Kathambari Novels
அத்தியாயம் – 7
முதல் நாள்!
கோவா கடற்கரைகள், சூரிய உதயத்தைக் காட்டிலும் அஸ்தமன பொழுதிலே அழகாக காட்சித் தரும்!
அவன் முதலில் அவளைக் கூட்டிச் சென்ற இடம் கேன்டோலிம் கடற்கரைக்கு! இது கோவாவின் வடக்குப் பகுதியில்… பாஹா கலிங்குட்டே கடற்கரைகளுக்கு இடையே அமைந்துள்ளது. மற்ற கடற்கரைகளைக் காட்டிலும் மக்கள் கூட்டம் குறைவுதான்!
கோவாவின் ‘கிளப் கல்ச்சர்’ என்ற சுவடே இல்லாமல் அமைதியாக இருக்கும்!
அங்கங்கே யோகா பயிற்சிகள் நடந்து கொண்டிருந்தன. வெகுசிலர் வெண் மணற்பரப்பில் படுத்து சூரியக் கதிர்களில் நனைந்து கொண்டிருந்தனர்.
நிழற் குடைகளும், கடற்கரை குடில்கள் (beach shacks), சூரிய ஓய்விடங்களும் (sun lounges) இருந்தன. சிறிய மணற்குன்றுகள் அதிகம் என்பதால், நடப்பது சற்றே கடினம்.
மக்கள் கூட்டம் அதிகமில்லா விடியற்காலைப் பொழுதில், அவர்கள் இருவரும் கடற்கரையில்!
சேலை கட்டிய நீலக்கடலாய் அவள்! அலையின் வளைவுக்குச் சளைக்காமல் போட்டியிடும் கற்றைக் கூந்தல்! மடிப்பில்லாமல் விரித்து விடப்பட்டிருந்த சேலை முந்தானை!
புடவையின் கீழ் ஓரத்தில் நுரைகளில் ஈரம் படாமல் இருக்க தூக்கிப் பிடித்துக் கொண்டு கடலை ரசிக்கச் சென்றாள். அவனோ கடற்கரை மேடுகளிலேயே நின்று கொண்டான்.
“நீயும் வா” என்றாள்.
“இல்ல… எனக்கு இந்த மாதிரி கடல்ல விளையாடுறது பிடிக்காது”
“வரலாம்ல?” என்று கெஞ்சினாள்.
“சொல்றேன்ல பிடிக்காதுனு. எனக்கு இப்படி நின்னு பார்க்கத்தான் பிடிக்கும்”
“நீ சொல்றதெல்லாம் நான் செய்றேன். ஏன் நீ மட்டும் செய்ய மாட்டிக்கிற?”
“பிடிக்காதுனா… யார் சொன்னாலும் செய்ய முடியாது. நீயே சொன்னாலும், சரியா?”
“இனிமே, நீ சொல்றதுல எதும் பிடிக்கலைனா, நானும் செய்ய மாட்டேன்”
“குட். பாலோவ் இட்”
“அப்படினா நீ செய்றதுல எனக்கு எதும் பிடிக்கலனா?” என்று அவளாக வலிய வந்து அவனிடம் மாட்டினாள்.
“இப்பவே சொல்லு. உனக்கு பிடிக்கலைன்னா… ஹண்ட்ரட் பெர்சென்ட் அதை செய்யமாட்டேன்” என்றான் அவன். அதோடு நிற்காமல் அதுவரை சுமையாக வைத்திருந்த கண்ணாடியை எடுத்து கண்களை மறைத்து அணிந்தான்.
அவன் கண்ணாடி… கடலையும், அவளையும் அதில் பிரதிபலித்தது!
“கடல்ல விளையாடனும்” என்றாள், அவனிடமிருந்து மீளும் எண்ணத்தில்.
