Kathambari Novels
அத்தியாயம் – 8
இரண்டு நாட்கள் கழித்து… கல்யாணப் புடவை எடுப்பதற்கென்று கடைக்கு வந்திருந்தனர். சிவா வீட்டிலிருந்து அவனுடன் பிரவீன், நளினி, செண்பகம், வந்திருந்தனர். அரைமணி நேரத்திற்குப் பிறகு பாவையும் வேணிம்மாவும் கடைக்குள் நுழைந்தனர்.
அவர்கள் நுழையும் போதே, “இன்னைக்கும் இவ சில்க் சாரீதானா?” என்று நளினி சலித்துக் கொண்டதும், “மரியாதையா பேசு” என்றார் செண்பகம்!
“ம்மா! என்னைவிட சின்ன பொண்ணுதான்” என்று சொல்லும் போதே, பாவை, வேணிம்மா இருவரும் அருகில் வந்துவிட்டனர். கிருஷ்ணாம்மாவைக் கண்ட கடை சிப்பந்திகள், மேலாளர் அவரை மரியாதையுடன் உபசரித்தனர். பின்பு அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டனர்.
செண்பகத்திடம் நலம் விசாரித்து கிருஷ்ணாம்மா பேச ஆரம்பித்தார்.
பாண்டியனைப் பாவையைப் பார்த்து புன்னகைத்தான்.
ஒளிர் சிவப்பு நிறத்தில் பட்டுப்புடவை! தங்கச் சரிகைகள் கொண்டு, பெரிய பெரிய கட்டங்கள் போட்டிருந்தன! ஒவ்வொரு கட்டங்களுக்குள்ளும் அதே தங்க சரிகையிலான மாங்காய் வடிவங்கள்!!
இறுக்கமாகப் பின்னலிட்டு பிச்சிப் பூ வைத்திருந்தாள்.
வருங்கால மனைவியை வஞ்சனையின்றி ரசித்தான் பாண்டியன். இனி சற்று நேரத்திற்கு இயற்கை ரசிகன்… இல்லாள் ரசிகனாக!
சில நொடிகளுக்குப் பின் பிரவீன், சிவா பேச ஆரம்பித்தனர். ‘எதுவென்றாலும் வருங்கால கணவனிடம் கேட்டுக்கொள்’ என சொல்லிவிட்டு, வேணிம்மா ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டார்.
செண்பகம், நளினி, பாவை பட்டுப்புடவைகள் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தனர். பாவையின் தேர்வுகள் எல்லாம் பளிச்சென்ற நிறத்தில் இருந்தன. செண்பகம், ‘சிவா ரசனை இப்படி இருக்காதே!’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டே இருந்தார்.
இருந்தும் பாவையிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை.
ஆனால் நளினியோ, “பாவை… அண்ணனுக்கு இந்த மாதிரி கலர்ஸ் பிடிக்காது. கொஞ்சம் லைட் கலரா எடுக்கிறியா” என்று கேட்டபடியே இருந்தாள்.
“எனக்கு இந்த மாதிரி கட்டிதான் பழக்கம்”
“சரி! பட் பங்ஷன்க்கு கட்டறதுக்கு லைட் கலரா எடுக்கலாமே? அண்ணாகூட நிக்கிறப்போ… அவன் லைட் கலர் ட்ரெஸ்தான் ப்ரீஃபெர் பண்ணுவான். நீயும் அதே மாதிரி எடுத்துக்கலாமே” என்று கேட்டுப் பார்த்தாள்.
நளினியிடம், “இருங்க” என்ற பாவை பாண்டியனைப் பார்க்க, ‘என்ன?’ என்று கையசைத்து அவன் கேட்டதும் “ஒரு நிமிஷம் வர முடியுமா” என்றாள்.
