Kathambari Novels
அத்தியாயம் – 8
வீட்டுக்கு வந்தவள் நன்றாக உண்டு, பல வருடங்களுக்குப் பிறகு நிம்மதியாக, பாதுகாப்பாக உறங்கினாள்.
இரண்டாவது நாள்!
அடுத்த நாள் அறையை விட்டு வெளிவரும்போது, அவளது உடல் நிறத்துடன் அத்தனை எளிதாக பொருந்திப் போனது, அவள் உடுத்தியிருந்த புடவையின் கனகாம்பர பூவின் நிறம்!
இன்றைய தினம், அவன் கூட்டிச் சென்ற இடம் அகுடா கோட்டை (aguada fort)! கோவாவின் மிக முக்கியமான கோட்டைகளில் இதுவும் ஒன்று. அதன் அழகு, கம்பீரம் மற்றும் அதன்மேல் நின்று பார்த்தால் தெரிகின்ற அரபிக்கடல், என ரசித்து பார்க்க நிறைய விடயங்களைக் கொண்டுள்ளது.
கோட்டைக்கு மேலும் அழகு சேர்க்க கூடிய இரண்டு விடயங்கள்… கலங்கரை விளக்கமும், சிறைச்சாலையும்!
இதை சுற்றிப் பார்க்க வேயிற்காலம் உகந்ததல்ல! மழைக் காலம் முடிந்ததும் சென்றால், பாசிகள் படர்ந்து இருக்கும் கோட்டைச் சுவர், மழை பெற்றெடுத்த புது செடி, கொடிகள், தூரத்தில் தெரிகின்ற கேன்டோலிம் கடற்கரை, மற்றும் தென்னை மரங்கள் என்று ரம்மியமான இயற்கை காட்சிகளை உள்வாங்கிட முடியும்!
கோட்டையின் மேற்பகுதியை அடைய இரண்டு கிலோமீட்டர் செங்குத்தான பாதை வழியாக நடக்க வேண்டும் அல்லது நான்கு கிலோமீட்டர் இரு சக்கர வாகனப் பயணம் மேற்கொள்ள வேண்டும்!
அவன் நடைபயணத்தை தேர்ந்தெடுத்திருந்தான்! இருவரும் கோட்டையை நோக்கிய நடைப் பயணத்தில் இருந்தனர்!
நடக்கும் போது அவளைப் பார்த்தன நீலவிழிகள்!
அங்கங்கே அரும்பியிருந்த வியர்வைத்துளிகள். ‘இந்தச் சிப்பிக்குள் மட்டும் எப்படி இத்தனை முத்துக்கள்?’ என அவனை ஆச்சரியப்படுத்தின! வியர்வை முத்துக்களைச் சுமந்தபடி, அந்த முத்துச்சரம் கோட்டைப் பாதையின் வழியே பயணிப்பதும், அங்கங்கே ஆசுவாசப்படுத்தி கொள்ள நின்று, ‘முடியவில்லை’ என்று தலைசாய்த்து அவனைப் பார்க்கின்ற விதமும்… கொள்ளை கொள்ளும் அழகாய் இருந்தது!
இவை அத்தனையும் அவன் நீலவிழிகள் நிழற்படமாய் எடுத்துக்கொண்டன. இருவரும் கோட்டையின் மேற்பகுதியை அடைந்தனர்.
கோட்டை மேல் நின்று… நீலக் கம்பளம் விரித்து, அதன்மேல் தாவிக் குதிக்கும் அலைகளைக் கொண்ட அரபிக் கடலைக் கண்டு ரசித்தனர். மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது! காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால், அவளின் புடவையும், கூந்தலும் அங்குமிங்கும் அலைபாய்ந்தன!
சில வினாடிகள் கஷ்டப்பட்ட பின்னரே… அதை அவள் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது! நிச்சயமாக அவன் உதவியுடன்தான்!!
அந்தக்கணம் அவனுக்கு ‘யாரோ தன்னை பார்ப்பது போல’ தோன்றியதால் சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தான். “என்ன பார்க்கிற?” என்றாள்.
