Kathambari Novels
அத்தியாயம் – 6
நாளை மறுநாள் பார்க்கலாம் என்று கண்ணனிடம் விடை பெற்றுக் கொண்டாள் இசக்கி. அவளையும் மலரையும் அழைத்து வந்து ஊரின் வெளியே விட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றான் தங்கராசு.
****************************
ஒரு நாள் கழித்து. செல்லதுரை கடைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். “அப்பா, இன்னிக்கி சினிமாவுக்கு போனும்” என்று சொல்லிக் கொண்டு வந்து மலர் நின்றாள்.
“இது என்னா புதுசா மலரு? படிக்கிற புள்ளைக்கு எதுக்கு? அந்தால ஒன் அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்கேன். இப்பம் எப்படி ஒன்ன ஒத்தேல அனுப்ப முடியும்”
“இல்லேப்பா. ஒத்தேல இல்லே. ஊரில எல்லாரும் போறாக. அதேன்”
“எல்லாருமா, எதுக்காக?”
“சும்மதான். அவியகூட போயிட்டு, அவிய கூடவே வந்திரலாம்; நானும் இசக்கியும் போய்ட்டு வர்றோமே பா” என்று கெஞ்சினாள்.
“இல்லே மலரு, பேசாம வீட்ல இருங்க. நான் சொல்றது எதுக்குன்னு ஒனக்குப் புரியாது. ஒங்க அக்காவுக்கு புரிஞ்சிருக்கும்” என்றார்.
இசக்கி… அப்பாவிடம் கொண்ட கோபத்தில், மலர் அப்பாவிடம் பொய் சொல்கிறோம் என்ற குற்றவுணர்வில் தலை குனிந்து கொண்டனர்.
அதற்குள் வெளியிலிருந்து, “மலரு, இசக்கி” என்ற சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்த்தார் செல்லதுரை. நடுத்தர வயதுள்ள பக்கத்து வீட்டுக்காரப் பெண் சோனியா வந்து நின்று, “அண்ணே, சினிமாக்கு போறோம். மலரு, இசக்கிய வரச் சொல்றீகளா?” என்றார்.
“இல்லே மா, அவிய வரமாட்டாக”
“ஏண்ணே, ஊரில எல்லா புள்ளைகளும் சேர்ந்து போறாக. அவியகளும் ஆசப்படுவாகள. வெரசா வரச் சொல்றீகளா?”
“புள்ளைக மட்டுமா? எப்படி?”
“பெரியவுகளும் வருவாக அண்ணே. நானே பத்திரமா கூட்டிட்டுப் போயிட்டு. கூட்டிட்டு வந்திடுவேன். விடுங்க அண்ணே” என்று கேட்க, செல்லதுரை தயங்கினார்.
“விடுங்க அண்ணே” என்றார் மீண்டும் அந்தப் பெண்.
செல்லதுரை பின்னால் திரும்பி இசக்கி மற்றும் மலரைப் பார்த்தார். இசக்கிக்காக மலரின் சந்தோசத்திற்கு எதற்குத் தடை போட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. சரியென்று அனுப்பிவிட்டார்.
மலரும் இசக்கியும் கிளம்பினர். தங்கராசு வீட்டில் தயார் நிலையில் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அனைவருடன் சேர்ந்து இசக்கி, சோனியா பேருந்தில் ஏறிக் கொண்டனர். மலர் மட்டும் ஏறாமல் தேடல் பார்வை கொண்டு நின்றிருந்தாள்.
“யாரட்டி தேடுற?” என்ற பின்னால் இருந்து குரல் வந்தது.
திரும்பினாள். வேறு யாரும் இல்லை கிழவிகள்தான் நின்றனர். மலர் பேசாமல் இருந்தாள். “ஏன்ட்டி, அவனும் கேட்டா ஒன்னும் சொல்ல மாட்டேக்கான். நீயும் இப்படி நிக்கிற?” என்றார் பேச்சிக்கிழவி.
தான் சொல்வதைக் கேட்கிறான் என்ற களிப்பில், “தங்கராசு எங்கன இருக்காக?” என்றாள்.
“அவன எதுக்கு தேடற” என்று திரும்பவும் மலரின் பின்னாலிருந்து குரல் வந்தது. இந்தமுறை அஞ்சுதம்.
முத்தாச்சி, “பேச்சி, இவளுக மறுக்காவும் ஆரம்பிக்கிறாளுக” என்றார் ரகசியமாக. “ஆரம்பிச்சா பரவால்ல. ஆனா முடிக்கிறப்ப நம்மகிட்டல முடிப்பாக” என்றார் பேச்சிக்கிழவி.
