Kathambari Novels
கேமரா வாங்கி வந்து பாவை வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டு நின்றான் சிவபாண்டியன்.அவள்கதவைத் திறந்ததும், “ஹாய்” என்று உள்ளே வந்தவன் கேமராவை காட்டினான்.
“ஓ! வாங்கியாச்சா!” என்று சந்தோஷப்பட்டவள் கதவைத் தாழிட்டுவிட்டு, “ஒரு விஷயம் சொல்லணும், சான்ஸ் கிடைச்சிருக்கு” என்று சொன்னதும், “ஹே ஹனி! கங்கிராட்ஸ்!!” என்று வாழ்த்துச் சொல்லி லேசாக அணைத்தான். பின் விலகி நின்று கொண்டான்.
“நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கலை” என்றாள் அவனது எதிர்பாராத அணைப்பிலிருந்து மீண்டு வந்து!
“சரி சொல்லு” என்றான் அமர்த்தலான குரலில்!
“ஸ்டேஜ் பெர்பார்மன்ஸ் இல்ல. டிவில ஸ்பெஷல் ப்ரோக்ராம்காக கேட்டாங்க. சும்மா இருக்கிறதுக்கு ட்ரை பண்ணலாமேனு நினைச்சி ஒத்துக்கிட்டேன்!”
“நல்ல முடிவு” என்றவன், “கங்கிராட்ஸ் ஹனி” என்று மீண்டும் அணைத்தான்.
அவனது அணைப்பை அகத்தில் ஆனந்தமாக உணர்ந்தாலும், புறத்தில் அதை வெளிக்காட்டாமல், “வீணை வாங்கிட்டேன். நீங்க அதை போட்டோ எடுத்து தர்றீங்களா? தேவைப்படுது!” என்று கேட்டாள்.
“கண்டிப்பா” என்று புகைப்படம் எடுக்கத் தயாரானான்.
சில நிமிடங்களுக்குப் பிறகு… இரண்டு மூன்று புகைப்படம் எடுக்கும் போது, ‘தனக்காக இவ்வளவு மெனக்கெடுகிறானே?’ என்று முகம் மலர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் அதன்பின் அவன் வீணையைக் கையாளும் விதத்தை கண்டு முகம் அசௌகரியமாக மாற ஆரம்பித்தது. அவன் இஷ்டத்திற்கு வீணையை அங்கு இங்கு என்று வைத்துப் புகைப்படம் எடுக்க ஆரம்பிக்க அவள் முகம் முற்றிலும் அதிருப்தியைக் காட்டியது.
ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல், “போதும்” என்றாள் கடுமையாக!
“ஏன், திடீர்னு என்னாச்சு?” என்றான் ஒன்றும் புரியாமல்!
“நீங்க என்ன பண்றீங்க?” என்றாள் கோபமுடன்!
“போட்டோதான எடுக்கிறேன்” என்றான் இன்னும் புரியாமல்!
“அதுக்காக! இப்படியா?” என்று கடுங்கோபமாக கேட்க, ‘இப்படி கோபப்படும் அளவிற்கு, அப்படி என்ன செய்துவிட்டேன்?’ என்பது போல் நின்றான்.
அவனுக்குப் புரியவில்லை என்றதும், “இது என்ன” என்று வீணையைக் காட்டிக் கேட்டாள்.
“மியூசிக் இன்ஸ்ட்ருமென்ட்”
“அதுக்கு உண்டான மரியாதை தர வேண்டாமா?” என்றாள் வார்த்தைகளுக்கு வலிக்கும் வண்ணம் அழுத்தமாக!
அமைதியாக நின்றான்.
“உங்க இஷ்டத்துக்கு அங்க இங்கன்னு தூக்கி வைக்கிறீங்க. எந்த இடத்தில வைக்கிறோம்னு பார்க்க மாட்டிங்களா?” என்று திட்டினாள்.
“சப்ஜெக்ட் எந்த இடத்தில இருந்தா நல்லா கிளாரிட்டி கிடைக்கும்னு…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “சப்ஜெக்ட்டா? அது சங்கீதம்! சரஸ்வதி!” என்று அதிருப்தியில் அலறினாள்.
