Kathambari Novels
அவள் அறையில் புடவைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் பாவை. “தேனு” என்று சங்கர் வர, ‘என்ன?’ என்று அவனைப் பார்த்தாள்!
“அப்பா சொல்றதை நினைச்சிக் குழம்பாத. கிருஷ்ணாம்மா-ங்கிற பேருக்கு மரியாதை இருக்கு! இல்லைனு சொல்லலை. ஆரம்பத்தில அதுக்காக உங்க ரெண்டு பேருக்கும் சான்ஸ் வந்திருக்கலாம். ஆனா அதுக்கப்புறம் வந்த வாய்ப்பெல்லாம் உங்க திறமைக்காகத்தான் வந்திருக்கும்”
‘திறமை மீது நம்பிக்கை வை’ என்று அவன் சொன்னதை, பாவை உள்வாங்கிக் கொண்டாள்.
“அப்படியே பாட்டி பேர வச்சித்தான் சான்ஸ் வருதுனா, எங்களுக்கும் சான்ஸ் கிடைச்சிருக்கும்ல” என்றான்.
அவன் சொல்வது சரிதான் என்று தோன்றியது.
“கண்டிப்பா இந்த வீட்டுக்காக, அப்பா சப்போர்ட் இருக்கிறதால கௌசிக்கு கொஞ்சம் சீக்கிரமா சான்ஸ் கிடைக்கலாம். ஆனா அதுக்கு அர்த்தம் உனக்கு கிடைக்காம போகாதுனு இல்லை”
அந்த வார்த்தைகள் அவளுக்கு நம்பிக்கை தந்தன.
“எனக்குத் தெரிஞ்ச சபா மெம்பெர்ஸ், கச்சேரி நடத்திறவங்க காண்டாக்ட்ஸ் கொடுக்கிறேன். நீ சான்ஸ் கேட்டுப்பாரு”
நன்றியோடு அவனைப் பார்த்தாள்.
“இன்னொன்னு! உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்க போட்டியில பாட்டியோட பேரைக் கெடுத்திடக் கூடாது” என்றும் சொன்னான்.
அவள் முகம் ஒருமாதிரி மாறியது.
அதைக் கண்டவன், “உனக்கு மட்டும் சொல்றேன்னு நினைக்காத. அப்பாகிட்ட
சொல்ல முடியுமானு தெரியல. ஆனா கண்டிப்பா கௌசிகிட்ட சொல்லுவேன்” என்றுவிட்டு, “நான் கொண்டு போய் விடவா?” என்று கேட்டான்.
வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.
“சரி கிளம்பு” என்று போகப் போனவனை, “ஒரு நிமிஷம்” என்று நிறுத்தினாள்.
‘சொல்லு’ என்பது போல் என்றான்.
“தேங்க்ஸ்” என்றவள் எதையோ சொல்லத் தயங்கி நின்றாள்.
‘என்ன சொல்லப் போகிறாள்?’ என்பது போல் அவன் நின்று கொண்டிருந்தான்.
“நீங்க… உங்க லைஃப பார்க்கணும்” என்றாள்.
பதில் பேசாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தான். ஏன் எதுவும் சொல்லவில்லை என்ற யோசனையில் குனிந்து கொண்டாள். அறை வாசலுக்குச் சென்றவன் கதவில் லேசாகத் தட்டினான். நிமிர்ந்து பார்த்தாள்.
“ஆல் தி பெஸ்ட் பாவை” என்று சொல்லவிட்டுச் சென்றான். அவனது ‘பாவை’ என்ற ஒற்றை அழைப்பு, அவளுக்கு ஓராயிரம் நிம்மதியைத் தந்தது!
இனி சங்கர்? என்றுமே கண்ணியமாகத்தான் காதலை வெளிப்படுத்தியவன். எந்த நிலையிலும் அந்த கண்ணியம் தவறவில்லை. மேலும் சற்று அவகாசம் வேண்டும், அவனது அன்பை மறக்க! மடைமாற்ற!!
இங்கே சங்கருக்கு பாவை மேல் இருந்தது உண்மையான அன்பு! அது அவளது கனவை நோக்கி ஒரு அடி அவளை முன்னே நகர்த்தியிருக்கிறது!!
கடகடவென எடுத்து வைத்தாள். பத்து நிமிடங்களுக்குப் பின்னர் வந்த முதல் நொடியில், இந்த வீட்டிற்கும் அவளுக்கும் இருந்த சம்பந்தம் முடிந்தது! ஆம்! வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள்!!
