Kathambari Novels
அத்தியாயம் – 5
வீட்டுத் திண்ணையில் கிழவிகள் கால்நீட்டி அமர்ந்திருந்தனர். அவர்கள் பேரன் வயர் கட்டிலில் வானத்தைப் பார்த்தபடி படுத்திருந்தான்.
“லே, சூதானமா நடந்துக்கோ. அம்மைக்கு தெரியாம வச்சிக்கோ. அந்த புள்ளைகளையும் பார்த்துக்கோ. செரியா?” என்றார் பேச்சிக்கிழவி.
“ம்ம்ம் செரி ஆச்சி” என்றான் தங்கராசு.
“ஏம்ட்டி முத்து, நீ என்னாத்த பேப்பர்ல பார்த்துகிட்டு இருக்க?”
அன்றைய நாளிதழைப் பார்த்தபடியே, “இந்த அமெரிக்க நாட்டாம யார்கூடயோ நிக்கிற மாதிரி போட்டோ போட்ருக்காக. அதேன் யாரு என்னானு பார்த்தேன்” என்றார் முத்தாச்சி.
தங்கராசு, “நாட்டோகாரகளாக இருப்பாக, இல்லேனா ஆப்ரிக்கா நாட்டு காரகளா இருப்பாக ஆச்சி” என்றான் அன்றைய உலக நிலவரத்தை தெரிந்து வைத்திருப்பவனாக.
பேச்சிக்கிழவி, “நேத்தே நம்ம பிபிசில படம் பார்த்தோம்ல, அதுவாலே” என்றார் பேரனிடம். “அது வேறே செய்தி, அந்த நாட்டு கார் கம்பனி மொதலாளி பத்தி ஆச்சி” என்றான்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், அதிகாலை நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு அஞ்சுதம் வந்தார். அவர்கள் அமர்ந்திருப்பதைக் கண்டவர், ‘காலெம்பறயே வெட்டிப் பேச்சு’ என்று மனதில் நினைத்துக் கொண்டே, அவர்கள் அருகில் வந்து நின்றார்.
அவர்கள் மூவரும் பேசிய விடயங்கள் என்னவென்று அஞ்சுதத்திற்குத் தெரிய வாய்ப்பில்லைதான். ஆனால் அவர் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அவருக்கு இருப்பது புத்தக அறிவு என்றால், அவர்களுக்கு இருப்பது உலகறிவு. இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை.
அம்மாவைப் பார்த்தும் படுத்திருந்த தங்கராசு எழுந்து அமர்ந்தான். மகனைப் பார்த்து அஞ்சுதம், “தங்கராசு, என்னா கார எடுத்து வெளிய நிப்பாட்டிருக்க. எங்கனயும் போறனா, கார சுத்தபத்தமா தொடச்சுட்டு எடுத்திட்டு போ. செரியா?” என்றார்.
“செரி அம்ம” என்றான்.
அதைச் சொல்லிவிட்டு, அஞ்சுதம் பள்ளிக்கூடம் செல்லத் தயாராகத் தொடங்கினார். சற்றுநேரத்தில் ஆச்சிகளிடம் சொல்லிவிட்டு தங்கராசு கிளம்பிவிட்டான்.
ஊருக்கு வெளியே இசக்கியும், மலரும் நின்றனர். தங்கராசு வந்தவுடன் “ஏன் இவ்ளோ தாமசமா(late) வர்றீக? எவ்ளோ தேரமா காத்திக்கிட்டு கிடக்க. யாராவது பாத்துட்டா என்னா செய்ய சொல்லுங்க?” என்று மலர் பொரிந்து தள்ளினாள்.
“ஏன்ட்டி அவுக செரியான தேரத்லதான வந்திருக்காக” என்றாள் இசக்கி.
“ஒனக்கு தெரியாது இசக்கி. நீ பேசாம இருட்டி” என்றுவிட்டாள் மலர்.
தங்கராசு, “ஏங்க, ரெம்ப ஏசிக்கிட்டு இருந்தீகனா எங்க ஆச்சிங்ககிட்ட சொல்லிருவேன் ” என்று சற்று மிரட்டுவது போல் சொன்னான்.
