Kathambari Novels
அத்தியாயம் – 8
சூரிய குடும்பத்தில் பூமி ஒரு கோளா? இல்லை… பூமியில் சூரியன் ஒரு நபரா என்பது போல் இருந்த உச்ச வெயில் நேரம். ‘ரீசார்ஜ்’ கடையின் கண்ணாடிக் கதவைத் திறந்து அங்கே சுற்றிய சில்லென்ற காற்றை சுவாசிக்க ஆரம்பித்தனர்… கிழவிகளும் தங்கராசுவும்.
மூவரும் கடைக்குள் வருவதைப் பார்த்த மலர், அவர்கள் அருகில் வரும் வரை அமைதியாகவே இருந்தாள். வந்ததும், “என்னாத்துக்கு இப்பம் இங்கன வந்திருக்கீக. அப்பவே சொல்லிட்டேன்ல. மறுக்கா மறுக்கா சொல்ல முடியாது.
இதுகணக்கா கரைச்சல் கொடுக்குற வேல வச்சுக்காதீக. இப்படிப் பொறவால வந்தீகனா அம்புட்டுத்தான். என்னாத்துக்கு வந்தீகளோ அது நடக்கவே நடக்காது” என்று படபடவென பொறிந்து தள்ளிவிட்டாள்.
பேச்சிக்கிழவி, “அப்பம், இங்கன ரீசார்ஸ் பண்ண மாட்டீகளா?” என்று பாவமாகக் கேட்டார்.
“ரீசார்ஜா??” என்று முழித்தாள் மலர். இவர்கள் வந்த வேலை இதுவா; நான்தான் வாயை விட்டுவிட்டேனா என்பது போல் நின்றாள்.
“ம்ம். ரீசார்ஸ்தான். நீங்க என்னா நினைச்சீங்க” என்றார் பேச்சிக்கிழவி.
தலையை ஒருமுறை உலுக்கிக் கொண்டு மலர், “ஒன்னுமில்லை. நம்பர் சொல்லுங்க” என்றாள்.
பேச்சி, “இவுக நெம்பருக்குத்தான்” என்று மாலையில் கோர்க்கப்படாத மலரைப் போன்ற வாட்டத்துடன் நின்ற தங்கராசைக் காட்டினார்.
மலர், “யாருனாலும் நம்பர் சொல்லுங்க ரீசார்ஜ் செய்றேன்” என்றாள்.
அதற்குமேல் பொறுமையாகப் பேச பேச்சிக்கிழவிக்கு முடியவில்லை. பொங்கல் பானை பொங்கி வருவது போல் பொங்கியெழுந்து விட்டார். “ஏன்ட்டி… இவன் நெம்பர் ஒனக்குத் தெரியாதா” என்றார்.
மலர், “இவுகளே தெரியாது. அந்தால இவுக நம்பர் எப்படித் தெரியும் சொல்லுங்க?” என்றாள் பொங்கல் வைத்த திருப்தியுடன்.
ஒருகணம் பேச்சிக்கிழவிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. யோசித்தார். ‘நீ படிச்சிக்கிட்டிருக்க மேதைனா, நான் படிக்காதமேதை’ என்று நினைத்தவர், “போன் கொடுலே தங்கராசு” என்றார்.
“ஆச்சி என் நெம்பர்தான் ஒங்களுக்கு தெரியும்ல”
“அட கொடுலே” என்றார்.
தங்கராசுவிடமிருந்து கைப்பேசியை வாங்கிய பேச்சிக்கிழவி, சில பல பொத்தான்களை அழுத்தினார். மலரின் கைப்பேசி ஒலித்தது. அவளோ
மாட்டிக்கொண்டது போல் ஆச்சியைப் பார்க்கவும், “ஒன் போன்ல, ஒரு நெம்பர் வருதுல. அந்த நெம்பருக்கு ரீசார்ஸ் பண்ணுட்டி” என்றார்.
‘தேட்’ பொங்கல் வைத்தாலும் சரி… உறியடித்தாலும் சரி. உடைபடும், சூடுகாணும் பானை நீதான் என்கின்ற ‘மொமென்ட்’… மலருக்கு!!
