Kathambari Novels
அத்தியாயம் – 14
மைக்கேல் சொன்னதைக் கேட்ட ரோமியோவும் தனமும் எதுவும் பேசாமல் அவன் மேல் கடுங்கோபத்தில் நின்றார்கள்.
“தனம் நா…” என்று அவளருகில் வர முயன்ற மைக்கேலை, ‘அங்கேயே நில்’ என்று கைகளால் சைகை செய்து நிறுத்திவிட்டாள். அவள் கோபத்தைக் கண்டவன், அவளிடம் எப்படிப் பேசி புரியவைக்க என்ற வழி தெரியாமல் நின்றான்.
“ரோமியோ ஸாரிடா” என்று மைக்கேல் அவனிடம் சொல்லிப் பார்த்தான். “எதும் என்கிட்ட வந்து பேசின, அவ்ளோதான்!” என்று மைக்கேல்மீது இருந்து மொத்தக் கோபத்தையும், அந்த வாக்கியத்தில் காட்டினான் ரோமியோ.
இது பேசிக் கொண்டிருப்பதற்கான நேரமில்லை! இங்கே நிற்க நிற்க, தப்பித்துச் செல்ல வழியில்லாமல் போகும்! எனவே ரோமியோ துரிதமாக முடிவு எடுத்தான்!
“தனம், உன் காயினயும் கொடுக்கிறீயா? ஆளுக்கு பாதிப் பாதி. ஓகேவா?” என்று அவளிடம் கேட்டுப் பார்த்தான்.
“எனக்கு ஓகேதான். இரு தர்றேன்” என்று நாணயங்களை எடுத்து தந்தாள்.
ரோமியோ, அவளிடமிருந்து வாங்கிய நாணயங்களை, பொக்கிஷம் இருக்கும் பெட்டியில் வைத்தான்.
சற்றுநேரம் எந்தவொரு நிகழ்வும் நடக்கவில்லை. காத்திருந்தனர். காத்திருந்த நேரத்தில் மேலும் மயில் பீலிகள் வீழ்ந்து வீழ்ந்து எரிந்தன. பேசாமல் புதையலை எடுக்காமல் இறங்கி விடலாமா என்று நினைத்த வேளையில், புதையல் இருந்த பெட்டியின் பூட்டு… தங்கத் துகள்களாய் மாறி, பின் மாயமாய் மறைந்தது.
பச்சை மற்றும் சிவப்பு நிறக் கற்களான அந்தப் பெட்டி மெது மெதுவாய் திறந்து கொண்டே வந்தது. மைக்கேல் பற்றித் தெரிந்த உண்மைகளை மறந்து, ‘ஆவென’ மற்றவர்கள் வாய்பிளந்து பார்த்திருந்தனர்.
பேழை முழுதும் அழகிய முத்துக்கள்! யானை தந்தத்தின் நிறத்தில்! சின்னதும், பெரியதும் என ஒவ்வொரு முத்தும் ஒவ்வொரு அளவில்! சில முத்துக்கள் தங்க கம்பியில் கோர்த்து பெரிய மாலையாக இருந்தது! ஒவ்வொரு முத்தும் அத்தனை பளபளப்பாக இருந்தது!!
ரோமியோ, ‘தனம், எடுத்துக்கலாம் வா’ என்றான். தனமும் வர, ரோமியோவும் அவளும் முத்துக்களை பைகளில் அள்ளிக் கொள்ள ஆரம்பித்தனர்.
இது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் தொன்னூறு சதவீத மயில்பீலிகள் கீழே விழுந்திருந்தன!
அதைக் கவனித்த தனம், “ரோமியோ போதும்! இதுக்கு அப்புறம் எடுத்திக்கிட்டு இருந்தா, இங்கிருந்து போக முடியாது” என்று பதட்டமாகக் கூறினாள்.
அவனுக்கும் நிலைமையின் பயங்கரம் தெரிந்தது. “ஸ்வீட் ஹார்ட் வா” என்று அவள் கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.
நான்கு பேரும், மீதி நின்று கொண்டிருந்த பீலியைப் பிடித்து இறங்கி வந்தனர். கீழே வந்தவுடன், அங்கிருந்த பாறைகளில் அமர்ந்தனர்!
