Kathambari Novels
அத்தியாயம் – 3
காலை பொழுதில் நாகலாபுரம் அருவி.சென்னையிலிருந்து இரண்டு மணி நேரப் பயணம் செய்தால், இந்த இடத்தை அடைந்துவிடலாம்.
இரவின் குளிரை இன்னும் தனக்குள் வைத்திருக்கும் மலைப் பாறைகள். அதை அப்படியே அந்த இடம் முழுதும் பாய்ச்சிக் கொண்டிருந்தன. தண்ணீர் ஓடிக் கொண்டே இருப்பதால் பச்சை பசேல் என்று வளர்ந்திருக்கும் செடிகொடிகள்.
செடி கொடிகளுக்கு ஊடே சின்ன அருவி இருந்தது. அருவியிலிருந்து தெறித்த தண்ணீர் துளிகளால், அருகிலிருந்த பாறைகள் நனைந்திருந்தன.
மேலும், பெரிய பெரிய மரங்களும் இருந்தன!
அடர்ந்த கிளைகள் கொண்ட மரங்கள் காரணமாக காலை வெயில் இன்னும் காட்டிற்குள் நுழையவில்லை. ஆனால் அங்கே ஒருவன் நுழைந்திருந்தான். மேலும் ஒவ்வொரு பாறைகளிலும் தாவிச் சென்று சுற்றி இருந்த இயற்கை எழிலை ரசித்துக் கொண்டிருந்தான்.
இவன் சிவபாண்டியன்!
காலத்தின் நிகழ்வுகளைக் காட்சியாக நிறுத்தி வைக்கும் ஆற்றல் பெற்றவன். நிழற்படங்கள் எடுப்பவன்!! இங்கேயும் அதற்காகத்தான் வந்திருக்கிறான்.
ஷார்ட்ஸ், ஃபார்மல் ஷர்ட் அணிந்திருந்தான். முதுகில் காக்கி நிறத்தில் ஒரு பெரிய பயணப்பொதி! இதற்குமுன் எங்கேயோ சுற்றிவிட்டு வந்திருப்பான் போல! ஸ்போர்ட்ஸ் ஷூவில் சகதி, உடைகளில் ஆங்காங்கே அழுக்கு!
சற்றுநேரம் நடந்தவன், பயணபொதியை இறக்கி வைத்து, ஈரமாயிருந்த பாறைமேல் விழிகள் மூடிப் படுத்துவிட்டான். சிறு பூச்சிகளின் சத்தம்… ஓடும் நீரின் சலசலப்பு… மெல்லிய காலை காற்றின் கிசுகிசுப்பு… கிட்டத்தட்ட இயற்கை மடியில் இயல்பாய் ஒரு இளைப்பாறல்!
காலை வேளையின் கதிரவன் கதிர்களை எதிர்பார்த்திருக்கும் பாண்டியன் பற்றி… இயற்கையைப் போல் தன்னை எளிமையாக வெளிப்படுத்துபவன்!
கவலை என்ற சாலையில் இவன் கால்கள் நடந்து பழகியதில்லை! வழக்கம் போல் வாழும் வாழ்வை கடுகளவும் விரும்பாதவன்! வான் கூரையின் கீழே, வனங்களுக்கு ஊடே வாழும் வாழ்வை ரசிப்பவன்!
அன்பிற்கும் அறிவியல் உண்டு என்ற கொள்கை கொண்டவன்!! கண்ணீர் என்பது வெறும் உப்புக் கரைசல் என்று சொல்பவன்!
மேலும், ‘மூட நம்பிக்கை என்பது வாழ்க்கைப் பாதையின் முட்டுச்சந்து’ என்று எண்ணுபவன். ஒருநாளும் அதை முட்டிக்கொண்டு நிற்க மாட்டான். குறிப்பாக கடவுள் நம்பிக்கை அறவே இல்லதாவன்!
