Kathambari Novels
அத்தியாயம் – 10
என்ன நடக்கப் போகிறது, யாரைக் காப்பாற்ற? என்ற மனநிலையில், ரோமியோ யோசிக்க முடியாமல் தவித்தான். நால்வரும் பயத்தின்… பதற்றத்தின் உச்சத்தில் தடுமாறிக் கொண்டு இருந்தார்கள்.
இடையிடையே அவர்கள் பார்வை, அசூர வேகத்தில் வரும் வெண்திரையைச் சந்தித்துவிட்டு வந்தது. ஒரு சில நொடிகளில், ரோமியோ தன் மனதை சமநிலை படுத்திக்கொண்டு, மூளைக்கு வேலை கொடுத்தான்.
அடுத்த இரண்டு வினாடிகளில், “தனம்” என்று அழைத்தான்.
‘என்ன?’ என்பது போல் அவனைப் பார்த்தாள்.
“நான் சொல்றதை கவனமா கேளு, உன்கிட்டயும் என்கிட்டயும் காயின் இருக்கு. ஆனா அவங்க ரெண்டு பேருகிட்டயும் காயின் இல்லை”
‘என்ன சொல்ல வர்ற?’ என்கின்ற குழப்பங்களுடன் பார்த்தாள்.
“இங்கபாரு தனம், நான் உன் கையை விடறேன். உன்கிட்ட இருக்க ஒரு காயின் எடுத்து, அந்தப் பக்கம் தூக்கிப் போடு” என்று படபடவென சொல்லி முடித்தான்.
இப்போது அவளுக்குப் புரிந்தது. ஆனாலும் ‘இது சரிவருமா?’ என்ற தயக்கங்கள், அவளது முகத்தில் தெரிந்தன.
“வேற வழியில்லை தனம். ஆனா, பார்த்துப் போடு. காயின் கீழ விழுந்திடாம! மைக்கேல் கைக்குக் கிடைக்கிற மாதிரி. சரியா?”
சரி என்று தலையசைத்துக் கொண்டாள்.
“நான், உன் கைய விடப் போறேன். ஆனா, நீ பின்னாடி போகக் கூடாது”
“போக மாட்டேன்” என்றதும் அவள் கையை விட்டான்.
அடுத்தநொடி என்று கூட சொல்ல முடியாது, அதைவிடக் குறைந்த கால அளவில், ரோமியோ ஸ்வீட் ஹார்ட்டை இரு கைகளாலும் ஏந்திக் கொண்டான். “ஸ்வீட் ஹார்ட்… ஸாரி… ஸாரி” என்று காதலில் கரைய ஆரம்பித்தான்.
மற்றொருபுறம்… கைகள் நடுங்க, கால்கள் வெடவெடக்க, தனம் பைக்குள் இருந்த நாணயத்தை எடுத்தாள். “கரெக்டா பிடிச்சிரு” என்று கரகரத்தக் குரலில் சொல்லி, மைக்கேல் இருந்த பக்கம் தூக்கிப் போட்டாள்.
அவனும் அதைப் பிடித்துக் கொண்டான். இதனிடையே வெண்திரை, அவனை நெருங்கும் தூரத்தில் வந்திருந்தது. ஆதலால் அந்தக் குளிரிலும், பயத்தினால் அவனது உடலெங்கும் வியர்த்துவிட்டது!
படபடக்கும் நெஞ்சோடு, கைகளில் நாணயத்தை வைத்துக்கொண்டு, தன் வலது காலை மெல்ல வைத்துப் பார்த்தான். அவனுக்கும் படிக்கட்டு வந்தது! தனமும் மைக்கேலும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.
“ரெண்டு பேரும் சீக்கிரம் வாங்க” என்று ரோமியோ அவர்களை அழைத்துவிட்டு, இறங்க ஆரம்பித்தான். அதன்பின் நொடியளவு கூட தாமதிக்காமல் கடகடவென இறங்கினார்கள்.
அந்த வெள்ளைத்திரை, புல்வெளிப் பரப்பின் நுனி வரை வந்து ‘காதலனே’ என்று சொல்லிவிட்டே ஓய்ந்தது. ஆனால் அதைத் தாண்டி வரவில்லை.