களைப்புடன் உடல்கள். கடுங்கோபத்தில் உள்ளங்கள். கறை படிந்த ஆடைகள். கலங்கிய கண்கள். காதல் கலக்கங்கள். காட்டுக்குள் நால்வரும் இந்தக் கணம் இப்படித்தான் இருந்தனர்!
“தனம்” என்று மைக்கேல் வருந்திய குரலில் கூப்பிட்டான்.
அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அவன்புறம் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை என்பதுதான் உண்மை! ஸ்வீட் ஹார்ட் ரோமியோவையும் மைக்கேலையும் மாறி மாறிப் பார்த்திருந்தாள்.
தனத்தின் மனநிலையைப் புரிந்த மைக்கேல், “ரோமியோ” என்று தயக்கத்துடன் அழைத்தான்.
மைக்கேல் பேர் சொல்லி முடிக்கும் போது, ரோமியோ கோபம் கொண்டு எழுந்து வந்து அவனை அடிக்கத் தொடங்கியிருந்தான். சரமாரியாக அடிகள் விழுந்தன. அடிகள், உதைகளாய் தொடர்ந்தன. தான் ஏமாந்திருப்பதை எண்ணி எண்ணி ரோமியோ மைக்கேலை அடித்தான்.
தவறு அவன்பக்கம் இல்லையென்றால், நிச்சயமாக மைக்கேல் ரோமியோவை அடித்திருப்பான். ஆனால் தவறு முழுவதும் அவன்மேல் இருப்பதால், அடிகளை எல்லாம் தடுக்காமல் வாங்கிக் கொண்டான்.
ஒரு நேரத்திற்குப் பின், ரோமியோவின் கோபம் கட்டுக்கடங்காமல் போவதைப் பார்த்த ஸ்வீட் ஹார்ட் எழுந்து வந்து அவனைத் தடுத்தாள். ஆனால் அவளால் அவன் கோபத்தைத் தடுக்க முடியவில்லை. “போதும் ரோமியோ. விட்டுடு” என்று சொல்லிப் பார்த்தாள்.
“அவன் என்ன பண்ணருக்கான்னு தெரியுதா? நம்மளை ஏமாத்திருக்கான்” என்று மீண்டும் மைக்கேலை அடித்தான்.
“தெரியுது. பேசிப் பாரு. ஏன் பண்ணாரு, எதுக்கு பண்ணாருனு கேளு. அடிக்காத. ப்ளீஸ்” என்று கெஞ்சி, அவனைப் பிடித்து இழுத்து வந்தாள்.
மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க நின்ற ரோமியோ, இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.
சற்றுநேரம் அனைவரும் அமைதியாக இருந்தனர்.
மெதுவாக எழுந்தமர்ந்த மைக்கேல், “ரோமியோ நான் சொல்றத கேளுடா” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான்.
கடைசியில் ரோமியோ, “சொல்லு” என்றான்.
நேராக அமர்ந்த மைக்கேல் நடந்ததைக் கூற ஆரம்பித்தான். “எப்பவும் போல தனத்துக்காக பழைய புத்தக கடைக்கு போய், புத்தகம் தேடுறப்போ… புதையல் பத்தின இந்தப் புத்தகம் கிடைச்சது” என்றான்.
“சிஸ்டருக்கு புக் எதுக்கு?” – ஸ்வீட் ஹார்ட்.
“கட்சி மேடைல பேசுறதுக்கு எழுதி தருவா! அதுக்கு புத்தகம் கேட்பா சிஸ்டர். பழைய புத்தகக் கடைனா கம்மி விலையில கிடைக்கும்னு போவேன்”
“போதும். அடுத்து சொல்லு” என்றான் ரோமியோ எரிச்சலாக.
“அந்த புத்தகம் வித்தியாசமா இருந்திச்சு. படிச்சுப் பார்த்தேன். புதையல் பத்திப் போட்டிருந்திச்சு. உடனே நீங்க ரெண்டு பேரும்தான் ஞாபகத்தில வந்தீங்க”
“எதுக்கு? ஏமாத்திறதுக்கா??” என்றான் ரோமியோ கோபமாக.
“இல்லைடா. எனக்கு உங்க ரெண்டு பேரையும் பிடிக்கும்”
“போதும்! அன்னைக்கு நீ இப்படிச் சொல்றப்ப, நீ எனக்கு ஒரு நல்ல ஃப்ரண்டுனு நினைச்சேன். இன்னைக்கு இத கேட்கவே பிடிக்கல” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு, ரோமியோ தன் வெறுப்பைக் காட்டினான்.
