Kathambari Novels
அத்தியாயம் – 4
விழத்தொடங்கியவள், உடனே சுதாரித்துச் செய்த செயல்… சாவியில் இருந்து தனது கைகளை எடுத்துக் கொண்டதுதான்!
“உன் பாஸ்ட்ட சொல்லனும்னு தோணிச்சினா சொல்லு. இல்லனா பரவால்ல. லீவ் இட்! ஆனா நீ சொல்லனா… நான் கிளம்பறேன்” என்றான், நேற்றைய பொழுதோடு பேசப் பிடிக்காதவன்!
“கிளம்ப போறீயா?” என்றாள் பரிதவிப்புடன்.
“சொன்னேனா… இருப்பேன்! இல்லனா…” என யோசிப்பது போல் இழுத்தான்.
“சொல்றேன், சொல்றேன்! போகாத” என்று பதறிப்போய் சாவியில் திரும்பவும் கை வைத்துக் கொண்டாள்.
“குட். சொல்லு”
“மொத்த குடும்பமும் கோவால நியூஇயர் கொண்டாட, பத்து வருஷத்துக்கு முன்ன தமிழ்நாட்டிலிருந்து வந்தோம்”
“மொத்த குடும்பம்னா… யாரெல்லாம்?”
“தாத்தா, பாட்டி, அம்மா அப்பா பெரியப்பா இப்படி எல்லாருமே”
“பெரியப்பாவுக்கு கல்யாணம் ஆயிருச்சா?”
“பெரியப்பானு சொல்றேன், கல்யாணம் ஆயிருச்சானு கேட்கிற?”
“கேள்வி கேட்டா பதில் சொல்லு”
“ம், ஆயிடுச்சி”
அவன் அடுத்த கேள்வி கேட்க வாய் திறக்கும் முன், “ஒரு நிமிஷம், ரெண்டு பெரியப்பாவுக்குமே கல்யாணம் ஆயிருச்சு” என்றாள் அவசரமாக.
‘என்னோட கேள்வி அது இல்லையே’ என்பது போல் தலையை அசைத்துக் கொண்டு, “பெரியப்பாவுக்கு பசங்க இருக்கிறாங்களா?” என்றான்.
‘அய்யோ’ என்று முகத்தை வைத்துக் கொண்டு, “பர்ஸ்ட் பெரியப்பாவுக்கு ஒரு பையன். ரெண்டாவது பெரியப்பாவுக்கு, ரெண்டு பொண்ணுங்க” என்றாள்.
“அப்பா என்ன வேலை?” என்று அவன் முடிக்கும் முன்பே, ‘ஏன் இப்படி’ என்பது போல் பார்க்க, “நீ என்னைய எத்தனை கேள்வி கேட்ட… இது என்னோட டர்ன் பதில் சொல்லு” என்றான்.
“எங்க வீட்ல எல்லாருமே ஸ்கூல் டீச்சர்ஸ்தான்”
“எல்லாருமே டீச்சரா? டீச்சர் பொண்ணுக்கிட்டயா இத்தன கேள்வி கேட்டேன். சரி சொல்லு” என்று அலப்பறை செய்தான்.
சிரித்து, முறைத்துக் கொண்டே, “எல்லாரும் சேர்ந்து தமிழ்நாட்லருந்து, சின்ன பஸ் பிடிச்சி கோவா கிளம்பி வந்தோம். டிராவல் எவ்ளோ ஜாலியா இருந்திச்சு தெரியுமா?! சாப்பாடெல்லாம் கட்டி எடுத்திட்டு வந்தோம். உனக்கு தெரியுமா? எனக்கு எங்க அம்மா, பெரியம்மா சமைக்கிறதைவிட, என்னோட பெரியப்பா சமையல்தான் பிடிக்கும்” என்றாள்.
“பெரியப்பா சமைப்பாறா?”
“ம்… அவர் செய்ற புளிசாதம் அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும்… என் பேவரைட்” என்றவளின் நாக்கில் இப்பவும் பெரியப்பா புளிசாதத்தின் ருசிக்கு, உமிழ்நீர் சுரந்தது.
“புளிசாதம்? வித்தியாசமான டேஸ்ட்தான் உனக்கு. அடுத்த என்னாச்சி?”
