Kathambari Novels
முழுதாய் இரண்டு நாட்கள் தேவைப்பட்டன! நடந்து நிகழ்வுகளுக்குள்ளே நடந்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு, அதைக் கடந்து வருவதற்கு!
வேணிம்மா குடும்பத்தினர் அனைவரும், சிவா மேல் கோபமாக இருந்தனர். அதிலும் கிரிக்கு கோபம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது!
அம்மா மேலிருந்த அன்பு மற்றும் பாவை மீதிருந்த வெறுப்பு! இது இரண்டும் சேர்ந்து சிவபாண்டியன் மீதான கோபத்தை என்றும் தணியாத ஆத்திரமாக, வெறுப்பாக மாறியிருந்தது கிரிக்கு!!
வேணிம்மா… எதிலும் கவனம் இல்லாமல் படுத்தே இருந்தார். எழவேயில்லை. பேத்தி வாழ்க்கையை நினைத்து பெரும் வேதனையில் உழன்றார்.
தேன்பாவை… வேணிம்மா தவிர உறவென யாருமில்லை என்ற எண்ணத்தை உள்ளம் முழுதும் நிரப்பியிருந்தாள். அதை நினைத்து நினைத்து தன் மனதை திண்ணமாக்கிக் கொண்டாள்.
உறவென்று ஒருவன் இருக்கிறான் என்ற நினைப்பு வரவில்லை! ஏனென்றால், கணவனின் வார்த்தைகள், அவளை அவ்வளவு பாதித்திருந்தது!! பாதிப்பின் ஆழம் சற்று அதிகம்தான்!!
*******************
சிவபாண்டியன் வீட்டில் நளினி, மதி இருவரும் சிவாவின் சந்தோஷம் மற்றும் மரியாதை கேள்விக் குறியானதிற்குக் காரணம் பாவை என்று நினைத்தனர்! பாவை மட்டும்தான் என்று நம்பினர்!
ஆதலால் பாவையின் மீது கோபத்தில் இருந்தனர்!!
சிவா வாழ்வில் பாவை இல்லாமல் இருந்தால், அவனுக்குப் பழைய மகிழ்ச்சி திரும்பிவிடும் என்று நம்புகின்றனர். அவன்மீது அதிக பாசம் இவர்களுக்கு! எனவே இவர்கள் இப்படி!
முடிந்தவரை அவனுக்கு ஆறுதல் கூறி உண்ண வைத்து, அவர்கள் இருவரும் தொழில் சம்பந்தமான வேலைகளைப் பார்க்கச் சென்றனர்.
செண்பகம் மகனின் வாழ்க்கையை நினைத்து வருந்துகிறார்!
சிவபாண்டியன் பாவை இல்லாத மூன்றாவது நாளின் காலையிலிருந்து ஒரே இடத்தில உட்கார்ந்திருந்தான்.
சற்றுநேரம் இங்கே இருக்க பிடிக்கலை என்று பாவை பேசியதை நினைத்துக் கோபம் கொண்டிருந்தான். அதன்பின், ஏன் அப்படிச் சொன்னாள், ஏன் அவள் பாட்டி அப்படி நடந்து கொண்டார் என்று யோசித்தான்.
உரிமையில்லை என்று சொன்னதற்குப் பின்னே இருவரின் எதிர்வினைகள் இப்படி இருந்தன. அந்த வார்த்தை அவர்கள் இருவரையும் எதற்கு இவ்வளவு பாதிக்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தான்.
அதன்பின் அவள் எப்படிப் பேசினாலும், தான் அப்படிப் பேசியிருக்க கூடாது என்ற எண்ணம் வந்தததின் முடிவில், தன் வார்த்தை பிரயோகங்கள் அவள் மேல் வைத்த அன்பிற்கான அவமானம் என்று உணர ஆரம்பித்தான்.
அறையைச் சுற்றிப் பார்த்தான்! பால்கனிக்குக் கண்கள் சென்றன! தளிர்த்து இருக்கும் ‘போன்சாய்’களுக்கு இடையே, அவன் மேல் சரிந்து நின்றுகொண்டு அவள் பேசிய தாளமொழிகள் ஞாபகத்திற்கு வந்தன!!
மேற்கூரை தென்பட்டது! தூறலில் நனையாதிருக்க தன் தோளைப் பிடித்து அவள் தொங்கியது தெரிந்தது! தன் தோள்வளைவைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்!!
ராக்கிங் சேரை பார்த்தான்! கால்களை மடக்கி, மடியில் அமர்ந்து, மனதில் தலை சாய்த்து அவள் அசைந்தாடிய தருணங்கள் நினைவில் வந்தாடின!!
அமர்ந்திருந்த மெத்தைகூட… தன் முதுகில் முகம் வைத்து தூங்குபவளின் முகத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது!
மேலும் வண்ண வண்ண கூழாங்கற்களும் வட்டவடிவ கண்ணாடியும் அவள் ஸ்வர வரிசைக்காக ஏங்கின! ஏன், வனங்களை நேசிப்பவனும் கூடத்தான்!!
