Kathambari Novels
அத்தியாயம் – 1
தமிழகமெங்கும் கிளைகளைப் பரப்பிக் கொண்டிருந்த ஒரு அலைபேசி சேவை நிறுவனம், தங்களது அடுத்தக் கிளையை அந்தக் கிராமத்தில் நிறுவியிருந்தது.
கிராமத்தில் இருக்கின்ற ‘பாலிடெக்னிக்’ கல்லூரியைக் குறிவைத்தே இந்தக் கிளையை நிறுவனம் தொடங்கியிருந்தது. அச்சிறு கிளையின் வெளிப்புறச் சுவரில், விலைச்சலுகை என்னென்ன உள்ளன என்பதைக் கூறும் விளம்பர வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
வாசகங்களை மெல்ல மெல்ல வாசித்தபடி நின்றான் திருமண வயதில் இருந்த அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன். முதலில் கிராமம் என்றால் எந்தக் கிராமம்… அதன் பெயர் என்ன?
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பழவிளைதான் அந்தக் கிராமம். நாஞ்சில் நாட்டின் வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கத்தையும் பின்பற்றும் ஊர்களில் இதுவும் ஒன்று. குடியிருப்புகள் மிகக் குறைந்த அளவிலே இருக்கின்றன இங்கே.
பட்டணத்துப் பழக்க வழக்கங்களுடன் முழுவதுமாக ஒட்டிப் போகாமல் இருக்கும் கிராமத்து மக்கள். ஆதலால் நாஞ்சில் நாட்டின் பேச்சுவழக்கு அவர்கள் பேச்சில் இன்னும் ஒட்டியிருந்தது. ஆனால் படித்தவர்களிடம் அந்தப் பேச்சுவழக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
இந்தப் பழவிளைக் கிராமத்து இளைஞன்தான் விளம்பர வாசகங்களை வாசித்துக் கொண்டிருந்தவன். இன்னும் அவன் வாசித்தபடி இருந்தான். மெதுவாக வாசிக்கட்டும்; அதற்குள் அவனைப் பற்றி சில வாசகங்கள்.
நவீன சிகையலங்காரம் என்று கிராமத்தில் வெட்டி விடுவார்களே ஒரு ‘ஹேர் கட்டு’… அந்த வெட்டுக்குள் சிக்கியிருந்தது, அவன் கேசம்!
கண்களில் பெரும் விலை மதிப்பில் கண்ணாடி. ஆனால் கால்களிலோ இரப்பர் செருப்பு. இடது கையில் உலகத்தின் முன்னணி நிறுவனத்தின் மணிக்கடிகாரம். ஆனால் இடையிலோ உள்ளூர் நிறுவனத்தின் கட்டம் போட்ட லுங்கி. அதற்கு இணையாக மேல்சட்டை, அந்தச் சட்டைக்குத் துணையாக கழுத்தில் ஒரு துண்டு போடப்பட்டிருந்தது.
கையில் சுற்றிக் கொண்டிருக்கும் கார் சாவியில் பொறிக்கப்பட்டிருந்த நிறுவனத்தின் முத்திரை கார் விலையைக் கொட்டமடித்தது. அந்தக் கொட்டத்தின் சத்தத்தைக் கேட்டால், காரின் விலை கால் கோடியை எட்டித் தொட்டுவிட நினைக்கும் லகரங்களின் மதிப்பில் என்றது!!
இப்போது அந்த இளைஞன் சுவரின் வாசகங்களை வாசித்து முடித்து, அந்தக் கிளையின் பெயர்ப் பலகையைப் பார்த்தான்.
கைப்பேசி சேவை நிறுவனம் அந்தக் கிளைக்கு வைத்த பெயர் ஒன்று. அதற்கு விளம்பரம் செய்ய செலவழித்த தொகை வேறு பல நூறுகள். ஆனால் கிராமத்து மக்களுக்கு… அது வெறும் ‘ரீசார்ஸ் கடை’. அதுவே போதுமென அந்த அளவிலேயே முடித்துக் கொண்டார்கள்.
