Kathambari Novels
தேவா மோதிரம் என்று சொன்னதும், “என்ன ரிங்?” என்று தாரா கேட்டாள்.
“என்னோட லவ்வருக்கு கிஃப்ட் கொடுக்க வாங்கினது. பார்க்கிறீங்களா?”
“எனக்கொரு சந்தேகம் தேவா, உங்க லவ்வர் பத்தி நீங்க பேசறப்ப, அத ஈஸியா எடுத்துக்கிற மெச்சூரிட்டி எனக்கு இல்லையோ?” என்றாள்.
எவ்வளவு எளிதாக அவள் இதயம் படும்பாட்டைச் சொல்லிவிட்டாள்!
அதைவிட அவன் அதைப் புரிந்து கொண்டு, “விடுங்க தாரா” என்றான் இரண்டே வார்த்தையில்! அடுத்த நொடி தாரா எழுந்து விட்டாள்.
“என்னாச்சு?”
“லேட்டாகுது. நான் கிளம்புறேன்”
“ஆனா அவங்க இன்னும் ஷாப்பிங் பண்றாங்களே” என்று அவனும் எழுந்தான்.
“எஸ்! ஆனா நான் ஹாஸ்பிட்டல் போகணும் தேவா. மத்தியானம் வர்றேன்னு சொல்லிருக்கேன்” என்று நடக்க ஆரம்பித்தாள்.
“இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டுப் போகலாமே” என்று கேட்டுக் கொண்டே, அவளுடன் நடக்க ஆரம்பித்தான்.
“பேஷன்ட்ஸ் வெயிட் பண்ணுவாங்க” என்று விறுவிறுவென சென்று சாரு, பாபியிடம் சொல்லிவிட்டு, மின்தூக்கி நோக்கி நடந்தாள். சற்றுநேரம் மாலியை வைத்திருக்க பாபியிடம் கொடுத்துவிட்டு, தாரா பின்னேயே தேவா போனான்.
மின்தூக்கி வர காத்திருக்கையில், “நீங்களும் கிளம்பிட்டீங்களா” என்று தாரா தன்னருகில் வந்து நின்றவனைப் பார்த்துக் கேட்க, “பார்க்கிங் வரைக்கும் வர்றேன்” என்றான்.
தாரா எதுவும் சொல்லவில்லை. மின்தூக்கி வந்ததும் ஏறிக் கொண்டனர். அவள் பொத்தானை அழுத்திவிட்டு அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்.
என்ன புன்னகை இது? நிச்சயம் இது இதழின் புன்னகை அல்ல! இதயத்தின் புழங்காகிதமோ?
வண்டி நிறுத்தும் தளம் வந்தது. இருவரும் இறங்கிக் கொண்டனர்.
தாரா அலைபேசியில் கோபியை அழைத்து, “எக்ஸிட் டோர் பக்கம் நிக்கிறேன், கார் எடுத்திட்டு வாங்க” என்று அழைப்பைத் துண்டித்தாள்.
அவளையே இன்னும் பார்த்துக் கொண்டிருந்தவனின் புறம் திரும்பி, ‘என்ன?’ என்பது போல் புருவங்கள் உயர்த்தி புன்னகைத்தாள்.
“ஏதோ என்கிட்ட பேசணும்னு சொன்னீங்கள… இப்ப பேசறீங்களா?” என்றான் கண்களில் ஏதோ ஒன்றை ஏந்தி வைத்துக் கொண்டு!
அவன் கண்களில் ஏந்தி வைத்திருப்பது, அவளது கண்ணீருக்கான பரிதாபம் என்று நினைத்தாள். எனவே, ‘ம்கூம்’ என்ற ஒரு மறுப்பு மற்றும் ஒரு முறுவல் அவளிடம்!
“தாரா, நீங்க ஓகேவா?”
“அஃப்கோர்ஸ் ஐ அம் ஓகே தேவா” என்று நகைத்தாள்.
“அப்புறமா ஃபோன் பண்ணா பேசுவீங்களா?”
“ஃப்ரியா இருந்தா பேசுவேன்… ம்ம்ம், பிஸியா இருந்தா பேசமாட்டேன்” என்று அவள் சொன்ன விதத்தில், அவன் சிரித்துவிட்டான்.
“ஷப்பா… சிரிச்சிட்டிங்க! இவ்ளோ நேரம் ஃபேஸ் எப்படி இருந்தது தெரியுமா?”
மேலும் நங்கைக்காக நகைத்து, “கண்டிப்பா ஃபோன் பண்ணுவேன்” என்றான். சரியென்று தாரா தலையாட்டும் போதே, கோபி கார் எடுத்துக் கொண்டு வந்திருந்தான். “ஓகே பை” என்று தாரா விடைபெற்றுக் கொண்டாள்.
தாரா சென்ற பிறகும்… அங்கேயே நின்ற தேவாவின் உள்ளத்தில், அவளுடன் நடந்த உரையாடல்கள் ஊர்வலமாய் வந்தன! விளைவு… அவன் முகத்தில் ஒரு முகில்நகை! முழுவதும் தாராவினால்!! முக்கியமாக உள்ளத்திலிருந்து!!!
அதன்பின் தாரா… நேரே மருத்துவமனை… பார்வையாளர் நேரம்… மாலை நேர இடைவேளை… மீண்டும் பார்வையாளர் நேரம்… வீடு திரும்பல்… இரவு உணவு… இந்த வரிசையில் அந்த நாளில் பயணம் செய்தவள், இரவு பத்து மணியளவில் தூங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.
அக்கணம், கதவு தட்டும் ஓசை! திறந்தாள். கீதா நின்று கொண்டிருந்தார்.
“என்னம்மா இந்த நேரத்தில? இன்னும் தூங்கலையா?”