முக்கியமாக இயற்கையோடு இயைந்தே தன் வாழ்வு இருக்க வேண்டும் என உறுதி கொண்டிருப்பவன்!
முழுக்க முழுக்க அம்மா அப்பாவின் கனிவான கவனிப்பில் வளர்ந்தவன். இன்றைய நாளிலும் அம்மா, அப்பா, தங்கை, தங்கை கணவன் என்று அனைவரின் அன்பில் வாழும் இளைஞன் இவன். குறைகளே இல்லாத வாழ்வு இவனுடையது!
சுயமரியாதை முக்கியம் என்பவன். அதற்கு ஏதும் இழுக்கு வந்தால் இயற்கை சீற்றம் போல் கோபம் கொள்பவன்.
இப்படியே வாழ்க்கை தொடர, தொடர வைக்க, ஓர் உற்றதுணை வேண்டும் என்று ஆசை கொண்டிருக்கிறான், கானகங்கள் மீது தீரா காதல் கொண்ட இந்த இயற்கை காதலன்!!
ஓய்வு முடிந்தவுடன் எழுந்தான். பயணப் பையிலிருந்து புகைப்படக் கருவியை எடுத்துக் கொண்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தான். சூரியனின் கால்தடம் பதிக்காத இடங்களின் அழகை புகைப்படம் எடுக்க ஆரம்பித்தான்.
அருவியின் அதிர்வு இல்லா இடத்தில் தண்ணீருக்கு அடியில் கிடக்கும் பெரிய பெரிய கூழாங்கற்கள் மீது சூரியக் கதிர்கள் பட்டு, வெளியே திரும்பும் காட்சி!
பாறைகளுக்கு இடையே இருந்த செடிகள் மீது வெயில் பட்டு, இலைகளின் நிழல் தனித்தனியாக நீரின் மேல் விழும் காட்சி!
ஒரு பச்சைத் தாவரத்திற்கு இடையே கிடந்த காய்ந்த குச்சி ஒன்றில் ஓணான்! குச்சியில் வாலைச் சுருட்டி நின்று… பின்னங்காலை ஊன்றி, முன்னங்காலை தூக்கி நாக்கை எதிரில் இருந்த செடியை நோக்கி நீட்டியது.
நாக்கின் நுனியில் சுரந்த எச்சில் கொண்டு, இலையின் மேலிலிருந்த தன் இரையைப் பிடிக்கும் காட்சி!
இப்படி இன்னும் நிறைய காட்சிகள்!
உலகம் முழுதும் சுற்றி புகைப்படம் எடுப்பது இவன் வேலை. ‘சோனி வேர்ல்ட் போட்டோகிராபர்’, ‘நேஷனல் போட்டோகிராபர்’ என்று இவன் பல விருதுகள் வாங்கியுள்ளான். இந்தியாவில்… குறிப்பாகத் தென் இந்தியாவில் நடக்கின்ற புகைப்படக் கண்காட்சியில், இவனது புகைப்படங்கள் இல்லாமல் இருக்காது. அந்த அளவிற்கு புகழ் பெற்றவன்.
இந்த வயதில், இந்தப் புகழிற்குக் காரணம் இயற்கையின் மீதான இவனின் ஈடுபாடு.
இக்கணம் நீரின் சலசலப்பைத் தாண்டி செல்பேசியின் சத்தம் கேட்டது. ஒரு கையில் கேமராவைப் பிடித்துக் கொண்டு எடுத்துப் பார்த்தான். ‘அம்மா’ என திரையில் தெரிந்தது.
ஆம்! அழைத்தவர் இவனது அம்மா! பெயர் செண்பகம்! குடும்பத் தலைவி!!
அழைப்பை ஏற்று, “சொல்லுங்க ம்மா” என்றான்.
“எங்க கண்ணா இருக்க?” என்றார்.
நிறைய நேரங்களில், இவரின் அழைப்பு ‘கண்ணா’ என்றுதான் இருக்கும். சில நேரங்களில் மற்றவர்களைப் போல சிவா என்றும் அழைப்பார்.