இளைஞன் இப்போது அந்த ‘ரீசார்ஸ் கடை’ கண்ணாடிக் கதவுகள் முன் யோசித்தபடி நின்றான். என்ன யோசிக்கின்றான்? எல்லாருக்கும் வரும் சந்தேகம்தான்!! கதவைத் தள்ளவா… இழுக்கவா என்றுதான்!!
‘செரி, தள்ளவே செய்வோம்’ என்ற முடிவிற்கு வந்து, தள்ளிக் கொண்டு கடைக்குள் நுழைந்தவன், “என்னா ஒரே அவயமா இருக்கு??” என்று முணுமுணுத்தபடி கடையைச் சுற்றிப் பார்வையைச் சுழல விட்டான்.
புதிய கடையல்லவா… அந்த ஆர்வத்தில்!!
மிகக் குறைந்த நீள, அகலங்களை கொண்ட அறை. கிராமத்தினரை கவர்ந்திழுக்க நினைத்து ஆரஞ்சு, ஊதா நிறங்களில் சுவரின் பூச்சுகள் அடிக்கப்பட்டிருந்தன. இன்னுமே வண்ணங்களின் வாசனை இருந்தது.
கடையின் அறைச் சுவர்களை அலங்கரிக்க நூலில் வண்ண வண்ண ஊதுபைகள் (balloon), தாள்கள் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தன.
கணநேரத்தில் இவற்றைப் பார்த்து முடித்து, பார்வையை கீழிறக்கிக் கொண்டு வந்தவன், இளைஞி ஒருத்தி நிற்கும் இடத்தில் நிறுத்தினான். பின் அவளது எதிரே நின்ற பெரியவரிடம் பார்வையை நகர்த்தினான்.
பெரியவருக்கும் அந்தப் பெண்ணிற்கும் இடையே பெரிய வாக்குவாதம் நடந்திருக்கும் போல தெரிந்தது. அவர்கள் உடல்மொழி அதை நன்றாக வெளிப்படுத்தியது. உள்ளே வரும்போது கேட்ட சத்தம் அதனால்தான் என்று புரிந்துபோனது அவனுக்கு.
அவனைப் பார்த்ததும் வாக்குவாதத்தை நிறுத்தி இருந்தனர்.
அப்பெண் பற்றி அவனுக்குத் தெரியாததால், தெரிந்தவரான அந்தப் பெரியவரிடம் “என்னா பிரச்சனை தாத்தா” என்றான் உரத்தக் குரலில்.
அதற்கு அப்பெண், “என்கிட்டே சொன்ன மாதிரி அவுககிட்டயும் அவயம் போட்டு சொல்லுங்க” என்றாள் அவனுக்கு இணையான குரலில்.
குரல் வந்த திசையில் தலை திருப்பி பார்த்தவன், ‘அவயம் மொத்தமும் இந்த புள்ளகிட்டருந்துதான் வந்திருக்கும் போல’ என்றே நினைத்தான்.
பெரியவர், “பிரச்சன ஒன்னும் இல்லப்பா. என் பயல்(மகன்) இந்த போன் பொட்டிய வாங்கித் தந்திட்டு ஊருக்குப் போயிட்டான். ரெண்டு நாளா பணம் போட்டு அந்தப் பயல்கூட பேசிறலாம்னு பாக்குறேன். இந்தப் பெண்ணு என்னடானா பேச வுடமாட்டீக்கு. என்னான்னு கேளு?” என்று, தன் ஊர்க்காரனான அவனிடத்து முறையிட்டார்.
அவன் அந்தப் பெண்ணைப் பார்த்தான். குளிரூட்டப்பட்ட அறையின் உள்ளே நின்றுகொண்டு, அவள் கொதித்துக் கொண்டிருந்தாள்! அந்தக் கொதிநிலை கொடுக்கும் வெப்பத்தில்… எண்ணெய் பாத்திரம் வைத்து முறுக்கே பிழிந்து விடலாம் போலிருந்தது!!