ஆக மொத்தத்தில்… வருடக் கணக்கில் அவன் வாழ்ந்த அறைதான்! இருந்தும், நாட்கணக்கில் வாழ்ந்தவளின் நினைவுகளை மட்டும் காட்டுகிறது என்றால் அதெல்லாம் பிரிவின் பெரிய பெரிய துயரங்கள்!!
இத்தனைக்கும் அன்யோன்யம் அதிகமில்லை! அன்பும் சரியான விதத்தில் பகிரப்படவில்லை! அப்படியென்றால் இதெல்லாம் காதலின் பெரிய பெரிய உயரங்கள்!!
அவளை அலைபேசியில் அழைத்துப் பார்க்கலாம் என்று தோன்றியது. அதை செய்தான்! அவள் அழைப்பை ஏற்கவில்லை! ஏமாற்றமாக இருந்தது! மீண்டும் மீண்டும் அதையே செய்தான்.
அந்தோ பரிதாபம்! அவனது எந்த ஒரு அழைப்பையும் அவள் ஏற்கவில்லை!!
அவள் பாட்டிக்கு அழைக்கலாம் என்று அழைத்துப் பார்த்தான்.
அவர்தான் எதிலும் கவனம் இல்லாமல் இருக்கிறாரே? அவரும் அழைப்பை ஏற்கவில்லை.
இன்னும் கோபத்தில் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டான்! சரி! வேறு யாரிடமாவது பேசிப் பார்க்கலாம் என்று கிரியை அழைத்துப் பார்த்தான்.
கிரி அழைப்பை ஏற்றவுடன், “எதுக்கு ஃபோன் பண்ண? என் அம்மாவை வீட்ட விட்டு வெளியே போக சொல்வியா? அவங்க யாருன்னு தெரியுமா? உன்மேல சரியான கோபத்தில் இருக்கேன். வீட்டுப் பக்கம் வந்திடாத! இனி ஃபோனும் பண்ணிடாத” என்று கோபப்பட்டுப் பேசி, அழைப்பைத் துண்டித்தார்.
மகனாக அவர் பேசுவதில் நியாயம் இருக்கிறது என்று நினைத்தாலும், ‘ஏன்டா அழைத்தோம்?’ என்ற எண்ணமும் வந்தது! இதற்கிடையே பிரவீன் அழைத்து, அன்று பாவை உன்னிடம் பேச சொன்னாள் என்று சொல்லியிருந்தான்.
கஷ்டமாக இருந்தது! ஆனாலும், இங்கிருக்க பிடிக்கவில்லை என்றவள் ஏன் தன்னிடம் பிரவீனைப் பேச சொன்னாள் என்ற கேள்வி வந்தது.
மீண்டும் பாவையின் அலைபேசி எண்ணுக்கே அழைக்க ஆரம்பித்தான்.
அதன்பிறகு அஞ்சன இரவு வரை… அவள் அலைபேசி எண்! அவளுக்கான அழைப்புகள்! அவளில்லா அரற்றல்கள்! இவை மட்டுமே பாண்டியனுக்கு!!
**************
வேணிம்மா வீடு! எதற்காகவும் அறையை விட்டு வெளியே வராமல்… மூன்று நாட்கள் அறைக்குள்ளே அடைபட்டிருந்தார்கள் பாவையும் வேணிம்மாவும்!
நான்காம் நாள் இரவில் வேணிம்மா மெல்ல எழுந்தார். பாவை பால்கனியில் நிற்பதைப் பார்த்து, இவள் உறங்காமல் என்ன செய்கிறாள் என்ற எண்ணம் வந்தது. இருந்தும் அவள் நிலைமை புரிந்ததால், எதுவும் கேட்கவில்லை. சற்று நேரம் வீட்டிற்குள்ளே நடந்து வரலாம் என்று வெளியே வந்தார்.
அனைவரும் தூங்க சென்றுவிட்டார்கள் போல! வீட்டிற்குள் ஒரே நிசப்தம்!!
இரவு விளக்கின் ஒளியில் சுவரைப் பிடித்துக் கொண்டே மெதுவாக எட்டுகள் எடுத்து வைத்தார். வீட்டின் சுவர்களில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டே நடந்தார்.
அப்படியே வந்தவர் கிரியின் அறை வாசல் வரை வந்துவிட்டார்.
மீண்டும் வரவேற்பறைச் செல்லத் திரும்புகையில், கிரி அறையில் பேச்சு சத்தம் கேட்டது. அதிலும் பாவையின் பெயர் காதில் விழுந்தது. அவளைப் பற்றி என்ன பேசுகிறான் என்ற கேள்வி வர, நின்று கொண்டார்.
“ப்பா, பாவை ரெண்டு நாளா ப்ராக்டிஸ் எதும் பண்ணல” என்று கௌசி குரல் கேட்க, “அவ லைஃப் நினைச்சி பீல் பண்றா போல?” என்றார் மீனாட்சி.
