Kathambari Novels
அத்தியாயம் – 4
மலர் நின்ற தோரணை, வெளியே வந்த அஞ்சுதத்திற்கு ஆச்சரியத்தை தந்தது. சற்று நேரத்திற்கு முன் கிழவிகள் சொன்ன மாதிரி இவளுக்கும் தங்கராசுமீது அபிப்பிராயம் இருக்கிறதோ என்று சந்தேகம் வந்தது.
தங்கராசு விருப்பங்கள் குறித்து அவருக்கு என்றுமே தெரிந்ததில்லை. அவனும் அம்மாவிடம் ஏதும் சொன்னதில்லை. கிழவிகள்தான் அவரிடம் பேரனின் பிடித்தம் பற்றிச் சொல்வார்கள். இன்று மகன் அபிப்பிராயம் பற்றித் தெரிந்து கொண்டதும், அம்மாவாக அதை நிறைவேற்றி வைக்க அவருக்கும் ஆசையாக இருந்தது.
ஆனால் மலரின் படிப்பு… அதற்கு முட்டுக்கட்டையாக வந்து நின்றது.
சுதாரித்துக் கொண்ட அஞ்சுதம் முதலில் பேச்சை ஆரம்பித்தார். “எதுக்காக இங்கன வந்து இப்படி நிக்கற” என்றார் மலரிடம்.
“தங்கராசுகிட்ட பேசணும்” என்றாள் சுருக்கமாக.
“ஏன்?” என்றார் அதனினும் சுருக்கமாக.
“ஏன்ட்டி, அந்த புள்ள அவன்கிட்டதான பேசனும்னு சொல்லிச்சி. நீ ஏன் இடைஞ்சலா?” என்று சூசகமாக சொல்லிப் பார்த்தார் பேச்சிக்கிழவி.
“பேசாம இருக்கீகளா. நீ சொல்லு” என்றார் அஞ்சுதம் அதிகாரமாக.
“நான் அவுககிட்ட சொல்லிக்கிறேன்” என்றாள் மலர் மரியாதையாக.
“இப்பம்தான் ஒன்னயப்பத்தி இவிய சொன்னாக. தங்கராசுக்கு ஒன் மேல ஒரு அபிப்பிராயம் இருக்கிதுனும் சொன்னாக” என்று கிழவிகளை நோக்கி கைகாட்டினார் அஞ்சுதம்.
அதற்குள் அவளைப் பற்றிய பேச்சுகள் இந்த வீட்டில் பேசப்படுகிறதே என்று மலருக்கு எரிச்சலாக இருந்தது. அவள் எந்த ஒப்புதலும் தராத நிலையில் ஏன் பேசினார்கள் என்று கிழவிகள் மீதுகோபம் வந்தது.
அவளுக்கு அப்படியொரு நம்பிக்கை! தங்கராசு இதுபற்றி பேசியிருக்க மாட்டான் என்று! கிழவிகளைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள் கொடிமலர்!!
அஞ்சுதம் ஏதேதோ யுகித்து, “அதேன் பெண்ணு பார்க்க வந்தப்ப, ஒங்க அக்காவா வேண்டாம்னு சொல்ல வச்சியா” என்று கேட்டார்.
“ஏங்க அது வேறங்க” என்று மலர் சொன்னாலும், “நான் ஒன்னயத்தான் பார்த்துக்கிட்டு இருந்தேன். ஒங்க அக்காவ இடிச்சிக்கிட்டே நின்ன. அன்னிக்கி கூட முக்குல தங்கராசுகிட்ட பேசிக்கிட்டு நின்னேல” என்று அன்று பார்த்ததுக்கும், இன்றைக்கும் முடிச்சுப் போட்டுப் பேசினார்.
அதற்குள், “போதும் நிறுத்திறீகளா. ஒங்க இஷ்டத்துக்கு பேசிக்கிட்டே போறீக. எனக்கு ஒங்க பையன் மேல எந்த அபிப்பிராயமும் கிடையாது. போதுமா?” என்று மலர் முடிக்கப் பார்த்தாள்.
“அப்பம் எதுக்கு இங்கன வந்து நிக்கிற. ஒங்க அக்கா பேசினதுக்கு மன்னிப்பு கேட்கவா” என்று, இசக்கிமீது இருக்கும் கோபத்தை அஞ்சுதம் இவளிடம் இறக்கினார்.