அந்தப் பெண்ணிடம் பதில் எதிர்பார்த்து பலனில்லை என்று நினைத்து, பெரியவரிடமே திரும்பி, “நீங்களே சொல்லுங்க” என்றான்.
“தம்பி, நான் போன் விளிச்சப்ப… இந்தப் பெண்ணு வந்து பணமில்லேனு சொல்லிட்டுப் போகுது” என்றதும்… அவன் திரும்பி, ‘என்ன பிரச்சனை?’ என்று கேட்பது போல் அவளைப் பார்த்தான்.
‘என்கிட்டே எதுவும் கேட்காதீக. ஏற்கனவே நான் ரெம்ப பேசிட்டேன்’ என்று இருந்தது அவளது சிடுசிடுத்த முகம். ஆனால் எண்ணெயின் சூடு குறைந்திருந்தது. அதிரசம் மட்டுமே போட்டு எடுக்க முடியும்!!
திரும்பவும் அவன் அந்த வயதானப் பெரியவரைப் பார்த்து, “எம்புட்டு (எவ்வளவு) பணம் போட்டீகனு சொல்றீகளா?” என்று கேட்டான்.
“ஒரு ரெண்டாயிரம் வரைக்கும்” என்றார் உத்தேசமாக.
“எங்கன போய் போட்டீக, இங்கனயா… டவுன்லயா?”
“இங்கன எங்க தம்பி பேங்கு இருக்கு, டவுன் பேங்குல போய் பணம் போட்டேன். அந்தாலயும் (அப்புறம்) கணக்கில பணம்மில்லேனு இந்தப் பெண்குட்டி வந்து பேசுது. இப்பம் என்னா செய்ய” என்றார் கோபமாக.
நவீன தொழில்நுட்ப மழையில் நனையாமல், பழமையின் பெருமைக் குடையைப் பிடித்து நிற்கும் பெரியவர் பேசினார்! பழமை என்றாலும் பெருமை உண்மையல்லவா! எனினும் குடையை மடக்கச் செல்லாமல், அவரை மழையில் எப்படி நனைய வைக்கவென்று தெரியாமல் அந்த இளைஞன் நின்று கொண்டிருந்தான்!!
அந்தநேரம் அந்தப் பெண் பல்லைக் கடித்துக் கொண்டு, “அது நானே இல்லே” என்றாள்.
அவர்கள் இருவருக்கும் நடந்திருக்கும் வாக்குவாதத்தை நினைத்துப் பார்த்தவனுக்கு மென்முறுவல் வந்தது. அவன் முறுவலைக் கண்டவள், தன் முறுக்கலைக் குறைத்துக் கொண்டு… அவனைப் பார்த்தாள்.
எண்ணெயின் சூடு மிகவும் குறைந்துவிட்டது. பாத்திரத்தை இறக்கி விடுவதே உசிதம்!!
அதற்குள் அந்தப் பெரியவர், “இப்பம் என்னா செய்ய” என்றார் மீண்டும்.
“வாங்க இப்படி” என்று அவர் கைப்பிடித்து அழைத்து வாசலை நோக்கி நடந்தவன், “நீங்க போங்க தாத்தா, நான் அந்த பெண்கிட்ட பேசி, செரி செஞ்சி ஒங்களுக்கு செத்த தேரத்தில போன் விளிக்கிற மாதிரி ஏற்பாடு பண்றேன்” என்று வாக்குறுதி அளித்தான்.
அவரும் அவன் கூறிய வாக்கில் நம்பிக்கை கொண்டு சென்றுவிட்டார்.
அவன் இதைச் செய்ய எடுத்துக் கொண்ட நேரத்தில், அவள் பார்வை அவனை அளந்து முடிந்துவிட்டிருந்தது. அவளின் அளவீட்டின் முடிவில், ‘அலுக்கு பிலுக்கு (பந்தா) காட்ற பயலோ’ என்றே நினைத்தாள்.