அஞ்சுதம் மலர் அருகில் வந்து நின்றபடி, “கேட்டேன்ல என்னாத்துக்கு அவன தேடற?” என்றார்.
“அவுக கடைல வந்து ரீசார்ஜ் பண்ணாக. பணம் ஏறிடுச்சானு கேட்க வந்தேன்” என்று சொல்லி மலர் சமாளிக்கப் பார்த்தாள்.
அதை நம்பாமல் அஞ்சுதம், “ரீசார்ஜ் பண்றவுக எல்லார்கிட்டயும் போய் இப்படித்தான் கேட்டுக்கிட்டு இருப்பியா?” என்றார்.
பதிலேதும் இல்லை மலரிடம்.
பேச்சிக்கிழவிதான், “ஏம்ட்டி, அந்தப் புள்ளயும் படம் பார்க்கனும்னு நினைக்கும்ல. அதேன் வந்திருக்கும். நீ போ மலரு” என்று உதவிக்கு வந்து, அவளை அங்கிருந்து அனுப்பினார்.
அஞ்சுதத்தை மெதுவாகக் கடந்த மலர், அதன்பின் வேகமாகச் சென்று பேருந்தில் ஏறப் பார்த்தாள். அதேநேரம் தங்கராசு இறங்கப் பார்த்தான். இருவரும் மோதியது போலும் இல்லை. மோதியது போலவும் இருந்தது. இருந்தாலும், இல்லையென்றாலும் இருவர் மனமும் சில்லிட்டது.
அப்படியொரு இனிமையான தருணத்துடன் மார்த்தாண்டம் நோக்கிய அவர்கள் பயணம் தொடங்கியது.
அங்கே ஒரு திரையரங்கில் பழவிளைக் கிராமத்துப் பெண்களுக்காக பிரத்தயேக காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரையும் உள்ளே அழைத்து, இருக்கைகளில் அமர வைத்தான் தங்கராசு. காட்சி ஆரம்பித்து அரை மணி நேரத்திற்குப் பின் இசக்கி, மலரை வெளியே வரச் சொல்ல, அவர்களும் வந்தார்கள்.
தங்கராசு, “இசக்கி, இங்கோடி போயி வடக்கால திரும்புங்க. அங்கன கண்ணன் சார் நின்னுகிட்டு இருப்பாக. நீங்க வெரசா கொடுத்துட்டு வந்திருங்க” என்று ஒரு பாதையைக் காட்டினான்.
“செரி தங்கராசு” என்று இசக்கி கிளம்பினாள்.
அவன் குரலில் இருந்த நடுக்கத்தை… முகத்தைப் பார்த்த மலர், “என்னா இம்புட்டு பயப்படுறீக. ஒங்க அம்மாவ நினைச்சா?” என்றாள்.
“அதுவும்தான்”
“அதுவும்தானா… வேறென்ன”
“இந்த மாதிரி ஒரு காரியம் பண்றேன்னு ஊருக்குள்ள தெரிஞ்சா?”
“தெரிஞ்சா??”
“இத்தறை பேரையும் அவிய வீட்ல என்னைய நம்பி விட்டிருக்காக. இனி விடுவாகளா? அதேன்” என்றான் கலக்கமாக.
“நானே ஒங்ககிட்ட கேட்கனும்னு நினைச்சேன். இவ்ளோ பேர கூட்டிட்டு சினிமாவுக்கு வர்றது எதுக்காக”
“இது எங்க அம்ம ஏற்பாடு பண்ணியிருக்காக”
“அம்மாவா?” என்றாள் புரியாமல்.
“இவுகளாம் காலெம்பறயே எந்திரிச்சு, வீட்ல சமைச்சிட்டு, தோட்டத்து வேலைக்குப் போவாக; பொறவு சாந்திரம் வந்து மாறி சமைப்பாக. இதே தினம் செஞ்சா, அலுத்து சலிச்சிப் போகாதா.
அதேன் இதுகணக்கா அவியகளுக்கு ஒரு… ஒரு மாற்றம். எங்க அம்ம நல்லா சொல்லுவாக. எனக்கு செரியா சொல்ல வரல” என்றான்.
“எப்படி அவுக வீட்லலாம் ஒத்துக்கிட்டாக?”