“இந்த மாதிரியே இருந்தா கச்சேரி அன்னைக்கு நல்லா பாட முடியாது” என்று கௌசி சொல்ல, “விடும்மா! அவ நல்லா பாடினா என்ன? பாடலைனா என்ன?” என்ற கிரியின் குரல் அத்தனை அலட்சியத்துடன் வெளியே கேட்டது!
“அது சரிதான்!” என்றார் மீனாட்சி.
“இல்ல மீனாம்மா. ரெண்டு பேரும் சேர்ந்து பாடறப்ப, அவ நல்லா பாடலைனா, எனக்கு அஃபக்ட் ஆகும்ல?” என்ற கௌசியின் குரலில் அவளுக்கான சுயநலம் அப்பட்டமாக கேட்டது!
“ரெண்டு கச்சேரி பார்ப்போம். அப்புறமும் நல்லா பாடலைனா… பாட்டிகிட்ட அதையே காரணமா சொல்லி, அவளோட இம்ஃபார்ட்டன்ஸ் கம்மி பண்ணிடு” என்று கிரி சொல்ல, “இதுகூட சரிதான்” என்றார் மீனாட்சி.
“அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நான் தனியா பாட ஆரம்பிச்சிடனும்” என்று கௌசி சொல்ல, “அப்படியே அவ பாடாம இருக்கிற மாதிரி பார்த்துக்கணும் நாம” என்றார் கிரி.
“அப்புறம் ஒருநாள் நான் கிருஷ்ணாம்மாவோட இசை வாரிசா மாறிடுவேன்!” என்ற கௌசியின் குரலில் ஆசை அதிகப்படியாக இருந்தது.
“நிச்சயமா! கௌசல்யா கிரிதரன்… சங்கீத கலாநிதி கிருஷ்ணவேணியோட இசை வாரிசு!!” என்ற கிரியின் குரலில் கொஞ்சம் கம்பீரம்! கொஞ்சம் கனவு! கொஞ்சம் பெருமை! நிறைய பேராசை!!
“அவ வாழ்க்கை… இப்படியானது நமக்கு ஒருவிதத்தில நல்லதுதான் போல!?” என்ற மீனாட்சி, “ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனை?” என்று கேட்டார்.
“தெரியலை! ஆனா, அவன் மேல சரியான கோபத்தில் இருக்கேன்! எவ்வளவு தைரியம் இருந்தா, நம்ம அம்மாவை வெளியே போகச் சொல்லியிருப்பான்! கண்ணு முன்னாடி வந்தான்னா, அவ்வளவுதான்!” என்று கிரியின் கடுங்கோப பேச்சுகள் தொடர்ந்தன!
அவர்கள் பேச்சை ஜீரணிக்க முடியாமல் வேணிம்மா மெதுவாகச் சுவரைப் பிடித்துக் கொண்டே நடந்து பூஜை அறைக்குச் சென்றார்.
இங்கே… வேணிம்மாவைத் தவிர இன்னொரு நபராலும் அறைக்குள் பேசியது கேட்கப்பட்டிருந்தது. அந்த நபர் சங்கர்!
பிள்ளைகளைப் பற்றித் தெரியும். இருந்தும் இப்படிப் பேசிக் கொள்வார்களா? என்ற வருத்தத்தில் வேணிம்மா இருந்தார்! இவர்களுக்குப் பாவை மேல் அன்பு இல்லை என்று தெரியும்.
ஆனால் இவ்வளவு வெறுப்பை சுமந்து கொண்டு இருக்கிறார்களா? இவ்வளவு மட்டமான எண்ணமா? கௌசி! இவள் ஏன் இப்படி? இசை இவளுக்கு மட்டும் சொந்தமானதா?
மற்றவர்கள் பாடுவதை வைத்து, எதற்கு தன் திறமையைத் தீர்மானிக்கிறாள்? இசை வாரிசா? சொத்துக்குத்தான் வாரிசு இருக்க முடியும். திறமைக்கு எப்படி?
இப்படி நிறைய கேள்விகளை, மன குமுறல்களை இறைவன் முன் வைத்தார். குடும்பத்தினரைப் பற்றி நினைக்க நினைக்க மூச்சு வாங்கியது. கடைசியில், இவள் ஏன் பயிற்சிகள் எடுத்துக் கொள்ளவில்லை என்று பாவை மீது கோபம் வர, வேக வேகமாக நடந்து அறைக்குச் செல்லப் பார்த்தார்.
உடல் மிகவும் ஒத்துழைக்கவில்லை. மெது மெதுவாக அறைக்கு வந்து, “பா… பாவை” என்று அழைத்தார்.
“வேணிம்மா” என்று பால்கனியிலிருந்து அறைக்குள் ஓடி வந்தாள். அதற்குள் வேணிம்மா மெத்தையில் அமர்ந்தார்.
அறையின் விளக்கைப் போட்டுவிட்டு, அவர் முன் வந்து அமர்ந்து, “இன்னும் தூங்கலையா வேணிம்மா? ஏதும் வேணுமா?” என்று கேட்டாள்.