இன்னொன்றுகூட அவளுக்குத் தோன்றியது. அது பாரீஸின் பட்டணத் தன்மையையும், பழவிளையின் பட்டிக்காட்டுத் தெனாவட்டையும் ஒருங்கே பிரதிபலிக்கிறது அவன் தோற்றம். ஒரே வரியில் அவனுடையத் தோற்றத்தைப் பற்றிச் சொன்னதற்கு… அவளுக்கொரு நன்றி!
அப்பெரியவருடன் பேசியதில் அவளுக்குத் தொண்டை வறண்டிருப்பது போல் தெரிந்தது. கொண்டு வந்திருந்த தண்ணீரை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தாள். வாசலிலிருந்து திரும்பியவன், அவள் தண்ணீர் குடித்துக் கொண்டு நிற்பதைப் பார்த்தான்.
இப்பொழுது அவளைப் பற்றிய அவனுடைய அளவீடு ஆரம்பமானது.
மிதமான நீளத்தில், அதேசமயம் நல்ல அடர்த்தியான கூந்தல்! அதையும் பின்னல் போட்டு நெளி வளையத்தில் (rubber band) திணித்துக் கட்டிப் போட்டிருந்தாள். மின்மினிப் பூச்சி போன்ற கண்கள்.
தலைகீழாகப் போடப்பட்ட கேள்விக்குறி போல், ‘பொட்டும்’, ‘மூக்கும்’. கேள்விக்குள் சிறு ஓட்டை இருப்பது போல் மூக்கின் மூக்குத்தி. பருவ வயதைத் தாண்டியதைக் கூறும் கன்னத்துப் பருக்களின் தழும்புகள்.
சீரான மடிப்புகள் வைத்து தாவணி அணிந்திருந்தாள். இம்மியளவும் இடைவளைவு தெரியாமல் இருக்க வேண்டி, தாவணி முந்தானையால் இடையில் அவளது அளப்பரிய மெனக்கெடல் தெரிந்தது.
அந்த வளைவில்… அவன் பார்வை தேங்கி நின்றது!
சற்று நேரம்தான்! நொடிக்குள் சுதாரித்தவன். ‘என்னா நினைப்பாளோ’ என்று எண்ணி, அறையின் வேறுபக்கமாகப் பார்வையைத் நகர்த்திக் கொண்டு வந்தான்.
அவனுக்கு நன்றி சொல்ல அவசியமில்லை. ஏனெனில் அவனுக்காகவே அவன் அத்தனை மெனக்கெடல் செய்திருக்கிறான்! அதனால்!!
அளவீட்டின் முடிவில் அவன் நினைத்தது, ‘ம்ப்ச் இத்தறை (இத்தனை) வித்தாரமா(அழகு) இருக்காளே, அம்மைக்கு ஏன் இதுமாறி பெண்ணு கண்ணில படமாட்டிக்கு’ என்றே! அவன் தாயார் அவனுக்குப் பெண் பார்த்துக் கொண்டிருப்பதால்… அவனுக்கு இப்படித் தோன்றியது.
தண்ணீர் குடித்து முடித்தவள் அவன் நிற்பதைக் கண்டு, “ஏங்க, அங்கன போய் ஒட்காருங்க” என்று ஒரு இருக்கையைக் காட்டினாள்.
அவள் சொன்னவுடன், அவன் சென்று அமர்ந்து கொண்டான். அவளும், அவனின் எதிரில் அவளுக்காகப் போடப்பட்டிருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள். இருவருக்குமிடையே ஒரு அடி அகலத்தில் சிறு கண்ணாடி மேசை இருந்தது.
“ஊருக்கு புதுசா?” என்றான்.
“ம்ம்ம். ஒங்களுக்கு எவ்வளவுக்கு ரீசார்ஜ் பண்ணனும்” என்று, அடுத்த வாடிக்கையாளர் என்ற ரீதியிலே அவனைப் பார்த்தாள்.
அவளது கேள்விக்குப் பதிலாக ஒரு தாளை எடுத்து நீட்டினான். அதில் தமிழில் பெயர்களும், அதற்கு நேரே இலக்கங்களும் எழுதியிருந்தது.
“இதில இருக்க நெம்பருக்கெலாம்” என்றான் அத்தாளைச் சுட்டிக்காட்டி.