“முத இவிய வீட்டாளுகெல்லாம் ஒத்துக்கல. அந்தால எங்க அம்ம ரெம்ப பேசிப் புரிய வச்சாக. இப்பம் பழகிருச்சு. இன்னிக்கி மட்டும் வீட்ட, புள்ளைகள அவிய வீட்டாளுக பார்த்துப்பாக”
“எப்பமும் இங்கனதான் வருவீங்களா?”
“இல்லே மலரு. இந்த மட்டம்தான் இங்கன. போன மட்டம் திருப்பரப்பு போனோம்”
“இதில ஒங்களுக்கு பயம் எதுக்கு?”
“ஏங்க, நான் இப்படி ஒரு விசயத்த செஞ்சா, இனி அவிய வீட்ல என்னய நம்பி எப்படி அனுப்புவாக? எங்க அம்ம இம்புட்டு நாளு கஷ்டப்பட்டது மொத்தமும் பாழாயிடும்”
“ஒங்க அம்மா இவ்ளோ செய்வாகளா” என்றாள் புருவம் உயர்த்தி.
“என்னா இப்படிக் கேட்டுட்டீக! இன்னும் நிறைய செய்வாக. புள்ளைக படிக்கறதுக்கு, பள்ளிக்கூடத்துக்கு, ஊருக்காறக வேலைக்கு. இப்படி ரெம்ப மலரு” என்றான் பெருமையாக.
அவள் மனக் கண்ணாடியில் விழுந்த அஞ்சுதத்தின் பிம்பம் தவறோ என்று தோன்றியது. அவரின் கண்டிப்புக் குரலிற்குக் காரணம், அவர் ஏற்று நடத்தும் பொறுப்போ என்று நினைத்தாள்.
அவர் தெரிந்து செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்கும், அவரைப் புரிந்து கொண்டு அனுசரணையாக இருக்கின்றவன் மீது அந்த நொடியில் அவளது அபிப்பிராயங்கள் ஆழமாயின. அதற்குமேல் அபிப்ராயத்தை ஆறப்போட அவள் விரும்பவில்லை.
“ராசு” என்று மலர் ஆசையாக அழைத்தாள்.
அவளின் அந்த அழைப்பு, எப்படி இருந்தது என்றால், இசைஞானி, அவனுக்கென்றே ப்ரத்யேக ‘டூயட்’டை நேரலையில் வாசிப்பது போல் இருந்தது. “ம்ம் சொல்லுங்க மலரு” என்றான், முன்னறிவிப்பின்றி வந்த அவள் அழைப்பில் மூழ்கிக் கொண்டு.
சாமர்த்தியமாக தன் சம்மதத்தைத் தெரிவிக்கும் விதமாக “ராசு, ஒங்க அம்மா ஒத்துப்பாகளா?” என்றாள்.
இப்போது நேரலையில் அவனுக்காக இசைஞானியுடன் இசைப்புயலும் கைகோர்த்துக் கொண்டார்! அதை ரசிக்க முடியாமல் அவள் கேள்வி இருக்க, “அம்புட்டு லேசுல ஒத்துக்க மாட்டாக” என்றான்.
அடுத்தும் அவனே, “மலரு, நீங்க நல்லா பேசுவீகள. எங்க அம்மகிட்ட வந்து பேசுறீகளா?” என்று கேட்டான்.
“ராசு, மொதல இசக்கி விசயம். அடுத்து என்னோட படிப்பு. ரெண்டும் முடியட்டும். அப்பாகிட்ட கொடிமலர் பிகாம்னு சொன்ன அடுத்த நிமிசம், ஒங்க அம்மாகிட்ட வந்து பேசறேன். செரியா?”
“நெசமாவா மலரு?” என்றான் நம்பிக்கை இல்லாத குரலில்.
“நெசமா, ஆனா ஒங்க அம்மா எதுத்தால நின்னுதான் நான் பேச வேண்டிருக்கும். நீங்க ஒத்துப்பீகளா ராசு? இல்லனா என்னய வெரட்டி விட்ருவீகளா?” என்றாள் விளையாட்டாக.
அந்த விளையாட்டு பேச்சிற்கு எதிர்வினையாய் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.
“ராசு… ராசு” என்று அழைத்துப் பார்த்தாள்.
அவன் திரும்பவில்லை என்றதும் அவன் நாடியைப் பிடித்துத் திருப்பி, அவன் முகம் பார்த்தவளுக்குச் சிரிப்புதான் வந்தது. “ஏன் ராசு இப்பம் கண்ணீர் வடிக்கப் பார்க்கிறீக?” என்றாள்.