“நீ எப்படி நினைச்சாலும், நான் சொல்றது உண்மைதான்” – மைக்கேல்.
“விசயத்தை மட்டும் சொல்லு” என்றான் ரோமியோ.
“இந்தப் புதையல் உங்க ரெண்டு பேருக்கும் பயன்படட்டும்னு சொல்லி, எனக்கு நம்பிக்கையான ஒருத்தனை புடிச்சேன்”
“அவன்தான் மாறனா?” – ரோமியோ.
“ஆமா, அந்த மாறனைப் பெரியவர் மாதிரி நடிக்கச் சொன்னேன். அப்பத்தான் நீ நம்புவனு நினைச்சேன்”
“அதான் நம்பி ஏமாந்திட்டேன்ல! பிளான் என்னன்னு சொல்லு?” என்று இறுகிப் போனக் குரலில் ரோமியோ கேட்டான்.
“பிளான் என்னனா? ஆளுக்கு பாதி பாதினு சொல்லி, மாறன் உன்னய புதையல் எடுக்கப் போகச் சொல்லுவான். ஒத்துக்கிட்டு, நீ போயி புதையல் எடுத்திட்டு வருவ. அதுல பாதிய மாறன்கிட்ட கொடுப்ப… அப்புறம்…” என்றவனுக்கு, அதற்கு மேல் சொல்ல முடியவில்லை.
“மிச்சத்தை நான் சொல்லவா?? மாறன்கிட்ட இருந்து வாங்கி, நீ தனத்துக்கு கொடுப்ப. கரெக்டா?”
மைக்கேல் அமைதியாக இருந்தான்.
“அப்போ… ரோமியோவுக்கு எதுவும் நடந்தா பரவால்லையா ப்ரோ??” என்று ஸ்வீட் ஹார்ட் சரியாகக் கேட்டாள்.
“சிஸ்டர் எனக்குத் தெரியாது! இங்கே இவ்வளவு ஆபத்து இருக்கும்னு. தெரிஞ்சா, நான் ஏன் இப்படி பண்ணப் போறேன்” என்று சங்கடத்துடன் சொன்னான்.
ஆனால் அந்தப் பதிலை யாரும் சட்டை செய்யவில்லை! யாரும் சமாதானமும் ஆகவில்லை!! சில வினாடிகள் அமைதிகள் அடங்கியதாய் நகர்ந்தன.
ரோமியோ இருக்கும் நிலை பார்த்து, “ரோமியோ… ஸாரிடா” என்று மைக்கேல் திரும்பவும் மன்னிப்பு கேட்டான்.
“நான் கொஞ்சம் யோசிக்கனும் ஸ்வீட் ஹார்ட். அவனை கொஞ்ச நேரம் சும்மா இருக்கச் சொல்லு” என்று அவளைப் பார்த்தபடி, மைக்கேலை எச்சரித்தான்.
ஸ்வீட் ஹார்ட் மைக்கேலைப் பார்க்க, “நான் பேசலை சிஸ்டர்” என்றவன் வாய் ஓரங்களிலிருந்து ரத்தம் கசிந்தது. கைகளில் ஆழமான, லேசான காயங்கள் இருந்தன. கழுத்துப் பகுதியிலும், முன் நெற்றியிலும் வீக்கம் தெரிந்தது.
அவர்கள் நடந்தது போய், அமைதி நடந்து கொண்டிருந்தது!
மைக்கேலிற்கு, ‘தனம் என்ன நினைக்கிறாள்’ என்று புரியவில்லை. அவள் காதல் சொன்ன அடுத்தகணமே அவளைக் காயப் படுத்திவிட்டான் என்று மட்டும் தெரிந்தது.
தனம் கண்கள் கலங்கிப்போய் அமர்ந்திருந்தாள். அவள் அழுதெல்லாம் அவன் பார்த்ததே இல்லை! அன்றைக்கு அவன் உயிருக்கு ஆபத்து என்றபோது கலங்கி நின்றாள். அடுத்தது இன்று!
தனத்தையே மைக்கேல் பார்த்திருந்தான்! அவளைத் தவிர அவன் கண்கள் வேறு எங்கும் பார்க்கவில்லை!!