“உன்கிட்ட பேசணும் தாரா”
“உள்ளே வாங்க” என்றதும், இருவரும் உள்ளே வந்து அமர்ந்தனர்.
“சாரு வெட்டிங் ஷாப்பிங் நல்லபடியா முடிஞ்சதா” என்று கேட்டார்
“ம்ம்ம், நானும் மத்தியானம் கிளம்பி வந்துட்டேன்”
“அப்ப அவங்க ரெண்டு பேரும் தனியா பர்சேஸ் பண்ணாங்களோ?”
“இல்லைம்மா, பாபியோட ப்ரெண்ட் தேவா இருந்தாரு”
“இந்த தேவா… ” என்று கேள்வியாக நிறுத்தினார்.
“ம்ம்ம், நான் லவ் பண்றவர்தான்”
‘இது வேறயா? இவர்கள் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு உள்ளதே!’ என்று கீதா கவலை கொண்டு, “உனக்கு தேவாவ எப்படித் தெரியும்?” என்றார் நேரடியாக!
“எதுக்கு இப்போ கேட்கறீங்க?”
“கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லு” என்றார் கண்டிப்பாக!
அவர் பேச வரவில்லை, விசாரிக்க வந்துள்ளார் என்று புரிந்தது. ஜெகன், தன் காதலைப் பற்றிச் சொல்லியிருப்பான் என்று தெரியும். ஆனால் யாரும் ஏன் எதுவும் கேட்கவில்லை என்று நினைத்தாள். இதோ கீதா கேட்க வந்துவிட்டார்.
“அப்பா சொல்லி” என்றாள், அம்மா முகம் பார்க்காமல் தலை குனிந்தபடி!
“எப்போ சொன்னாரு?”
“நான் ஊருக்குப் போறப்போ தேவா பத்திச் சொல்லுவாங்க”
“அப்போ ஊருக்குப் போறதே இதுக்குத்தானா? ரெண்டு பேரும் இவனைப் பத்திதான் பேசுவீங்களா?”
“ம்மா”
“என்ன அம்மா? உன்னை அங்க அனுப்புனதே தப்பு”
“அதுல என்ன தப்பு?”
“அங்க போகப் போய்தான அவனைப் பத்தித் தெரிஞ்சிருக்கு”
உண்மைதான்! ஆதலால் தாராவிடம் அமைதி!
“உங்க அப்பா சொல்லித்தான் அவனை லவ் பண்றியா?”
“ம்மா, இப்படி பேசாதீங்க. தேவாவை சப்போர்ட் பண்ணுவேன்னு சொன்னப்ப, அப்பாவே என்னைக் கண்டிச்சாங்க”
“யாரு? உங்க அப்பாவா?? நம்புற மாதிரி சொல்லு”
“நம்புங்க-ம்மா! ‘இந்த வயசில இது தப்பு’னு அப்பா சொன்னாங்க”
“….”
“அப்பா தேவாவை பத்தி சாதாரணமாதான் சொன்னாங்க. எனக்குதான் அது வேற மாதிரி… வேற” என்று திணறியவள், “ம்மா, எனக்குத் தேவாவைப் பிடிக்கும். அவ்வளவுதான்!” என்றாள்.
“ஆனா அவனுக்குத்தான் உன்னைப் பிடிக்கலையே!?”
தாராவைப் பொறுத்த மட்டில் இது உண்மைதான்! மீண்டும் அவளிடம் ஓர் அமைதி.
“சரி, அதை விடு! அது முடிஞ்சி போனது. நீ, உன் லைஃப் பத்தி என்ன முடிவு எடுத்திருக்கிற?”
“புரியலை ம்மா”
“மேரேஜ் பத்தி என்ன முடிவு எடுக்கப் போற?”
“ம்மா, தேவாவை என்னால மறக்க முடியாது”
“அவன்தான் உன்னை வேண்டாம்னு சொல்லிட்டான்ல”
மீண்டும் மீண்டும் தாராவிடம் அமைதி.
“ஏன் தாரா? நீ, அதிபனோட பொண்ணுனு அவனுக்குத் தெரியாதா?”
‘இல்லை’ என்ற தலையசைப்பு!
“ஏன் சொல்லலை?”
தாரா புரியாமல் பார்த்தாள்.
“நீ சொல்லியிருந்தா, உங்க அப்பா மேல இருக்கிற மரியாதைல, உன்னைக் கல்யாணம் பண்ண சம்மதிப்பான்ல”
“ம்மா, இப்படி அப்பா மேல இருக்கிற மரியாதைல லவ் வரக்கூடாது. எனக்குத் தேவாவைப் பிடிச்ச மாதிரி, தேவாவுக்கும் என்னைய பிடிக்கனும்”
கீதாவிற்கு ஒரு நிம்மதி! இவள் இதுவரை அவனிடம் ‘நான் அதிபன் மகள்’ என சொல்லவில்லை!! மேலும் ஒரு நம்பிக்கை, இனிமேலும் தேவாவிடம் தன்னைத் தெரியப்படுத்த மாட்டாள் என்று!
“சரி இதுக்கு என்னதான் முடிவு தாரா”
“இதுக்கு எதுக்கு முடிவு. இது இப்படி போய்கிட்டே இருக்கும். நானும் அதுகூட போவேன்”
“என் வாழ்க்கைய பாழாக்கின மாதிரி, உங்க அப்பா உன் வாழ்க்கையயும் பாழாக்கி வச்சிருக்காரு”
சட்டென எழுந்து, “போதும் அப்பாவைப் பத்தி எதும் தப்பா பேசாதீங்க” என்று ஆவேசமாகக் கத்தினாள். தாராவிற்கு மூச்சு வாங்கியது.