“நீ… ரெண்டு நாளா… ப்ராக்டிஸ் பண்ணலயா” எனும் போதே மூச்சு வாங்கியது.
அதற்குப் பதில் சொல்லாமல், “உங்களுக்கு என்னாச்சு? ஏன் வியர்க்குது? நான் கிரி மாமாவைக் கூப்பிடுறேன்” என்று எழப் போனவளை, “உட்காரு” என்ற வேணிம்மாவின் அழுத்தமான குரல் தடுத்தது.
“வேணிம்மா” என்று அழும் குரலில் அழைத்து அமர்ந்தாள்.
“ப்ராக்டிஸ்…” என்று ஆரம்பிக்கும் போதே, “பண்ணல வேணிம்மா!” என்றாள் அவர் நிலை கண்டு கலங்கிப் போய்!
“ஏன்?” என்றார் கண்கள் கலங்க!
அமைதியாக இருந்தாள்.
புரிந்தது! நடந்ததை நினைத்து இப்படி இருக்கிறாள் என்று புரிந்தது! “பாவை” என்று அழைத்தார் குனிந்திருந்தவளைப் பார்த்து!
நிமிர்ந்து பார்த்தாள். இப்போது அவருக்கு இன்னும் வியர்த்திருக்க, “கஷ்டமா இருக்கா?” என்றோர் கேள்வி கேட்டார்! இதுவரை கேட்டிடா கேள்வி!
அதற்குப் பதில் சொல்லாமல், “வேணிம்மா! நான் கிரி மாமாவைக் கூட்டிட்டு வர்றேன்” என்று மீண்டும் எழப் போனவளை, “உன்கிட்ட பேசணும்! உட்காரு” என்றவர் குரலில் குருவிற்கான தோரணை வந்திருந்தது.
“சீக்கிரம் சொல்லுங்க” என்றாள் பணிவுடன்! அதே சமயம் பதற்றத்துடன்!!
“உனக்கு கௌசியோட பாடறது பிடிக்குதா? அதனால உன்னோட தனித்துவம் குறையற மாதிரி நினைக்கிறியா?” என்று நேரடியாகக் கேட்டார்!
“அப்படியெல்லாம் இல்லை வேணிம்மா!?” என்று மழுப்பினாள்!
“உண்மையை சொல்லு! உன் வேணிம்மாகிட்ட பொய் சொல்லாத” என்றார் பேத்தியின் பாசமிகு பாட்டியாக மாறி!
எதுவம் சொல்லவில்லை. ஆனால் அதுவே சொல்லியது, அவள் விருப்புகளை!
“பாவை! நீ இனிமே தனியா பாடு” என்றார்.
“வேணிம்மா” என்றாள் அதிர்ச்சியாக!
“தனியா பாடு! கௌசியோட சேர்ந்து பாட வேண்டாம்” என்று முடிவெடுத்தவர், “இனி அவகூட சேர்ந்துப் பாடாத! வேண்டாம்!!” என்று முணுமுணுத்தார்!
‘ஏன் இப்படி தீடிரென?’ என்று புரியாமல், “அதெப்படி முடியும்?” என்றாள்.
“தெரியலை! நீதான் பார்த்துக்கணும். ஆனா தனியா பாடணும்!! பாடுவியா?” என்று சொல்லும் போதே, நேராக அமர்ந்திருக்க முடியாமல் கட்டிலில் சாய்ந்து கொண்டார்.
“கண்டிப்பா பாடறேன். உங்களுக்கு என்ன செய்யுது?” என்று பயந்து, “இருங்க, கிரி மாமா…” என்று எழப் போனவளை, “பாவை” என்ற கெஞ்சும் குரல் தடுத்தது!
“சொல்லுங்க வேணிம்மா” என்றாள் கரகரத்த குரலில்!
“நான் இல்லனா” என்று மூச்சு வாங்கியவர், “சமாளிசிப்பியா?” என்று கேட்டார்.
“ஏன் இப்படிப் பேசறீங்க” என்றவள் கண்கள் கலங்கிவிட்டன!
“நான் இல்லனாலும், நீ தனியா பாடறதுக்கு முயற்சி பண்ணனும்”
“இப்படிப் பேசாதீங்களேன் ப்ளீஸ்!” என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.
“தைரியமா இருக்கணும். சரியா??” என்று அவள் கன்னங்கள் பிடித்து, கண்கள் பார்த்துக் கேட்டார்.
கண்ணீர்தான் பதில் அவளிடம்! வேறொன்றுமில்லை!!
“யார் கூட இருந்தாலும் இல்லைனாலும்… நீ பாடணும். உன் கவனம் பாடுறதுல இருக்கணும். சரியா?!”
அவர், என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்தது! ஆனால் அதற்கும் பதில் கண்ணீர்தான்!!
“சரியா?” என்று அவள் புஜங்களைப் பிடித்து அழுத்திக் கேட்டார்! அழுத்தமாக கேட்டார்!!
