Kathambari Novels
அத்தியாயம் – 2
“ராசு… ராசு” என்று அந்தத் தெருவில் ஓடி வந்த கொடிமலர், அவனருகில் சென்று விடுவோம் என்று தெரிந்ததும், “தங்கராசு” என்று அழைப்பை மாற்றிக் கொண்டாள் விவரமாக!
தன் பெயர் அழைக்கப்படும் சத்தம் கேட்டுத் திரும்பினான் தங்கராசு. அவன் பார்த்துவிட்டான் என்றதும் கொடிமலர் ஓட்டத்தை விட்டுவிட்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்.
அவன் பக்கத்தில் வந்தவள், “ஒங்க போனை அங்கனயே விட்டுட்டு வந்துட்டீக. அதான் கொடுக்கலாம்னு… இந்தாங்க” என்று நீட்டினாள்.
“அந்தால வந்து எடுத்திருப்பேன்ல”
“பரவாயில்லே” என்றவள், அவன் அருகிலிருந்த கார்-ஐ பார்த்தாள்.
“என்னா கார சகதியும் சாணங்கியுமா (சாணம்) வச்சிருக்கீக” என்று அவள் பேசும் போதே, “தங்கராசு” என்று மற்றொரு குரல் கேட்டது.
அந்தக் கணீரென்ற குரல் வந்த திசையைப் பார்க்காமலே, அவனுக்குத் தெரியும் அது யாரென்று! இருந்தும் திரும்பிப் பார்த்தான். கொடிமலரும் திரும்பினாள்.
இருசக்கர வாகனத்தில் நடுத்தர வயது பெண்மணி இருந்தார். அழகாக மடிப்பு வைத்துக் கட்டப்பட்டக் காட்டன் புடவை. உச்சி வகிடெடுத்து பின்னப்பட்ட கூந்தலின் பின்னல் இடையைத் தொட்டிருந்தது. கையில் தங்க நிறத்தில் ஒரு கடிகாரம்.
கண்களில் ஒரு கூலிங்கிளாஸ். காதிலும் கழுத்திலும் சிறுசிறு நகைகள். இவை எல்லாம் அவரை அத்தனை எளிமையானவராக, அதேசமயம் கம்பீரமானவராகவும் காட்டின.
அவர் தங்கராசு அம்மா என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அவருடைய ஒப்பனை அந்த அளவிற்கு சீராக இருந்தது.
பின்னே, பழவிளை ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியை அஞ்சுதம் என்றால் சும்மாவா!
அந்த ஊர் பிள்ளைகள் படிப்பிற்காக, பெண்களின் சிறு தொழிலுக்காக தங்கராசுவின் வருமானத்தில் பாதியைச் செலவழிப்பார். எனவே அவர் மீது ஊர் மக்களுக்கு அளப்பரிய மரியாதை இருந்தது.
அஞ்சுதம் மகனிடம், “இங்கன நின்னு என்னா செய்ற? எத்தறை மட்டம் (தடவ) சொல்றது, இப்படி வேனாவெயில (உச்சி வெயில்) நிக்காத, கெறக்கமா வரும்னு. போ” என்றார் கண்டிப்புடன்.
“செரி அம்ம” என்றான்.
“டவுனுக்குப் போயி, நோட்டுபுக்கு கடைல ஸ்கூல் புள்ளைகளுக்கு நான் சொன்னதை வாங்கிட்டு வந்திரு”
“செரி அம்ம” என்றான் மீண்டும்.
“அப்புறம்… லுங்கில போவாத. வீட்டுக்குப் போய் கார கொஞ்சம் சுத்தம் பண்ணிக்கிட்டு… வேற துணி உடுத்திட்டு போ”
“செரி அம்ம” என்று கிளம்ப ஆரம்பித்தான்.
கொடிமலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. சற்று நேரத்திற்கு முன், ஒரே ஒரு பக்கத் தாளைக் கொடுத்துவிட்டு, ஒரு புத்தகம் போடும் அளவிற்குப் பேசினான். ஆனால் இப்பொழுது அவனது பேச்சு, அந்தப் புத்தகத்தின் தலைப்பு அளவே உள்ளது என்று!!
