Kathambari Novels
அத்தியாயம் – 12
அதிர்ச்சியிலிருந்து மீண்ட மைக்கேல் தனத்தைப் பார்த்து, “என்ன தனம் இங்கே நிக்கிற? போகலையா?” என்று கேட்டான்.
“போனேன். ஆனா இந்தப் புக்-க கொடுக்கலாம்னு வந்தேன்” என்று பொக்கிஷப் பேழை புத்தகத்தைக் காட்டினாள்.
“சரி கொடுத்திட்டு வா” என்று மைக்கேல் நழுவப் பார்க்க, “நில்லு” என்றாள் தனம் அழுத்தமாக.
அவனும் நின்றான்!
“நான் வந்தது நல்லதுதான். நீங்க ரெண்டு பேரும் என்ன வேலை செய்றீங்கனு தெரிஞ்சிக்க முடிஞ்சது” என்று இருவரையும் குற்றம் சாட்டினாள்.
“தனம்… என்னை எதுக்கு இதுல சேர்க்கிற?” என்று ரோமியோ கோபப்பட்டான்.
மைக்கேலிற்கு, தானும் ரோமியோவும் பேசியதை தனம் கேட்டுவிட்டாள் என்று புரிந்தது. “தனம், அவனுக்கு எதுவும் தெரியாது” என்றான்.
“சரி, அவனை விடு. நீ ஏன் இப்படிப் பண்ண?” என்றாள் தனம் பட்டென்று.
“நான் சொல்றத பொறுமையா கேளு” என்று, மைக்கேல் அவளருகில் சென்றான்.
அக்கணம் ஸ்வீட் ஹார்ட் ரோமியோ அருகில் வந்து, “என்னாச்சு?” என்று கேட்க, “நீ பேசாம இரு. அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை” என்றான்.
இதைக் கேட்ட தனம், “பிரச்சனைக்கு காரணமே நீதான்” என்று ரோமியோவை நோக்கிப் போகப் போனாள்.
“வேண்டாம் தனம். இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” – ரோமியோ.
“தனம் நீ என்கிட்ட பேசு” என்று மைக்கேல் தனத்தின் கை பிடித்து நிறுத்தினான்.
“நானா போயிருந்தாலும் காயின எடுத்திருப்பேன். உன்னய நம்பி… ச்சே” என்று அவனது கையைத் தட்டிவிட்டாள்.
“தனம்… அவன் என்னோட உயிரை காப்பாத்திருக்கான். அதனால… “
“அதுக்கு நீ ஏதாவது பண்ணு. ஏன் என்னோட ஆசையில் விளையாடுற? உனக்கு என் ஆசை என்னன்னு தெரியும்ல. அப்புறமும் ஏன் இப்படிப் பண்ண?” என்றவள் குரல் கரகரத்தது.
“புரிஞ்சுக்கோ தனம்” – மைக்கேல்.
தனம் பேசாமல் நின்றாள். ஸ்வீட் ஹார்ட், “உங்க ஆசை என்ன சிஸ்டர்” என்றாள்.
“இதோ நிக்கிறானே! இவனுக்குத் தெரியும். கேளு சொல்லுவான்” என்று தனம் மைக்கேலைக் காட்டினாள்.
“சொல்லுங்க ப்ரோ” – ஸ்வீட் ஹார்ட்.
“சிஸ்டர் அவ ஆசை என்னன்னா… நம்ம ஏரியா எப்படி இருக்கும்னு தெரியும்ல? சரியில்லாத ரோடு, தண்ணிக்கு வரிசை, நிறைய குடிசை வீடு, ரொம்ப கம்மி சம்பளத்தில மில்லுல வேல, நம்மள மாதிரி படிக்க முடியாத பிள்ளைங்க, அவ இதெல்லாம் மாத்தணும்னு நினைக்கிறா!”
“ஓ!”
“அதுக்குத்தான் கட்சில இருந்தா முடியும்னு நினைச்சு, கட்சியில சேர்ந்து வேலை பார்த்தா. ஆனா பெருசா எதுவும் செய்ய முடியலை. அதான் இந்தப் புதையல் கிடைச்சாலாவது… அத வச்சு… இதலாம் சரி பண்ணலாம்னு நினைக்கிறா” என்று தனத்தின் குறிக்கோளைச் சொன்னான்.
ஆம்! இதுதான் பிறகு சொல்லப்படுவதாக சொல்லப்பட்ட தனத்தின் குறிக்கோள். தான் வாழ்ந்த சூழலின், அவலநிலையை மாற்ற நினைக்கிறாள்.