“உனக்குப் பிடிச்சதே எடுத்துக்கோ. அவன்கிட்ட ஏன் சொல்லிக்கிட்டு?” என்று செண்பகம் சொல்லவும், “இருக்கட்டும் செண்பாம்மா! நான் அவங்ககிட்டயே கேட்டுக்கிறேன்” என்று சொல்லிவிட்டாள்.
‘செண்பாம்மா? ஏன் இப்படி அழைக்கிறாள்?’ என்று செண்பகமும், நளினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பாண்டியன் வந்து நின்றதும், “எனக்குப் பிடிச்ச கலர்ல எடுத்துக்கலாமா” என்று பாவை கேட்க, “ம்ம்” என்றான் அதற்கு!
“இல்லண்ணா உனக்கு டார்க் கலர் பிடிக்காதுல?” என்று நளினி கேட்க, “ம்ம்ம்” என்றான் அதற்கும்!!
இருவரும் அவனைப் பார்த்தனர்.
“ஸீ! இதுல எதும் நான் போட்டுக்க போறதில்லை. ஸோ அவளுக்குப் பிடிச்சதே எடுக்கட்டும்” என்று பொதுவாகச் சொன்னவன், “உனக்குப் பிடிச்ச கலர்ல… நீ எடுத்துக்கோ” என்று தங்கையைப் பார்த்துச் சொன்னான்.
இன்னும் இருவரும் அவனையே பார்த்திருந்தனர். செண்பகம்தான், “நீ போ சிவா” என்று மகனை அனுப்பிவிட்டு, “அவங்கவங்களுக்குப் பிடிச்ச கலர்ல எடுத்துக்கோங்க” என்று முடித்துவிட்டார்.
அதற்குமேல் யாரும் ஏதும் பேசவில்லை.
தனக்கு எடுத்து முடிந்ததும், “நளினி, நாம் ரெண்டு பேரும் ஒரே மாதிரி புடவை எடுப்போமா” என்று பாவை கேட்டாள்.
சற்று யோசித்த நளினி, “இல்லை பாவை! எனக்கு இந்த மாதிரி ஃகெவி சாரீஸ் கட்டிப் பழக்கமில்லை” என்று எழுந்து சென்றுவிட்டாள்.
பாவையின் மனதில் ஓர் ஏமாற்றம். அதைக் கண்ட செண்பகம், “அவ ஆஃபீஸ் வேலையா அங்க இங்கன்னு அலையிற பொண்ணு. அதான் இந்த மாதிரி சாரீ வேண்டாம்னு சொல்றா” என்று பாவைக்கு எடுத்துச் சொன்னார்.
சரி என்றாலும் பாவை முகம் அதே ஏமாற்றத்தோடே இருந்தது. “வேணும்னா, நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி எடுத்துக்கலாமா?” என்றதும்,
“சரி செண்பாம்மா” என்று முகம் மலர்ந்தாள்.
இதே நேரத்தில் பிரவீன், சிவா பேசிக் கொண்டிருந்தனர்.”நம்ம நாலு பேரும் சேர்ந்து, எங்கயாவது வெளியே போகலாமா?” என்று கேட்டான் சிவா!
பிரவீன், “எனக்கு ஓகேதான். பாவை வர்றதுக்கு அவ பாட்டிகிட்ட பர்மிஷன் வாங்கணும்” என்றான்.
“அதான்டா யோசிக்கிறேன்”
“போய் கேட்டுப்பாரு டா” என்று பிரவீன் சொல்லும் போது, நளினி அனைத்து ஆடைகளுக்குப் பணம் செலுத்திக் கொண்டிருந்தாள்.
சற்று நேரத்திற்குப் பின் கடை வெளியே கிருஷ்ணாம்மா கார் வந்து நின்று கொண்டிருந்தது. அவர் செண்பகத்திடம் பேசிக் கொண்டிருந்தனர். பாவை, தன் பாட்டியின் அருகில் இருந்தாள். சிவாவும் அங்கேதான் நின்றான். பிரவீனும் நளினியும் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டனர்.
