Kathambari Novels
அத்தியாயம் – 26
வனநலன் பாதுகாப்பில் அக்கறை கொண்ட அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அது. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பெரிய கூடம்! நேர்த்தியாக போடப்பட்டிருந்த பார்வையாளர்களின் இருக்கைகள்.விருந்தினர்களுக்காகஐந்தாறு இருக்கைகள் போடப்பட்ட மேடை! ஒருபுறம் ‘மைக் ஸ்டான்ட்’! மேடையின் பின்புறம் எல்ஈடீ திரை!
பாவையும், பாண்டியனும் இங்கே வந்தபோது இருக்கைகள் நிரம்பியிருந்தன. ஒருமுறை சுற்றிப் பார்த்து, “இது என்ன” என்று கேட்டவள் குரலில் புது சூழலைக் கண்ட தயக்கம் தெரிந்தது.
“கொஞ்ச நேரத்தில புரிஞ்சிடும்” என்றவன், “நீ இங்க உட்கார்ந்துக்கோ” என்று காலியாக இருந்த ஒரு இருக்கையில் பாவையை அமரச் சொல்லி, “ஸ்டேஜ்க்கு போறேன். நான் பேசறப்ப உனக்குப் புரியும்” என்று சொன்னதும், ‘சரி’ என்பது போல் தலையாட்டினாள்.
விழா ஆரம்பித்தது. மேடையில் நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், “காடு வளர்ப்பில் கலக்கும்,” என்று ஆரம்பித்து, மேடையில் இருந்த நான்கு பேரைத் தனித்தனியாக அறிமுகப்படுத்தினார்.
அதில் பாண்டியனும் ஒருவன்! அவர் பேசி முடித்ததும் அந்த நான்கு பேரும் தனித்தனியாக தங்கள் அனுபவங்களைப் பேசுவதாகவும் ஏற்பாடு.
முதலில் வந்தவர் பேச்சைத் தொடங்கி, “குறுங்காடுகள் திட்டம் மூலமா பார்ம் ஹவுஸ், கார்பரெட் இண்டஸ்ட்ரி-க்கு கம்மியான செலவில சிறிய அளவிலான காடுகளை அமைச்சிக் கொடுக்கிறோம். ஸோ ஒரு இயற்கையான சூழலை வேலை செய்ற இடத்தில அமைச்சி தர்றோம்…” என்று பேசினார்.
அடுத்து வந்தது சிவபாண்டியன். பேசும் முன் அவனுக்குக் கொடுக்கப்பட்ட அறிமுகத்திலிருந்து பாவைக்குப் புரிந்துவிட்டது அவன் காடுகள் வளர்ப்பில் ஈடுபட்டிருக்கிறான் என்று!
“அப்பா பிசினஸ பார்த்துக்கவா? இல்ல என் கனவை நோக்கி போறதான்னு முடிவெடுக்க வேண்டிய ஒரு சிச்சுவேஷன் வந்தது. ஏன் எல்லா முடிவுகளும் பொருளாதாரத்தை நோக்கியே இருக்கணும்? பொறுப்பை நோக்கி இருக்க கூடாதான்னு யோசிச்சேன்” என்று இடைவெளிவிட்டான்.
அவன் ஏன் மாமா தொழிலைப் பார்க்கவில்லை என்று புரிந்தது பாவைக்கு!
“அப்படி யோசிச்சு எடுத்த முடிவுதான் இது. முப்பத்தி மூனு சதவீதம் காடுகள் இருக்கனும் ஆனா இப்போ இருக்கிறது இருபத்தியொரு சதவீதம்தான். இதை அதிகரிக்கணும்!
ரிசர்வ்டு பாரஸ்ட்ட நம்மளால எக்ஸ்டென்ட் பண்ண முடியாது. அப்போ வேற வழி? நாம காடுகள் வளர்ப்பது. அதைத்தான் செஞ்சிகிட்டு இருக்கேன்!” என்று பேச்சு இப்படியே தொடர்ந்தது.
இப்படி ஒன்று செய்கின்றவனிடம், ‘ரூம்ல நாலஞ்சி மரத்தை வளர்த்திக்கிட்டு காடு பிடிக்கும்னு சொல்றீங்களே’ என்று சொல்லிச் சிரித்தது ஞாபகத்திற்கு வந்தது பாவைக்கு!
அங்கே சற்றுநேரத்திற்கு கலந்துரையாடல்! காடு வளர்ப்பு பற்றிக் கேள்வி, பதில்கள்! பாராட்டுக்கள்! விழா நிறைவு! இவை மட்டுமே!!
நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் காரை நோக்கி நடந்தனர். “ம்ம் ரொம்ப போர் அடிச்சதா? ஒன்னுமே பேச மாட்டிக்கிற?!” என்று பேச்சை ஆரம்பித்தான்.
“நீங்க ஏன் என்கிட்ட எதுவும் சொல்லலை?”
“அன்னைக்கு இதைப் பத்தி தெரியாதுனு நீ சொன்னப்பவே… நான் செய்யற விஷயத்தெல்லாம் உனக்கும் சொல்லணும்னு ஆசையா இருந்தது. பட் பேச்சு வேற மாதிரி போயிடுச்சி” என்றான்.
“நீங்க ஆசைப்பட்டு சொல்ல போனீங்க. நான்தான் ஏதோ ஏதோ பேசி…” என்று சொல்லும் போதே, “விடு பாவை!” என்றான்.
இந்தநொடியில் மஹிந்திரா தாரின் அருகில் வந்திருந்தார்கள். இருவரும் ஏறி அமர்ந்ததும் பாண்டியன் காரை கிளப்பினான். சாலையில் கவனம் வைத்துக் கொண்டே அமைதியாக வருபவளைப் பார்த்து, “பாவை” என்றான்.
