Kathambari Novels
தன்னை உற்சாகப் படுத்திக்கொண்ட தாரா இருக்கையில் வந்து அமர்ந்தாள். அதன்பின் முக்கால் மணி நேரத்திற்கு, தனக்காக யோசிக்க முடியாமல் பணி செய்தாள்.
முக்கால் மணி நேரம் முடிந்த அடுத்த நொடி, “நெக்ஸ்ட்” என்றதும் செவிலியர் ஹேமாவையும், தேவாவையும் உள்ளே அனுப்பினார்.
உள்ளே நுழைந்தவனைப் பார்த்தவள், எந்த மாதிரி எதிர்வினை புரிய என்று தெரியாமல் உட்கார்ந்திருந்தாள்.
“குட் மார்னிங் டாக்டர்” என்று ஹேமா வந்தமர்ந்தாள்.
“ம்ம்ம், ஹேப்பி மோர்னிங்”
“மேம், இவங்க நியூ பேஷன்ட்” என்று ஹேமா மருத்துவ கோப்பை செவிலியர் தாரா முன் வைத்தார்.
“பைவ் மன்ந் ப்ரக்னன்ட் டாக்டர். இது என் பழைய பைல். ரெண்டு நாளைக்கு முன்னாடி இந்தியா வந்தேன்” என்று ஹேமா தன்னைப் பற்றி சிறு அறிமுகம் கொடுத்துக் கொண்டாள்.
“ம்ம்ம்” என்று மெல்லிய புன்னகை செய்து, தாரா மருத்துவ கோப்புகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.
“முதல நம்ம ஹாஸ்பிட்டல் ஃபைல் ஓபன் பண்ணிடுங்க” என்ற செவிலியரிடம் தாரா சொன்னாள். பின்பு ஹேமாவைப் பார்த்து, “ஒரு ஸ்கேன் எடுத்திடலாம். அப்பதான்…” என்கையில், “இவ்வளவு ஏர்லியா ஸ்கேன் எதுக்கு?” என்று தேவா குறுக்கிட்டான்.
‘இதுக்கு பதில் சொல்லியாவது இவனிடம் பேச வேண்டும்’ என்று தாரா பதில் சொல்ல வாய் திறக்கும் முன்னே, “நீ வெளிய இரு. அவங்களுக்கு எல்லாம் தெரியும்” என்றாள் தம்பியிடம் ஹேமா.
“சரி. பார்த்திட்டு வா” என்று தேவா வெளியே சென்றுவிட்டதும், ‘அய்யோ’ என்றிருந்தது தாராவிற்கு!
“டாக்டர்… அவன் அப்படித்தான். ரொம்ப கேள்வி கேட்பான். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க” – ஹேமா.
‘ஏன் இப்படி??’ என்பது போல் தாரா ஹேமாவைப் பார்த்தாள். ஆனால் அது ஒரு நொடிதான். அதன்பிறகு அவள் அங்கே மருத்துவர்.
“அபார்சன் ஹிஸ்டரி இருக்கு. ஸோ ட்ராவல் இஸ் நாட் அட்வைஸபில். ஆனா டிராவல் பண்ணிருக்கீங்க. அதான் ஸ்கேன் பண்ணி ஃபேட்டல் கண்டிஷன் பார்க்கணும்”
ஹேமா முகத்தில் பயம் தெரிந்ததைப் பார்த்து, “டோன்ட் வொரி… ரிலாக்ஸ்” என்று தாரா சொன்னதும், வழக்கமான பரிசோதனைகள் நடந்தன.
அவளுக்கான பரிசோதனைகள் முடிந்ததும் அடுத்தடுத்த பார்வையாளர்கள், பின் ஒரு பிரசவம், இதையெல்லாம் முடித்துவிட்டு… இரண்டரை மணியளவில் அயர்ந்து போய் தாரா வந்து கொண்டிருந்தாள்.
இது மருத்துவர்களின் ஓய்வு நேரம். ஆதலால் பெரிதாக ஆட்கள் இல்லை. ஒரு சிலர் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தனர்.
‘டுடே ஜஸ்ட் இஸ் நாட் யுவர் டே தாரா. பீல் பண்ணாத கேர்ள். இன்னொரு நாள் தேவாகிட்ட பேசிடலாம்’ என்று அவளுக்கு அவளே ஆறுதலும், நம்பிக்கையும் சொல்லிக் கொண்டே நடைகூடத்தில் நடந்து வந்தாள்.
