Kathambari Novels
அத்தியாயம் – 9
அவன் கோடிட்டுக் காட்டிய காதலை, கொண்டாடிட வழியின்றி கோழையாக அமர்ந்திருந்தாள். யோசிக்க சொன்னவனின் யோசனையிலே உறங்கியவள், அவனைத்தவிர யோசிக்க வேறு ஒன்றுமில்லை என்ற நிலையில் எழுந்தாள்.
மூன்றாவது நாள்!
இன்னும் மூன்று தினங்களை எப்படி நெட்டித் தள்ளுவது என்று நினைத்தாள். அவன் மனம் புரிந்தது போய்… அவளின் மனநிலையும் புரிந்தது. அங்குதான் சிக்கல்! நடைமுறைக்கு இது ஒத்து வருமா என்றொரு எண்ணம்… கேள்வி!
அவள் நினைத்திருந்தால், ‘போகிறேன்’ என கிளம்பியிருக்க முடியும். ஆனால் அப்படி ஒரு எண்ணத்தை அவள் சட்டை செய்யவேயில்லை. அவனைப்போல எதிர்காலம் பற்றி யோசிக்காமல், நிகழ்காலத்தில் வாழலாம் என நினைத்து, ‘இன்று எப்படியெல்லாம் காதல் காட்ட போகிறான்?’ என அவனைப் பார்க்கத் தயாரானாள்!
அன்று மயில் கழுத்து நிறத்தில் புடவை கட்டி இருந்தாள். வெளியே வந்தவள், அவனுடன் அமர்ந்து காலை நேர உணவு உண்ணுகையில், “உன்கிட்ட ஒன்னு கேட்பேன். நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காம, பதில் மட்டும் சொல்லு” என்றாள்.
“கேளு”
“உங்க பாட்டி எப்படி சமைப்பாங்க?”
அவன் நன்றாகவே சிரித்தான்.
“ஏன் சிரிக்கிற?”
“எனக்கு டேரைக்டா கொஸ்டின் கேட்டாதான் ஆன்சர் பண்ண தெரியும். இந்தமாதிரி இன்டேரைக்டா கொஸ்டின் கேட்டா… ம்… கஷ்டம்”
“இதிலென்ன உனக்கு கஷ்டம்?”
“இதுல இன்னொரு கேள்வி மறைஞ்சி இருக்குது”
“என்னது?”
“எனக்கு எந்த மாதிரி சாப்பாடு பிடிக்கும்னு கேட்கிற? கரெக்டா?”
“ச்சே ச்சே”
“நேத்து நைட் நான் சொன்னேன்ல… எனக்கு எங்க பாட்டி சமைக்கிறதுதான் பிடிக்கும்னு. ஸோ, உன்னோட கேள்வி இதுதான். பட் என் பாட்டி சமையல நீ கத்துக்கிறதுக்கு அஞ்சு நாள் போதாது. குறைஞ்சது 27500 நாளாகும்“
“அப்படினா எனக்கு வயசாகிரும்!”
“ரியலி! என்ன பண்றது? பேசாம, அத்தனை நாளும் நாம கோவாவை சுத்திப் பார்க்கலாமா?” என கேட்டு அவளைப் பார்த்தான். அவளும் பார்த்தாள். அந்த நீலவிழிகளில் இன்று மட்டுமல்ல… நரை தோன்றிடும் மூப்பிலும் அந்த பழுப்பு விழிக்கான காதல் காண்பிக்கப்பட்டது!
“இன்னைக்கு எங்க போறோம்?” என்றாள் அவனைத் திசை திருப்பும் வகையில்!
“டாப்பிக்க சேஞ்ச் பண்ணாத”
“அப்படியெல்லாம் இல்ல. எதாவது ஒரு கேள்விக்காவது பதில் சொல்லு”
“பீச்”
“ஏற்கனவே பீச் பார்த்தாச்சில. வேற இடத்துக்குப் போகலாமே?” என்றாள்.
“இம்பார்ட்டன்ட் வொர்க். ஒன் ஹவர்தான். முடிச்சிட்டு வேற இடத்துக்குப் போகலாம்”
“போரடிக்க போகுது” என்று முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாள்.
“உன்னை கண்டிப்பா அங்க கூட்டிட்டுப் போகனும்னு நினைக்கிறேன். ஸோ கொஞ்சம் சிரிச்சிக்கிட்டே வர்றியா?” என்றான். அந்த கடற்கரையில் ‘அப்படி என்ன இருக்கிறது?’ என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தாள்.
