Kathambari Novels
கிரிதரன் வீடு அடுத்த ஐந்து நாட்களுக்கு இழப்பின் துயரங்கள், அதுபற்றிய விசாரிப்புகள், அதன் வெறுமைகள், அதிலிருந்து மீளுதல் என்றே இருந்தது.
கிருஷ்ணாம்மா இல்லாமல் வீடு ஏழு நாட்களைக் கடந்திருந்தது. மீனாட்சி, கௌசி, கிரி… வரவேற்பறையில் இருந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அறையில் மெத்தையின் நடுவே கால்களை மடித்து, முட்டி மீது தலை சாய்த்து அமர்ந்திருந்தாள் பாவை. வேணிம்மா இல்லாத வீடு வெறுமை, வேதனை, வேண்டாத பேச்சுகள் என்றுதான் இருந்தது அவளுக்கு!
இரண்டு நாளாக எண்ணம் முழுவதும் தனியாகப் பாடுவது பற்றியே! மேலும் அதை கிரியிடம் எப்படி, எப்பொழுது சொல்வது? வாய்ப்புகள் கிடைக்குமா? இதையெல்லாம் பற்றிய யோசனைதான்!
வருடக் கணக்கில் கிரியிடம் பேசியதில்லை. இந்த வீட்டில் மற்றவர்களுடன் பேச்சுகள் என்பதே கௌசி மூலமாக! இப்பொழுது திடீரென்று நேருக்கு நேர் நின்று, எப்படிப் பேச்சைத் தொடங்க என்ற தயக்கம் இருந்தது.
என்ன செய்ய என்று யோசித்திருந்த வேளையில் கதவைத் தட்டும் ஓசை! இறங்கிச் சென்று கதவைத் திறந்தாள். சங்கர் நின்றான்!! அந்த நேரத்தில், அவனை எதிர்பார்க்கவில்லை என்பதை அவள் முகமாற்றமே சொன்னது.
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.
“என்ன பேசணும்?”
“முக்கியமான விஷயம். உள்ள வந்து சொல்லட்டுமா?”
முதலில் கொஞ்சம் தயங்கினாள். பின் விலகி நின்றாள்.
உள்ளே வந்த சங்கர்… அன்றைய இரவு கிரி, மீனாட்சி, கௌசி பேசியதைச் சொன்னான். மேலும், வேணிம்மா அதைக் கேட்டதையும் சொன்னான்.
அதிர்ச்சி இல்லை என்றாலும் பாவைக்கு இந்த அளவிற்கு நினைக்கிறார்களா என்று தோன்றியது! இவர்கள் பேச்சைக் கேட்டதால்தான் தனியாகப் பாட வேண்டுமென சொல்லியிருக்கிறார் என்று புரிந்தது.
“இப்போகூட உன்னைப் பத்திதான் பேசிக்கிட்டு இருக்காங்க!” என்றான்.
“என்ன பேசறாங்க?” என்று பேச்சைத் தொடர்ந்தாள், உண்மை பேசுகின்றான் என்று தெரிந்ததால்!
“நீ அன்னைக்கு உன் இஷ்டப்படி பாடினேல? இனியும் இதே மாதிரி கச்சேரில தலையிடுவியோனு யோசிக்கிறாங்க”
இதற்குமேல் தாமதிக்க வேண்டாமென தோன்றவும், கிரியிடம் எப்படிப் பேச என்று மீண்டும் யோசிக்க ஆரம்பித்தாள்.
“உன் கேரியர் பத்தி நீ ஏதாவது முடிவெடுத்திருக்கியா” என்று கேட்டான்.
வேணிம்மா சொன்னதைப் பற்றி யோசித்தாள். அவள் ஆசையும் அதுதானே என்பதால், “ம்ம்” என்றாள்.
“என்ன முடிவு?”
எல்லோரிடமும் சொல்லப் போகிறோம் இவனிடம் சொன்னாலென்ன என்று நினைத்து, “நான் தனியா பாடணும்” என்றாள்.
குடும்பத்தினர் பேசியதைக் கேட்டதால் பாட்டி எடுத்த முடிவாக இருக்குமோ என்று யோசித்தான்.
“என்ன யோசிக்கிறீங்க?”
