Kathambari Novels
அடுத்து நான்கு நாட்கள் கடந்திருந்த நிலையில் பாண்டியனை அலைபேசி வழியே அழைத்து, ‘உதவி வேண்டும்’ என்று பாவை கேட்டிருந்தாள். இப்படித் தனியே வந்தபின் இதுதான் முதல்முறை அவள் இப்படிக் கேட்பது! அப்படி ஒரு ஆனந்தம் அவனுக்கு!
வான் நீலத்தை எல்லாம் வாரி பூசிட நினைக்கும் பட்டத்தைப் போன்று அவன் மனம் பறந்தது அதீத மகிழ்ச்சியில்! அதே மனநிலையில் கிளம்பி வந்த போது, வீட்டின் கீழே பாவை நின்று கொண்டிருந்தாள்.
காரிலிருந்து இறங்கப் போனவனிடம், “போய்க்கிட்டே பேசலாமா” என்றாள் பாவை. “ம் சரி” என்று அவன் கார் கதவைத் திறந்துவிட, ஏறிக் கொண்டாள்.
சற்று நேரத்திற்குப் பின் சாலையோர மர நிழலில் காரை நிறுத்தியிருந்தான். இருவரும் காரில் இருந்தபடி ஒருவரை ஒருவர் பார்த்து அமர்ந்து கொண்டனர்.
“சொல்லு ஹனி! என்ன ஹெல்ப் வேணும்” – குரலில் துள்ளலுடன் பெரிதாய்க் கேட்பாள், அதைச் சரியாய் செய்திடனும் என்ற எதிர்பார்ப்புடன் கேட்டான்!
“எனக்கு ஒரு கேமரா வேணும்” என்றாள்.
“கேமராவா?” – அது எதுக்கு இப்போ என்ற சந்தேகக் குரலில் கேட்டான்.
“கோயில்ல, வீட்ல சின்ன சின்னதா பாடறதலாம் ரெக்கார்ட் செஞ்சி, சேனல் கிரியேட் பண்ணி அப்லோட் பண்ணலாம்னு நினைக்கிறேன்!”
இவ்வளவுதானா என்ற ஏமாற்றத்துடன், “என்கிட்டயே இருக்குது. நாளைக்கு எடுத்து வந்து தர்றேன்” என்றான்.
“ம்கூம்! எனக்குப் புதுசுதான் வேணும்”
“சரி வாங்கிடலாம்”
“விலை பத்தாயிரத்திலிருந்து பதினைஞ்சாயிரத்துக்குள்ள இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க”
“எதுக்கு இந்த பட்ஜெட்” என்று ஒருமாதிரிக் குரலில் கேட்டான்.
“வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்தது போக கொஞ்ச அமௌன்ட்தான் இருக்கு. வீணை வேற வாங்கணும். அதனால இந்த ரேஞ்ல இருந்தா போதும்”
சட்டென, “ப்ச்! ஏன் பாவை?” என்று எரிச்சலடைந்தான்!
எதற்கிந்த கோபம் என்று புரியாமல் பார்த்தாள்.
“வீட்டுக்கு ஆன செலவில எதுக்குமே என்னய கொடுக்க விடலை! சரி அப்ப ரொம்ப கோபமா இருக்கிறனு விட்டுட்டேன்! இத்தனை நாள் பேசினதுக்கு அப்புறமும் அப்படியே இருந்தா எப்படி?!” என்று கோபப்பட்டான்!
“எதுக்கு தேவையில்லாம…” என்று ஆரம்பிக்க, ‘உஃப்’ என்று ஆற்றாமையை வெளிப்படுத்தியவன், “இதுதான் ஹெல்ப்பா?” என்றான்.
ஆம் என்று அவள் தலையாட்டவும், “சரி உன்னய வீட்ல விட்டுறேன்” என்று நேராக அமர்ந்து காரை எடுக்கப் போனான். வந்தபோது இருந்த துள்ளல் இப்போது அவனிடம் இல்லை என்பதை உணர்ந்து, “என்னாச்சு” என்றாள்.
“உனக்கு சப்போர்ட் பண்ண போறேன்னு சந்தோஷமா வந்தேன். ஆனா இப்ப டோட்டல் அப்செட்!” என்றதும், பாவைக்கு கஷ்டமாக இருந்தது!