அஞ்சுதத்தின் பார்வை இப்போது மலர்மீது விழுந்தது. “யே யாரு புள்ள நீ, வேல இல்லயா? இங்கன நின்னு பேசிக்கிட்டு இருக்க” என்றார்.
“இம்புட்டு தேரமா (நேரம்), நீங்களும் இங்கன நின்னுதான பேசிக்கிட்டு இருந்தீக. அப்பம் ஒங்களுக்கு வேல இல்லயா” என்று திருப்பி அடித்தாள்.
தன்னை, இந்த ஊர்ப் பிள்ளைகள் இப்படியெல்லாம் பேசாதே என்கின்ற சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தார் அஞ்சுதம்.
தங்கராசு மலருக்கு மட்டும் கேட்கும்படி, “ஏங்க எங்கம்ம எதுத்தால (எதிரில்) யாரும் இதுகணக்கா பேச மாட்டாக. சும்ம இருங்க” என்று சொல்லிவிட்டு காரில் ஏறிக் கிளம்பினான்.
ஏனோ அஞ்சுதமும் கொடிமலரும் ஒருவரை ஒருவர் முடிந்த மட்டும் முறைத்துக் கொண்டே கடந்து சென்றனர்.
***************************
ஒரு சமையலயறை, ஒரு படுக்கையறை, ஒரு வரவேற்பறை என்றிருந்த தன் வீட்டிற்குள் நுழைந்தாள் கொடிமலர். முன்னறையில் தன் அக்கா படுத்திருப்பதைக் கண்டதும், இப்போதெல்லாம் இவள் இப்படியே இருக்கிறாளே… ஏன் என்று நினைத்தபடி வந்தாள்.
‘இப்போதெல்லாம்’ என்றால்… இந்த இரு வார காலமாக. அதாவது இந்த ஊருக்கு இவர்கள் வந்ததிலிருந்து. ‘இவர்கள்’ என்றால்… இவள், இவளது அக்கா இசக்கியம்மாள் மற்றும் இவர்களின் தகப்பனார் செல்லதுரை.
பள்ளிப்படிப்போடு படிப்பை முடித்துக் கொண்டவள் இசக்கியம்மாள். படிக்க பிடிக்கவில்லை என்றாலும், வசதியின்மை ஒரு காரணமாகும்.
“ஏன் இசக்கி. இப்படி ஒருக்களிச்சி படுத்திருக்க?” என்றாள் மலர்.
“உறக்கச்சடவா இருக்கிட்டி. செரி, இன்னிக்கி சோலி எப்படி இருந்திச்சி”
“இன்னிக்குத்தான் இசக்கி, அதிய பணத்துக்கு ரீசார்ஜ் நடந்திச்சி” என்று சொன்னவளுக்கு தங்கராசுவின் முகம் வந்து போனது. “செரி, ராவைக்கு என்னா சமையல்” என்றாள் மலர்.
“அப்பமும், கிழங்கும். மலரு ஒசக்க துணி காய போட்டுருக்கேன், போய் எடுத்துட்டு வந்திரு. நான் சமைக்க போறேன்” என்று இசக்கி எழுந்தாள்.
‘செரி’ என்று எழுந்து மொட்டை மாடிக்குச் சென்று, துணிகளை எடுத்து கீழே இறங்கும் போதே, அவர்களின் தந்தை செல்லதுரை வேலையை முடித்துக் கொண்டு வந்திருந்தார்.
அவரின் வேலை என்ன?? மனிதர்களை எடை போடுவதுதான் தவறு, ஆனால் மனிதர்கள் வாங்கும் பொருள்களை எடை போடலாம். அவர் அந்த வேலையைச் செய்கிறார். அதுவும் அரசாங்கத்தின் உதவியோடு.
அதாவது, அவர் நியாய விலை கடையில் வேலை பார்க்கிறார்!
துணிகளை எடுத்து வரும் மலரைப் பார்த்தவர், “மலரு, சோலி முடிஞ்சு வந்தா அக்கடான்னு உட்காரா வேண்டியதான” என்றார் இதமாக.
“இசக்கிக்கு உறக்கச்சடவா இருக்குதாம். அதே”
“சும்மயே இருந்தா அப்படித்தானே இருக்கும்” என்றார்.
