Kathambari Novels
அத்தியாயம் – 9
மாமனாரைப் பார்த்து மன்றாட தங்கராசு கிளம்பிக் கொண்டிருந்தான். அவன் கைப்பேசியிலிருந்து நறுமணமிக்க வாசனை வந்து நாசியைத் துளைத்தது. ஏனென்றால் அலைபேசி திரையில் பூத்திருந்தது மலரின் இலக்கங்கள்.
“ஹலோ” என்றான்.
சிரிப்பொலியுடன் மலர், “ஐ ராசு மாமா நீங்களே எடுத்திட்டீங்க. ஒங்க அம்மா எடுத்திருவாகளோனு பயந்திட்டே போன் போட்டேன். கிளம்பிட்டீகளா” என்றாள்.
“கிளம்பிக்கிட்டே இருக்கேன் மலரு. நீங்க என்னா செய்றீக?”
“சமைச்சிட்டு இருக்கேன்”
“படிக்கலையா?”
“அப்பா படிக்க வேண்டாம்னு சொல்லி, சமைக்கச் சொல்லிட்டாக”
“அதுக்காக படிக்காம வுட்றாதீக”
“இல்லே ராசு மாமா, சமைச்சிட்டு, சாப்டுக்கிட்டே படிப்பேன்”
“நல்லா படிங்க, செரியா. நீங்க பரிச்சை எழுதறதுக்கு, ஒங்க அப்பா சம்மதிக்கிற மாதிரி நாங்க பேசிடுவோம்”
“நெசமாவா?”
“ம்ம் நெசமாத்தான்”
“செரி; நீங்க என்னா கலரு சட்டை போட்டிருக்கீக?” என்று கேட்டாள்.
“பச்சை கலர்”
“ஐய்யோ எங்க அப்பாக்கு அந்த கலரு பிடிக்காது. நீங்க வேற கலர்ல சட்டை போடுங்க. ஒங்ககிட்ட ஊதா கலர்ல சட்டை இருக்கா?” என்று அடுத்து கேட்டாள்.
“இருக்கு”
“அப்பம் அது எடுத்து போடுங்க” என்றவள், “லுங்கி கட்டி இருக்கீகளோ” என்று அதற்கடுத்து கேட்டாள்.
“ம்ம்ம்”
“வேண்டாம் ராசு. வேட்டி கட்டிக்கோங்க”
“செரி”
“முகத்துக்கு பவுடர் போட்டிருக்கீகளா… போடலனா போட்டுக்கோங்க”
என்றதும், கேள்விப் பட்டியல் நீண்டு கொண்டே போவது போலிருக்க, “மலரு, போதுமே. கிளம்பறேன்” என்றான்.
ஒரு அசட்டுச் சிரிப்புடன், “டவுனுக்குப் போறீகள, அதேன் ராசு மாமா. செரி வச்சிறேன். போய்ட்டு வந்து நீங்க போன் போடுங்க” என்று மலர் அழைப்பைத் துண்டித்தாள்.
அவன் வெளியே வந்து, கிழவிகளுடன் சேர்ந்து கிளம்பிய வேளையில், அஞ்சுதம் எதிரில் வந்து நின்றார். சந்தேகப் பார்வையுடன் மூவரையும் பார்த்தார். அதிலும் முக்கியமாக தங்கராசுவின் தோற்றத்தை.
“மூனு பேரும்” என்று அஞ்சுதம் ஆரம்பிக்கையில், “போம்போது எங்கன போறீகனு கேட்கக் கூடாது” என்று முந்திக் கொண்டார் பேச்சிக்கிழவி.
“அப்படியா? செரி கேட்கல. ஆனா நான் சொல்ற எடத்துக்குத்தான் நீங்க போனும்” என்றுவிட்டு, “தங்கராசு டவுனுக்குப் போயி பிள்ளைகளுக்கு நோட்டுப் புக்கு வாங்கணும். செரியா” என்றார் அவனிடம்.
“செரி அம்ம”
“சட்டுபுட்டுனு கிளம்பு” என்று சொல்லி உள்ளே சென்றுவிட்டார்.