“கிளம்பலாம் பாவை” என்று காரை கிளப்புகையில் கியரில் இருக்கும் அவன் கையைப் பிடித்து, “வேண்டாம்” என்றாள் ஏதோ வேண்டுமென்பது போல்!
“ஏன்?”
“இப்படியே ஒரு டிரைவ் போயிட்டு, அப்புறம் வீட்டுக்குப் போகலாமே” என்றாள் அவனை அப்படி ஒரு மனநிலையில் அனுப்புவதற்கு மனமில்லாமல்!
“சரி” என்று காரை கிளப்பினான். சற்று நேர பயணத்தின் பின், கார் புறநகர் பகுதியைத் தாண்டி வெகுதூரம் வந்திருக்க, “திரும்பலமா?” என்று கேட்டான்.
“இன்னும் கொஞ்ச தூரம்” என்றாள் கெஞ்சலாக!
“வேண்டாமே பாவை” என்றான், சாலையில் கவனம் செலுத்த முடியாமல்! ஓட்டுவதற்கும் மனமில்லாமல்!
“வேணும்” என்று மட்டும் சொன்னாள். திரும்பவும் ஓட்ட ஆரம்பித்தான். புறநகர் சாலையைக் கடந்து மாநில நெடுஞ்சாலை வந்ததும், “போதுமா” என்றான்.
“இன்னும் கொஞ்ச தூரம் போகலாமே” என்றாள்.
இவளுக்கு என்னாயிற்று என்று நினைத்தாலும், அதன்பின்னும் ஓட்டினான்.
சற்று நேரத்திற்குப் பின் மஹிந்திரா தார் மாநில நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் ஒருபக்கத்தில் பாவை நின்றாள். மறுபக்கத்தில் பாண்டியன் நின்றான்.
பாண்டியன், “வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன்ல, கேட்டியா?! இப்போ பாரு டயர் பங்ச்சர்!” என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தான்.
இதற்கு நானென்ன செய்ய என்று நினைத்தாலும் அமைதியாக நின்றாள்.
“டிரைவ் பண்ற மைன்ட் இல்லனுதான வேண்டாம்னு சொன்னேன்” என்று ஆரம்பித்து அவளைத் திட்டிக் கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த ஒரு பெண் காவலர், அவன் கத்துவதைப் பார்த்தபடி வந்ததால்… அவர்கள் அருகே வந்து தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி, “என்ன ப்ராப்ளம்?” என்று கேட்டார்.
“டயர் பங்ச்சர்” என்றான்.
“ஒரு ரெண்டு கிலோமீட்டர் போனா வொர்க்ஷாப் இருக்கும்” என்று உதவியாக நினைத்துச் சொன்னார்.
“பரவால்ல! நான் சரி பண்ணிடுவேன்” என்றதும் அந்தக் காவலர் பாவையைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ, “இங்க வாங்க!” என்று அழைத்தார்.
அவர் அருகில் சென்றவளிடம் ஏதோ கேட்டதற்கு, “ஆமா மேடம்! ஹஸ்பன்ட் அன்ட் வொய்ப்தான்” என்று பதில் சொன்னதும் கிளம்பிவிட்டார்.
அவர் போனதும் காரில் சென்று அமரப்போனவளை, “என்ன சொன்னாங்க?” என்று பின்னேயே கேட்டு வந்த பாண்டியன் குரல் தடுத்தது.
அமைதியாக நின்றாள்.
“ப்ச்! சொல்லு பாவை!!” என்றான் பொறுமையில்லாமல்!
“உங்களால ஏதாவது ப்ராப்ளம்னா கம்பளைன்ட் பண்ண சொன்னாங்க!”
“என்னது கம்ப்ளைன்ட்டா?, அதுக்கு நீ என்ன சொன்ன?” என்றான்.
“சரினு சொன்னேன்” என்றாள்.
“அடி வாங்கப் போற!” என்றான் பொறுக்க முடியாமல்!!
“அப்போ கம்ப்ளைன்ட் கன்பார்ம்” என்றாள் பாந்தமான குரலில்!
இரண்டொரு நொடிகள் பொறுமையாக அவளையே பார்த்தான். பின்… அவள் சொல்லிய விதத்தை நினைத்தவனுக்கு, அது பொய்யென புரிந்தது. சட்டென சிரித்துவிட்டான்!!