சிறிது நேரம் கார் பயணத்திற்குப் பிறகு கடற்கரை வந்தனர். இதன் பெயர் அஞ்சுனா கடற்கரை (Anjuna Beach)! அதிக கூட்டம் இல்லாமல் இருக்கும். வெண்மணல் பரப்புகளும், தரை தெரியும் தெளிவான கடல்நீரும் இதன் சிறப்பு அம்சமாகும்.
அங்கே வந்தடைந்தபின் காரை நிறுத்தி விட்டு, அவளைக் கூட்டிக்கொண்டு, கடற்கரை சாலையிலிருந்து சற்று தொலைவில் இருந்த, பெரிய ரிசார்ட்டை நோக்கிக் கூட்டிச் சென்றான்.
ரிசார்ட்டை அடைந்த பின்னும், ‘ஏன் இங்கே அழைத்து வந்திருக்கிறான்?’னு என்று அவளுக்குப் புரியவில்லை. “இங்க என்ன வேலை?” என்று அவனிடம் கேட்டாள்.
ஆனால் அவன் பார்வையில் ‘இதற்கான பதில் ஏற்கனவே சொல்லியாயிற்று’ என்று இருந்தது. சற்று யோசித்து, அவனோடு நடந்த முதல் சந்திப்பின் போது நடந்த பேச்சை நினைவுகூர்ந்தாள். பின் சந்தோஷ முகத்துடன், “இதான் புது பிசினஸ். சரியா?” என்றாள்.
“ஹண்ட்ரட் மார்க்ஸ்” என ‘ஹைஃபை’காக கைகளை உயர்த்த, அவள் அதில் அடித்துக் கொண்டாள். பின், “கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காத, கோபமும் படக்கூடாது. இது லீசுக்கு எடுத்ததா? இல்ல உன்னோட சொந்த ரிசார்ட்டா?” என்றாள் தயக்கத்துடன்.
“டூ மச்! இதைப்பத்தி உன்கிட்டதான் ஃபர்ஸ்ட் சொன்னேன். ஸோ உன்னதான் ஃபர்ஸ்ட் இங்க கூட்டிட்டு வரனும்னு நினைச்சேன்ல… என்னை சொல்லனும்” என்றான் கோபத்துடன்.
“சரி சரி… நான் எதும் கேட்கலை. ஸாரி” என்றாள் சமாதனமாக!
“இது என்னோட ஓன் ப்ராப்பர்ட்டி. ஆல்ரெடி இங்க இருந்ததை வாங்கி, இப்ப ரெனவேஷன் வொர்க் போய்கிட்டு இருக்கு. வா, உள்ள போகலாம்”
“இரு. வெளிய இருந்து ரிசார்ட் எப்படி இருக்குனு பார்த்துக்கிறேன்” என்றாள், கனவுகளை எட்டிப் பிடித்த அவனது உழைப்பை ரசிப்பதற்காக!
கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. பழைய காலத்து குடில்கள், நவீன கால வசதிகளுடன் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது அந்தச் சொகுசு விடுதி!
ஆனால் அவளுக்கு வேறு ஒரு சந்தேகம் வர, “நீ ரெண்டு நாள் முன்னாடிதான சொன்ன, புது பிசினஸ் ஸ்டார்ட் பண்றேன்னு. அதுக்குள்ள எப்படி?” என்றாள்.
“ஒரு மாசத்துக்கு முன்னாடியே ரெனவேஷன் ஒர்க் ஸ்டார்ட் பண்ணிட்டேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி பண்ணது, டாகுமெண்ட் சைன் பண்ற வேலை மட்டும்தான். ஜஸ்ட் அஃபிஸியல் பார்ட்டி மாதிரி” என்றான் பெருமையாக.
அவள் அமைதியாக நின்றாள்! பின், “பத்து நாள் முன்னாடிதான் உன்னோட லவ்வர் பர்த்டே. அப்பவே இதுபத்தி சொல்லியிருந்தா, சண்டை போட்டிருக்க மாட்டீங்கள?” என்றாள் நியாயமாக.
“சொல்லிருக்கலாம். அப்படிச் சொல்லியிருந்தா, நான் உன்னைப் பார்க்கவே வந்திருக்க மாட்டேன்” என்று உண்மையைச் சொன்னான்.