“பொறவு நீங்க அப்படி கேட்டா… நான் ஒங்கள வெரட்டி விடுவேனா மலரு” என்று அவன் கோபப்பட, “அது சும்ம எடக்கா பேசினேன். அதுக்குப் போய்” என்று சமாதானமாகப் பேசினாள்.
“நெசமா எங்க வீட்டுக்கு வந்து பேசுவீகளா மலரு?”
“எத்தறை மட்டம் இதயே கேட்பீக ராசு?” என்றாள் சலிப்பாக.
“செரி… செரி கேட்கல”
“எனக்கு ஒன்னே ஒன்னுதான். இசக்கி விசயத்த, எங்கப்பாகிட்ட நானே பக்கத்தில ஒட்கார்ந்து பதனமா சொல்லனும் ராசு. நீங்க வெள்ளனயே இசக்கிய கூட்டிட்டுப் போய், மார்த்தாண்டத்ல விட்டுட்டா… கண்ணன் சார் பார்த்துப்பாக. அப்பாவ நான் சமாளிச்சிக்கிறேன். செரியா?”
“ம்ம்ம்”
அபிப்ராயங்கள் எல்லாம் அபிமானங்களாக மாறியதால் ஒரு அமைதி நிலவியது. பின்சில வினாடிகளுக்குப் பின், “மலரு, இந்தாங்க” என்று நீலவர்ண தாள் சுற்றிய செவ்வக வடிவ சாக்லேட்டை நீட்டினான்.
அன்புடன் வாங்கியவள், “இதுகூட சேர்த்துப் பூவு, கார்டு தருவாகள. அதெல்லாம் எப்பம்” என்றாள் ஆசையாக.
“பூதான் நேத்தே கொடுத்தேன்ல”
“ப்ச்… நான் சொல்றது ரோசு”
“நான் கொடுத்ததும் பூதான”
“செரி அப்பம் கார்டு”
“அதெல்லாம் எனக்கு வாசிச்சி வாங்கத் தெரியாது மலரு; நான் வேணா கடைக்குக் கூட்டிட்டுப் போறேன். நீங்க வாங்கிக்கிறீகளா?”
“ம்ம்ம். செரி”
“இப்பமே வர்றீங்களா வாங்கித் தர்றேன்” என்றான் ஆர்வமாக.
“ம்கும்” என்று மறுத்துவிட்டாள்.
“படிப்பு முடிஞ்ச பொறவா?”
“ம்ம்” என்று ஆமோதித்து தலையசைத்தாள்.
“செரி, சாக்லேட் சாப்பிடுங்க” என்று அவன் சொன்ன விதத்தில், மலரின் நேசம், ராசுவின் பார்வை பரப்புக்குள் பூத்தது.
இதயங்களைப் பரிமாறிக் கொண்ட இளஞ்சிட்டுக்கள் இனிப்பையும் பகிர்ந்து கொண்டார்கள். வண்ணப்பூச்சி மறைந்து, அழுக்குப் படிந்த திரையரங்கின் சுவரில் சாய்ந்து நின்ற ராசாத்தியாய் மலர் நின்றாள். அந்த ராசாத்தியின் ராசுவாக, அருகிலேயே தங்கராசு நின்றான்.
சூழ்நிலைக்கு ஏற்றதாய் திரையரங்கிலிருந்து காதல் பாடல் ஒன்று காற்றில் கசிந்து வந்து காதலர்கள் காதில் நுழைந்தது.
மற்றொரு புறம், எடுத்து வந்த சான்றிதழ்களை கண்ணனிடம் இசக்கி கொடுத்தாள். கல்யாணம் நடக்கப் போகும் தேதி, இடம் பற்றி கண்ணன் கூறினான். அனைத்தும் சுபமாக முடிந்த பின், மார்த்தாண்டத்திலிருந்து பேருந்து திரும்பியது.
அடுத்தடுத்து வந்த நாள்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வைத் தந்தன. இசக்கியும் கண்ணனும் அவர்கள் திருமண நாளை எதிர்நோக்கி பரபரப்புடன் இருந்தனர். மலரும், ராசுவும் அபிப்பிராயம் அரங்கேறிய சந்தோஷத்தில் இருந்தனர்.