சிவா, “பாட்டி, பாவையை வெளியே கூட்டிட்டுப் போகலாமா?” என்றான். அவர் ‘அனுமதிப்பாரா?’ என்ற யோசனையுடனே நின்றான். அவர் பதில் சொல்லும் முன்பே, “நளினியும் பிரவீனும் கூட வர்றாங்க” என்றான்.
“அதுக்கென்ன! தாராளமா போயிட்டு வாங்க” என்றார் சந்தோஷமாக!
“எங்க போறோம்?” என்று பாவை உற்சாகமாகக் கேட்டாள்.
அவளிடம், “சொல்றேன்” என்றவன், “மா நீங்க வீட்டுக்குப் போக கார் அரேஞ் பண்றேன்” என்றதற்கு, “அது எதுக்கு? நான் அவங்களை வீட்ல விட்டுடறேன்” என்றார் கிருஷ்ணாம்மா!
சிவா அம்மாவைப் பார்த்தான். ‘சரி’ என்று அவர் முகம் சொல்லியது. உடனே பெரியவர்கள் கிளம்பத் தயரானார்கள்.
முதலில் செண்பகம் காரில் ஏறி அமர்ந்தார். கிருஷ்ணாம்மா, “சிவா பத்திரமா பார்த்துக்கோ… திரும்ப வீட்ல கொண்டு வந்து விட்டுடு” என்று உரிமையாகச் சொல்லிவிட்டு ஏறினார்.
இதைக் கேட்ட செண்பகத்திற்கு, மகனை அவர் ஒருமையில் அழைத்ததில் உடன்பாடில்லை. மருமகளுக்கு, மருமகனுக்கு மரியாதை தர வேண்டுமென நினைத்த அவர் மனம், மகனுக்கும் மரியாதையை எதிர் பார்த்தது!
ஆனால் செண்பகம் இதையும் வெளிப்படுத்தவில்லை!
சற்று நேரத்திற்குப் பின் நால்வரும் நின்று ‘எங்கே செல்லலாம்?’ என்று பேசிக் கொண்டிருந்தனர்.நளினி, “கேஃபே போகலாம்! அமெதிஸ்ட் கேஃபே! சூப்பர் லோகேஷன்! பெஸ்ட் பிளேஸ் டு ஹேங் அவுட்” என்றாள் விருப்பமாக.
பிரவீன், சிவா இருவரும் பாவையைப் பார்க்க, “நான் வெளிய சாப்பிடறதில்ல! சாப்பாடு நல்லா இல்லனா, தொண்டைக்கு பிரச்சனை வந்திடும். இன்னும் நாலு நாள் கழிச்சி கச்சேரி இருக்கு. அதனால வேண்டாம்!” என்று மறுத்தாள்.
“அந்த அட்மோஸ்பியர் எப்படி இருக்கும்னே தெரியாம பேசாத? நீ போனதே இல்லையா?” என்றாள் நளினி.
பதில் சொல்லாமல் பாவை இருக்க… பிரவீன் “நம்ம வேற இடம் போகலாம். பாவைக்கு பிடிக்கலனா வேண்டாம்” என்றான் அவளுக்கு ஆதரவாக!
“வேற எங்க?” – நளினி.
“மூவீ போகலாமா?” – பிரவீன்.
“ம்ம் ஓகே, அண்ணா உனக்கு?” – நளினி.
“எனக்கு எதுனாலும் ஓகே” என்ற சிவா, பாவையைப் பார்த்தான்.
“முதல எனக்கு தியேட்டர் போய் பழக்கமே இல்லை. அதோட… ” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, “எங்ககூட வந்து பழகிக்கோ” என்றாள் நளினி.
“அவளை பேச விடு நளினி” என்ற பிரவீன், “சொல்லு பாவை” என்றான்.
“நிறைய கூட்டம் இருக்கும். ரொம்ப நேரம் ஏசில இருக்கனும். யாருக்காவது ஒருத்தருக்கு இன்பெக்ஷன் இருந்தா கூட, நமக்கும் வர்ற சான்ஸ் இருக்கு” என்று மீண்டும் மறுத்தாள்.