மிக வேகமாக படிக்கட்டுகள் வழியே இறங்கி, மீண்டும் வண்ண கூழாங்கற்கள் நிறைந்த பகுதிக்கு வந்துவிட்டனர்!
இனம்புரியாத உணர்வுகளுடன், தனமும் மைக்கேலும் அருகருகே அமர்ந்தனர். பயந்திருந்ததில், வேகமாக வந்ததில் இருவருக்கும் நன்றாக மூச்சு வாங்கியது. சற்று நேரத்திற்குப் பின் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
தனம் மைக்கேல் தோள்களில் அடிக்க ஆரம்பித்தாள். பின் சலுகையாய் சாய்ந்து கொண்டே, “ரொம்ப பயந்துட்டேன்” என்றாள்.
அவன் எதுவும் கேட்கவில்லை. ஒன்றும் பேசவில்லை. ஆனால் இதற்குமுன் அவள் அடித்த அடிகளுக்கும், தோள் சாய்ந்த நேரங்களுக்கும்… இன்றைய செயலுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்தான்.
ரோமியோ இன்னும் ஸ்வீட் ஹார்ட்டை கையில் ஏந்திக் கொண்டே இருந்தான். “ஸாரி ஸ்வீட் ஹார்ட்” என்று மன்னிப்பு கேட்டான்.
“கீழ இறக்கி விடு ரோமியோ” என்று இறங்குவதற்கு முயற்சி செய்தாள்.
“இப்போ எதுக்கு இந்தக் கோபம்” என்றான், அவளை இறக்கி விடாமலும், இறங்க விடாமலும் பிடித்துக் கொண்டு.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி விடாதனு சொன்னேன். ஆனா விட்டுட்ட! இப்ப,” என்று சொல்லி முடிக்கும் முன்பே… ரோமியோ அவளை இறக்கிவிட்டு, “என்ன பேசுற? எதையும் எதையும் கம்பேர் பண்ற?” என்றான்.
“பின்ன… எவ்வளவு பயமா இருந்திச்சு தெரியுமா?”
“அந்த நேரத்தில வேற வழி தெரியல”
“அதுக்கு…??”
“இங்க பாரு! அவனுக்கு ஆபத்து. பார்த்துகிட்டு சும்மா இருக்கச் சொல்றீயா?”
அமைதியாய் இருந்தாள் ஸ்வீட் ஹார்ட்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மைக்கேல், எழுந்து அவர்கள் பக்கமாக வந்து, “ஸாரி ரோமியோ. என்னாலதான உனக்கு இவ்ளோ பிரச்சனை” என்று மனம் வருந்திச் சொன்னான்.
“ம்ச்…டேய்! அவதான் புரியாம பேசுறானா… நீ வேற” – ரோமியோ.
“ஸாரி சிஸ்டர்” என்று ஸ்வீட் ஹார்ட்டிடமும் மன்னிப்பு கேட்டான்.
“அய்யோ ப்ரோ, ஸாரி எதுக்கு?”
“என்னாலதான்…” என்று மைக்கேல் ஆரம்பிக்கப் போக, “போதும் விடுங்க” என்று ரோமியோ அவர்கள் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
இவர்கள் பேசுவதைப் பார்த்திருந்த தனம், பையிலிருந்த புத்தகத்தை எடுத்து வந்து ரோமியோ முன் நீட்டினாள். எந்தவித விதாண்டாவாதமோ தயக்கமோ இல்லாமல், “தேங்க்ஸ். டைம்முக்கு ஹெல்ப் பண்ணதுக்கு” என்றாள்.
அவனும் சிரித்தபடி புத்தகத்தை வாங்கிக் கொண்டான்.
தனம் சென்றதும், “ரோமியோ, நீ புக் பார்த்துட்டு சொல்லு” என்று மைக்கேல் அவளைப் பின் தொடர்ந்தான்.