“அதுக்கு எப்பமோ மன்னிப்பு கேட்டாச்சி. ஏன் ஆச்சி, நீங்க ஒன்னும் சொல்லலையா” என்றாள் மலர் கிழவிகளைப் பார்த்து இன்முகமாக.
இரு கிழவிகளும், மாமியார் மருமகள் சண்டையில் அமைதி காப்பதே சிறந்தது என்று நினைத்த பேசாமல் நின்றனர்.
அஞ்சுதம், “மன்னிப்பு கேட்டாச்சில. அப்பம் போ” என்று மலரை விரட்டி விடப்பார்த்தார்.
“நான் ஒங்ககூட பேச வரல. தங்கராசுகூடத்தான் பேசணும்” என்று மலர் விதண்டாவாதம் செய்தாள்.
“அதேன் எதுவும் இல்லேல, அந்தால என்னாத்துக்கு”
“மாறி மாறி அதயே சொல்றீக. ஏங்க அவுககிட்ட…” என்று மலர் பேசிக் கொண்டிருக்கும் போதே, “ஏய் நல்லதனமா சொன்னா புரியாதா, ஒங்க அப்பாகிட்ட சொல்லவா?” என்று அஞ்சுதம் மிரட்டிப் பார்த்தார்.
அந்த நேரம் தங்கராசு, “ஏங்க மலரு, சாயங்காலமா ரீசார்ஸ் கடைக்கு வாரேன். அங்கன வச்சி நாம பேசிக்கலாம். செரியா” என்று அவர்கள் இருவருக்கும் இடையே வந்தான்.
மலர், “நீங்க இத்தறை தேரமா இங்கனதான் இருக்கீகளா” என்று தலை சரித்துக் கேட்கவும்… சிரித்துக் கொண்டே ராசு, “போங்க மலரு. நான் வரேன்” என்று சொல்லி மிதிவண்டியை எடுத்தான்.
கிளம்பியவனிடம் அஞ்சுதம், “தங்கராசு, சேக்காளி பயலுக கூட சேர்ந்து மன்றத்துக்குப் போவாத. பண்ணைக்கு போ” என்றார் கண்டிப்புடன்.
“செரி அம்ம” என்றவன் குரல் காற்றில் பறந்து வந்தது.
மகனின் செயல் அஞ்சுதத்திற்கு வியப்பாக இருந்தது.
அவனைத் தட்டிக் கேட்க, தடுக்க… அவர் மனம் மறுத்தது. மலர் மறுப்பு சொன்ன பின்னும், சிரிக்கின்றவனிடம்… என்ன போய் கேட்க முடியும். எதுவும் இல்லையென சொல்கிறவளைப் பற்றியும், அவள் அப்பாவிடம் என்ன சொல்ல முடியும் என்ற யோசனையில் நின்று கொண்டிருந்தார்.
தங்கராசு சென்ற பின்பும், கொடிமலர் அங்கேயே நின்றாள். அவளது பார்வையைப் பார்த்த பேச்சிக்கிழவி, “ஏன்ட்டி முத்து, இவ நமக்கு ஏதோ இக்கட்டு (துன்பம்) கொடுக்கத்தான் நிக்கிறா” என்று முத்தாச்சியிடம் முணுமுணுத்தார்.
“என்னா ஆச்சி, ஜூஸ் போட்டீகளா?” என்று ஆரம்பித்தாள் மலர்.
“ஏன்ட்டி ஒனக்கும் வேணுமா” – பேச்சுக்கிழவி.
“என்னா ஜுஸ்?” – அஞ்சுதம்.
“அது ஒன்னுமில்ல டீச்சர், நீங்க எங்க வீட்லருந்து கிளம்பிறப்ப மிச்சத்த வீட்ல வந்து பேசுறேன்னு சொன்னீகள”
“ஆமா”
“நீங்க அவயம் போட்டு, ஒங்க தொண்டத்தண்ணி வத்துமாம். அதேன், ஜுஸ் போட பழம் எடுத்திட்டு வந்தாக இவுக” என்றவள், “என்னா ஆச்சி போட்டு தந்தீகளா” என்று கிழவிகளிடம் கேட்டு, அவர்களைப் போட்டுக் கொடுத்துவிட்டுத்தான் சென்றாள் மலர்.