கீதா மேலும் பேசும் முன், அறைக் கதவை திறந்து தாரா நிற்கும் நிலையைப் பார்த்தபடியே சரத் உள்ளே வந்தான். “என்னாச்சு ம்மா?” என்று கீதா பக்கமாக வந்து நின்றான்.
“இப்பதான் வர்றியாடா” என்று கேட்டு எழுந்தார்.
“ம்ம்ம்” என்றவன், “நீ ஏன் அம்மாகிட்ட இப்படிக் கத்திக்கிட்டு இருக்க? சத்தம் வெளிய வரைக்கும் கேட்குது” என்றான் கண்டனமாக.
“பீலிங் டயர்ட், நான் தூங்கணும்” என்றாள், அவனுக்குப் பதிலளிக்க மறுத்து!
“என்ன கேட்டா, என்ன… ” என்று அவன் கேள்வியை முடிக்கும் முன், “நீ வாடா” என்று சரத்தைக் கூட்டிக் கொண்டு, கீதா அறையை விட்டு வெளியேறினார்.
அப்படியே அமர்ந்தாள் தாரா. பின்னோக்கி தலை சாய்த்துக் கொண்டாள். தன் இஷ்டத்தை தேவா பரிதாபம் என்ற இடத்தில் வைத்துப் பார்க்கிறான். அம்மா மரியாதை என்ற இடத்தில் வைத்துப் பார்க்கிறார்.
இவர்களுக்கு எப்படித்தான் புரிய வைக்க… தனது நெகிழ்வான நேசத்தை!! கங்குகரையில்லா காதலை!! ஈடில்லா இஷ்டத்தை!! விரக்தியின் சாயலில் ஒரு புன்னகை… அப்படிச் சாய்ந்தே உறங்கிப் போனாள்.
*************
அடுத்த நாளிலிருந்து… தேவா, தான் சொன்னது போல் தாராவிடம் நித்தமும் அலைபேசியில் பேசினான்.
அவன் காரணம் ஏதுமின்றி, காதல் சாயலின்றி பேசினான். அவள் காயங்கள் ஏதுமின்றி, காதல் வலி சாயலின்றி… பேசினாள்.
அவள் அன்பிற்காக அவன் அழைத்தானா? இல்லை, அவளுக்கு ஆறுதல் கூற அழைத்தானா? தெரியவில்லை! ஆனால் அவன் அன்பாகவும் பேசவில்லை! ஆறுதலும் கூறவில்லை!!
மாறாக…பேச்சில் அரட்டையின் சாயல் இருந்தது!!! தாரா, தேவாவிடம் நிரம்ப உரிமை எடுக்க ஆரம்பித்திருந்தாள். இப்படிச் சொல்வதை விட, தாராவை அப்படி உரிமை எடுக்கும் இடத்தில் தேவா வைத்திருந்தான்.
தன்னுள், இந்த அளவுக்கதிகமான நேர செலவிடல்களைத் சேமித்து வைத்துக் கொண்டது! – காதல் உண்டியல் feeling hope with தாரா and தேவா!!
நாட்காட்டியில் பத்து நாள்கள் கழித்து! தேவா அலுவலகம். இரவு ஒன்பது. ஹேமாவிடம் பேசிவிட்டு அப்போதுதான் மடிக்கணினியைத் திறந்தான்.
அப்போது அலைபேசி அழைப்பு வந்தது. எடுத்துப் பார்த்தான். இலக்கங்கள் வரவில்லை. அழைப்பை எடுத்து, “ஹலோ” என்றான்.
“ஹலோ… தேவா-வா?” என்று ஒரு பெண் குரல்.
“ம்ம் தேவா”
“அன்னைக்கு மால்-ல பார்த்தீங்கள…”
“ஓ! அமுதா அம்மா… சொல்லுங்க, அமுதாகிட்ட பேசினீங்களா” என்றவன் குரலில் சந்தோஷம்.
“ம்ம்ம்”
“அமுதா என்ன சொன்னா?” என்றவன் குரலில் ஆர்வம் அலைமோதியது!
“ம்ம்ம், அவங்க அப்பாகிட்ட அப்படிச் சொன்னதா சொன்னா”
“வேற எதுவும் சொன்னாளா?”
“ம்ம்ம்”
“என்ன சொன்னா?”
“அவளுக்கு இப்போ இதுல விருப்பமில்லைனு சொன்னா”
“ஏன்? அதெப்படி இல்லாம போகும்”
“அது, அவங்க அப்பாவோட முடிவு தெரிஞ்சதும்… அவளுக்கு ஒரு பயம்”
“பயப்பிடறாளா? எதுக்கு பயம்?”
“ஏன்னா நீங்க பண்ற வேலை”
“பாலிசி அனலிஸ்ட்… ” என்று யோசித்தவன், “அதுல என்ன பிரச்சனை?” என்று கேட்டான்.
“அந்த வேலை மட்டும்தான் பண்றீங்களா? ஆக்டிவிஸ்ட்…”
அவனுக்குப் புரிந்தது. அவரின் பிரச்சனை என்னவென்று! அவர் இன்னும் மாறவில்லை என்றும் தெரிந்தது!!
“ஹலோ” – கீதா.
“சொல்லுங்க”
“அந்த வேலை பார்க்கிறப்ப… எத்தனை பேரைப் பகைச்சிப்பீங்கனு எனக்குத் தெரியும்”
“முதல அது என் வேலையில்லை. வாழ்க்கை”
“இருக்கட்டும். ஆனாலும் எதிரிங்க இருப்பாங்கள?”
“பட் எனக்கு… லாயர், போலீஸ்… ஏன் சில பொலிடிகல் ஆளுங்க சப்போர்ட் கூட இருக்கு”
“அத வச்சி…”
“நீங்க ஃபோன அமுதாகிட்ட கொடுங்களேன்… அவகிட்ட பேசிப் பார்க்கிறேன்” என்றவனின் குரலில் எரிச்சல் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.