‘ஐயோ இத்தனை பேருக்கா!!’ என்று நினைத்தவள் “ஒங்க வீட்ல ரெம்ப ஆட்களோ” என்றாள் அவனை வாடிக்கையாளர் இடத்திலிருந்து சற்றே நகற்றி வைத்து!!
“எடக்கா பேசாதீக. வர்ற வழியில ஊர்காரகக் கேட்டாக. ஒரே ஊரில இருக்கிறோம்னு, நானும் செரினு சொல்லிட்டேன். அத்தறை பேருக்கும் ரீசார்ஸ் செஞ்சிடுங்க. அப்படியே இப்பம் போன தாத்தாக்கும்” என்றான் வெள்ளை மனதுக்குச் சொந்தக் காரனாய்!
“அது ரீசார்ஸ் இல்லே. ரீசார்ஜ்” என்று அவள் அவனைத் திருத்தினாள். வாடிக்கையாளரை எதற்குத் திருத்த நினைக்க வேண்டுமென்ற கேள்வி, கண்டிப்பாக இந்த இடத்தில் வருகிறது.
“நீங்க பாடம் எடுப்பீகளோ?” என்றான்.
“இல்லே”
“நீங்க பாடம் எடுக்கிறப்ப படிச்சிக்கிறேன். இப்பம் ரீசார்ஸ்தான்” என்று சொன்னான், படிப்பது பச்சையாகப் பாகற்காயைப் பல்லுக்கடியில் வைத்துக் கடிப்பதற்குச் சமம் என்பது போல்!!
‘செரியான எக்காளம்(எடக்கு) பிடிச்ச பயலா இருப்பான் போல’ என்று எண்ணியபடி தன் கடமையைச் செய்ய ஆரம்பித்தாள். “ஏங்க, எல்லா நம்பருக்கும் எவ்வளவுக்குப் பணம் போட்டு விடனும்?” என்றாள்.
“ஒரு நூறு ரூபாய், இல்லே இல்லே இருநூறுக்கு போட்டு விட்ரீகளா…”
அவள் வேலைக்குச் சேர்ந்த இந்த இரண்டு நாள்களில் இதுவே உச்சபட்ச மறுஊட்ட (recharge) விலை! ஆதலால் அவளது அடுத்த கேள்வி இப்படி இருந்தது. “என்னா சோலி பார்க்கிறீக?”
“பால்மாடு வளக்கிறது” என்று ஆரம்பித்து, அவனது மற்ற தொழிலைச் சொல்ல வருமுன்… “மாடு மேய்ச்சா அவ்ளோ பணம் வருமா” என்றாள் ஆகாயம் வரை எட்டும் ஆச்சரியத்துடன் அவள்!
“ஏங்க! பால்மாடு பண்ணை வச்சிருக்கவனப் பார்த்து, நீங்க என்னா இப்படிக் கேட்கிறீக?”
“ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் வரும்” என்று கேட்டு அப்பட்டமாக தன் ஆவலை அம்பலப்படுத்தினாள்.
“ஏகதேசமா (உத்தேசமாக)” என்று ஆரம்பித்தவன் “ஏங்க நீங்களும் மாடு வளர்க்கப் போறீகளா?” என்றான்.
“ம்க்கும். நான் பிகாம் ஸ்டுடென்ட்” என்று பெருமையாகச் சொன்னாள். மேலும், ‘இவன் என்னா படிச்சிருப்பான்?’ என்று கேள்வி வரவும், “ஒங்க படிப்பு என்னா… பிஈயா” என்று கேட்டாள்.
“எடக்கு பண்ணாதீக. நான் ஒங்கள மாதிரி படிக்கலே”
“ஸ்கூலோட நிறுத்திட்டீகளா?”
“அதுகூட இல்லேங்க… ஸ்கூல் பாதிலே நிறுத்தியாச்சி. நம்ம படிப்பு அப்படிங்க”
அவன் சொன்ன விதத்தில் லேசாக சத்தம் வரும்படி நகைத்தாள். அவள் நகைப்புச் சத்தம் அவன் தென்னந்தோப்பில் மாலை நேரத்து தென்றல் காற்றினால் தென்னை ஓலைகள் எழுப்பும் சலசலப்பு போலிருந்தது!!