விழாவில் அவனைச் சிறப்பித்ததற்காக, “கங்கிராட்ஸ் பாண்டியன்” என்றாள்.
“கங்கிராட்ஸ் இப்படியா சொல்லணும் ஹனி?”
அதில் சிரித்தவள், “சான்ஸ் கிடைச்சாச்சு. சேர்ந்து வாழப்போறோம். ரொம்ப சந்தோஷமா இருக்கு பாண்டியன்” என்றாள் உள்ளத்திலிருந்து!
இப்படியே அவனுடன் பேசிக் கொண்டே அலைபேசி புலனச் செய்திகளைப் பார்த்தாள். திடீரென அவனிடம் பேசுவதை நிறுத்திவிட்டு அமைதியானாள்.
“ஏன் பேசாம வர்ற?” என்று திரும்பி அவளைப் பார்த்தவன், “என்ன முகம் ஒருமாதிரி மாறிடுச்சு?” என்று கேட்டான்.
“நான் இன்னும் ஒரு கச்சேரிகூட பண்ணலை. ஆனா கௌசி? ரெண்டாவது கச்சேரி முடிச்சிட்டா!” என்று குறைபட்டுக் கொண்டாள்.
பாண்டியன் எதுவும் சொல்லாமல் இருந்தான்.
“எனக்கு எப்போதான் செகன்ட் சான்ஸ் வருமோ?” என்று அடுத்த வாய்ப்பை எதிர்பார்க்க ஆரம்பித்தாள்.
“இது என்ன பழக்கம் பாவை?” என்று அழுத்தமான குரலில் ஆரம்பித்தான்.
“எது?”
“இந்த மாதிரி ஒருத்தரோட உன்னை கம்பேர் பண்ணறது?” என்றான் அடுத்த கேள்வியாக!
‘ஓப்பிடு!?’ என்ற வார்த்தை அவள் வேண்டாமென விட்டுவிட்ட சுயஅலசலைத் தட்டி எழுப்பியது.
“அன்னைக்கும் அப்படிதான்! டிவில சான்ஸ் கிடைச்சதுனு ஹேப்பியா இருந்த! ஆனா அந்தப் பொண்ணு முதல் கச்சேரி பண்ணது தெரிஞ்சதும் கவலைப்பட ஆரம்பிச்சிட்ட?!”
அவள் எதிர்பார்ப்பில் என்ன பிழை என்று பாவைக்குப் புரிந்துவிட்டது! அது கௌசியை ஓப்பிட்டுப் பார்த்து தனக்குள் வந்த ஏக்கம் என்று தெரிந்தது!!
“இன்னைக்கு கச்சேரி சான்ஸ் கிடைச்சதுனு சந்தோஷப்படறதை விட்டுட்டு, அவங்க செகண்ட் கச்சேரி பண்ணினதைப் பத்தி யோசிக்கிற?”
அவன் அன்பின் வெளிப்பாடுகளில் ஏன் அவளால் சிறிதும் திருப்தி அடைய இயலவில்லை? எனப் பாவைக்குப் புரிந்தது!
அடைக்கும் தாழில்லாமல் அன்பு வேண்டுமென்று நினைத்தது சரிதான்! ஆனால் அதற்கொரு வடிவம் கொடுத்து வைத்திருந்தது தவறென புரிந்தது!!
“இப்படியே கம்பேர் பண்ணிகிட்டே இருந்தா, எப்போ உனக்கு கிடைக்கிறதை என்ஜாய் பண்ணப்போற?”
கௌசியால் தனக்குள் ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் பாதகம் புரிந்தது.
“சப்போஸ் நாளைக்கு உனக்கு செகன்ட் சான்ஸ் கிடைச்சாலும் சாட்டிஸ்பை ஆக மாட்ட, அவங்களுக்கு தேர்ட் சான்ஸ் கிடைச்சிருச்சினு தெரிய வந்தா…”
சொல்லவேண்டும்! தான் நடந்து கொண்டதற்கான காரணம் அனைத்தையும் அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தாள்! அடுத்த நொடியே, “வீட்டுக்குப் போகலாம்” என்றாள்.
“போய்க்கிட்டுதான் இருக்கேன்” என்றான்.
“உங்க வீட்டுக்குப் போகலாம்”
“அது நம்ம வீடு பாவை!”
“சரி!” என்று சத்தமாகச் சொன்னவள், “அப்போ அங்கேயே போங்க” என்றாள்.
“அப்பா நளினிக்கிட்ட பேசிக்கிறேன். அப்புறம்…” என்று சொல்லும் போதே, “நானே பேசிக்கிறேன்! எனக்குப் பேசணும்” என்றாள்.
“உனக்கு என்ன பேசணும்?”
“பேசணும்! நான் என்ன பண்ணிருக்கேன்னு இப்போதான் புரியுது”
“என்கிட்ட சொல்லு பாவை, போதும். எல்லார்கிட்டயும் எதுக்கு?”
“எல்லாருக்கும் எல்லாம் தெரியும்ல… அப்புறமென்ன?”
“இருந்தாலும் நீ சொல்ல நினைக்கிறத என்கிட்ட சொல்லு போதும்”
அப்போதும், “இல்ல எல்லார்கிட்டயும் சொல்லணும்” என்றுதான் சொன்னாள்.
“வேண்டாம் பாவை, இது தேவையில்ல” என்று சொல்லிப் பார்த்தான்.
“இல்ல இதான் சரி, ப்ளீஸ் என்னய கூட்டிட்டு போங்களேன்” என்று அவள் கெஞ்சிக் கேட்டதும், வேறுவழியில்லாமல் மஹிந்திரா தாரை அவன் வீடு நோக்கிச் செலுத்தினான்.