“தமிழ்நாட்டிலிருந்து கோவாகுள்ள பஸ் என்டர் ஆனதும்… அவ்ளோ நேரம் பஸ் ஓட்டுனதால டிரைவர் டயர்டா இருப்பாருன்னு… அப்பாதான், ‘பஸ்ஸ ஓரமா நிறுத்திட்டு, பக்கத்திலே எதும் கடை இருந்தா டீ குடிங்கனு’ சொன்னாரு”
“அப்பா ரொம்ப ஸாப்ட் ஹார்ட்டா?”
“ஆமாம்” என்றவளுக்கு அப்பாவின் உருவம் கண் முன் வந்தது. அது, அவளது இன்றைய நிலையை அவரிடம் முறையிட்டு, எட்டிப் பார்க்கச் செய்தது ஒரு சொட்டுக் கண்ணீரை!
ஆனால் அடுத்த நொடி சமாளித்துக் கொண்டு, “மத்தவங்க எல்லாம் அசந்து தூங்கினாங்க. ஏன்னா நைட் பஸ்ல அப்படி ஒரு ஆட்டம். ஆனா அன்னைக்கு என்னமோ எனக்கும் தம்பிக்கும் தூக்கமே வரல. சீக்கிரமா முழிச்சிட்டோம்” என்றாள்.
“தம்பி இருக்கானா? நீ சொல்லவே இல்ல”
முறுவலித்தவள், “ம் ம் இருக்கான்… எல்லாரும் தூங்கிட்டு இருந்தாங்க. நானும் தம்பியும் பஸ்லருந்த ஜன்னல் வழியா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தோம். அப்படிப் பார்க்கிறப்ப எதிர்ல பார்க் தெரிஞ்சது. சூப்பரா இருந்தது தெரியுமா?
உடனே தம்பி போய், ‘பார்க் போகணும்’னுஅப்பாகிட்ட கேட்டான். ஆனா அவர் ‘முடியாது. எல்லாரும் தூங்கிறாங்க. இப்ப வேண்டாம்னு’ சொன்னாரு. ஆனா அவன் பார்க் பாக்கணும்னு ரொம்ப அழுது அடம்பிடிச்சான்”
“அடம் பிடிச்சானா… என்ன வயசு?”
“அவனுக்கு அப்ப பத்து வயசு”
“பத்து வயசுனா, சின்ன பையன்ல? அப்ப அடம்பிடுச்சா ஓகே”
“கொஞ்ச நேரம்தான்-னு கெஞ்சினான். அவ்ளோதான் அப்பா ஒத்துக்கிட்டார். அப்பா அம்மாவை எழுப்பி, ‘ரெண்டு பேரும் பார்க் பார்க்க ஆசைப்படுறாங்க. ரோட்ட கிராஸ் பண்ணி கூட்டிட்டு போய் காட்டு’னு சொன்னாங்க. அம்மாவும் ‘சரின்னு’ சொல்லி எங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டுப் போனாங்க”
“உன்னோட அம்மா ஒன்னுமே சொல்லலயா?”
“ம்கும், அப்பா என்ன சொன்னாலும் அம்மா கேட்பாங்க. அதேமாதிரி அம்மா சொன்னாலும் அப்பா கேட்பாங்க”
“கிரேட் லவ். நைஸ் கபிள். என்ன பார்க்“ என்றான். அவனுக்குப் புரிந்தது ஏதோ விபரீதம் நடந்திருக்கும் என்று! திரும்பவும், அந்தப் பாதிப்புக்குள்ளே அவளை முழுமையாக போகவிடக் கூடாது என்பதற்காகவே இத்தனைக் கேள்விகள்!
“பேர் தெரியாது. அது விடியக்காலைலயா… அதனால பார்க் பூட்டியிருந்திச்சு. உள்ள போக முடியலை. இருந்தாலும் நானும் தம்பியும் ஜாலியா இருந்தோம். பார்க் சுத்தி வெளியில கம்பி போட்ருப்பாங்கள, அது வழியா பார்த்துகிட்டு இருந்தோம்.
அதுக்கப்புறம் அந்தக் கம்பியில ஏறி தம்பி விளையாடினான். நான், அம்மா கையப் பிடிச்சிக்கிட்டு பேசிக்கிட்டே நடந்தேன். திடீர்னு ஒரு சத்தம்”
“என்னாச்சு?” என்று பதறினான்.