“இது என்ன பழக்கம்? பிடிக்கலைனு சொல்ற ஒரு பொண்ணோட பேச நினைக்கிறது”
“ஏன்னா, நீங்க அமுதாகிட்ட கேட்டிங்களானு சந்தேகமா இருக்கு” என்றவனின் குரலில் கோபம் கொட்டிக் கிடந்தது.
“ஓ! கோபம் வருது…”
“ஆமா, கோபம் வருது. உங்ககிட்ட போய் கெஞ்சிக்கிட்டு இருக்கேன் பாருங்க, என் நிலைமையை நினைச்சு… எனக்கு கோபம் வருது”
“யாரு உன்னைய கெஞ்ச சொன்னா?”
“அதுவும் சரிதான்! இனிமே கெஞ்ச மாட்டேன். நானே அமுதாவைக் கண்டுபிடிச்சுக்கிறேன்”
“வேண்டாம்னு சொல்ற பொண்ண கண்டுபிடிச்சி, கல்யாணம் பண்ணி… நீ அவகிட்டருந்து என்ன சப்போர்ட் எதிர்பார்க்கிற?”
“அமுதாதான்… ஐயாகிட்ட என்னய சப்போர்ட் பண்றேன்னு சொல்லிருக்கா”
“அது எப்பவோ சொன்னது. இப்போ இல்லை. “
“அதிபன் ஐயா சொன்னாருங்க…”
“என்ன சொன்னாரு? அவர்கிட்டருந்து அவர் பொண்ண பிரிச்சதுக்கு… இப்ப என்கிட்டருந்து என் பொண்ண பிரிக்க சொன்னாரா?”
“ச்சே, ஏங்க இப்படிலாம் பேசறீங்க?”
“வேற எப்படி பேச சொல்ற? அதிபன் என் வாழ்க்கையைப் பாழாக்கின மாதிரி, நீ என் பொண்ணு வாழ்க்கையைப் பாழாக்க பார்க்கிறயா??”
“ஐயாவ பத்தி எதும் பேசாதீங்க. என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது”
“என்ன பண்ணுவ?”
“உங்களுக்கு என்னதான் பிரச்னை?”
“பிரச்சனை நீதான்! இப்படி தொந்தரவு பண்றேன்னு போலீஸ்ல கம்பளைன்ட் பண்ணவா?”
“இதுல என்ன தொந்தரவு?”
“வேண்டாம்னு சொல்ற பொண்ணு பின்னாடி வர்றது. கம்ப்ளைன்ட் மட்டும் பண்ணா… நீ சம்பாதிச்சு வச்சிருக்கியே ஒரு பேரு! அதெல்லாம் போயிடும்”
“ஏங்க… அப்படிலாம் பண்ணிடாதீங்க. எல்லாத்தையும் விட இதான் எனக்கு முக்கியம்”
“வார்த்தைக்குக் கூட, வாழ்க்கை முழுசும் வரப்போற பொண்ண முக்கியம்னு சொல்ல முடியலைல. இதான் நீ! இப்படித்தான் உங்க ஐயாவும் இருந்தாரு”
“…”
“உங்களுக்கெல்லாம்… சொந்த வாழ்க்கை ரெண்டாம் பட்சம்தான். எதுக்காக நீங்கெல்லாம் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறீங்க!? ஒரு பொண்ணோட வாழ்க்கையை பாழாக்கவா?”
“… “
“நீ விரும்புற பொண்ணுக்காக… நீ பண்ற சேவை, உதவி… இது எல்லாத்தையும் விட்டுட்டு வர முடியுமா?”
“இது ஐயாவோட கனவு… என் லட்சியம். யாருக்காகவும் இத விட முடியாது”
“அப்ப அவர் பொண்ண மறந்திடு. புரியாத வயசில சொன்னத பிடிச்சிக்கிட்டு நிக்காத”
“….”
“நீதான் அவளைத் தேடிக்கிட்டு இருக்கிற… அவ உன்னைத் தேடவே இல்லை. அதைப் புரிஞ்சிக்கோ”
“….”
“திரும்பத் தேடிக்கிட்டு வந்த!!? நான் கண்டிப்பா போலீஸ்-ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன். பண்ண மாட்டேன்னு மட்டும் நினைக்காத”
“…. “
“சோஷியல் மீடியால உன்னைப் பத்திப் பார்த்தேன். அவர் பண்றதை விட ஒரு படி அதிகமா பண்றேல? உன்னை நம்பிலாம் பொண்ணு கொடுக்க முடியாது”
“…. “
“உன்னை… உன் லட்சியத்தைப் பிடிக்கிற பொண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோ” என்றதும், சட்டென தாரா முகம் வந்து சென்றது தேவாவிற்கு!
“சொல்றது புரியுதா? இனிமே டிஸ்டர்ப் பண்ணாத” என்று வைத்துவிட்டார்.
கீதா தோட்டத்தில் இருந்தார். அங்கிருந்துதான் இத்தனை பேச்சுகளையும் பேசி முடித்திருந்தார்.
அழைப்பைத் துண்டித்த அடுத்த நொடி, கீதா கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. சற்றுநேரம் அழுதவர் கண்களைத் துடைத்துவிட்டு அறைக்கு வந்தார். அங்கே ராஜசேகரும், சரத்தும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“எங்க கீதா போயிருந்த?” – ராஜசேகர்.
“கார்டன்ல வாக்கிங் போயிட்டு வந்தேன்”
“ஏன் முகம் ஒருமாதிரி இருக்கு ம்மா?” என்று கீதா அருகில் வந்து நின்று சரத் கேட்டான்!