“பணம் சம்பாதிச்ச அளவுக்கு, எனக்கு படிப்பு சம்பாதிக்க தெரியலங்க. ஏங்க பி.காம் படிச்சிட்டு ஏன் இந்த சோலிக்கு வந்திருக்கீக” என்றான்.
“வீட்ல நிலவரம் அப்படி. ஆனா இன்னும் நான் படிச்சி முடிக்கலேங்க, முடிச்சிட்டு வேற வேலைக்குப் போயிருவேன்” என்றவள் பேச்சில் அவள் படிக்கின்ற படிப்பிற்கும் பார்க்கின்ற வேலைக்கும் சம்மந்தமில்லையே என்ற வாட்டம் தெரிந்தது.
அவளின் முகவாட்டம்… அவன் தோட்டத்தில் காலையில் பறிக்காமல் விடப்பட்ட செவ்வந்தி, பிச்சிப் பூக்களின் மாலை நேரத்து வாடுதலுக்கு ஒத்ததாக இருந்தது.
“மூனாவது வருசமா?” என்றான்.
“இல்லேங்க… அஞ்சாவது வருசம்”
“ஏங்க, படிக்கலதான்; அதுக்காக பிகாம் மூனு வருசம்ங்கிறது தெரியாத அளவுக்கு நான் இல்லே” என்றான் அழுத்தமாக.
“ப்ச் மூனு வருசம்னா மூனு வருசத்திலே முடிக்கனுமா? ஏன் ஒரு அஞ்சு வருசத்துல முடிச்சா பிகாம்னு ஒத்துக்க மாட்டீகளா” என்று சுள்ளென வார்த்தைகள் வந்து விழுந்து அவனைக் குத்தியது.
இந்தப் பதிலுக்குள் அவளைப் பற்றிய உண்மை ஒன்று, வெட்கப்பட்டு மறைந்து கிடப்பது போல் உணர்ந்தான். அது என்னவென்று கண்டறிய பிரயத்தனம் செய்தான். இஷ்டதெய்வத்திடம்கூட வேண்டினான்.
அவளும், ‘இவன் கண்டறியக் கூடாது’ என்று தனது இஷ்டதெய்வத்திடம் வேண்டிக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவன் வேண்டுதலே பலித்தது. வெடுக்கென்று, “ஏங்க நீங்க பெயிலாகி பெயிலாகி படிக்கிற புள்ளையா” என்று கேட்டான்.
அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், “ஏன் அப்படிச் சொல்றீக, கொடிமலர் பிகாம் வித் போர் அரியர்ஸ். இப்படிச் சொன்னா நல்லா இருக்குல” என்றாள், காதில் அணிந்திருந்த ஜிமிக்கி ஆடும் வகையில்.
வேண்டுகோள்கள் எதுவுமின்றி விரும்பிடப் போகிறவளின் பெயரைத் தெரிந்தவர்களின் பட்டியலில் அவனும் இணைந்து கொண்டான்.
“கொடிமலர்” என்ற வரைக்கும் தனக்குள் சொல்லிப் பார்த்தவன், அந்தப் பட்டத்தை சொல்லிப் பார்க்கவில்லை. ஏனெனில் அவனது திருமண விடயத்தில், அவன் அம்மாவிற்கு பெண்ணிடம் உள்ள எதிர்பார்ப்பை அந்தப் பட்டப்படிப்பு நிச்சயமாகப் பூர்த்தி செய்யாது.
இருந்தும் பேச்சைத் தொடர நினைத்தவன். “நல்லா இருக்கு” என்றான்.
“அதே, இப்பம் நீங்க ஒங்க பெயர் சொல்லுங்க” என்றாள்.
