Kathambari Novels
அத்தியாயம் – 7
இன்னும் பதினைந்து நாட்கள் கழித்து பாவை, பாண்டியன் திருமணம் என்று முடிவானது. ஒரு மாலை நேரத்தில் சிவாவும், செண்பகமும் பால்கனியில் நடந்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.
“சிம்பிளா நடத்திறதுக்கு ஒத்துக்கிட்டாங்களா ம்மா?” என்றான்.
“எதும் சொல்லலை கண்ணா. பாவை மாமா உடனே சம்மதிச்சிட்டார்” என்று நிம்மதியாகச் சொன்னதும், “ம்ம்” என்றானே தவிர, அதைப் பற்றிப் பெரிதாக யோசிக்கவில்லை.
“அம்மா அப்பா இல்லாத பொண்ணு… நல்லா பார்த்துகோங்கனு பாவையோட பாட்டி சொன்னாங்க. அவளோட அம்மா அப்பா பத்தி உன்கிட்ட பேசினாளா?”
“இல்லம்மா”
“பாவை ஆறு மாசமா இருக்கிறப்பவே இறந்திட்டாங்களாம். கண்ணா நல்லா பார்த்துக்கணும் நீ” என்றதும், சிரிக்க மட்டும் செய்தான்.
“ரெண்டு நாள் கழிச்சி மேரேஜ் பர்சேஸ்சுக்கு போகலாமா”
“வீட்லதான் இருப்பேன் மா. போகலாம்”
“ட்ரெஸ் மண்டபம் டெக்ரேஷன் நளினி பார்த்துக்கிறேன் சொல்லிட்டா”
“ம்ம்ம்! என்கிட்டயும் சொன்னா” என்று சொல்ல, அதன்பின்னும் அம்மாவும் மகனும் பேசிக் கொண்டிருந்தனர்.
***************
அடுத்த நாள் மாலை வேணிம்மா வீடு. மீனாட்சி, கிரி மனைவி… இருவரும் கோவிலுக்குச் சென்றிருந்தனர். கிரியும், கிருஷ்ணாம்மாவும் பாவை திருமண விடயமாக வெளியே சென்றிருந்தனர்.
இருட்டத் தொடங்கியதால் வீடு முழுவதும் விளக்குகள் போடப்பட்டிருந்தன.
பூஜையறையில் மெல்லிய ஒலியில் பக்திப் பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தது. கலையும் கௌசியும் அவர்களது அறையில் இருந்தனர்.
பாவை… அவளது அறையில் யோசித்துக் கொண்டிருந்தாள். இந்தக் கணத்தில் அவளின் யோசனை ஒன்றுதான்! அது சங்கர்!!
‘அவனால் திருமணத்தில் ஏதும் பிரச்சனை வருமோ?’ என்ற பயம் ஒரு பக்கம்! ‘இதைப் பற்றி பாண்டியனிடம் சொல்ல வேண்டுமோ!?” என்ற தெளிவின்மை மறுபக்கம்!!
சங்கர் விருப்பத்தைத் தன்னிடம் வெளிப்படுத்திய நாளிலிருந்து இன்றுவரை இதுபற்றி அவனிடம் பேசினதே இல்லை. ஆனால் இன்று பேச வேண்டும் என தோன்றியது. ‘இனிமேல் இப்படிப் பேசிக்கொண்டு சுற்றாதே’ என்று சொல்ல வேண்டும் தோன்றியது.
உடனே எழுந்து நேராக சங்கரின் அறைக்குச் சென்று கதவைத் தட்டினாள். கதவைத் திறந்தவன், “தேனு” என்றான் ஆச்சிரியத்துடன்!
அவள் அமைதியாக நிற்பது கண்டு, “உள்ள வா தேனு” என்றதும், “இல்ல இங்க நின்னே சொல்லிடுறேன்” என்று வாசலிலே நின்றாள்.
“பரவால்ல வா தேனு” என்று சங்கர் சொன்னாலும், ‘இங்க நின்னுதான் பேசப் போறேன்’ என்பது போல் அவள் அழுத்தமாக நிற்க, அதைப் புரிந்தவன், “சரி சொல்லு” என்றான்.
