Kathambari Novels
“உனக்கெல்லாம் எந்த மூவி சான்ஸ்ம் இனி வராது பிரசாத். முட்டாள்தனமா பேசிட்டு வந்திருக்கடா” – யூடியூப்ல் வந்திருந்த பிரசாத்தின் ஒரு பேட்டியைப் பார்த்துவிட்டு மனோகர் இப்படிக் கத்தினான்.
பிரசாத்… முழுப்பெயர் லக்ஷ்மிபிரசாத்… வளர்ந்து வரும் திரைப்பட நடிகன். நடிப்பு அவனுக்குப் பிடித்தமான ஒன்று. அவனது படப்பிடிப்பு நாள், இடம், மற்ற விவரங்களைப் பார்த்துக் கொள்பவன்தான் மனோகர்.
‘மேனேஜர்’ வேலைதான் மனோகருடையது. இருந்தாலும், ‘வாடா, போடா’ என்று பிரசாத்திடம் உரிமையோடு பேசுவான். பிரசாத் செயலில் உடன்பாடு எதுவும் இல்லையென்றால் கோபமும் காட்டுவான். பிரசாத்தும் மனோகரிடம் அப்படித்தான் நடந்து கொள்ளவான்.
இருவருக்கும் ஒரே வயது. நண்பர்கள் போலவே பேசுவார்கள்… பழகுவார்கள்.
பிரசாத் நடித்து வெளிவரவிருக்கும் படத்தின் விளம்பரத்திற்காக, சமீபத்தில் அவன் ‘யூடியூப் சேனல்’ ஒன்றுக்கு கொடுத்திருந்த பேட்டி பேசுபொருளாக மாறி இருக்கிறது. ‘லக்ஷ்மி வெடி கேள்விகள்’ என்று ‘டேக் லைன்’ வைத்து சில நேர்மறைக் கருத்துகள், பல எதிர்மறைக் கருத்துகள் வந்து குமிகின்றன.
அதைப் பார்க்கப் பார்க்க மனோகருக்கு, ‘இப்படி பேசி வச்சிருக்கானே’ என்று கோபம். பிரசாத் மேல் அதைக் காட்டிக் கொண்டிருக்கிறான்.
“பார்த்துப் பேசி இருக்கனும் நீ. வளர்ந்து வர்ற நேரத்தில இவ்ளோ நெகட்டிவ் கமெண்ட்ஸ், இது தேவையா… சொல்லு. இந்த இடத்துக்கு வர்றதுக்கு எவ்ளோ கஷ்டப்பட்டிருக்க, அதலாம் வேஸ்ட்டா போயிட்டா என்ன பண்ண” – அங்கும் இங்கும் ‘கேரவன்’-க்குள் நடந்தபடி முணுமுணுத்தான் மனோகர்.
“கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன். அவ்ளோதான், சும்மா புலம்பிக்கிட்டே இருக்காத டா” – இப்படிச் சொல்லிவிட்டு, ஒப்பனையை ‘டிஸ்யூ’ கொண்டு துடைக்க ஆரம்பித்தான். அருகிலே அவனது உதவியாளர் நின்றார்.
“சாங் லிரிக்ஸ் பத்திலாம் நீ ஏன் டா பேசற” – கோபத்துடன் விறுவிறுவென்று பிரசாத் முன் வந்து நின்றான் மனோகர்.
“டேய் அந்த ஆங்கர் கேட்ட கேள்வி அப்படி!”
“என்ன கேள்வி அப்படி!? லவ் பெயிலியர் சாங்ஸ், ஹீரோக்கு நல்லா இருக்கா, ஹீரோயினுக்கு நல்லா இருக்கானு அவனே சாய்ஸ் கொடுத்துருக்கான்ல, அப்ப அதுலருந்து ஒன்ன பதிலா சொல்ல வேண்டியதான”
மனோகர் பேசிய விதத்தில் சிரிப்பு வர உதவியாளரைப் பார்த்துச் சிரித்தான் பிரசாத். அவரும் லேசாக சிரித்து வைத்தார்.