“சரத், தாராவுக்கு கல்யாணம் பண்ணலாம்டா”
“ம்மா… அவ ஒரு பையனை…”
“அந்தப் பையன்தான் வேண்டாம்னு சொல்லிட்டானே”
சரத் யோசித்தான். “சரத் யோசிக்காத… ப்ளீஸ்” என்று கெஞ்சினார்.
“ம்மா, இதுக்கு எதுக்கு ப்ளீஸ் சொல்றீங்க? என்னாச்சு உங்களுக்கு?”
“அவளுக்கு மாப்பிள்ளை பாருடா”
“சரி, நான் பார்க்கிறேன். நீங்க இதைப் பத்தி நினைக்காதீங்க” என்றவன், “ப்பா பார்த்துக்கோங்க” என்றுவிட்டுப் போனான்.
அதுவரை எதுவும் பேசாமல் கீதாவைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜசேகர், “கீதா உனக்கு என்னாச்சு?” என்று கேட்டார்.
ராஜசேகர் அருகில் சென்று அமர்ந்தவர், “தாராவை நினைச்சா…” என்றவர் அழுதுவிட்டார்.
“என்ன கீதா??”
“சப்போஸ், அந்தப் பையனுக்கும் தாராவைப் பிடிச்சிருந்தா… அவ வாழ்க்கை என்னாகும் ராஜ்? எனக்கு அந்தப் பையனைப் பிடிக்கலைனு சொல்றதை விட, அவன் பண்ற விஷயம் பிடிக்கலை!
இவனைத் தாரா கல்யாணம் பண்ணிக்கிட்டா… அதிபன்கிட்டருந்து எதுக்காக பிரிச்சு கூட்டிட்டு வந்தேனோ… அதுக்கு அர்த்தமே இல்லாம போய்டும்! நம்ம தாரா எப்படி இப்படி ராஜ்?
உங்ககிட்ட பேசமாட்டா! சரத்கூட எப்பவும் ஆர்க்யூமெண்ட்! என்னய எந்த இடத்தில வச்சிருக்கானே தெரியலை. ஏதோ ஜெகன்கிட்ட மட்டும் பேசுறா!!
தாராவுக்கு இவனை கல்யாணம் பண்ணி வச்சா… இவன் பாட்டுக்கு ஊருக்கு உதவுறேன்னு போயிருவான்… திரும்ப என் பொண்ணு தனியாவே இருப்பா!!
முதல்ல அவங்க அப்பாவுக்காக காத்திருந்தா. இப்ப இவனுக்காக… எப்பதான் அவ அவளுக்காக வாழப் போறா? அவ வாழனும் ராஜ். சந்தோசமா வாழனும்.
அவளை மேரேஜ் பண்ணிக்க போறவன் என்ன வேலை வேணா செய்யட்டும். ஆனா அவளுக்காக நேரம் ஒதுக்கணும். அவகூட நிறைய பேசணும். அவளை வெளிய கூட்டிட்டுப் போகணும்!
அட்லீஸ்ட் அழுதா… ஏன் அழறனு கேட்கணும். அது இல்லைனா, எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும்!
அதுமட்டுமில்ல ராஜ்… கண்டவனும் வந்து மிரட்டிட்டுப் போவான்ங்க… ச்சே ச்சே என் பொண்ணுக்கு, அந்த வாழ்க்கை வேண்டாம் ராஜ்!
நான் அதிபன் மேல பாசமே இல்லாம இருந்தேன். அதனால அவர் இறந்தப்ப எனக்கு ஒன்னும் தெரியலை. ஆனா தாரா… அவன் மேல உயிரா இருக்கிறா. அவனுக்கு ஏதும் ஒன்னுனா தாங்க மாட்டா” என தேம்பித் தேம்பி அழுதார்.
கீதாவைத் தோளில் சாய்த்துக் கொண்டு, “அவன்தான் வேற ஒரு பொண்ண பிடிக்குதுனு சொல்லிட்டான்ல. அவன் தாரா வாழ்க்கையில வரமாட்டான்” என்று தேற்ற… கீதா, ஏங்கி ஏங்கி அழுதார்.
“அழாத கீதா. நீ இவ்வளவு எமோஷன் ஆகக்கூடாது”
“நான் தப்பு பண்றேனா ராஜ்” என்று கேட்டார் அழுகையின் ஊடே!
“அப்படிலாம் இல்லை கீதா”
“அப்படி ஏதும் இருந்தா… பிள்ளைங்க என்னை வெறுத்திடுவாங்களோ ராஜ்? என்னை புரிஞ்சிப்பாங்களா?”
“யார் உன்னை புரிஞ்சிக்கலைனாலும்… நான் உன்னை புரிஞ்சிக்குவேன். நீ தூங்கு” என்றதும், கீதா தலையணையில் தலை சாய்த்துக் கொண்டார்.
“தாராவுக்குக் கல்யாணம் பண்ணி வச்சா, சரியாயிடுவா” என்றார் கீதா!
“பேர் மாத்தின விஷயம் மாதிரி… இது கிடையாது”
“என்ன சொல்ல வர்றீங்க?”
“இப்போ தூங்கு கீதா”
“சரத் எல்லாத்தையும் பார்த்துப்பான்”
“ம், சரி” என்றவர், கீதா மனநிலையை மாற்றும் வண்ணம் பேசிக் கொண்டே இருக்க, அவர் தூங்கிப் போனார்.
சற்றுநேரம் கழித்து சரத் வந்து, “தூங்கிட்டாங்களா?” என்று கீதா நெற்றியில் தொட்டுப் பார்த்தான். “டேப்லெட் ஏதாவது கொடுத்தீங்களா” என்று நாடித் துடிப்பையும் சோதித்தான்.
“இல்லை. ஆனா நான் பல்ஸ் செக் பண்ணிட்டேன்டா” என்றாலும், அவன் கேட்கவில்லை! பரிசோதித்து முடித்தான்!!