அப்படி வருகையில், தேவா நடைகூட இருக்கையில் இருப்பதைப் பார்த்தாள். என்றுமே தாரா நடக்கும் பாதைகள் எல்லாம், தேவாவின் வாழ்க்கை என்னும் வாசலில் சென்றுதானே முடியும்!
அதாவது தேவா முன்னே வந்து நின்றாள்!!
தாரா வந்ததைக் கண்டு, தேவா எழுந்து நின்றான். முதல்முறை இருவரும் புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர்.
‘கொஞ்ச நேரம் பேசணும்னு, தேவாகிட்ட பேச்சைத் தொடங்கு’ என்று தாரா மூளை கட்டளையிட்டது. அந்தக் கட்டளையைச் செயல்படுத்த நினைக்கும் போது, “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் தேவா.
‘வ்வாட்?? நான் சொல்ல வேண்டியதை… இவன் சொல்றான்?’ என்று அவளது காதல் மனது புரியாமல் புலம்பியது. ‘ஓகே… இங்க வேண்டாம். ரூம்ல போய் பேசலாம்’ என்றாவது சொல் என்று மீண்டும் மூளை கட்டளை பிரப்பித்தது.
மூளையின் கட்டளைக்குக் கட்டுப்பட நினைக்கும் போது, “இங்க வேண்டாம். உங்க ரூம்ல போய் பேசலாமா??” என்று கேட்டான்.
தாராவிற்கு, ‘ஹே மேன்! ஆர் யு ரீடிங் மை மைன்ட்??’ என்று கேட்கணும் போல் இருந்தது. ஆனாலும் அவனுடைய பேச்சால் காற்றால் நிரப்பிய பலூன் போல், தாராவினது இதயம் காதலால் நிரப்பப்பட்டது!
“வாங்க” என்று அவளது அறைக்குள் அழைத்துச் சென்றாள்.
உள்ளே நுழைந்தவள், அவனை அமர சொல்லிவிட்டு, தன் சுழல் நாற்காலியில் வந்து அமர்ந்தாள். பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என நினைத்து, “என் பேரு தாரா” என்றாள் அறிமுகமாக.
“ம்ம்ம் தெரியும்”
“தெரியுமா, எப்படி?”
“அதான் டோர்ல எழுதியிருக்கே, நேம் வித் டிகிரி”
“ஓ! ஏதோ பேசணும்னு சொன்னீங்க…”
“எஸ். பட் இப்படிக் கேட்கிறேன்னு… தப்பா எடுத்துக்காதீங்க”
அவனின் அந்தப் பேச்சினால் காற்று ஏற்றிய பலூன் பறப்பது போல், காதல் ஏற்றப்பட்ட இதயம் பறந்ததும், “நெவர். கேளுங்க” என்றாள்.
“ஓகே, தேங்க்ஸ். அக்காவோட டெலிவரி பத்திக் கேட்கணும்” என்றான்.
தேவாவின் அந்தப் பேச்சு, பலூன் போன்று பறக்கும் தாரா இதயத்திற்கு… ஒரு குண்டூசி! இதுக்குதானா இத்தனை பேச்சுகள் என்று கேட்டு இதயம் தரையில் வந்து வீழ்ந்தது.
“கேளுங்க” என்றாள் தன்னைச் சமாளித்துக் கொண்டு!
“இங்க நார்மல் டெலிவரினா எவ்வளவு ஆகும்ன்னு சொல்ல முடியுமா”
‘இதை ப்ளோர் ரிசப்ஷன்ல கேட்டிருக்கலாமே. என்கிட்ட ஏன்?’ என்று மீண்டும் பறக்க ஆரம்பித்த இதயத்தை, ‘ரொம்ப எதிர்பார்க்காத’ என்று பிடித்து வைத்தாள்.
“அது எப்படி நார்மல் டெலிவரினு இப்பவே சொல்ல முடியும். சிசெக்ஷன் கூட இருக்கலாம். அதெல்லாம் பேபி பொசிஷன், ஹெல்த் கண்டிஷன் வச்சிதான் டிசைடு பண்ணனும்” – தாரா.
“ஓகே! பட் அப்ரொக்ஸிமெட்டா எவ்வளவுன்னு சொல்லுங்களேன்?”