மலர், “ஆச்சிங்ககிட்ட சொல்வீகளா? சொல்லுங்க. ஒங்க ஆச்சிகளுக்கு பயப்படுற ஆளு நான் இல்லே” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, கிழவிகளை அழைத்து, “ஆச்சி, இந்த மலரு புள்ள ஏசிக்கிட்டே இருக்கு. என்னானு கேளுங்க” என்று கைப்பேசியை மலரிடம் கொடுத்தான்.
தயங்கியபடி வாங்கியவள், “ஹலோ, நான் மலர் பேசறேன்” என்றாள்.
“ஹலோஓஓஓ நாங்க, மலரு மாமியா வீட்டிலருந்து பேசுறோம்” என்று ‘கோரஸாக’ ஆச்சிகளிடமிருந்து பதில் வந்தது.
“ஏங்க, நான்தான் நேத்தே தெளிவா சொல்லிட்டேன்ல. அப்புறம் எதுக்கு இப்படியே பேசிட்டு இருக்கீக?”
“சொன்ன. ஆனா பாரு ஒன் செய்கை வேற மாதிரில இருக்கு” என்றார் பேச்சிக்கிழவி.
“என்னா வேற மாதிரி?”
“நேத்து ராவைல தங்கராசு நல்லா உறங்கிட்டான். நீ எப்படி?!” என்றதும், மார்கழி மாதம் உள்ளங்கையில் இட்டுக் கொள்ளும் மருதாணி போல் கொடிமலர் முகம் மௌனமாக மலர்ந்து, சிவந்து, சிரித்தது.
அவள் பேசாமல் இருக்கவும் பேச்சிக்கிழவி, “ஏன்ட்டி மலரு, எதுத்தால தங்கராசு சிரிக்கிறானானு பாரு?” என்று கேட்டார்.
மலர் மெல்ல தலையை நிமிர்த்தினாள். புழுதி பறந்திடும் கிராமத்துச் சாலையில் நின்று கொண்டு இரவில் இம்சித்தவன் முகம் இன்முறுவல் காட்டியது. அதை இமைக்க மறந்து இஷ்டத்துடன் பார்த்தாள்.
அதற்குள் கைப்பேசியின் மறுமுனை கூச்சலிட்டது. அதுகூட கேளாமல் மலர் நின்றாள். ராசு, “மலரு… மலரு” என்று இருமுறை அழைத்து, “போன் பேசுங்க. கூப்பிடறாக பாருங்க” என்றான். இரவின் அவள் கனவிற்கு காரணமானவனே இக்கணத்தின் கனவைக் கலைத்தான்.
“ஹலோ” என்றாள் மலர் அலைபேசியில்.
“என்னா சிரிச்சானா?” என்றார் பேச்சிக்கிழவி.
“ம்ம்ம்”
“ஏன்னு தெரியுமா”
“ம்கும்”
“அப்படினா, நீ ராவைல உறங்காதத கண்டுக்கிட்டானு அர்த்தம்” என்று சிரித்தார் பேச்சிக்கிழவி.
மலர் பேசாமல் தங்கராசுவையே கண்கள் சுருக்கிப் பார்த்திருந்தாள்.
சிரிப்புடன் பேச்சிக்கிழவி, “இப்பம் ஒன் அக்காவா பாரு” என்றார்.
மலர் திரும்பி இசக்கியைப் பார்த்தாள்.
“கோவமா இருக்காளா?”
“ஆமா”
“பொறவு, அவளுக்கு ஒத்தாசை பண்றேன்னு வந்திட்டு, நீ ஒன் சோலிய பார்த்தா கோவம் வரும்ல” என்று உச்ச தாளத்தில் சிரித்தார். சத்தமாக முத்தாச்சி சிரிப்பதும் கேட்டது.
மலரோ மௌனமாக நின்றிருந்தாள், அந்த தாளத்திற்கு பாடல் வரிகள் எழுத முடியாதவள் போல.
விடாமல் பேச்சிக்கிழவி, “ஆனா நீ நேத்து கள்ளம் பேசறனு நெனச்சேன், நெசம் பேசிருக்கட்டி” என்றார்.
“புரியல”
“உறங்கலனா கனவு வரும்னு சொன்னேல. அது நெசம்ட்டி. ஏன்னா, இப்பம் செத்த தேரத்துக்கு மின்னாடி, நீ அப்படிதான நின்றுப்ப” என்று அத்தனை தூரத்திலிருந்தே மலரின் தகிடுதத்தைக் கண்டறிந்தார்.
