Kathambari Novels
அத்தியாயம் – 21 (Mini Episode)
கஃபே ஒர்க் ஏரியாவின் மஞ்சள் விளக்கொளியில் நனைந்தபடி, நேரத்தைக் கருத்தில் கொள்ளாமல், டேவிட்டின் கைகளுக்குள் வெகு நிம்மதியாக கீர்த்தி கண்மூடிக் கிடந்தாள். அவன்தான், “வெளிய போலாமா” என்று கேட்க, உடனே சரியென்று தலையசைத்தாள்.
“எங்கனு கேட்க மாட்டியா?” என்றான். ‘எங்கனாலும் ஓகே’ என்று சொல்வது போல் ஒரு புன்னகை செய்து எழுந்தாள். “உன்னய வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனும்னு தோணுது கீர்த்தி” என்றான். ‘உன் இஷ்டம்’ என்று சொல்வது போல் மீண்டும் ஒரு புன்னகையே அவளிடம்.
அவன் வீடு இருக்கும் சான் போலோ பகுதிக்கு அவளை அழைத்து வந்திருந்தான். வீட்டுக் கட்டிடத்தின் அருகில் வந்ததும், “இதான்” என்றான். கீழிருந்து பார்வையை உயர்த்திக் கொண்டே போய் கட்டிடத்தின் மேலே வந்து நிறுத்தினாள்.
பின் அவனைப் பார்க்க, “வா போலாம்” என்று அவள் கைப்பிடித்து மாடிக்கு அழைத்துச் சென்றான். ‘மிஸ்ட்டர் ஜேன்சன் ஃபெர்ரோ’ என்ற பெயர்ப்பலகை தாங்கியிருந்த கதவைத் திறந்து அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.
முகப்பு பகுதியிலிருந்த அலங்காரங்களைப் பார்த்தபடி அவள் நிற்க, “இங்க வா” என்று அம்மா, அப்பா புகைப்படம் முன் அவளைக் கூட்டிச் சென்றான். ஒருமுறை அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான். பின் புகைப்படத்தைப் பார்த்து, “மை கேர்ள்” என்று அவளைக் காட்டினான்.
ஒரு மென்னகையோடு அவனது செயல்களைப் பார்த்தபடி இருந்தாள்!
ஒவ்வொரு அறைக்கும் அழைத்துச் சென்று காட்டினான். “இதெல்லாம் இப்ப சேஞ் பண்ணது. மைன்ட் டைவர்ட் பண்றதுக்குச் செய்ய சொன்னேல” என்று சில அலங்கார பொருட்களைக் காட்டினான்.
‘ம்ம்’ என்று தலையை மட்டும் அசைத்தாள்!
திரைச்சீலைகள், கம்பளங்கள், சாய்விருக்கைகள் அனைத்தும் வெள்ளை நிற வெல்வெட் துணியில் இருந்தன. வீட்டின் மற்ற வேலைப்பாடுகள் தங்க நிற உலோகம் கொண்டு இருந்தன.
அவனுடன் நெருங்கி நடந்தபடியே அனைத்தையும் பார்த்தாள். வரவேற்பறை வந்ததும், “இங்க இருக்கியா… டின்னர் ரெடி பண்றேன்” என்றான். மறுத்து தலையசைத்தாள். “வா” என்று அவளையும் அழைத்துச் சென்றான்.
‘ரெடி மேட் சூப்’ எடுத்து கிண்ணத்தில் ஊற்றி சூடு செய்தான். சாலட், லசாங்கா என்று கடகடவென தயார் செய்தான். குளிர்சாதன பெட்டியிலிருந்து சாக்லேட் கேக் இரண்டை எடுத்து வைத்து அமர்ந்தான். அவளும் அமர்ந்தாள்.
அவன் பேசுவதைக் கேட்டபடி… அவன் முகத்தைப் பார்த்தபடி சாப்பிட்டாள்!
சாப்பிட்டு முடித்ததும், கீர்த்தியின் முகம் பார்த்தான். சோர்ந்தே தெரிந்தாள். அவளைத் தனியாக விட மனமில்லாமல், “கீர்த்தி, இன்னைக்கு இங்கயே ஸ்டே பண்ணிக்கோ” என்றான். சரியென்று தலையசைக்க மட்டும் செய்தாள்.