ஸ்வீட் ஹார்ட்டைப் பார்த்தான் ரோமியோ. கோபமான முகத்தைத்தான் அவள் அவனுக்குக் காட்டினாள். காதலியின் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வர நினைத்தான். “ஸ்வீட் ஹார்ட், நாம கொஞ்ச நேரம் அவங்க ரெண்டு பேரையும் மறந்திடலாமா?” என்றான்.
புரியாமல் பார்த்தாள்.
“ஸ்வீட் ஹார்ட்! லெட்ஸ் செலிபிரேட் அவர் பிரெஷ் லவ்” என்று இரு கைகளையும் காற்றில் விரித்தபடி கூறினான்.
“ஒன்னும் வேண்டாம்” என்று அவன் கைகளைத் தட்டிவிட்டு மறுத்தாள். இதுவரை வெட்கப்பட்டு காதலைக் கொண்டாடியவள், இக்கணம் காதலன் மீது கொண்ட கோபத்தில் விலகினாள்!
இந்த இடத்தில் ரோமியோ ஒரு ‘இதழ் சமாதனக்காரன்’ என்ற பெயரை அடைய முடியாமல் இழந்து நின்றான்!!
“வேண்டாமா? அப்புறம் வருத்தப்பட போற” என்று சிரித்தான். “பரவால்ல” என்று கோபமாகச் சொல்ல வந்து, அது முடியாமல் போகவே… சட்டென்று சமாதானம் அடைந்து சிரித்துவிட்டாள்.
அவள் கோபம் போய்விட்டது என்றதும், இன்னும் சிரித்தபடி புத்தகத்தை எடுத்து, கையில் நாணயத்தை வைத்துக் கொண்டு, புத்தகத்தைத் திறந்தான்.
முந்தைய கட்டத்தின் பக்கங்கள் எரிய ஆரம்பித்தன. ஏற்கனவே பார்த்ததுதான் என்றாலும், மீண்டும் பார்க்கும்போது ஸ்வீட் ஹார்ட் பயந்தாள்.
எரிந்து முடிந்த பின், அடுத்த கட்டத்தின் பக்கத்தில் மயில் பீலியை வைத்தான், ரோமியோ. அது, ‘அடுத்தக் கல் நாணயம் வானவில் இருட்டில்” என்று எழுதிக் காட்டியது.
வாசித்துக் கொண்டான்.
“ரெயின்போ எப்படி இருட்டா இருக்கும் ரோமியோ?”
“தெரியலையே ஸ்வீட் ஹார்ட்”
இருவரும் எழுந்து நடக்க ஆரம்பித்தார்கள்.
மைக்கேல், தனம் முன்னே நடந்து சென்று கொண்டிருந்தார்கள். தனம் எதுவும் கேட்கவில்லை. இருந்தும் ரோமியோ அடுத்து தேட வேண்டிய இடத்தைப் பற்றிச் சொல்லிவிட்டே நடந்தான்.
மீண்டும் மீண்டும் நடப்பது சிரமமாக இருந்தது. நிகழ்ந்து முடிந்த சம்பவங்கள் அவர்களின் வேகத்தை குறைத்திருந்தது. உயிர் பயம் அவர்களது உத்வேகத்தை அசைத்துப் பார்த்திருந்தது.
அதே கூழாங்கற்களின் மீது பயணம் இருந்தது. என்னவொன்று, சாம்பல் நிற ஒளியில் மாற்றம் ஏற்படுவது போல் இருந்தது. மாற்றம் என்றால் வேறு எந்த ஒரு நிறத்திற்கும் மாறவில்லை. இருந்த வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக் கொண்டே போனது!
இருந்தும் நடந்தார்கள்!!
சற்று நேரத்தில் இந்தப் பகுதிகள் இரவை நெருங்கின்றனவோ என்கின்ற ரீதியில் இருள் சூழ்ந்து இருந்தது. இதுவரை கூழாங்கற்கள் மீது நடந்து வந்த உணர்வை, இப்போது அவர்கள் கால்கள் உணரவில்லை. பாதங்கள் ஏதோ நெருநெருவென்ற தன்மையை உணர்ந்ததும், பயத்தில் நின்றுவிட்டார்கள்!