****************
முட்டுக்காடு கடலின் பின்-நிலை-நீர் பகுதி! வெயிலால் வெளிறிப் போயிருந்த வானம்! அதைத் தொட்டுக் கொண்டிருப்பது போல் காட்சிப் பிழையுடன், உயர்ந்த அடுக்குமாடிக் கட்டிடங்கள்!
அதனையடுத்து நேர்கோடாய் தெரியும் தார் சாலை, அதில் சிறு புள்ளிகளாய் வாகனங்கள்! அதனையடுத்து… மத்தியான வெயிலைப் போர்த்தியிருக்கும் கடலின் பின்-நிலை-நீர்ப்பரப்பு!
தெளிவில்லா பின்னணி காட்சியாக இவைகள்!
நீர்ப்பரப்பின் ஓரத்தில் ஒரு பழைய படகு! நீர் ஆழத்தில் அங்கங்கே நிற்கின்ற குச்சிகள்! துள்ளியமான காட்சியாக இவை இரண்டும்!!
சட்டென ஒரு ‘கிளிக்’!
கேமராவில் எடுத்ததைச் சரி பார்த்தான் பாண்டியன். அந்தநொடி அலைபேசி கூப்பிட்டது. கேமராவிலிருந்து கவனத்தை எடுக்காமல் அலைபேசியை எடுத்துப் பார்த்தான்.
திரையில் ‘ஹனி’ என்ற பெயர்! அவ்வளவுதான்!! அதற்கு மேல் அவன் கவனம் மொத்தமும் அவள்தான்! “ஹனி” என்றான் அழைப்பை ஏற்றுக் கொண்டே! அத்தனை அவசரம்!! அத்தனை அவசியம் கூட!!
அமைதி மட்டுமே அவளிடம்!
“ஹனி பேசு! ஏதாவது பேசு? எப்படி இருக்க? ஏன் ஃபோன் அட்டன் பண்ணல?” என்றவன் குரலில் கொஞ்சம் பதற்றம்! கொஞ்சம் பரிதவிப்பு! நிரம்ப பாசம்!!
“ஃபிரீயா இருக்கீங்களா?” என்றுதான் ஆரம்பித்தாள்.
“ஏன் இப்படிக் கேட்கிற? எதுனாலும் சொல்லு” என்றான் அவஸ்த்தையாக!
“எனக்கு உங்களைப் பார்க்கணுமே?” என்றாள் மெல்லிய குரலில். “உங்ககிட்ட கொஞ்சம் பேசணுமே?” என்றாள் அதைவிட மெல்லிய குரலில்.
“எங்கே வர? எப்போ வரணும்? நீ வீட்டுக்கு வர்றியா? இல்லை நான் வந்து கூப்பிட்டுக்கவா?” என்றவன் குரலில் வேகம், வேகம் மட்டுமே!
“பேசணும்” என்றாள் ஒற்றை சொல்லில்!
“பேசலாம் பாவை! ஆனா என்னாச்சு உனக்கு?” என்று கேட்டான், அவள் பேசும் விதத்தின் பேதமை கண்டு!
“ஒன்னுமில்லை… நீங்க வாங்க…” என்று மட்டும் சொன்னாள்.
“இப்போ நீ எங்க இருக்க” என்றவன் குரலில் ஏதோ ஒரு இயலாமை!
“வேணிம்மா வீட்டுக்கு வெளிய நிக்கிறேன். வர்றீங்களா?” என்றாள்.
“வர்றேன் பாவை. ஆனா நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ நம்ம வீட்டுக்குப் போயேன். நான் வந்திடுறேன். இப்படி நிக்க வேண்டாமே” என்று கேட்டுப் பார்த்தான், அவளுக்குக் காத்திருப்பது பிடிக்காது என்று புரிந்து!
ஓரிரு நொடிகள் அமைதி மட்டுமே அவளிடம்!! பின், “பரவால்ல! வெயிட் பண்றேன்” என்றாள் காத்திருப்பதில் குறையில்லை என்பது போல்!
“சரி வர்றேன்!” என்று அழைப்பைத் துண்டித்தான்.
என்ன நடந்திருக்கும் என்று யோசித்துக் கொண்டே கேமரா, அதன் ஸ்டாண்ட் மற்றும் பைகள் என்று அனைத்தையும் எடுத்து காரில் வைத்தான்.