“நீங்க ஹேர் செட் பண்னுங்க. அடுத்த ஸீன்க்கு லேட் ஆகுது” – உதவியாளரிடம் சொன்ன பிரசாத், “எனக்கு தோணுதுதான சொல்ல முடியும்” – குண்டு பல்புகள் சுற்றியிருந்த செவ்வக கண்ணாடியில் ஒப்பனை முகத்தில் போயிருக்கிறதா என்று பார்த்தபடி மனோகருக்குப் பதில் சொன்னான்.
“உனக்கு ஏன் டா பிரச்சனைய கிளப்புற மாதிரி தோனிருக்கு”
“ஒரு ஹீரோயின் ஹீரோ வேண்டாம்னு சொல்லிட்டா! இதான் சிட்சுவேஷன். இதுக்கு அந்த ஹீரோ பாடுற பாட்டு வரில முக்கால்வாசி வன்மம்தான் இருக்கு. ஒரு பையன் பிடிக்குதுனு சொல்லிட்டா, வேண்டாம்னு சொல்றதுக்கு அந்தப் பொண்ணுக்கு உரிமை இல்லனு சொல்ற மாதிரி இருக்கு.
இந்த மென்டாலிட்டி, இந்த அணுகுமுறை சொசைட்டில ரிஃப்ளக்ட் ஆகாதா? ஆனா இதுவே ஹீரோ ஹீரோயின மறுத்துட்டா… சாங் எல்லாம் டன் கணக்கா வருத்தத்த கொட்டுது. ஏன் இந்த வித்தியாசம்? எதுக்கு இந்த பாரபட்சம்? இத கேட்கிறதுல எனக்கு தப்பா எதுவும் தெரியல… போடா”
மனோகரிடம் இப்படிக் கூறிவிட்டு… உதவியாளரிடம், “ஹேர் ஜெல் எடுங்க, வெளிய இருக்காது, மேக் அப் கிட்ல இருக்கும்” என்றான் பிரசாத்.
மனோகர், “சரிடா அத விடு! ஐட்டம் சாங் பத்தி கேட்டா, நோ ஐடியானு கடந்து போக வேண்டியதுதான” என்றான் பிரசாத் முகத்திற்கு முன் வந்து.
“தப்பு தப்பு! அப்படிச் சொல்ல கூடாது. ஸ்பெஷல் நம்பர்னு சொல்லணும்”
பிரசாத் சொன்ன விதத்தில், “அடிச்சிருவேன்டா! அந்த கேள்வியை அவாய்ட் பண்ணாம, வில்லங்கமா பதில் சொல்லி மாட்டிருக்க” என்றான் மனோகர்.
“கேள்வி அந்த சாங்ஸ் பத்தி கிடையாது. மேரேஜ்க்கு அப்புறம் ஹீரோயின் இதுமாதிரி பாட்டுக்கு ஆடலாமா, இப்படி ஒரு டான்ஸ், அதுவும் ஹீரோவோட இவ்ளோ இன்டிமேட்டா டான்ஸ் பண்ணலாமானுதான்.
அதான் நான் கேட்டேன்… கூட ஆடுற ஹீரோ கல்யாணம் ஆனவன்தான. அவன ஏன் ஒன்னும் சொல்றது இல்ல. மேரேஜ்க்கு அப்புறம் இப்படியான ரோல்லதான் நடிக்கணும்னு அவனுக்கு மட்டும் ஏன் எந்த ரூல்ஸ்ம் இல்ல.
ஹீரோயின் ஹஸ்பண்ட்லாம் இதுக்குள்ள கொண்டு வந்து பேசறவங்க, ஹீரோ வொஃய்ப்… அந்த பொண்ணு என்ன நினைக்கும்னு ஏன் எப்பவும் இங்கே கேள்வியே வர மாட்டிக்குது! நீங்க இந்த இடத்துல ரெண்டு பொண்ணுங்கள டிஸ்ரெஸ்பெஃக்ட் பண்றீங்கனு சொன்னேன்”
இப்படிக் கடகடவென்று பிரசாத் பேசிவிட்டு, “அப்புறம், இதுமாதிரி சாங்ஸ் தேவையா இல்லையாங்கிறது தனி டிபேட், அதுபத்தி இன்னொரு பேட்டில பேசலாம், சரியா டா” என்று மனோகர் தோளில் தட்டிச் சொன்னான்.
“ப்ச்” – அவன் கையைத் தட்டிவிட்டு, தள்ளிப் போய் அமர்ந்தான் மானோகர்.