இதற்குமேல் இவர்களைச் சமாளிப்பது கடினம் என்று நினைத்த மலர், “ஆச்சி, இப்பம் ஒங்களுக்கு என்னா வேனும்?” என்றாள்.
“இதுகணக்கா, முதலய கேட்டிருக்கலாம்ல. ஏலே ராசு, அத எடுத்து மேச மேல வைலே” என்றதும், தங்கராசு ஒரு ரோசாப்பூவையும், வாழ்த்து அட்டையையும் எடுத்து மேசைமீது வைத்தான்.
அவளுக்குப் புரிந்து போயிற்று. தங்கராசுவிற்குச் சமாதான தூதுவராக இரு கிழவிகளும் வந்திருக்கின்றனர் என்று! இருந்தும், “என்னா இது?” என்று தெரியாதது போல் கேட்டாள்.
“ஏய், நீதான் கேட்டியாம்ல”
“அப்பம் கேட்டேன். இப்பம் வேண்டாம்” என்று மல்லிகை மொட்டு போல் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாள் மலர்.
“ஏன்ட்டி, இந்த அட்டூழியம் பண்ற?” என்றார் பேச்சிக்கிழவி சலிப்பாக.
“நேத்து, இவுக செஞ்சது மட்டும் செரியா ஆச்சி? எனக்கு எம்புட்டு அழுகாச்சியா வந்தது தெரியுமா” என்றதுமே, “மலரு… மன்னிச்சிடுங்க மலரு… மலரு” என்று தங்கராசு சொல்லிக் கொண்டே இருந்தான்.
பேச்சிக்கிழவி, “லே நிறுத்திலே. ஏன்ட்டி நீ செஞ்சதத்தான சொன்னான். ஆனா அவன் அம்மைக்கு எதுத்தால பேசறப்ப ஏதாவது சொன்னானா, இல்லேல” என்றார்.
கொடிமலர் சற்று யோசித்தாள். நேற்று அஞ்சுதத்தைப் பிரச்சனைக்குள் கொண்டு வந்ததால்தான் தங்கராசு அவள் அப்பாமீது கோபப்பட்டான். ஆனால் அவன் அம்மா முன் அவள் பேசிய அத்தனைப் பேச்சுகளுக்கும் ஒன்றுமே சொல்லவில்லையே.
ஏன் என்று புரிந்ததும் மல்லிகை மொட்டு மலர்வது போல் மெல்ல மலர் முகம் விரிந்தது. எனினும் உடனேயே சமாதானம் ஆகவில்லை அவள். மேசையிலிருந்து அட்டையைப் பார்த்தாள். அதிலிருந்த வாசகங்களை வாசித்து, “யாராவது ரோசுகூட ஸாரி கார்டு கொடுப்பாகளா” என்றாள் தங்கராசுவைப் பார்க்காமல்.
தன்னிடம் நேராகப் பேச மாட்டாளா என்று தங்கராசு நின்றான்.
“அப்பம் இந்த காரடு வேண்டாமா” என்றார் பேச்சிக்கிழவி. “ம்கும்” என்று அவள் தலையை ஆட்ட, “நான் சொன்னேன்ல மலரு நல்லபுள்ள. மன்னிப்பெல்லாம் கேட்கனும்னு நினைக்காது” என்றதற்கு, அவரை முறைத்தபடி நின்றாள்.
‘நீ முறைச்சா பயந்திருவேனா’ என்று இருந்த பேச்சிக்கிழவி, “தங்கராசு, அந்த மன்னிப்பு காரட எடுத்திருலே” என்று சொன்னதும், அவனும் ஆச்சி சொல்லைத் தட்டாமல் மன்னிப்பு அட்டையை எடுத்தான். அடுத்தும் அவரே, “இப்பம் அந்தக் காரட எடுத்து வையிலே” என்றார்.
தன் சட்டைப்பையில் வைத்திருந்த ஒரு அபிமான வாழ்த்து அட்டையை எடுத்தவன், ‘உனக்குத்தான், எடுத்துக்கோ மலர்’ என்ற பார்வை பார்த்து, அதை அவள் முன்னே வைத்தான்.