‘ஒன்னுமில்லை’ என்பது போல் தலையை அசைத்தான்.
ஆனால் சிறிது நேரத்தில் அவர்கள் அருகில் ஒரு பெண் வந்து நின்றாள். வேறு யாரும் இல்லை! அவன் ‘முன்னாள் காதலி’! வந்தவளின் பார்வை மொத்தமும், புதிதாய் அவனருகில் நிற்கின்ற பெண் மீதே இருந்தது.
“நீதான் இவனோட புது லவ்லரா?” என்று ஆரம்பமே பழுப்பு விழிகள் பதறும் அளவிற்கு இருந்தது.
பதற்றத்தின் விளைவாகவோ? அல்லது அவனின்பால் கொண்ட பற்றுதலின் விளைவாகவோ? மறுக்கும் எண்ணமே வரவில்லை பழுப்பு விழிகளுக்கு!!
“பிசினஸ் செய்றேன்னு சொல்லியிருப்பானே. நம்பிடாத. ஏன்னா என்கிட்டயும் அதான் சொன்னான். ரெசார்ட்ட லீசுக்கு எடுத்து நடத்திறான். அவ்வளவுதான்! அதெல்லாம் ஒரு பிசினஸ்னு வேற சொல்லிக்கிட்டு சுத்திறான்.
இப்படி சொல்லியே எல்லா பொண்ணுங்களையும் ஏமாத்துறதான் இவனோட வேலையே. நீயும் ஏமாந்திராத” என்றாள் அவன் ‘முன்னாள் காதலி’, உபதேசம் வழங்கும் எண்ணத்தில்.
அன்று அவன் பேசாமல்… வெறும் ‘குட் பை’ என்று சொல்லிப் போனதற்கான கோபத்தையெல்லாம் இன்று கொட்டித் தீர்த்தாள்.
அவள் கோபத்தின் எதிர்வினையாக, ‘உன்கிட்ட பேசறதே வேஸ்ட்’ என அவன் நின்றான். ஆயினும் அவனுக்கு என்னமோ அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை, பழுப்பு விழிகள் இதற்கு பதில் சொல்லும் என்று!
நம்பிக்கை வீண்போகவில்லை!
“போதும் நிறுத்துங்க! அவன் என்ன செய்றான்னு தெரிஞ்சிதான் அவன்கூட… அவன் கூட இப்படி…” என்று திண்டாடினாள்.
“தெரிஞ்சுமா சுத்துற… ஏன்?”
“ஏன்னா, எல்லாருக்கும் பணம் மட்டும் முக்கியமில்ல” என்றாள் தெளிவாக!
“என்னைப் பத்தியும் சொல்லிருக்கானா? கிரேட்! இதெல்லாம் தெரிஞ்சிதான் காதலிக்கிற? அப்படித்தான!”
“அது… அது… அவனைப் பத்தி… பத்தி எல்லாம் தெரிஞ்சிதான், நீங்க… நீங்க சொல்ற மாதிரி செய்றேன்” என்று திரும்பவும் தடுமாறினாள்.
“சே! என்னை சொல்லனும். நீயெல்லாம் ஒரு ஆளுன்னு வந்து பேசினேன் பாரு” என எரிச்சலுடன் சொல்லிவிட்டு, அவன் முன்னால் காதலி, இல்லை… இல்லை, அந்தப் பெண் கோபத்தில், இரு ஜோடி காதல் விழிகள் இருக்கின்ற இடத்தை விட்டு நகர்ந்தாள்!
‘தான் ஏன் இப்படிப் பேசினோம்?!’ என்று, அதன் மீதே கோபம் வந்தது பழுப்பு விழிகளுக்கு. மன்னிப்பு கேட்கலாம் என்ற எண்ணத்தில், அந்தப் பெண்ணை நோக்கிச் செல்ல முற்படுகையில், ஒரு கரம் அவளைப் பிடித்து தடுத்தது!