முத்தாச்சி, “நாம டவுனுக்கு போறோம்னு தெரியாம இவ இப்படி சொல்லிட்டுப் போறா” என்று சிரிக்கவும்… பேச்சிக்கிழவி, “வாத்தியார் பிள்ளைதான் மக்கா இருக்கும்னு சொல்வாக, இங்கன வாத்தியாரே…” என்று பேசி முடிக்கும் முன், “ஆச்சி” என்றான் தங்கராசு அழுத்தமாக.
“இவன் வேற… ஒன் அம்மய ஒன்னும் சொல்லல லே” என்றவர், “நீ ஏன் சொக்காவ மாத்துன?” என்று கேட்டார்.
“மலரு சொல்லிச்சி. அவுக அப்பாவுக்கு இந்த கலருதான் புடிக்குமாம்”
“இது வேறயா. அந்தப் புள்ள என்னா செய்யுது?”
“சமைக்கிதாம்”
“படிக்கலயா?”
“சமைச்சு, சாப்பிட்டுக்கிட்டே படிப்பாகளாம்”
“ஏம்லே, கத புஸ்தகம்தான சாப்டுக்கிட்டே படிப்பாக, பாட புஸ்தகமுமா?”
இப்படி பேசியபடியே, மூன்று பேரும் ‘டவுனுக்கு’ கிளம்பிச் சென்றனர். நியாயவிலை கடை இருக்கும் இடத்திற்கு சென்று, செல்லதுரையின் வருகைக்காகக் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் அவர் வந்தார்.
“வணக்கம் செல்லதுரை” என்றனர் கிழவிகள் இருவரும்.
“வணக்கம் ஆச்சி. என்னா இம்புட்டு தொலவு வந்திருக்கீக?”
“ஒன்னுமில்லை. ஒங்ககிட்ட தங்கராசுக்காக ஒரு ஒத்தாசை கேட்டு வந்திருக்கோம்”
சற்று யோசித்த செல்லதுரை, “ஆச்சி, ரேசன் கடையில புண்ணாக்கு போடறதில்லேயே” என்றார்.
‘புண்ணாக்கா??!’ என்று மூவரும் ஆச்சிரியமாகப் பார்க்க, “இவுகதான பால் பண்ணை வச்சிருக்காகல. அதுக்காகதான புண்ணாக்கு கேட்டு வந்திருக்கீக” என்று செல்லதுரை தங்கராசுவைக் காட்டினார்.
உடனே பேச்சிக்கிழவி, “இல்லே செல்லதுரை இல்லே, அதுக்காக நாங்க வரலப்பா. செத்த தேரம் ஒங்கூட பேசனும்” என்றார்.
“செரிங்க ஆச்சி. அங்கன இருக்க டீக்கடையில உட்காந்திருக்கீகளா? பத்து நிமிசத்துல வந்துறேன்” என்றதும், சரியென்று மூவரும் சேர்ந்து டீக்கடைக்குச் சென்று அமர்ந்தனர். சற்று நேரத்தில் செல்லதுரை அங்கு வந்தார். நால்வரும் தேனீர் அருந்தியபடி பேசுவதற்குத் தயாராகினர்.
“ஆச்சி நான் ஏன் இந்தக் கடையில ஒங்கள உட்காரச் சொன்னேன் தெரியுமா?” என்று சம்பந்தம் இல்லாமல் செல்லதுரை கேட்டார்.
“தெரியலே” என்றார் முத்தாச்சி.
“இங்கன டீ சூப்பரா இருக்கும்” என்று செல்லதுரை சிரிக்கவும், இவரைச் சம்பந்தி ஆக்கலாமா என்ற சந்தேகத்தில் கிழவிகள் இருந்தனர்.
செல்லதுரை, “ஏன்னு சொல்லுங்க?” என்றார் அடுத்து.
“தெரியலேயே” என்றார் பேச்சிக்கிழவி.
செல்லதுரை, “தங்கராசு பண்ணைலருந்துதான், இங்கன பால் சப்ளே ஆகுது” என்று சொல்லி இன்னும் சிரிக்கவும், என்ன சொல்வதென்றே தெரியாமல் இரு கிழவிகள் இருந்தனர்.
தங்கராசுவிடம் செல்லதுரை, “முதல எனக்கு தெரியாது. ஊர்ல மத்தவுக சொன்ன பொறவுதான் தெரிஞ்சது. ரெம்ப டேஸ்ட் தம்பி. எப்படிப்பா இப்படி?” என்று கேட்டார்.