“ஒன்னும் இல்ல. அப்பாதான் அம்மாவ கூப்பிட்டாரு. என் பாட்டிக்கு ஆஸ்துமா பிரச்சனை உண்டு. அதனால அப்பப்ப மூச்சுத்திணறல் வரும். அன்னைக்கும் வந்திருச்சிப் போல. அதான் மத்தவங்களை எதுக்கு எழுப்பனும்னு, அம்மாவை அப்பா கூப்பிட்டாங்க”
“ஓ” என்றவனின் மனதில் இன்னும் பதற்றம் குறையவில்லை!
“அம்மா, எங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டாங்க. ‘வரமாட்டேனு’ திரும்பியும் தம்பி அடம்பிடிச்சான். அம்மா திரும்பி பார்த்தப்போ டிரைவரும் வந்த மாதிரி தெரியல. அதான் அம்மா என்கிட்ட, ‘தம்பிய பத்திரமா பார்த்துக்கோனு. இப்ப வந்திருவேனு’ சொல்லிட்டு போனாங்க.
அதுக்குள்ள டிரைவர் வந்திருப்பார் போல, பஸ் பக்கத்துல அப்பாவும், அவரும் நின்னு பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்படியே அப்பா பேசிக்கிட்டே… எங்களை கவனிச்சிக்கிட்டும் இருந்தாங்க. அப்போதான் அது நடந்துச்சு” என்ற அவளது வார்த்தைகள் தொய்ந்தன!
“என்ன நடந்துச்சு?” என்றவனின் மூளை என்னென்னமோ யூகித்தது!
“பெரிய கண்டைனர் லாரி… கன்ட்ரோல் இல்லாம வந்து… பஸ்ல மோதிருச்சி! ஆக்சிடென்ட்னு சொல்றதெல்லாம் சாதாரண வார்த்தை. பஸ்ல இருந்தவங்க, பக்கத்திலே நின்னவங்க, அந்த ஓரத்தில இருந்த கடை… எல்லாமே ஓரே நிமிஷத்ல…” என்று மேல் நோக்கி கை காண்பித்தாள்!
“நீ பார்… பார்த்தியா?“ என்று அவனது கேள்வி தந்தியடித்தது!
“கண்ணுக்கு முன்னாடிதான நடந்தது. எனக்குப் புரிஞ்சது. ஆனா அவ்வளவா தம்பிக்குப் புரியல. கொஞ்ச நேரத்திலயே புரியாம அழ ஆரம்பிச்சான். என்ன சொல்லி சமாளிக்கன்னுகூட எனக்குத் தெரியல. சுத்தியும் பயங்கற கூட்டம் கூடிருச்சி.
அந்த கூட்டத்தில நுழைஞ்சி நாங்களும் போய் பார்த்தோம். ஆனா கொஞ்ச நேரத்துக்கு மேல பார்க்க முடியல. அம்மா என் கைப்பிடிச்சி நடந்தது, அப்பா எங்களைப் பார்த்தது, அம்மா எங்கிட்ட பேசினது… இது எல்லாம் ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடிதான நடந்திச்சி?!
அதுக்குள்ள எப்படி இதெல்லாம்? எவ்வளவு சந்தோஷமா வந்தோம். ஆனா…” என்று கலங்கிய கண்களுடன், வேதனையை மறைத்து, கழுத்து நரம்புகள் புடைக்க சொன்னவளால்… அவன் மனம் கரைந்தது!
அவள் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டே, “ஆம்புலன்ஸ் வர்ற வரைக்கும் யாராலயும் எதுவுமே செய்ய முடியலை. அவ்வளவு மோசமான ஆக்சிடெண்ட். ஓரமா நின்னு நானும் தம்பியும் அழுதுக்கிட்டே இருந்தோம். ப்ச்… வேற என்ன செய்ய முடியும் சொல்லு?” என்று வெறுமையைத் தாங்கி வந்தன அவள் வாய் வார்த்தைகள்!