“டேய், இவ்ளோ டென்சன்லாம் வேணாம்டா” – புன்னகையுடன் சொல்லிவிட்டு, அடுத்த காட்சிக்கான ஒப்பனையை பிரசாத் ஆரம்பித்தான். இருவர் பேச்சைக் கேட்டாலும், உதவியாளர் எதுவும் சொல்லாமல் அவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
சற்றுநேரம் அங்கே அமைதி நிலவியது.
“சினிமாவாலதான் சொசைட்டில பொண்ணுங்கள தப்பா பார்க்கிறாங்கனு சொல்லிருக்க… நீயும் ஒரு ஹீரோங்கிறதா மறந்து பேசிட்டியாடா?” – பிரசாத் பேட்டிக்கு வந்திருந்த கருத்துகளை மீண்டும் ஒருமுறை வாசித்ததில் எரிச்சல் வர… மனோகர் இப்படிக் கேட்டான்.
“நான் ஹீரோதான். மறக்கலாம் இல்ல. ஆனா நான் பேசினது உண்மைதான? ஜிம்ல, ஸ்விம்மிங் பூல்ல பொண்ணுங்கள எப்படிலாம் தப்பா பார்க்கலாம்னு சினிமா கேமரா ஆங்கில்தான சொல்லி கொடுக்குது. வொர்க்அவுட் பண்ண ஏதுவான ட்ரெஸ் போட்டு, ஒரு பொண்ணு எஸ்சர்சைஸ் பண்ணிட்டு போகுது, இப்படி ஒரு ஜிம் ஸீன் முடிஞ்சிருக்கா? இல்லயே!!
ஹீரோ இன்ட்ரோ-க்கு ஒரு பைட் ஸீன் வேணும், அதுக்கு ஒரு லீட் தேவை… அதுக்குத்தான இதலாம்! அதான்… ‘போரடிக்கு, ஹீரோ பைட் பண்ண நல்லா யோசிச்சி லீட் வைங்க’னு டைரக்டர்ஸ்கிட்ட ரெக்வஸ்ட் பண்ணேன்”
“ரெக்வஸ்ட்?!” – ‘நீ அந்த விதத்தில் பேசவில்லை’ என்று சொல்லிக் காட்டும் தொனியில் மனோகர் கேட்டான்.
“ம்ம்” என்றான் அவனைப் போல புருவம் உயர்த்தி.
விருட்டென எழுந்து வந்த மனோகர், “சர்ரி நீ சொல்ற மாதிரி ரெக்வஸ்ட்னே வச்சிப்போம்; ரேப், அப்யூஸ் பத்தி விழிப்புணர்வு படம் எடுக்கிறவங்களையும் குறை சொல்லி வச்சிருக்கியே டா” என்று புருவங்கள் சுருக்கிக் கேட்டான்.
“அது அவெர்னஸ் படமா உங்களுக்கு… ரொம்ப சென்சிட்டிவான விஷயம், அத சரியா ஹேண்டில் பண்ண தெரியல. ஒரு ரேப்போ, அப்யூஸோ… அந்த ஷீன எப்படிக் காட்டறதுனு யோசிக்கிற அளவு கூட, அதுக்கப்புறம் அந்த விக்டிம் எப்படி இந்த டிராமாலருந்து வெளிய வர்றாங்கனு காட்ட மாட்டிக்கிறாங்க.
ஹீரோ வந்து நியாயம் கேட்கிறாங்கனு, பழி வாங்கிறாங்கனு முடிச்சிறாங்க. இல்லனா சொசைட்டில அந்தப் பொண்ண எவ்ளோ மோசமா நடத்துறாங்கனு காமிக்கிறாங்க”
“அந்த மாதிரி சொசைட்டில இல்லனு சொல்றியா” – மனோகர்.
“ஒன்னு ரெண்டு இருக்கலாம் டா, இல்ல ஓராயிரம் கூட இருக்கலாம். ஆனா இருக்கிறதயே காட்டி என்ன பிரயோஜனம். இப்படி இருக்கலாம்னு… இல்ல இப்படித்தான் இருக்கணும்னு காட்டினாதான மாற்றம் வரும்.