“ஒன்னுமில்ல!” என்றவன், “உன் முடிவுல நீ தெளிவா இருக்கியா?” என்றான்.
“ம்ம்ம், இப்பவும் பேசிக்கிட்டு இருக்காங்களா?”
“ஆமா” என்றான்.
“நான் கிரி மாமாகிட்ட பேசணும்! இப்போ போயி பேசவா?” என்று அவனிடம் யோசனை கேட்டதும், “உன் முடிவுல உறுதியா இருந்தா, கண்டிப்பா போய் பேசு” என்று நம்பிக்கை தந்தான்.
‘சரி’ என்று தலையாட்டினாலும் ஒரு தயக்கம் இருந்ததால் நின்று கொண்டே இருந்தாள். “தேனு” என்று அழைத்தான். அந்த அழைப்பைப் பற்றி எரிச்சல் படும் நிலையில் அவளில்லை என்பதால் நிமிர்ந்து பார்த்தாள்!
“நீ என்ன பேசணுமோ தைரியமா பேசு. ரொம்ப யோசிக்காத” என்றான்.
“ம்ம்ம்” என்று தலையசைத்ததும், இருவரும் அறையிலிருந்து வெளியேறினர்.
வரவேற்பறையில் கிரி, கௌசி, மீனாட்சி பேசிக் கொண்டு இருந்தனர்.அங்கு பாவையும், சங்கரும் வந்தனர். சங்கர் ஓரமாக நின்று கொண்டான். கிரியின் முன்னே சென்று பாவை நின்றாள்.
அவள் வந்து நிற்கிறாள் என்று தெரிந்தும், நிமிர்ந்து அவளைப் பார்க்காமல், கிரி அலட்சியமான உடல் மொழியுடன் இருந்தார்.
“என்ன வேணும்? எதுக்கு இப்படி வந்து நிக்கிற?” என்று கௌசி கேட்டாள்.
“கிரி மாமா! நான் உங்ககூட பேசணும்” என்றாள் நேராக கிரியைப் பார்த்து!
அதன்பிறகும், “அப்பாகிட்ட என்ன பேசணும்?” என்று கௌசிதான் கேட்டாள்.
“நான் கிரி மாமாகிட்டத்தான் பேசணும்” என்று உறுதியாக நின்றாள் பாவை.
“ஏய்! உனக்கு என்னாச்சு?” என்று மீனாட்சி கேட்டார்.
மீனாட்சியைப் பார்த்து, “எனக்கு எதுவும் ஆகல. இவங்கதான என் கச்சேரிலாம் பார்த்துக்கிறாங்க! அப்போ நான் இவங்ககிட்டதான் பேசணும்” என்றாள்.
கச்சேரி என்றதும் கிரி தலை நிமிர்த்தினார். ஆனால் பேசவில்லை. சங்கர், ‘பாவையால் முடியும்வரை பேசட்டும்’ என்பது போல் நின்றான்.
“கிரி மாமா” என்றாள் பாவை.
“என்ன பேசணும்?” என்றார்.
“நான் இனி கௌசி கூடச் சேர்ந்து கச்சேரி பண்ண மாட்டேன்” என்று பாவை சொன்னவுடனே, கிரி சோஃபாவில் இருந்து விருட்டென எழுந்துவிட்டார்.
கௌசி, மீனாட்சி… இருவரும் அதிர்ச்சியுடன் பாவையைப் பார்த்தனர். கிரி,
“என்ன சொல்ற?” என்று கடுமையுடன் கேட்டார்!
“நான் தனியாத்தான் கச்சேரி பண்ணுவேன்! கௌசி கூடச் சேர்ந்து பண்ணப் போறதில்ல” என்றாள் தெளிவான உச்சரிப்புடன்! தீர்க்கமான பார்வையுடன்!
“ஏன்?”
“நானும் என் விருப்பப்படி பாட வேண்டாமா?” என்று கேள்வியாகக் கேட்டவள், “அதான் தனியாவே பாடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றாள்.
கௌசிக்கும் கோபம். தான் இவளுடன் சேர்ந்து பாடப்போவதில்லை என்று சொல்லும் முன், இவள் சொல்லிவிட்டாளே என்ற கோபத்தில், “தனியா பாடறது ஈஸின்னு நினைச்சியா?” என்று இறுக்கமான முகத்துடன் கேட்டாள்!