மஹிந்திரா தாரில் ஒரு அதிவேக பயணத்திற்குப் பின் மனம் முழுவதும் நிரம்பியவள் நிற்கும் சாலைக்குள் வந்தான்.
வேணிம்மா வீட்டின் சாலை! அந்தச்சாலை ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, பாவை முன்னே வந்து நின்றான் பாண்டியன்.கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேல் ஆயிற்று மனைவியைப் பார்த்து! அவளுடன் பேசி!
மனைவியைப் பார்த்தான்! ஆனந்தங்கள் தொலைத்த முகம்! அது நிறைய அழுதிருக்கும் போல! மனதின் நலிவு, உடல் மெலிவாய் வெளிப்பட்டிருந்தது!
சூழ்நிலையைக் சரியாக கையாண்டிருக்கலாமோ என்ற எண்ணம் வந்தது, சோர்ந்து போயிருக்கும் சரிபாதியைப் பார்க்கையில்!
இமைதட்டாமல் பார்த்ததில் இருவிழியின் கருவிழிகள் களைப்படைந்தன!
ஆம்! களைப்படைந்தன! காரணம், கவலையில் தோய்த்தெடுத்த அந்த முகம்!
சுருக்கமாக, சிறு பிரிவினால் மனைவியைப் பாராமல் தவித்துப் போயிருந்த கணவனுக்கு, தண்ணீருக்குப் பதில் தாகத்தை நீட்டுவது போல் இருந்தது, அவள் தோற்றதைப் பார்த்தபின்!!
மனைவிக்கு?!! அவள்தான் சொல்ல வேண்டும்! வெளிப்படையாக எதையும் அவள் காட்டவில்லை!!
சற்று நேரம் பார்த்துக் கொண்டே இருந்தவன், பேச்சைத் தொடங்கினான்.
“எப்படி இருக்க பாவை? ஏன் ஃபோன் அட்டன் பண்ணலை? என் மேல அவ்ளோ கோபமா?” என்று பாசம், உரிமை கலந்த கோபம், ஏக்கம், வருத்தம் என எல்லா உணர்வுகளின் கலவையாகக் கேள்விகளை அடுக்கினான்!
எத்தனை உணர்வுகளுடன் கேள்விகள் வெளிவந்தாலும், அவளிடமிருந்து வெளிப்பட்டது திடமான ஒரு மௌனம்தான்!!
சுற்றி இருந்த சூழலலைப் பார்த்தான். சூரியன் வெப்பத்தைப் பொழிந்து கொண்டிருந்த வேளை! சிறு கடைகள் இருந்தன! ஒன்றிரண்டு வாகனங்கள் போவதும் வருவதுமாய் இருந்தன! கொஞ்சம் ஜன நடமாட்டம் இருந்தது!!
அதனால், “இங்க நின்னு பேச வேண்டாம், வீட்டுக்குப் போகலாம்” என்று அவள் பெட்டியை எடுத்து காரில் வைத்துவிட்டு வந்து, “வா” என்றான்.
“பேசணும்னு சொன்னேனே?” என்றே நின்றாள்.
“ஃபர்ஸ்ட் வீட்டுக்குப் போகலாமே பாவை” என்று கேட்டுப் பார்த்தான்.
“இல்ல! முதல பேசணும்” என்று மறுத்துவிட்டாள்.
“இங்க நின்னு எப்படிப் பேச?” என்று சட்டென கேட்டு, “கார்ல போய்க்கிட்டே பேசலாமா?” என்று சமாதானக் குரலில் கேட்டான்.
‘சரி’ என்று காரில் ஏறிக் கொண்டாள். அந்தச் சாலையிலிருந்து மஹிந்திரா தார் கிளம்பியது.
அதன்பிறகு அரைமணி நேரத்திற்கு தலைநகரின் தார்ச்சாலை! தாரத்திடம் தளும்பும் மௌனம்! இவை இரண்டு மட்டுமே பாண்டியன் கவனத்தில்!!
புறநகர்ப் பகுதியில் மரநிழலில் வாகனத்தை நிறுத்தியிருந்தான். இருவரும் இறங்காமல் இருக்கையிலே இருந்தார்கள்! ஆனால் வார்த்தைகள் இல்லாமல் இருந்தார்கள்!
“பாவை” என்று மௌனத்தை விரட்டும் முதல் வார்த்தையை உச்சரித்தான்!