ஏற்கனவே புடவை தேர்வில் நடந்த பாவையின் மறுப்பு… இப்போது சொல்லும் காரணங்கள் சேர்ந்து கொண்டதில் நளினியின் முகம் மாறியது.
அதைக் கண்ட சிவா “போதும், யாரும் சொல்ல வேண்டாம். நான் சொல்றேன். பக்கத்தில ஒரு ஃபால்ஸ்… சூப்பரா இருக்கும். அங்க போகலாமா? ஜஸ்ட் டு அவர்ஸ் ட்ராவல். ஓகேவா?” என்றான்.
“ஆங்! ஆரம்பிச்சிட்டான்…” என்று பிரவீன் அலுத்துக் கொண்டான்.
“அங்க தண்ணீ எப்படி இருக்குமோ? நான் கண்டிப்பா வரலை” என்று அதை மறுப்பதற்கும் ஒரு காரணம் வைத்திருந்தாள் பாவை!
பாண்டியனுக்கே கொஞ்சம் கோபம் வந்தது.
உடனே நளினி, “அண்ணா, இப்போதான் ஞாபகம் வந்தது. ஒரு மீட்டிங் இருக்கு. பெங்களூர் நியூ ப்ராஜெக்ட் ரிலேட்டடு. நான் கிளம்புறேன்” என்றாள்.
“சரி” என்றான் சிவா தங்கையைப் புரிந்து கொண்டு!
நளினி பிரவீனைப் பார்த்தாள். கார் சாவி கொடுத்து, “போ! வர்றேன்” என்று அவன் சொல்ல, “பை பாவை. பை அண்ணா” என்று நளினி நகர்ந்தாள்.
பிரவீன், “ஒரு நிமிஷம்” என்று பாவையிடம் சொல்லி சிவாவைத் தனியாக அழைத்து வந்து, “நளினி வீட்டுக்குத்தான் போவா! நான் பார்த்துக்கிறேன். முத தடவ. பாவைய டிஸ்அப்பாயின்ட் பண்ண வேண்டாம்! ரெண்டு பேரும் மட்டும் போயிட்டு வாங்க” என்றுவிட்டு கிளம்பினான்.
பாண்டியன் பாவையின் அருகில் வந்தான்.
“நம்ம…” என்று ஆரம்பித்தவளிடம், “முதல நான் ஒன்னு சொல்லிக்கிறேன். மலையிலிருந்து வர்றது நல்ல தண்ணீதான்! புரியுதா” என்றான் இயற்கை ரசிகனாய் மாறி! “இப்போ சொல்லு, எங்க போகலாம்”
“தெரியலையே” என்றாள்.
“நிறைய சாய்ஸ் கொடுத்தோம்! அதுலருந்து சூஸ் பண்ணிருக்கலாம்ல. ஏன் பண்ணலை?”
“நான்தான் காரணம் சொல்லிட்டேன்ல”
“சரி… சரி… கார்ல ஏறு! போய்க்கிட்டே பேசலாம்” என்றதும், பாவை ஏறினாள். பாண்டியனும் ஏறிக் கொண்டான். போகும் போதே இருவரும் பேசி, ஒரு நெடுந்தூரப் பயணம் என்று முடிவுக்கு வந்திருந்தார்கள்.
மஹிந்திரா தார் கையில்… மனங் கவர்ந்தவள் அருகில்… கிழக்கு கடற்கரை சாலை…காதல் ஒன்றே வேலை. இக்கணத்தில் பாண்டியன்!
வேறென்ன வேண்டும் பாண்டியனின் பாவைக்கு!
பயணத்தின் வேகம் கூட ஆங்காங்கே குறைந்தது. ஆனால், பாவை பேச்சின் வேகம் எந்தக் கணத்திலும் குறையவில்லை. வாய் ஓயாமல் பேசினாள் வாழப் போகிறவனுடன்!