“ஏன் வந்தோம்னு இருக்கா?” என்று கேள்வி கேட்டவளுக்கு, அவனிடமிருந்து தான் நினைத்த பதில் வரவேண்டும் என்று வேண்டினாள்.
“இல்ல, பட் வரலைனா?” என்று இடைவெளிவிட்டு, அவளைப் பார்த்தான்!
அவன் உருவாக்கிய வார்த்தைகளின் இடைவெளிக்கு இடையில், சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள்!!
“ம்… இன்னொரு நாள் சொல்றேன்” என்று முடித்தான்.
அவளுக்கோ, இந்தப் பதிலுக்கு இடைவெளிகளே பரவாயில்லை என்றிருந்தது!
“என்னாச்சி… வேற எக்ஸ்பெக்ட் பண்ணியா?”
“அப்படியெல்லாம் இல்ல. வா உள்ளயே போயிடலாம்”
“இதைத்தான் நான் முதலயே சொன்னேன். சரி வா” என்று சிரித்து அழைத்துச் சென்றான். உள்ளே நுழைந்து வந்து கொண்டிருந்தவளிடம், “பார்த்து வரணும். ஃபிளோர் மெட்டீரியல்ஸ் அப்படி அப்படியே கிடக்கு” என்று கூறிவிட்டு அவன் முன்னே நடந்து சென்றான்.
அங்கங்கே சிலர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவளின் புடவையின் கீழ்ப்பகுதி மரச்சட்டம் ஒன்றில் மாட்டிக்கொண்டது.
முன்னே சென்று கொண்டிருந்தவன் திரும்பி, ‘எங்கே அவள்?’ என்று பார்க்கும் போதுதான் தெரிந்தது… அவள் குனிந்து அமர்ந்து புடவையிலிருந்த சிக்கலை எடுக்க முயற்சி செய்து கொண்டிருப்பது. உடனே அவளை நோக்கி வந்தவன், அவளருகில் அமர்ந்து சிக்கலை எடுத்துவிட்டான்.
இருவரும் எழுந்தபின், “தேங்க்ஸ்” என்றாள், ஒரு சிறு புன்னகை தந்து!
“என்னோட கைப் பிடிச்சிக்கிட்டே வர்றியா? இல்லைனா இப்படி எங்கயாவது சிக்கி நின்னுடுவியோன்னு பயமா இருக்கு” என்றான் ஆழ்ந்த குரலில்.
எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்று நன்றாகவே அவளுக்குப் புரிந்தது! படையெடுத்து வரும் அவன் காதலை, இனி அவளின் மெளன கேடயங்களால் தடுக்க முடியாதோ??
அவனின் காதல் வசனங்கள், அவளுக்கு இப்பொழுது மனப்பாடமாயிற்று!
“இல்ல, நானே வர்றேன்” என்று ஒதுங்கிக் கொள்ள நினைத்தாள்.
“கூடவே வரனும்” என்று அவனது காதல் ஆசைகள் கொண்டு, அவளை ஆட்டிப்படைத்தான்.
“ம்ம்ம்” என்றவளின் ஆசைகள் துணிவின்றி துவண்டது.
சிறிது நேரத்திற்கு… ரிசார்ட்டின் ஒவ்வொரு இடத்திற்கும் அழைத்துச் சென்று, அவன் செய்யப் போகும் புதுமைகள், அடுத்தடுத்த கனவுகள் என்று அவளிடம் அடுக்கிக் கொண்டே போனான்.
அவளுக்கு ஒரு வழியை காண்பித்து, “இப்படிப் போனா ஸ்விம்மிங் பூல் வரும். பார்த்துக்கிட்டு இரு. பெயின்ட்டர்ஸ் வந்திருக்காங்க. அவங்ககிட்ட பேசிட்டு வர்றேன்” என்றான்.
அவளும், அவன் சொன்ன வழி சென்றாள். வட்ட வடிவ நீச்சல் குளம் இருந்தது. அதனைச் சுற்றி பாறைகள் போன்ற வடிவில் நாற்காலிகள் இருந்தது! அங்கே சென்று அமர்ந்து கொண்டாள்.
சிறிதுநேரத்திற்கு மனப்பறவை அங்கே இங்கே என கூண்டோடு பறந்துவிட்டு, அவன் இதயக்கூட்டில் வந்து சுதந்திரமாக அமர்ந்து கொண்டது. இவனை ஒரு நல்ல சந்தர்ப்பத்திலோ… இல்லை, தான் இப்படியொரு நிலையில் இல்லாமல் சந்தித்தாலோ… வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஏக்கம் எழுந்தது!
