நிர்பந்திக்கும் தனிமை
எனது உலகத்தில் புதிதாய் புகுந்திடும்
எவரையும்
புறக்கணிக்க வசதியில்லா
ஏழை நான்…
எனதின் தனித்துவம்
கேள்விக்குள்ளாகும் எனத்
தெரிந்தும்,
தனிமையின் பயம் கருதி
தன்மையாக நடக்கின்றேன்…
ஆருமில்லா வாழ்வில்
அலங்கரிக்கப்பட்டப் புன்னகையின்
அடையாளம் கண்டு
அருவருக்கும் அகத்தை
ஆணையிட்டு அடைத்தேன்…
பகட்டுப் பேச்சுகளை…
பரிதாபப் பார்வைகளை…
சம்பிரதாய ஆறுதலை…
சமயோசித கண்ணீரை…
பரிகாசம் செய்யாமல்
பக்குவமாய் கையாளுகின்றேன்…
எனினும்,
ரௌத்திரம் வெளிப்படும் தருணங்களில் மட்டும்
தயங்காமல்
என்னை நிர்ப்பந்திக்கும்
தனிமையிடத்து
தஞ்சம் புகுந்திடுவேன்!!