ரோமியோ யோசித்தான். மைக்கேல் சொன்னதை வைத்து, சில விடயங்களை ஒத்துப் பார்த்தான். தன்னை வெகுவாகச் சமன்படுத்திக் கொண்டு, மைக்கேல் அருகில் வந்தான். அங்கிருந்த பச்சை நிற பாறை ஒன்றில் அமர்ந்த ரோமியோ, மைக்கேலைக் கூர்ந்து பார்த்தான்.
“எனக்கு சில விஷயம் தெரியணும்” – ரோமியோ.
“கேளு, நீ என்ன கேட்டாலும்…” என்று மைக்கேல் முடிக்கும் முன்பே, ‘போதும்’ என்பது போல் ரோமியோ கை காட்டி, “நான் சில கேள்வி கேட்கிறேன்… ஆமாவா? இல்லையானு மட்டும் சொல்லு” என்று பற்களைக் கடித்தபடியே பேசினான்.
“கேளுடா, சொல்றேன்”
“அன்னைக்கு லாட்ஜ்ல நான் வர்றப்போ… நீயும் தனமும் வந்து இருந்தீங்கள?”
“ஆ… ஆமா. அது… அதுக்கென்ன?” – மைக்கேல்.
“என்னய கூப்பிட்ட அந்தப் பெரியவர்… ச்சே… அந்த மாறன் எதுக்காக உன்னயும் தனத்தையும் கூப்பிடனும்?” என்று ஆதியிலிருந்து தன் சந்தேகத்தைக் கேட்கத் தொடங்கினான் ரோமியோ.
மைக்கேல் குற்ற உணர்வுடன் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் போதே… ரோமியோ குறுக்கிட்டான். “இரு… அன்னைக்கு இதே கேள்விய, நான் மாறன்கிட்ட கேட்டப்ப, ‘நான் மைக்கேலத்தான் கூப்பிட்டேன்’னு சொன்னான்ல”
“ஆமா ரோமியோ” – மைக்கேல்.
“ஸோ, நான் வர்றதுக்கு லேட்டானவுடனே, அடுத்து என்ன செய்யலாம்னு பிளான் பண்ணத்தான் உன்னையக் கூப்பிட்டிருப்பான். கரெக்டா?” – ரோமியோ.
“ஆமாடா…” என்று மைக்கேல் குறுகிப் போய் பதில் சொன்னான்.
“இதுல தனம் என்னென்னே தெரியாம உன்கூட வந்திருக்கா??”
‘ஆம்’ என்பது போல் மைக்கேல் மெதுவாக தலையசைத்தான்.
“நான் வந்து, புதையல்னு சொன்னதுக்கு அப்புறம்தான், தனத்துக்கு அது பத்தி தெரிய வந்தது. அப்படினா, அதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் அவகிட்ட எதும் சொல்லலை. அதாவது மறைச்சிருக்கீங்க”
“ம்” என்று தலை குனிந்து கொண்டான்.
இக்கணம் தனத்திற்கு அன்று வீட்டிற்கு வந்த பின், மைக்கேல் அவளிடம் ‘இது நமக்கு தேவையா, ரோமியோ போய் எடுக்கட்டுமே’ என்று கேட்டது ஞாபகத்தில் வந்தது. அன்றிலிருந்து தன்னிடம் பொய் சொல்லியிருக்கிறானா என்ற உண்மை அவள் மனதைச் சில்லு சில்லாய் உடைத்தது.
மைக்கேல் தனத்தைப் பார்த்தான். அவள் உடைந்து கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தது. கைகள் பற்றி, மன்னிப்பு வார்த்தைகள் கூற, காதல் கொண்ட அவன் மனம் ஏங்கியது.
அதற்குள், “இன்னொன்னு” என்று ரோமியோ ஆரம்பிக்க, தனத்திடமிருந்து தன் பார்வையை மைக்கேல் பிரித்து எடுத்தான்.
“தனத்துக்கு புக் கிடைச்சதுக்கு அப்புறமா, என்னய திரும்பிப் போக சொன்னால, அப்ப எனக்கும் தனத்துக்கும் இடையே சமாதானமா பேசினியே!! எதுக்கு??”