இருக்கையில் இருந்தபடி மெதுவாகத் திரும்பி அவன் விழிகளைப் பார்த்தாள்.
“ஏன் வெளிய வந்து நின்ன, வீட்லயே இருந்திருக்கலாமே? நான் வந்து கூட்டிட்டு வந்திருப்பேனே?” என்றான்.
அவள் பதில் பேசவில்லை. பார்வையையும் வேறு திசைக்கு மாற்றவில்லை.
“என்னாச்சு? ஏன் இப்படி இருக்க? வீட்ல பிரச்சனையா?” என்று கேட்டான்.
அவன் கேள்வியை ஆமோதிப்பது போல் ஒரு சிறு தலையசைப்பு.
“நீ திரும்பி வீட்டுக்கு வந்ததுல ஏதாவது…” என்று, அவன் சொல்லி முடிக்கும் முன், ‘அது இல்லை’ என்பது போல் மறுத்து தலையசைத்தாள்.
“வேறென்ன?”
“திருச்சியிலிருந்து வந்ததுல இருந்தே பிரச்சனை!” என்றாள்.
நெற்றி முடிச்சுகள் மட்டுமே அவனிடம்!
“வேணிம்மா வீட்ல… வேணிம்மா தவிர யாருக்கும் என்னை பிடிக்காது” என்று என்றோ சொல்லியிருக்க வேண்டியதை இன்று சொன்னாள்!
“பிடிக்காதா?” என்று அதிர்ந்தவன், “ஏன்?” என்றான் புரியாமல்!
“கௌசிக்கு போட்டியா நான் வந்திருவேன்னு நினைச்சி…” என்று தொடங்கி, குடும்பத்தினரின் கடுமையான பேச்சுகள், வேணிம்மாவின் கண்டிப்புகள், அதனால் அவர்கள் ஒதுங்கிக் கொண்டது, அவள் ஒதுக்கப்பட்டது… என்று எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்.
அவள் சொல்லி முடித்த பின் ஓர் அடர் அமைதி இருவரிடமும்!
அன்று அவள் பாட்டி, ‘நீயும் இப்படி சொல்றியே’ என்று பேசியது ஞாபகத்தில் வர, “ஸோ, நான் உரிமையில்லனு சொன்னது உன் பாட்டியையும், உன்னயும் பாதிக்க காரணம். கரெக்ட்டா” என்று கேட்டான்.
‘சரியா?’ என்று கேள்வி கேட்டவனுக்கு, ‘சரியென’ பதில் சொல்லுவது போன்ற ஓர் அமைதி அவளிடம்!!
“முன்னாடியே சொல்லியிருக்கலாமே! கொஞ்சம் கேர்ஃபுல்லா சிச்சுவேஷன ஹேண்டில் பண்ணியிப்பேனே?” என்றவன் குரலில் இயலாமையும் இருந்தது! இன்னலும் தெரிந்தது!!
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் முகம் இறுக்கமாக மாறியது.
“நீ ஏன் சொல்லலை” என்றான் கொஞ்சம் எரிச்சலாக!
‘என்ன பதில் சொல்ல?’ என்று தெரியாத ஓர் மௌனம் அவளிடம்!!
“எத்தன தடவை பேசு, பேசுனு சொன்னேன். அப்பலாம் சொல்லாம இருந்திட்டு, இப்ப வந்து…” என்று பாதியிலே நிறுத்தினான்.
“வேணிம்மாதான் சொன்னாங்க, முதல ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கோங்க! அப்புறம்…” என்று அவள் சொல்லி முடிக்கும் முன், “பாவை” என்று அவன் அழுத்திச் சொல்ல, அமைதியானாள்.
“இத சொல்லியிருந்தாலே போதும், புரிஞ்சிருப்பேன்” என்று சங்கடத்துடன் சொன்னவன்… சன்னல் மேல் கைவைத்து சாலையைப் பார்த்தான்.
மேலும் அவளைச் சந்தித்த நாளிலிருந்து, அவள் நடந்து கொண்ட விதங்கள் கண்முன் விரிந்தன்.
‘எனக்காகவா? என்னை கேர் பண்றீங்களா?’ என்று கேட்டது! ‘சண்டை போடக் கூடாது… கஷ்டப்படுத்தக் கூடாது’ என்று சொன்னது! ‘அக்கறை இல்லையா? அன்பில்லையா?’ என்று வாதம் செய்தது! இதெல்லாம் அவள் குரலில் அவன் காதிற்குள் ஒலித்தது.