அஞ்சுதம் பிழிந்தெடுக்கும் கோபத்துடன் கிழவிகள் நிற்கின்ற பக்கம் திரும்பினார். அதன்பின் அன்று ‘பிபிசி’ பார்க்கக் கூட நேரம் ஒதுக்க முடியாமல் கிழவிகள் ‘பிசி’யாக இருந்தனர்.
*******************************
சாயம்போன லுங்கி, ஆஸ்தான நாயகன் முகம் போட்ட சட்டை என்று, சாயங்கால சாதாரண தோற்றத்துடன், ‘ரீசார்ஜ்’ கடையின் கண்ணாடி கதவுகளைத் திறந்து உள்ளே நுழைந்தான் தங்கராசு!
“கோபமா” என்று மலர் முன்னே வந்து நின்றான்.
ஒற்றை விரலை வாய் மேல் வைத்து ‘பேசாதீக’ என்பது போல் சைகை செய்தாள். மேலும் பின்னே திரும்பிப் பார்க்கச் சொல்லி கண்களால் அவனுக்கு சாடையும் காட்டினாள். அவள் கண்கள் காட்டிய திசையில், இசக்கியம்மாள் அமர்ந்திருந்தாள்.
இசக்கியைத் திரும்பிப் பார்த்த தங்கராசு, “என்னாத்துக்கு பேசனும்னு சொன்னீக” என்று மலரிடம் கேட்டான்.
மலர், “இருங்க. இசக்கி இங்கன வாட்டி” என்று அக்காவை அழைத்தாள்.
அருகில் வந்த இசக்கியிடம், “இவுககிட்ட சொல்லுட்டி” என்றாள் மலர்.
“இவுகதான் பேசனுமா” என்ற ராசுவின் குரலில் அத்தனை ஏமாற்றம் தெரிந்தது.
“ஒங்ககிட்ட ஒரு ஒத்தாசை கேட்கனும்” என்றாள் இசக்கி.
“எங்கிட்டயா? என்னா வேணும் சொல்லுங்க” என்றான் தாரளமாக.
ஆனாலும் இசக்கி தயங்கி, “மலரு, நீயே சொல்லுட்டி” என்று பொறுப்பை மலரிடம் தந்தாள். மலரும், “காலெம்பற வீட்டுல ஒங்கள பிடிக்கலனு சொல்றதுக்கு, வேற காரணமே இல்லே. அதேன் படிப்பச் சொல்லிப் பிடிக்கலனு சொல்லிருச்சி. நீங்க கவலப்படாதீக” என்றாள்.
“ஏங்க, அது அயத்தே போயிருச்சு. இதுக்கா வரச் சொன்னீக” என்றான்.
இசக்கி, “மலரு, ஒத்தாச என்னானு சொல்லுட்டி” என்று அவளை இடிக்க, மலரோ முதன் முறையாக அமைதியாக நின்றாள்.
“யாராவது சொல்லுங்க” என்றான்.
“சார், நான்” என்று ஆரம்பித்த இசக்கியிடம், “சாரெல்லாம் வேண்டாங்க, தங்கராசு போதும்” என்றான்.
“இல்லே சார், இவதான் சொன்னா. அவுக ரெம்ப நல்லவுக, அவுகளுக்கு மருவாதை கொடுனு” என்று இசக்கி மலரை மாட்டி விட்டாள். “இல்லே தங்கராசு, அது…” என்ற மலருக்கோ ஒரே நாளில் எத்தனை பேரைத்தான் சமாளிக்க என்ற உணர்வு.
“பரவால்ல வுடுங்க, என்னானு சொல்லுங்க மலரு” என்றான்.
மலர், “எங்க அக்கா ஒருத்தர விரும்புறாங்க. அவுகளதான் கல்யாணம் கட்டிப்பேன்னு சொல்றா. அதேன் அவுக ரெண்டு பேரும் கல்யாணம் கட்டிக்க, நீங்க ஒத்தாசை செய்யணும்” என்று விடயத்தை விருட்டென்று சொன்னாள்.
தங்கராசு, “அதேன் வேணானு சொன்னீகளா. ஆனா ஒங்க அப்பாகிட்ட சொல்ல வேண்டியதுதான. அவுக பார்த்து ஒங்களுக்கு கல்யாணம் கட்டி வைக்கட்டுமே” என்றான்.
“அப்பாவுக்கு தெரியும் தங்கராசு” – மலர்.
“பொறவு என்னா பிரச்சனை?”