வேறென்ன வேண்டும் பாவையின் பாண்டியனுக்கு!
ஒரு இரண்டு மணி நேரத்திற்குப் பின், பாவையை அவர்களது அடுக்குமாடிக் குடியிருப்பு கொண்டு வந்து விட்டான் பாண்டியன்.
இறங்கப் போகும் போது, “வீட்டுக்கு வர்றீங்களா?” என்று கேட்டாள்.
“இல்லை! இப்படியே கிளம்புறேன். பாட்டிகிட்ட சொல்லிடு” என்றதும் இறங்கப் போனவளிடம், “பைவ் த்ரீ செவன் ஒன் டூ த்ரீ நைன் டூ ” என்றான் பாண்டியன்!
“திரும்பவுமா?” என்று சலித்துக் கொண்டே இறங்கியதும், உரிமையுள்ளவன் கைப்பிடியிலிருந்து உரிமையில்லா இடத்தில் கால் வைக்க கஷ்டமாக இருந்தது! “எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் மென்குரலில்.
‘அப்பட்டமாகத் தெரிகின்றது’ என்பது போல் அட்டகாசமாகச் சிரித்து, “பைவ் த்ரீ செவன் ஒன் டூ த்ரீ நைன் டூ ” என்று சொன்னான்.
“இது வேண்டாம்! நீங்களும் ‘பிடிச்சிருக்குனு’ சொல்லுங்க” என்றாள் அடமாக!
“எனக்கு என்ன தோணுதோ அதான் சொல்ல முடியும்” என்றான் அலட்டாமல்!
“எனக்கு என்னன்னே தெரியாத ஒன்ன… நீங்க இத்தனை தடவை சொல்றதே வேஸ்ட், பை” என்று சிரித்தபடி போனாள்.
பாவை சொல்லிய விதத்தில் சிரித்துக் கொண்டே கிளம்பினான் பாண்டியன்!
அன்றைய மாலை, அறை பால்கனியில் அம்மாவுடன் போன்சாய் மரங்களின் ஊடே பேசிக் கொண்டே நடந்தான் சிவா!
“நளினி ஏதாவது சொன்னாளா?” என்று கேட்டான்.
“ஆமா சிவா! ஒரு நாள் வெளியே வந்தா என்னாகிடும்? அவ்வளவு காரணம் சொல்றா பாவைனு ஒரே புலம்பல்” என்றதும் சிரித்துக் கொண்டான்.
“ஸ்டேஜ் டெக்கரேசன் நான்தான பண்றேன்! எந்த கலர் ட்ரஸ் போட்டா நல்லா இருக்கும்னு எனக்குத்தான தெரியும். லைஃப் லாங் அந்த மொமெண்ட் சேவ் பண்ணி வைக்கப் போறாங்க. அது அழகா இருக்க வேண்டாமானு ஒரே புலம்பல்” என்று வேகமாக நடந்து கொண்டே சொன்னார்.
“சரிதான்!” என்றவன், “பட், அது பாவையோட மொமென்ட்! ஸோ, அவளுக்கும் இப்படித்தான் இருக்கணும்னு ஆசை இருக்கும்ல” என்றான்.
“நான் முதலயே சொன்னேன் கண்ணா! ட்ரஸ் கலர் அவங்கவங்க இஷ்டம்னு. ரெண்டு பேரும் கேட்கலை” என்று ஆரம்பிக்கும் போதே, “விடுங்கம்மா” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.
“இப்படியே சிரிச்சிக்கிட்டே இரு” என்றவர், “நீ நட! ஏதாவது குடிக்க எடுத்திட்டு வர்றேன்” என்று அறைக்குள் சென்றார்.
நடந்து முடிந்ததும் ஹனி லோகஸ்ட் முன் சென்று நின்றான். அவன்தான் நின்று கொண்டிருந்தான். ஆனால் திருமண நாள் ஓடி வந்துவிட்டது!