“சரி” என்று ஆமோதித்து, “இப்படி எல்லாரும் பாதியில விட்டுப் போனா, நானும் என்னதான் செய்வேன்?” என்று தாய், தந்தை, லட்சுமி பாட்டி, தனக்கானவன், இவர்களைப் பிரிய நேர்ந்ததின் வருத்தத்தை ஒரே வரிக்குள் அடக்கினாள். பின் கவலையை அடக்கமுடியாமல் ஏங்கி ஏங்கி அழுதாள்.
“இதுக்கு மேல என்னால எதும் செய்ய முடியுமானு தெரியல பாவை? முடிஞ்சா கண்டிப்பா செஞ்சிருப்பேன்” என்று அவரும் அழுதுவிட்டார்.
“இதுவே போதும் வேணிம்மா” என்றாள் அவர் கண்ணீர் துடைத்துவிட்டு, தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு!
“உன் அகௌண்ட்ல பணம் கொஞ்சம் இருக்கு. யூஸ் பண்ணிக்கோ”
கண்ணீர்தான் பாவையிடம்!
“பாவை! போ போ கௌசிய கூட்டிட்டு வா. அவ… ரெண்டு வார்த்தை… ” என பாதியிலே நிறுத்தினார். அதற்குமேல் முடியவில்லை.
“இதோ வேணிம்மா” என்று எழுந்தவள், “பாவை” என்றவரைப் பார்த்தாள்.
‘வா’ என்பது போல் சைகை செய்தார். அவள் அவரை நோக்கி குனிந்ததும், அவள் கன்னங்களைப் பிடித்து உச்சி நெற்றில் முத்தமிட்டார்.
“வேணிம்மா” என்று கடைசியாக அழைத்து, அவர் கன்னம் வழிந்தோடும் கண்ணீருக்குள் ஒரு முத்தம் வைத்தாள்.
அதன்பின், “கௌசி” என்று சத்தமாக அழைத்துக் கொண்டு சென்றாள். சற்று நேரத்தில் அதிகப்படியான வியர்வையால் உடல் நனைந்து குளிர்ந்திருந்தது வேணிம்மாவிற்கு! உயிரைப் பிடித்து வைத்திருப்பது போல் மூச்சுகள் வந்தும் போயும் இருந்தன!!
அவரை அப்படிப் பார்த்ததும், அனைவரும் பதறிவிட்டார்கள். அம்மா, பாட்டி, அத்தை என்ற அழைப்புகளுடன் அவரைச் சுற்றி அமர்ந்து கொண்டனர்.
கிரி மருத்துவமனை வரும்படி அழைத்தார். வேணிம்மா வர மறுத்துவிட்டார். கலை மருத்துவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினான். சங்கர், ஓரமாக நின்ற பாவையைப் பரிதாபமாகப் பார்த்தான்.
மற்றவர்கள் வேணிம்மா கால், கைகளைத் தேய்த்துவிட்டபடியே அவரைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அவர் கண்களோ அடிக்கடி பாவையைப் பார்த்தன.
மீனாட்சியும் கௌசியும் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்திருந்தனர்.
“கிரி” என்று அழைத்தார் வேணிம்மா!
“என்னம்மா?”
“கௌசி… பாவை… ஒரு பாட்டு பாட சொல்லேன்” என்றவர் குரல் தேய்ந்து போயிருந்தது.
“இப்ப எதுக்கும்மா? நீங்க ஹாஸ்பிட்டல் வாங்களேன்” என்ற கிரியின் குரலில், கொஞ்சம் கண்டிப்பு! கொஞ்சம் கோபம்! நிறைய பாசம்!
“கிர்… என்னோட கடைசி ஆசை கிரி… பாவை… கௌசி… பாடுங்களேன்” என்று விட்டுவிட்டுப் பேசினார்.
“என்னால முடியாது பாட்டி” என்று கௌசி அழுதாள்.
ஆனால் பாவை ஒரு ஜமுக்காலத்தை எடுத்து விரித்தாள். வீணையை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள். பாடுவதற்குத் தயாரானதும் கௌசியைப் பார்த்தாள். கௌசி அப்பாவைப் பார்த்தாள். ‘போ’ என்று கிரி தலையசைத்தார்.
கௌசியும் வந்து ஜமுக்காலத்தில் அமர்ந்து கொண்டாள். அந்த நேரத்திலும் இந்தப் பாட்டு பாடலாம் என்று தன் விருப்பத்திற்கு ஏற்ப முடிவெடுத்தாள்!
வேணிம்மா பாவையைப் பார்த்தபடி இருந்தார். பாவையும் பார்த்தாள். அவர் நிம்மதியில்லாமல் இருக்கிறார் என்று தெரிந்தது. அவரின் நிம்மதி எது என்று புரிந்தது! அவர் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்றும் புரிந்தது!
வீணையை மீட்டிக் கொண்டே, “கண்ணே என் கண்மணியே…” என்று பாவை பாடல் பாட ஆரம்பித்தாள். சட்டென அனைவரும் பாவையைப் பார்த்தனர்! அது கௌசி சொன்ன பாடல் அல்ல! அதனால்!!