அவையெல்லாம் அன்று நடந்ததுக்கான சலசலப்பு என்று நினைத்தது தவறு எனத் தெரிந்தது! அதற்கு முன், அவள் வாழ்வில் நடந்த சங்கட நிகழ்வுகளின் வெளிப்பாடு என்பதே சரி எனப் புரிந்தது!!
அடுத்த நிமிடமே, அவள் ஏக்கத்தின் வீக்க அளவு புரிந்தது. அது அவனைத் தரமாகத் தாக்கியது! சாலையிலிருந்து கவனத்தை எடுத்து சரிபாதி மேல் வைத்தான்.
பாவையின் காறை எலும்புகள் பாறையாக இறுகியிருந்தன! அது அவள் கவலையைக் கடினப்பட்டு மறைக்கின்றாள் என்பதை காட்டிக் கொடுத்தன!!
‘அன்பின் ஆரம்பப் பாடத்தில் இருப்பவளுக்கு, அன்பின் அறிவியலைப் புரிய வைக்க நினைத்தது தவறோ’ என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டான். தவறுதான் என்று பதில் வந்ததும் சுருக்கென்று வலித்தது பாண்டியனுக்கு!
‘அவளுக்கும் வலித்திருக்குமே!’ என்று தோன்ற வாஞ்சையின் வெளிப்பாடாய், அவள் முகத்தின் முன் விழுந்திருந்த ஒன்றிரண்டு முடிகளை ஒதுக்கிவிட்டான். “அவ்ளோதான, பேசியாச்சுல. போகலாமா?” என்று சாந்தமாகக் கேட்டான்.
மறுத்து தலையசைத்தாள்.
“இன்னும் பேசணுமா?”
‘இல்லை’ என்பது போல் இருந்தாள்.
“பேச வேறேதும் இல்லைனா வீட்டுக்குப் போகலாமே?”
“நான் வரலை”
“வரலையா, ஏன்” என்றான் இதமாக!
“வரல” என்றாள் இலகுவாக! பின், “என்னமோ எனக்குத் தனியா இருக்கணும்னு தோணுது” என்றாள் இடியை இறக்கும் விதமாக!
இதை எப்படி ஏற்றுக்கொள்ள என்ற அர்த்தம் செறிந்த மௌனம் அவனிடம்!! அவள் முடிக்கற்றையிலிருந்து கையெடுத்தவன், “ஏன் பாவை… வீட்டுக்கு வர பிடிக்கலையா?” என்றான்.
“ம்ம்ம்” என்றாள் அழுத்தமாக!
“நான் அன்னைக்கு அப்படிப் பேசினதுக்காகவா?”
“ம்ம்ம்” என்றாள் ‘அதுதான் என்பது’ போல!!
“நீ ‘இங்க இருக்க பிடிக்கலைனு’ சொன்னப்புறம்…” என்று பேச்சிற்கு காரணம் சொல்ல நினைத்தவன், “இது சரியான காரணம் இல்ல” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.
உடனே, “தப்புதான்… சாரி! ரொம்ப சாரி…” என்று மன்னிப்பு கேட்டான்.
“எல்லாருக்கும் முன்னாடியும் எப்படிச் சொன்னீங்க?” என்றவள் குரலில், அவன் உண்டாக்கிய காயத்தின் வலி தெரிந்தது.
“சரி! அப்போ எல்லோருக்கும் முன்னாடியும் சாரி கேட்கிறேன். அது உனக்கு ஓகேவா?” என்று, என்ன செய்தால் அவள் வலி போகும் என்ற வழி தெரியாமல் கேட்டுப் பார்த்தான்!
“ம்கூம்!! அதெல்லாம் வேண்டாம்” என்றாள்.
‘வேறென்ன செய்தால், அவள் மனம் மாறும்’ என்று யோசித்தான்.
“நீங்க அப்படிச் சொல்லிட்டுப் போனதுக்கப்புறம், பிரவீன் அண்ணாகிட்ட ஹெல்ப் கேட்டு நின்னேன்” என்றாள் அசௌகரியமாக!
“ம்ம்ம் தெரியும்!”
“அன்னைக்கு ரூமுக்கு… உங்களை பார்க்க வந்தேன். எல்லாரும் உங்களுக்கு ஆறுதல் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஏதோ நான் தனியா இருக்கிற மாதிரி, ஒரு…” என்றவளுக்கு வருத்தத்தை வரையறுக்க வார்த்தைகள் வரவில்லை!