“கையவிடு. ரொம்ப தப்பா பேசிட்டேன். நான் போய் அவங்ககிட்ட பேசறேன்”
“இவ்ளோ நேரம் சரியாதான் பேசின. அதை தப்புனு நினைச்சி, சரி செய்றதா சொல்லி, தப்பா எதுவும் பேசிடாத” என்றான் பிடித்த கரத்தை விடாமலே!
நீலவிழியும், பழுப்புவிழியும் ஒன்றையொன்று நோக்கின! நீலவிழிகள் எழுதிய காதல் கடிதங்கள் காற்றின் தோளில் ஏறிக் கொண்டு, காதல் உலா வர தயார் ஆகின!
எத்தனை கடிதங்கள் எழுதப்பட்டதோ தெரியாது! ஆனால் ஒரு சிறுவன் வந்து, அவர்கள் மேல் மோதிய பின்னரே இருவரும் தன்னிலை உணர்ந்தனர். இன்று அவள் மெளன சிரிப்புகள் புன்னகையாக மாறி, இரு கன்னங்களும் செம்மை ஏறிடும் அளவிற்கு, நன்றாகவே நாணம் பூசிக் கொண்டன!
“ம், வா போகலாம்” என்று பிடித்த அவள் கரத்தை விடாமலே, கீழே அழைத்துச் சென்றான். கார் இருக்கும் இடம்வரை அவள் கரத்தை விடவேயில்லை!
குறிப்பாக… அவளும் கரத்தை எடுக்க நினைக்கவில்லை!
காரில் ஏறியதும், “ஃபீலீங் டிஸ்டர்படு. டேரைக்டா வீட்டுக்கு போக வேண்டாம். ம்ம்ம் ஒரு சேஞ்சுக்கு உன் தம்பியைப் பார்க்க போலாமா?” என்றான்.
“ம்ம், எனக்கும் பார்க்கனும்னு தோணுச்சி. ஆனா நீ ஏன் இப்படி இருக்க?”
“நத்திங் மச்! தம்பிக்கு இன்ஃபார்ம் பண்ணிடு”
‘சரி, சரி’ என்ற தலையாட்டல்களுடன் கைப்பேசியை எடுத்தாள்!
கல்லூரி வளாகத்திற்கு வந்தபின்பு, இருவரும் அங்கிருந்த திண்டில் அமர்ந்து காத்திருந்தனர். சில விநாடிகள் கடந்த பின் முகமலர்ந்து எழுந்தவள், “அங்க அந்த ரெட் கலர் டீஸர்ட் போட்டு வர்றான்ல, அவன்தான் என் தம்பி” என்றாள் உற்சாகமாக!
“இவ்வளவு எக்ஸைட் ஆகுற? ரொம்ப பிடிக்குமா?”
“ரொம்ப ரொம்ப பிடிக்கும். ப்ச், எனக்குன்னு இருக்கிறது அவன் மட்டும்தான? அதான்”
ஒரு நிமிட இடைவெளிக்குப் பின் எழுந்து அவளருகில் சென்றவன், “ஏன் நான் இல்லையா?” என்று அவன் பங்கிற்கு, அவனும் சாவியைச் சுழற்றினான்.
அவள் வயிற்றுக்குள் ஆயிரம் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தன! நீலவிழிகள் காதல் கவிதைகளை எழுதுவதற்கு முன்னேறின!
அதற்குள் அங்கு வந்த அவள் உடன்பிறப்பு, “க்கா, என்ன திடீர்னு? யூஸ்வலா வீக்என்டுலதான வருவ?” என்றான்.
தன்னைச் சாதரணமாக்கி கொண்டு, “சும்மாதான். உன்னைப் பார்க்கனும்னு தோணிச்சி. இவன் கூட்டிட்டு வந்தான்” என்றாள் நீலவிழிகளைக் கைகாட்டி!
“இவர் யாருக்கா?”
“இது… இது… இன்னொரு நாள் சொல்றேன்டா. நீ எப்படி இருக்க?”
“ம்ம்ம் நல்லா இருக்கேன். நீ?” என்றது உடன்பிறப்பு!