“அப்பா ஒத்துக்கல. அதேன் ஒங்ககிட்ட ஒத்தாசை கேட்டோம்”
“எப்படிங்க அப்பாக்கு தெரியாம புள்ளைக்கு கல்யாணம் கட்டி வைக்க முடியும். அது தப்புங்க”
இவர்கள் பேசியதைக் கேட்ட இசக்கி, “நீதான மலரு சொன்ன, அவுக ஒத்தாசை செய்வாகனு. இப்பம் பாரு” என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.
“இசக்கி அழாதட்டி. அவுக யோசிச்சு செரினு சொல்வாக பாரேன்” என்று மலர் சொன்னது, தங்கராசுவை ‘செரினு சொல்லு’ என்றிருந்தது.
“ஏங்க மலரு, இது சாதாரண விஷயம் இல்லேங்க. எங்க அம்மைக்கு தெரிஞ்சா அம்புட்டுதான்”
“ஏன் ஒங்க அம்மாகிட்ட சொல்றீக. சொல்லாம செய்ங்க”
“நான், எங்க அம்மைக்கு தெரிஞ்சானுதான் கேட்டேன். சொல்லுவேனு சொன்னேனா”
“அப்பம் தெரியாம பார்த்துப்போமே”
“ஏங்க, கல்யாணம் முடிச்சி அவிய ரெண்டு பேரும் இங்கன ஊருக்குள்ள வருவாகள, அப்பம் தெரியாதா”
மலர் யோசிக்க… இசக்கி, “இல்லே. அப்பம் ஒங்கள காட்டிக் கொடுக்க மாட்டோம்” என்றாள்.
தங்கராசு யோசித்துவிட்டு, “செரிங்க. முதல அவுக பேர் என்னா? என்னா சோலி… எங்கன பாக்கிறாக? அதச் சொல்லுங்க” என்றான்.
“அவுக பேர் கண்ணன். வாத்தியார காலேச்ல சோலி. அவுக இருக்கிறது மார்த்தாண்டம்” என்றாள் இசக்கி.
“அவுக வீட்ல எப்படி?”
“அவுக வீட்ல எல்லாருக்கும் என்னய ரெம்ப பிடிக்கும். அவிய எல்லாரும் இதுக்கு ஒத்துக்கிட்டாக. அது தெரிஞ்சுதான் அப்பா இங்கன கூட்டிட்டு வந்துட்டாக”
“அப்பம் அவியகள ஒங்க அப்பாகிட்ட பேச சொல்ல வேண்டியதுதான”
“பேசுனாக, ஆனா அப்பா ஒத்துக்கல”
“ஏன்? என்னா காரணம்?”
“சொந்தக்காரக ஏதாவது சொல்லுவாகனு பயப்படுறாக”
திரும்பவும் தங்கராசு யோசித்துவிட்டு, “செரிங்க. அவுகளுக்கு போன் போட்டு பேசுங்க. நாளே அவுகள பார்த்துப் பேசலாம்” என்றான்.
“செரிங்க” என்று முகமலர்ந்து சொன்ன இசக்கி, “மலரு, ஒன் போன கொடுட்டி” என்று கைப்பேசியை வாங்கிவிட்டு, சற்றுத் தள்ளிச் சென்று, பத்து நாள்களாக பூட்டி வைத்திருந்த கண்ணன் மீதான பாசத்தைப் அவனிடம் பொழிய ஆரம்பித்தாள்.
அதுவரை தங்கராசுவையே பார்த்துக் கொண்டிருந்த மலர், “ரெம்ப தேங்க்ஸ்ங்க” என்றுவிட்டு, “செரி, அவ பேசட்டும். நீங்க செத்த நேரம் வெளிய வாரீகளா?” என்றாள்.
தங்கராசு, “ம் செரிங்க” என்றான். இருவரும் வெளியே வந்து நின்றதும், மலர், “பாருங்க தங்கராசு, நீங்க என் மேல அபிப்பிராயம் இருக்குனு வெடுக்குனு சொல்லிட்டீக” என்று ஆரம்பித்தாள்.
“வீட்ல வச்சே ஒங்களுக்கு இல்லேனு சொல்லிட்டீகள. அந்தால இப்பம் என்னா மலரு?” என்றான் சலிப்புடன்.
“நான் சொல்றத கேளுங்க”
“செரி கேட்கிறேன். சொல்லுங்க”
“நல்லா கேட்டுக்கோங்க. எனக்கு ஒங்க மேல எந்த அபிப்பிராயமும் கிடையாது. எனக்குப் படிக்கனும். பத்து பதினைஞ்சு நாள்ல பரிட்சை வருது. அதுமட்டும்தான் மனசுல ஓடுது. புரியுதா?”