“கடல் இங்கதான் இருக்கும். பதில் சொல்லிட்டுப் போ”
“ஆனா… நாம கொஞ்ச நேரம்தான இங்க இருப்போம். அதான்”
“தப்பிச்சிட்ட… போ” என்று அவன் சொன்னவுடன், ஓடோடிச் சென்றாள்.
ஒவ்வொரு முறையும் நுரை பொங்க ஓடிவருகின்ற கடல் அலைகள், அவளது கால்களை நனைக்க வந்தன. அந்த அலைகளுக்குப் பயந்து துள்ளி வந்திடும் புள்ளிமானாய் ஓடி வந்தவள்… மெல்லிய உரசல்களுடன் அவனருகில் நின்று கொண்டாள்.
அவனுக்குத்தான் திண்டாட்டமாகிப் போனது. எதனிது அழகை ரசிப்பது என்று! நீலக்கடலையா? பழுப்பு விழிகளையா?
அலைக்குப் பயந்து கரை வருவதும், கடல் நோக்கிச் செல்லும் அலையைத் துரத்துவதுமாக… அவளது அந்த நேரத்து குதூகலம், அவளின் அகவையைப் பதிமூன்றாக அறியப்படச் சொன்னது.
இப்படியே சிறிது நேரம் விளையாடியவள், அங்கு வந்த இளைஞர் கும்பலைக் கண்டவுடன், அவனருகில் வந்து ஒட்டி நின்று கொண்டு “போதும் போலாமா?” என்றாள்.
“என்ன ஸடனா? இன்னும் கொஞ்ச நேரம் விளையாடு” என்றான்.
“வேண்டாம் போலாம்”
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதுதான், அந்தக் கும்பல் அவர்களைக் கடந்து, சற்றுத் தூரத்தில் சென்று கடலை ரசிக்கும்படி அமர்ந்துகொண்டனர். அவனுக்கு அவளைப் புரிந்தது.
“நான் இருக்கேன்ல. நீ போய் விளையாடு” என்றான்.
மறுப்பாகத் தலையைசைத்தாள்.
“கொஞ்ச நேரம் நடக்கலாமா?”
திரும்பவும் மறுப்புத் தலையைசைப்பு மட்டுமே! ‘பள்ளி சென்றிட மறுக்கும் பாலகி’ போல் இருந்தது… அவளும், அவளுடைய தலையசைப்பும்!
“சரி வா” என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.
கடற்கரை மணல்வெளியில், எதுவும் பேசிக் கொள்ளாமலேயே வீடு நோக்கி நடந்தனர். ஆனால் வீட்டிற்கு வந்து சேர்ந்ததும், ஏதோ சீனச்சுவர் நீளத்திற்கு உரையாடல் நடந்த உணர்வு இருவரிடத்தும்!
வீடு வந்தவர்களுக்கு, அவன் சமையல்காரர் கைப்பக்குவத்தில் மிதமான சூட்டில் காலை உணவுத் தயாராக இருந்தது.
“போய் ரெப்ரெஸ் பண்ணிட்டு வா. அப்புறமா சாப்பிடலாம்” என்றான். சரி என்று அவளின் அறைக்குச் சென்றாள்!
சிறிது மணித்துளிகள் கரைந்த பின், அவள் குளித்து முடித்துவிட்டு வெளியே வரும்போது, சாப்பாட்டு மேஜையில் அவளுக்காகவே காத்திருந்தான். அவன் எதிர்ப்புறம் இருந்த மூங்கில் நாற்காலியில் வந்தமர்ந்தாள்.
அதே அலையலையான கேசம்! அங்கங்கே ‘நாங்கள் உன்னை விட கொடுத்து வைத்தவர்கள்’ என அவனை ஏளனம் செய்யும், துவட்டப்படாமல் விட்டுவிட்டு நீர்த்துளிகள்! அணிலின் அழகு நிறத்தில் சேலை! அதிலே கருப்பு வர்ண சிறு பூக்களின் அச்சுகள்!