வேணிம்மா உள்ளம் நிறைந்த நிம்மதி அடைந்தார்! தான் எடுத்த முடிவினால் பாவையின் தனித்தன்மை பாதிக்கப் படுகிறதோ என்று வருத்தப்பட்டவருக்கு, இன்று பாவையின் பாடல் பெரும் ஆறுதல்!!
மற்றவர்கள் உள்ளக் கொதிப்புடன் பாவையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“கண்ணே என் கண்மணியே” என்று மூன்று முறை பாடியவள், “மண்ணுலகில் என் வாழ்வு வளம்பெற…” என்று உள்ளம் உணர்ந்து பாடினாள்.
கௌசி பாடவில்லை! கிரி ‘பாடு’ என்று கண்களால் சொல்லியும் பாடவில்லை. அப்படியே அமர்ந்திருந்தாள். அத்தனை கோபம் பாவைமீது!
இதைப் பாவை கண்டு கொள்ளவில்லை. பாடலை பாடியபடியே இருந்தாள்!!
“குயிலிசை குழலோசை” என்று இரண்டு முறை பாடியவள், “தாலேலோ” என்று பாடி தாலாட்டிட, “தேன்குரலாள் இந்தத் தேன்பாவை” என்று கடைசியாக சொன்னார் பாவையின் வேணிம்மா!!
****************
அடுத்த நாள் சிவா வீடு!நான்காவது நாள்! நாட்கணக்கில் வாழ்ந்தவள்தான் தன் நாடித்துடிப்பு என்று நினைக்கும்படி இருந்தான் பாண்டியன். நேராகச் சென்று வேணிம்மாவிடம் பேசும் முடிவுக்கு வந்திருந்தான்.
மதியும் சிவாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். செண்பகம் காஃபி குடித்துக் கொண்டிருந்தார். அக்கணம், வேக வேகமாக நளினியும், பிரவீனும் வந்தனர்.
“வாங்க மாப்பிள்ளை” என்று பெரியவர்கள் இருவரும் வரவேற்றனர்.
“டிவி பார்த்தீங்களா?” என்றான் பிரவீன்!
“என்னாச்சு?” என்று சிவா கேட்கும் போதே, பிரவீன் டீவியை ஆன் செய்தான்.
கர்நாடக இசை உலகில் மிகவும் பிரபலமானவரும், சங்கீத கலாநிதி விருது பெற்றவருமான கிருஷ்ணாம்மா என்ற கிருஷ்ணவேணி அவர்கள், இன்று அதிகாலை இரண்டு மணியளவில் இயற்கை எய்தினார்.
இதுதான் செய்தி! திடிரென எப்படி என்று அனைவரும் ஆடிப்போய்விட்டனர். சாப்பிடுவதை நிறுத்தி, “போகலாம்” என்று மட்டும் சொல்லி எழுந்தான் சிவா!
சரியென்றார் செண்பகம் அரைமனதுடன்! அவருக்குத் தெரியும் மகன் அழைத்தும் பாவை பேசவில்லை என்று!
தன் பாட்டி பற்றி பாவை ஏன் சிவாவிடம் சொல்லவில்லை என்ற ஆதங்கம் வந்தது. அன்று அதிகப்படியாகப் பேசிவிட்டோமோ என்று நினைத்தவருக்கு, இன்று அதிருப்தி வர ஆரம்பித்திருந்தது.
இருந்தும் செண்பகமும் மதியும் மகனிற்காகச் சம்மதித்தனர்.
நளினி வர மறுத்துவிட, பிரவீனும் வரவில்லை. செண்பகம், மதி, மகனுடன் சேர்ந்து பாவை வீட்டிற்குக் கிளம்பினார்கள்.
போகும் போதே பாவை மாமா கிரி சொன்னது ஞாபகத்திற்கு வந்து, அவரை எதிர்த்து எப்படி வீட்டிற்குள் செல்ல, எப்படிப் பாவையைப் பார்க்க என்று சிவா யோசித்துக் கொண்டே இருந்தான்.
**********************
கிரிதரன் வீடு! இனி கிரிதரன் வீடுதான்!!
வீட்டின் வரவேற்பறையில் இருந்த பொருட்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு, அங்கு கிருஷ்ணாம்மா உடல் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தது.
இசை உலக பிரமுகர்கள் வந்து மாலை வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர். கலை, சங்கர் கண்ணாடிப் பேழைக்கு அருகே நின்றனர்.
கிரி, மீனாட்சி கணவர் வரவேற்பறையில் ஒரு மூலையில் இருந்தனர். அஞ்சலி செலுத்த வந்தவர்கள் அவர்களுக்கு ஆறுதல் சொல்லிச் சென்றனர். மீனாட்சி, கிரி மனைவி, ரதி, கௌசி ஒரு அறையில் இருந்தனர். அறைமுழுவதும் ஒரே அழுகுரல்கள்தான்!