“ஒன் லேக் டு ஒன் பாயிண்ட் டூ”
“நான் நார்மல் டெலிவரிக்கு கேட்டேன்”
அவன் கேட்ட விதம், விசாரிப்பு போல் தெரியவில்லை. விசாரணையை போல இருக்க, “ம்ம்ம்… நானும் நார்மல் டெலிவரிக்குத்தான் சொன்னேன்” என்றாள் கொஞ்சம் அழுத்தமாக!
“ஓகே. இதேதான் ரிசப்ஷன்ல சொன்னாங்க. இது அதிகமா வாங்கிற மாதிரி தெரியலையா” என்று குரலின் டெஸிபல் அளவை சற்று ஏற்றினான்.
மிதமான அளவில் தாராவிற்கு கோபம் வர, “ஒன் லேக் ஓவர் சார்ஜ்ஜிங்னா வி ஹேவ் இன்சூரன்ஸ் கவரேஜ்…” என்கையிலே, “நான் கொடுக்கிறதைப் பத்திப் பேசலை. ஏன் இவ்ளோ வாங்கிறீங்க… அதுபத்தி கேட்கிறேன்” என்றான்.
‘என்ன பேச நினைத்தால், என்ன பேச வைக்கிறான்?’ என்று எண்ணி கோபம் அதிகரித்தது. “ஓகே லிஸன்! இன் அவர் ஹாஸ்பிட்டல், தே ரூம் டாரிஃப், குவாலிட்டி ஆஃப் கேர், பெஸிலிட்டீஸ்…” என்று அடுக்கிக் கொண்டு போவதைப் பார்த்து, “இருந்தாலும் ஒரு எத்திக் வேண்டாமா?” என்று குறுக்கிட்டான்.
“ஸீ… வி னோ வாட் இஸ் எத்திகல் அன்ட் வாட் இஸ் நாட்! சிம்பிளா உங்களுக்கு சொல்லணும்னா, இது ஹாஸ்பிட்டல் ப்ரோடோகால்” என தெள்ளத் தெளிவாக சொல்லிப் பார்த்தாள்.
“ஓகே, யார் தீர்மானிக்கிறாங்க இத” என்று அடுத்த கேள்வி வந்து விழுந்தது.
“ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட்”
“யாரோ மாதிரி சொல்றீங்க? நீங்கதான் மேனேஜ்மென்ட்?”
அவள் புரியாமல் பார்த்தாள்.
“அதான் நேத்து சொன்னாங்கள, நீங்க ஹாஸ்பிட்டல் ஓனர் பொண்ணுனு”
“இதான் பேசணும்னு சொன்னீங்களா”
“ம்ம்! முதல ரிசப்ஷன்ல கேட்டேன். எனக்கு… இந்த பீஸ் அதிகம்னு தோணுச்சு. மேனேஜ்மென்ட் ஆளுங்க யார்கிட்டயாவது சொல்லிட்டு போக நினைச்சேன்”
தாரா அமைதியாக இருந்தாள்.
“நீங்க ரெஸ்பான்சிபிள் பெர்ஷன்னு நினைச்சு உங்ககிட்ட சொன்னேன்”
என்னமோ தாராவிற்கு தொண்டைப் பகுதி வரண்டது போல் இருந்தது. எனவே, “கொஞ்சம் வாட்டர்” என்று அவனைப் பார்த்துக் கேட்டாள்.
“இது உங்க ஹாஸ்பிட்டல். என்கிட்ட கேட்கறீங்க?”
“ச்சே!” என்றவள், மேசையிலிருந்த கிரேப் ஜூஸை எடுத்துக் குடித்தாள்.
தேவா, அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அன்னாந்து குடித்தபடி, ‘என்ன?’ என்பது போல் புருவத்தை உயர்த்தினாள்.
“தண்ணி வேணும்னு கேட்டுட்டு… ஜூஸ் குடிக்கிறீங்க?” என்று தேவா மீண்டும் கேள்வி கேட்டதும், தாராவின் வாயில் இருந்த ஜூஸ் தொண்டைக்குள் இறங்க மறுத்தது.
யாராவது வந்து, பதில் சொல்லும் நிலையிலிருந்து தன்னைக் காப்பாற்றிவிட மாட்டார்களா என்று தாரா நினைக்கும் அளவிற்கு கேள்வி கேட்டான்.