முந்தானையை வித்தியாசமான முறையில், புடவையின் ஓரங்களின் கறுப்பு வண்ண பெரிய பூக்கள் தெரியும்படி ஊக்கு கொண்டு அடக்கியிருந்தாள்!
அவளை அவன் ரசித்துப் பார்த்தான்!
அவளுக்கோ அந்த நீல விழிகளுக்கு மேல் அவனிடம் யாசிக்க ஒன்றுமே இல்லை என்பது போல் பார்த்தாள்! இப்பொழுதும் அவனுக்குச் சந்தேகம் ‘எதற்காக இவள் இப்படிப் பார்க்கிறாள்?’ என்று!
“இங்க சமைக்கிறவங்க சமையல்ல எக்ஸ்பெர்ட். அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும்” என்று அவளுக்குப் பரிமாறினான்.
முதல் கவளத்தைக் கண்மூடி கடவுளுக்கு உருண்டை பிடித்து வைத்துவிட்டு உண்ண ஆரம்பித்தாள்.
“இது கோவாவோட ஸ்பெஷல் கோவான் பிஸ் கரி”
“ம், தெரியும். ஆனா அடிக்கடி சாப்பிட்டது இல்லை”
ஆம், கோவா உணவுகளில் பிரதானமானது மீன் மற்றும் நண்டு வகைகளே! தேங்காய் பால் அதிகமாக ஊற்றி மசாலா பொடிகள் கலந்து செய்யப்படும். இதற்கு ‘கோவான் பூட்‘(goan food) என்று சொல்லுவார்கள்.
“அப்ப இன்னும் கொஞ்சம் எடுத்துச் சாப்பிடு”
“வேண்டாம். நான் நிறைய சாப்பிட்டுப் பழக்கம் இல்லை” என்று மறுத்தாள்.
‘ஏன்?’ என கேட்க அவனுக்கு விருப்பமில்லை. ‘இதுதான் காரணம்’ என்று கூற அவளுக்கும் மனம் இல்லை. பின் அவளே அமைதியைக் கலைத்தாள்.
“அடுத்து எந்த இடத்துக்குப் போறோம்”
“சஸ்பென்ஸ்” என்று அதோடு நிறுத்தி விட்டான்.
சிறிது நேரத்திற்கு பிறகு இருவரும் கிளம்பினர். காரில் ஏறியவுடனே, “ஸாங் போடவா?” என்றான்.
“என்ன பாட்டு இருக்கு?”
“உனக்கு என்ன பாட்டு வேணும்?”
“ம்ம்… எனக்கு ‘விழிகளே விழிகளே’ பாட்டு கேட்கணும்”
“ஓ… நான் கேட்டதில்ல. என்ன மூவீ?”
“ரேனிகுண்டா”
“ஓ… ஓகே! இப்ப இல்ல. டவுன்லோடு பண்ணிக்கலாம்”
“இல்லையா? என் தம்பினா உடனே மொபைல்ல, இந்தப் பாட்ட போட்டுக் கொடுத்திருப்பான்”
“ஹலோ! நான் டிரைவ் பண்றேன். எப்படி போட முடியும்? மோர்ஓவர் இதுக்கு எதுக்கு தம்பி வேனும்? உன் மொபைல்ல போட்டு கேளு! இல்லனா என்னோட மொபைல்ல போட்டு, ப்ளூடூத்ல கனைக்ட் பண்ணி கார்ல ப்ளே பண்ணு”
“அதெல்லாம் வேண்டாம். என் தம்பிதான், எதுனாலும் எனக்காக உடனே செய்வான்”
‘என்ன? ஒரே தம்பி புராணமா இருக்கு!’ என்று நினைத்து, அவளது கவனத்தை மாற்ற வேண்டுமென, “உன்னோட ஸேரி டிசைன் நல்லா இருக்கு” என்றான்.