ஏனிந்த பிறப்பு என்ற எண்ணமும் வந்தது!!
சில வினாடிகளுக்குப்பின் அங்கே வந்தவன், “ஹே என்ன யோசிக்கிற? நேத்து நான் யோசிக்க சொன்னதையா?” என்றான்.
“ப்ச்” என்று அலுத்துக்கொண்டாள்.
“ஓகே… இப்ப எனக்கு பிடிச்ச ஒரு இடத்துக்குப் போக போறோம். எப்பெல்லாம் நான் ரிலாக்ஸா, ஹேப்பியா இருக்கணும்னு நினைக்கிறேனோ அப்பெல்லாம் அங்க போயிடுவேன். உன்னையும் அங்க கூட்டிட்டுப் போகனும்னு தோணுது” என்றான் அவளை ஆர்வ பார்வைப் பார்த்து!
“உன்னோட லவ்வரை கூட அங்க கூட்டிட்டுப்போய் இருக்கியா?” என்று, ஏதோ யோசனையுடன் கேள்வி கேட்டாள்.
“என்ன கேள்வினு இதைக் கேட்கிற? ஏன் அடிக்கடி ‘உன் லவ்வர்னு’ ‘உன்னோட லவ்வர்னு’ வேற சொல்ற? அதெல்லாம் முடிஞ்சிருச்சினு உனக்கு தெரியாதா? உன்கிட்ட நேத்து நான் போட்டோஸ் காட்டினதுக்கு காரணம், நீ பார்க்கிறப்ப, இடையில வேண்டாம்னு சொன்னா நல்லா இருக்காதுனுதான்.
அன்ட் என்னோட பாஸ்ட் பத்தி தெரியணும்னு நினைச்சேன். ஆனா அதையே சொல்லிக்கிட்டு, அங்கயே நின்னுகிட்டிருந்தா சீரியஸ்லி ஐ டோன்ட என்கரேஜ் இட். சுத்தமா பிடிக்காது” என்றான்.
திரும்பவும் ஏதோ யோசனையுடனே ’சரி’ என்பது போல் தலை அசைத்தாள்.
‘என்ன இது? இவ்வளவு பெரிய விஷயம் பேசறோம். இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் வருது’ என்று நினைத்தவன், “வேற ஏதாவது யோசிக்கிறீயா?” என்று சரியாக புரிந்து கேட்டான்.
“ச்சே ச்சே…இல்லை. இனிமே பேச மாட்டேன். கிளம்பலாமா?” என்று அவள் காதலை மட்டுமல்ல, கவலைகளையும் மூடி மறைத்தாள்.
“ம்ம்ம்… வா போலாம்” என்றான்.
அடுத்ததாக அவர்கள் சென்ற இடம் தூத்சாகர் நீர்வீழ்ச்சி!
நீர்வீழ்ச்சியின் அருகே செல்ல வேண்டுமென்றால் ஜீப்பில்தான் பிரயாணம் செய்ய வேண்டும். இரு இடங்களில் ஆற்றின் குறுக்கே சிறிய நீர்ப்பரப்பின் மேலே பயணிக்க வேண்டும். சற்றே ஆபத்தான பயணம்தான்.
காத்திருந்து, இருவரும் ஜீப் பயணத்தைக் கரடுமுரடான பாதைகளில் வழியே தொடங்கினர்
“இவ்ளோ கஷ்டப்பட்டு போணுமா?” என்றாள்.
“வொர்த்… நீயே சொல்லுவ பாரு”
சிறிது தூரம் சென்றதும் ஜீப் நிறுத்தப்பட்டது. அதன்பின் அங்கிருந்த கருப்பு பாறைகளிலும் மரப்பாலங்களிலும் சற்றுநேர நடை பயணத்திற்குப் பின்னர், நீர்வீழ்ச்சி கண்களுக்குள் விழுந்தது.
அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு ஆயிரம் அடி உயரம்! நுரைகளா? இல்லை நீரா? என சந்தேகிக்கும் அளவிற்கு இருந்தது நீர்வீழ்ச்சியின் வேகம்! அதனின் அடியில் ஆழமான நீர்த்தேக்கமும் இருந்தது. மக்கள் கூட்டத்தில் சிலர் நீந்திக் கொண்டும், சிலர் பாறைகளில் அமர்ந்து கொண்டும் இருந்தனர்!!