அப்பகுதி முழுதும் அஞ்சன இரவு போல் ஆகிவிட்டிருந்தது! சூழல் அமைதியின் உச்சத்தை தொட்டது. அடுத்த அடி எடுத்து வைக்கவே இயலாத அளவிற்கு இருள் இருந்தது. அதற்குமேல் நடப்பது சிரமம் என்று தெரிந்தது.
“இன்னும் கொஞ்ச தூரம் நடந்து பார்க்கலாமா?” – தனம்.
“எப்படிப் போறது? இவ்ளோ இருட்டா இருக்கே?” – மைக்கேல்.
“ஆனா… புக்ல வானவில் இருட்டுனு இருந்திச்சு. இப்போ இருட்டு மட்டும்தான இருக்கு. வானவில் வரணும்ல” – ரோமியோ.
“சரி போலாம்” – மைக்கேல்.
அடுத்து ஒரு பத்து அடி எடுத்து வைத்திருப்பார்கள். ஆனால் அதில் ஐந்து முறை தடுமாறி விட்டார்கள். அதனால் இதற்குமேல் இப்போது நடக்க வேண்டாம் என்று முடிவெடுத்து, அந்தந்த இடத்தில் அப்படியே நின்றார்கள்.
“ரோமியோ, என்ன இது… இவ்ளோ இருட்டா இருக்கு? ரொம்ப பயமாருக்கு” என்று ஸ்வீட் ஹார்ட் நடுங்கினாள்.
“பயப்படாத” என்று, ஏற்கனவே பிடித்திருந்த அவளது கையை மேலும் இறுகப் பற்றிக் கொண்டான் ரோமியோ.
“ஆனா இதுல எப்படித் தேட முடியும்?” – மைக்கேல்.
“ரொம்பக் கஷ்டம்” – தனம்.
“ஏதாவது நடக்கும் வெயிட் பண்ணுவோம்” என்று ரோமியோ சொன்னதால், காத்திருக்கத் தொடங்கினர்.
சற்றுநேரம் கடந்தது. தூரத்திலிருந்து சிறு கீற்று போல் ஒளி வருவதற்கான அடையாளம் தெரிந்தது. மெது மெதுவாக அது வருகின்ற பாதையை அவர்கள் பார்த்திருந்தனர். காரிருளைக் கலைக்கும் அந்த ஒளிக்கீற்றானது, அவர்களை நெருங்கி வந்தது.
ஆனால் பக்கத்தில் வந்த பொழுது, அது வெறும் ஒளி மட்டுமல்ல என்று தெரிய வந்தது. அவைகள் கைக்கு அடக்கமான சிறு சிறு பேழைகள்!
அவைகள்? ஆம், அவைகள்தான்!!
ஒன்று மட்டும் வரவில்லை, அந்த இடத்திற்கு ஓரளவிற்கு வெளிச்சம் பாய்ச்சும் எண்ணிக்கையில் வந்திருந்தன. இவற்றின் வடிவங்கள், ‘பொக்கிஷப் பேழை’ புத்தகம் இருந்த பேழை போலிருந்தன. ஒவ்வொரு பேழையின் வெளிப்புறமும், ஏழு சமமான பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, அதில் வானவில்லின் வரிசையில் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது.
மேலும் அந்தந்த பாகங்கள், அந்தந்த வண்ணத்திலான ஒளியை கீழ்நோக்கி அனுப்பிக் கொண்டிருந்தது. இதுபோல் ஒவ்வொரு சிறிய பேழையும், ஏழு வர்ண ஒளியை வீசிக்கொண்டிருந்தது.
அந்தப் பேழைகள் சுற்றிக் கொண்டிருந்த இடம் மட்டுமே வெளிச்சம் பரவியது!! அதைத் தவிர்த்து, மற்ற இடங்களில் இன்னும் இருளே!
ஆச்சரியம் ஒரு கண்ணில், அதிர்ச்சி ஒரு கண்ணில் என்ற ரீதியில் நால்வரின் பார்வையிருந்தது! அவர்களுக்குப் புரிந்துவிட்டது… இந்தப் பேழைகளில் ஏதோ ஒன்றினுள்தான், இந்தக் கட்டத்திற்கான நாணயம் இருக்கிறது என்று!