“அது மாடுகள பிசுக்கில்லாம (no dirt) வச்சிக்கிட்டாலே போதும். அந்தால பழஞ்சியெல்லாம் (left over rice) கழனித் தண்ணீல கலக்க கூடாது” என்று அவன் விளக்கவும்… ஏதோ, ‘மாடு வளர்ப்பு மாநாட்டிற்கு’ வந்தது போல் உணர்ந்தனர் இரு கிழவிகளும்.
பேச்சிக்கிழவி, “ஏன்ட்டி முத்து, நம்ம சம்பந்தம் பேச வந்தா, சம்பந்தமே இல்லாம பேச்சு வேற தெச பக்கமா போகுதேட்டி” என்றார் முத்தாச்சி தண்டட்டியின் அருகில் சென்று ரகசியமாக.
“அது போனா என்னா பேச்சி, நீ அதுலருந்தே ஆரம்பி” என்று முத்தாச்சி சொல்ல… பேச்சிக்கிழவி, “செரியா சொன்னட்டி. இப்பம் பாரு” என்று தங்கராசு, கொடிமலர் பற்றிய பேச்சைத் தொடங்கினார்.
பேச்சிக்கிழவி, “ஒரு டீக்காக தெனமும் கடைக்கு வரணுமா செல்லத்துர, இந்த பாலு வீட்டிலேயே கிடைச்சா எப்படி இருக்கும்” என்று இலைமறை காயாகப் பேசி விஷயத்தை அவருக்குப் புரிய வைக்கப் பார்த்தார்.
செல்லதுரை யோசிக்க ஆரம்பித்தார். இரு கிழவிகளும் அவர் புரிந்து கொள்வாரென நம்பிக்கையுடன் இருந்த நேரம், “இப்பம் புரியுது ஆச்சி. தங்கராசு தம்பி ஊருக்குள்ள பால் சப்ளே பண்ண போகுதா” என்றார் யோசிப்பின் முடிவில் செல்லதுரை.
தலையில் கை வைத்தபடி பேச்சிக்கிழவி, “ஏன்ட்டி முத்து, நான் பேசறது செரியாதான இருக்கு” என்றதும்… முத்தாச்சி, “நீ பேசறது செரிதான். அவருக்குத்தான் புரியல” என்றார்.
இதற்கிடையே செல்லதுரை தங்கராசிடம், “தம்பி, ஒங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். அன்னிக்கி மலரு புள்ள செஞ்ச தப்புக்கு, நான் ஒங்க சட்டைய புடிக்க வந்திட்டேன்” என்றார்.
உடனே முத்தாச்சி பேச்சிக்கிழவியின் காதில், “ஏன்ட்டி பேச்சி, அவரே விசயத்துக்கு வர்றாருட்டி” என்றார்.
“பரவால்ல, நானும் கை உயர்த்திருக்கக் கூடாதுல. மன்னிச்சுக்கோங்க” என்று தங்கராசு சொல்ல, “அந்தால தங்கராசு, ஒங்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்” என்றார் மிகுந்த தயக்கத்துடன் செல்லதுரை.
இப்போது பேச்சிக்கிழவி முத்தாச்சியின் காதில், “முத்து, நீ சொன்னது, ரெம்பச் செரி” என்றார் சந்தோஷமாக.
செல்லதுரை, “ஆனா, எப்படி கேக்கனுதான் ரெம்பத் தயக்கமா இருக்கு தங்கராசு” என்று கூச்சத்துடன் சொல்ல, தன்னையும் மலரையும் பற்றிப் பேசுவார் என்ற அதீத ஆர்வத்தில், “சட்டுபுட்டுன்னு கேட்டுடுங்க” என்று மாப்பிள்ளை மாமனாரை அவசரப்படுத்தினான்.
செல்லதுரை, “நீங்க தளபதி ரசிகர் மன்றத் தலைவராக இருக்கீகள தங்கராசு” என்று ஆரம்பிக்கவும், “ம்” என்றான் அவன் ஆர்வம் குறைந்த குரலில்.
“இந்த மொத நாளு மொத காட்சியே படத்தைப் பார்க்கிறதுக்கு டிக்கெட் கேட்டா தருவீகளா” என்று கேட்கவும், இதற்கா இவர் இவ்வளவு தயக்கம், கூச்சம் காட்டினார் என்பது போல் இருந்தனர் கிழவிகள்.