அடுத்த நாள் காலை அவள் எழுந்ததும், “இன்னைக்கு சண்டேதான, சென்டர் இல்லைல. நான் ஒரு இடத்துக்கு உன்னய கூட்டிட்டுப் போறேன்” என்றான்.
இப்போதும் எங்கேயென அவள் கேட்கவில்லை. அவனும் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. முதலில் அவள் வீட்டிற்குச் சென்று… குளித்து, உடை மாற்றினாள். பின் அவனுடன் கிளம்பினான்.
அவன் கூட்டிச் செல்லும் இடத்திற்கு… அவனது கையை இறுகப் பிடித்தபடி, தோளோடு தலை சாய்த்தும், சாயாமலும்… அவனோடு சேர்ந்து நடந்தாள்!!
சான் மார்கோ பகுதியில் இருக்கும் கால்வாயை வந்தடைந்தார்கள். அதன் வழியே செல்ல கோண்டோலா ஒன்றை வாடகைக்கு எடுத்துவிட்டு, அவளைப் பார்க்கவும் ஏறிக்கொண்டாள். அடுத்து அவன் ஏறியதும், ‘கோண்டோலியர்’ முன்னோக்கி செலுத்தினார்.
அவர்கள் பயணம் தொடங்கியது. அழகிய வெனிஸ் நகரத்தை அமைதியாக பார்த்தபடி இருந்தாள். அவன் அவளையே பார்த்திருந்தான். இருவரும் எதுவும் பேசவில்லை.
கோன்டோலோ… குறுகலான கால்வாய் வழி நுழைந்தது. ஒருபக்கம் சிறைக் கட்டிடம்… மற்றொரு பக்கம் பெரிய அரண்மனை… இதற்கிடையே இவர்கள் பயணம் தொடர்ந்தது. இருகரையில் விரிந்துப் பரந்திருந்தக் கட்டிடத்தைத் தூரத்தில் தெரிந்த சிறிய பாலம் ஒன்று இணைந்திருந்தது.
பாலத்தின் பெயர் பிரிட்ஜ் ஆஃப் சை! [Bridge of Sigh]
பாலத்தையும், சுண்ணாம்பு கற்பாறைகளால் கட்டப்பட்ட கட்டிடங்களையும் கீர்த்தி அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அதுவரை பேசாமல் இருந்த டேவிட்… பாலம் நெருங்கியதும், “கீர்த்தி என்னய பார்த்து நில்லு” என்றான். அவன் சொன்னதைச் செய்தாள்.
பாலத்தின் அடியில் கோன்டோலோ வந்ததும், அவள் முன்நெற்றியில் அழுந்த முத்தம் வைத்தான். பாலத்தைக் கடக்கும் வரை அந்த அழுத்தம் தொடர்ந்தது. பின் மெல்ல விலகி நின்று, “இந்த பிரிட்ஜ்க்கு கீழ கிஸ் பண்ணிக்கிட்டா லவ் எட்டர்னலா (eternal – நிலைபேறு) இருக்கும்னு… ஒரு மித்(myth)” என்றான்.
இதழோரம் அவளுக்குச் சிறுபுன்னகை வந்தது! பின், ‘இதெல்லாம் நம்புவியா டேவிட்?’ என்பது போல் அந்தப் புன்னகை விரிந்தது.
அதற்கடுத்து ‘பெல் டவர்’ மேலே ஏறி முன்னூற்றி எண்பது கோணத்தில் அகல்பரப்புக் காட்சியாக விரிந்த வெனிஸ் நகரைப் பார்த்தார்கள்.
அதன்பின் மாலை வேளையில் இருவரும் நகரின் வெறிச்சோடிய தெருக்கள் வழியே இதயங்கள் பார்த்தபடி, விழிகள் பேசியபடி மெல்ல நடந்து கேனரகா வந்தார்கள். அங்கே கம்பி வேலிகள் அமைக்கப்படாத மிகவும் பழமையான பாலம் ஒன்று உண்டு.
பாலத்தில் ஒருபுறம் ஏறி… மறுபுறம் இறங்கிய படிக்கட்டின் வழியே நடந்து கடைசி படியில் வந்து அமர்ந்தான். அதனுடன் ஒட்டியிருந்த கட்டிட சுவரில் சாய்ந்துகொண்டு, ‘வா’ என்று சைகை செய்தான். அவள் வந்தமர்ந்ததும், “என் ஃபேவரைட் பிளேஸ் இது” என்றான். லேசான தலையசைப்பு தந்தாள்.