“ம்…புரியுது”
“நீங்க இப்படி ஒத்தேல அபிப்பிராயம்னு சுத்திக்கிட்டிருந்தா, ராவைல ஒங்களுக்கு உறக்கம் வராது”
“ஆமாங்க” என்றான் அவள் கூறுவதும் சரியென்பது போல்.
“உறக்கம் வரலைனா… கனவு வரும்” என்று தொடர்ந்தாள்.
“ம்ம்ம்” என்று ஆமோதித்தான்.
“கனவு வந்துச்சுனா… அந்தால அதில டூயட் வரும்”
‘இவுக என்னா சொல்ல வராக’ என்பது போல் பார்த்திருந்தான்.
“டூயட் வந்திச்சினா… அங்கன நான் வந்து நிக்கனும். நான் அங்கன வந்திட்டா, பரிச்சைக்கு யார் படிக்கிறது சொல்லுங்க” என்று இமைகள் படபடத்துக் கேட்டாள்.
“புரியுது மலரு” என்று பொதுவாகச் சொல்லி வைத்தான்.
“இல்லே தங்கராசு” என்று அவள் மீண்டும் ஆரம்பிக்க, “போதுங்க. நாளே காலெம்பற ஒங்க தெருவுக்கு பொறவால ஒரு தெரு போகுதுலங்க, அங்கோடி வந்து ஊருக்கு வெளிய நில்லுங்க. நான் மார்த்தாண்டம் கூட்டிட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
அவன் சற்று தூரம் நடந்து வந்ததும், அந்தப் பாதையில் இருந்த தேநீர் கடையின் பின்புறம் ஒளிந்திருந்த இரு கிழவிகளும், “வாலே” என்றபடி சாலைப் பக்கம் வந்தனர்.
“அங்கன வந்து நிக்க சொன்னா, இங்கனயே நிக்கிறீக” என்றான்.
“சும்மயே அங்கன எத்தறை தேரம் நிக்கிறது. அதேன் இங்கன வந்து சூஸ்பொரி சாப்பிட்டோம்” என்றார் முத்தாச்சி.
கடைக்காரரைப் பார்த்துக் கையசைத்த தங்கராசு, “என்னா அண்ணே, மன்றம் கிட்டக்க ஒங்கள பாக்கவே முடியல” என்றான்.
பேரன் தலையில் தட்டி, “என்னா சோலிக்காக வந்திட்டு என்னா செய்ற? அந்தப் புள்ள என்னா சொல்லிச்சு, அத மொதல சொல்லுலே” என்றார் பேச்சிக்கிழவி.
சலித்துக் கொண்டான் தங்கராசு.
“என்னலே சலிச்சிக்கிற. எதுக்லே அந்தப் புள்ள கூப்பிட்டிச்சி”
“அதுக்கு என்மேல அபிப்பிராயம் எதுவும் கிடையாதாம்”
பேச்சிக்கிழவி, “வீட்டு வாசல்ல வச்சி சொல்லிட்டாள. அத சொல்றதுக்கு இங்கன ஏன் வரச் சொன்னாளாம்” என்றதும், மலர் அவனைக் கூப்பிட்ட காரணத்தைத் தங்கராசு சொன்னான்.
பேச்சி ஆச்சி, “லே அவ ஒன் வீட்டுக்கு வராளோ இல்லேயோ, தெரியாது. ஆனா ஒன்னய ஒன் வீட்லருந்து வெளியே அனுப்பிருவா” என்றார்.
“வேற என்னா சொன்னா?” என்றார் முத்தாச்சி.
“நான் மட்டும் அபிப்பிராயம்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சா எனக்கு உறக்கம் வராதாம். அந்தால கனவு வருமாம். கனவுல டூயட் வருமாம். டூயட் வந்தா அவுக வரனுமா. ஆனா அவுகளுக்கு அதுக்கெல்லாம் தேரம் இல்லையாம்” என்றான்.
“இது என்னா புதுசா இருக்குலே” என்றார் பேச்சிக்கிழவி.
“ஏன்… என்னா ஆச்சி?” என்றான்.