‘அப்பா ஏன் இப்படிப் பேசறாக’ என்று கொடிமலர் குழம்பினாள். கடந்த இரண்டு வாரமாக இருவரும் இப்படித்தான் இருக்கிறார்கள். முகத்தைப் பார்த்துப் பேசிக் கொள்வதில்லை. ஏன் என்று மலருக்குப் புரியவில்லை.
சற்றுநேரத்திற்குப் பின் இரவு நேரச் சாப்பாட்டிற்காக மூவரும் சேர்ந்து வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர். “மலரு, நாளே ஒங்க அக்காவா பெண் பார்க்க வர்றாக புள்ள” என்றார் செல்லதுரை.
மலர், இசக்கியைப் பார்த்தாள். இசக்கி… அவளுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். “என்னா அப்பா… வந்து பத்து நாளுதான ஆகுது. அதுக்குள்ள எதுக்கு?” என்றாள் மலர்.
“ஒங்க அம்ம இருந்தா” என்று தொடங்கி, அதைத் தொடராமல், “இப்பமே முடிச்சாதான் செரியா வரும். இந்த இடமும் ஒங்க அம்ம சொந்தக்காரக சொன்னதுதான்” என்றார்.
தாயில்லா பிள்ளைகளை, அவரால் இயன்ற அளவு பார்த்துப் பார்த்து வளர்த்தார்தான். எனினும் கல்யாணம், பிள்ளைபேறு என வரும்போது, தனியாக எல்லாம் பார்த்துக் கொள்ள, சமாளிக்க முடியுமா என்ற பயம் அவருக்கு எப்போதும் அதிகமாக இருக்கும்.
ஆதலால் என்றுமே அவர் சொந்த பந்தங்களை அனுசரித்து வாழ்வார். அவர்கள் சொல்லுக்குச் சில நேரங்களில் கட்டுப்படவும் செய்வார்!
“யாருப்பா பையன். இந்தூரா… வெளியூரா?” என்று கேட்டாள் மலர்.
“இங்கனதான். ரெம்ப நல்ல குடும்பம். ஊரில அவியகளுக்கு நல்ல பேரு இருக்கு. வசதி அதியம். ஆனா அவிய விருப்பட்டு வர்றப்போ, நாம ஏன் வேண்டாம்னு சொல்லனும்னு” என்று சொல்லி, கை கழுவச் சென்றார்.
பின் வந்து நின்றவர் மூத்த மகளைப் பார்த்து, “இசக்கி, நாளே நல்ல துணி உடுத்திக்கோ புள்ள” என்றார் தாயாக மாறி. ஆனால் அதற்கும் இசக்கியம்மாள் பதில் கூறாமல் இருந்தது, மலரைக் கொஞ்ச நஞ்சமல்ல நிரம்பவே குழப்பியது!
*********************************
சாலையோரத்தில் இருந்து நன்றாக உள்ளே தள்ளியே தங்கராசு வீடு கட்டப்பட்டிருந்தது. ஆனால் முற்றம் சாலை வரை நீண்டிருந்தது. அதில், அவன் செய்கின்ற தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் எல்லாம் கிடத்தி வைக்கப்பட்டிருந்தன.
அவன் வீடு பழமையின் பெருமைப் பேசியது. வீட்டிலுள்ள பொருட்கள் பணத்தின் செழுமை பேசின. வீட்டின் புறவாசலிலிருந்து செவ்வந்தி பூச்செடிகளின் தோட்டம் ஆரம்பித்தது. தோட்டம் முடிகின்ற இடத்தில் தென்னந்தோப்பு தொடங்கியது.
தென்னந்தோப்பிலிருந்து வருகின்ற இரவு நேரத்துக் காற்று, அப்படியே செவ்வந்திப் பூக்களை வருடிக் கொண்டு வந்து, வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த மூவரின் நாசிகளையும் தொட்டிருந்தது.
மூவரில் ஒருவன் தங்கராசு. மற்றவர்கள்… இரண்டு கிழவிகள். ஒருவர் ராசு அம்மாவைப் பெற்றவர் பேச்சியம்மாள்! ‘பேச்சிக்கிழவி’ என்று அவர் வயதுக்காரர்களால், ‘ஆச்சி’ என்று ராசுவாலும், மற்றவர்களாலும் அழைக்கப்படுவார்!!