அந்நேரம் கதவைத் திறந்து கொண்டு ஒரு பெண் உள்ளே நுழைய, ‘அப்பாடி!’ என்று ஜூஸை விழுங்கிவிட்டு, “சாரு… வா வா” என்று தாரா வரவேற்றாள்.
தற்போதைய தேவைக்காக சாருவைப் பற்றி ஒரு வரி மட்டும்… தாராவின் காதல் தெரிந்த ஒரே நபர்.
“பேஷன்ட்?’ என்று கேள்வியாக தாரா முன்னிருந்த இருக்கையைக் காட்டிக் சாரு கேட்க, “இல்ல, இல்ல நீ வா” என்று தாரா சொல்ல, அவள் வந்தாள். அங்கே தேவாவைப் பார்த்ததும், “ஹே தேவா! நீங்க எப்படி இங்க” என்றாள்.
ஐயோ! இவள் தன்னை காப்பாற்ற வந்தாளா, இல்லை தன் காதலை காட்டிக் கொடுக்க வந்திருக்காளா என்று அவஸ்தையாக தாரா சாருவைப் பார்த்தாள்.
தேவாவோ ஆச்சரியமாகப் பார்த்தான்.
“என்ன அப்படிப் பார்க்கறீங்க?” என்று சாரு அவனிடம் கேட்டாள்.
“என்னய எப்படித் தெரியும்”
‘என்ன சொல்லப் போகிறாளோ??’ என்ற பதற்றத்துடன் தாரா இருந்தாள்.
“ஒரு ஆக்டிவிஸ்ட் நீங்க. உங்கள தெரியாதா” என்றவள், “பை த வே மைசெல்ஃப் சாருலதா. சிங்கிள் பேரன்ட். Gynecologist” என்று கை நீட்டினாள்.
“கிரேட். நைஸ் டு மீட் யூ” என்று தேவாவும் கை குலுக்கிக் கொண்டான்.
தாராவிற்கு உள்ளுக்குள் உதறியது. இவர்கள் பேச்சு நீடித்தால் என்னாகுமோ என்று, “சாரு, உனக்கு பேஷன்ட்ஸ் வெயிட் பண்ணுவாங்க. நீ போ” என்றாள்.
“இது லன்ஞ் டைம் தாரா” என்று சாரு சொன்னதும் “டாக்டர்ஸூக்கு பிராப்பர் பிரேக் கொடுக்கிறதில்லயா?” என்று மீண்டும் தேவா ஆரம்பித்ததான்.
“நீங்க அங்கயே பேசிக்கோங்க” என்று தாரா சாருவைக் கை காட்டினாள்.
சாரு லேசாக முறுவல் செய்து, “அப்புறம் சொல்லுங்க, எப்போ, எப்படி மீட் பண்ணீங்க” என்று தேவாவிடம் கேட்டாள்.
“சாரு… அது” என்று தாரா தொடங்கிய பொழுது, “நீ பேசாத” என்றவள், “நீங்க சொல்லுங்க தேவா” என்றாள் ஆர்வத்துடன்.
“யாரை மீட் பண்ணத பத்தி கேட்கறீங்க” – தேவா.
“தாராவ!”
“ஓ! அதுவா… நேத்து காலையில… இங்கதான்”
“வாவ்! நேத்து நான் லீவ். அதான் எனக்குத் தெரியல” என்றவள், “தாரா… நீ ஃபோன்ல சொல்லியிருக்கலாம்” என்று சாரு குறைபட்டுக் கொண்டாள்.
“சாரு… நான் சொல்றதை” என்று மீண்டும் தாரா பேச ஆரம்பிக்கையில், “இரு தாரா…” என்று சாரு சொல்லி, “எல்லாம் பேசியாச்சா தேவா” என்றாள்.
“இப்பதான் பேசி முடிச்சோம்”
“சூப்பர்… சூப்பர்… அப்புறம் என்ன முடிவெடுக்க போறீங்க”
“எதைப் பத்தி”
“அதான் பேசினதைப் பத்தி…”
“நான் ஏன் முடிவெடுக்கணும்? அவங்கதான் எடுக்கணும்”
“அவதான் ஏற்கனவே எடுத்திட்டாளே”
தேவாவிற்கு ஏதோ ‘நான் சிங்-காக’ போகின்ற மாதிரி உணர்வு வந்தது.