அவள் எடுக்காமலே நிற்கவும், “அந்தப் பய கூட பேசு மலரு” என்றார் முத்தாச்சி கெஞ்சலாக.
“இங்க பாருங்க ஆச்சி, நான் சொன்னது கணக்கா. பாஸாயிட்டு ஒங்க வீட்டு வாசல்ல வந்து நிப்பேன்” என்று சொல்லவும், “அப்பம் ஒனக்கு தங்கராசு மேல கோவம் இல்லே” என்றார் பேச்சிக்கிழவி.
“அது வேற… இது வேற” என்றதும், “வாலே போலாம். அவ பாஸாகட்டும்” என்று பேச்சிக்கிழவி சொல்ல, அவர்கள் கிளம்பினார்கள்.
மலர், “ஆனா அதுல ஒரு சிக்க இருக்குதே” என்று சொல்லி, அவர்களை நிறுத்தினாள்.
“என்னா சிக்க?” – பேச்சிக்கிழவி.
“என்னய படிக்க வேண்டாம்னு எங்க அப்பா சொல்லிட்டாக”
மலர் படிப்புமீது கொண்ட அதீத நம்பிக்கையால் பேச்சிக்கிழவி, “வாவ்” என்று ஆரம்பித்தவர்… அவளது முகம் போன போக்கைப் பார்த்துவிட்டு, “வொய்” என்று முடித்தார்.
“இது என்னா வார்த்தை… வாவொய்” என்றாள் புரியாமல் மலர்.
“இது இன்ங்கிலீஷு”
“இங்க பாருங்க ஆச்சி. எனக்கும் இங்கிலீஷ் தெரியும். இது அதுகணக்கா இல்லே”
“ஒனக்கு புரியாதுட்டி”
“நானும் இங்கிலீஷ் படிச்சிருக்கேன். ஏமாத்தாதீக”
“நீ பிபிசி பார்த்திருக்கியா?”
“இல்லே”
“இது பிபிசி இன்ங்கிலீஷு. வாவொய். ஒன் புத்தகத்தில இருக்காது. ஒனக்கு புரியவும் செய்யாது” என்றார் பேச்சிக்கிழவி.
முத்தாச்சி, “ஏட்டி பேச்சி சும்ம இரு. என்னானு சொல்லு மலரு” என்றார்.
மலர், “எங்கப்பாக்கு என் மேல நம்பிக்கை இல்லையாம் முத்தாச்சி. அதேன் என்னய பரிட்சை எழுத வேண்டாம்னு சொல்லிட்டாக” என்றாள் உதட்டைச் சுழித்து… கண்ணை விரித்துக் கவலையுடன்.
“இப்பத்தான் ஒங்கப்பாவுக்கு அது புரிஞ்சுதா?” என்றார் பேச்சிக்கிழவி.
“பாருங்க முத்தாச்சி. எப்படி எடக்கா பேசறாகனு. பாஸாகாட்டி ஒங்க வீட்டுக்கு வர மாட்டேன்” என்றாள் மலர்.
முத்தாச்சி, “செரிட்டி. ஒங்க அப்பாவுக்கு தெரியாம போய் பரீட்சை எழுதிட்டு வந்துரு” என்று யோசனை சொன்னார்.
“ஏற்கனவே எங்க அப்பாவுக்கு தெரியாம ஒரு காரியம் பண்ணிட்டேன். மறுக்கா அதுகணக்கா செய்ய மாட்டேன். எங்கப்பா சொன்னாதான் பரிட்சை எழுதுவேன்”
“ஒன் பிரச்சனை என்னா மலரு?” என்றார் சலிப்புடன் பேச்சிக்கிழவி.