“எனக்கு உன்மேல நிறைய நம்பிக்கை இருந்திச்சு. உன்னால எல்லாம் முடியும்னு நினைச்சேன். அதான்டா அப்படிப் பேசினேன்” என்று திருத்தமாகச் சொன்னான். மைக்கேலின் அந்தப் பேச்சில் உண்மை இருந்தது.
மைக்கேல் முடிக்கும் முன்பே ரோமியோ தொடங்கினான், “ஆனா எனக்கு இப்ப உன்மேல சுத்தமா நம்பிக்கை இல்லை” என்றவனின் கண்கள் ஆதங்கத்தையும் அதிருப்தியையும் சரிவிகிதத்தில் காட்டின.
சில நிமிடங்கள் அமைதியாக இருந்து ரோமியோ, “அடுத்து, செகண்ட் காயின் எடுக்கப் போறப்ப… நான் கேட்டேனே உங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் போய் தேடுங்கனு. கேட்டதும், பெரிய நல்லவன் மாதிரி ஒத்துக்கிட்டியே?? ஆனா உண்மை அது இல்லை. உனக்கு குற்ற உணர்ச்சி. அதான் எனக்கு சப்போர்ட் பண்ணிருக்க. கரெக்டா?” என்றான்.
அதுதான் உண்மை என்பது போல் மைக்கேல் இருந்தான்.
“அதேமாதிரி அடுத்த காயின் எடுக்கப் போறதுக்கு முன்னாடி, தனம் உன்கிட்ட ‘ரெண்டு பேரும் சேர்ந்து தேடலாம்னு’ ஹெல்ப் கேட்டா! நீயும் ஓகே சொன்ன!!”
“ம்ம்ம்”
“ஆனா… அந்தப் படிக்கட்டு பக்கத்தில வச்சி, நான் அந்தப் பெரியவர… அதாவது மாறனைப் பத்திப் பேசினதுக்கு அப்புறமாதான், நீ தனத்துக்கு ஹெல்ப் பண்ண மாட்டேன்னு சொன்ன. அங்கேயும் ‘இவனை ஏமாத்திறோமேனு’ குற்ற உணர்ச்சி. கரெக்டா?” – ரோமியோ.
“ஆமாடா! தனம் ஹெல்ப் கேட்கிறப்ப எல்லாம் மறந்திடுச்சு. ஆனா நீ மாறனைப் பெரியவருனு நினைச்சிப் பேசினதும், எனக்கு உறுத்திச்சு… அதான் தனத்துக்கே ஹெல்ப் பண்ண மாட்டேன்னு சொன்னேன்” என்று தான் இருதலைக் கொள்ளி எறும்பாக இருந்ததைச் சொன்னான் மைக்கேல்.
இதைச் சொல்லிவிட்டு, அவன் தனத்தைப் பார்த்தான்.
எத்தனை முறை ‘நீ ஏன் ரோமியோ-க்கு சப்போர்ட் பண்ற’ என்று கேட்டிருப்பாள். அதற்கு பதில் இன்றுதான் அவளுக்குக் கிடைத்தது. அவள் கண்களிலிருந்து சில கண்ணீர் துளிகள் உருண்டு வந்தன.
ரோமியோ, “பரவாயில்ல. கொஞ்சம் நியாயமா நடந்திருக்க” என்று பொய்யாகச் சிலாகித்துக் கொள்ள, “போதுமே” என்றாள் ஸ்வீட் ஹார்ட்.
“இரு!” என்றவன், “அந்தப் பள்ளத்தாக்குல உன்னய காப்பாத்தினேனே! ஞாபகம் இருக்கா அது?” என்று மைக்கேலிடம் கேட்டான்.
“ம்ம்ம்”
“அதனால எனக்கும் இவளுக்கும் கூட லேசா சண்டை வந்தப்போ…” என்று ஸ்வீட் ஹார்ட்டைப் பார்க்க… அவளோ, “அது எதுக்கு இப்ப ரோமியோ?” என்றாள்.
“நான் அதைப் பத்திக் கேட்கலை. இது வேற. முழுசா கேளு” – ரோமியோ.
“நீங்க விடுங்க சிஸ்டர், அவன் என்னனாலும் கேட்கட்டும். அவன் திருப்தியாகிற வரைக்கும் கேட்கட்டும்” – மைக்கேல்.
“போதும் நிறுத்து! என்கிட்ட வந்து நீ என்ன சொன்னனு ஞாபகம் இருக்கா?” என்று ரோமியோ எரிந்து விழுந்தான்.