தங்கராசுவோ… மாப்பிள்ளை என்பதை மறந்து, “அது நீங்க மொதல மன்றத்தில உறுப்பினரா சேர்ந்துட்டீகனா, அதுக்கு நானே ஏற்பாடு செய்றேன்” என்றான் மன்றத்து தலைவராக மாறி.
பேரனின் காதில் பேச்சிக்கிழவி, “ஏம்லே, இது ரெம்ப அவசியமா? ஏன் நாம வந்தோம்னு அவருக்கு வேணா தெரியாம இருக்கும். ஒனக்கு தெரியுமில்ல. வாயை மூடுலே” என்று அதட்டினார்.
அந்தநேரம் முத்தாச்சி, “செல்லத்துர, நீங்க மலரு படிப்ப ஏன் பாதியிலே நிறுத்திருக்கீக?” என்று நேரடியாக விடயத்திற்கு வந்தார்.
“படிப்ப நிறுத்தல ஆச்சி. அதுக்கு கல்யாணம் கட்டி வச்சிட்டு, அந்தால படிக்கட்டும்னு நினைச்சிருக்கேன்” என்று செல்லதுரை சொல்ல, ‘மாப்பிள்ளையே மாறப்போகுது. நீ மன்றத்துச் சோலியப் பார்க்கிற?’ என்பது போல், கிழவிகள் தங்கராசுவைப் பார்த்தனர்.
முத்தாச்சி, “செல்லத்துர, மலரு படிச்சு முடிச்ச பொறவு கல்யாணம் கட்டி வைக்கலாமே. அதோட இல்லாம தங்கராசுகிட்ட கூட ரோட்ல வச்சி, மலரு படிக்கிறதப் பத்தி ஒரு விஷயம் சொல்லிருக்கு” என்றார் அவர்கள் வந்த நோக்கத்தைப் புரிய வைக்கும் முயற்சியாய்.
செல்லதுரை, “அப்படியா தம்பி” என்றார் தங்கராசுவிடம்.
“ம்ம்ம்”
அதற்கு செல்லதுரை, “நடுரோட்டில நின்னு பேசாதீக தம்பி. ரோட்டில பஸ்ஸு வேனு விருட்டுனு வந்துச்சுனா, என்னா பண்ணுவீக?” என்று அறிவுரை சொல்ல, “இல்லே. ஓரமா ஒக்காந்துதான் பேசினோம்” என்று சொன்னான் தங்கராசு.
பேசிக்கிழவியின் பார்வை, ‘ஏம்லே நீயும் அவர் கணக்கா பேசுற!?’ என்று இருக்க, “வேறென்ன ஆச்சி சொல்ல” என்று மெதுவான குரலில் அவன் இயலாமையை அவரிடம் காட்டினான். முத்தாச்சியும், “முடியல பேச்சி, என்னா நடக்குதுனே புரியல” என்றார் புலம்பலாக.
இருவரையும், ‘நான் பார்த்துக்கிறேன்’ என்று நம்பிக்கையுடன் பார்த்த பேச்சிக்கிழவி, “செல்லத்துர, படிப்பு பத்தி மலரு புள்ள ஒரு வசனம் சொல்லிருக்கு பாருங்க, அப்படி ஒரு வசனம். நீ சொல்லுலே” என்றார் பேரனிடம்.
தங்கராசு, “நானா எப்பம் நிறுத்திறனோ, அப்பம்தான் தோத்திட்டேன். அ… தோ…” என்று ஆரம்பித்தவனுக்கு மலர் சொன்னது மறந்து போய் தடுமாற, “அதுவரைக்கும் ஜெயிக்கப் போராடிக்கிட்டு இருக்கேனுதான் சொல்வேன். செரியா தம்பி” என்றார் செல்லதுரை.
“ம்ம்ம்” என்றவன், “ஒங்களுக்கும் தெரியுமா?!” என்றான் ஆச்சரியமாக.
‘ஆம்’ என்று தலையசைத்த செல்லதுரை, “ஒங்ககிட்ட ஒரு தடவைதான் சொல்லிருக்கு. அது படிக்க ஆரம்பிச்சதலருந்து இதத்தான் சொல்லுது. அதேன் எனக்கு அயத்துப் போகல” என்றார் சலிப்பாக.