கசிந்து வந்த வெளிச்சத்தில் கீழிருந்த இடத்தைப் பார்க்க முயன்றனர். ஆனால் சரியாகத் தெரியவில்லை. அதை விட்டுவிட்டு, தேடுதலை ஆரம்பித்தனர்.
மைக்கேலும், ஸ்வீட் ஹார்ட்டும் அமர்ந்து கொண்டனர். தனமும் ரோமியோவும் தயாராக இருந்தனர்!
பறந்து கொண்டிருக்கும் பேழைகளை இருவரும் பிடிக்க முயன்றனர். பேழைகள் சில நேரங்களில் தலைக்கு மேலே, கண் முன்னே என்று பறந்தன. ஆனால் பல நேரங்களில் கைக்கு எட்டாத தூரத்தில் பறந்தன.
தலைக்கு மேல் பறந்ததை, அண்ணாந்து பார்த்துப் பிடிக்க முற்படுகையில், அதிலிருந்து வீசிய ஒளியானது பல்லாயிரம் மடங்காக மாறி, கண்களைப் பொசுக்கும் அளவிற்கு சூடு கொடுத்தது.
கிட்டத்தட்ட, கதிரவனைக் கண்களின் கருமணிக்கு அருகே வைத்துப் பார்த்தது போல் ஒரு வலி உணர்வு! எனினும் அதைத் தாங்கிக் கொண்டு, அடுத்தமுறை பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தனர்.
ஒருமுறை ரோமியோ, தன் தலைக்கு மேல் பறந்த பேழையைப் பிடிக்க தலை நிமிர்த்தினான். அவ்வளவுதான்! ‘ஆ’ என அலறி, உள்ளங்கைகளைக் கொண்டு கண்களை மூடி அமர்ந்துவிட்டான்.
“என்னாச்சு ரோமியோ?” என்று பரிதவிப்புடன் ஸ்வீட் ஹார்ட் எழுந்து வரப் போக, “நீ வராத நான் பார்த்துக்குவேன்” என்று தடுத்து விட்டான்.
கண்களின் எரிச்சலைத் தாங்கிக் கொண்டு தேடலைத் தொடர்ந்தான். நேரமாக நேரமாக இருவரது அலறல்களும் அவஸ்தைகளும் தொடர்ந்தன.
ஒரு கட்டத்தில் தனத்தின் அலறலைப் பொருக்க முடியாமல், “தனம் நீ வா நான் தேடறேன்” என்றான். வலியால் வந்த எரிச்சலால், “வெயிட் பண்ணு” என்று அவள் வார்த்தையிலும் எரிச்சலைக் காட்டினாள்.
நிமிர்ந்து பார்க்கப் பார்க்க பேழையிலிருந்து வந்த ஒளியைக் காண முடியாமல், அடிக்கடி இருவரும் கண்களை மூடி அமர்ந்தனர். ஒரு கட்டத்தில், கண்ணின் வலி தாளாமல்… ரோமியோ, “டேய் மைக்கேல்! என்னோட பேக்ல இருந்து புக் எடுத்துப் பாறேன்டா” என்றான்.
“அது எதுக்கு??” – தனம்.
“அதுல எதுவும் போட்ருக்கானு பாருடா” – ரோமியோ.
“எப்பவும் காயின எடுத்தப் பிறகுதான புக் ஹெல்ப் பண்ணும்” – மைக்கேல்.
“பார்க்கத்தான சொல்றேன்” என்றான் எரிச்சலுடன் ரோமியோ.
உடனே ஸ்வீட் ஹார்ட், “பாருங்க ப்ரோ” என்று பையிலிருந்த புத்தகத்தை எடுத்து மைக்கேலிடம் தந்தாள்.
மைக்கேல் புத்தகத்தைத் திறந்தான். சிறிதும் நம்பிக்கை இல்லாமல், அந்தக் கட்டத்திற்கானப் பக்கத்தை எடுத்தான். தேடுபவர்கள் தேடலை நிறுத்தினர். என்ன நடக்கப் போகிறது என்று புத்தகத்தைக் கவணிக்க ஆரம்பித்தனர்.