அவனின் வயதிற்குரிய குறும்புடன் “பெரியவுக தம்பினு சொல்லுவாக. ஊர்ல ஒங்க ஒட்டு (ஒரே வயது) புள்ளைகலாம் அண்ணேனு விளிப்பாக. எங்கய்யன் (அப்பா) ராசுனு விளிச்சாரு. எனக்கு எங்கய்யன மாதிரி விளிச்சா பிடிக்கும்” என்று ஒரு வாய்ப்பை வழங்கிப் பார்த்தான்.
எந்தவொரு அழைப்பிற்கும் தற்சமயம் அவள் தயார்படுத்திக் கொள்ள முடியாததால், “மொத தடவ யார்கிட்டயும் பெயர் சொல்றப்ப முழுசா சொல்லனும்” என்று திரும்பவும் பாடம் எடுத்தாள்.
அவளின் பதிலால் தனது வாழ்க்கைத் துணையைப் பற்றி அம்மாவின் எதிர்பார்ப்பு சரியென்ற முடிவிற்கு வந்திருந்தான். இருப்பினும் அவள் எடுத்த பாடத்தைக் கற்றுக் கொண்டு, “தளபதி தங்கராசு”என்றான்.
“இது என்னா தளபதி பட்டம்?” என்று புருவத்தை உயர்த்தினாள்.
“தளபதியோட தீவிர ரசிகன்ங்க. அதுனாலே இப்படி” என்றவனின் குரல் மற்றும் உடல்மொழி, அவன் வெறும் ரசிகனல்ல. ‘தளபதி வெறியன்’ என்று சொன்னது!!
“அப்பம் நீங்க எலசக்ன்ல நிப்பீகளோ” என்று கிராமத்துக் குசும்புடன் ஒரு கேள்வி கேட்டாள்.
“என்னங்க நீங்க ஏறுமாற (முரண்பாடு) பேசிக்கிட்டு. இந்தப் பக்கத்து தளபதி ரசிகர் மன்றத்து தலைவருங்க. அம்புட்டுதான், போதுமா?”
போதும் என்று நினைத்தாள் போல; வேறு எதுவும் பேசவில்லை.
“நீங்க எப்படிங்க?” என்றான்.
“எங்களுக்கு ரசிகர் மன்றமெல்லாம் கிடையாதுங்க” என்றாள் அவளின் மானசீக நடிகரைப் போல் பூடகப் பேச்சாக!
“புரிஞ்சிடுச்சு” என்று சிரித்தவன், “செரி, எப்பம் பணம் ஏத்தி விடுவீக, சொல்லுங்க” என்று கேட்டபடியே பணத்தைக் கொடுத்தான்.
அதை வாங்கிக் கொண்டவள், “இன்னும் அரைமணி நேரத்தில” என்று கூறிக்கொண்டே மற்ற வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
“ஆட்டும்ங்க. அம்புட்டுதான, வரேன்” என்று கிளம்பிச் சென்றுவிட்டான்.
அவன் சென்ற பிறகு… முதலில் பேசியது போல் இல்லாமல், கடைசிப் பேச்சுகளில் அவனின் ஒட்டுதல் தன்மை குறைந்திருந்தது என்பதை யோசித்துக் கொண்டிருந்தவள்… அந்தச் சிறிய கண்ணாடி மேசை மீது அவனது கைபேசியைக் கண்டாள்.
ஏவாளின் முதற்கடிக்குப் பின்னரான ஆப்பிள் பழத்தின் வடிவத்தில், அதன் மேல் சின்னம் இருந்தது. உடனே கைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். எங்கிருக்கிறான் என்று தேடியவளுக்கு, அவன் தெரு முனையில் நின்று யாரிடமோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.
முதலில், ‘எப்படி இவுகள விளிக்க’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள். “தங்கராசு… தங்கராசு…” என்று கூப்பிட்டும் பார்த்தாள்.
அவனுக்குக் கேட்கவில்லை போல, சிறிதும் திரும்பாமல் நின்றான்.
அப்போது அங்கே வந்த பெண் ஒருத்தி, “அண்ணேனு விளி. நம்ம ஒட்டு புள்ளைக… அவுகள அப்படித்தான் விளிப்பாக” என்றாள்.