“ஒங்க வீட்லருக்க ஒரு ஆள் வந்து பேசினதாலதான என்னால பரீட்சை எழுத முடியாம போச்சு” என்றதும், “ஏய் என்னா? ஆளு கீளுன்ன பேசுற. நீ அவன் அம்மயப்பத்தி என்ன பேசினாலும் சும்ம நிக்கிறானுதான இதுகணக்கா பேசிகிட்டு இருக்க. ஒரு நேரத்த போல ஒரு நேரம் இருக்க மாட்டான்… பாத்துப் பேசு” என்று எச்சரித்தார் பேச்சிக்கிழவி.
முத்தாச்சி, “பிரச்சனை என்னான்னு மட்டும் சொல்லு மலரு” என்றார்.
“எங்கப்பாகிட்ட போய் மலர பரிச்சை எழுத விடுங்கனு நீங்க பேசுங்க. அந்தால பாஸாயிட்டு ஒங்க வீடு மின்னாடி வந்து நிக்கிறேன்”
“அம்புட்டுதான, பேசறோம். வாலே கிளம்பலாம்” என்று பேச்சிக்கிழவி சொல்லவும், மூவரும் நடக்கத் தொடங்கினர்.
அன்று அபிமானத்தைப் பரிமாறிக் கொண்டது போல் இன்று அபிமான அட்டையையும் பரிமாறிக் கொள்ள என்று நினைத்த தங்கராசு, “ஆச்சி, பேசி… காரட கொடுத்திட்டு வந்திரட்டுமா?” என்று கேட்டான்.
“இருலே, அவளே வந்து வாங்குவா. அந்த வாய் எம்புட்டு பேசிருக்கு. காரட கேட்டு வாங்கத் தெரியாதா?” என்றுவிட்டார் பேச்சிக்கிழவி
மலர் அவனிடம் பேசாமல் இங்கிருந்த கிளம்ப மனமில்லாமல் தயங்கிய தருணம், “ஒரு நிமிஷம் அங்கனயே நிக்கிறீகளா” என்று மலர் எழுந்து, அவர்கள் அருகில் வந்து நிற்கவும், “என்னா” என்றார் பேச்சிக்கிழவி.
“கார்டு கொடுக்காம போறீகளே” என்றாள்.
தங்கராசு காதிற்குள் பேச்சிக்கிழவி ஏதோ ரகசியமாகச் சொன்னார். சிரிப்புடன் அவன் இரண்டு வாழ்த்து அட்டைகளையும் எடுத்து, இரு கைகளிலும் ஒவ்வொன்றாய் பிடித்தான்.
அப்போதும் அவள் தங்கராசு முகம் பார்க்காமல், “ரெண்டு வேணாம், ஏதாவது ஒன்னு போதும்” என்றாள் எங்கோ பார்த்து.
‘இவளுக்கு எம்புட்டு அலம்பு’ என்று நினைத்த பேச்சிக்கிழவி, “ஒனக்கு எது வேனுமோ, அத நீயே அவன்கிட்டருந்து எடுத்துக்கோ. எங்களுக்கு வாசிக்க தெரியாது” என்றார்.
“வாங்கறப்போ எப்படி வாங்கனீக”
“கடைக்காரன் ஒத்தாசை செஞ்சான்” என்றார் முத்தாச்சி.
மலரின் இதழ்கள் காற்றில் அசையும் விரிமலர் போல் அங்கும் இங்கும் போய் எதையோ முணுமுணுத்தன.
“என்னட்டி பேசற” என்றார் பேச்சிக்கிழவி.
“ஏசிக்கிட்டு இருக்கேன்”
“யாரட்டி?”
“ம்ம்ம்… ஒத்தாசை செஞ்சவுகள”
“ஒத்தாசை பண்றவன ஏசுறதுதான ஒங்க வீட்டு வழக்கம்” என்று அவர் சொல்ல… கொடிமலர் அபிமான வாழ்த்து அட்டையை ராசுவிடமிருந்து வாங்கவில்லை… பிடுங்கிக் கொண்டாள்!
“நான் சொன்னேன்ல தங்கராசு, மலரு அந்த காரட எடுக்கும்னு” என்று சொல்ல, “வாசிச்சு பார்க்காம இப்பம் எப்படி தெரிஞ்சுச்சு” என்றாள்.