“நல்லா இருக்கேன்டா”
இதற்கிடையே மெளனம் கலைத்து “ஹாய்” என்றன நீலவிழிகள்.
பதிலுக்கு “ஹலோ” என்ற உடன்பிறப்பு, “அக்கா இந்தா, போனதடவ நீ கேட்ட பாட்டெல்லாம் ப்ளேலிஸ்ட்ல வச்சிருக்கேன். கொஞ்ச நேரம் கேளு” என்றது.
“இப்ப ஏன்டா? நம்ம பேசிகிட்டு இருக்கலாமே?”
“ச்சு, நீ தனியா போய் கேளு. உனக்குப் பிடிக்கும்ல? நாங்க பேசிக்கிறோம்”
இதற்கிடையில், “நீ போ. நான் பேசிக்கிறேன்” என்ற வார்த்தைகள் வந்தன நீலவிழிகளிடமிருந்து!
“சரி கொடுடா” என்று வாங்கியவள், சற்றுத் தூரத்தில் இருந்த மரத்தடிக்குச் சென்று அமர்ந்து கொண்டாள்.
அவள் சென்றபின், “நீங்க யாரு ஸார்?” என்று கேட்டது உடன்பிறப்பு.
“உங்க அக்கா ‘இன்னொரு நாள் சொல்றேனு’ சொன்னாங்கள. இருந்தாலும் சொல்றேன், நான் கோவால ஒரு சிக்ஸ் இயர்ஸா பிசினஸ் பண்றேன்”
“ப்ச்… அவளுக்கு நீங்க யாரு ஸார்?”
‘எதற்காக இந்த கேள்வி?’ என்று யோசித்தன நீலவிழிகள்!
“பதில் சொல்ல முடியலையா? இல்ல சொல்ல முடியாத பதிலா?”
“ஹலோ… உங்க அக்காகிட்டயே இப்படிக் கேட்க வேண்டியதுதான?”
“அவகிட்ட பார்க்கிறப்பெல்லாம் கேட்கிறேனே. அவதான் எதும் சொல்றதில்ல. ஆனா அவ சொல்லலைனா, அவளைப் பத்தி எனக்குத் தெரியாதா?”
“ஸோ யூ நோ அபவுட் ஹெர்… எப்படி?”
“ஏன் ஸார்… பத்து வயசிலதான் விவரம் தெரியாது. எனக்கு விவரம் தெரிஞ்சி, வெளில போக ஆரம்பிச்சதலிருந்து, அவளைத் தேடிக்கிட்டுதான் இருந்தேன். முதல இருந்த ஆர்பனேஜ்ல சிலபேர் சொன்னதை வச்சி, அவ இருக்கிற இடம் தெரிஞ்சி, அவளைப் பார்க்கப் போனேன்”
“இது எப்ப?”
“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி! எத்தனை தடவை போய், ‘அக்காவ விடச் சொல்லி’ அந்த ஆளுகிட்ட கெஞ்சிருப்பேன் தெரியுமா? விடவே மாட்டேன்னு சொல்லிட்டான். ஆனா அவளே ஒரு நாள் என் முன்னாடி வந்து நின்னா. பத்து வருஷத்துக்கு அப்புறமா அவளைப் பார்த்த சந்தோஷம். ஆனா… இந்த பத்து வருஷமா அவ… அவளோட லைஃப்”
“ஐ கேன் அன்டர்ஸ்டேன்ட். பட் நீங்க அவகிட்ட கேட்டிருக்காலாமே”
“எத்தனை தடவை கேட்டிருப்பேன் ‘என்ன செய்ற, எங்க இருக்கனு?’! எதுவுமே சொல்ல மாட்டா. என்னை பார்க்க வருவா, பேசுவா, இப்படி ஏதாவது பாட்டுப் போட சொல்லிக் கேட்பா. அவ்வளவுதான்.