“நீங்க விளிக்கிறீகளா” என்று வந்தவளிடம் கோரிக்கை வைத்தாள்.
“அம்மாடி! அவுக என் அம்மாச்சன்(மாமா) பையன். அதனாலே நான் அப்படி விளிக்க மாட்டேன்” என்று வெட்கப்பட்டாள்.
மலர், “செரிங்க, அப்பம் அந்த முறையைச் சொல்லி விளிங்க” என்று யோசனைக் கூறினாள்.
“அய்யோ, எனக்கு அறப்பா(வெட்கம்) இருக்கு” என்று அந்தப் பெண் இரு கைகளால் முகத்தை மூடியது… கிராமத்துப் பெண்ணின் ரசிக்கத்தக்க வெட்கமாய் இருந்தது!
மலர், “அப்பம் ராசுனு பெயர் சொல்லியாவது விளிங்களேன்” என்றாள் அந்த வெட்கத்தை ரசிக்காமல்!
“அச்சோ!! அவுக அய்யன் மட்டும்தான் அவுகள அதுகணக்கா விளிக்க முடியும்னு சொல்வாக, மத்தவுகள அப்படி விளிக்க வுடமாட்டாக”
சற்றுமுன்பு அவளிடம் ‘ராசு’ என்று அழைப்பது அவனுக்குப் பிடிக்கும் என்று சொன்னதை எண்ணிப் பார்த்தாள் மலர். தனக்கு மட்டும்தான் அந்தச் சலுகையா… ஏன்… என்று யோசித்தபடி நின்றாள்.
இன்னும் நின்றிருந்த அப்பெண், “நான்தான அவுக முறைப்பெண்ணு, அண்ணேனு விளிக்க மாட்டேன். நீ விளிக்க வேண்டியதுதானே?” என்று சரியான புள்ளியைக் கேள்வியில் பிடித்தாள்.
என்ன சொல்லவென்று தெரியாமல், ஒருகணம் ஸ்தம்பித்துப் போனாள் கொடிமலர். எனினும், “நீங்க விளிக்க மாட்டீகள. அப்பம் போங்க” என்று ஸ்தம்பித்ததை மறைத்தபடி… அந்தப் பெண்ணைத் துரத்திவிட்டாள்.
அப்பெண் சற்று தூரம் சென்றவுடன், ‘இப்பம் என்னா செய்ய?’ என்று நினைத்தவள், மனதிற்குள் பெரிய உறுத்தலுடன், ‘அண்ணே அண்ணே’ என்று அழைத்துப் பார்த்துக் கொண்டாள்.
நன்றாகப் பழகியாயிற்று! இனி உரக்கச் சொல்லி அழைக்கலாம் என்று அவள் நிமிர்ந்து பார்க்கும் போது, அவன் தெருமுனையைத் தாண்டிக் கொண்டிருந்தான்.
சட்டென்று சத்தமாக, “ராசு, ராசு” என்று அழைத்தபடி அந்தக் குண்டும் குழியுமான கிராமத்துச் சாலையில் ஓட ஆரம்பித்தாள். அவனுக்குப் பிடிக்கும் என்பதாலோ… அவளையறியாமல் அப்படித்தான் வந்ததோ? தெரியவில்லை. ஆனால், ‘ராசு’ என்றுதான் அழைத்தபடி ஓடினாள்.
உருவாகப் போகும் உறவுக்கு உத்திரவாதம் தரும்படி இருந்தது, அந்தக் கிராமத்து இளைஞனைத் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டுமென்று, அந்தத் தாவணிப் பெண் அழைத்த அழைப்பு!!
*******************************
இந்தக் கதையில் பயன்படுத்தப்படும் நாஞ்சில் நாட்டின் வட்டார வழக்குச் சொற்கள், ‘நாஞ்சில் நாட்டு வட்டார வழக்குச் சொல்லகராதி’ (அ. கா. பெருமாள் அவர்கள் எழுதியது) என்ற நூலை அடிப்படையாகக் கொண்டது.