“சித்தூர் பக்கத்தில” என்றான்.
“எப்போ வருவ”
“எதுக்கு கேட்கிறீங்க”
“ஒரு வரன் வந்திருக்கு. அதான்…”
“லஞ்சுக்கு வீட்டுக்கு வர்றேன் ம்மா. அப்போ பேசிக்கலாம்”
“சரி” என்று அவர் அலைபேசியை வைக்கப் போக, “ம்மா ம்மா” என்றான்.
“என்ன சிவா?” என்றார் செண்பகம்.
“பொண்ணு பேரென்ன?”
“தேன்பாவை” என்றார்.
“ம்ம் சரிம்மா” என்று அழைப்பைத் துண்டித்தான்.
அதன்பின்னும் சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு, பாறைகளின் வழியே ஏறி வருகையில், மரத்தின் மீதிருந்த தேன் கூடு கண்ணில் பட்டது.
சட்டென, ‘தேன்பாவை’ என்ற பெயர் கருத்தில் வந்தது!
‘ஏன் சம்பந்தமில்லாமல் இப்படி?’ என்று மூளை கேட்டதும், ‘ஒன்றுமில்லை’ என்று மனம் சொன்னதைக் கேட்டு நடந்தவன், செம்மண் மணல் பரப்பை அடைந்தான். மெதுவாக நடந்து, தன் வாகனம் நிற்கும் இடத்திற்கு வந்தான்.
மஹிந்திரா தார்!
இவனது விருப்பமான வாகனம்! காடு மலை என்று சுற்றித் திரிபவனுக்கு ஏற்ற வடிவமைப்பு கொண்ட வாகனம்!!
அடுத்த இரண்டு மணி நேரத்தில் வீட்டில் இருந்தான்.
சிவபாண்டியன் வீடு!
அடுக்குமாடி குடியிருப்பு. ‘மஹிந்திரா தாரை’ நிறுத்துமிடத்தில் விட்டுவிட்டு, வீடு இருக்கும் தளத்திற்குச் சென்றான். ‘மகன் வருவான்’ என்று தெரியும் என்பதால், வீட்டின் கதவு திறந்து இருந்தது.
“ம்மா” என்று சிவா உள்ளே வரவும், “வா கண்ணா” என்றார் வரவேற்பறையில் இருந்த செண்பகம். அடுத்த நொடியே, “சாப்பாடு எடுத்து வைகட்டுமா?” என்று கேட்டு எழுந்தார்.
“எடுத்து வைங்க ம்மா. குளிச்சிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு, அவனது அறைக்குள் புகுந்தான்.
மிகச் சிறிய அறைதான்! செவ்வக வடிவத்தில் இருந்தது.
வண்ண கூழாங்கற்கள் போடப்பட்டு கண்ணாடியால் மூடப்பட்ட தரை! அதன் ஒரு மூலையில் தரையோடு தரையாக இருந்த வெள்ளை நிற மெத்தை! அதன் நேர் எதிரே இருந்த சுவர் மேல், அடர்சிவப்பு நிற பலகை வைத்து, சிறு கருப்பு நிற தொட்டிகள்!
ஒவ்வொன்றிலும் விதவிதமான போன்சாய் மரங்கள்!
மெத்தையின் அருகே ஒரு கடற்பச்சை நிற, ‘சைடு டேபிள்’! அதில் விடிவிளக்கு மற்றும் அவனது புகைப்படம்!!
மற்றொரு ஓரத்தில்… அதே கடற்பச்சை நிறத்தில், பூந்தொட்டிகளுக்கு என்றே பிரத்யேக முக்கோண வடிவ அலமாரி! அதிலும் வகை வகையான செடிகள்!
ஒரு பக்க சுவர் முழுக்க முழுக்க கண்ணாடியால் ஆன கதவுகள், நேர்த்தியான வெள்ளை நிற திரைசீலைகளுடன்! சுவரில் ஆங்காங்கே இயற்கையைப் பற்றிய வாசகங்கள்.