ராசுவிற்கு, தன் தோட்டத்தில் பூக்கும் பூவெல்லாம் மலருக்காகப் பூப்பது போல் இருந்தது. சில நேரங்களில் ‘மலர்’ பூத்துச் சிரிப்பது போலக்கூட தோன்றியது. கொடிமலருக்கு, அவள் வாசிக்கும் விருப்ப வாரஇதழ்கள் அனைத்தின் அட்டைப்படமாக ராசுவே தோன்றினான்.
நாட்கள் விரைந்தோடின. அடுத்த நாள் விடியற்காலை இசக்கி வீட்டை விட்டுச் சென்று திருமண செய்து கொள்ளும் நாளாக இருந்தது.
இரவில் மலர், “இசக்கி” என்று அழைத்தாள்.
“என்னா மலரு… ஏன்ட்டி ஒரு மாதிரி இருக்க?” என்றதும், “கண்ணன் சார் வீட்ல ஒன்ன நல்லா பாத்துப்பாகளா” என்றாள் சிறு பயத்துடன்.
“ஏன்ட்டி இப்பம் இந்த கேள்வி. இனிமே அவுக ஒனக்கு சார் கிடையாது. புரியுதா?” என்று காதலித்தவனைக் கைப்பிடிக்கப் போகும் களிப்பில் இசக்கி பேசினாள்.
மலர் பேசாமல் இருக்கவும், “பயப்படிரியா மலரு? அவுக வீட்ல நல்லா பார்த்துப்பாக” என்றாள் இசக்கி ஆறுதலாக.
“ம் அப்பா இவ்ளோ வேண்டாம்னு நிக்கிறாகள, அதேன் எனக்கு அப்பாவ நெனைச்சி ரெம்ப கஷ்டமா இருக்கு”
“அப்பாகிட்டே ஆறு மாசம் போராடினப் பொறவுதான், நாங்க இந்த முடிவுக்கு வந்தோம்” என்றாள் இசக்கி, இன்னும் அப்பாமேல் கோபம் இருக்கிறது என்ற குரலில்.
“கல்யாணம் கட்டிக்கிட்டப் பொறவு, நேரா இங்கன வந்திரனும் இசக்கி. அப்பாவ பார்த்து மன்னிப்பு கேட்கனும். செரியா?”
“செரி மலரு”
“நானும் தங்கராசும் ஒத்தாசை பண்ணதா யார்கிட்டயும் சொல்லாதட்டி. நான் பதனமா அப்பாகிட்ட சொல்லிக்கிருவேன்”
“நீ எதையும் யோசிக்காத. ஒன்னய யாருகிட்டயும் காட்டிக் கொடுக்க மாட்டோம். காலெம்பற நாலு மணிக்கே கிளம்பிருவேன். தங்கராசு, ஊருக்கு வெளியே காத்திருப்பாக. நான் திரும்பி வர்ற வரைக்கும் அப்பாவைச் சமாளிச்சிக்கோ” என்று இசக்கி தூங்கச் சென்றாள்.
“ம்ம்ம்” என்ற மலருக்கு உறக்கம் வரவில்லை. தங்கராசுவிடம் பேசலாம் என்று கைப்பேசியில் அவனை அழைத்தாள். “ஹலோ” என்றாள் அவள் அழைப்பு ஏற்கப்பட்டதும்.
“ஹலோ” என்று பெண் குரல் கேட்டது.
அது அஞ்சுதத்தின் குரல் என்று தெரிந்ததும் உடனே மலர் அழைப்பைத் துண்டித்துக் கொண்டாள். ‘அடுத்து எப்பவாது பார்த்தா டீச்சர் என்னா சொல்லுவாகளோ’ என்று யோசித்தபடி முழித்திருந்தவள், எப்போதோ எப்படியோ உறங்கிப் போனாள்.
அடுத்த நாள்! அதிகாலையிலிருந்து இசக்கி குறித்த செல்லதுரையின் ஒவ்வொரு கேள்விக்கும்… மலர் மழுப்பல் பதில் சொல்லிச் சமாளித்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில், “மலரு, மலரு” என்ற குரல் கேட்டது. வெளியே வந்தாள் மலர். அங்கே கண்ணனும் இசக்கியும் மணமாலையுடன் வந்து நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை அப்படிப் பார்த்ததும்… அக்காவின் விருப்பத்திற்காக என்று நினைத்து, யோசித்து உதவி செய்துவிட்ட மலருக்கு, அப்பாவை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று பதற்றம் வந்துவிட்டது. கூடவே அப்பா சங்கடப்படுவாரே என்ற கவலையும் வந்திருந்தது.

