாக இருந்தது தேவாவின் கண்களுக்கு!
“தாரா” என்று அழைத்தான்.
“ம்ம்” என்றாள், அதுவரை எங்கோ வைத்திருந்த கவனத்தை அவன் கண்களில் கொண்டு வந்து நிறுத்தி!
“ஒன்னு சொல்லணும் தாரா! நீங்க இன்னைக்கு அழகா இருக்கீங்க” என்றான் அவள் கண்களை நேராகப் பார்த்து! ஒரு கையால் வாயை மூடிக் கொண்டு, குடையை விட்டு வெளியேறிச் சென்று சிரித்தாள்.
“தாரா தூறல் விழுது” என்று அவள் கைப்பிடித்து இழுத்து குடைக்குள் கொண்டு வந்து நிறுத்தினான். இன்னும் சிரித்துக் கொண்டே இருந்தாள்.
“எதுக்குச் சிரிக்கிறீங்க?”
“உங்களுக்கு ப்ரொபோஸ் பண்ண வந்தேன்ல??” என்றாள் கேள்வியாக!
“ஆமா”
“அன்னைக்கும் இதே சாரீதான் கட்டியிருந்தேன்”
“புரியலை”
“இல்ல! அன்னைக்கு நோ சொல்லிட்டு… இன்னைக்கு இப்படிச் சொல்றீங்கள! அதான்” என்று மீண்டும் சிரித்துக் கொண்டாள். அவள் சிரித்து முடிக்கும் வரை காத்திருந்து, “தாரா” என்றான்.
“ம்ம்ம்”
“என்னய பொறுத்த வர, நீங்க அழகா இருக்கீங்கனு சொல்றதுக்கும்… உங்கள பிடிச்சிருக்குனு சொல்றதுக்கும் எந்தச் சம்பந்தம் இல்லை” என்று தன்னைத் தெளிவு படுத்தினான்.
அவனது தெளிவு ஓரிரு நொடிகள் அமைதியை அவளிடம் தந்தது! அவளின் அமைதி அவளிடமும் ஒரு தெளிவு கொண்டு வந்தது.
ஆதலால், “ஆனா, தாராக்கு தேவாவை ரொம்ப பிடிக்கும். ரொம்ப ரொம்பப் பிடிக்கும்” என்றாள் ஆத்மார்த்தமாக!
முதல்முறையாக தன் காதலைப் வெளிப்படையாக பிரகடனப் படுத்தினாள். என்றோ சொல்ல நினைத்தது! இன்றுதான் சொல்ல முடிந்தது!
தாரா சொல்லிவிட்டாள்!!
விழிகளில், ‘என்னைக் காதலி’ என்ற விண்ணப்பங்கள் ஏதுமில்லை! ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்ற விருப்பங்கள் மட்டுமே!
“எப்பவும் ஏதோ பேசணும்னு சொல்வீங்கள, இப்ப பேசறீங்களா!?” என தேவா கேட்க, மறுப்பாய் ஒரு தலையசைப்பு தாராவிடம்! பேச மறுத்துவிட்டாள். தன் காதலுக்கான முடிவை, அவன் எடுக்க காலஅவகாசம் வேண்டுமென.
அவனது முடிவு எதுவாயினும், அது எந்தக் காரணங்களையும் சார்ந்து இருக்க கூடாதென நினைத்தாள். அந்த முடிவு அவளுக்காக அவன் எடுக்கும் முடிவாக இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டாள்.
ஆதலால் பேச மறுத்து விட்டாள்.
முன்னறிவிப்பு ஏதுமின்றி தன் நேசத்தை சொன்னவளால் தன்னை பாதியளவு நிரப்பிக் கொண்டது. – காதல் உண்டியல் feeling awesome with தாரா!
“லேட்டாகுது தேவா. போகலாமா?” என்று கேட்டாள்.
சரியென்றான். இருவரும் மெதுவாக நடந்து கார் நிறுத்தப்பட்ட இடத்திற்கு வந்தனர். மீண்டும் பயணம். தாராவை மருத்துவமனையில் கொண்டு வந்து விட்டுவிட்டு, விடைபெற்றுச் சென்றான்.
தேவா அலுவலகத்தை நோக்கிப் பேருந்தில் சென்று கொண்டிருந்தான்.
மழை பெய்ய ஆரம்பித்தது. சன்னலின் வழியே வருகின்ற மழைச் சாரலைப் பொருட்படுத்தாமல் அமர்ந்திருந்தான். மனதிற்குள்ளே பெய்கின்ற சாரலாய் தாராவின் பேச்சுகள் இருந்தது.
இதுநாள் வரையில் தாரா அவனிடம் விவாதம் செய்திருக்கிறாள்! வேதனை காட்டியிருக்கிறாள்! விளையாட்டாய் பேசியிருக்கிறாள்! இதுவே முதல்முறை ஒவ்வொரு வாக்கியத்திலும், தன் விருப்பத்தைப் பகிர்ந்திருக்கிறாள்!
தாரா கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் தன்னிடம் பதில் இருக்கிறதா என்று தெரியவில்லை! ஆனால், தாராவிற்காக தன் மனதில் ஒரு இடம் இருக்கிறது என்று தெரிந்தது!!
**********
அடுத்த நாள் காலை. ராஜசேகர் வீடு.
குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட அமர்ந்திருந்தனர்.
“தாரா” என்றான் சரத். ‘சொல்லு’ என்பது போல் நிமிர்ந்து பார்த்தாள். “நேத்து ஏன் டாக்டர்ஸ் மீட்டிங் வரலை? எங்க போயிருந்த?” என்று கேள்வி கேட்கத் தொடங்கினான்.