இவ்வளவு சிறிய அறை என்று நினைக்கும் போதே… குளித்துவிட்டு வந்தவன், சன்னலைத் திறந்தான். ஒரு பெரிய பால்கனி முழுதும் விதவிதமான வண்ண, வடிவ தொட்டிகளில் போன்சாய் மரங்கள்.
தலையின் ஈரத்தைத் துடைத்துக் கொண்டே பால்கனி முழுவதும் வலம் வந்து, அனைத்து மரங்களிடமும் நலம் விசாரித்துக் கொண்டிருந்தான்.
“கண்ணா வந்து சாப்பிடு” என்று அம்மா கூப்பிடுவது கேட்டதும், “வர்றேன் மா” என்று அறையிலிருந்தே கத்தினான்.
அதன்பின்னும், இரண்டு மூன்று முறை செண்பகம் அழுத்தி அழைத்த பின்பே சிவா வெளியே வந்தான். அப்படி அவன் வரவேற்பறை வரும்போது இன்னும் இரண்டு பேர் இருந்தனர்.
“ப்பா, என்ன இந்த நேரத்தில வீட்டுக்கு வந்திருக்கீங்க?” என்று புன்னகையுடன் கேட்டபடியே அவர் அருகில் வந்தமர்ந்தான்.
“சும்மாதான்” என்றார் அந்த மனிதர் அமைதியாக!
இவர் மதியழகன்! சிவா தந்தை! திருமணம், பிறந்தநாள் என்று அனைத்து வித நிகழ்ச்சிகள் நடத்துவதற்கென பிரத்யேக திறந்தவெளி புல்வெளி அரங்கம் வைத்திருக்கிறார். சென்னையில் நான்கு இடங்களில் இது போன்ற ‘பார்ட்டி லான்ஸ்’ இவருக்குச் சொந்தமாக இருக்கிறது.
மிகவும் அமைதியான மனிதர். எதையும் வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார். தன் பிள்ளைகளின் விருப்பங்கங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்.
இதற்கிடையே அவர் அருகில் இருந்த பெண்ணைப் பார்த்து, ‘ஹாய்’ என்பது போல் சிவா கை அசைத்தான். அவளும் சிரித்தபடி கை அசைத்தாள்.
“சிவா ஒரு அலைன்ஸ் வந்திருக்கு” என்று மதி மெல்ல சொன்னார்.
“அம்மா சொன்னாங்கப்பா” என்றான் மகன்.
“ஓ” என்றதுடன் நிறுத்திக் கொண்டார். அவ்வளவுதான் அவர்கள் உரையாடல்! அதன்பின் அமைதிதான்!!
“சரி நான் கிளம்புறேன்” என்று எழுந்தவர், மகளைப் பார்த்தார்.
இவள் நளினி! சிவா தங்கை!!
சிவாவிற்கு தந்தையின் தொழிலில் துளியும் விருப்பமில்லை. நளினிக்கு அதற்கு நேர்மாறாக தொழிலில் மிகுந்த ஈடுபாடு உண்டு! அப்பா உழைப்பை அடுத்த இடத்திற்குக் கொண்டும் செல்லும் முனைப்போடு இருக்கிறாள் மகள்.
இப்போதெல்லாம் நிறைய நேரம் அப்பாவிற்கு ஓய்வு தந்துவிட்டு, அவர்களது தொழிலைக் கவனித்துக் கொள்கிறாள்.
தன்னைப் பார்த்த தந்தையிடம், “ப்பா, நீங்க கிளம்புங்க. நான் அண்ணாகிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வர்றேன்” என்றாள் ஆசையாக! அவர் யோசித்தார்.