“இனி எங்க சரி பண்ண முடியும்?” என்று தனம் நொந்து போய் சொன்னாள்.
“கவலைப்படாத தனம். கண்டிப்பா சாவி உனக்கு கிடைக்கும்” – மைக்கேல்.
“ஆமா சிஸ்டர்… உங்க ஆசை கிரேட். அதனால கண்டிப்பா சாவி உங்களுக்கு கிடைக்கும்” என்று ஸ்வீட் ஹார்ட்டும் நம்பிக்கை கொடுத்தாள்.
“தேங்க்ஸ்” என்றாள் தனம் பொதுவாக.
அதுவரை அமைதியாக அவர்கள் பேச்சைக் கேட்ட ரோமியோ, “நீ என்ன சொல்ல வர்ற ஸ்வீட் ஹார்ட்?” என்றான்.
“அவங்களோட ஆசை நியாயமானது இல்லயா ரோமியோ? கூரை வீடெல்லாம் மாறினா நல்லா இருக்கும்ல” – ஸ்வீட் ஹார்ட்.
“சரி… அப்போ என் ஆசை, அப்படினா சாவி எனக்கு கிடைக்க வேண்டாமா?” – ரோமியோ.
“அது… உ… உனக்கும் சாவி… உன் ஆசை… ” என்று ஸ்வீட் ஹார்ட் தடுமாறினாள்.
“சொல்லு ஸ்வீட் ஹார்ட்”
“ரோமியோ! அவங்க ஒரு நல்ல விசயத்துக்காக வந்திருக்காங்க. அர்த்தமுள்ளதா இருக்கு. நீ பண்ணப் போறது… ம்ம்… எப்படிச் சொல்ல? லவ்வருக்கு அரண்மனை கட்டறது… அது… அது வந்து”
“பரவால்ல சொல்லு”
“அது கொஞ்சம் அர்த்தமில்லாம தெரியுது”
“ஓ! உனக்கு என்னோட லவ் அர்த்தமில்லாம தெரியுதா?”
“நான் உன்னோட லவ்வ சொல்லலை ரோமியோ” என்று திருத்தினாள்.
“வேற எதைச் சொல்ற தன்யா?” என்றான் ரோமியோ ஒருமாதிரிக் குரலில்.
உடனே தன்யாவின் கண்கள் கலங்க, உதடுகள் துடிக்க, “என்ன ரோமியோ என் பேர் சொல்லிக் கூப்பிடற?” என்றாள்.
“அதான உன் பேரு” என்று அவனும் கலங்கிப் போய் பேசினான்.
“இனி எப்பவும் ஸ்வீட் ஹார்ட்டுன்னுதான் உன்னை கூப்பிடுவேன்னு சொன்ன. இப்போ…” என்று வாக்கியத்தை முடிக்க முடியாமல் திணறிவிட்டு, “நான் உன் லவ்வ சொல்லலை ரோமியோ. புரிஞ்சிக்கோ” என்றாள்.
“உனக்காக நான் பண்ற எல்லா விஷயமும், எனக்கு லவ்தான் தன்யா” என்று அவனும் அவள் சொன்ன சொல்லிற்காக வருத்தப்பட்டான்.
தன்யா அழ ஆரம்பித்திருந்தாள்.
அவள் அழுகிறாள் என்று தெரிந்தும், “மைக்கேல் வாடா கொஞ்ச தூரம் நடந்து பார்க்கலாம்” என்றான் ரோமியோ. மைக்கேல் தனத்தைப் பார்த்தான். அவளோ முகத்தைக் கோபத்தில் திருப்பிக் கொண்டாள். வேறு வழியில்லாமல் மைக்கேல் ரோமியோவுடன் சென்றான்.
ஸ்வீட் ஹார்ட், “ரோமியோ, ஸாரி ரோமியோ. நான் உன் லவ்வ சொல்லல” என்று சொல்லிக் கொண்டே, அவன் பின்னே நடந்தாள்.
ரோமியோவும் மைக்கேலும் முன்னே சென்றனர். தன்யாவும் தனமும் பின்னே வந்தனர். மைக்கேலைத் தவிர யாரும் சகஜ நிலையில் இல்லை.
சற்றே சற்று தூரம் நடந்தார்கள். பாதைகள் மாறத் தொடங்கின. அங்கங்கே சிறிய கற்பாறைகள் இருந்தன. அவை அனைத்தும் அந்த மாயப் பெண்ணின் ஆடை வண்ணத்தில், அதாவது பச்சை நிறத்தில் இருந்தன.