உடனே தங்கராசுவிடம் கைப்பேசியைக் கொடுத்தவள், “நாம பேசறத ஒங்க ஆச்சிங்ககிட்ட சொல்லுவீகளா?” என்றாள் கோபமாக.
“இல்லே மலரு, அது… அது” என்று தடுமாறினான்.
“இனிமே சொன்னீங்க, அப்புறம் ஒங்ககிட்ட பேசவே மாட்டேன்” என்று விருவிருவென்று சென்றவள்… ராசு வராமல் நிற்பதைப் பார்த்து, “வாங்க வந்து கார எடுங்க” என்று அதிகாரம் வேறு செய்து காரில் ஏறினாள்.
இசக்கியோ என்ன நடக்கிறது என்று பாதி புரிந்தும், மீதி புரியாமலும் நடந்து சென்று காரில் ஏறிக் கொண்டாள். தங்கராசுவும் ஏறி அமர்ந்து காரை மார்த்தாண்டம் நோக்கி விரைந்தது ஓட்டினான். அங்கே ஊரின் வெளியே கண்ணன் காத்துக் கொண்டிருந்தான்.
காரிலிருந்து இறங்கிய இசக்கி ஓடோடிச் சென்று கண்ணனை ஆரத் தழுவிக் கொண்டாள். அவளை அரவணைத்து, “எப்படி என்னய விட்டுப் போக முடிஞ்சது? ஒரு வார்த்தை சொல்லல. நான் எப்படி பயந்திட்டேன் தெரியுமா?” என்றான் கண்ணன்.
“இல்லே அப்பாதான் எதும் சொல்லாம அங்கன கூட்டிட்டு போயிட்டாக. போன வேற வாங்கி வச்சுட்டாக. ஒன்னுமே பண்ண முடியல” என்று அவனிடமிருந்து விலகினாள்.
“இப்பம் எப்படி முடிஞ்சது” என்றதும், “இவுகதான் ஒத்தாசை செஞ்சாங்க ஒங்களப் பார்க்கிறதுக்கு” என்று தங்கராசுவைக் காட்டினாள்.
“இவுக யாரு?”
“இவுக பேர் தங்கராசு, மலருக்கு தெரிஞ்சவுக. என்னய பெண்ணு பார்க்க வந்தாக” என்று அவனை கண்ணனுக்கு அறிமுகப்படுத்தினாள்
“பெண்ணு பார்க்கவா. அந்த அளவுக்கு ஒங்க அப்பா போயிட்டாகளா. ரெம்ப மோசம். அப்புறம் என்னாச்சு?” என்றான் கண்ணன் கோபமாக.
“நீங்க கோவப்படாதீக, இவுக என்னய விட கம்மியா படிச்சிருக்காகனு சொல்லி, பிடிக்கலனு சொல்லிட்டேன்” என்றாள் இசக்கி.
உடனடியாக மலர் “இப்பம் என்னா செய்யனும், அதமட்டும் பேசுங்க நீங்க” என்றாள் சற்று எரிச்சலாக.
கண்ணன் இசக்கியிடம், “அடுத்த வாரமே கல்யாணம் கட்டிக்கலாம். நான் ஏற்பாடு பண்றேன். நீ வந்தா போதும்” என்றான்.
தங்கராசுவோ, “ஏங்க, அவுக அப்பாகிட்ட மறுக்கா வந்து நீங்க பேசிப் பார்க்கிறீகளா?” என்றான்.
“இல்லே. நான் ரெம்ப பேசிட்டேன். திரும்பவும் பேசினா, இப்பம் சம்மதம் சொன்ன எங்க அப்பா அம்மா கஷ்டப்படுவாக” என்றான் கண்ணன்.
உடனே தங்கராசு மலரிடம், “மலரு, நீங்களாவது சொல்லுங்க இவுகள ஒங்க அப்பாகிட்ட பேசச் சொல்லி” என்றான்.
சற்று யோசித்துவிட்டு, “அவிய முடிவு செரிதான் தங்கராசு” என்றவள் “கல்யாணம்னா, என்னா ஏற்பாடுலாம் செய்யனும் சொல்லுங்க” என்று கண்ணனிடம் கேட்க, “இசக்கி சர்டிபிகேட் வேனும். ரெஜிஸ்டர் ஆபிஸ்ல பதியறதுக்கு” என்றான் அவன்.