முதல இதுக்கு பதில் சொல்லு டா, ஏன் பாதிக்க பட்டவங்களையே காட்டணும். இந்த மாதிரி தப்பு பண்ணவன சொசைட்டி மோசமா ட்ரீட் பண்ணற மாதிரி காட்டலாமே; அதெல்லாம் காட்ட மாட்டாங்க. ஏன்னா பாதிக்கப்பட்டவங்க கஷ்டம் பார்த்தாதான பரிதாபம் வரும்… படம் ஓடும்”
“போதும் எப்ப பார்த்தாலும் குதர்க்கமா பேசிக்கிட்டு. என்டர்டெயின்மென்ட்ட என்டர்டெயின்மென்ட்டா மட்டும்தான்டா பார்க்கணும். அதவிட்டு இப்படிலாம் குறை சொல்லிக்கிட்டு இருக்க கூடாது”
“ஓ, நீ அப்படி வர்றீயா? ம்” என்று யோசித்து “நிறைய இருக்கு சொல்றதுக்கு, இப்போ ஒன்னு மட்டும் கேட்கிறேன் மனோ. கேன்சர் வந்தா உயிர் வாழவே முடியாதுங்கிற பயம் உனக்கு இருக்கா” என்றான்.
‘நான் என்ன பேசறேன் நீ என்ன பேசிக்கிட்டு இருக்க’ என்று மனோ நின்றான். உடனே பிரசாத், அவன் உதவியாளரிடம், “நீங்களாவது சொல்லுங்க” என்றான்.
‘இருக்கு’ என்று சொல்லும் விதமாக தலையசைத்தார் அவர்.
“ஆனா கேன்சர் சர்வைவர்ஸ் எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா. ஆனாலும் இந்த நோய் பத்தின பயம் மக்களுக்கு ரொம்ப இருக்கு. அப்போ அத பத்தின சரியான புரிதல் இல்ல. ஏன், காப்பாத்த முடியாத நோய்னாலே கேன்சர்னு இந்த சினிமா காமிச்சதாலதான்.
அப்படினா என்டர்டெயின்மென்ட்டா மட்டும் சினிமாவ பார்க்கல. அதுலருந்து ஒரு இன்ஃபர்மேஷன் எடுக்கறாங்க. அப்ப அது சரி இல்லனா சொல்லத்தான் செய்யணும்.
இன்னொன்னு… நீ சொல்ற மாதிரி மூவி என்டர்டெயின்மென்ட்டா இருக்கும். அது பக்குவம் வந்த வயசுல பார்க்கிறவங்களுக்கு மட்டும். பக்குவம் வராத வயசு பசங்களுக்கு… பொது அறிவாதான் போய் சேரும்”
கடைசியில் மனோகர், “அட போடா, இனி நீ வெள்ளித்திரையில நடிச்சிக்க முடியாது” என்றான் பிரசாத்திடம். அவன் உதவியாளரைப் பார்த்து, “நீங்க வேற வேலை இப்பவே தேட ஆரம்பிங்க, நானும்தான் தேடணும்” என்றான்.
“பரவால்ல டா, சின்னத்திரையில நடிச்சிட்டுப் போறேன்” – பிரசாத் தோள் குலுக்கிச் சொன்னாள்.
“அங்கேயும் உன்னய சேர்த்துக்க மாட்டாங்க. வீட்ல இருக்கிறவங்களுக்கு வீட்ல நடக்கிற விஷயத்தையே காட்ட கூடாதுனு சீரியல் பத்தி சொல்லிருக்க, அத மறந்திடாதடா நீ”
“அதுல என்ன தப்பு இருக்கு, உறவுகள் முக்கியம்தான். அதுக்காக அதையே பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி, நாம உலகத்தையும் பார்க்கணும்ல. செல்ஃப் ரெஸ்பெஃக்ட் முக்கியம்னு… மாமியார், கணவன எதிர்த்து கேள்வி கேட்கிற மாதிரி காமிக்கிறதுலாம் ரொம்ப சரி, அதலாம் எதும் சொல்ல மாட்டேன்.
ஆனா இதான் எயீட்டிஸ்லயே காட்டிட்டாங்களே?! இன்னும் அங்கேயே நாம நின்னுகிட்டு இருக்கோமா?! இல்லயே அத தாண்டி எவ்வளவோ தூரம் பயணம் பண்ணிருக்கோமே!