மேலும் ஒவ்வொரு கற்பாறையிலும் சிறு சிறு சிவப்பு நட்சத்திரங்கள் மின்னி மின்னி மறைந்தன. இடையிடையே மஞ்சள் வர்ண முற்செடிகள். மேலும் ராட்சத வேர்கள், அந்தப் பகுதி முழுவதும் பரவியிருந்தன. இவ்வளவு வேர்கள் தெரிந்தன! ஆனால் மரம் எங்கே எனத் தெரியவில்லை!!
முட்கள் உடலில் எங்கும் படாமலும், மினுங்கும் நட்சத்திரத்தை மிதிக்காமலும் கவனமாக நடந்தார்கள். அவர்களது இலக்கு சில அடி தூரத்தில் உள்ள ராட்சத மயில் பீலி. இதைப் புத்தகத்தில் ஏற்கனவே ரோமியோ பார்த்திருந்தான்.
வியர்வை வழிய வேர்களின் ஊடே நடந்தவர்கள், ஒரு இடத்தில் நின்றார்கள்! ஏனெனில் அவர்கள் நின்ற பகுதியின் இடப்புறம்தான், அவர்களது இலக்கான ராட்சத மயில் பீலி இருந்தது!!
பிரமாண்ட மயிலின் கழுத்துப் பகுதி. அதன் தலையில், அகன்று விரிந்த நிலம் இருப்பது தெரிந்தது. அதில் என்னென்ன இருக்கிறது என்று கீழிருந்து பார்க்கத் தெரியவில்லை.
தடித்திருந்த மயிலின் கழுத்துப் பகுதியில் ஓவியங்கள் தங்க நிற கம்பிகளால் வரையப்பட்டிருந்தன. அந்த ஓவியங்கள் அனைத்தும், இதுவரை கடந்து வந்த பாதையின் வரைபடங்களாகவே இருந்தன.
மயில் கழுத்தின் ஊடேயும் பழுப்பு நிற வேர்கள் நெளிந்து, சுருண்டு, வளைந்து, வளர்ந்திருந்தன. மேலும் மேற்புறம் இருந்த நிலப்பரப்பின் விளிம்புகளிலிருந்து ராட்சத மயில் பீலிகள் தொங்கிக் கொண்டிருந்தன.
மிகத் தடித்த வெள்ளிக் கம்பி, தங்க நிறத்தில் கண் பகுதி. இதுதான் ஒவ்வொரு பீலியின் வடிவமைப்பு. காற்றினால் அவைகள், அங்கும் இங்கும் ஆடி வந்தன. அதைப் பற்றிக் கொண்டுதான் மேலே செல்ல வேண்டும் என்று தோன்றியது.
எல்லோரும் மயிலின் பிரமாண்டத்தைப் பார்க்கும் போது, ரோமியோ கண்களில் ஆண் பொம்மை ஒன்று விழுந்தது. அவன் இடுப்பு உயரத்திற்கு இருந்தது. மற்றும் அது பல வண்ண கூலாங்கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதைப்பற்றி பெரிதாக யோசிக்காமல், ரோமியோ ஏறுவதற்கு தயாரானான்.
“மைக்கேல், இந்த பீலியை பிடிச்சுதான் ஏறனும். நான் ஏறப் போறேன்டா. நீ வர்றீயா?” – ரோமியோ.
“நீ போ. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்” – மைக்கேல்.
“ரோமியோ என்னையும் கூட்டிப் போ. எனக்குத் தனியா வரத் தெரியாது” என்று தன்யா கண்கள் கலங்க கேட்டுப் பார்த்தாள்.
ரோமியோ பதில் பேசவில்லை.
“ரோமியோ சிஸ்டர் கூட பேசுடா” என்று மைக்கேல் சொன்னான்.
அந்தக்கணம் யார் சொல்வதையும் கேட்கும் மனநிலையில் ரோமியோ இல்லை. காற்றின் திசையை எதிர்த்து, மயில் பீலியைப் பிடித்து, மிகுந்த பிரயத்தனம் செய்தே மேலே ஏறிப் போய்விட்டான்.
கரடுமுரடான வேர்களின் மேல் அமர்ந்து தன்யா அழுது கொண்டே இருந்தாள். அவள் அருகில்தான் ரோமியோ பார்த்த அந்த ஆண் பொம்மை கிடந்தது. அதை அப்போது அவள் கவனிக்கவில்லை.