“கம்ப்ளைன்ட்னு சொன்னதும் சிரிச்சி சமாளிக்கிறீங்களா” என்றாள் விடாமல்!
“பொய்தான சொன்ன” என்று மேலும் சிரித்தான்!!
“ஓட்டத் தெரியாம ஓட்டிக்கிட்டு வந்து… நீங்க டயரை பங்ச்சர் பண்ணிட்டு, என்னய திட்டிக்கிட்டு இருக்கீங்க! எந்த ஊரு நியாயம் இது?”
அவளது கேலியான பேச்சைக் கேட்டு, “அது சரி” என்று இன்னுமே சிரித்தான்.
அவன் சிரிப்பதையே பார்த்தவள், “டோட்டல் அப்செட்னு சொன்னீங்க! இப்ப ஓகேவா?” என்று கேட்டாள்.
“டோட்டல் ஹேப்பி” என்று காரில் தாளம் போட்டுக் கொண்டே சொன்னான். அவன் பேச்சிலும் செயலிலும் கவரப்பட்டு, அவனுடன் சேர்ந்து சிரித்தாள்.
சட்டென பாவைக்கு, ‘நாம ரெண்டு பேரும் சேர்ந்து சிரிச்சிப் பேச முடியுமானு தெரியலை’ என்று அன்று சொல்லியது ஞாபகத்திற்கு வந்தது! ஆனால் இன்று நடப்பதைப் பார்த்தவளுக்கு அது முடியும் என்றே தோன்றியது!!
தாளம் போடுவதை நிறுத்திவிட்டு சுற்றிலும் பார்த்து, “இதுகூட நல்லாத்தான் இருக்கு” என்று மஹிந்திரா தாரின் முன்பக்கத்தில் மேலேறி அமர்ந்தான்.
“நானும்” என்று அவள் சொன்னதும் கைப்பிடித்து ஏற்றிவிட்டான்.
பழக்கமில்லாததால் வந்த பயத்தினால் அவனை நெருங்கி அமர்ந்து அவன் புஜத்தினுள் கையை நுழைத்து இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
இல்லாளின் செயலினால் இறக்கையில்லாமல் பறந்தவன், “இப்பெல்லாம் ஏன் பாண்டியன்னு கூப்பிட மாட்டிக்க” என்றான்.
“நீங்கதான அப்படிக் கூப்பிடாதனு சொன்னீங்க” என்றாள் அடுத்த நொடி!
“அது கோபத்தில சொன்னது ஹனி. அதெல்லாம் மறந்திட்டு, பாண்டியன்னு கூப்பிடேன்” என்று ஆசையாகக் கேட்டான்.
“நல்லா ஞாபகம் இருக்கு. எப்படி மறக்க? சோ அப்படிலாம் கூப்பிட முடியாது”
“சரி! கூப்பிடாத” என்று அலட்சியமாகச் சொன்னவன், “நீ கூப்பிடலனா என்ன, நான் கூப்பிட்டுப் போறேன்” என்றான்.
‘ஆங்! அதெப்படி?’ என்பது போல் பார்த்தாள்.
“சொல்லுங்க மிஸஸ் பாண்டியன்! கேஷ்… ஆர் செக்?” என்றான்.
என்ன கேட்கிறான் என்று புரியாவிட்டாலும் அவன் அழைக்கும் விதத்தில் பூரிப்படைந்தாள்.
“கேமரா வாங்க பணம் தர்றதா சொன்னியே, அத கேட்கிறேன்” என்று அவள் விருப்பத்திற்கேற்ப இறங்கி வந்தான் பாவையின் பாண்டியன்!
“நீங்கதான வாங்கித் தரப் போறீங்க, நீங்களே முடிவு பண்ணிக்கோங்க” என, அவன் விருப்பத்திற்கேற்ப இறங்கி வந்தாள் பாண்டியனின் பாவை!
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்! அர்த்தமாகிக் கொண்டிருக்கும் வாழ்வில் அர்த்தமற்ற சிரிப்புகள்!!
சாலையின் இருபுறமும் ஆங்காங்கே வயல்வெளிகள் மற்றும் தரிசு நிலங்கள்! தூரத்தில் தெரியும் கிராமத்து வீடுகள்! எப்போதாவது இருசக்கர வாகனங்கள் போவதும் வருவதுமாய் இருந்தன!
மேற்கே உதிரப்போகும் சூரிய பூ! மின்கம்பிகளில் அமர்ந்திருக்கும் குருவிகள்!