நானும் ஒவ்வொரு தடவை வர்றப்போ, அவ கஷ்டத்தைச் சொல்லி அழுவானு நினைப்பேன். ஆனா சொல்லவே மாட்டா. அதனால நானும் அவளைப் பத்தி தெரிஞ்சதா காட்டிக்க மாட்டேன்”
“குட் டெஷிஷன்”
“ஸோ… யூ நோ அபவுட் ஹெர்”
“அஃப்கோர்ஸ் எஸ்”
“எஸ்ஸூனா? இப்பவாது சொல்லுங்க நீங்க யாருன்னு”
“நீங்க வேற மீனிங்கல கேட்கிறீங்க. பெட்டர் உங்க அக்காகிட்டயே கேளுங்க”
“ஸார் வேண்டாம்! அவகிட்ட என்னால இதைப் பத்தி பேசவே முடியாது. ஐ கான்ட். ப்ளீஸ் அன்டர்ஸ்டேன்ட்” என்று கெஞ்சியது உடன்பிறப்பு.
“ஸோ ஸாரி ஃபார் யூ. நான் உங்க அக்காவை கூப்பிடறேன்… நீங்க அவகிட்ட எல்லாம் சொல்லுங்க” என்று மரத்தடியில் அமர்ந்திருந்தவளை அழைத்தான். அவள் அங்கிருந்து வருவதற்குள் நூறு முறையாவது ‘ஸார் வேண்டாம்’ என்று வேண்டியது உடன்பிறப்பு!
அவனருகில் வந்து நின்றவள், “எதுக்கு கூப்பிட்ட?” என்றாள்.
இரு ஆண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, அமைதி காத்தனர்!
“என்ன பதிலே சொல்ல மாட்டிக்க? நீயாவது சொல்லுடா?” – பழுப்பு விழிகள்.
திரும்பவும் அமைதியே நிலவியது!
“பேசிட்டீங்களா ரெண்டு பேரும்” என்று, என்ன நடக்கிறதென்றே தெரியாமல் கேள்வி கேட்டாள்.
“நாங்க பேசினது போதும். நீ பேசிட்டு வா. இம்பார்டன்ட் கால் பண்ணனும்னு” என்று சொல்லி விலகின நீலவிழிகள். நிம்மதி பெருமூச்சு விட்டது, அவளது உடன்பிறப்பு!
“ப்ச் இந்தாடா. பாட்டு கொஞ்சம்தான் கேட்டேன்” என்றாள்.
“யாருக்கா இவரு?”
“ஏன்டா கேட்கிற? இன்னொரு நாள் சொல்றேனே. இப்போ எதுவும் கேட்காத. சரியா?”
“சரி. ஆனா எனக்கு தனியா இருக்க பிடிக்கலக்கா. சீக்கிரமா வந்திடு”
“யோசிச்சி சொல்றேன்டா” என்றாள் அவன் தலையைத் தடவிக் கொடுத்துக் கொண்டே!
ஆச்சரியமாக இருந்தது அவள் உடன்பிறப்புக்கு! இதே கேள்வியை இத்தனை நாள் கேட்டபோது வராத பதில், இன்று வருகிறதே என்று!
“சரிடா, நான் கிளம்புறேன்” என்றாள்.
“வாக்கா. நான் கொண்டு வந்து விடறேன்” என்றதும், இருவரும் கார் நிற்கும் இடத்திற்குச் சென்றனர்.
“போகலாமா?” என்றன நீலவிழிகள்.
“ம்ம்” என்றவள் “வர்றேன்டா” என்று காரில் ஏறினாள்.
அவள் பக்கத்தின் கதவை மூடிவிட்டு, காரின் மறுபுறம் சென்றவனை, “ஸார்“ என்ற குரல் தடுத்தது. நின்று திரும்பிப் பார்த்தான்.
“தேங்க்ஸ் ஸார்” என்றது உடன்பிறப்பு. ‘எதற்கு?’ என்ற கேள்வி நீலவிழிகளில்!
“எத்தனையோ தடவை கேட்டிருக்கேன் ஸார். ‘தனியா இருக்க பிடிக்கல. நாம சேர்ந்து இருக்கலாம்’னு. பதிலே சொல்லமாட்டா. ஆனா, இன்னைக்குத்தான் யோசிக்கிறேன்னு சொல்லிருக்கா. இந்த சேஞ்சுக்கு காரணம் நீங்கதான்”
நீலவிழிகள் மெளன மொழி பேசின!