தனத்திற்கும் மைக்கேலுக்கும் அவளைத் தனியே விட்டுச் செல்ல மனதில்லை. எனவே அவளருகில் அமர்ந்தனர்.
மேலே சென்ற ரோமியோ, அங்கே என்ன இருக்கிறது என்று பார்க்காமல், கீழே பார்த்தான். தன்யாவுடன் மைக்கேலும் தனமும் இருப்பது தெரிந்தது. அதையும் தாண்டி, தன்யா அருகில் இருந்த அந்தப் பொம்மை அவன் கண்களில் விழுந்தது.
அந்தப் பொம்மையைப் பார்த்தால், விடுதியில் பார்த்தப் பெரியவரின் இளைய பருவத்தின் தோற்றம் போல இருக்கிறதோ என்று தோன்றியது. பின், ‘ச்சே, அவர் எப்படி? இது வீணான கற்பனை’ என்று நினைத்துக் கொண்டான்.
கீழே… தன்யா அழ ஆரம்பித்திருந்தாள்.
“சிஸ்டர் அழாதீங்க” – மைக்கேல்.
“ரோமியோ இப்படிப் பண்ணவே மாட்டான் ப்ரோ”
“நீங்க ஏன் இவளுக்கு சப்போர்ட் பண்ணிப் பேசினீங்க?” – மைக்கேல்.
“அவ ஒருத்தியாவது எனக்கு சப்போர்ட் பண்ணட்டுமே” என்று தனத்திடமிருந்து பட்டென்று பதில் வந்தது.
மைக்கேல், “ம்ப்ச்” என்று எரிச்சல் கொண்டான்.
“ப்ரோ, எனக்கு சிஸ்டரோட ஆசை பிடிச்சிருக்கு. அதுக்கு காரணமும் இருக்கு”
“என்ன காரணம்?” – தனம்.
தன்னைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள். “எனக்கு அம்மா மட்டும்தான். வீட்ல கொஞ்சம் கஷ்டம்தான். அதனால ரெண்டு பேரும் மில்லு வேலைக்கு போவோம். எங்க வீடும் கூரை வீடுதான்.
ஒரு தடவை நம்ம ஏரியால நடந்த தீ விபத்தில, எங்க வீடு முழுசா எரிஞ்சிடுச்சு. அதுல அம்மா இறந்திட்டாங்க… எனக்கும் தீக்காயம்” என்று கேவல்களுடன் பேச்சை நிறுத்தினாள்.
“அழாதீங்க சிஸ்டர்” என்று மைக்கேல் சமாதானப் படுத்தினான்.
“ஓ! அதான் புக் எரியறப்ப ரொம்ப பயப்படுறியா?” – தனம்.
“ம்” என்று தன்யா மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள். “நான் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருந்தேன். அப்போ உங்க கட்சி ஆளுங்க வந்து எல்லாரையும் பார்த்தாங்க. அப்போ ரோமியோவும் வந்திருந்தான்” என்று மீண்டும் கண்ணீர் வடித்தாள்.
“அழாம சொல்லு” என்றாள் தனம்.
“ஆனா ரோமியோ அடுத்த நாளும் வந்தான். என்னய யாரும் கவனிக்க இல்லனு தெரிஞ்சதும், என்கூடவே இருந்து கவனிச்சிக்கிட்டான்”
“சரி”
“கடைசி, டிஸ்சார்ஜ் ஆகிறப்ப, நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டான். எனக்கும் ரோமியோவ ரொம்ப பிடிச்சிருந்தது”
“அதனால கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க. கரெக்டா?” – தனம்.
“ம்ம்ம், அவங்க அம்மாகிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்”
“இவ்வளவுதானா? ஏதோ பெருசா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிருப்பான்னு நினைச்சேன் நான்” – தனம்.
“என்ன சிஸ்டர் இப்படிச் சொல்றீங்க?” என்று ஏற்கனவே குழம்பி இருந்த தன்யா, மேலும் குழம்பினாள்.
“தெரியலை. யாருமே இல்லனு உன்மேல பரிதாப பட்டிருப்பான்னு… எனக்குத் தோணுது” என்று தனம் எழுந்தாள்.
‘ஒருவேளை தனம் சொல்வது போல இருக்குமோ?’ என்று தன்யா வருத்தப்பட ஆரம்பித்தாள்.