பாவை கொஞ்சம் யோசித்து, “பாடறது எனக்கு கஷ்டம் இல்ல” என்றாள்.
கௌசியின் முகம் ஆற்றாமையை வெளிப்படுத்தியது. அவளுக்கு ஆதரவாக அவளருகில் வந்து மீனாட்சி நின்றுகொண்டார்.
மகளின் நிலை கண்ட கிரி, “உனக்கு கச்சேரி வாய்ப்பு பத்தி என்ன தெரியும்?” என்று நக்கலாகக் கேட்டார் பாவையிடம்!
சட்டென மனதில் நம்பிக்கை குறைவது போல் இருந்தது பாவைக்கு. அகத்தில் நினைப்பதை முகம் பிரதிபலித்தது. அவளைப் பார்த்த சங்கர், இதை பாவை உணர்ந்து கொள்வாளா என்று தெரியாது. இருந்தாலும் அவளுக்கு ஆதரவாக அவள் அருகில் வந்து நின்றான்.
இது எதையும் கண்டுகொள்ளாமல் கிரி தொடர்ந்தார்.
“ஒரு கச்சேரிக்கு எவ்வளவு பணம் தர்றாங்க? அதுல பக்க வாத்தியங்களுக்கு எவ்ளோ கொடுக்கணும்? என்னென்ன சபா இருக்கு? அதுல இருக்க மெம்பர்ஸ் யாரு? ஸ்பான்சர்னா என்ன? மத்த கிளாசிக்கல் சிங்கர்ஸ் யாரு, அவங்களோட காண்டாக்ட் இருக்கா? இல்ல ஏதாவது ஒரு சபா நம்பராவது தெரியுமா?” என்று கேட்டு, அவள் நம்பிக்கையைக் கேள்விக் குறியாக்கினார்.
இதுவரை இதெல்லாம் கிரிதான் பார்த்து வந்தார். பாடுவது மட்டுமே அவளது வேலை. இதில் எதுவுமே தனக்குத் தெரியாதே என்ற பயம், அவள் கண்களில் தெரிந்தது. நம்பிக்கை முற்றிலும் தொலைவது போல் இருந்தது.
அக்கணம் சங்கர், “தெரியலனா… தெரிஞ்சிக்குவா” என்று கிரியைப் பார்த்து சொன்ன, “அப்படித்தான தேனு” என்றான்.
என்ன நினைத்தாளோ உடனே, “ஆமா, தெரியலனா கத்துக்கிடுவேன். ஆனா தனியாதான் பாட போறேன்” என்றாள் பாவை கிரியின் கண்களைப் பார்த்து!
மீனாட்சி, “என்னடா அப்பாவ எதிர்த்து பேசிறியா” என்று சங்கரிடம் கேட்க, “அவன் அப்படித்தான்! அம்மாக்கு இப்படி ஆனதுக்கு காரணமானவளுக்குப் போய் சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்கான்” என்றார் கிரி.
“இது என்ன புதுசா சொல்றீங்க?” என்று பாவை அவசரமாகக் கேட்டாள்.
“புதுசெல்லாம் ஒன்னுமில்ல! உன்னை நினைச்சிக் கவலைபட்டுத்தான அம்மா மூணு நாளா படுத்து இருந்தாங்க. அந்தக் கவலையிலதான் அவங்களுக்கு இப்படி ஆகிடுச்சு” என்றார் கிரி.
“இல்ல! இல்லவே இல்ல! அப்படிலாம் எதுவும் இல்ல” என்றாலும் ‘அப்படியும் இருக்குமோ’ என்று பாவை மனம் யோசித்து கவலைப்பட்டது! அது அவள் உடல்மொழியில் தெரிந்தது!!
‘எதைப் பற்றிப் பேச வந்தால், இவர்கள் எதைப் பற்றி பேசி அவளைத் திசை திருப்புகிறார்கள்’ என்று சங்கருக்குக் கோபம். “ப்பா” என்றான் அழுத்தமாக.
‘என்ன?’ என்று அனைவரும் அவனைப் பார்க்க, “பா, நீங்க சொல்ற மாதிரிகூட இருக்கலாம். தேனுவ நினைச்சி பாட்டி கவலைப்பட்டிருப்பாங்க. ஆனா அதுமட்டும்தான் காரணம்னு சொல்ல முடியாது” என்றான் பொதுவாக!