உடனே பேச்சிக்கிழவி, “ஆனா விடாம சொல்லுதுல, செல்லத்துர. அதப் பாருங்க. அதுக்காகவாது மலரு பரிட்சை எழுதட்டுமே. படிச்சி முடிஞ்ச பொறவு கல்யாணம் காட்டி வைக்கலாமே” என்றார்.
சற்று யோசித்த செல்லதுரை, “ஆட்டுங்க ஆச்சி. எனக்கும் அந்தப் புள்ள பிகாம் முடிச்சி எம்காம் படிக்கனும்னு ஆசை இருக்குது. அது மொதல நல்லா படிக்கட்டும். அந்தால கட்டிக் கொடுக்கலாம்” என்றார்.
“ஐய்யய்யோ!” என்றான் தங்கராசு.
“என்னாச்சு தம்பி?” என்று செல்லதுரை கேட்க, தங்கராசு அமைதியாக இருந்து கொண்டான். பேச்சிக்கிழவிதான், “அது வேற ஒன்னும் இல்லே. படிப்பு விசயத்தில ஒங்க பெண்ணப் பத்தி, ஒங்களவிட நல்லா தெரிஞ்சு வச்சிருக்கான். அம்புட்டுத்தான்” என்றார்.
செல்லதுரை, “அது எனக்குத் தெரியும்ல ஆச்சி, அதான் தங்கராச தேடிப் போய் ஒத்தாசை கேட்டிருக்கு” என்றதுமே, “அது ஏன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீகளா?” என்று கேட்டார் பேச்சிக்கிழவி.
செல்லதுரை, “யோசிக்க என்னா இருக்கு. இந்த ஊரில எல்லாருக்கும் ஒத்தாசை செய்றது டீச்சர்தான். அதேன்” என்றார்.
“ம், செரிதான். ஆனா டீச்சரகிட்ட கேட்காம, ஏன் இவன்கிட்ட கேட்டுச்சி? அது ஏன்னு தெரியுதா” என்றார் அழுத்தமாக பேச்சிக்கிழவி.
செல்லதுரை, “ரெம்ப நல்லா தெரியும் ஆச்சி” என்று நிச்சயமான குரலில் சொல்ல, கடைசியில் அவருக்குப் புரிந்துவிட்டது என்று மூவரும் நிம்மதியாக இருந்த போது, “டீச்சருக்கும் மலருக்கும் ஒத்து வராதுல. அதேன்” என்றார் மலரைப் பெற்றவர்.
அடுத்தநொடி பேச்சிக்கிழவியே பேச்சுவார்த்தையை இப்போதைக்கு நிறுத்தி வைக்கலாமென, “நாம போய்ட்டு செத்த தேரத்துக்கு பொறவு வருவோமா? நெஞ்சு அடைக்கிறது கணக்கா இருக்குலே” என்றார்.
மூவரும் செல்லதுரையிடம் விடைபெற்று எழுந்த பொழுது, “தங்கராசு, ஒங்களுக்கு ஊதா கலரு சொக்கா எடுப்பா இருக்கு” என்றார் அவர்.
மூவரும் ஆச்சரியத்தில் ஆவென வாய்பிளந்து நின்றனர். அதிலிருந்து முதலில் மீண்ட பேச்சிக்கிழவிதான், “அப்பம் ஒங்களுக்கு அம்புட்டும் தெரியும்” என்று கேட்டார்.
“மலரு, நீங்க வருவீங்கனு நேத்து சாயங்காலமே எங்கிட்ட சொல்லிருச்சி ஆச்சி” என்று செல்லதுரை சொல்ல, “மலரு நீங்க பேசாம இருக்கீகனு எங்கிட்ட சொல்லிச்சே” என்றான் தங்கராசு.
“இருந்தேன். ஆனா அதோட அழுகையப் பார்த்துட்டு, என்னால பேசாம இருக்க முடியல. அந்த புள்ள எது செஞ்சாலும் செரியாத்தான் இருக்கும். அதுக்கு… ஒங்க மேல ஒரு அபிப்பிராயம் இருக்குனு சொல்லுச்சி”
“அந்தால எதுக்கு இம்புட்டு எடக்கா பேசினீக?” என்றார் முத்தாச்சி.