“என்னாலதான… உ… உனக்கு இவ்ளோ… பிரச்சனையும்னு… சொன்னேன்”
“அது… அதுக்கு என்ன அர்த்தம்? நீயே சொல்லிரு” – ரோமியோ.
“எனக்கு தெரியாது! உயிர் போற அளவுக்கு இதுல இப்படி ஆபத்து இருக்கும்னு தெரியாது! நாமதான இவனை இதுல கோர்த்துவிட்டோம்…” என்று தயங்கிவன், ஒரு ஆழ்ந்த பெருமூச்சு எடுத்து, தன்னைச் சமாளித்தான்.
“சொல்லுடா”
“நம்மளாலதான இப்படி ஒரு ஆபத்தான இடத்தில சிக்கிக்கிட்டாங்கனு கஷ்டமா இருந்திச்சு. போதுமா?” என்று தழுதழுக்கும் குரலில், கழுத்து நரம்புகள் வெளியே தெரியும்படி கூறினான்.
தனம், ஸ்வீட் ஹார்ட், ரோமியோ மூவருக்கும் நிறைய புரிந்தது.
“அடுத்த ரெண்டு ஸ்டேஜ்லயும்… நீ எனக்காக காயின விட்டுக் கொடுக்க ரெடியா இருந்த! காரணம்?? காயின் தனத்துக்கு கிடைச்சா, எனக்கு புதையல்ல பங்கே இல்லாம போயிடும். நா… நான் ஏமாந்திருவேன்னு…” என்ற ரோமியோவின் குரல் கரகரத்துப் போக, பேசுவதை நிறுத்திவிட்டான்.
ஸ்வீட் ஹார்ட், “ரோமியோ” என்று அவனது தோளில் அழுத்தம் கொடுத்தாள்.
“இப்பவும் ஏமாந்துதான் நிக்கிறேன்” என்றவனுக்கு தொண்டைக்குள் வார்த்தை சிக்கியது. “ரோமியோ விடு. வீட்டுக்கு கிளம்பலாம்” என்றாள் ஸ்வீட் ஹார்ட்.
“போலாம், இது மட்டும்தான்” என்று தன்னைச் சமாளித்தவன், “எனக்கு காயின் கிடைச்சாலும், தனத்துக்குப் புதையல் வரும்னு உனக்கு நல்லா தெரியும். அதான் விட்டுக் கொடுத்திருக்க. கரெக்டா?” என்று தன் நிலையை நினைத்து, ரோமியோ நொந்து கொண்டான்.
“ஆமாடா கரெக்ட். நீ ஏமாறக் கூடாதுனுதான், அப்படிப் பண்ணேன். எனக்கு வேற வழி தெரியல” என்று அந்த இடமே அதிரும்படி மைக்கேல் கத்தினான். அப்பகுதி முழுவதும் அது எதிரொலித்தது! அந்தளவிற்கு கத்தி இருந்தான்!!
“இதுக்கு எங்ககிட்ட சொல்லிருக்கலாமே…” என்றான் ரோமியோ.
திரும்பத் திரும்ப, குற்றம் சாட்டும்படிக் கேள்விகள், மைக்கேலிற்கு எரிச்சலைத் தந்தன. “சொல்லிருந்தா ஒத்துக்கிட்டு இருப்பீங்களா? சொல்லுங்க? லாட்ஜ்லயே எவ்வளவு பிரச்சனை பண்ணீங்க? இதுல ஆளாளுக்கு போலீஸ்கிட்ட போவேன்னு வேற சொன்னீங்கதான நீங்க?” என்று தனம், ரோமியோ இருவரது குணங்களைத் தெரிந்து மைக்கேல் பேசினான்.
மைக்கேலின் இந்தப் பேச்சிற்கு, ரோமியோவிடம் பதிலில்லை.
அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த தனம், “என்கிட்ட சொல்லிருக்கலாமே?? இங்கே வந்த பிறகாவது சொல்லிருக்கலாமே” என்று வாய் திறந்து கேட்டாள்.
“சொன்னா?? உடனே நீ என்ன பண்ணுவ?? சரினு சொல்லி, பாதிப் புதையலை ரோமியோவுக்கு தருவியா?? புக் அவனோடதுனு தெரிஞ்சுமே… ஒரு காயின கூட கொடுக்க மாட்டேன்னு சொன்னவதான நீ! அப்புறம் உன்கிட்ட எப்படிச் சொல்ல” என்று கேள்விகளையே பதிலாகத் தந்தான்.