மற்றொருவர் ராசு அப்பாவைப் பெற்ற முத்துலட்சுமி! ‘முத்தாச்சி’ என்று ராசுவால் அழைக்கப்படுவார்! அனைவர்க்கும் அவர் முத்தாச்சிதான்!!
பின் கொசுவம் வைத்துச் சேலைக் கட்டு. காதில் தடையம், கைகளில் பச்சைக்குத்தல், விசிறி மூக்குத்தி என்று அவர்கள் அக்மார்க் கிராமத்து ஆச்சிகள்!!
மூவரும் சாப்பாட்டு நேரத்தில் இருந்தனர். அவர்கள் முன்பு சுவரின் பாதியை அடைத்திருந்த ‘டிவி’ ஓடிக்கொண்டிருந்தது. அளவில் பெரிய அந்தத் தொலைக்காட்சியில் அவர்கள் மூவருமே பார்ப்பது இரண்டே இரண்டு நிகழ்ச்சிகள்தான்.
வேலை பார்க்கும் போது, வீடே அதிரும் சத்தத்துடன் தமிழில் நேஷனல் ஜியாக்கிரபிக்! இப்படி உட்கார்ந்திருக்கும் போது, ‘மியூட் மோடி’ல் பிபிசி ஆங்கிலச் செய்தி அறிக்கைகள். இப்போது ‘மியூட் மோட்’. ஏறக்குறைய படம் பார்த்துக் கதை சொல்லுக போலத்தான்!!
“ஆச்சி” என்றான் ராசு.
“லே, எரிசேரி (ஒருவகை கூட்டு) யானத்த (பாத்திரம்) கொண்டாந்து வச்சாச்சுலே. இப்பம் என்னா?” என்றார் பேச்சிக்கிழவி.
“காலெம்பற ரீசார்ஸ் கடைக்குப் போயிருந்தேன்”
“தெரியும்லே பணம் ஏறிருச்சி”
“அங்கன ஒரு புள்ளய பாத்தேன் ஆச்சி” என்று ஆரம்பித்தவன், அங்கே அவர்களுக்கிடையே நடந்த பேச்சுகளின் சாராம்சத்தைக் கூறினான்.
ஆச்சிகளுக்கு ஆச்சரியமாக இருந்தது. தங்கராசு இப்படி எந்தவொரு பெண்ணையும் பற்றி தங்களிடம் பேசியதில்லையே என்று!
ஆனாலும் பேச்சிக்கிழவி, “லே, நீ எண்ணிக்கைய எங்கன கூட்டனும்னு நினைக்க, ரசிகர் மன்றத்திலயா… இல்லே வீட்லயா” என்றார்.
“ஏன் ஆச்சி?”
“நீ பேசுனது மொத்தமும் அப்படித்தான் இருக்கு. மொதல அந்தப் புள்ள வீடு எங்கன இருக்குதுன்னு தெரியுமா?”
“ம்கும்”
“நெம்பர் வாங்கனியா??”
“ம்கும் ஆச்சி. பேர் மட்டும்தான் தெரியும். அதுகூட அதுவா சொல்லிச்சி. பிகாம் படிச்சிருக்கு. ஒத்துக்குமானு பயமா இருக்கு”
“அந்தப் புள்ளயே ஒத்துக்கிட்டாலும் ஒங்க அம்ம ஒத்துக்க மாட்டா, பேசாம கிட” என்றார் முத்துலட்சுமி.
“ஏன் முத்தாச்சி இப்படிப் பேசுறீக?” என்றான் சலிப்புடன் ராசு.
உடனே முத்தாச்சி, “அவதான ஒனக்கு படிக்காத புள்ளையா வேனும்னு பார்க்கிறா” என்றவர், பேரன் முகத்தைப் பார்த்ததும், “ஏலே ஒங்க அம்ம இன்னும் செத்த தேரத்ல வருவா. அவகிட்ட சொல்லு” என்று சொல்லி முடிக்கும் போதே வெளியில் வண்டிச் சத்தம் கேட்டது.