“அதுல ஆர்ட்டு போட்டுருக்கிட்டி”
“அது, ஆர்ட்டு இல்லே, ஹார்ட்டு” என்றவள், தங்கராசுவின் சட்டைப் பையில் பேனா போல் சொருகி வைத்திருந்த ரோசாப்பூவை பார்த்தாள்.
அவள் எப்போது பேசுவாள் என்று பார்த்திருந்தவனிடம், “ராசு… ரோசு கொடுக்கிறியா?” என்று ரவுசு (show-off) காட்டினாள்.
பேச்சிக்கிழவி, “ஏய் என்னாட்டி மருவாதைய கம்மி பண்ற… ஒழுங்கா பேசுட்டி” என்று அதட்டினார்.
“அவ்ளோதான ஆச்சி, இப்பம் பாருங்க” என்றவள், “ராசு மாமா ரோசு கொடுக்கிறீகளா?” என்றாள் தங்கராசிடம்.
தினமும் அவன் தோட்டத்தில் விதவிதமான பூக்களுடன் பொழுதைக் கழிப்பதால், பூக்களின் மென்மை குணம் பற்றி அவனுக்குத் தெரியும். ஆனால் இந்த மலர் மட்டும் ஏன் இப்படி அடாவடித்தனம் செய்கிறது என்று ஆச்சரியமாகப் பார்த்தபடி, “பரிச்சைக்கு ஆல் தி பெஸ்ட்” என்று ரோசாப்பூவை எடுத்து மலரிடம் நீட்டினான்.
“மறுக்காவுமா?” என்றாள்
பேச்சிக்கிழவி, “ஏம்லே, ரோச கொடுத்திட்டு இப்படியா சொல்லுவாக. படத்ல இதுகணக்கா சொல்ல மாட்டாங்களே” என்று யோசித்தார்.
“நல்லா கேளுங்க ஆச்சி. அந்த மூனு வார்த்தை சொல்லுங்க ராசு மாமா சொல்லுங்க” என்று அவனை நச்சரித்தாள்.
“என்னா மூனு வார்த்தை பேச்சி” என்று முத்தாச்சி வர, “நீ சும்ம இருட்டி முத்து” என்ற பேச்சி, “லே நீ சொல்லுலே” என்றார் தங்கராசுவிடம்.
அவன், “இப்பம் வேண்டாம்” என்று வெட்கத்துடன் மறுத்தான்.
பேச்சிக்கிழவி, “ஏம்லே நீயெல்லாம் தளபதி ரசிகர் மன்றத் தலைவரு. பேசாம பதவிலருந்து விலகிருலே” என்றுவிட்டார்.
தங்கராசு, “ஆச்சி சும்ம இருங்க. அந்தப் புள்ள படிச்சி பாஸாகட்டும். அப்பதான் நம்ம வீட்டுக்கு வருவாக” என்றான் கருத்தாக.
மலர், “ராசு மாமா நீங்க கவலைப்படாதீக, நான் நெசமா ஒங்க வீட்டு மின்னாடி வந்து நிப்பேன் ராசு மாமா” என்று அவனருகிலே நின்று கொண்டு கொஞ்சிக் கொஞ்சிப் பேசினாள்.
பேச்சிக்கிழவி, “அவனுக்கு கவல, நீ வீட்டு மின்னாடி வந்து நிப்பியானு இல்லே. பாஸாவீயானு” என்றார் கேலியாக.
“அப்படியா ராசு மாமா?” என்று அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.
அப்போதுதான் மலரின் ராசு மாமாவாகிப் போனவனுக்கு… அவள்மீது இருக்கும் நம்பிக்கையை அவன் கண்கள் வெளிப்படுத்தின. அவளோ, “ராசு மாமா நீங்க சொன்னாதான் நான் படிப்பேன். இல்லாட்டி படிக்க மாட்டேன்” என்றாள்.
பேச்சி ஆச்சி, “ஏன்ட்டி, பாசாகாட்டி வீட்டுக்கு வரமாட்ட. ஒங்கப்பாகிட்ட பேசாட்டி பரிச்சை எழுது மாட்ட. இப்பம் இதுவுமா. ஒனக்கு நெசமா பரிச்சை எழுத ஆசை இருக்கா… இல்லயா” என்றார்.