“என்னிக்கி தரனும் சார்” – மலர்.
“நாளே மறுநாளுக்குள்ள” – கண்ணன்.
மலர், “செரி சார், சர்டிபிகேட்ட இவுககிட்ட கொடுத்து விடறோம் ” என்று தங்கராசுவைக் கைகாட்டினாள்.
இசக்கி, “நாமளே வந்து கொடுப்போம். இவுகள ஒரு வாரம் பார்க்காம இருக்க முடியாது” என்று கண்ணனை ஏக்கத்துடன் பார்த்தாள்.
தங்கராசு, “ஏங்க, நடக்கிற காரியமா. ஊருல யாருக்கும் தெரிஞ்சா? இன்னிக்கி வந்ததே பெருசு” என்று பதறினான்.
“இன்னும் ஒரு வாரம் ஒங்களப் பாக்காம இருக்கவே முடியாது. ஏதாவது செய்ங்க” என்று கண்ணனிடம் மன்றாடினாள் இசக்கி. ‘என்ன செய்ய?’ என்று யோசித்த கண்ணன், ‘எதுவும் உதவ முடியுமா’ என்று கடைசியில் தங்கராசுவைத்தான் பார்த்தான்.
அதற்கு தங்கராசு அமைதியாக இருந்தான். மலர்தான், “ஏதாவது வழி பண்ணுங்க தங்கராசு… அவுகளுக்காக” என்றாள்.
சற்றுநேரம் யோசித்தவன், “செரிங்க, அப்படினா நாளே மறுநாள் ஊரில எல்லா அக்கச்சிகளை (sisters) கூட்டிக்கிட்டுப் படத்துக்குப் போவோம். அதுல நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துக்கோங்க. மார்த்தாண்டம் இருக்க தியேட்டர்க்கு போற மாதிரி நான் பார்த்துக்கிறேன். நீங்க அங்கன வச்சி சந்திச்சிப் பேசிக்கோங்க” என்றான்.
“சினிமாவுக்கா, எதுக்கு? அதும் அத்தன பேர கூட்டிட்டு” என்றாள் மலர்.
இசக்கியோ, “மலரு, கேள்வி எதும் கேட்காம செரினு சொல்லுட்டி” என்று சொல்லவும், “ம்ம்ம்… செரி ” என்றாள் மலர் யோசனையுடன்.
கண்ணன், “செரி இசக்கி, நீ சர்டிபிகேட் எடுத்திட்டு வா. மிச்சத்த நான் பார்த்துக்கிறேன்” என்றதும், இசக்கி தலையசைத்துக் கொண்டாள்.
அவர்களிடம் தங்கராசு, “செத்த தேரம் நீங்க அங்கிட்டு போய் பேசிட்டு வாங்க” என்றதும், இசக்கியும் கண்ணனும் பேசச் சென்றுவிடவும், மலர் ராசுவைப் பார்த்து, “இது அவுக பேசவா… நாம பேசவா?” என்றாள்.
“நீங்க வேணா இங்கனயே நில்லுங்க மலரு. நான் காலாற நடந்திட்டு வரேன்” என்று ராசு நடக்க ஆரம்பித்தான். சில வினாடிகள் அங்கேயே நின்றவள், அவன் எட்டிச் செல்லும் தூரத்தைக் கண்டு, “ஏங்க, நில்லுங்க நானும் வாரேன்” என்று அவன் பின்னே ஓடினாள்.
சாலையின் ஒருபுறம் பெரிய பெரிய பூக்கள் மலர்ந்திருந்த சூரியகாந்தி பூந்தோட்டம். மறுபுறத்தில் நறுமணம் கமழும் பிச்சிப் பூந்தோட்டம். நடுவில் போட்டிருந்த சாலையில் ராசுவும் மலரும் நடந்தனர்.
சற்றுதூரம் நடந்தவன், சாலையின் ஓரமிருந்த மைல்கல் மீது அமர்ந்து கொண்டு, “நீங்க வேனா காருக்குள்ள ஒட்காருங்க மலரு” என்றான்.
“பரவால்ல” என்றவள், “ஆமா, நேத்து ஒங்க அம்மா எதுக்காக அம்புட்டு கோபப்பட்டாக” என்று கேட்டாள்.