செவ்வானம்! கொஞ்சம் புழுதிக்காற்று! கொஞ்சம் புரிந்து கொள்ளப்பட்ட காதல்! மஹிந்திரா தார் மேல்! மனங்கவர்ந்தவள் அருகில்!!
வேறென்ன வேண்டும் சிவபாண்டியனுக்கு!?
“கோல்டன் அவர்ஸ்” என்று ரசித்துச் சொன்னான்.
“நாம இப்படி உட்கார்ந்திருக்கிறதா?” என்று கேட்டாள் இன்முகத்துடன்!
“ச்சே ச்சே! போட்டோகிராபில சன்செட், சன்ரைஸ்க்கு முன்னாடி பின்னாடி இருக்கிற நேரத்தை கோல்டன் அவர்ஸ்னு சொல்லுவோம்” என்றான் இரக்கமே இல்லாமல்!
அவளிடம் ஓர் அமைதி!
‘நான்சிங்கா போய்ட்டோமோ’ என்று அவன் திரும்பிப் பார்த்ததும், அவள் “உங்களை…” என்று அவன் புஜங்களில் மெல்ல குத்தினாள்.
“ஹே! போற போக்க பார்த்தா, நான்தான் கம்பளைன்ட் பண்ணனும் போல” என்றதும் சிரித்துக் கொண்டே செல்லமாகக் குத்தினாள்.
அதன் பின் இருவரும் சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஆக மொத்தத்தில் வண்டிச் சக்கரம்தான் பிளவுபட்டு சாலையில் நிற்கிறது. ஆனால் இருவரின் வாழ்க்கை என்ற வாகனம், சற்று பழுது சரி செய்யப்பட்டு, சந்தோஷச் சாலைக்குள் நுழைந்துவிட்டது.
****************
இரண்டு மூன்று நாட்கள் கடந்திருந்தது. சிவா வரும் நேரம் என்பதால் கதவைத் திறந்து வைத்து செண்பகம் காத்திருந்தார்.
சற்றுநேரத்தில் அவனும் வந்தான். வீட்டிற்குள் நுழைந்ததும், “மணி நாலாகுது! நேரத்துக்கு சாப்பிட வேண்டாமா” என்று பாசத்துடன் கடிந்து கொண்டார்.
“சாரி சாரி-ம்மா” என்று அவர் அருகில் வந்து அமர்ந்தான்.
“இன்னைக்கு மட்டுமில்ல சிவா! இப்போ கொஞ்ச நாளாவே நீ சரியா சாப்பிட வர்றதேயில்லை?!” என்றார் கண்டனக் குரலில்!
“அது…” என்று அவன் பேச வர, “பசியோட இருக்கிறது நல்லதில்ல!” என்றார் கரிசனமாக, அவன் வயிற்றை நினைத்து! பின், “வேற பிரச்சனையா, அதான் இப்படி இருக்கியா” என்றார் கவலையாக, மகன் வாழ்க்கையை நினைத்து!
“ம்மா! பசியோடெல்லாம் இருக்கிறதில்ல. பிரச்சனையும் இல்ல”
‘அப்புறம்?’ என்பது போல் பார்த்தார்.
“அது… பாவையைப் பார்க்கப் போறேனா… அவ சாப்பிட சொல்றா. அதான், அங்கயே… சாப்பிடறேன்” என்று இடைவெளி விட்டுவிட்டுச் சொன்னவன் முகத்தில் ஒரு இன்பமான புன்னகையும் இருந்தது!!
அவன் சொன்ன விதத்தைக் கண்டு… அவரும் சிரித்துக் கொண்டே, “சரி, போ கண்ணா, போய் முகம் கழுவிட்டு வா. காஃபி குடிக்கலாம்” என்றார்.
“சரிம்மா” என்று புன்னகை மாறாமல் சொல்லி, எழுந்து அறையை நோக்கி நடந்தான். வெகு நாட்கள் கழித்துப் பார்க்கிறார். அவன் இயல்பாக புன்னகை புரிந்து! அவன் மகிழ்ச்சி அவரையும் தொற்றிக் கொண்டது.
மேலும், ‘பாவையா இப்படி?’ என்ற அதிர்ச்சி வந்தது! ஆனால் இம்முறை ஆனந்த அதிர்ச்சி!!