தயக்கத்துடன் செல்லதுரை, “நேத்து, மலர ரீசார்ஸ் கடையில வச்சி ரெண்டு ஆச்சிகளும் சேர்ந்து மீன வறுக்கறது கணக்கா வறுத்து எடுத்துட்டீகளாமே!
அதான் என்னைய இப்படி ஏறுமாற பேசச் சொன்னிச்சி. கடல்ல பிடிச்ச மீன… கயத்துக் கட்டில்ல போட்டு… காய வச்சி கருவாடா ஆக்கிற மாதிரி, ஒங்களயும்… ” என்று பாதியிலே நிறுத்தினார்.
‘தேட்’ எடை போடுபவரின் மகளை சாதாரணமாக எடை போட்டுவிட்ட ‘மொமண்ட்’… என்றபடி கிழவிகள் இருவரும் நின்றனர்.
“அதான் ஆக்கிட்டீகளே! அந்தால என்னா மாதிரி” என்றார் பேச்சி.
“ஆனா டீச்சரை நினைச்சாதான் பயமா இருக்கு” என்றார் செல்லதுரை.
“பயப்படாதீக, நாங்க பார்த்துக்குவோம்” என்றார் முத்தாச்சி
செல்லதுரை தங்கராசிடம், “மன்னிச்சிருங்க தம்பி. இல்லே நீங்க தம்பி இல்லே. மாப்பிள்ளை!” என்றார் மாமனாரின் மதிப்பான வெட்கத்துடன்.
“இருக்கட்டும் மாமா” என்றான் மருமகனின் மரியாதை வெட்கத்துடன்.
அதுவரை இருந்த இலகுத்தன்மை முழுதும் போய் செல்லதுரை, “ஆச்சி, இருந்தாலும் மலரு புள்ள ஒங்க வீட்டு முன்ன வந்து நிக்கிறதெல்லாம் ஒத்துவராது” என்றார் மகளைப் பெற்ற தந்தையாக.
“நீங்க ஒன்னும் கவலைப்படாதீக. மலர வந்து நிக்கமட்டும் சொல்லுங்க. மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன்” என்றார் பேச்சிக்கிழவி.
சரியென்ற செல்லதுரையிடம் மூவரும் விடைபெற்றுச் செல்லும்போது, பேச்சிக்கிழவி மட்டும் திரும்பி வந்து, “செல்லத்துர” என்று நின்றார்.
‘சொல்லுங்க ஆச்சி’ என்பது போல் அவர் பார்க்கவும், “நடந்த விசயத்ல, மனசு எடக்கல்லு மாதிரி கனமா இருந்தாலும், சடைக்காம பேசினீக. சந்தோசம்” என்றார் பேச்சிக்கிழவி.
“ஆட்டும்ங்க ஆச்சி “
“ஆனா நீங்க ஒரு கண்ணில வெண்ணையும், ஒன்னொரு கண்ணில சுண்ணாம்பும் வச்சிப் பார்க்கிறீக” என்றதும், செல்லதுரை புரியாமல் கேள்வியாய் ஆச்சியைப் பார்த்தார்.
“மலரு சொன்னதை ஒடனே ஒத்துக்கிட்டீகளே! இசக்கிக்கும் அதத்தான செஞ்சிருக்கணும். மலரு மேல நீங்க வச்சிருக்க பாசத்தை, இசக்கி மேலயும் வச்சிருந்தா, இசக்கி இப்படி ஒரு காரியம் செஞ்சிருக்காது. அந்தப் புள்ள கூட ஒத்துப் போற வழியப் பாருங்க” என்று ஒரு குட்டு வைத்துவிட்டே பேச்சிக்கிழவி சென்றார்.
அடுத்தடுத்த வந்த நாள்களின் கடிகார நேரங்கள் ராட்சச சிறகுகள் முளைத்த பறவை போல் பறந்தன.
மலர் படிப்பையே சுவாசமாக்கிக் கொண்டு படித்தாள்! என்னவொன்று அவ்வப்போது சுவாசக்கோளாறு வந்துவிடும்! அவளிடம் தினமும் வாய் ஓயாமல் வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்ளும் ராசுவிற்கு, அந்த மூன்று வார்த்தை மட்டும் வாய்க்குள் நுழையவில்லை!!