“எங்க அம்ம படிக்காத புள்ளையா எனக்கு பாக்கிறாக. நீங்க ரெம்ப படிச்சிருக்கீகள, அதேன்”
“எதுக்கு படிக்காத புள்ளையா பாக்கணும்”
“எங்க அய்யன் படிக்கலங்க. அது எங்க அம்மைக்கு சுத்தமா பிடிக்கல. அவியகளுக்குள்ள சண்ட, சச்சரவு. எங்க அம்ம, அய்யன ஏசிக்கிட்டே இருப்பாகளாம். அதேன் படிச்ச புள்ளைனா எங்கூட சண்ட போடும்லனு எங்க அம்மைக்கு பயம்”
“அவிய சண்ட போட்டா, மத்தவுகளும் சண்ட போடனுமா”
“மலரு… என்னா சொன்னீக?” என்றான் சுவராஸ்யமான குரலில்.
“மத்தவுக… நாமனு சொல்லல. புரியுதா?” என்றாள் அழுத்தமாக.
“ம்ம், செரிதான்” என்று சாதாரணமாகச் சொல்லிக் கொண்டான்.
“அப்புறம் ஏன் ஒங்க அம்மா கல்யாணம் கட்டிக்கிட்டாக?”
“பெரியவுக பேச்ச எங்க அம்ம கேட்க நினைச்சிருப்பாக, அதெதுக்கு இப்பம்” என்றான், அவனுக்கு அம்மாவைப் பற்றி யார் எது பேசினாலும் பிடிக்காது என்ற குரலில்.
“செரி வுடுங்க. அவுக டீச்சரா இருந்திட்டு, ஒங்கள ஏன் படிக்க வைக்கல”
“எனக்கு படிப்பு சுத்தமா வரலை… அவுக என்ன செய்வாக சொல்லுங்க. ஆனா இதுல ஒங்களுக்கு தைரியம் அதியந்தான்”
“ஏன் இப்படிச் சொல்றீக?”
“பொறவு, எத்தறை மட்டம் பெயிலானாலும் மாறி மாறி படிக்கிறீகள. ஆனா கஷ்டமா இல்லையா தோத்துக்கிட்டே இருக்கிறது”
“நீங்கதான் நான் தோத்திட்டதா சொல்றீக. நான் ஒத்துக்க மாட்டேன். என்னிக்கி என்னோட முயற்சிய நிறுத்திறேனோ, அன்னிக்கிதான் நான் தோத்திட்டேனு அர்த்தம். அதுவரைக்கும் ஜெயிக்கப் போராடிக்கிட்டு இருக்கேனுதான் சொல்வேன்”
“புரியலங்க. ஆனா அந்தால என்னா படிக்கப் போறீக?”
“தெரியலங்க; முதல கொடிமலர் பிகாம், அப்படினு எங்க அப்பாகிட்ட பெருமையா சொல்லனும். இப்பம் அவ்வளவுதான்”
“அதென்ன அப்பாகிட்ட”
“இத்தறை மட்டம் பெயிலானா, எல்லார் வீட்லயும் எப்படி ஏசுவாக? ஆனா எங்க அப்பா எதுவும் சொல்ல மாட்டாக. ஏன், அன்னிக்கி இசக்கி நிச்சிதார்த்தம் நிறுத்தினப்பக் கூட… என்னய, ‘எதையும் யோசிக்காம படின்னுதான்’ சொன்னாரு”
“ஆனா அதே அப்பாவுக்கு தெரியாம இந்தக் காரியம் செய்றீக” என்று இசக்கி திருமண விடயத்தில் அவள் முடிவைக் குறித்துக் கேட்டான்.
“அது அப்பாக்கு செய்ற நியாயம்னா, இது இசக்கிக்கு செய்றது”
“புரியலங்க”
“எங்க அம்மா, நாங்க ரெம்ப சின்னதா இருக்கப்பவே தவறிட்டாங்க. அப்பத்லருந்து இசக்கிதான் வீட்ட பார்த்துப்பா. வெள்ளன எந்திரிச்சி சமைச்சிட்டு, ஸ்கூலுக்கு போய்ட்டு, திரும்பி வந்து ராவைக்கு சமைச்சி; எவ்வளவு கஷ்டம். எதுவுமே வெளில சொல்லமாட்டா. இத்தனை நாள்ல அவ ஆசைப்பட்டு எதுவுமே கேட்டதில்ல. இதான் மொத தடவ”
“அப்பம் நீங்க ஒங்க அப்பாகிட்ட பேசலாம்ல”
“இல்லே தங்கராசு, அப்பா சம்மதிக்க மாட்டாக. கல்யாணம் கட்டி வச்சிட்டு, அந்தால சொல்லிச் சமாளிச்சிருவேன்” என்று சொல்லிவிட்டு, மண் தரையில் அமர்ந்து கொண்டாள்.