“ப்பா, நீங்க பெங்களூர் லேண்ட் டாக்குமெண்ட் டீடெயில்ஸ் மட்டும் பாருங்க. மத்ததெல்லாம் நான் பார்த்துகிறேன். ரெனோவேஷன் வொர்க் இந்த வீக்ல முடிச்சிடலாம்” என்றாள்.
‘ம்ம்ம்’ என்று மகளிடம் தலையை ஆட்டி எழுந்தவர், “செண்பகம்! கிளம்புறேன்” என்று சமயலறயில் இருக்கும் மனைவியிடம் சொல்லும் போதே, “சிவாப்பா ஒரு நிமிஷம்” என்று செண்பகம் சொன்னார்.
மீண்டும் அமர்ந்தவர், “நீ போய் சாப்பிடு சிவா” என்றதும், சிவாவும் அவனது தங்கையும் சாப்பாட்டு மேசைக்குச் சென்றனர்.
“ம்மா, அப்பா வெயிட் பண்ணறாங்க. என்ன பண்றீங்க?” என்று நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டு நளினி கத்திக் கேட்டாள்.
“வந்துட்டேன்” என்று வெளியே வந்த செண்பகம், “வெயில் அதிகமா இருக்கு நளினி. அதான் மோர்” என்று மகளுக்குப் பதில் கூறி கணவரின் கைகளில் மோரைக் கொடுத்தார்.
அதை வாங்கியவர், “பொண்ணு போட்டோவை அவன்கிட்ட காட்டு” என்றார் மனைவியிடம் மெதுவாக. “என்ன சொல்றான்னு நீயே கேட்டுரு” என்று மோர் முழுவதையும் குடித்து முடித்தார்.
“கிளம்புறேன். ஈவினிங் வந்திடுவேன்” என்று மதியழகன் கிளம்பிச் சென்றார்.
அவர் கிளம்பியதும், “வேறேதும் வேணுமா?” என்று கேட்டுக் கொண்டே வந்து, செண்பகம் மகன் அருகில் அமர்ந்தார்.
“வேண்டாம்” என்றவன், “நீ ஆபீஸ் போகலயா” என்று தங்கையிடம் கேட்டுக் கொண்டே சாப்பிட்டான்.
“ரெண்டு பேரும் உன்னைப் பார்க்கிறதுக்குத்தான் வந்தாங்க கண்ணா” என்ற செண்பகம், “இவ உன்கூட கொஞ்ச நேரம் பேசிட்டுதான் போவா” என்றார்.
“அதலாம் விடுங்க மா, அண்ணாகிட்ட பொண்ணு போட்டோ காட்டினீங்களா?” என்று நளினி குதூகலமாகக் கேட்டாள்.
“இப்பத்தான வந்திருக்கான். இனிமேதான் காட்டணும்” என்றார் செண்பகம்.
“ம்மா” என்று சலித்துக் கொண்டே, “போங்க! போய் உடனே எடுத்திட்டு வாங்க” என்று உத்தரவு போல் சொன்னாள். இருந்தாலும், ‘எடுத்திட்டு வரவா?’ என்பது போல் செண்பகம் மகனைத்தான் பார்த்தார்.
‘எடுத்திட்டு வாங்க’ என்பது போல் மௌனமாகத் தலை ஆட்டினாலும், ‘இந்த தேன்பாவை எப்படி இருப்பாள்?’ என்ற கேள்வி அவன் இதயத்திற்குள் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது.
செண்பகம் எழுந்து சென்றதும், “பிரவீன் எப்ப வருவான்?” என்று இலகுவாகத் தன்னை மாற்றிக் கொள்ள ஒரு கேள்வி கேட்டான்.
“ஈவினிங் ஆயிடும். அப்படித்தான் சொல்லிட்டு போனாங்க”
பிரவீன் நளினியின் கணவன். ‘ஃபேஷன் போட்டோகிராபராக’ இருக்கிறான். ஒரே துறை என்பதால், பிரவீனுக்கும் சிவாவிற்கு நல்ல பழக்கம் உண்டு. துறை சார்ந்த விடயங்கள் நிறைய பேசிக் கொள்வார்கள்.