சட்டென புத்தகத்தின், விரித்து வைத்தப் பக்கத்திலிருந்து வானவில் வர்ணத்தில் ஒளி பாய்ச்சி அடிக்கப்பட்டது. இக்கணம் அவர்களால் சூழலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. முதலில் பார்த்தது தரையிலிருந்த அதிசயத்தைதான்.
குருத்து மணல்கள்! அதுவும் வானவில் போல் ஏழு வண்ணங்களாலான குருத்து மணல்கள்!!
இருள் விலகியதில், அவர்களது முகத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியின் ரேகைகள். ஸ்வீட் ஹார்ட் கொஞ்சமாக மணலைக் கையில் எடுத்துப் பார்த்தாள். நிறம் எதுவும் மாறவில்லை. என்ன ஒன்று… அள்ளி எடுத்ததால் மணலின் நிறங்கள் ஒன்றோடொன்று கலந்து போய், அவள் உள்ளங்கையில் இருந்தன!
“ஸ்வீட் ஹார்ட்! அத கீழே போடு” என்று ரோமியோவிடமிருந்து உத்தரவு வந்தது.
அவன் சொல்படி கீழே போட்டாள். சட்டென்று கலந்து போயிருந்த மண்ணின் நிறங்கள், வானவில்லின் சரியான வரிசைப்படி மாறிக் கொண்டன.
அதைக் கண்ட தனம், தன் கைகளில் மொத்தமாக மணலை அள்ளினாள். பின் கைகளை மூடிக் கொண்டு நன்றாக மணலைக் குலுக்கி, கீழே போட்டாள்.
மாயம்! கீழே போடப்பட்ட மணல்கள் வானவில்லின் நிறங்களின் வரிசையில் தங்களை அடுக்கிக் கொண்டன. ஆச்சரியம் கொண்டு மீண்டும் ஸ்வீட் ஹார்ட் மணலை எடுத்து விளையாடினாள்.
இப்படி இரு பெண்களும் விளையாடிக் கொண்டிருக்கையில்… தீடீரென்று பறந்து கொண்டிருந்த பேழைகளில் ஒன்று மட்டும், மைக்கேல் திறந்து வைத்திருந்த புத்தகத்திலிருந்து வரும் ஒளிக்கற்றையின் பாதையில் வந்து நின்றது.
மற்ற மூவரும் அப்படியே அசையாமல் நின்றனர். பயத்தில் மைக்கேல் கண்கள் அகன்று விரிந்து, என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தான்!
தனம் மைக்கேல் அருகில் செல்லப் போக, அவளை ரோமியோ தடுத்துவிட்டான். பயந்து போய் எழுந்து வரப் போன ஸ்வீட் ஹார்ட்டையும் ‘அங்கேயே இரு’ என்று சைகை செய்து தடுத்தான். மேலும் மைக்கேலிடம், ‘எடுத்து, திறந்து பார்’ என்று கண்களால் பேசினான்.
சற்று தைரியம் வரவழைத்துக் கொண்டு, மைக்கேல் தன் கண்கள் முன்னே காற்றில் நின்ற பேழையை எடுத்துக் கொண்டான். ஏழு வண்ணங்களில் ஒளி வீசிக் கொண்டிருந்த பேழையைத் திறந்தான்.
ஓரளவிற்கு நான்கு பேரும் எதிர்பார்த்ததுதான்! உள்ளே கல் நாணயம் இருந்தது! அனைவரின் முகத்திலும் சந்தோஷம்! மைக்கேலும் ஸ்வீட் ஹார்ட்டும் எழுந்து கொண்டார்கள். தனத்தைப் பிடிக்க முடியவில்லை. மைக்கேலிடம் ஓடி வந்து நின்று, ‘நாணயத்தைக் கொடு’ என்று கை நீட்டினாள்.
அதேநேரம் இன்னொரு கையும் நீட்டப்பட்டிருந்தது. அது ரோமியோவின் கரம்!
மைக்கேல், ‘மறுபடியும் பிரச்சனையா?’ என்று மனம் நொந்து கொண்டான்.
“கொடு மைக்கேலு” என்று தனம் கேட்டேவிட்டாள்.
