Kathambari Novels
புயலிடம் ஒரு புலம்பல்
அதிரும் வானமே! அமைதி குலைந்த
ஆழியே! சுழன்று அடிக்கும் ஓதமே!
இருளை அப்பி இருக்கும் இருளே
ஆவேச காற்றே! அடங்கா மழையே!
கட்டுமர மெடுத்து கடல் சென்ற
காதலன் இன்னும் கரைக்கு வந்து
சேரலையே! ஓங்கிச் சீறும் அலையால்
திரும்பிட சிரமமா? திசைமாறி சிக்கலா?
உரகடலில் அன்பன் உயிர்நிலை தெரியா
உள்ளம் கவலில் உழலுதே! கெடுதல்
அண்டுமோ வென அஞ்சியே, துயரலை
அடித்து, உயிரதில் அமிழ்ந்து கரையுதே!
மீன் உணக்கையில் மௌனமாய் கடந்தது!
கரவலை இழுக்கையில் கண்கள் சிரித்தது!
களிநண்டு பிடிக்கையில் காதல் சொன்னது!
கலங்கரை விளக்கருகே கதைகள் பேசியது!
நினைத்துப் பார்த்து நெஞ்சம் நிறையுதே!
ஆயினும், நினைவாய் அவைகள் நின்றிடு
மோவென பயந்து மனம் பாலையாகி
காயுதே! கணமும் காதலதில் வேகுதே!
எழும்பும் அலையில் என் ஆருயிரின்
அகமும் இதுபோல் அரற்றுமே! அதை
எண்ணியே வேதனை கூடுதே!
விழியை விட்டு விழிநீர் விழுகுதே!!