அஞ்சுதம் வண்டியிலிருந்து இறங்கி வீட்டிற்குள்ளே வந்தார். அவரின் முகத்தில் களைப்புத் தெரிந்தது. தன் அறைக்குள் நுழைந்து முகம் கை கால்களைக் கழுவி விட்டு வெளியே வந்தவர், “தங்கராசு நாளே ஒனக்கு பெண்ணு பார்க்கப் போறோம்” என்றார்.
தங்கராசுவை, ‘உன் மனசில இருக்கத சொல்லு’ என்பது போல் அவன் இடுப்பில் குத்திக் கொண்டிருந்தார் பேச்சிக்கிழவி. இருந்தும் அவன் அதைக் கண்டுகொள்ளாமல், “செரி அம்ம” என்றான்.
“இப்பம் பார்த்திருக்கிறப் புள்ளைக்கு, அவுக வீட்ல வெரசா கல்யாணம் கட்டி வைக்கனும்னு நினைக்கிறாக. அதனால இந்த இடம் முடிஞ்சிரும். பெண்ணு வீட்டில ரெம்ப வசதி கிடையாது. ஆனா இவனவிட அதியமா படிச்சிருக்கு” என்றார் அஞ்சுதம்.
அந்த ‘படிச்சிருக்கு’ என்ற வார்த்தையில் தங்கராசுவின் கண்முன்னே கொடிமலர் முகம்தான் வந்து போனது.
பேச்சிக்கிழவி, “ஒங்கிட்ட வசதிய பத்திலாம் நாங்க கேட்டோமாட்டி. இந்த பயலுக்குப் பிடிக்குதானு மட்டும் பாரு” என்றார். முத்தாச்சியும், “ஆமாட்டி அப்படி மட்டும் பாரு” என்றார்.
“பாக்கத்தான போறோம், முடிவே பண்ணிட்ட மாதிரி பேசாதீக” என்று சொல்லி… மகனிடம், “தங்கராசு, நாளே லுங்கி உடுத்தாத. இதுல புதுத் துணி இருக்கு, குளிச்சிட்டு இதயே போட்டுக்கோ. காலெம்பற வெரசா கிளம்பனும். செரியா” என்று ஒரு பையைக் கொடுத்தார்.
“செரி அம்ம” என்று வாங்கிக் கொண்டான்.
மகனுடைய திருமணப் பேச்சுகளில், படிப்பைச் சுற்றியே அஞ்சுதத்தின் பேச்சுகள் இருப்பதற்குக் காரணம் அவரது கல்யாணம்!!
அஞ்சுததுக்கு… அவரது தாய்மாமா மற்றும் அத்தை முத்துலட்சுமியின் மகனான செந்திலைத் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். செந்தில் நல்லவர்தான். ஆனால் படிக்காதவர். அதனால் அஞ்சுதத்திற்கு திருமணத்தில் விருப்பமில்லை. அதை வெளியிலும் சொல்லவில்லை.
அமைதியாக திருமணத்தை ஏற்றுக் கொண்டார் அஞ்சுதம். அதேபோல் திருமண வாழ்வையும் ஏற்றுக் கொண்டார். ஆனால் ஒன்று… கணவரின் படிப்பறிவில்லாத தன்மையைக் குத்திக் காட்டிக் கொண்டே இருந்தார். இதனால் அடிக்கடி அவர்களுக்குள் வாக்குவாதங்கள் வந்தன.
ஒரு கட்டத்தில் இவர்கள் சண்டை பெரியவர்களுக்குத் தெரிய வந்தது. அந்தச் சமயத்தில் தங்கராசுவும் பிறந்திருந்ததால், அவர்களுக்கு என்ன செய்யவென்று தெரியவில்லை… யோசிக்கவும் முடியவில்லை.
இருந்தாலும், ‘செந்திலைத் திருமணம் செய்ய விருப்பமில்லையென்று அஞ்சுதம் சொல்லிருக்கலாமே’ என்ற கோபம் ஆச்சிகளுக்கு இருந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கும் அஞ்சுதத்திற்கும் இடையே சாதாரண பேச்சுகளைக் குறைத்துவிட்டது.