“கொஞ்ச நேரம் கழிச்சி போலீஸ் வந்தாங்க, நாங்க அழுறத பார்த்து, என்கிட்ட ஏதோதோ கேள்வி கேட்டாங்க. எனக்கு என்ன லாங்குவேஜ்ல பேசினாங்கனே புரியல” என்று அவனைப் பார்த்தாள்.
“ஹிந்தி இல்லனா கொங்கனியா இருக்கும்” என்றான். அவனுக்கு இப்பொழுது அந்த பழுப்பு விழிப் பார்வையின் அர்த்தங்கள் புரிந்தன. அதை வாசிக்கத் தொடங்கினான்!
“ம், அப்புறமா அவங்க கொஞ்சம் இங்கிலீஷ் கலந்து பேசினாங்க. ஓரளவுக்குப் புரிஞ்சுச்சு”
“என்ன கேட்டாங்க?”
“என்ன கேட்டாங்க… இந்த மாதிரி யாரு? என்ன? எங்க இருந்த வர்ரீங்க?”
“நீ சொன்னயா?”
“ம்ம்… தமிழ்நாட்டிலிருந்துனு சொன்னேன். தமிழ்நாட்டில எங்கனு கேட்டாங்க. திருச்சினு சொன்னதும், அவங்க வீட்டு அட்ரஸ் கேட்டாங்க. எங்களை அனுப்பி வைக்கிறோம்னு சொன்னாங்க. நான் யோசிச்சேன்”
“அட்ரஸ் கூட தெரியாதா?” என்றான் எரிச்சலாக.
“அவங்க கேட்டது வேற யாரோட அட்ரஸ். நான் என்ன சொல்ல முடியும்னு சொல்லு. அதுவும் அந்த வயசுல” என்று அவனைப் பார்த்தாள். அவனும் பார்த்தான்.
அவன் பார்வையிலே ‘என்ன வயது’ என்ற கேள்வி இருந்தது. “எனக்கு அப்போ பதிமூனு வயசு” என்று அவளும், நீலவிழிகளை வாசிக்கத் தொடங்கினாள்.
“எனக்குத் தெரிஞ்ச சொந்தம்னா பெரியப்பா, பாட்டி, தாத்தா அவங்க வீட்டு அட்ரஸ்னா சொல்லிருவேன். ஆனா வேற ஒரு சொந்தக்காரங்கனா, எப்படி?! ஆனாலும் ஞாபகம் வச்சு, ஏதோ ரெண்டு மூனு அட்ரஸ் கொடுத்தேன்.
அப்புறமா ஒரு போலீஸ் வந்து சொன்னாரு ‘திருச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு சொல்லிட்டோம். அவங்க உங்க சொந்தக்காரங்களுக்குச் சொல்லிடுவாங்க. அப்படிச் சொல்லி யாராவது வந்து கூட்டிட்டு போறவரைக்கும், நீங்க இங்க உள்ள ஸ்டேஷன்ல வந்து இருங்க. யாருமே வரலைனா நாங்களே பத்திரமா திருச்சிக்கு அனுப்புவோம்’னு!
காலையில ஆக்சிடென்ட் நடந்தது. மத்தியானம் வரைக்கும் நாங்க அங்கயே இருந்தோம். அதுக்கப்புறமா, இறந்தவங்களை கவர்மென்ட் ஹாஸ்பிட்டலுக்கு எடுத்திட்டுப் போனாங்க. ஆனா முழுசா எல்லாம் முடியறதுக்கு சாயங்காலம் ஆகிடும்னு சொன்னாங்க.
அதனால போலீஸ் அந்த இடத்திலிருந்து எங்கள கூட்டிட்டுப் போயிட்டாங்க. பாதி நாள்ல, இவ்ளோ பரிதவிப்போம்னு நினைக்கவே இல்ல”
ஆனால் அவனுக்கோ வேறு பயம் இருந்தது. “உடனே நீ திருச்சிக்கே திரும்பி போயிருக்கலாமே? ஏன் போலீஸ் ஸ்டேஷன் போன? போலீஸ்கிட்ட டிக்கெட் எடுத்துக் கொடுக்க சொல்லி போயிருந்தா, சேஃப்பா இருந்திருக்குமே?”