“சரி நான் மேல போகப் போறேன். நீ வர்றீயா?” – தனம்.
“இல்லை சிஸ்டர்”
மறுமுறை தனம் கேட்கவில்லை. மேலே ஏறிச் செல்லக் கிளம்பினாள்.
கலக்கம், கண்ணீர், குழப்பம் என்றிருந்த தன்யாவிடம், “சிஸ்டர், ரோமியோ பத்தி எனக்கு நல்லா தெரியும். தனம் சொல்ற மாதிரிலாம் கிடையாது” என்று மைக்கேல், அவளைத் தேற்ற நினைத்தான்.
கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, “ம்ம்ம்” என்றாள்.
“எதயும் போட்டுக் குழப்பிக்காதீங்க. வாங்க, நான் மேல கூட்டிட்டுப் போறேன்”
“இல்லை இங்கேயே இருக்கேன்”
“பாருங்க சிஸ்டர், அப்படிலாம் தனியா விட்டுட்டுப் போக முடியாது. நமக்கு இந்த இடத்தைப் பத்தி என்ன தெரியும் சொல்லுங்க? எப்போ என்ன ஆபத்து வருமோ?”
“எனக்கு இதுல ஏறவே பயமா இருக்கு”
“அதான் சொல்றேன் நான் ஹெல்ப் பண்றேன்னு”
“வேண்டாம் ப்ரோ… நான் இங்கயே இருக்கேன். ரோமியோ வந்து என்னைய கூட்டிட்டுப் போவான்”
“அடம்பிடிக்கிறீங்க. நானும் இங்க இருந்திடுவேன். ஆனா தனத்தை சமாதானப் படுத்தணும். அதான்…”
“நீங்க போங்க ப்ரோ. எனக்கு ஒன்னும் பயமில்லை”
“நிஜமா”
“ம்ம்ம்”
மிகுந்த யோசனைக்குப் பின், “சரி. நாங்க திரும்பி வர்ற வரைக்கும் இங்கேயே இருக்கணும். வேற எங்கேயும் போகக் கூடாது” என்று கேட்டுக் கொண்டான்.
“ம்ம்ம் சரி ப்ரோ”
கடைசியில் மைக்கேலும் அவளைத் தனியாக விட்டுச் சென்றான்.
கீழே… தன்யா தனியாக அமர்ந்திருந்தாள். அனைவரும் சென்ற பின்னரே, அந்த இடத்தின் பயங்கரத்தை உணர்ந்தாள். சற்றுநேரத்தில் மழை வேறு பெய்ய ஆரம்பித்தது. அது இன்னும் சூழலை பயங்கொள்ளச் செய்தது.
அருகில் கிடந்த அந்த மண் பொம்மை, ராட்சச வேர்கள்… மழையினால் அதன் இடுக்குகளிலிருந்து ஓடும் தண்ணீர், கத்திரி நிற ஒளிக்கற்றை… மஞ்சள் நிற முற்செடிகள்… காற்றில் ஆடும் ராட்சத மயில் பீலீ… எல்லாம் பார்க்கப் பார்க்க தன்யா பயந்து நடுங்கினாள்.
அங்கே ரோமியோவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. அதிலும் தனம், மைக்கேல் மேலே வந்த பின் அவனால் நிம்மதியாக இருக்க இயலவில்லை. ஸ்வீட் ஹார்ட் எப்படித் தனியாக இருப்பாள் என்று தோன்றிய அடுத்தநொடியே மேலேயிருந்து கீழே பார்த்தான்.
பார்த்தவனுக்கு அதிர்ச்சி! அவனது ஸ்வீட் ஹார்ட் அங்கே இல்லை!! அது மட்டும் இல்லை, அவளருகில் கிடந்த அந்தப் பொம்மையும் இல்லை! பதறியது அவன் நெஞ்சம்! ‘வருத்தப்படப் போற என்று அவளிடம் சொன்ன நான்தான் வருத்தப்பட போகிறேனா?’ என்று மனம் பயப்பட்டது.
‘அந்தப் பொம்மை… மாயப் பொம்மையா? அதைச் சரியாகக் கவனித்திருக்க வேண்டுமோ?’ என்று தோன்றவும் உடல் நடுங்கியது. ‘என்னவாயிருக்கும் ஸ்வீட் ஹார்ட்டுக்கு?’ என்று நினைக்கையில் ரோமியோவிற்கு உயிரே போனது.
ஸ்வீட் ஹார்ட்டிற்கு??