இதற்கு மேல் விட்டால்… தன் நிலைமை ‘நான் சென்ஸ்ஸாக’ ஆகிவிடும் என்று, “சாரு, சொல்றதைக் கேளு. அவங்க டெலிவரி பீஸ் பத்தி பேச வந்திருக்காங்க” என்றாள் தாரா அழுத்தம் திருத்தமாக!
மெதுவாகத் திரும்பி சாரு தேவாவைப் பார்த்து, “நான் வர்றப்போ இதான் பேசிக்கிட்டு இருந்தீங்களா?” என்றாள்.
“நீங்க வர்றதுக்கு முன்னாடியும் இதான் பேசினோம்” என்று தேவா எழுந்து விட்டான்.
“என்ன எந்திரிச்சிட்டீங்க” என்று தாராவும் எழுந்தாள்.
“ம், டாக்டர் எழுதிறதுதான் புரியாதுனு சொல்லுவாங்க. ஆனா நீங்க பேசறதே புரியலை” என்று சொல்லிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
சாரு சிரித்தாள். தாரா அவளை முறைத்துவிட்டு, “உங்க அக்கா டெலிவரி” என்று கேட்டுக்கொண்டே தேவாவின் பின் சென்றாள்.
“கவலைப்படாதீங்க இங்கதான் நடக்கும். அக்காக்கு உங்களை பிடிச்சிருக்கு. ஐ மென்ட் நீங்க கேர் பண்றது, பேசறது” என்றதும், ‘உங்களுக்கு?’ என்று அவள் இதயம் கேட்ட கேள்விக்கு ஏற்றபடி இதழ்கள் லேசாக அசைந்தன.
“ஏதாவது கேட்டீங்களா?”
“அது…அது…” என்று தடுமாறி, “ம், அடுத்து எப்போ பார்க்கலாம்?” என்றாள்.
“ஃபர்ஸ்ட் டைம்” என்றான்.
“என்னது”
“ஒரு டாக்டர்… விசிட்டர்கிட்ட இந்தக் கேள்வி கேட்டுப் பார்க்கிறேன்”
இம்முறை சாரு திரும்பி நின்று நன்றாகச் சிரித்தாள். தாரா எதுவும் பேசாமல் கதவைத் திறந்து விட்டாள். சத்தியமாக அதைத் தவிர வேறென்ன செய்ய என அவளுக்குத் தெரியவில்லை.
தேவா, “தேங்க்ஸ்” என்று சொல்லிச் சென்றுவிட்டான்.
தேவா சென்றதும், தாரா வேகமாக நடந்து வந்து, மேசையிலிருந்த கண்ணாடி டம்ளர் தண்ணீரை எடுத்து, இடைவிடாமல் குடித்து முடித்தாள்.
“என்ன முடியலையா” – சாரு.
“ஒரு மனுஷன் இத்தனைக் கேள்வியா கேட்பான் சாரு?”
அவள் சொன்ன விதத்தில் சாரு அடக்க முடியாமல் சிரித்துவிட்டு, “அவன் கேள்வி கேட்டே பழகினவன். ஈஸியா வரும்” என்றாள்.
“லவ் பத்தி ஏதாவது பேசலாம்னு நினைச்சா… ஹாஸ்பிட்டல் லா [law] பத்திப் பேச வைக்கிறான்” என்று புலம்பித் தள்ளானாள்.
புருவங்கள் சுருங்க, கருவிழிகள் இடப்புறம் வலப்புறமாக நகர… தாரா, தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினாள். சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். சாரு சிரித்துக் கொண்டிருந்தாள். அதைக் கண்டதும், தானும் மட்டியைக் கடித்துக் கொண்டு புன்னகைப் புரிந்தாள்.
பின் நேற்று தேவா மருத்துவமனை வந்திருந்ததைப் பற்றி சாருவிடம் சொல்ல ஆரம்பித்தாள்.
தாரா சொல்லும் போதே சாருவை பற்றி… முழு பெயர் சாருலதா. இங்கேதான் பணி புரிகிறாள். தாராவைவிட மூத்தவள். இருந்தாலும் தாராவின் நெருங்கிய தோழி. இவள் திருமணமானவள். ஆனால் திருமணமான ஆறு மாதத்தில், ஒரு விபத்தில் கணவனை இழந்தவள்.