“ஒரு உதவி,” என்று சொல்லி முடிக்கும் முன், “என்னன்னு மட்டும் சொல்லு தேனு, உனக்காக கண்டிப்பா செய்றேன்” என்றான் பரபரப்பாய்!
அவன் பரபரப்பைப் பார்த்தவளுக்கு, ‘இப்படி இருக்கிறானே’ என்று நினைத்து உள்ளுக்குள் படபடப்பைத் தந்தது.
இருந்தும், “இனி யார்கிட்டயும் ‘என்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்’னு சொல்லாதீங்க. இதுவரைக்கும் எப்படியோ… ஆனா இப்ப எனக்கு கல்யாணம் ஆகப் போகுது. அதனால இந்த மாதிரி பேசாதீங்க” என்றாள்.
அமைதியாக நின்றான்.
“இதுக்கு முன்ன எனக்கு யாரையும் பிடிச்சது இல்லை. இப்ப பாண்டியனைப் பிடிச்சிருக்கு. நீங்க இப்படி எல்லார் முன்னாடியும் சொல்லிக்கிட்டு இருந்தா, எனக்கு ஒரு மாதிரி இருக்கு. நல்லாவும் இல்லை”
அமைதியாகத்தான் நின்றான்.
“நான் இத உங்ககிட்ட சொன்னதே இல்லை. வேணிம்மாவ வச்சிதான் சொல்ல சொன்னேன். ஆனா இப்ப சொல்றேன்” என்றவள், “எனக்கு உங்கள கல்யாணம் பண்ணற எண்ணமே கிடையாது. நீங்களும் அப்படி நினைக்காதீங்க” என்றாள்.
அமைதியாகவே நின்றான்.
“அப்புறம் எல்லார் மாதிரியும் பாவைனு கூப்பிடுங்க. ‘தேனு’ வேண்டாம்” என்று ‘சொல்ல வந்ததைச் சொல்லியாயிற்று’ என்று நினைத்துத் திரும்பினாள்.
உடனே, “தேனு” என்று அழைத்தான். பாவை அவ்வளவு சொல்லியும், சங்கர் அப்படியே இருந்தான்.
கண்களைச் சுருக்கி, ‘ச்சே இவனிடம் சொல்லிப் பிரயோசனம் இல்லை’ என்று வேக வேகமாக அறைக்குச் சென்றுவிட்டாள்.
போகின்றவளைப் பார்த்துக் கொண்டே நின்றான் சங்கர்.
சற்று நேரத்திற்குப் பின் சாப்பிட்டு முடித்துவிட்டு, பாவையும் வேணிம்மாவும் பேசிக் கொண்டிருந்தனர். “வேணிம்மா” என்று கூப்பிட்டு, சங்கரிடம் பேசிய விடயத்தைச் சொன்னாள்.
“அவன் என்ன சொன்னான்?”
“அப்படியேதான் பேசுறாங்க” என்றாள் அலுத்துப் போய்!
“விடும்மா”
“எப்படி விட வேணிம்மா. நம்மகிட்ட பேசற மாதிரி அவங்க முன்னாடியும் பேசிட்டா” என்று கொஞ்சம் பயத்தில் கேட்டாள்.
“அப்படிலாம் பேச மாட்டான். நீ கவலைப்படாத” என்று அவர் சொன்னாலும், பாவையின் முகம் தெளிவில்லாமல் இருந்தது.
அதைக் கண்டவர், “இதெல்லாம் நினைக்காத பாவை. நீ சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம் இது” என்று சிரித்தார்.
“நான் வேணா, அவங்ககிட்ட இதைப் பத்தி சொல்லிடவா?”
“இப்போ வேண்டாம் பாவை!”
“சொல்லாம இருந்தா தப்போன்னு தோணுது”
“சொல்லவே வேண்டாம்னு சொல்லலை. நல்லபடியா கல்யாணம் முடியட்டும். ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கோங்க. அப்புறம் சொல்லு! உனக்கு உரிமையான இடத்தில வாழப் போற! அதை மட்டும் நினைச்சி, நீ சந்தோஷமா இருக்கனும் பாவை”
இருவருக்குமே அந்த ‘உரிமை’ என்ற வார்த்தையில் புன்னகை வந்தது. மேலும் சற்று நேரம் பொதுவாகப் பேசிவிட்டு உறங்கச் சென்றனர்.