அதலாம் காட்டினாதான வீட்டில இருக்க பொண்ணுங்களுக்கு நாம போக வேண்டிய தூரம் நிறைய இருக்குனு மோட்டிவேஷனா இருக்கும்” என்றவன், “ஏன் காமிக்கிறதில? ம்ம்ம் இத ஏன்னு கொஞ்சம் ரீசர்ச் பண்ணனும்னு” என்று அவனுக்குள் சொல்லிக் கொண்டான்.
அதுவரை ஒன்றும் பேசாமல் இருந்த உதவியாளர், “தம்பி அடுத்த ஸீன்க்கு நேரமாயிடுச்சி” என்றார் ஒரு புன்னகையோடு.
கண்ணாடியில் ஒருமுறை முகத்தைப் பார்த்துவிட்டு, “ம்ம் போறேன்” என்று பிரசாத் மனோகரைப் பார்த்தான். “போடா போ, இதான் உன் கடைசி படமா இருக்கலாம்” – மனோகர் இன்னும் கோபமாக இருந்தான்.
படத்துறையில் கஷ்டப்பட்டுத் தனக்குக் கிடைத்த இந்த இடம் போய்விடுமோ என்ற பயத்தில், தன்மீதான அக்கறையில் மனோ இப்படிப் பேசுகிறான் என்று புரிந்ததால், பிரசாத் ஒன்றும் சொல்லாமல் நின்றான்.
அந்தநேரத்தில் உதவியாளர்தான், “விடுங்க தம்பி, எதுவும் இல்லனா யூடுயூப் சேனல் ஆரம்பிச்சிடலாம்” என்றார் மனோகரிடம்.
“ப்ச் நீங்க வேற, இவன்தான் அவங்களையும் விட்டு வைக்கலயே” – மனோகர் எரிச்சலாகச் சொன்னான்.
உடனே பிரசாத், “அதகூட தப்புனு சொல்லுவியா நீ? மேரேஜ்க்கு அப்புறம் ஒரு ஹஸ்பன்டு தப்பானவனா இருந்து, அவன் மனைவி பாதிக்கப்பட்டா, நிறைய பேர்… அந்தப் பொண்ணுக்காக குரல் கொடுக்கிறாங்க, அதைத் தட்டிக் கேட்கிறாங்க, கேள்வி கேட்கிறாங்க.
ஆனா இன்னொரு பக்கம் ஹஸ்பண்டுக்கு இல்லீகல் அஃபயர் இருக்கிறதை, வொஃய்ப் நார்மலா எடுத்துக்கிற மாதிரி வி-ளாக்ல (v-log) காட்டுறாங்க.
ஹஸ்பண்டு வீட்டு வேலைய ஷேர் பண்ணிக்கனும்னு பேசிப் பேசி… இப்போ நிறைய ஜென்ஸ் அத முன்னெடுத்துச் செய்யறாங்க. இப்படிப்பட்ட நேரத்தில, அவங்க வீட்டு வேலை செய்றத கேலியா காட்டிறது… எல்லா பொறுப்பையும் பெண்கள் எடுத்துச் செய்யறதுதான் பண்பாடுனு காட்டுறது… சரியா? இப்போ இது அவசியமா?
இந்த முரண்பாடு, மாற்றத்தை நோக்கிப் போற சமுதாயத்துக்கு நல்லதில்ல, மாற்றத்துக்காக சமுதாயம் கேட்கிற கேள்விகளோட வீரியம் குறைஞ்சிடும். இத சொல்லறத்துல என்ன தப்பு இருக்கு” என்றான்.
மனோகர் அமைதியாக இருந்தான்.
பிரசாத் “ஸீன் முடிச்சிட்டு வந்து பேசறேன்” என்று கேரவன் கதவைத் திறந்து போகப் போனவன், “மனோ… அடுத்த இன்டர்வியூ கொஞ்ச நேரத்துக்கு முன்ன அப்லோட் ஆகிருக்கு. பாரு, இந்த டைம் சரவெடி கேள்விகள்னு வந்தாலும் வரலாம்” என்றான். ‘என் கேள்விகள் தொடரும், இன்னும் கேட்க வேண்டியது நிறைய இருக்கு’ என்று சொல்லாமல் சொல்லிப் போனான்!