“அப்படிலாம் யோசிக்காத” என்று அவள் வலக்கை விரல்களை வலுவாகப் பிடித்து, வாஞ்சையாக வருடிக் கொடுத்தான்.
“அப்புறம் நம்ம ரூம்க்கு போயிட்டேன்! என்னால திரும்பிப் போக முடியாதுனு சொல்ல நினைச்சேன். அதான் ஃபோன் பண்ணேன். நீங்க எடுக்கவே இல்ல!”
“அன்னைக்கு கோபம்… அதான்” என்றவனுக்கு அன்று சரியென தோன்றியது இன்று தவறென தாக்கியது.
“அப்புறம்கூட, நீங்க வருவீங்க, உங்ககிட்ட எல்லாம் சொல்லணும்னு மெதுவா எடுத்து வைச்சேன். ஆனா நீங்க வரவே இல்ல” என்றாள், இதயம் படும் பாட்டை மறைக்க, இடக்கை பெருவிரலால் நெற்றிப் பொட்டை அழுத்தியபடி!
“ஹனி” என்றழைத்து ஆறுதலாக, ஆதரவாக அவள் நெற்றியில் நீவிவிட்டான்.
“வீட்டுக்குப் போய்கூட கொஞ்ச நேரம் ஃபோன் பண்ணுவீங்கனு நினைச்சேன். ஆனா….” என்று பாதியிலே நிறுத்தினாள். மேலும் அவன் விரல்களிருந்து தன் விரல்களை பிரித்தெடுத்துக் கொண்டாள்.
‘ஏன் பாவை?’ என்பது போல் ஏக்கமாகப் பார்த்தான்.
‘வேண்டாம்’ என்று சொல்வது போல் நெற்றியை நீவிவிடும் அவனது கரத்தை தடுத்து நிறுத்தினாள்.
அவனது ஆறுதலா, ஆதரவோ… அறவே அவளுக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்தவனுக்கு நகக்கண்ணில் நங்கூரம் இறக்குவது போன்ற ஒரு வலி!
அதே வலியுடன், “ரெண்டு நாளைக்கு அப்புறம்தான் யோசிக்க ஆரம்பிச்சேன். பால்கனியில, ராக்கிங் சேர்ல நாம பேசினது ஞாபகம் வந்தது. அப்புறமா அது மட்டும்தான் மைன்ட்ல” என்று தனித்திருந்த தன்னிலை பற்றிச் சொன்னான்.
அவளும் எதிலும் பற்றில்லாமல் இருந்தது ஞாபகத்திற்கு வந்தது பாவைக்கு!
“உனக்கு எத்தனை டைம் ஃபோன் பண்ணேன்? ஒரு தடவைக்கூட நீ எடுக்கவே இல்லை!” என்று தன் மனக் குமுறலை, மனைவியின் செயலைக் குறைபட்டுக் கொண்டே சொன்னான்.
“கொஞ்ச நேரம் உங்ககிட்டருந்து ஃபோன் வரும்னு இருந்தேன். வரலைனதும், எதுலயும் பிடிப்பில்லாத மாதிரி ஆயிடுச்சி” என்று அன்றைய மனநிலையைச் சொல்லி, “இப்போ யார்மேலயும் நம்பிக்கையே இல்ல” என்று இன்றைய தன் மனநிலையையும் சொன்னாள்.
‘நம்பிக்கை இல்லை’ என்ற அவளின் வார்த்தை, முதல் நாள் இருவரும் பேசிய நிமிடத்திற்கு அவனைக் கூட்டிச் சென்றது. ‘உங்க மேல நம்பிக்கை இருந்தால் மட்டுமே அழுவேன்’ என்று அவள் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
மனைவியைப் பார்த்தான். சாலையை வெறித்துப் பார்த்து அமர்ந்திருந்தாள். கஷ்டப்படுகிறாள். இருந்தும் கண்ணீர் விட மறுக்கிறாள் என்றால்… தன்னை நம்பவில்லை என்று விளங்கியது. ஆணிவேர் என்று நினைத்தவள் வேறாகிப் போகின்ற ஒதுக்கம் தெரிந்தது.
அவனால் பேச்சைத் தொடர முடியவில்லை. ஆனால் அவள் தொடர்ந்தாள்.