பிரவீன், நளினி வீடு இதே அடுக்குமாடி குடியிருப்பின் மற்றொரு தளத்தில் இருக்கிறது. இவர்கள் திருமணம் நடந்து முடிந்து எட்டு மாத காலமாகிறது. அன்றிலிருந்தே சிவாவிற்கு பெண் பார்க்க ஆரம்பித்தனர்.
அண்ணன் தங்கை பேசிக் கொண்டிருக்கையில்… செண்பகம் மணப்பெண் புகைப்படத்தை எடுத்து வந்து சிவாவிடம் கொடுத்தார். மேலும் பெண்ணைப் பற்றிய விவரங்கள் சொல்ல ஆரம்பித்தார்.
“பொண்ணு பாட்டி, கிருஷ்ணவேணி! பெரிய கிளாசிக்கல் சிங்கர். அப்பாவும் நானும் ஒரு தடவை அவங்க கச்சேரிக்கு போயிருக்கோம்னு நினைக்கிறேன். சரியா ஞாபகம் இல்ல! நிறைய அவார்ட் வாங்கிருக்காங்க. இவங்க ரொம்ப பாப்புலர்” என்று சொன்னார்.
“ஏன்? அண்ணாவும் நிறைய அவார்ட் வாங்கிருக்கான்” என்று நளினி சொல்ல, செண்பகம் மகனை நினைத்துப் பெருமித பட்டுக்கொண்டார். அதன் பிறகும் அவர் பேசினார். இதற்கிடையே புகைப்படத்தை வாங்கிய சிவாவின் கவனம் முழுதும் அதில் இருக்கும் காரிகை மீதே இருந்தது.
வீணை மீட்டிக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம். ஆரஞ்சு வர்ண பார்டர் வைத்து கடற்பச்சை நிறத்திலான புடவை! மயில் வடிவத்தில் நகைகள்!
கானகம் மட்டும் கவர்ந்திழுக்கும் ஒருவனைக் கானக்குயில் கவர்ந்திழுத்தது. வீணை நரம்புகள் மீட்டுவது போல் இருந்தவளிடமிருந்து, சிவா தன் விருப்ப நரம்புகளை மீட்டுக் கொண்டு வந்தான்.
கொஞ்சம் கடினம்தான்! ஆனால் முயற்சித்து நிகழ்கணம் வந்துவிட்டான்!!
அப்படி வரவும், “பொண்ணு என்ன பண்றாங்க?” என்று கேட்க, “கிளாசிக்கல் சிங்கர்” என்று நளினி பதில் சொல்ல, “ம்” என்றவன், “என்னோட வேலையைப் பத்தி சொல்லிட்டீங்களா?” என்று கேட்டான்.
இந்தக் கேள்வி கேட்க காரணம் இருக்கிறது. நிறைய வரன்கள், ‘ஏன் அப்பா தொழிலை பார்க்கவில்லை’ என்று இவனை மறுத்ததினால்!
“சொல்லியாச்சு! இதுவரைக்கும் அவங்க எதும் சொல்லல” என்று செண்பகம் சொல்ல, “அதை விடுண்ணா! உனக்குப் பிடிச்சிருக்கா?” என்று அண்ணனின் மனதைக் கணித்து தங்கை கேட்டாள்.
“கொஞ்சம் அவனை யோசிக்க விடு” என்று செண்பகம் இடையில் வந்தார்.
“யோசிக்கவே வேண்டாம். ரொம்ப பிடிச்சிருக்கு” என்று வெளிப்படையாக சொன்னதும், இருவரும் அவனை வித்தியாசமாகப் பார்த்தனர்.
“அப்ப உடனே மேரேஜா?” என்று நளினி அடிதடியான குரலில் கேட்க, “அவங்க வீட்ல ஜாதகம் பார்த்திட்டு சொல்றோம்னு சொன்னாங்க” என்று செண்பகம் சொன்னதும், “ஓ…” என்று அடங்கிவிட்டாள்!