“இருக்கு ஆச்சி” என்று சிரித்தாள்.
தங்கராசு, “மலரு, அப்பம் படிங்க. அந்தால மிச்சத்தை பார்க்கலாம். செரியா?” என்று மூன்று வார்த்தையை மிச்சமாக்கினான்.
“அய்யோ ராசு மாமா, ஏற்கனவே இத ரெம்ப தடவ படிச்சிட்டேன்” என்று மலர் சிரித்தாள்.
“கொறச்சலே இல்லையாட்டி” என்று பேச்சிக்கிழவி தலையில் அடித்துக் கொள்ள… முத்தாச்சி, “ரெண்டும் பேரும் செத்த தேரம் பேசட்டும், நாம வெளில நிப்போம்” என்று அவரை அழைத்துக் கொண்டு சென்றார்.
அவர்கள் போனவுடன்… ராசு மலரையே பார்த்துக் கொண்டிருந்தான். “கோவமா மலரு” என்றான்.
“இல்லேயே” என்றாள் அவன் வாங்கி வந்திருந்த வாழ்த்து அட்டையின் வார்த்தைகளை விரும்பி வாசித்தபடியே. குனிந்திருந்தவள் நாடியைப் பிடித்து மெல்ல நிமிர்த்தி முகத்தைப் பார்த்தான். மலரின் கண்களில் லேசான ஈரங்கள் தெரிந்தன.
“என்னாச்சு மலரு” என்ற கேட்ட அடுத்தநொடி, அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு, “அப்பாக்கு என்மேல கோபம்; சரியா பேசமாட்டிக்காக ராசு. எப்பவுமே இப்படி இருக்க மாட்டாரு. என்னால யாருகிட்டயும் பேசாம இருக்க முடியாது.
இசக்கியும் இல்லே. அவ அங்கன எப்படி இருக்காளோ, அப்பா கோபமா இருக்காகனு அவளும் வருத்தப்படுவாள… அக்கா இல்லாம ஒண்டியா இருக்கிற மாதிரி இருக்கு” என்று புலம்பித் தள்ளினாள்.
“செரியாயிரும். நான் போன் போட்டா எடுத்துப் பேசுங்க” என்று அவளைத் தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தினான். ‘ஏன்?’ என்று மலர் அவனைப் பார்க்கவும், பின்னால் இருந்த கண்ணாடிக் கதவுகளைக் காட்டி, “யாரும் வந்திட போறாக” என்றான்.
சட்டென மனநிலை மாறி, “அது இப்பம்தான் ஒங்களுக்கு தெரியுதா ராசு மாமா” என்று அவள் சங்கடமின்றி பேச, அதே மனநிலை அவளுக்குத் தொடரும்படி சற்றுநேரம் பேசிவிட்டு வெளியே வந்தான்.
லுங்கியைத் தூக்கி கட்டியபடி ‘ரீசார்ஜ்’ கடையின் படிகளில் இறங்கி வந்தவனிடம், “என்னாலே ரெண்டு பேரும் ஒத்துப் போயாச்சா” என்றார் பேச்சிக்கிழவி.
“ம்ம்ம்”
சலிப்புடன் அவர், “இவள படிக்க வெக்கிறதுக்கு நாமலே படிச்சிறலாம் போல. என்ன சொல்றீக நீங்க” என்று கேட்க, “படிக்கலாம் படிக்கலாம். அதுக்கு எதும் வயசு இருக்கா என்ன… இப்பம் அடுத்து என்னா செய்யனு சொல்லு பேச்சி” என்றார் முத்தாட்சி.
தங்கராசும், “ஆமா ஆச்சி, அடுத்து என்ன செய்ய?” என்றான்.
சற்று யோசித்துவிட்டு பேச்சிக்கிழவி, “அடுத்து ரேசன் கடைக்காரருக்கு காரடு அடிக்க வேண்டியதுதான்” என்றார்.