அஞ்சுதத்திற்கு ஆசிரியர் வேலை, மேற்படிப்பு என்ற காரணங்களால், தங்கராசுவைக் கவனிக்கும் பொறுப்பு முழுதும் கிழவிகளிடம் வந்தது. செந்தில் தோட்டத்தை, தோப்புகளைப் பார்த்துக் கொள்வார். மகன் வந்தபின்னர் வாக்குவாதங்கள் பெரிதாக வரவில்லை அஞ்சுதத்திற்கும் செந்திலுக்கும் இடையே.
இப்படியே அவர்கள் நாள்கள் கடந்தன.
அஞ்சுதத்தின் கணவர் செந்தில் அவரது நாற்பதாவது வயதில் சாலை விபத்து ஒன்றில் இறந்து போனார். தங்களது இளம் வயதிலே கணவரை இழந்தவர்களான பேச்சியம்மாள் முத்துலட்சுமிக்கு, இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பெரும் சோகம் அவர்களுக்கு.
அஞ்சுதமும் செந்திலின் இழப்பைத் தாங்கிக் கொள்ளவே முடியாமல் தவிதவித்து வந்தார். என்னதான் திட்டிக் கொண்டே வாழ்ந்திருந்தாலும், கணவரின் இறப்பு அவருக்குப் பெரும் கவலையை, வெறுமையைத் தந்திருந்தது. அவரது வாழ்வே என்னவோ போலானது.
அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் தேவைப்பட்டன. அம்மாவிடமிருந்து, சொந்த அத்தையிடமிருந்தும் அதை அவர் எதிர்பார்த்தார். ஆனால் அது அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை.
உண்மை என்னவென்றால் அவர்களுமே யாராவது தேற்ற வேண்டிய நிலையில் இருந்தார்கள். திடீரென அப்பா இறப்பால் வருந்தி, வாடும் தங்கராசுவைப் பார்த்துக் கொள்ள வேற வேண்டும். எனவே அவர்களால் அஞ்சுதத்தை கவனிக்க முடியவில்லை.
ஆனால் அஞ்சுதத்திற்கோ இவர்கள் இதுமாதிரி நேரத்தில் ஆறுதலாக இல்லாமல் இருக்கிறார்களே என்று கோபம் உண்டானது.
இது அஞ்சுதத்திற்கும் ஆச்சிகளுக்கும் இடையே சாதாரண பேச்சுகளை இல்லாமல் செய்துவிட்டது. அவர்களுக்கு இருந்த கோபத்தால் வாதாடல் செய்வது போலவே பேச்சுகள் மாறிப்போயின.
நாள்கள் உருண்டோடியன.
மெல்ல மெல்ல இழப்பிலிருந்து அவர்கள் அனைவரும் மீண்டு வந்தனர். ஆச்சிகளுக்கு தங்கராசுவை வளர்க்கும் பொறுப்பில் பொழுது போனது. மேலும் தோட்டத்தை, தோப்புகளைப் பார்த்துக் கொண்டனர். அஞ்சுதம் படிப்பு, பள்ளி என்றிருந்தார். வீட்டு நிர்வாகம், தொழில் கணக்கு வழக்கு பார்ப்பது என்ற பொறுப்புகளை எடுத்துக் கொண்டார்.
இப்படி நகர்ந்த நாள்களில்… ராசுவிற்கு பள்ளி செல்லும் வயது வந்தது!
கணவர்தான் படிக்கவில்லை, மகனையாவது படிக்க வைக்க வேண்டும் என்று அஞ்சுதம் நினைத்தார். ஆனால் ராசுவிற்குப் படிப்பு சுத்தமாக ஏறவில்லை. அஞ்சுதம் அவனை அடித்தும், திட்டியும் பார்த்தார். அதிகம் கடுமையாகவும் நடந்து பார்த்தார். இருந்தும் எந்தப் பலனுமில்லை!
ஒரு கட்டத்திற்கு மேல் ஆச்சிகள் இருவரும் அஞ்சுதத்தின் கண்டிப்பை அனுமதிக்கவில்லை. அஞ்சுதம் நடந்து கொள்ளும் விதத்தில், பேரனின் மனம் பாதிக்குமோ என்று அவர்களுக்குப் பயம். இவ்வளவு கண்டிப்பு நல்லதல்ல… வேண்டாம் என்று சொன்னார்கள்.