“இன்னைக்கு என்னாச்சு இவ்வளவு எமோஷன் ஆகியிருக்காங்க?”
“தாராவைப் பத்தி நினைச்சி கஷ்டப்படுறா”
“அவளைப் பத்தி நினைச்சாலே கஷ்டம்தான்”
“இப்படி பேசுறதா இருந்தா வெளிய போயிரு சரத்” என்று அதட்டினார்.
“சத்தம் போடாதீங்க. அம்மா தூங்கிறாங்க” என்று கீதா அருகில் அமர்ந்து கொண்டான். சற்றுநேரம், அவர் நெற்றியை நீவி விட்டான்.
“தாரா வந்தாச்சா” – ராஜசேகர்.
“இல்ல. ஒரு டெலிவரி கேஸ் இருக்கு. வர்றதுக்கு லேட்டாகும்” என்றவன், “ப்பா, திரும்பவும் தாராக்கு அலைன்ஸ் பார்க்கப் போறேன்” என்றான்.
ராஜசேகர் எதுவும் சொல்லவில்லை!
“ம்ம், அம்மாவைப் பார்த்துக்கோங்க. எதும் வேணும்னா கூப்பிடுங்க. ஹால்-லதான் இருப்பேன்” என்று சென்றுவிட்டான்.
நியாயம் எந்தப் பக்கம் இருந்தாலும், கீதா பக்கமிருந்து மட்டுமே யோசித்து பழகியவன் சரத்!
************
தேவா அலுவலகம்!
கீதா பேச்சையே அசை போட்டுக் கொண்டிருந்தான். அறைக்குள் இருப்பது, மூச்சு முட்டுவது போல் இருந்தது. எனவே அறையை விட்டு வெளியே வந்து நடைக்கூடத்தில் நின்றான்.
அமுதா இப்படி சொல்லியிருப்பாளா என்று பலத்த சந்தேகம் வந்தது.
அன்னையின் வளர்ப்பில் அமுதா மாறியிருப்பாளோ? தேடவா, வேண்டாமா? தான் தேடுவது தெரிந்து கீதா சொன்னது போல் ஏதாவது செய்துவிட்டால். இத்தனை வருட உழைப்பு எல்லாம் வீணாகிப் போய்விடுமே?!
இன்னொன்றும் யோசித்தான்.
அமுதாவிற்கு விருப்பம் இருந்தால், தன்னைத் தேடி வருவது ஒன்றும் பெரிய காரியமில்லையே? இங்கே நிறைய பேருக்குத் தன்னைத் தெரியும்! அப்படி இருக்கையில் அமுதாவிற்கு தெரியாமல் போக வாய்ப்பில்லை.
கீதா சொன்னது போல் ஐயா மரணம் அமுதாவை மாற்றிவிட்தோ! தனிப்பட்ட வாழ்வில் அடுத்து என்ன செய்ய எனப் புரியாமல் தவித்தான்.
யோசித்து யோசித்து, அவன் மனம் அலைபுற்றது! அலைபேசியில் அலைந்து கொண்டே வந்தவன்… அதில் தெரிந்ததைப் பார்த்துச் சிரித்த அடுத்த நொடி தாராவிற்கு அழைத்தான். அவளும் உடனே அழைப்பை ஏற்றாள்.
“ஹலோ”
“ஹாய் தேவா… எப்படி இருக்கீங்க?”
“நீங்க எங்க இருக்கீங்க?” என்றவன் குரல் கனமாக இருந்தது.
“ஃபர்ஸ்ட், கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க”
“நல்லா இல்லைனு சொன்னா, என்ன பண்ணப் போறீங்க??”
“ஹாஸ்பிட்டல் வாங்க தேவா செக் பண்ணிடலாம்” என்று சிரித்தாள்.
“ப்ச், எங்க இருக்கீங்க தாரா?”
“இப்பதான சொன்னேன்… ஹாஸ்பிட்டல் வாங்கனு. அப்போ அங்கதான் இருப்பேன்” என்று மீண்டும் சிரித்தாள்.
“மீட் பண்ணலாமா?”
“இப்பவா? முடியாதே. ஒரு டெலிவரி கேஸ் இருக்கு, நான் இங்க இருந்தாகணும்”
“ஓ ஸாரி! சரி… இப்படியே பேசுங்க”
“ஓகே! பட், அதுவும் டுவென்டி மினிட்ஸ்தான்”
“சரி சரி” என்று அலுத்துக் கொண்டான்.
“தேட்ஸ் குட்”
அக்கணம், “ஹாய், யங் மேன்” என்று தேவாவின் தோளை யாரோ தட்டவும், திரும்பினான். மிஸ்டர் அன்ட் மிஸஸ் பாஸ்கர் நின்றனர்!
“தாரா, ஒன் மினிட்” என அலைபேசியில் சொன்னவன், “என்ன அங்கிள்? இந்த நேரத்தில” என்று எதிரில் இருப்பவரிடம் கேட்டான்.
“நத்திங். இந்த பாக்ஸ் கொடுக்க வந்தோம்”
“ஓ! ஓகே ஆண்ட்டி” என சொல்லும் போதே, அலைபேசி மறுமுனையிலிருந்து, ‘தேவா, தேவா’ என்று அழைக்கும் சத்தம். அவர்கள் இருவரும் தேவாவை ஒரு மாதிரி பார்த்தனர்.
“ஆன்ட்டி… வேற எதும் சொல்லணுமா” என்றான் அவர்கள் பார்வையைப் படித்துவிட்டு!
“ஹே யங் மேன்! ஃபோன் கட் பண்ணிட்டு, எங்ககூட பேசலாமே”
“ஒன் மினிட் ஆன்ட்டி” என்றவன்… அலைபேசியில் இருந்தவளிடம், “தாரா, ஒரு பைவ் மினிட்ஸ் கழிச்சு உங்ககிட்ட பேசுறேன்” என்று அழைப்பைத் துண்டிக்க போனான்.