அவளோ அண்ணாந்து பார்த்தபடியே நின்றிருந்தாள். ஏனெனில் அங்கே இரு பெரிய மலைக் குன்றுகளை இணைத்துப் போடப்பட்டிருந்த தண்டவாளமும், அதில் அவ்வப்போது சென்று கொண்டிருந்தப் புகைவண்டியும்!
அவன், அவள் பின்னே வந்து நின்றுகொண்டு, தோளில் தட்டினான். அவனைத் திரும்பியவள், “என்ன இது?!’ என்பது போல் அவன் கையில் ஆரஞ்ச் நிறத்தில் வைத்திருந்த லைஃப் ஜாக்கெட்டை பார்த்தாள்.
“போட்டுக்கோ, கொஞ்ச நேரம் ஸ்விம் பண்ணலாம்”
“அய்யோ! ஸேரி கட்டிருக்கேன். எப்படி முடியும்?”
“ஓ, ஓகே!” என்று ஒரு லைஃப் ஜாக்கெட்டை எடுத்த இடத்தில் போட்டுவிட்டு, வந்தவன், “நீ இங்க இரு. ஹாஃப் அன் ஹவர் ரிலாக்ஸா ஸ்விம் பண்ணிட்டு வர்றேன்” என்றான்.
“நீ போறியா?!” என்றாள் சட்டென. அந்த கேள்வி கேட்ட விதத்திலே, அவளுக்கு இதில் விருப்பமில்லை என அவனுக்குத் தெரிந்தது. அந்த விருப்பமின்மையை சரியாக பயன்படுத்த வேண்டுமென்று நினைத்தான்.
“எஸ்” என்றான் அழுத்தமாக!
“ஆழமா இருக்கும்ல?” என்றவளின் கண்கள் பயத்தை வெளிப்படுத்தின.
“ம்ம்ம், பட் எனக்கு ஸ்விம் பண்ண தெரியும்ல?” என்றான், அதைக் கண்டும் காணாமல்!
“அப்புறம் எதுக்கு லைஃப் ப்ஜாக்கெட்?” என்றாள் சமயோஜித கேள்வியாக.
“இது இங்க ரூல்ஸ்” என்றான் ‘உன் எல்லா வினாக்களுக்கும் விடை நானே‘ என்பது போல!
“அடுத்த தடவை வர்றப்ப போகலாம்ல?”
“ஏன்… நீ வர மாட்டேன்னு சொன்ன, ஓகேனு விட்டுட்டேன். என்னையும் போக கூடாதுன்னு சொன்னா, என்ன அர்த்தம்? நான் அன்னைக்கே சொன்னேன்ல, பிடிச்சதுதான் பண்ணுவேனு”
“பண்ணு! யார் வேண்டாம்னா? அடுத்த தடவை போன்னுதான சொல்றேன்” என்றாள் எரிச்சலாக.
“நீ சொல்றதுக்கு, இந்த தடவை போகாதனு ஒரு அர்த்தம் இருக்கு” என்றான் விளையாட்டாக!!
“ச்சே” என்றவள், முணுமுணுத்துக் கொண்டே திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
அவளுக்கு கோபம், ‘தான் இவ்வளவு சொல்லியும், அவன் கேட்கவில்லையே?!’ என்று. அதனுடன் ஏமாற்றமும் சேர்ந்து கொண்டது! அவனோ, அவள் பின்னே வந்து தோளில் தட்டினான். ஆனாலும் திரும்பாமல் நடந்தாள்… அவள் முன்னே வந்து நின்று, கைநீட்டி அவளைத் தடுத்தான்.
“கொஞ்சம் நில்லு. நான் சொல்றதை கேளு” என்றான்.
“என்ன சொல்ல போற?”
“நான் போகல… நீ சொன்னதை கேட்கிறேன். ஆனா அதுக்கு பதிலா, நீ நான் சொல்றதைக் கேட்கனும்”
“என்ன?” என்றவளின் குரலில் நிம்மதி இருந்தது.
“அஞ்சு நாளில்ல! ஆறு நாள்!!” என்றான்.
“என்னது ஆறு நாளா?”
“நீ சொல்றதைக் கேக்கிறேன்ல. ஸோ நான் சொல்றதைக் கேளு”
“இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?” என்றாள்.
“அது எனக்குத் தெரியாது. நீ ஓகே சொல்லலைனா, நான் போய் தண்ணீல குதிச்சிருவேன்”
“ஏன் இப்படி பண்ற?”