“இல்லை தனம்…” என்று மைக்கேல் தயங்கினான்.
ஸ்வீட் ஹார்ட், “சிஸ்டர் புக் ரோமியோகிட்டதான இருந்தது. அப்போ காயின் அவனுக்குத்தான” என்று வாய் திறந்தாள்.
தனம் மைக்கேல் முகத்தைப் பார்த்தாள். அவன் முகம் ஸ்வீட் ஹார்ட் சொன்ன வார்த்தைகளைத்தான் பிரதிபலித்ததோ? நீட்டிய கையை எடுத்துக் கொண்டாள். ரோமியோவும் கையை எடுத்துக் கொண்டான்.
தனம், “எனக்கு கொடுக்க மாட்டேல? எனக்கு ஹெல்ப் பண்ணனும்னு உனக்குத் தோணவே தோணாதா? ஏன்தான் இப்படி இருக்க?” என்று கோபம் கொண்டாள்.
தன் நிலையை நினைத்து மைக்கேல் அவஸ்தையாக உணர்ந்தான்.
அக்கணம் அதுவரை எதுவும் பேசாமல் நின்ற ரோமியோ, “மைக்கேல்… காயின், புக் ரெண்டையும் அவகிட்டேயே கொடுத்திருடா” என்றான்.
“ரோமியோ…” – மைக்கேல்.
“விடுடா” என்றவன், “ஸ்வீட் ஹார்ட் வா” என்று அவளை அழைத்துச் சென்றான்.
அவர்கள் சென்றதும்… “தனம்” என்று வந்த மைக்கேலிடமிருந்து புத்தகத்தையும் நாணயத்தையும் வாங்கிவிட்டு, “எதுவும் பேசிடாத. உன்மேல இப்போ சரியான கோபத்தில் இருக்கேன்” என்று நடந்தாள்.
இதற்கிடையில் சற்றுத் தூரமாக நடந்து வந்திருந்தனர் ரோமியோவும், ஸ்வீட் ஹார்ட்டும். அவன் கண்களைத் தேய்த்துக் கொண்டு வருவதைக் கண்டவள், நின்று அவன் இமைகளை நீவிவிட்டபடி, “கண்ணு ரொம்ப வலிக்குதா” என்றாள்.
“அதெல்லாம் இல்லை” என்றான், மூடிய இமைகளின் மேல் அவள் விரல்களால் கிடைக்கும் இதத்தை உணர்ந்தவாறே!
“என்ன காயின விட்டுக் கொடுத்திட்ட, உனக்கு கஷ்டமா இல்லையா?”
“போன தடவை நீ எனக்கு ஹெல்ப் பண்ணமாதிரி, இந்த தடவை மைக்கேல் அவளுக்கு ஹெல்ப் பண்ணிருக்கான். அவ்வளவுதான்”
“அந்தப் பொண்ணு வந்ததுல இருந்து சிஸ்டர் ரொம்ப மாறிட்டாங்கள?”
“ம்ம்ம், அப்படித்தான் தெரியுது”
“எனக்கென்னமோ அவங்க மைக்கேல் ப்ரோ-வ லவ் பண்றாங்கனு தோணுது”
“நமக்கெதுக்கு அது”
“கரெக்ட்தான். ஆனா இதுல ஒரு விஷயம் எனக்குச் சந்தோஷம்”
“உனக்கென்ன சந்தோஷம்?”
“எல்லா இடத்துக்கும் வந்தவுடனே நீதான போய் சுத்திப் பார்ப்ப”
“ஆமா” என்றவன், இமைகளிலிருந்து அவள் விரல்களைப் பிரித்து எடுத்தான்.
“நல்லவேளை போன தடவை நீ போகாம, மைக்கேல் ப்ரோ போனாங்க” என்று சிரித்தாள்.
“ஏன்?” என்றவன் சிரிக்கவில்லை.
“இல்லனா அந்தப் பொண்ணு உன் கைய பிடிச்சிக்கிட்டு நின்றுக்கும். அப்புறம் என்னெல்லாமோ பேசி…” என்று மேலும் தொடரப் போனவளை, “நிறுத்து! என்ன சொல்ல வர்ற நீ?” என்றவன் குரல் மாறியிருந்தது.