நேற்று எல்லாம் பேசிய பின்னர், அவள் எதுவுமே பேசாமல் இருந்தாள்! பேசா நொடிகள் மௌனம் அல்ல… அது மனம்! அவள் மௌனம் உணர்த்தும் அவள் மனதை உணர்ந்தான். அதனுடைய கனத்தைப் புரிந்தான். அதனால் அவனும் மௌனமானான்!!
அவன் அருகில் கிடைக்கும் தலைகோதல் சுகத்தை அனுபவித்தபடியே கீர்த்தி இருந்தாள்! அந்த அனுபவிப்பை அவளுக்கு அளவில்லாமல் டேவிட் தந்து கொண்டிருந்தான்!!
அடுத்தடுத்த நாட்கள் இருவருக்கும் இடையே இயல்பான பேச்சுகள் வந்தன. அப்போது திலீப் பற்றி கீர்த்தி டேவிட்டிடம் சொல்லியிருந்தாள்.
அடுத்து வந்த ஒரு நாளில், ‘உன்னோட எமோஷனலா அட்டாச் ஆயிட்டேன். தெரபி செஷன்ல எப்படிப் பேசறது உன்கிட்ட… இனி தெரபிஸ்ட்டா பேச முடியாதே, என்ன செய்ய’ என்றிருந்தாள்.
‘ஒரு செஷன்தான இருக்கும்னு சொல்லிருந்த, விடு’ என்று அவன் சொன்ன பின்னும் அவள் யோசனையோடு இருந்திருக்க, ‘கீர்த்தி, ஐ அம் ஆல்ரைட், நீ பார்க்கிறேல, ஸோ இவ்ளோ யோசிக்காத” என்றிருந்தான். அதில் அவள் சமாதானமாயிருந்தாள்.
அதற்கடுத்த நாள்கள் எல்லாம் அவர்களுக்கு இனிமையாகப் போனது.
தினமும் இரவில் கஃபே வருபவள், காஃபி குடித்தபடியே அவனுடன் குறும்பாக, கேலியாக, விளையாட்டாகப் பேசி சிரித்துவிட்டுச் செல்வாள். சிலநேரம் இதய அடுக்குகளில்… விழியின் விளிம்புகளில் காதல் பெருக்கெடுத்து ஓடுவது போல் அவள் பேச்சு கருப்பட்டியாக இனிக்கும்.
ஆலோசனைகள் அதிகம் இருந்து இரவில் வரமுடியாது என்றால், காலையில் அவசரகதியில் கஃபே வந்து அவனிடம் காஃபி கேட்டு நிற்பாள். ‘நாளைக்கு வரலாமே, ஏன் இப்படி?’ என்றாலும் கேட்க மாட்டாள்.
சுடச் சுட இருக்கும் காஃபியை கடகடவென்று பருகுவாள்! ‘பார்த்து… மெதுவா குடி’ என்றாலும் கேட்க மாட்டாள். இதற்கிடையே மடமடவென்று விழிமொழி விருப்பத்துடன் சடசடவென வாய்மொழி வார்த்தைகள் பேச வேற செய்வாள்!
அவனிடம் எந்த வார்த்தை வடிகட்டுதலும் கிடையாது!
ஒவ்வொரு பக்குவப்பட்ட பெண்ணுக்குள்ளும் ஒரு பச்சிளங்குழந்தை உண்டு. ‘இனி இவன் தன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று ஒருவனிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டால், அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியும் ஆகிவிட்டால்… அந்தக் குழந்தை வெளியே வந்து பேசும், சிரிக்கும், விளையாடும்… அல்லவா?!
அப்படித்தான் கீர்த்தி இருந்தாள்!!
கீர்த்தி எத்தனை அவசரத்தில் இருந்தாலும் மறக்காமல் முன்நெற்றி முத்தம் ஒன்று வைத்துதான் அனுப்புவான்! அவள் எவ்வளவு பேசினாலும், அளவான புன்னகையுடன் அதைக் கேட்டுக் கொண்டிருப்பான்.