“நான் லவ் சொன்னேன்ல, அப்பவாவது உண்மைய சொல்லிருக்கலாமே” – தனம்.
ரோமியோ, ஸ்வீட் ஹார்ட் இருவருக்கும் அதிர்ச்சி! இவர்கள் காதலைப் பகிர்ந்து கொண்டார்களா என்று!
“நல்லா யோசி! நாம பேசி முடிக்கிறதுக்குள்ளயே ரோமியோ வந்து கூப்பிட்டான். அதனால்தான் நம்ம பாதியிலே வந்தோம்” என்று விளக்கம் தந்தான் மைக்கேல்.
“என்ன சொன்னாலும்… நீ பண்ணது தப்புதான்” என்றாள் தனம்.
“நான் இல்லைனு சொல்லலையே. தப்புதான். மன்னிச்சுடுங்கனு கேட்கிறேன்”
“தெரியாம பண்ணாதான் மன்னிக்கலாம். ஆனா நீ பிளான் பண்ணி எங்களை ஏமாத்திருக்க” – ரோமியோ.
“அப்படிச் சொல்லாத ரோமியோ. மனசுக்குள்ள நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? உங்களுக்கு எதுவும் ஆகிடக்கூடாது… இவ்வளவு கஷ்டப்படுறீங்களே புதையல் இல்லாம போயிடக்கூடாது. இப்படி நிறைய… “
“என்னமோ நாங்கதான் கஷ்டப்பட வச்சமாதிரி பேசுற? உன்னாலதான் நாங்க கஷ்டப்பட்டோம். என்ன சொன்னாலும் நீ பண்ணது தப்புதான்” – ரோமியோ.
அந்த வார்த்தைகள், மைக்கேலைத் துடிதுடிக்க வைத்து, தூள் தூளாய் ஆக்கியது. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்!
“எனக்கு இந்தப் புதையலை யூஸ் பண்ணவே அசிங்கமா இருக்கு” – தனம்.
“நீயேன் அப்படி நினைக்கிற. இது நம்ம ரெண்டு பேரும் கஷ்டப்பட்டு எடுத்தது. நாம ஒண்ணும் யாரையும் ஏமாத்தலை” – ரோமியோ.
மைக்கேலிற்கு இதற்கு மேல் எப்படி விளக்கம் தர என்றே தெரியவில்லை, வாய் திறக்காமல் இருக்கத்தான் நினைத்தான்! இருந்தும், “ஸாரி ரோமியோ” என்று மீண்டும் சொல்லிப் பார்த்தான்.
“நீ என்ன சொன்னாலும்… என்னால மன்னிக்கவே முடியாது” என்று ரோமியோ எழுந்து கொண்டான்.
“நானும் மன்னிக்க போறதில்லை” என்று தனமும் எழுந்து கொண்டாள்.
“ஸ்வீட் ஹார்ட்… வா போகலாம்” என்று ரோமியோ அழைத்தான்.
“நீ போ ரோமியோ, நான் வர்றேன்” என்று ரோமியோ பைக்குள் இருந்து துண்டை மட்டும் எடுத்துக் கொண்டாள்.
அவள் மைக்கேலை தனியாக விட்டுவிட்டு வரமாட்டாள் என ரோமியோவிற்குத் தெரியும். எனவே அவளை வற்புறுத்தாமல், அவன் நடக்க ஆரம்பித்தான்.
தனமும் நடக்கத் தொடங்கினாள்.
நினைத்தது போல புதையல் கிடைத்திருக்கிறது, குறிக்கோள்கள் நிறைவேறப் போகின்றன என்ற சந்தோசம், இருவர் முகத்திலும் கடுகளவும் இல்லை.
தனமும் ரோமியோவும் சென்றவுடன், “ப்ரோ ரத்தத்த துடைச்சிக்கோங்க” என்று துண்டை மழையினால் தேங்கிய நீரில் நனைத்து, மைக்கேலிடம் நீட்டினாள்.
அவனும் வாங்கித் துடைத்துக் கொள்ள, “ப்ரோ, வாங்க போகலாம்” என்றாள்.