“நல்லா இருக்குல. தம்பி எடுத்து கொடுத்தது. அவனும் நிறைய டிரஸ் டிசைன் பண்ணுவான். நல்ல புத்திசாலி பையன். ஸ்டைலா, அழகா இருப்பான். என்ன இங்கிலீஷ் பேசற நீ? என் தம்பிலாம் எப்படி படபடன்னு பேசுவான் தெரியுமா? புரியவே செய்யாது.
அவனுக்கும் கொங்கணி, ஹிந்தி தெரியும். அவ…” என்று அவள் பேசிமுடிக்கும் முன்னே, ‘போதும்‘ என்பது போல் கைகாட்டினான்!
“ஏன் என்னாச்சி?” என்றாள்.
“டேஸ்போர்டல ஒரு பாக்ஸ் இருக்கும். அதை எடுத்து தா” என்றதும், அவளும் அவனுக்கு உதவி செய்வதற்காகவே பிறந்தவள் போல், நொடிக்குள் எடுத்து “இந்தா” என்றாள்.
“ஓபன் இட்”
திறந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி! “இப்ப எதுக்கு கண்ணாடி போட போடுற?” என்றாள்.
“எரியுது… ஜ மென்ட் கண்ணு எரியுது”
“வெயிலே அடிக்கலயே?”
“ஆமா. ஆனாலும் பாரேன் எரியுது” என்றவன் வார்த்தைகளின் உள்ளர்த்தம் அவளுக்குப் புரிந்த போயிற்று. “சரி நீயும் நல்லா இங்கிலீஷ் பேசற” என்றாள்.
“அவ்வளவுதானா?”
“நீ கொங்கணி ஹிந்தி பேசி, நான் பார்த்ததே இல்லையே?”
“நீ கிளாஸ கொடும்மா” என்றான் அவளிடமிருந்து பிடுங்கும் முயற்சியைச் செய்து கொண்டு!
“சரி, சரி நீயும் நல்லா கொங்கணி, ஹிந்தி பேசற” என்றாள் கண்ணாடியை, அவனிடம் தராமல் இருக்க முயற்சி செய்தபடி!
“அவ்வளவுதானா?”
“நீயும் நல்ல அறிவாளி. போதுமா?”
“இல்லையே! ஏதோ ஸ்டைலு அது இதுன்னு சொன்ன…”
“சரிப்பா… நீயும் ஸ்டைலா அழகா இருக்க” என்றாள் அவனைப் பார்த்து!
அவனும் கொஞ்சும் வஞ்சம் கொண்ட புன்னகையுடன் அவளைப் பார்த்தான்!
“எல்லா சொல்லிட்டேன். வேற எதுவும் சொல்ல சொல்லாத” என்றாள்.
“இன்னும் எதுக்கு அந்த கிளாஸ கைலயே வச்சிருக்க. கை வலிக்கப்போகுது. உள்ள வச்சிரு”
குனிந்து அதை வைக்கும் தருணத்தில்… அவளது மெளன சிரிப்புகளுடன், கொஞ்சம் நாணமும் சேர்ந்து கொண்டது.
சற்று மணித்துளிகள் கார் பயணத்திற்குப் பிறகு அவன் அவளை அழைத்துச் சென்ற இடம், அவளது வாழ்க்கையையே திருப்பிப் போட்ட அந்த சாலைக்கு!
அந்த சாலை… பத்து வருட இடைவெளியில் பல்வேறு மாற்றம் பெற்றிருந்தது. சாலையின் இருபுறமும் சிறிய பெரிய அங்காடிகள். அந்த பூங்காவின் சாயல் இன்று நவீனமயமாக மாறி இருந்தது.
அதைப் பார்த்துக் கொண்டே இருவரும் அமைதியாக இருந்தனர். பூங்காவின் எதிர்ப்புறம் நின்றதால், “வா… கிராஸ் பண்ணி அந்தப் பக்கம் போகலாம்” என்றான்.
“இல்ல வரமாட்டேன்”
“ஏன்?”
“இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த?”
“பார்க் சூப்பரா இருந்ததுன்னு நீதான சொன்ன?”
“சொன்னேன். அதுக்காக இப்படியா?”
“அப்ப நீ வரமாட்ட?”
“ஆமாம்”
“சரி, நான் போறேன்” என்று நடக்க போனான். அவன் திடீரென சாலையைக் கடக்க முயன்றதால், அதிவேகத்தில் வந்த வாகனம் ஒன்று, சசசர்ர்ர்ர் என்ற ஒலியுடன் நிறுத்தப்பட்டது.
அவனுக்கும் வண்டிக்குமான இடைவெளி மிக மிகக் குறைவுதான்!! வாகனம் நின்றவுடன், அவன் சட்டையைப் பிடித்து இழுத்து நடைபாதையில் அவளுக்கு அருகில் நிறுத்திக் கொண்டாள்.
அதோடு மட்டுமின்றி, “நீ என்ன லூசா? வண்டியைப் பார்த்து போகமாட்டியா? இடிச்சிருந்தா என்ன ஆகிருக்கும்? ஒரு ரோடுகூட கிராஸ் பண்ண தெரியாதா? இதுகூட தெரியாமா நீயெல்லாம் என்ன பிசினஸ் பண்ண போற?
இதுல கோவால ஆறு வருஷமா இருக்க? ச்சே உனக்கும் எதுவும் ஆயிடுச்சினா எப்படி…?” என்று உணர்ச்சிவசப்பட்டு தன் மனதின் உணர்வுகளைக் கொட்டிக் கொண்டிருந்தவளை, ஒரு குரல் தடுத்தது!
இந்தியில், ‘என்ன எதும் பிரச்னையா?’ என்றது அந்த குரலுக்குச் சொந்தமான பொதுஜனம்.
‘இவ்வளவு கத்தினோமா’ என்பது போல் அவளும், ‘யாருய்யா அது, இந்த சீன்ல தேவையே இல்லாம’ என்பது போல் அவனும், அவரைப் பார்த்தனர்.
அவரிடம், ‘பிரச்சனை இல்ல. நீங்க போங்க’ என இந்தியில் சொன்னான். ‘ஏன் கத்தினாங்க?’ என்று கேட்க, ‘இது எங்க பிரச்சனை, இடையில் வரவேண்டாம்’ என்று சொன்னதும், அவர் போய்விட்டார்.
அந்தப் பொதுஜனம் சென்றபின் அவளிடம் திரும்பி, “நீ திட்டும்மா” என்றான்!
ஆனால் அந்த இடைவெளியில் சுதாரித்துக்கொண்டவள் “திட்டவா?” என்றாள்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அதான செஞ்ச? கம் ஆன்”
“எல்லாரும் பார்க்கிறாங்க?”
“நீ ஏன் அவங்களை பார்க்க?” என்றவன், ‘ஏன் எல்லாரும் இங்க பார்க்கிறீங்க. உங்க வேலைய பாருங்க’ என்று ஹிந்தியில் அவர்களிடம் சொல்லிவிட்டு, “ம் சொல்லு” என்றான் அவளிடம்.
“ஒன்னுமில்ல” என்று முடித்துக் கொண்டாள்.
“இருக்கு. நான் எப்படினு நிறுத்தின. சொல்லு சொல்லு, அப்ப சொன்ன மாதிரி பாஸ்ட்டா சொல்லு”
“ம்… ம் நா, நா… நான்… எப்ப, நான் எப்படி கோவாவ சுத்திப் பார்க்க முடியும்னு கேட்க வந்தேன்”
அவன் உடல்மொழி, ‘நீ பொய் சொல்ற’ என்பது போல் இருந்தது.
“நான் பொய் சொல்லல” என்றாள்.
“அஃப்கோர்ஸ். ஆனா உண்மையை மறைப்ப”
“உனக்கென்ன? நான் பார்க் வரனும். அதான? வா போலாம்” என்றாள்.