அவனும் அவளுக்காக மெனக்கெடல் எடுத்து நிறைய பேச, சுவாரஸ்யமாக பேச முயற்சிப்பான். ஆனால் அவனுக்கு அதெல்லாம் வரவில்லை. எனினும் அவன் முத்தத்தின் ஈரம், புன்னகையின் ஓரம் பேசும் பேச்சுகளே அவளுக்கு போதுமானதாக இருந்தது! அதில் நெகிழ்ந்து, நிறைந்து போவாள்!!
அதேசமயம்… சிலநேரங்களில் அதற்காக டேவிட்டைக் கேலியும் செய்வாள். அப்போதெல்லாம் அவன், ‘நான் போரிங் பெர்சனனானு கேட்டதுக்கு, இன்னும் நீ பதில் சொல்லல’ என்பான். அவள், ‘இன்னொரு நாள் சொல்றேன்’ என்ற பதிலையே சொல்வாள்.
சில நாட்கள் வார்த்தைகளே இல்லாமல் இருப்பார்கள். கால்கள் நீட்டி அவன் அமர்ந்திருக்க… அவன் மடியில் வாகாக அவள் தலைசாய்த்திருக்க… மஞ்சள் விளக்கொளியின் வெளிச்சத்தில்… இரவின் அமைதியில்… செலோ இசையின் மெல்லொலியை இமைகள் மூடி ரசித்தபடி இருப்பார்கள்.
கஃபே ஒர்க் ஏரியா, மஞ்சள் விளக்கொளி, குறுகலான வெனிஸ் தெருக்கள், அவனுக்குப் பிடித்த செலோ இசை, அவளுக்குப் பிடித்த திரைப்படப் பாடல் ஒன்று, லேட்டே ஆர்ட், காஃபி, அவளுக்கான அவனின் நெற்றி முத்தம்… இதுவே அவர்களின் காதல் சின்னங்கள் ஆயிருந்தன!
அவள் வெறுமை, மனக்காயம் ஆறிக் கொண்டிருந்தது. அது அவனால்தான். அதுவும் வார்த்தை மொழியால் இல்லாமல், காதல் மொழியால்! அவனுமே வெறுமையை மறந்து, வெளியுலகத்திற்கு வந்து நடக்க ஆரம்பித்திருந்தான். அது அவளால்தான்! அவளுக்காகத்தான்!
இழப்பு, இல்லாமை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய வைத்து, இருவரின் இதயத்தையும் எப்போதும் இன்முகமாக வைத்திருந்தது…. காதல்!!
சுருக்கமாகச் சொன்னால்… நாளைக்கும் தேவை என்று மிச்சம் வைக்காமல் தினந்தோறும் எக்கச்சமாக காதலை வெளிப்படுத்தினார்கள்! பின்… நாளை வந்தால் நேற்று பொறாமைப் படும் வண்ணம் காதல் செய்தார்கள்!
விரிவாகச் சொன்னால் ஒவ்வொரு நாளும் காதலித்தார்கள்!!
அடுத்தடுத்து நிமிடங்கள் இதயம் சுவாசிப்பதே அவளுக்காக… அவளைக் காண்பதற்காக… அவள் மீதுள்ள காதலுக்காக என்று டேவிட் ஆனான்! காணும் இடமெங்கும் காண்பதும் அவனே… கனவெல்லாம் அவனே… கண்விழிப்பதும் அவனுக்காகவே என்று கீர்த்தி ஆனாள்!
காதல் அவர்களை அப்படி ஆக்கியிருந்தது! இருவர் இதயங்களின் பிணைப்பு அதிகமாகின! அது அவர்கள் வெறுமையை விரட்டியிருந்தது! அதைக் கண்டு வெனிஸ் நகரமும் புன்னகை செய்தபடியே இருந்தது.
இப்படி நகர்ந்த அவர்கள் நாட்காட்டியின் ஒரு நாளில் இந்தியாவிலிருந்து ரவி, மது வந்திருந்தார்கள். கீர்த்தியுடனான காதலைப் பற்றி டேவிட் அவர்களிடம் சொல்லிவிட்டு… அவர்களையே பார்த்திருந்தான்!
அதைக் கேட்டுவிட்டு… ரவி அத்தனை அமைதியாக இருந்தான்!!