“ஏன் சிஸ்டர் இவங்க ரெண்டு பேரும் இப்படிப் பண்றாங்க? நான் இதெல்லாம் இவங்களுக்காகத்தான பண்ணேன்”
“அதை நீங்க சொல்லிட்டே செஞ்சிருக்கலாம்”
“ம்ப்ச், அதான் எல்லாத்தையும் ஒத்துக்கிட்டு, மன்னிப்பு கேட்டேனே”
“ஆனா எப்ப சொன்னீங்கனு இருக்குது இல்லயா? நீங்க புதையல் கிடைக்கும்னு தெரிஞ்சப்புறம் சொன்னீங்க”
“நான் அவங்க ரெண்டு பேர்கிட்டயும் உண்மையாத்தான் பேசினேன் சிஸ்டர்”
“இல்லை ப்ரோ! நீங்க ரோமியோகிட்ட பேசுறப்பெல்லாம் குற்ற உணர்ச்சியோட பேசியிருக்கீங்க. அதேசமயம் சிஸ்டர்கிட்ட நீங்க பேசுறப்ப குற்ற உணர்ச்சியே இல்லாம பேசிருக்கீங்க”
அவள் சொல்வது சரியென மைக்கேலிற்குப் புரிந்தது!
“என்கிட்ட நியாயமா இருக்க பிடிக்கும்னு சொன்னீங்கள? ஆனா நீங்க பண்ணது நியாயமே இல்லை ப்ரோ”
“நான் நியாயம்னு சொல்லலை சிஸ்டர், மன்னிச்சுடுங்கனு கேட்கிறேன்”
“அவங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் டைம் கொடுங்க. மன்னிப்பாங்க”
‘மன்னிப்பார்களா?’ என்ற கேள்வியில் அவன் மனம் துவண்டு போய் துடித்தது.
“இப்போ வாங்க ப்ரோ போகலாம்” என்றாள்.
“சிஸ்டர், உங்களுக்கு என் மேல கோபம் இல்லயா”
“இருக்கு! ரோமியோவ ஏமாத்தினத நினைச்சா… ஆனா எங்கிட்ட பேசின எல்லா நேரமும் உண்மையாத்தான் இருந்தீங்க. அவங்க காயின் தேட போனப்பலாம், நீங்க என்னய பயப்படாம இருனு சொன்னது… என்னைப் பத்தி தெரிஞ்சப்புறம், ஆறுதல் சொன்னது. அது உங்ககிட்ட எனக்குப் பிடிச்சது. அதை மட்டும்தான் நான் ஞாபகம் வச்சிப்பேன்”
இந்தப் பெண்ணை ரோமியோவிற்கு ஏன் பிடிக்கிறது, எதற்காக அவன் இவ்வளவு பாசத்தைக் கொட்டுகிறான் என்று மைக்கேலுக்குப் புரிந்தது!
“எதயும் யோசிக்காதீங்க ப்ரோ. எந்திரிங்க, முதல இங்கிருந்து போகலாம்” என்று அவனைக் கைபிடித்து எழுப்பிவிட்டாள். இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.
‘தான் எப்படிப்பட்டவன்?’ என்ற கேள்வி மைக்கேல் மனதில் எழுந்தபடி இருந்தது.
மைக்கேல் எப்படிப்பட்டவன்?
கதையின் தொடக்கப்புள்ளி இவன்தான்! கதாநாயகன் ரோமியோவைக் கதைப் புள்ளிக்குள் இழுத்துக் கொண்டு வந்து விட்டவன் இவன்தான்! மாமன் மகளான தனலட்சுமியை… காதல் புள்ளி வைத்து, கோலம் போட வைத்தவன் இவன்தான்!
புதையல் தேடுதலில் முற்றுப்புள்ளியாய் ரோமியோ, தனம் தேங்கி நின்ற போதெல்லாம், தன் வார்த்தைகளால், அவர்கள் தேடலைக் காற்புள்ளி போட்டுத் தொடர வைத்தவன் இவன்தான்!
ரோமியோ, தனத்தின் குறிக்கோள்கள் வெற்றுப் புள்ளியாய் போய் விடாமல், வெற்றிப் புள்ளியாய் மாறக் காரணமானவன் இவன்தான்!
இந்தக் காரணங்களால், இவன் கதையின் நாயகன் என்று அறியப்படுகிறான்!!