அவர்கள் சொல்வது சரியென அஞ்சுதத்திற்கு தோன்றியது. ஏனெனில் தங்கராசுவிற்கு அவரிடம் ஒதுக்கம் வந்திருந்தது. அவனிடம் இவ்வளவு கடுமை காட்டியிருக்க கூடாதென்று தோன்றியது. அதனால் அவனைப் படிப்பிற்காகத் திட்டுவதை நிறுத்திவிட்டார்.
நாள்கள் சென்றன.
தங்கராசு படிப்பைத் தொடராதது, அம்மாவிடமிருந்து அவன் விலகியே இருந்தது… என்றானதில் அஞ்சுதத்தின் மனம் சோர்ந்தது!!
மனமாற்றம் வேண்டுமென்று ஊர் பிள்ளைகளின் படிப்பு, பெண்களின் சிறு தொழில்கள் என்று விடங்களில் அவரை ஈடுபடுத்திக் கொண்டார். இது அவருக்கு ஊருக்குள் மரியாதையை, மதிப்பைப் பெற்றுத் தந்தது. அவரிடம், அவர் பேசும் விதத்தில் ஒரு ஆளுமை வந்திருந்தது.
வீட்டிலும் அது வெளிப்பட்டது. வீட்டின் முடிவுகள் அவர்தான் எடுப்பார். அவர் முடிவுகள் சரியாக இருந்ததால் ஆச்சிகள் ஏதும் சொல்வதில்லை. என்னவொன்று பேரனிற்காக அஞ்சுதத்தின் முடிவுகளில்… அவனுக்குப் பிடிக்கின்றதா என்று பார்த்துக்கொள் என்பார்கள்.
தங்கராசு வளர்ந்ததும் தோட்டம், தோப்புக்களைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு…. பூக்களைச் சந்தைப்படுத்துதல், மாடு வளர்ப்பு, பால்பண்ணை என்று தொழிலை விரிவடையவும் செய்தான்.
திருமண வயதிற்கு தங்கராசு வந்ததும், அஞ்சதம் அவனுக்குப் பெண் பார்க்க ஆரம்பித்தார். படிக்காத மகனுக்குப் படித்த ஒரு பெண்ணைப் திருமணம் செய்து வைத்தால்… செந்திலும் அவரும் வாழ்ந்தது போல தங்கராசுவின் வாழ்வும் ஆகிவிடுமோ என்று பயப்படுவதால் படிக்காத பெண்ணையே பார்க்கிறார்.
அப்படியொரு பெண்ணைப் திருமணம் செய்து வைத்தால்தான், மகன் நிம்மதியாக இருப்பான் என்று நினைக்கிறார். ஆச்சிகளோ பேரனுக்குப் பிடித்திருக்க வேண்டும்… அதிகம் வேண்டாம் பள்ளி படிப்பை முடித்த பெண்ணாக இருக்க வேண்டும் என்கின்றனர்.
புதுத்துணியை மகனிடம் கொடுத்துவிட்டு அவரின் அறைக்குள் சென்ற அஞ்சுதம், கணவரின் புகைப்படத்திற்கு முன்நின்று, “என் பையனக்கூட எங்கூட சேர விட மாட்டீகாக. ரெண்டு வார்த்தைக்கு மேல அவனும் பேச மாட்டேக்கான். இத்தனை பேரு இருந்தும் ஒத்தேல இருக்கிற மாதிரி இருக்கு” என்று புலம்பினார்.
இன்றுமட்டுமல்ல, அடிக்கடி இவர் இப்படி வருத்தப்படுவார். இதையும் அம்மாவிடமோ, அத்தையிடமோ பகிர்ந்து கொள்ள மாட்டார். எதுவும் என்னைப் பாதிக்கவில்லை என்பது போலவே காட்டிக் கொள்வார்.
அதுபோல் ராசுவிற்கு… சிறுவயதிலிருந்து ஆட்சிகளின் அரவணைப்பில் மட்டும் வளர்ந்தவனுக்கு, அம்மாவிற்கு அவன் மேல் பாசம் இருக்கிறதா, இல்லையா என்று தெரியாமலே இன்று வரை இருக்கிறான். அஞ்சுதம் மகனிடம் பேசுவது எல்லாம் அறிவுரைகள் போலவே இருக்கும்.