“இல்லை பாவை போட்டோ எடுக்கும் போது சப்ஜெக்ட்னு…” என்று விளக்கம் சொல்லும்போதே, “திரும்பத் திரும்பச் சொல்லாதீங்க!” என்று எச்சரித்தாள்.
“ஜஸ்ட் போட்டோ எடுக்கிறதனால என்னாகிடப் போகுது!?”
“வேண்டாம்!” என்றாள் எரிச்சலாக!
“ஏன்?”
“நான் சரஸ்வதி, சங்கீதம்னு மதிக்கிற ஒரு விஷயத்தை, நீங்க சப்ஜெக்ட்னு சொல்லி ஹேண்டில் பண்ற விதம் எனக்குப் பிடிக்கல! அதனால வேண்டாம்!!” என்றாள் கோபத்துடன்!
சட்டென ஒரு பொறி தட்டியது பாண்டியனுக்கு! உடனே, “எவ்ளோ ஆசையா போட்டோ எடுத்துக் கொடுக்க நினைச்சேன்! இப்படி முடியாதுனு சொல்ற?” என்றான்.
“அப்படித்தான் சொல்லுவேன்!”
“ஒரு நாள்தான பாவை! அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாதா?”
“முடியாது”
“ஏன்?”
“ஏன்னா அது என்னோட நம்பிக்கை! ஒரு நாளுக்காக அத மாத்த முடியாது!!” என்றாள் பிடிவாதமாக!
“இதேதான பாவை நானும் சொன்னேன்!” என்று பிடித்துக் கொண்டான்!!
‘எதைச் சொல்கிறான்?’ என்று புரிந்து கொள்ள முடியமால் நின்றாள்.
“அன்னைக்கு, எனக்காக கோயிலுக்குள்ள வாங்கனு கூப்பிட்டயே அதைச் சொல்றேன்!” என்றான் அவள் புரிந்து கொள்ளும்படி!
‘ஏன் இந்த இரண்டையும் சம்மந்தப் படுத்துகிறான்!?’ என்பது போல் பார்த்துக் கொண்டிருக்க, “எனக்கு நம்பிக்கை இல்லாத ஒன்ன பண்ணவே மாட்டேன்னு சொன்னேன்! ஆனா நீ ஒத்துக்கவேயில்லை!” என்றான்.
‘ஓ! இதைச் சொல்லத்தான் இந்த ஒப்புமையா?’ என்ற அளவிற்குப் புரிந்தது.
“உன் நம்பிக்கையை என்மேல திணிக்க பார்த்த! நானும் என் நம்பிக்கையை உன் மேல திணிக்கப் பார்த்தா எப்படி இருக்கும்? யோசிச்சுப் பாரு!?”
யோசித்தாள். ‘நான் வரமாட்டேன்’ என்று சொன்னானே தவிர, ஒரு முறை கூட
‘நீ போகக் கூடாது’ என்று சொல்லவேயில்லை என்ற அளவிற்குப் புரிந்தது.
“நமக்கு நம்பிக்கை இல்லாத, பிடிக்காத ஒரு விஷயத்தைப் பண்ண சொன்னா டிஸ்கம்ஃபர்டபிள் பீல் வரும்”
இன்று தனக்கு வந்ததே? முதலில் அசௌகரியமான உணர்வு! பின் அதுவே அதிகமாகி கோபமாக வெளிப்பட்டது!!
“அப்படி ஒரு பீல் வரும்போது முடியாதுனு சொல்றது தப்பில்ல பாவை. அதான் அன்னைக்கு முடியாதுனு சொன்னேன்” என்று அன்றைய தன் நிலையை புரிய வைத்தான்.
சற்றுநேரத்திற்கு முன், ‘முடியாது’ என்று அவனிடம் சொன்னது காதிற்குள் வந்து ஒலித்துவிட்டுச் சென்றது.
“அப்படி முடியாதுனு சொல்றதுனால, அன்பு இல்லைனு அர்த்தம் இல்ல” என்று, தன் அன்பைப் புரிய வைத்தான்.
புரிந்தது. மேலும் புரிந்தது சரியென்றும் தோன்றியது.
“இன்னைக்கு நீயும் முடியாதுனு சொன்ன, அப்போ உனக்கு என்மேல அன்பு இல்லைனு அர்த்தமா?” என்று ஒரு கேள்வி கேட்டுப் பார்த்தான்.