‘அவளைச் சம்மதிக்க வைத்தாயிற்று’ என்ற சந்தோஷத்தில் அவனும், ‘இப்படி சரணடைகின்றோமே’ என்ற சஞ்சலத்துடன் அவளும் சாலையைக் கடந்தனர்!
“ஆக்சிடென்ட் அந்தப் பக்கம் நடந்திச்சா?” என்றான்.
“எல்லாம் மாறியிருக்குது. ஆனா அந்தப் பக்கம்தான் இருக்கும். ஏன்னா பார்க் பக்கமா இருந்துதான நாங்க பார்த்தோம்” என்றாள் எதிர்பக்க சாலையைக் காட்டி!
“அம்மா கைப்பிடிச்சிட்டு, இந்தப் பக்கம்தான் நடந்துக்கிட்டு இருந்தேன். தம்பி இங்கதான் கம்பியைப் பிடிச்சி விளையாடினான். அப்பதான்” என்று சம்பவம் பற்றிப் பேச ஆரம்பித்தாள்.
“என்ன கலர் டிரஸ் போட்டிருந்த?” என்று பேச்சை மாற்றினான்.
நன்றாக யோசித்து, “ம், ஆரஞ்சு கலர்” என்று ஞாபகப்படுத்திச் சொல்லிவிட்டு, “அப்பதான் அப்பா அம்மாவைக் கூப்பிட்டாங்க. பாட்டிக்கு முடியலனு…” என அவள் பேசும் போதே, “பாட்டி தாத்தாவை ரொம்ப பிடிக்குமா?” என்றான்.
“நாங்க அவங்க கடைசி பேரன் பேத்தி. அவங்களுக்கும் நல்ல வயசாயிடுச்சி. அதனால அந்த அளவுக்குப் பேசினது கிடையாது” என்றவள் “அம்மா… அப்பா கூப்பிட்ட உடனே…” என்கையிலே, “உங்க அப்பா, பெரியப்பா வேலை பார்த்த ஸ்கூல்லதான் நீயும் உன் தம்பியும் படிச்சீங்களா?” என்று கேட்டான்.
“ஆமா… அப்பா ரொம்ப திட்ட மாட்டாங்க. பெரியப்பாதான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்” என்றவள் “அப்பதான் அந்தச் சத்தம்…” என்று நிறுத்தினாள்.
“பேமிலிய ரொம்ப மிஸ் பண்றியா?” என்று நேரடியாகவே கேட்டான்.
பதில் சொல்வதற்குள் அந்தப் பழுப்பு விழிகள் பரிதவித்துப் போயின! அதைப் பக்குவமாக கையாள வேண்டும் என்று நினைத்தன நீலவிழிகள்!
வார்த்தைகள் வற்றியபடியே நின்றவளைப் பார்த்தவன்… திடுமென்று அவள் கைகோர்த்துக் கொண்டான். ‘என்ன’ என்பது போல் பார்த்தாள்.
“பேசிக்கிட்டே நட” என்றான்.
அவளையும் அறியாமல் தாயின் கைப்பிடித்து நடந்தது ஞாபகத்தில் வந்தது. அதைவிட இன்னொன்று அவளது மனதை நிரப்பியது. அது என்னவென்றால், ஒரு ஆணின் கரம் இத்தனை பாதுகாப்பு தரவல்லதா?
அவள் அறியாத ஒன்றல்லவா??
அந்தப் பாதுகாப்புத் தந்த சுகத்தில், அவள் அதலபாதாளத்திற்குச் செல்வது போலிருந்தது!
ஆனால் அது பாதாளம் அல்ல. அந்தப் பழுப்பு விழிகளைப் பாசமாக பார்த்துக் கொள்ளத் துடிக்கும் நீலவிழிகளின் இதயம் என்று அவளுக்கு எப்படிப் புரிய வைப்பது!!