“இது வேறயா?” என்று சிவா சலித்துக் கொண்டான்.
“இங்க பாரு கண்ணா நீ நம்பலைனா விடு. அதுக்காக எங்க நம்பிக்கைய எதும் சொல்லாத” என்று செண்பகம் அழுத்தமாகச் சொன்னதும், “ராங் பிலிஃப். ஒன்னும் சொல்றதுக்கில்லை” என்று கை கழுவச் சென்றான்.
நளினி, “ஓகேம்மா. லேட்டாகிடுச்சி. கிளம்புறேன்” என்று எழுந்தவள், “அண்ணா பை!” என்று சத்தமாகச் சொல்லிவிட்டு, கார் கீயை எடுத்துக் கொண்டாள்.
“பார்த்துப் போ” என்றவர், மகளை வழியனுப்ப வாசல் வரை சென்றார். “ம்ம் பை” என்று அவள் வெளியே செல்லும் போதே, “பை நளினி” என்றான் சிவாவும் வெளியே வந்து!
“பை” என்று அவசரமாக போகிறவளைப் பார்த்தவனிடம், “பெங்களூர்ல புது ப்ராஜெக்ட் ஆரம்பிக்கிறா. வேலை ஜாஸ்தி. உன்னை பார்க்கிறதுக்குத்தான் வந்திட்டு போறா” என்று காரணம் சொன்னார் செண்பகம்.
“நீ ரெஸ்ட் எடுக்கிறியா?” என்று மகனிடம் கேட்டார்.
“இல்லம்மா. பால்கனிய கொஞ்சம் பார்க்கணும்” என்றவன், “நீங்க” என்றான்.
“வேலை இல்ல கண்ணா! போட்டோ பார்க்கிறேன்” என்றதும், சிவா சிரித்துக் கொண்டே, “சரி வாங்க” என்று தன் அறைக்குக் கூட்டிச் சென்றான்.
சிவா அறை பால்கனியில் ஒரு நாற்காலியில் செண்பகம் அமர்ந்தது ஐபேடில் மகன் எடுத்தப் புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்தார்.
சிவா, பால்கனி போன்சாய் மரங்களைப் பராமரிக்க ஆரம்பித்தான். ஷார்ட்ஸ் பாக்கெட் முழுவதும்… இடுக்கி, இலை வெட்ட சிறிய கத்தரிக்கோல்கள், சின்ன கலவை மற்றும் மண் கரண்டிகள், உள்ளங்கை அளவில் அரிவாள்கள்… இப்படி வைத்திருந்தான்!
நிறைய நாட்கள் பயணங்களிலே கழிப்பவன். வீட்டிற்கு வரும் வேளைகளில் இப்படிப் பராமரிப்பு பணிகளில் இறங்கி விடுவான். அவன் வீட்டில் இல்லாத நாட்களில், இவற்றையெல்லாம் செண்பகம் பார்த்துக் கொள்வார்.
புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர், “இது என்ன? மரப்பட்டை கலர் கலரா இருக்கு” என்று கேட்க, அருகில் வந்து பார்த்தவன், “ரெயின்போ யுக்லிப்பட்டஸ்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
“ஓ!” என்று மீண்டும் படங்களைப் பார்த்தவர், “அப்புறம் கண்ணா! ஆப்பிள் போன்சாயில ரெண்டு ஆப்பிள் வந்திருக்கு. பார்த்தியா” என்றார்.
“குளிச்சிட்டு வந்ததும் பார்த்தேன்” என்று சொல்லியபடியே ஒரு போன்சாய் மரத்தின் நுனியை வெட்டிவிட்டான்.
“ம்மா, இது கொஞ்சம் வாடின மாதிரி தெரியுது” என்றான் செர்ரி ப்லோஸோம் போன்சாயைப் பார்த்து!