“இப்போ கட் பண்ணீங்க, அப்புறமா பேசவே மாட்டேன்” என்று மிரட்டினாள்!
“ப்ச்” என்று அலைபேசியை சட்டைப் பையில் போட்டுக் கொண்டு, “பரவால்ல ஆன்ட்டி, நீங்க சொல்லுங்க” என்றதும்… பெட்டியின் விவரங்கள், பொருட்கள் பட்டியல் பற்றிய விளக்கங்களை சொல்லி முடிந்ததும், பாஸ்கர் தம்பதியினர் விடைபெற்றுச் சென்றனர்.
அப்படிப் போகும் போதே, “பாஸ்கர், ஃபோன்ல அந்த டாக்டர் தாராதான?” என்றார் மிஸஸ் பாஸ்கர்.
“ம்ம்ம், அவளேதான்”
“அந்தப் பொண்ணுக்கு, தேவா ரொம்ப இடம் கொடுக்கிறான். இல்லையா?”
“எஸ், யு ஆர் கரெக்ட்” என்று இருவரும் சென்றுவிட்டனர்.
மீண்டும் அலைபேசி அலைவரிசையில்…
தன் அலுவலகத்துக்குள் வந்து, அலைபேசியை எடுத்து செவிக்கு கொடுத்து, “ஹலோ” என்றான்.
“சொல்லுங்க தேவா”
“என்ன சொல்லுங்க?” என்று எடுத்தவுடன் கோபப்பட்டான்.
தாராவிடம் அமைதி.
“ஒருத்தங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்னு தெரிஞ்சும், நீங்க ஏன் இப்படிப் பண்றீங்க? அவங்க என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?”
“…”
“இருபது நிமிசம்னு சொன்னீங்கள, அதைவிட ஒரு நிமிசம் அதிகமா பேச விடுவீங்களா?”
“….”
“ஹலோ பேசுங்க தாரா…”
“…. “
“தாரா, பண்ணது தப்புதான?”
“ம்ம், தப்புதான். ஸோ டசன் டைம்ஸ் ஸாரி” என்றாள் வருத்தத்துடன்!
“வாட்?? டசன் டைம்ஸ் ஸாரியா?”
“எஸ்! D ஃபார் தேவா… D ஃபார் டசன்… ஸோ தேவாவுக்கு டசன் டைம்ஸ் ஸாரி” என்றாள் வருத்தத்தை தூரதேசம் அனுப்பிவிட்டு!
“முடியலை தாரா” என்று நொந்து கொண்டான்.
“அதான் தேவா! அப்பவே சொன்னேன். ஹாஸ்பிட்டல் வாங்கன்னு” என்று நக்கலாகச் சிரித்தாள்.
“நான் சொன்னது நீங்க கொடுத்த ஸாரி விளக்கத்துக்கு”
“ஓ, ஓகே கூல்! சாப்ட்டீங்களா யங் மேன்?”
“யங் மேனா??”
“அப்படித்தான அந்த ‘கரெக்ட்’ கபுள்ஸ் உங்களைக் கூப்பிட்டறாங்க” என்று லேசாகச் சிரித்தாள்.
“கரெக்ட் கபுள்ஸா?”
“மிஸ்டர் அன்ட் மிஸஸ் பாஸ்கர்” என்று நன்றாகச் சிரித்தாள்.
“இது டு மச் தாரா” என்றதற்கு, மீண்டும் சிரித்தாள்.
“என்னாச்சு… சும்மா கெக்கபிக்கன்னு சிரிச்சிக்கிட்டே இருக்கீங்க”
“கெக்கபிக்க… இது என்ன வார்த்தை தேவா? அர்த்தம் என்ன?” என்று கேட்டு, அப்போதும் சிரித்தாள்.
“என்னய கிண்டல் பண்றீங்க. கரெக்டா??”
“ஹண்ட்ரட் மார்க்ஸ் தேவா… தோ யூ பெயில்டு யங் மேன்” என்று மறுபடியும் சிரித்தாள்.
“நான் ஒரு விஷயம் சொன்னா உங்க சிரிப்பு அப்படியே நின்றும்”
“ஓ! அப்படியா? அது என்ன விஷயம்?” என்று மிடுக்காகச் சிரித்தாள்.
“ரெண்டு நாள்… நான் ஏன் ஃபோனே பண்ணலை”
“பிஸியா இருந்திருப்பீங்க, என் ஞாபகம் வந்திருக்காது” என்றவள் குரல் அர்த்தம் சொல்லிச் சிரித்தது!
“இன்னைக்கு ஏன் பண்ணேன்?”
“ஃபிரியா இருந்திருப்பீங்க, ஞாபகம் வந்திருக்கும்” என்று விளையாட்டாய் சிரித்தாள்.
“அது எப்படி?”
“என்னய ஞாபகப் படுத்திற பொருள் ஒன்னு…” என்று யோசித்தவள், “பட் நான் கிஃப்ட் எதுவும் கொடுக்கலயே தேவா” என்றாள்.
“நெருங்கிட்டிங்க…”
“எக்ஸ்க்யூஸ் மீ” என்று விஷமத்துடன் சிரித்தாள்.
“ஹலோ! பதிலை நெருங்கிட்டீங்கன்னு சொன்னேன்”
“ஓகே ஓகே” என்று யோசித்தவளின் சிரிப்பு சட்டென்று நின்றது. “தேவா” என்று அசௌகரியமாக அழைத்தாள்.
“ஐ திங்க் யூ காட் இட்” என்று சிரிக்க ஆரம்பித்தான்.
“தேவா ப்ளீஸ்…”
“என்ன ப்ளீஸ்?” என்று தோரணையாகச் சிரித்தான்.