“அதெப்படி? இதுக்காக எல்லாம் எப்படி அன்பில்லாம போகும்?” என்று பதில் கேள்வி கேட்க முடிந்ததே தவிர, பதில் சொல்ல இயலவில்லை!
“நீதான் சொல்லணும்! ஏன்னா நீதான் அப்படி சொன்ன” என்று சொல்லிவிட்டு, அவள் யோசிக்கட்டும் என்று அமைதியாகிவிட்டான். அவளும் யோசித்தாள்.
நான் இவனை புரிந்து கொள்ளவில்லையா? இவனிடம் எதிர்பார்த்தது தவறா? இன்று புரிந்தது அன்று ஏன் புரியவில்லை? தன் முடிவு தவறான முடிவா? என்று கேள்விகள் கேட்டுக் குழம்பினாள்.
அவள் குழப்பதைக் கண்டவன் அவளருகில் வந்து நின்றான். கண்களில் கலக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.
“ஹனி!” என்று தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான் அக்கறையாக! பின், “நடந்ததையெல்லாம் யோசிக்க கூடாது” என்றான் அறிவுறையாக!
சரி என்று தலையாட்டினாள்.
“ஆனா இதைமட்டும் புரிஞ்சிக்கோ!” என்றதும், ‘எதை?’ என்பது போல் இமை உயர்த்தி கணவனைப் பார்த்தாள்.
“ரிலேஷன்ஷிப்ல டிஸ்கம்ஃபர்டபிளா பீல் பண்ற இடத்தில ‘நோ’ சொல்லலாம். தப்பில்ல! அப்படிச் சொல்றதுனால அன்பு இல்லைனு அர்த்தம் இல்ல!” என்று தன் அன்பின் அறிவியலை விளக்கினான்.
மேலும், “புரியுதா ஹனி?!” என்று கேட்க, “புரியுது! இனி பாலோவ் பண்றேன்” என்றாள் இறுக்கமான மனநிலையுடன்!
சிரித்துக் கொண்டே, “நீ ஏற்கனவே பலோவ் பண்ணியிருக்க ஹனி” என்றான் அவளை இலகுவாக்கும் முயற்சியில்!
“எப்போ?” என்றாள் கொஞ்சம் இயல்பு நிலைக்கு மாறி!
“அன்னைக்கு கச்சேரி முடிச்சிட்டு வர்றப்போ கார்ல உன்னை கிஸ் பண்ண வந்தேன். அப்போ நீ உன் மறுப்ப காட்டின!”
யோசித்து முடிக்கவும், ‘ப்ச்’ என்று எரிச்சல் கொண்டாள். முதல் முத்தத்திற்கு மறுத்தது. அவன் மன்னிப்பு கேட்டது. அனைத்தும் ஞாபகத்திற்கு வந்தது. அவன் எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடையும் பொழுது தன்னைப் போல் அன்பு இல்லை என்று வாதம் செய்து கொண்டிருக்கவில்லை என்று தெரிந்தது.
மாறாக தன் நிலையைப் புரிந்து கொள்கிறான். மேலும் அவன் கோவிலுக்குள் வர மறுத்ததும், தான் நடந்து கொண்ட விதத்தை நினைத்து வருந்தினாள்.
கடைசியாக, ‘நான் ஏன் அப்படி?’ என்று சுய அலசலில் இறங்கினாள். எதனால் ஏமாற்றம் அதிகமாகி பாவைக்குள் வெறுமை பரவியதோ, அதை வைத்தே அவள் மாற்றத்திற்கான விதையை விதைத்தான் பாண்டியன்!
அவள் யோசித்தது போதும் என நினைத்து, “ஹனி” என்றான். அவனிடமிருந்து விலகி நின்று, “எப்படி போட்டோ எடுக்கிறதுனு சொல்லித் தந்திடுங்க. நானே எடுத்துகிறேன்” என்றாள்.
“அது சரி” என்று சிரித்துக் கொண்டே,”வா” என்று கேமராவிற்கு முன் அவளை நிறுத்தினான். அவளுக்குப் பின்னே நின்று, சொல்லித் தர ஆரம்பித்தான்.