வேணிம்மா அறையில் பாவை இருந்தாள். தரையில் அமர்ந்து மெத்தையில் தலை சாய்த்திருந்தாள். அழுதழுது ஓய்ந்து போயிருந்தாள். ஆறுதலாக பேசிட யாருமில்லை. ஆதரவாய் தேற்றிடவும் எவருமில்லை.
தனக்கென இருந்த ஒரே உறவும் இப்போது இல்லை என்ற கவலை கண்களில் தெரிந்தது. அந்தக் கவலையின் ஊடே… கிரி மாமாவை எதிர்த்து, வேணிம்மா ஆசைப்படி ‘எப்படித் தனியாகப் பாட?’ என்று யோசித்தாள்.
இதேநேரத்தில் வீட்டு வரவேற்பறை உறவினர்கள், இசைக் கலைஞர்களின் சோகங்கள் மற்றும் ஆறுதல் வார்த்தைகள் என்று இருந்தது!
கிருஷ்ணாம்மா உடலுக்கு சிவா மற்றும் அவன் பெற்றோர் மரியாதை செய்து முடித்து வந்து ஓரமாக நின்று கொண்டார்கள். கிரி அவர்கள் வந்திருப்பதைப் பார்த்தார். சிவாமீது கோபம் இருந்தாலும், பார்த்தவுடன் அதை வெளிப்படுத்த முடியாத நிலையில் இருந்தார்.
அந்தக் கூட்டத்தினுள் சிவாவின் பார்வை, எங்கே, எப்படி இருக்கிறாள் என்று மனைவியைத் தேட ஆரம்பித்தன! நான்கு நாட்கள் ஆயிற்று… அவளிடம் பேசி, அவளைப் பார்த்து! அந்த ஏக்கத்துடனே அறையைச் சுற்றி வந்தன கண்கள்!!
இல்லை! இங்கே அவள் இல்லை! யாரிடம் கேட்க என்று யோசிக்கையில், கிரி வந்து அவனருகில் நிற்கவும், “அங்கிள்…” என்று தொடங்கும் போதே, “கொஞ்சம் வாங்க” என்று அவர்களை வெளியே அழைத்து வந்தார்.
அந்த தளத்தின் நடைக்கூடத்தில் ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். ஒரு ஒழுங்கில்லாமல் காலணிகள் கழட்டப்ட்டிருந்தன. மலர்கள் அங்கங்கே உதிர்ந்து கிடந்தன.
சிவாவிற்கு எப்படியோ என்று தெரியவில்லை. ஆனால் மதி, செண்பகம் ஏன் வெளியே கூட்டி வந்திருக்கிறார் என்று தர்மசங்கடமாக உணர்ந்தனர்.
கிரியின் கண்கள் சிவந்து, முகம் வீங்கியிருந்ததால், “தைரியமா இருங்க” என்று மதி ஆறுதல் கூறி, “திடீர்னு எப்படி” என்று இழப்பைப் பற்றிக் கேட்டார்.
கிரி லேசாக தலையசைத்தார். ஆனால் பதிலேதும் சொல்லாமல் சிவாவைப் பார்த்துக் கொண்டே நின்றார்.
“அங்கிள் நான்…” என்று சிவா பேசத் தொடங்கும் போது, “உன்கிட்ட ஏற்கனவே சொல்லியிருந்தேன்ல வீட்டுப் பக்கம் வந்திடாதனு” என்றார் அவர்கள் மட்டும் கேட்கும்படி! ஆனால் கடுமையான குரலில்!!
“சொல்லிருந்தீங்க. ஆனா…” என்று சிவா ஆரம்பிக்கையில், “என்ன ஆனா, உங்க வீட்டுக்கு வந்த பெரியவங்களை இப்படித்தான் மரியாதை இல்லாம நடத்துவீங்களா?” என்றார் கிரி கோபமாக!
“அவங்க என்ன பண்ணாங்கன்னு…” என்று செண்பகம் ஆரம்பிக்கும் போதே, “ம்மா நான் பேசிக்கிறேன்” என்றான் சிவா.
“என்ன பேசப் போற? உன்னை உள்ள விடக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனா, அப்படி நடந்துக்க முடியாத நிலையில இருக்கேன். உன்னைப் பார்த்தவுடனே, ஏன்டா இப்படிப் பண்ணன்னு கேட்க நினைச்சேன். ஆனா இப்போ எதையும் கேட்கிற மனநிலையில இல்லை” என்று அமைதியாகக் கோபப்பட்டார்!
வரும் வழியில் கிரியுடன் அலைபேசியில் பேசியது பற்றி பெற்றோரிடம் சிவா சொல்லியிருந்தான். இருந்தும் அவர் நடந்து கொள்ளும் முறையை மதியால் ஒத்துக்கொள்ள இயலவில்லை. அங்கே நிற்காமல் சென்றுவிட்டார்.