“ஏங்க இதுல ஒட்காருங்க” என்று அவன் எழுந்துவிட்டு, மைல்கல்லைக் காட்டினான்.
“இருக்கட்டும்” என்றுவிட்டாள்.
“செரிங்க, ரோட்டு மேல ஒட்காரதீக. செத்த உள்ள தள்ளி ஒட்காருங்க” என்றான் அக்கறையாக. அவன் கூறியபடி அவள் அமர்ந்ததும், அவனும் அவள் எதிரில் அமர்ந்து மைல்கல்லில் சாய்ந்து கொண்டான்.
காலைக் கதிரவன் கீற்றுகள் நன்றாகப் பரவியிருந்தன. வெகு அரிதாக சாலையைக் கடந்தன வாகனங்கள். அவள் பகிர்ந்து கொண்ட, அவளது ஆழ்மன எண்ணங்கள், அவன் அபிப்பிராயங்களை ஆழமாக்கின.
ஒருவரை ஒருவர் நேராகப் பார்த்துக் கொள்ளாவிட்டாலும், இருவரது எண்ணங்களும் எதிரில் இருப்பவரைப் பற்றியே இருந்தன. சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்த மலர், ராசுவின் மனமும் சூழ்நிலை மறந்து அபிப்பிராயம் என்ற ஒன்றை பற்றி யோசித்து ஆழ்நிலை தியானத்தில் அமைதியாக இருந்தது.
சற்று நேரத்திற்கு பின், “தங்கராசு” என்றாள்.
“ம்ம்ம், சொல்லுங்க மலரு “
“பூ பறிச்சித் தாறீகளா?”
“ஏங்க, இந்தப் பூவ தலையில வைக்க மாட்டாக”
“தெரியும் தங்கராசு, பறிச்சுத் தாங்களேன்”
“யாரு தோட்டம்னே தெரியலங்க. முதலே சொல்லிருந்தா வீட்லருந்தே எடுத்திட்டு வந்திருப்பேன்” என்றாலும் பறிக்கச் சென்றான். “எப்பம்ங்க பரிச்சை” என்று கேட்டுக் கொண்டே ஒவ்வொரு பூவாகப் பறித்தான்.
“இன்னும் பத்து பதினைஞ்சு நாள்லனு சொன்னேன்ல” என்று அவளும் எழுந்து கொண்டாள்.
பறித்து வந்த சூரியகாந்தியை ஒரு பூங்கொத்தாக மாற்றி மலரிடம் நீட்டினான். அவள் வாங்கும் போது தர மறுத்துவிட்டு, “இப்பம் ஒரு மூனு வார்த்தை இங்கிலீஷ்ல சொல்லுவாங்களே” என்றான்.
“மூனு வார்த்தையா?” என்று கேட்டவளுக்குள் ‘தடக் தடக்’ என இரயில் ஓடும் சத்தம். “ஆமாங்க, படத்தில கூட பார்த்திருக்கேன்” என்று அவன் சொன்னதும், அவளின் ‘தடக் தடக்’ எக்குத்தப்பாக எகிறியது.
அந்த இரயில் ஓடும் சத்தம் அவனுக்குக் கேட்கவில்லை போல?! “ஆல் தி பெஸ்ட்ங்க ” என்று சொல்லி இரயிலைத் தடம்புரளச் செய்தான்.
“தேங்க்ஸ்ங்க” என்று அதையும் ரசித்தாள்.
“வெல்கம்ங்க” என்று அவள் ரசிப்பதை ரசித்தான்.
“இட்ஸ் ஓகேங்க” என்று சிரித்தாள்.
இன்னும் அரங்கேற்றப்படா, அரங்கேற்றத்திற்கு காத்திருக்கும் இவர்கள் அபிப்பிராயங்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தன!