“புரியுது. உங்களுக்கு கோபம். பட் எனக்கு சந்தோஷமா இருக்கு. கொஞ்சம் நிம்மதிகூட. முடிஞ்சா அவளை நல்லா பார்த்துக்கோங்க. ப்ளீஸ்” என்றான் ஒரு உடன்பிறப்பின் கடமையாக!
மெல்ல சிரித்துக்கொண்டே, “ஸ்டடிஸ்ல கான்சென்ட்ரேட் பண்ணுங்க. சரியா? ஓகே பை” என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பின நீலவிழிகள்.
காரில் வரும்போது, “ரொம்ப நேரமா நீங்க பேசினீங்க. என்ன பேசினீங்கனு சொல்ல மாட்டிக்க?” என்றாள்.
“ம், எப்படி படபடன்னு இங்கிலீஷ் பேசறது? ஸ்டைலா டிரஸ் பண்றது எப்படி? ம்ம், கொங்கணி எப்படி பேசறது? ஹிந்தியும்…”
“போதும் நிறுத்து! என்ன பொய் சொல்லக்கூடாதுனு சொல்லிட்டு, நீ சொல்ற”
முதலில் அவன் சிரித்தான், பின் மெளனமானான்! ஆம், சில வினாக்களுக்கு வார்த்தைகளைவிட… மெளனங்களும், புன்னகைகளும் சாலச் சிறந்த விடைகளாகும்!!
நிசப்தத்துடன் பயணித்தபடி… இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். அவன் வீட்டு சமையல்காரம்மா அவர்களுக்காக சமைத்து வைத்துவிட்டுச் சென்றிருந்தார். எல்லாம் திறந்து பார்த்தவன், “போ பிரஸ்ஸப் பண்ணிட்டு வா. சாப்பிடலாம்” என்றான்.
அவள் சென்றவுடன் கணினி முன்வந்து அமர்ந்தான். சற்று நேரத்தில் திரும்பி அவள் வரும்போது, அவன் கணினியிடம் முழுதுமாக தஞ்சமடைந்திருந்தான். அவனுக்கு இடைஞ்சல் தர வேண்டாம் என்பதற்காக அமைதியாக நின்றாள்.
ஆனால் ஒரு கட்டத்தில் தனிமையை உணர்ந்தவள்… அவனருகில் சென்று, “வேலை பாக்கிறீயா? பேசமாட்டியா?” என்றாள்.
“ஹே, நீ வந்ததே தெரியாது. டூ திரி டேஸா, பிசினஸ் ரிலேட்டட் மெயில் செக் பண்ணல. அதான் செக் பண்ணேன். உன்னை கவனிக்கல. வா உட்காரு”
அந்த கணினி மேஜையின் அருகே, ஒரு முக்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.
“என்னாலதான?” என்று கோட்டையில் நடந்தது பற்றி கேட்டாள்.
“என்னது என்னாலதான?”
“…..“
“போட்டோஸ் பாக்கிறீயா?” என்றான்.
“என்ன போட்டோஸ்?”
“நீயே பாரு. ஆட்டோ ப்ளே பண்றேன். பார்த்துக்கிட்டு இரு. ஐ வில் பீ பேக் இன் பைவ் மினிட்ஸ்” என்று சொல்லி அவன் அறைக்குள் புகுந்தான்.
ஒவ்வொரு புகைப்படமாக ரசித்துப் பார்த்தாள். எல்லாமே வரலாற்றைத் தேடி அவன் பயணத்தின் போது எடுக்கப்பட்டதாக இருந்தது. சில படங்களுக்குப் பின், அவனது முடிந்த காதல் வாழ்க்கைப் புகைப்படங்கள் வந்தன.