மதி சென்றதும், “அங்கிள் கோபப்படாம… ” என்று சிவா ஆரம்பிக்கும் போதே, “எப்படிக் கோபப்படமா இருப்பேன்னு நினைக்கிற?! என் வீட்ல எல்லாருமே உன்மேல கோபமா இருக்காங்க!” என்று சொல்லும் போது, வந்திருப்பவர்களில் ஒருவர் “கிரி” என்று அழைத்தார்.
“வர்றேன்” என்ற கிரி, “இன்னைக்கு, நான் செய்ய வேண்டிய கடமை நிறைய இருக்கு! உன்கூட சண்டை போட்டுக்கிட்டு இருக்க முடியாது. அதனால நீ…” என்று, ‘கிளம்பு’ என்பது போல் திரும்பிச் செல்லும் வழியைக் காண்பித்தார்.
‘இங்கே நிற்காதே! போ’ என்பதை மறைமுகமாகச் சொல்லிவிட்ட திருப்தி கிரி முகத்தில் தெரிந்தது! அவ்வளவுதான்! சென்றுவிட்டார்!
“என்னடா இப்படிப் பேசுறாரு? இப்ப என்ன பண்ண?” என்றார் செண்பகம்!
“தெரியல. இந்த சிச்சுவேஷன்ல, உள்ள போய் பாவையைப் பத்திக் கேட்டா நல்லா இருக்காது” என்று ‘என்ன செய்ய?’ என்று யோசித்துவிட்டு, “ம்மா! பாவைக்குப் ஃபோன் பண்ணிப் பார்க்கிறேன்” என்று சொல்லி, மனைவிக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தான்.
இல்லை! இம்முறையும் சிவாவின் அழைப்பை ஏற்கவில்லை பாவை!!
‘என்ன ஃபோன் எடுக்கலயா’ என்று செண்பகம் கண்களால் கேட்டார். ‘இல்லை’ என்பது போல் ஒரு பெரு மூச்சு அவனிடம்!
“அவங்க பாட்டியைச் சொன்னதில, அவளுக்கு கோபமா இருக்குமோ?” என்று புரியாமல் கேட்க, “இருக்கலாம்மா” என்று மட்டும் சொன்னான்!
உரியவள்தான்! உறவுகள் மறுப்பை உதாசீனப் படுத்திவிட்டு உள்ளே சென்று பேசலாம். ஆனால், அவள் எப்படி எதிர்வினை புரிவாள் என்று தெரியவில்லை. என்ன மனநிலையில் இருக்கிறாள் என்றும் புரியவில்லை!
தங்கள் இருவரின் பிரச்சனையால் இந்த நேரத்தில்… இந்த வீட்டில்… எந்த ஒரு அசௌகரியமான சுழலும் உருவாகிவிடக் கூடாதென தெளிவாக இருந்தான். எனவே… அம்மாவை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
காரில் போகையில் மதி மகனைப் பார்த்தார். நான்கைந்து நாளிலே நைந்து போனது போல் இருந்தான். இப்படி அவன் இருந்து பார்த்ததில்லை என்பதால், “ஏன் சிவா… இந்த விஷயத்தை கொஞ்சம் ஆறப் போடலாமே?” என்றார்.
“ஆமா கண்ணா. அப்பா சொல்றதும் சரிதான? அவ வீட்ல துக்கம் நடந்திருக்கு. நம்ம கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாமே” என்றார் செண்பகம்.
“கொஞ்சம் உன் வேலையையும் பாரேன். மதுரைல ஒரு லேண்ட் வந்திருக்குனு சொன்னேனே சிவா?!” என்ற மதி, “நடந்ததையே நினைச்சுகிட்டு இருக்காத! எல்லாம் சரியாகும். பாவை அவங்க பாட்டி வீட்லதான இருக்கா! அதனால, நீ உன் வேலையைப் பாரு. பத்து நாள் கழிச்சி யோசிக்கலாம்” என்றார்.
தந்தையைப் பார்த்தான். பிள்ளைகள் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுத்தே பழகியதால் இதைக்கூட ஒரு கோரிக்கை போல்தான் கேட்டிருந்தார். தாயைப் பார்த்தான். பாவை பேச்சுகளில் உடன்பாடு இல்லை என்றாலும், ‘அவள்தான் தன் வாழ்க்கை’ என்று புரிந்ததால், அதை ஒட்டியே அவரது பேச்சு இருந்தது.
தான் இப்படி இருப்பது, அவர்களுக்குக் கவலை அளிக்கிறது என்று புரிந்தது. “சரிப்பா! போய் பார்க்கிறேன்” என்றான். சில நாட்கள் தன் வேலைகளைப் பார்க்கலாம் என்று முடித்தவன், வேறு ஒன்றை யோசித்தான்.
அது கிரியைப் பற்றியது!
அன்றும் இன்றும் பேசும் பொழுது, அவர் அம்மாவை மரியாதை இல்லாமல் நடத்தியதாகச் சொல்கிறாரே தவிர, பாவையைப் பற்றி ஏன் பேசவில்லை?!! பேசவில்லையா? பேச விருப்பம் இல்லையா? என்று யோசித்தான்.