“அது…”
“நான் அந்தப் பொண்ண, அப்படிக் கூப்பிட்டிருப்பேன்னு சொல்ற. சரியா?” என்று சந்தேகமாகத் கேட்டான்.
ஸ்வீட் ஹார்ட் மௌனமாக நின்றாள்.
“ஸோ அப்படித்தான் நினைச்சிருக்க” என்றவன் குரலில் கோபம் இருந்தது.
“இல்லை ரோமியோ”
“இப்பலாம் நீ பேசுறதே சரியில்ல” என்று கடிந்து சொல்லிவிட்டு நகர்ந்தான்.
‘தப்பா பேசிவிட்டோமோ?’ என்று ஸ்வீட் ஹார்ட் குழம்பிப் போய் நின்றாள்.
இதற்கிடையே தனம் மைக்கேலிடம், “என்னைய லவ் பண்றேன்னு சொன்ன. ஆனா யாரோ ஒரு பொண்ணப் பார்த்து ‘காதலியே’னு கூப்பிடற?” என்றாள்.
அவன் ஏதோ சொல்ல வர, அவனைச் சொல்ல விடமால் தடுத்து, “உன் இடத்தில நான் இருந்து என்னைய யாராவது அப்படிச் சொல்லச் சொன்னா… கண்டிப்பா சொல்ல மாட்டேன்” என்று கோபமாகப் பேசிவிட்டு நகர்ந்தாள்.
நால்வரும் தனித்தனியே நடந்தார்கள்!
சற்று தூரம் நடந்து சென்றபின், தனம் அமர்ந்து கொண்டாள். வழக்கம் போல புத்தகத்தை திறந்தாள். சில நொடிகள் பின்… அவளது முகம் மாறியது. அதனை ரோமியோ கண்டு, “என்னாச்சு?” என்றான்.
“இங்கே வாயேன்” என்று அழைத்து அவனிடம் புத்தகத்தைக் காட்டினாள்.
அதில், ‘கடைசி கல் நாணயம், ஆரம்பித்த இடத்தில்’ என்றிருந்தது.
வாசித்தவனுக்கு அத்தனை சந்தோசம். “ஹே! லாஸ்ட் ஸ்டேஜ் வந்தாச்சா?” என்று துள்ளல் குரலில் கேட்டான்.
“அப்படித்தான் நினைக்கிறேன். ஆனா இதுக்கு என்ன அர்த்தம்?” என்று அந்த வாசகத்தைக் காண்பித்தாள்.
“ஸ்டார்ட் பண்ண இடத்துக்குப் போகணுமோ?” – ரோமியோ.
“அந்தப் பெரியவர் சொன்னாருல, எந்த இடத்திலயும் பின்னால போக கூடாதுனு”
“ஓ! மறந்திட்டேன்”
இருவரும் யோசித்தார்கள்.
“தனம், நீ ஃபர்ஸ்ட் காயின எங்க எடுத்த?” – ரோமியோ.
“ஒரு மரத்தில இருந்த பொந்ததுல”
“அப்போ லாஸ்ட் காயினும், அதே மாதிரி ஒரு மரத்திலதான் இருக்கும்”
“ஓ! சூப்பர். இது கொஞ்சம் ஈஸிதான்”
“அது, அங்க போனாத்தான் தெரியும்” என்றான் ரோமியோ.
“அதுவும் சரிதான்” என்று தனம் ஒத்துக் கொண்டாள்.
இருவர் குரலிலும் சலிப்பு இருந்தாலும், புதையல் தேடலின் கடைசி கட்டத்திற்கு வந்துவிட்டோம் என்ற ஒரு சிறு நிம்மதி இருந்தது!
இதே நேரத்தில் தன் அன்பனுடன் காதலைக் கொண்டாடிய ஸ்வீட் ஹார்ட்டும், அத்தை மகள் மீது காதல் கொண்ட மைக்கேலும், ‘என்ன தவறு செய்கின்றோம்?’ என்று புரியாமல் தவித்து நின்றார்கள்!!