அதனாலும், சிறுவயதில் அம்மா காட்டிய கண்டிப்பாலும் அவனுக்குள் இப்படி ஒரு கேள்வி இருக்கிறது.
அவனுக்கு அம்மாமீது அவ்வளவு அன்பு இருக்கிறது. வெளிக்காட்டாமல் இருக்கின்றான். அம்மாவின் படிப்பு, அவரது நேர்த்தியான ஆடைகள், தெளிவான பேச்சுகள் மீது தங்கராசுவிற்கு மிகப்பெரிய ஈர்ப்பு உண்டு. மறைமுகமாக அதை ரசிக்கவும் செய்வான்.
ஆதலாலே அம்மா பேச்சுக்கு அவனிடம் மறுபேச்சே கிடையாது. அவன் விருப்பம் என்னவென்று அவரிடம் சொல்லமாட்டான். படிப்பைத்தவிர, வேறெதிலும் அம்மாவின் விருப்பத்தை அவன் மீறியது இல்லை! மீறவும் அவன் நினைத்ததில்லை!
அடுத்தநாள்! எளிமையாகக் கிளம்பி நால்வரும் பெண் வீட்டிற்கு அருகே வந்தடைந்தனர். அந்த நேரத்தில் கைப்பேசி அழைப்பு வந்ததால், மற்ற மூவரையும் முதலில் உள்ளே செல்லச் சொன்னார் அஞ்சுதம்.
வீட்டின் கதவு திறந்திருந்தாலும், உள்ளே செல்வதற்கு சங்கோஜப்பட்டு, கதவைத் தட்டினான், கிழவிகள் சகிதமாகச் சென்ற தங்கராசு!
சமையலறையில் இருந்தார்கள் கொடிமலரும், அவள் தந்தையும். கதவு தட்டப்படும் ஓசை கேட்டதும், “மலரு… மாப்பிள்ளை வீட்டுக்காரகள இருப்பாங்க. அவிய வீட்டுல பெரியவுக எல்லாம் பெண்ணுகதான். நீ போய் பாரு புள்ள” என்றார் செல்லதுரை.
“செரிப்பா” என்ற மலர், வெளியில் வந்து பார்த்தாள். அங்கே தங்கராசு நின்றிருந்தான். அவனைப் பார்த்ததும் அவளுக்குப் புரிந்துவிட்டது, அக்காவைப் பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளை இவன்தான் என்று.
இருந்தும், சிறு கோடாய் தங்க சரிகையுள்ள வெள்ளை வேட்டி, கட்டம் போட்ட அரைக்கை சட்டை, கீற்று போல் சந்தனம், எண்ணெய் இல்லாத கேசம் என்று நின்றவன், மலரின் கண்களுக்கு, ‘கிளியோபாட்ராவின் ஆண்பால்’!!
அக்காவின் பெண் பார்க்கும் படலத்தில், தங்கைகள் என்ன அலங்காரம் செய்வார்களோ… அதுமாதிரி மிதமான அலங்காரம் செய்திருந்தாள்.
அதைப் பார்த்ததும் ராசு, “ஏங்க நீங்கதானா? எனக்குத் தெரியாதுங்க. எங்க அம்ம படிச்ச புள்ளையப் பாத்திருக்கேன்னு சொன்னாக. இம்புட்டு படிச்சவுகனு நெனக்கலங்க. ரீசார்ஸ் கடைல பார்த்தப்பவே ஒங்க மேல ஒரு அபிப்பிராயம் இருந்திச்சிங்க.
நீங்க, ஒங்க படிப்பச் சொன்னதும், நான் பேக் அடிச்சிட்டேன். அந்தால எங்க அம்ம என்னா சொல்வாகளோனு பயம் வேற. நேத்து ராவைலகூட எங்க கிழவிங்ககிட்ட ஒங்கள பத்திதான் பேசிக்கிட்டு இருந்தேன். நீங்க வேணா கேட்டுப்பாருங்க” என்றான்.
முறியப் போகும் கிளை என்று தெரியாமல், கூட்டினுள் முட்டையிட்டு வைத்திருக்கும் பறவை போல… படபடவென பேசியிருந்தான் ராசு!!