“ஹேய்! எனக்கு நாளெல்லாம் உங்கூட இருக்கனும்னு ஆசை!! ஒன்டேதான எக்ஸ்ட்ரா கேட்கிறேன்” என்று கெஞ்சினான்.
அவனின் அன்புறுத்தல் அவள் இறுக்கிப் பிடித்து வைத்திருந்த அவனுக்கான அவளின் காதலை அசைத்துப் பார்த்தது!
சற்றே இளகத் தொடங்கிய இதயத்தை மறைக்க, “நீ பேசாம அதுக்குள்ளேயே போய் குதி” என்று தன் இரு கரத்தையும் அவன் மார்பில் வைத்து தள்ளிவிட்டு, வேகமாக ஓட ஆரம்பித்தாள்.
அவனும், அவளது செயலில் திக்கு முக்காடினான். ஒரு நொடியில் சுதாரித்துக் கொண்டு, அவளைத் துரத்தினான்.
கரடுமுரடான பாதைகளின் வழியே ஓடிக் கொண்டிருந்தாள்! பின்தொடர்ந்து ‘அவன் வருகிறானா?’ என திரும்பிப் பார்த்தபடியே வந்தவள், அங்கு அரட்டை அடித்துக் கொண்டிருந்த கும்பலில் இருந்த ஒருவன் மேல் மோதினாள்!
திடுமென அவள் வந்து மோதியதில்… அவன் கையில் வைத்திருந்த மதுப்புட்டி கீழே விழுந்து உடைந்துவிட்டது. விழுந்த சத்தத்தில் கும்பலிருந்த அனைவரும் அவளைத் திரும்பிப் பார்த்தனர்.
பின்னே திரும்பி அவன் வருகிறானா என்று பார்த்தபடியே, “சாரி” என்றாள்.
கும்பலில் சிலர் போதை பாதையின் முடிவில் இருந்தனர். சிலர் பயணித்துக் கொண்டிருந்தனர். சிலர் பயணத்தை அப்போதுதான் ஆரம்பித்தனர்!
இப்படிப்பட்டவர்களின் முன்னே அவள் நின்று கொண்டிருந்தாள்!
அவள் மன்னிப்பு கோரியதற்கு… அவர்களது பதில் கொங்கணியில் இருந்தது. அவளுக்குப் புரியவில்லை. “சமஜ் நகி, சமஜ் நஹி(புரியல)” என்று அவளுக்குத் தெரிந்த ஹிந்தியில் சமாளித்தாள். அதற்குமேல், ‘என்ன சமாதானம்?’ சொல்ல என்றும் தெரியவில்லை.
‘அவன் வருகிறானா?!’ என திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வேறு இருந்தாள்!
திரும்ப அவள், “மாப்கீஜீயே, மாப்கீஜீயே” என்று மன்னிப்பு கேட்டாள். ஆனால் அவர்கள் யாரும் சமாதானம் அடைவதாக தெரியவில்லை.
சிறிது வினாடிகளுக்குப் பின்னரே அவள் பார்வைக்கு அவன் தென்பட்டான்! அவனும்… அவளைப் பார்த்துவிட்டு, ‘அன்று கடற்கரையில் தூரத்தில் சென்ற இளைஞர் கூட்டத்தைக் கண்டே அஞ்சினாள். இத்தனை பேர் அவள் முன்னே நிற்பதைக் கண்டு, ‘என்ன மனநிலையில் இருப்பாளோ?’ என்று பதறிப்போய் ஓடி வந்தான்.
அவளருகில் அவன் வந்தவுடன், “எங்க போன? ஓடி வந்ததுல… நான் தெரியாம இடிச்சிட்டேன். பாட்டில் ஒடஞ்சிருச்சி” என்று அவள் முடிக்கும் முன், அவர்கள் அனைவரும் கோபமாகப் பேச ஆரம்பித்தனர்.
“நீ போய்கிட்டு இரு. நான் வர்றேன்” என்றான் அமைதியாக.
“நீயும் வா. நாம இங்கருந்து உடனே போயிறலாம்” என்று அவன் கைப்பிடித்து இழுத்துச் செல்ல பார்த்தாள். ஆனால் அந்தக் கும்பலிலிருந்த ஒருவன், அவள் முன்னே வந்து நின்று பாதையை மறைத்தான்.