“சப்ஜெக்ட் ஷார்ப்பா வேணும்னா, பேக்ரௌன்ட்-அ இப்படி ப்ளர்டா, கிரிமியா வச்சிக்கலாம். ஷேடோவ் இல்லாம பார்த்துக்கணும். அன்ட், ” என்று சொல்லிக் கொண்டே போன போது பின்னே திரும்பி அவனைப் பார்த்தாள்.
‘என்னை பார்க்காத! கேமராவை பாரு பாவை’ என்று சைகையால் சொன்னது மட்டுமில்லாமல் அவள் நாடியைப் பிடித்து முன்னே திருப்பி, மீண்டும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான்.
கன்னத்துப் பருக்களை உரசிச் செல்லும் அவனது பேச்சின் மூச்சுக் காற்றும், மூச்சுக் காற்றின் பேச்சும், சொல்லிக் கொடுப்பதைக் கவனிக்க மறந்துவிட்டு, சொல்லிக் கொடுப்பவனைக் கவனிக்கத் தூண்டியது.
மீண்டும் திரும்பி அவன் விழிகளைப் பார்த்தாள்.
“மிஸஸ் பாண்டியன்! கொஞ்சம் கவனிக்கிறீங்களா?” என்று கேட்க, ‘ச்சே! நான் ஏன் இப்படி?’ என்று முன்னே திரும்பி மட்டியைக் கடித்துக் கொண்டு நின்றாள்.
அவள் கவனச் சிதறலில் தெரிந்த காதலைக் கண்டு பாண்டியனுக்கு களிப்பு கட்டுக்கடங்காமல் கரைபுரண்டோடியது! இருந்தும் கற்றுக் கொடுப்பதைத் தொடர்ந்தான். அவள் கனவு முக்கியம் என்பதால்!!
*********************
சிவா வீடு! நளினி, மதி தொழில் சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர். சென்பகம் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.அக்கணம் சிவா அறையிலிருந்து வந்து, “ம்மா! கொஞ்சம் வேலை இருக்கு! போயிட்டு வந்திடுறேன்” என்றான்.
“அண்ணா இன்னைக்கு ஏதோ ட்ரிப் போகணும்னு சொன்ன?” என்று நளினி கேட்டாள்.
“ஆமா! ஈவினிங்தான் பிளைட்”
“அப்போ வீட்ல இருக்கலாமே? ரெண்டு மூணு நாள் எப்படியும் ரெஸ்ட் எடுக்க முடியாது! இன்னைக்கும் எதுக்கு அலைஞ்சிகிட்டு?” என்று மதி கேட்டார்.
“அப்படிலாம் ஒன்னும் இல்லைப்பா! முக்கியமான வேலை! போயே ஆகணும்” என்று மட்டும் சொன்னான்.
செண்பகத்திற்குப் புரிந்தது! இரண்டு மூன்று நாட்கள் சென்னையில் இருக்க முடியாது என்பதால் பாவையைப் பார்க்கச் செல்கிறான் என்று!!
உடனே, “முக்கியமான வேலைனு சொல்றான்ல. போகட்டும் விடுங்க” என்று, அவர்களைப் பார்த்துச் சொன்னவர், “நீ போ கண்ணா” என்றார் மகனிடம். அனைவரிடமும் சொல்லிவிட்டு விரைவாகக் கிளம்பினான்.
அவன் போனதும், “ப்பா! அண்ணனோட முகத்தில இப்ப கொஞ்சம் சந்தோசம் வந்திருக்கு! பார்த்தீங்களா?” என்று நளினி கேட்க, “ம்ம்ம்! நானும் பார்த்தேன்” என்றார் மதி.
இதைக் கேட்டு செண்பகம், ‘தன் மனைவியுடன் சகஜமாகப் பேசுவதால் வந்த சந்தோஷம் இது’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
“கொஞ்ச கொஞ்சமா பாவையை மறந்திட்டு வர்றான்னு நினைக்கிறேன்” என நளினி சொன்னதும், “அது நல்லதுதான்” என்று மதி சொன்னார்.
இப்படி யோசிக்கிறார்களா? உண்மை தெரியும் போது எப்படி உணர்வார்கள்? இவர்கள் என்ன சொல்வார்கள்? என்ற கேள்விகள் வந்து செண்பகத்திற்கு கலக்கத்தைத் தந்தன!
மேலும் சிவா விடயத்தைக் கணவரிடம் மறைக்கிறோமே என்ற கவலையும் வந்தது!!