‘ஏன்?’ என்பது போல் பார்வை அங்கே நின்ற அனைவரிடமும்!
“வீட்ல இருக்கிறவங்க பேசுற விஷயங்கள்கூட, அவங்களுக்குக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கலாம்” என்றான் பூடகமாக!
“என்னடா சொல்ற?” என்றார் கிரி!
“அன்னைக்கு பாவையைப் பத்தி நீங்க பேசினதைப் பாட்டி கேட்டுட்டாங்க ப்பா” என்று சொன்னதும், “அது அதெப்படி…” என்று தடுமாறினார் கிரி.
“எப்படினா? நானும் கேட்டேன். பாட்டி கேட்டதை நான் பார்த்தேன்”
“இல்ல…” என்று கிரி சொல்லும் போதே, “கிருஷ்ணாம்மா வாரிசு” என்று மட்டும் சொன்னான் சங்கர்.
அவனது இந்த இரண்டு வார்த்தைகள்! திடிரென பாவையின் பேச்சுகள்! கிரி, மீனாட்சி, கௌசி மூவரையும் அவன் சொல்வதை நம்பச் சொன்னது. மேலும் தாங்கள் பேசியதை கிருஷ்ணாம்மா கேட்டிருக்கிறார் என்ற விடயமே மூன்று பேரையும் அசௌகரியமாக உணரச் செய்தது.
சங்கர், “ப்பா பாட்டி ஏற்கனவே உடம்பு சரியில்லாதவங்க. நடந்த விஷயம் அவங்களைக் கொஞ்சம் கஷ்டப்படுத்தியிருக்கும். அவ்ளோதான்! அதுக்காக இந்தமாதிரி சம்பந்தப்படுத்திப் பேசாதீங்க” என்றான்.
உடனே கிரி கோபத்துடன் பாவையைப் பார்த்து, “தனியா பாடு! நல்லா பாடு. பார்க்கிறேன் நான், உன்னால ஒரு கச்சேரியாவது பண்ண முடியுதானு” என்று சவலாக சொல்லிவிட்டு அவர் அறைக்குச் செல்லப் போனார்.
தன்னையும் மீறி, “கிரி மாமா” என்று பாவை அழுத்தமாக அழைக்கவும், கிரி நின்று திரும்ப, “நானும் சொல்றேன். கண்டிப்பா ஒரு நாள் தனியா கச்சேரி பண்ணுவேன்” என்றாள் சவாலாக!
“நீ கச்சேரி பண்ணு! இல்ல, பண்ணாம போ! அதைப் பத்தி எந்தக் கவலையும் இல்ல” என்றவர், “ஆனா உனக்கு கல்யாணம் பண்ணி வச்சாச்சில. இனி இங்க இருக்காத. கிளம்பு” என்று அதற்குமேல் அங்கே நிற்க விருப்பம் இல்லாமல் அறைக்குச் செல்லப் போனார்.
அப்போது, தான் பேசியது பாட்டிக்குத் தெரியும் என்ற விடயத்தைக் கேட்டு அசையாமல் நிற்கும் மகளைப் பார்த்து, “கௌசி அப்பா இருக்கேன்டா” என்று அவளது தலை வருடினார்.
மேலும், “இந்த வீட்டுக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு. கிருஷ்ணாம்மா-ங்கிற பேருக்கு ஒரு மரியாதை இருக்கு. உனக்கு கண்டிப்பா சான்ஸ் வரும்” என்று மகளைத் தோளோடு தோள் அணைத்தவாறு அழைத்துச் சென்றார்.
அவர்கள் செல்வதையே கண் எடுக்காமல் பார்த்திருந்த பாவையிடம், “அதான் கிரி சொல்லிட்டான்ல! கிளம்பு” என்று மீனாட்சியும் சென்றுவிட்டார்.
அவர்கள் மாறப்போவதில்லை! மாற்றுவதும் அவள் வேலையல்ல! மேலும் அதை நினைத்து வருந்துவதும் தேவையில்லை! அவளது இசை வாழ்க்கையில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது! அதை நினைத்து நிம்மதி கொண்டு இங்கிருந்து கிளம்பத் தயாரானாள்!!