அதற்கடுத்த நாள் மதிய உணவை முடித்ததும் வேணிம்மா உறங்கியிருந்தார். பாவை ‘பஞ்சரத்தன கானாம்ருதம்’ புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். இதே நேரத்தில் வீட்டின் மற்ற உறுப்பினர்கள் எல்லாம் ஓய்வில் இருந்தனர்.
கௌசி, கிரி தவிர! இருவரும் வரவேற்பறையில் பேசிக் கொண்டிருந்தனர். கிரி, “சொல்லும்மா” என்றார் தந்தை பேச்சின் தொடர்ச்சியாக!
“ப்பா, எல்லாம் பாவை கல்யாணம் பத்திதான்”
“அதைப் பத்தி என்ன? நானே எப்படா அவ கல்யாணம் முடிஞ்சி போவா, உன் அண்ணனுக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்”
“அதலாம் சரிதான் பா”
சரி என்று சொன்னாலும், வேறு ஏதோ இருப்பது போல் மகள் முகத் தோற்றம் சொல்லியது. “வேற என்ன கௌசி?”
“ப்பா, இது வரைக்கும் அவ இங்கதான் இருந்தா! அதனால பாட்டு பிராக்டிஸ் பண்றது, கச்சேரி தேதி… இப்படி எல்லாம் நாமளே முடிவு பண்ணோம். இப்ப இவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சின்னா என்ன பண்றது? அவ ஹஸ்பண்ட் இதுல தலையிடுவானா?”
கிரி இப்படியெல்லாம் யோசிக்கவேயில்லை! மகள் சொன்னதற்குப் பின்தான் யோசித்துப் பார்க்க ஆரம்பித்தார்!!
“நான், அவளுக்கு ஏத்த மாதிரி கச்சேரி டேட்ஸ் அட்ஜஸ்ட் பண்ண வேண்டியது இருக்குமோ” என்று கேள்வியாக கேட்டவள், “ப்பா அப்படி என்னால அட்ஜஸ்ட் முடியாது” என்று பதிலும் சொல்லிக் கொண்டாள்.
கிரிதரன் இப்படியும் யோசிக்கவில்லை. ஆனால் கௌசல்யா யாருக்காகவும் எதற்காகவும் மாறக் கூடாது என்று உறுதியாக இருந்தார்.
“அப்புறம் இன்னொன்னு! இப்ப வரைக்கும், கச்சேரி வருமானம் பத்தி பாவை கேட்டதே இல்லை. இனிமே கேட்டா? அவ கேட்கலானாலும்… அவ ஹஸ்பண்ட் கேட்கச் சொன்னானா?”
இதை கிரி யோசித்திருந்தார்!
இதுவரை இந்த வீட்டின் வருமானங்கள் பிரித்துப் பார்க்கப்பட்டதே இல்லை. முதலில் குடும்பத்தின் கணிசமான வருமானம் வந்தது கிருஷ்ணாம்மாவின் கச்சேரிகள் மூலமாகத்தான்.
அதன்பின் இப்போது இசைக் கருவிகள் விற்கும் கடை மூலம் வருவதாகட்டும், பாவை, கௌசி கச்சேரியிலிருந்து வருகின்ற வருமானமாகட்டும் சொற்பமே!
இருவரும் யோசித்தனர். சற்றுநேரத்திற்குப் பின்னர் வேணிம்மா அறைக்குச் சென்று, “பாவை… உன்கூட பேசணும். வா” என்று கௌசி அழைத்துவிட்டுச் சென்றாள்.
புத்தகத்தை மூடி வைத்துவிட்டு பாவை வரவேற்பறைக்கு வந்து அமர்ந்து, “என்ன கௌசி?” என்று கேட்டாள்.
“சில விஷயம் பேசிக்கலாம்னு நினைச்சேன்”
“சொல்லு”
“இனிமேலும் சேர்ந்துதான பாடப் போறோம்”
“ம்ம்ம், அது வேணிம்மா ஆசை! அது மாறாது!!”
“நானும் மாத்தணும்னு நினைக்கலை”
“அப்புறம் என்ன?”