அப்பொழுது சாரு இரண்டு மாத கர்ப்பிணி. அதன்பின் மாமனார், மாமியார், அம்மா… துணையுடன் ஒரு பெண் குழந்தையைப் பெற்று எடுத்தாள்.
குழந்தை பெயர் மாலினி. பிறந்து எட்டு மாதம் ஆகிறது. மாலினி ஆறு மாதக் குழந்தையாக இருக்கும் போது, சாரு தாயையும் இழந்து விட்டாள். இப்போது மாமனார் மாமியாரிடம் குழந்தையை விட்டுவிட்டு பணிக்கு வருகிறாள்.
அவர்கள், இவளுக்குப் பக்க பலமாக இருக்கிறார்கள். நிறைய பிரச்சனைகள், கவலைகள் இருந்தாலும்… அதைத் தாராவைப் தவிர, எவரிடமுமே பகிர்ந்து கொள்ள மாட்டாள்.
இதுவே சாரு என்கின்ற சாருலதா!!
நேற்றைய கதையைத் தாரா சொல்லி முடித்திருந்தாள்.
“ரெண்டு பேரையும் சேர்ந்து பார்த்ததும், நான்கூட ப்ரோபோசல் ஸீனோன்னு நினைச்சேன்” – சாரு.
“ஹலோ! என்னோட ப்ரோபோசல் இப்படியா இருக்கும்?” என்று தாரா கேட்டு, காதல் ரசனையுடன் சொல்ல ஆரம்பித்தாள்.
“ரூப் டாப் ரெஸ்டாரன்ட்! நைட் மோடுல சென்னை சிட்டி! எல்லா டேபிளையும் புக் பண்ணிருப்பேன்! அங்கங்கே பலூன்ஸ், சீரியல் லைட்ஸ்… வொயிட் கலர் டேபிள்… அதுல ஒரு வொயிட் பிளவர் வேஸ் வித் ஒன் ரெட் ரோஸ்!
நானும் தேவாவும் எதிரெதிரே… என் முன்னாடி ரெட் வெல்வெட் கேக் அண்ட் பேக்ரௌண்ட்ல நேட் கிங் கோல்-த்ரீ லிட்டில் வேர்ட்ஸ் சாங்!” என்றவள், தன் டோட் பேக்கிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தாள்.
பின், “இந்த ‘ஜஸ்ட் எ ரிமைன்டர்: ஐ லவ் யூ’ புக்க கிஃப்ட் பண்ணிட்டு, அப்போ தேவாகிட்ட சொல்வேன்… லவ் யு தேவானு” என்று தன் காதல் வெளிப்படுத்தும் காட்சியை தத்ரூபமாகச் சொல்லிச் சிலிர்த்துக் கொண்டாள்.
பின், “இப்படி இருக்கும் சாரு… என் ப்ரோபோசல் சீன்” என்று முடித்தாள்.
சாரு ஆச்சிரியமாக தாராவைப் பார்த்தாள்.
“வாட்??”
“இப்படியா ஒருத்தர லவ் பண்ணுவாங்க. பைத்தியம் மாதிரி இருக்கு தாரா”
“ய்யா… ஐம் கிரேஸி அபௌட் தேவா”
“போதும்… போதும்… நான் கிளம்புறேன்” என்று கிளம்பியவள்… போகும் முன், “பெட்டர் ஃபர்ஸ்ட் லவ் கன்ஃபார்ம் பண்ணிக்கோ. உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன் தாரா” என்று சொல்லிச் சென்றாள்.
‘சரி… சரி…’ என்று தாராவும் தலையை மேலும் கீழும் ஆட்டிவிட்டு கையிலிருந்த ‘ஜஸ்ட் எ ரிமைன்டர்: ஐ லவ் யூ’ புத்தகத்தைப் பார்த்தாள். அவளை அறியாமல், அவள் முகம் புன்னகை ஏந்திக் கொண்டது.
தேவாவுடன் பேசியது காதல் பேச்சுகள் இல்லை. ஆனால் காதலனுடன் பேசிய பேச்சுகள்! அவனுடன் செலவிட்ட நேரங்களை, தாரா தன் காதல் உண்டியலில் சேமித்து வைத்துக் கொண்டாள்!