நாட்கள் நகர, மலர் நல்லமுறையில் பரீட்சையை எழுதி முடித்தாள். வேலை முடிந்தபின் தங்கராசுவைப் பார்க்க வந்துவிடுவாள். அவனது பால் பண்ணைதான் இவர்களுக்கான ‘மீட்டிங் ஸ்பாட்’. ஆச்சிகளும் அங்கே வந்துவிடுவார்கள். ராசு வேலை எல்லாம் முடிந்து வரும்வரை ஆச்சிகளும் மலரும் பேசுவார்கள்.
அன்றும் அப்படித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“அடுத்து என்னா ஆச்சி செய்யப் போறீக?” என்று அவர்கள் விடயமாக மலர் கேட்க, “முதல பாஸ் காரட போடு. அந்தால பாப்போம்” என்று பேச்சிக்கிழவி சொன்ன போது, பண்ணையில் வேலை முடித்து ராசு, அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான்.
மலர் எழுந்து கொண்டு, “என்னா ராசு மாமா, இப்படி பிசுக்கா வந்து நிக்கிருகீக” என்றாள். “வெயில் ரெம்ப, எப்படி விசர்வை வருது பாருங்க”
என்று துண்டால் அவன் முகத்தைத் துடைத்துவிட்டாள். “குளிச்சிட்டு வர்றீகளா” என்று கேட்கவும் செய்தாள்.
அவள் பேசப்பேச அவனுக்கு ஏதோ புலப்படுவது போல் இருந்தது. அது, இதேதானே அவன் அம்மாவும் சொல்கிறார். இவள் அபிமானங்களுடன் அன்பைக் காட்டுகிறாள் என்றால்… அவரோ அறிவுரையாக அன்பைக் காட்டுகிறார். அதுதானே வேறுபாடு!
விதங்கள் வேண்டுமானால் வித்தியாசமாக இருக்கலாமே தவிர, அன்பு அன்புதானே!!
‘அவள் அபிமானத்தால், அன்னையின் அன்பை உணர வைத்துவிட்டாள்’ என்ற ஆனந்தத்துடன் மலரைப் பார்த்தான் தங்கராசு! அந்த அளப்பரிய ஆனந்தம் தந்த ஆசையில், “மலரு” என்றான் வாஞ்சையாக.
“என்னா ராசு மாமா” என்று அவன் முகம் பார்த்தாள்.
“ம்ம்… அது… அ… அது வந்து, ஐ லவ் யூ” என்றான் கல்யாண மாலையில் வைத்துக் கட்டப்படும் பூக்களுக்குரிய வெட்கத்துடன்.
“நானும்தான் ராசு மாமா” என்று அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
பேச்சிக்கிழவி, “வெடுக்கு வெடுக்குனு கட்டிக்கிட்டு நிக்காதட்டி” என்று சொல்ல, “போங்க ஆச்சி?” என்றாள் மலர் வெட்கத்துடன்.
அடுத்தடுத்து வந்த நாள்கள், இப்படியே நிறைய ‘ஐ லவ் யூ’கள்; நிறைய ‘நானும்தான்’, நிறைய ‘போங்க ஆச்சிகள்’ என்று சந்தோஷமாகத்தான் அவர்களுக்குப் போனது.
இப்படிச் சென்ற நாள்களில், மலரின் பரீட்சையின் முடிவுகள் வந்தன. எல்லோருடைய கூட்டுப் பிரார்த்தனைக்கு கிடைத்த பலனாக, நான்கு பாடத்திலும்… மலர் நாற்பதற்கு மேல் மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாள்.
தந்தையிடம் சொன்ன அடுத்த நிமிடமே தங்கராசு வீட்டிற்கு முன் வந்து நின்றாள். மலர் வந்ததை அறிந்த கிழவிகள், பேரன் சகிதமா வெளியே வந்தனர். மூவரும் கேள்வியாக அவளைப் பார்த்தனர். கட்டை விரலை உயர்த்திக் காட்டி, அவர்களின் கவலையைக் களைந்தாள்.
கிழவிகள் இருவரும் வாத்தியாரம்மாவிற்கே ‘ரேங்க் கார்டு’ தயாரிக்கத் தயாரானார்!!