“பாரு, கல்யாணம் முடிஞ்சி இன்னொரு வீட்டுக்குப் போனாலும் ப்ராக்டிஸ்க்கு ஒழுங்கா வந்திடனும். ‘இன்னைக்கு என்னால அங்க வர முடியாது. அதனால நீ இங்க வா’னு சொல்ல கூடாது. அப்படிக் கூப்பிட்டாலும் நான் எங்கயும் வர மாட்டேன்” என்றாள் கறாராக!
பயிற்சிகள் எடுப்பதிலோ… அதை இங்கு வந்து எடுப்பதிலோ… தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பாண்டியன் என்ன நினைப்பானோ? என்ற கேள்வி பாவைக்கு வந்தது!
“அப்புறம் கச்சேரி தேதி மாத்தணும்… இந்த நாள்ல கச்சேரி தோதுபடாது. எதும் அப்படியெல்லாம் சொல்ல கூடாது” என்றதும் இதை பற்றியும் பாண்டியனிடம் கேட்க வேண்டும் என்று பாவை நினைத்துக் கொண்டாள்.
“இன்னொன்னு! இதுக்கப்புறமும், என்ன பாட்டு… புடவை எல்லாம் நான்தான் முடிவு பண்ணுவேன்”
இருவரும் சேர்ந்து கச்சேரி செய்வதால் ஒரேமாதிரி பட்டுப்புடவை கட்டுவது வழக்கம். அதில் தவறில்லை. ஆனால் எப்போதும் கௌசி விருப்பப்படிதான் புடவை தேர்வுகள் இருக்கும். பாட்டும் அது போலத்தான்.
‘எப்பொழுதுதான் தனக்குப் பிடித்த பாடல், உடை’ என்று கச்சேரி செய்யப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பு பாவைக்கு வந்தது! அப்படி மட்டும் நடந்தால்! நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் நினைக்க மட்டுமே முடியும். ஆட்சேபிக்கலாம்! முடியாது என்றில்லை!
வேணிம்மாவிற்காக அமைதியாக இருந்தாள்!!
பாவை யோசனையில் இருப்பதைக் கண்டு, “புரிஞ்சதா?” என்று கௌசி என்று கேட்க, “ம்ம்ம்” என்றாள்.
கௌசி, கிரி இருவருமே கச்சேரி வருமானம் பற்றி ‘இவள் கேட்பாளோ?’ என்று பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், பாவை அதுபற்றி ஏதும் கேட்கவில்லை. எழுந்து அவளது அறைக்குக் கிளம்பிவிட்டாள்.
அப்பாவும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.
அறைக்கு வந்த பாவைக்கு, கௌசல்யா பேசிய விடயங்கள் நினைத்து சற்று கஷ்டமாக இருந்ததால், பாண்டியனை செல்பேசியில் அழைத்தாள்.
“சொல்லு ஹனி” என்றான் எடுத்தவுடன்!
“ஒன்னு கேட்கணும். கல்யாணத்துக்கு அப்புறம் நான் பாடலாமா? கௌசிகூட ப்ராக்டிஸ் இருக்கும். இங்க வர வேண்டியது இருக்கும். உங்களுக்கு ஓகேவா?” என்று படபடவன கேட்டாள்.
“பாடப்போறது நீதானா?”
“ம்ம்”
“ப்ராக்டிஸ் பண்ணப் போறதும் நீதான?”
“ம்ம்ம்”
“அப்போ, நீதான் முடிவு எடுக்கணும்”
அவன் சொல்ல வருவது புரிந்ததும், “தேங்க்ஸ்” என்றவள், “சரி வச்சிடுறேன்” என்றாள்.
“ஹே ஹனி! அவ்வளவுதானா?!” என்றான் போதாமல்!
“ஆமா, அவ்வளவுதான்! வேணிம்மா தூங்கிறாங்க!!”
“பைவ் த்ரீ செவன் ஒன் டூ த்ரீ நைன் டூ ” என்றான் காதலுடன்!
“இது என்னன்னே தெரியலை, இதை வேற சொல்லிக்கிட்டே இருக்கீங்க!”
“கண்டிபிடிக்கிறதா சொன்னதா ஞாபகம்” என்றான் கேலியாக!
“சரி, சரி கண்டுபிடிக்கிறேன்! இப்ப பை” என்று அழைப்பைத் துண்டித்தாள். ‘இவங்க சொல்றது என்ன நம்பர்’ என்று யோசித்தாள்.