அது அவனும், அந்தப் பெண்ணும் சுற்றித் திரிந்த நாட்களைப் பறைசாற்றின. கணினியின் முகம் காட்டிய காதல்… கன்னிக்கு கடுகளவும் பிடிக்கவில்லை. வெறுப்பாகவோ? வெறுமையாகவோ? திரையையே பார்த்திருந்தாள். அவன் பின்னே வந்து நிற்பதைக்கூட கவனிக்கவில்லை!
“இதை எதுக்குப் பார்க்கிற?” என்றவனின் குரலில், சட்டென்று எழுந்து “இல்ல. அதுவா வந்திச்சி… நானா எதும் பார்க்கல. ஸாரி, நிறைய ஸாரி” என்றாள்.
“நிறைய ஸாரியா?” என்று சிரித்துக் கொண்டே “ஹே உட்காரு” என்று அவளது தோளைப் பற்றி உட்கார வைத்து, “வா… சேர்ந்தே பார்க்கலாம்” என்றான்.
“இல்ல வேண்டாம்” என்று மறுபடியும் எழுந்தாள்.
“அட! வாம்மா” என்று அவள் கைப்பற்றி இழுத்து அமர வைத்தவன், “உனக்கு நான் எக்ஸ்பிளேன் பண்றேன்! இதெல்லாம் ஸ்டார்டிங்ல எடுத்தது. இது பீச்ல வாட்டர் கேம் போனப்ப! இது பைக் ரைடு போனப்ப” என்று இலகுவாக கூறிக் கொண்டே போனான்.
பின் அவள் முகம் கவனித்து, “எப்படி இருக்கு?” என்றான்.
“ம்ம்ம் நல்லா இருக்கு” என்றாள் பற்றற்ற பதிலாய்!
“மிச்சத்தை இன்னொரு நாள் பார்க்கலாம். வா, சாப்பிடலாம்”
“வேண்டாம் பசிக்கலை”
“ஏன்?”
“தெரியல”
“தெரியலயா? சரி, எனக்கு கம்பெனி மட்டும் கொடு”
“ம்ம்ம்”
“நீ போ. நான் கொஞ்ச நேரத்தில வர்றேன்” என்றான். அவள் போனதும், கடந்த கால காதல் ஞாபகங்களை மனதிலிருந்து அழித்திருந்தவன்… அந்த நொடியே மடிக்கணினியிலிருந்தும் அழித்தான்!
அவன் சாப்பாட்டு மேஜைக்கு வந்து, அவளின் எதிர்ப்புறம் அமர்ந்த பிறகும், அவள் எதுவும் பேசவில்லை!
“என்னாச்சி? சைலன்டா இருக்க”
“ஒன்னுமில்ல”
எழுந்து அவளருகில் இருந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்து, “இதைப் பாரு” என்று அவன் கைப்பேசியைக் காண்பித்தான்.
அதை வாங்கிப் பார்த்தவளுக்கு ஆச்சரியமாக இருந்தது! “இதெல்லாம் எப்ப எடுத்த? சூப்பரா இருக்கு” என்றாள்.
அவன் கைப்பேசியில் காட்டியது எல்லாம் கடற்கரையிலும், கோட்டையிலும் அவளின் கொண்டாட்டங்களின் நிழற்படங்கள்.
“பிடிச்சிருக்கா?” என்று புதுச்சேதி சொல்லும் குரலில் கேட்டான்.
‘ஏன் இப்படி’ என்பது போல், “ம்ன்?” என்று அவன் விழிகளிடம் கேட்டாள்.
“போட்டோஸ் பிடிச்சிருக்கானு கேட்டேன், அதுக்கு ஏன் இப்படிப் பார்க்கிற?”
தன்னையே நொந்துகொண்டு, “பிடிச்சிருக்கு” என்று பதில் தந்தாள். அவன் சிரித்துக் கொண்டான்.
இன்னும் கண்களை அவள் கைப்பேசியில் இருந்து எடுக்கவில்லை. சிலதை அவனிடத்தில் காண்பித்து, “இதெல்லாம் ப்ரைம் போட்டா நல்லா இருக்கும்” என்றாள்.