‘நான் இருக்கேன்ல’ என்று இந்தியில் பொறுமையாக கோபப்பட்டவன், “நான் சொல்றேன்ல… நீ அங்க போய் நில்லு” என்று அவளிடம் மரப்பாலம் ஒன்றை காட்டினான்.
அந்தச் சொற்களுக்கு அவன் தந்த அழுத்தத்தால், அவள் அங்கிருந்து நகர்ந்து, அவன் சொன்ன இடத்திற்குச் சென்று நின்றாள். அங்கிருந்தபடியே அவனைப் பார்க்கும் போது, அந்தக் கும்பலிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.
பேசிமுடித்து வந்தவன், மரப்பாலத்தில் அவளெதிரே நின்று கொண்டான்!
“என்ன சொன்னாங்க?” என்றாள்.
“உடைஞ்ச பாட்டிலுக்கு காசு கேட்டாங்க. கொடுத்தேன். அவ்ளோதான். ஆனா இதைத்தான உன்கிட்டயும் கேட்டிருப்பாங்க. அதுக்கு எதுக்கு பயந்த?”
“நான், உன்கிட்ட சொன்னேனா பயந்தேனு? எனக்கு அவங்க பேசறதே புரியல. அதான்”
‘அட! ரெண்டு நாளைக்கு முன்னாடி இருந்த பொண்ணா இது?’ என்பது போல் பார்த்தான். காதலும்… காதலனும் கொடுத்த தைரியம் இது!
“நீ எங்க போன?” என்றாள்.
“எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர பார்த்தேன். அவர்கிட்ட பேசிட்டு வர்றேன்”
“கூடவே வான்னு சொன்ன? கைப்பிடிச்சிக் கூட்டிட்டுப் போறேன்னு சொன்ன? இப்ப என்னாச்சு? எல்லா சும்மாதான் இல்லையா?” என்றாள். சிறிது கலங்கிய கண்களுடன்! அதில் நடந்த நிகழ்வின் பயத்தைவிட, அவன் மீதான கோபமே அதிகமாக இருந்தது!!
நன்றாகவே ரசித்துப் பார்த்தான், இந்த ஜென்ம காதலியின் இதயம் சறுக்கி விழுந்து கொண்டிருப்பதை!
“மரியாதையா பதில் சொல்லு?” என்று உரிமையுடன் வேறு கேட்டாள்.
“தெரிஞ்ச ஒருத்தர்னு சொல்றேன்ல. சரி இப்ப வேணா கைப் பிடிச்சிக்கோ” என்று தன் கையை நீட்டினான்.
அவள் “ஒன்னும் வேண்டாம்” என்று, அவன் கையைத் தட்டிவிட்டு சொல்லும் போதே… வானம் சிறு தூறலாய் தூவ ஆரம்பித்தது.
இருவரும் வேகவேகமாக ஜீப் நிற்கும் இடத்திற்கு ஓடி வந்து, அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் நின்று கொண்டனர். தூறல் வலுத்திருந்தது. அடுத்த ஜீப் வரும் வரை இருவரும் காத்திருக்க வேண்டிய நிலை.
அங்கங்கே பொதுமக்கள் நின்றிருந்தனர்! குடும்பங்கள், நட்புகள், காதலர்கள், சுற்றுலாவாசிகள்… இப்படி! சிறிது நேரத்திலே மழை விட்டிருந்தது. ஆனாலும் தூறல் இருந்தது. இரண்டு மூன்று கடைகளும் இருந்தன.
சிலர் அங்குமிங்கும் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்தவன், “இந்த கிளைமேட்ல டீ குடிச்சா நல்லா இருக்கும். குடிக்கிறீயா?” என்றான்.
“தூறல் விழுதுல… எப்படி?” என்றதும், “நான் வாங்கிட்டு வர்றேன்” என்றவன், “உனக்காக” என்று சேர்த்துச் சொன்னான்.
அவளுக்கு ‘அய்யகோ!’ என்று இருந்தது! காதலை சமாளிப்பதைவிட, இவனை சமாளிப்பதே கஷ்டம் என்று!!
அவன் சென்றவுடன், விழிகளைச் சுழல விட்டாள். சுற்றிலும் மலைகள்! மழை தந்த குளிருக்கு இதமாக இருக்க பச்சை வர்ண போர்வை போர்த்தியிருந்தன மலைகள். இயற்கையின் வாசனையை சுவாசிக்கும் மக்கள் சிலர் அங்கங்கே நின்றனர்.