“அப்படியா? நீ சொன்ன மாதிரிதான மெயின்டெய்ன் பண்ணேன். மாய்ஸ்ச்சர் இருக்க மாதிரி பார்த்துக்கிட்டேன். லீப்ஸ்ல மிஸ்டிங் பண்ணிருக்கணுமோ? சன் லைட் ரொம்ப பட்டிருச்சோ?” என்று காரணங்கள் அடுக்கினார்.
இதுவும் செண்பகம்! புத்தக அனுபவம் இல்லையென்றாலும் புத்திரன் வழியே வந்த அனுபவம் நிறைய! தான் சென்ற இடங்கள், கற்றுக்கொண்ட விடயங்கள் பற்றி ஒன்றுவிடாமல் அம்மாவிற்கு சொல்லி கொடுப்பான். அதிலும் காடுகள், மரங்களை பற்றி நிறைய!
“ரீபாட் [Re Pot] வேணா பண்ணிப் பார்ப்போம்” என்றான்.
“ம்ம், சிவா இன்னொரு விஷயம். ரெண்டு லேண்ட் வந்திருக்கு கண்ணா. ஒன்னு சிவகங்கையில. மதுரையில இன்னொன்னு. புரோக்கர் வழியாத்தான் வந்தது. விசாரிச்ச வரைக்கும் சிவகங்கை லேண்ட் நாம நினைக்கிற மாதிரி இருக்கும்”
“சரிம்மா! பார்க்கலாம்” என்றதோடு விட்டுவிட்டான்.
அடுத்த புகைப்படத்தைப் பார்த்தார். மேலே நீலவானம்! ஆரஞ்சு நிற மண் அடுக்கு! கிழே வெள்ளை களிமண்! அதில் ஒன்றிரண்டு காய்ந்த மரங்கள். அதைப் பார்த்ததும், “இது நல்லா இருக்கு கண்ணா” என்று சொல்லி மகனிடம் காட்ட, எக்கிப் பார்த்தவன் சிரித்துக் கொண்டான்.
இது அம்மா, மகனுக்கான நேரம்! எப்போதெல்லாம் வீட்டிற்கு வருகின்றானோ அப்பொழுதெல்லாம் இப்படித்தான் இவர்கள் இருவரின் நேரங்கள் கழியும்!!
புகைப்படங்களைப் பற்றி சிவா பேசுவதைக் கேட்க செண்பகத்திற்கு மிகவும் பிடிக்கும். இவருக்கு மட்டுமல்ல! இந்த வீட்டிலுள்ள மற்ற இருவருக்கும்தான்!!
“கண்ணா இது என்ன?” என்று கேட்டதும் அருகில் வந்து பார்த்தவன், “ஹனி லோகஸ்ட்” என்றான். மேலும், “நார்த் அமெரிக்கா போறப்ப எடுத்தது” என்று சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கச் சென்றான்.
“இதே பேமிலி பிளாக் லோகஸ்ட் நம்மகிட்ட இருக்கோ” என்று செண்பகம் கேட்க, “ஆமா ம்மா” என்று சொன்னவனுக்கு சட்டென வேலை தடைபட்டது.
‘ஹனி லோகஸ்ட்’ என்ற மரத்தின் பெயர் சொன்னதும், சம்பந்தமே இல்லாமல் ‘தேன்பாவை’ என்ற பெயர் நியாபகத்திற்கு வந்தது.
‘என்ன இது? ஏன் இப்படி சம்பந்தமில்லாமல்?’ என்று அவன் மூளை யோசிக்க, சம்பந்தம் இருக்கிறது என்று மனம் சொன்னது. தடதடக்கும் மனம் சொன்னது புரிய, தலையில் தட்டிக் கொண்டு தனிமையில் சிரித்துக் கொண்டான்.
அவன் மனம் சொன்னது, ‘தேன்’ என்ற சொல்லின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘ஹனி’ என்பதே!