“அதுக்கப்புறம் நிறைய நாள் தனியா உட்கார்ந்து யோசிக்கிறப்ப, நீ சொன்ன மாதிரி நானும் நினைச்சிருக்கேன். ஆனா அன்னைக்கு இருந்த சூழ்நிலையில முடிவு எடுக்கிற வயசோ மனசோ, எனக்கு கொஞ்சமும் இல்ல. எல்லாம் விதி” என்றாள் இயலாமையாக.
விதி விளையாடும் மைதானத்தில், வாழ்க்கை நடத்துவது அத்தனை சுலபமல்ல அல்லவா!?
“ஸாரி… காட் இட்” என்றான்.
“ஸ்டேஷன் கூட்டிட்டு வந்தவுடனே… சாப்பாடு வாங்கி கொடுத்தாங்க. ஏதோ சாப்பிட்டேன். தம்பிக்கும் கொடுத்தேன். ஆனா அதுக்கப்புறமா நைட் புல்லா அழுதுக்கிட்டே இருந்தோம். அப்படியே அழுது அழுது நாங்க ரெண்டு பேரும் தூங்கிட்டோம்” என்று நிறுத்தினாள்.
அவள் அனுபவித்த கவலைகளின் கனந்தாளாமல்… அவன் மனம் களைத்துப் போய்க் கொண்டிருந்தது.
“காலையில எந்திரச்சதுமே திரும்ப எல்லாம் ஞாபகம் வந்திச்சி. திருப்பியும் அழுகைதான். ‘யாருமே திருச்சி ஸ்டேஷன்ல இருந்து எதுவும் சொல்லலை’னு போலீஸ் வந்து சொன்னாங்க.
அப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா பயம் வந்திச்சி. வேற யாரும் சொந்தம்னு சொல்லிக்க இல்லையானு கோபம் வந்திச்சி” என்று அவனைப் பார்த்தாள்.
ஆறுதல் மொழி ஏந்தி வந்தன அவன் பார்வைகள், அது அவளுக்கு அத்தனை சுகம் தந்தது!
“கொஞ்ச நேரம் கழிச்சி… போலீஸ் வந்து ‘சாயங்காலம் வரைக்கும் யாராவது வர்றாங்களானு பார்ப்போம். யாரும் வரலைனா திருச்சிக்கு அனுப்புவோம்’னு சொன்னாங்க. அப்பதான் அங்கிருந்த ரெண்டு பேர் எங்களை பார்த்தாங்க”
“ரெண்டு பேரா… யாரு?”
“அவங்க ஏதோ கேஸ் விஷயமா ஸ்டேஷனுக்கு வந்தாங்களாம். ஹஸ்பண்ட் வொய்ஃப்னு சொன்னாங்க. ‘நாங்க உங்களைக் கூட்டிட்டுப் போறோம்’னும் சொன்னாங்க”
“கூட்டிட்டுப் போவாங்களா? ப்ச் அவங்க யாரு உங்களைக் கூட்டிட்டுப் போக? அதெப்படி போலீஸ் விட்டாங்க” என்றான் நியாயமாக.
“போலீஸ்கிட்ட போயி ஏதோ பேசினாங்க. பணம் வேற கொடுத்தாங்க. ஆனா அப்போ அவங்க என்ன பேசிருப்பாங்கனு புரியல. கொஞ்ச நாள் கழிச்சிதான் புரிஞ்சது… எதுக்கு போலீசுக்கு பணம் கொடுத்தாங்க? அவங்க என்ன கேஸ்ல ஸ்டேஷன் வந்திருப்பாங்கனு” என்றாள், வலி மென்று தின்றவளாய், உதட்டில் புன்னகையோடு!
ஆனால் அவனின் எதிர்வினையோ, “அறிவே இல்லையா உனக்கு!?! யாருனே தெரியாதவங்க கூடப் போவியா? போலீஸ் ஸ்டேஷன்லதான் இருப்போம்னு, அழுது அடம்பிடிச்சிருக்க வேண்டாமா?! பார்க் பார்க்கறதுக்கு மட்டும்தான் அடம்பிடிக்க தெரியுமா?” என்றான் கோபமாக.
அவள் அம்மாவிற்கு பிறகு, அக்கறையுடன் கூடிய கோபம் காட்டின, அவனின் நீலவிழிகள்! அதை ஆசையுடன் பார்த்திருந்தன, இவளின் பழுப்பு விழிகள்!!