“ப்ரிட்டி ப்ளீஸ்”
“நான் அதைக் கேட்கலை. எதுக்கு ப்ளீஸ்?” என்று தெளிவு படுத்திச் சிரித்ததும், தாராவிடம் அமைதி.
“இப்பதான் நான் உங்க குட் மார்னிங் மெசேஜ் எல்லாம் பார்த்தேன்” என்றதும், மறுமுனையில் தாரா கண்களைச் சுருக்கி, ‘அய்யோ’ என முணுமுணுத்தாள்.
“எத்தனை மெசேஜஸ்?” என்றதும், மறுமுனையில் தாரா தலையில் மெல்ல அடித்துக் கொண்டாள்.
“அதுமட்டுமில்லாம… ஒரு மனுசனுக்கு எத்தனை பெட் நேம்?”
“தேவா…” என்று இழுத்தாள்.
“அதுவும் அவ்ளோ…” என்றவன் வார்த்தையை முடிக்கும் முன், “தேவா… தேவா போதும்… போதும்” என்று அவசர மெதுவாக பதறினாள். தேவா சிரித்தான்.
“அது… நீங்களும் என்னைய லவ் பண்ணுவீங்கன்னு நினைச்சி அனுப்பினது” என்றவள் குரலில் அசடு வழிந்தது! மீண்டும் சிரித்தான்.
“தேவா ப்ளீஸ்… டெலிட் பண்ணீடுங்க”
“ச்சே ச்சே… நல்லாத்தான் இருக்கு. இருந்துட்டு போகட்டும்” என்று நய்யாண்டிச் சிரிப்பு சிரித்தான்.
“ப்ளீஸ் டெலிட் பண்ணுங்க”
“ஓகே, டெலிட் பண்றேன், ஆனா ஒரு டீல்” என்று பேரமாகச் சிரித்தான்.
“என்ன டீல்?”
“இப்பலாம் ஏன் மெசேஜ் அனுப்புறதில்லை?”
“டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுனு சொன்னீங்கள. அதான்” என்று விளக்கம் சொன்னாள்.
“ஓ! எத்திக்…”
“ய்யா… ய்யா. ஜ நோ…” என்று ஆரம்பித்தவளிடம், “வாட்…?? வாட்.??” என்றான் புருவங்கள் உயர!
“நான் எதுவுமே பேசலை. நீங்களே சொல்லுங்க”
“இனிமே டெய்லி மார்னிங் மெசேஜ் அனுப்புங்க”
“நீங்க பார்ப்பீங்களா?”
“ம்ம். பட், ஜஸ்ட் குட் மார்னிங் மெசேஜ். இந்த பெட் நேமெல்லாம் வேண்டாம்”
“ஓகே யங் மேன்”
“இப்போதான சொன்னேன்” என்று சலித்துக் கொண்டான்.
“இது நான் வைக்கலை. உங்க வெல் விஸ்ஸர் வச்சது”
“தாரா…”
“சரி, அதை விடுங்க… எதுக்கு மீட் பண்ணனும்னு கேட்டீங்க?”
“மறந்திருந்தேன்! ஞாபக படுத்திறீங்க” என்றவன் குரலில் இயலாமை இருந்தது.
“என்ன ஞாபகம்?”
“இப்போ எனக்கும் லவ் பெயிலியர் வலி தெரியும்” என்றான் வருத்தத்துடன்!
“உங்க லவ் பத்தி சொல்றீங்களா, என்னாச்சு தேவா?”
“அவங்களுக்கு விருப்பமில்லை”
“ஏன்”
“அது எதுக்கு? டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுனு சொல்லிட்டாங்க” என்றதும், சிரித்துவிட்டாள்.
“ஏன் சிரிக்கிறீங்க?”
“ஸாரி”
“எதுக்குச் சிரிச்சீங்க” என்றவன் குரல் கடினப்பட்டிருந்தது.
“யூஸ்வலா நீங்கதான் டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு சொல்வீங்க. இப்போ, உங்களைச் சொல்றதுக்கும்… ஒருத்தர் இருக்காங்களே? அதான்… ” என்றாள் தயக்கத்துடன்!
சட்டென தேவா சிரித்துவிட்டான்.
“சிரிக்கிறீங்களா தேவா”
“ஆமா சிரிக்கிறேன்” என்று சிரித்தான்.
“முதலயே கவனிச்சேன், வாய்ஸ் டல்லா இருக்குனு. இதான் காரணமா?”
“ம்ம்ம்”
“பட், அதனால்தான் இப்படி ரியாக்ட் பண்றீங்களோ?”
“புரியலை தாரா”
“லவ் பெயிலியர் ஆனதாலதான்… என் வாட்ஸப் மெசேஜ் பார்க்கிறது… மெசேஜ் அனுப்ப சொல்றது…” என்று அவள் முடிக்கும் முன், “என்ன ஒரு மென்டாலிட்டி தாரா? இனிமே என்கிட்ட பேசணும்னு நினைக்காதீங்க” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
சட்டென்று அழைப்பு துண்டிக்கப் படவும்தான், என்னாயிற்று? என்று தான் பேசியதை ஓட்டிப் பார்த்தாள். ‘தாரா யூ ஸ்டுபிட்” என்று தன்னைத் திட்டிக் கொண்டே திரும்பவும் அலைபேசியில் தேவாவை அழைத்தாள்.
அவன் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தாள். அவன் எடுக்கவேயில்லை.
தன்னுள் அழகாய் நேர செலவிடல்களை நிரப்பிக் கொண்டிருந்த வேளையில், இது என்ன ‘அன்வான்ட்டடாய்’ ஒரு நிறுத்தம்! – காதல் உண்டியல் feeling angry with தாரா and தேவா!!