அவளது பார்வை அப்படியே வலம்வந்து அங்கிருந்த இளைஞிகள் கூட்டம் மீது விழுந்தது. அவர்கள் அனைவரும் யாரையோ பார்த்து… கைகாட்டிச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் கைகாட்டியத் திசையைப் பார்த்தாள்!
அங்கே அவளது நீலவிழிகள்!
அவனோ, போட்டிருந்த போம்பர் ஜாக்கெட்டை (bomber jacket) கழட்டி, இரண்டு கைகளிலும் ஏந்தியபடி இருந்தான். அதுவரை அவன் விழிகளுக்கு மேல் ஏதும் பார்க்காதவள், இன்று அந்த இளைஞிகளின் பார்வைகள் சொன்ன சேதியுடன் அவனைப் பார்த்தாள்.
அவன் போட்டிருந்த உடை, அவன் புஜங்களின் வலிமையைப் பறைசாற்றும் வண்ணம் இருந்தது!
அவளருகே வந்தவன், “கையில டீ இருக்கு, எடுத்துக்கோ” என்றான்.
அவளின் பார்வை அந்த இளைஞிகள் கூட்டத்தைப் பார்த்தது! பின் அவனிடம் திரும்பியவள், “நீ சட்டையை போட்டுக்கோ” என்றாள் காதலிக்கே உண்டான பொறாமையுடன்!
“இது சட்டையில்ல! போம்பர் ஜாக்கெட்!! எங்க சொல்லு?”
“இப்ப இது ரொம்ப அவசியமா?” என்று திரும்பவும் அந்த இளைஞிகள் இருந்த, திசையைப் பார்த்தாள். அவள் பார்வைச் சென்ற திசையைப் பார்த்தவன், ‘ஓ! இதான் ரீஸனா? நமக்கு இது செகண்ட் சான்ஸ்’ என்று நினைத்து, “பட்… நீ டீய எடுத்தாதான் முடியும்?” என்றான்.
டீயை எடுத்துக் கொண்டவள், “இப்ப சட்டையை போடு” என்றாள்.
“தூரல் விழுதுல. ஸோ நீ டீக்குடிக்கிற வரைக்கும். இப்படியே…” என்று, அவன் முடிக்கும் முன்பே, இரண்டு டீ கிளாஸையும் தூரல் விழும் இடத்தில் தூக்கிக் காட்டினாள். பின், “டீ நனைஞ்சிருச்சி. இப்பவாது சட்டையை போடலாம்ல?” என்றாள் நக்கலாக.
‘என்கிட்டேவா?’ என்று நினைத்து, போம்பர் ஜாக்கெட்டை தோளில் போட்டுக் கொண்டு, கைகளால் ஆறு என்று காட்டினான்.
அவள், ‘என்ன செய்து இவன் காதலுக்கு அணைகட்டுவது?’ என்று புரியாமல் தித்திப்பாய் திண்டாடினாள்!
“சிக்ஸ் டேய்ஸ் ஓகே இல்லனா, மிச்சம் இருக்க ரெண்டு நாளும் இப்படித்தான் என்னோட டிரஸ்ஸிங் இருக்கும்”
“சரி ஒத்துக்கிறேன்… இப்பவாது போடலாம்ல” என்று அவன் காதல் நெஞ்சில் சரணடைந்தாள்.
“டெபன்னட்லி” என்று சிரித்தான்.
ஜீப் வந்தவுடன் மீண்டும் பயணம் தொடங்கியது. பின் அவனின் காரில் வீடு நோக்கிய பயணம்! நேரம் நள்ளிரவாகி இருந்தது!
அவளுக்கு அலுப்பாக இருந்தது. கூந்தலை அள்ளி, தளர்ந்த ஒரு கொண்டை போட்டுக் கொண்டாள். மழையில் நனைந்ததின் பலனாக குளிராக இருந்தது. குளிருக்கு இதமாக தேகத்தைப் புடவை முந்தானையால் மூடிக்கொண்டாள்.
காரின் சன்னலில் தலை சாய்த்துக்கொண்டு, இரவு மின்கம்பத்தின் ஒளியில் கோவா நகர வீதியின் அழகை ரசித்தபடி வந்தாள். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது, ‘உலகம் இத்தனை அழகானதா?!’ என்று!
அந்தப் பழுப்பு விழிகளுக்குத் தெரியவில்லை, உலகத்தின் அழகு என்பது உடன் இருப்பவரை பொருத்ததே என்று!