“அந்தப் புள்ள ஒளறுதுலே”
“போங்க ஆச்சி, அது தெளிவா இருக்கு. படிக்கனும்னு சொல்லுது”
பேச்சிக்கிழவி, “நாம வேண்டாம்னு சொன்னோமா… ஏன் கல்யாணம் கட்டிக்கிட்டு ஒங்க அம்ம படிக்கலயா? அந்தப் புள்ள தெளிவா ஒன்னய குழப்பிருக்குலே” என்றார்.
“என்னா சொல்றீக?”
“ஏம்லே, உறக்கமே வரலைனா கனவு எப்படிலே வரும்??”
“அட… ஆமா ஆச்சி” என்று அப்போதுதான் உணர்ந்தான்.
“கனவு வருமாம், டூயட் வருமாம், அதில இவ வருவாளாம். ஏன் இவளுக்கு வேற சோலியே இல்லேயா. ஆமா நீ கனவு கண்டா, அவ எப்படிலே படிக்க முடியாது”
“கனவுதான ஆச்சி. வுடுங்க”
“ஏம்லே, கனவுனாலும் லாசிக் வேண்டாமா” என்றார் பேச்சிக்கிழவி.
“செரி, இப்பம் என்னா செய்ய, போய் கேட்டுப் பாக்கவா?”
“இருலே, இப்பம் போய் கேட்டா சாலம் (பொய்யாக நடித்தல்) போடுவா. நாளே, அந்த புள்ள கனவுல நீ வந்தேனு… அதுவே வந்து ஒன்கிட்டக்க சொல்லும் பாரு”
“அதான் அபிப்பிராயம் இல்லேன்னு சொல்லுதே… அந்தால எப்படி?”
“அதெல்லாம் வரும்”
“வந்தாலும் அந்தப் புள்ள நெசம் சொல்லாட்டி”
“அது சொல்லாதுலே. நீதான் கண்டுபிடிக்கனும்”
“எப்படி ஆச்சி?”
“நாளே ஒன்னய பார்க்கிறப்ப, ஒன்கிட்ட சள்ளுசள்ளுனு விழுந்தா, அந்த புள்ள கனவுல நீ வந்திருக்கனு அர்த்தம்”
“இல்லன்னா?”
“ஒங்க அம்மைய பெண்ணு பார்க்கச் சொல்லிட்டு, எங்கள வுட்ரு” என்று பேச்சிக்கிழவி முத்தாச்சியைக் கூட்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார். “இருங்க ஆச்சி, நானும் வரேன்” என்று அவர்கள் பின்னே ஓடினான் தங்கராசு.
******************************
மலரும் இசக்கியும் அவர்கள் அறையில் தூங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். இசக்கி முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. அதைக் கண்ட மலர், “இசக்கி, ரெம்ப சந்தோசமா?” என்றாள்.
“ஆமா மலரு. நாளே அவுகள பார்க்கப் போறத நினைச்சா, எம்புட்டு சந்தோசமா இருக்கு தெரியுமா?!”
“இத்தறை சந்தோசத்துக்கு கனவுல டூயட் பாடி என்சாய் பண்ணிக்கோ”
“போ மலரு” என்று இசக்கி வெட்கப்பட்டாள்.
“அக்கா, அதும் நம்ம ஊரு ஸ்டைல்ல” என்று மலர் மேலும் பேச, “பேசாம படு மலரு” என்று அதட்டி இசக்கி படுத்துக் கொண்டாள். படுத்ததும் உறங்கியும்விட்டாள். மலரும் உறங்கிவிட்டாள்.
நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த இரவில், கொடிமலர் கனவில் வந்து தங்கராசு ‘டூயட்’ பாடினான். கனவு முடிந்து எழுந்தமர்ந்த மலர், அருகில் படுத்திருந்த அக்காவைப் பார்த்தாள். இசக்கி நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.
மலரும் பேசாமல் படுத்துத் தூங்க நினைத்தாள். ஆனால் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. ‘சே அம்புட்டுக்கும் காரணம் அவுகதான். நாளே அவுகள நல்லா ஏசனும்’ என்று தங்கராசுவைச் திட்டிவிட்டு, திரும்பவும் தூங்க முயற்சித்தபடி இருந்தாள்.
அபிப்பிராயத்தை அரங்கேற்றியவர்கள் அரவம் இல்லாமல் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். தனக்கு அபிப்பிராயம் இல்லவே இல்லை என்றவள்தான் அரற்றிக் கொண்டிருந்தாள்.