“சரி, இப்ப சாப்பிடலாமா?”
“ம்ம்ம்”
எழுந்து சென்று, அந்தச் சமையலறையின் சன்னல்களை திறந்துவிட்டான். தென்றலாய் காற்று தவழ்ந்து வந்தது. இருவரும் சாப்பிடத் தொடங்கினர்.
“உனக்குச் சமைக்க தெரியுமா?” என்று கேட்டான்.
“இல்ல. சுத்தமா தெரியாது. கடையில வாங்கிச் சாப்பிடுவேன். இல்லைனா மாவ்ஷி சமைச்சி தருவாங்க. உனக்கு?” என்று பதில் கேள்வி கேட்டாள்.
“சமைக்க தெரிஞ்சா சமையல்காரம்மா எதுக்கு? இவங்க கோவா ஸ்டைல்ல குக் பண்ணுவாங்க. எனக்கு என்னோட பாட்டி சமையல்தான் பிடிக்கும்”
சில வினாடிக்குப் பின், அவன் சாப்பிட்டு முடித்திருந்தான். அவள் இன்னுமே முடித்தபாடில்லை. அதிலும் தென்றல் காற்றில் சிலும்பும் முடிக்கற்றைகளை சரிசெய்தபடியே இருந்தாள்.
அதைப் பார்த்தவன், எழுந்து சென்று வினாடிக்குள் திரும்பி வந்து அவளருகில் அமர்ந்தான். பின் நெற்றி, கழுத்து என புரண்ட கூந்தலை மெதுவாக, அழகாக ஒன்றாக்கி… தான் கொண்டு வந்த பிடிப்பான் கொண்டு அடக்கினான்.
இதை அவன் செய்த பொழுது, அவன் விழிப்பார்வை நேராக அவள் விழியை நோக்கியே இருந்தது. காதல் காவியங்கள் எழுத ஆரம்பித்தன நீலவிழிகள்.
“இப்ப சாப்பிடு. சீக்கிரமா சாப்பிடுவ” என்று எளிதாக சற்றுமுன்னர் நடந்த நிகழ்விலிருந்து மீண்டு கொண்டான்.
ஆனால் அவளால் முடியவில்லை. இந்த நிலையை மாற்றியே ஆகவேண்டும் என்று எண்ணி, “நீயா எதும் உன் லவ்வர்கிட்ட பேசியிருக்கலாம். நான் பேசி தப்பாயிருச்சோ?” என்றாள்.
“இல்ல. தப்பெல்லாம் சரி செஞ்சி கரெக்டா போய்கிட்டு இருக்கேன். அதனால அதைப்பத்தி பேச வேண்டிய அவசியமே இல்லை”
“சரி சரி” என்றவள், “ஆனா உன் லவ்வர் அழகா இருக்காங்க. போட்டோலயும் சரி… நேர்லயும் சரி” என்றாள்.
“தற்பெருமை”
“என்ன சொல்ற… புரியல?”
“லிஸன்! புரியற மாதிரி சொல்றேன். உனக்கு ஹிந்தி தெரியுமா?”
“ரொம்ப தெரியாது”
“கொங்கணி?”
“சுத்தமா தெரியாது. ஏன் கேட்கிற?”
“இங்க இருக்கிற சமையல்காரங்களுக்கு கொங்கணி மட்டும்தான் தெரியும். எப்படி? நீ கொங்கணி கத்துக்கிறீயா? இல்லை தமிழ் தெரிஞ்ச யாரையாவது சமையலுக்கு வைக்கவா? யோசிச்சி சொல்லு” என்று சொல்லி எழுந்து, அவன் அறைக்குச் சென்று விட்டான்.
விடை அறிந்த வினாவே என்றாலும் நீலவிழிகள் வினவின! இனிமேல் பழுப்பு விழிகள்தான் மெளன இமைகளைத் திறந்து… இதுவரை நீலவிழிகள் எழுதிய காதல் கடிதங்கள், கவிதைகள் மற்றும் காவியங்களை சத்தமாகப் பார்த்திட வேண்டும்!!
