Kathambari Novels
புத்தாண்டு புகைப்பட கண்காட்சி வேலைகள்… தொழில் நிறுவனங்களுக்குப் புதுவருட நாட்காட்டிகளுக்கான புகைப்படங்கள் தயாரித்தல்… பாவையுடன் நேரம் செலவிடுதல்… என்று ஒரு வாரம் தனக்கென நேரம் ஒதுக்க முடியாமல் ஓடிக் கொண்டிருந்தான் பாண்டியன்.
அன்றும் வேலை நிமித்தமாக அதிகாலை மூன்று மணியளவில் பாண்டிச்சேரி கிளம்பிச் சென்றுவிட்டு, மதியம் இரண்டு மணிக்கு மேல் வீட்டிற்கு வந்தான்.
செண்பகம் கதவைத் திறந்ததும் உள்ளே நுழைந்தவன், சோஃபாவில் இருந்த நளினியைப் பார்த்து, “ஹே நீ என்ன இந்த நேரத்தில இங்க இருக்க?” என்றான்.
அவள் பதில் சொல்லவில்லை. “மாப்பிள்ளை கூட ஏதோ சண்டையாம்” என்று செண்பகம் சொல்ல, அதைப் பற்றி எதுவும் தங்கையிடம் கேட்காமல், “பாவை எங்கம்மா?” என்றான்.
“சொல்ல மறந்திட்டேன் பாரு. அவ யாரு…” என்று யோசித்து, “ஆங்! கௌசல்யா, அவ கூட்டிட்டுப் போனா! கச்சேரிக்குப் புடவை எடுக்கணும்னு” என்றார்.
“ஓ!”
“சாப்பிட்டியா?”
“சாப்பிட்டேன் மா” என்றவன், தங்கையிடம், “எவ்ளோ நேரம் இருப்ப” என்றான்.
“ஈவினிங் வரைக்கும்!” என்றாள்.
‘சரி’ என்பது போல் தலையசைத்துவிட்டு அறைக்குள் சென்றான். செண்பகம் மகளுடன் பேசியபடியே வீட்டு வேலைக்கென்று வந்தவரிடம் சுத்தம் செய்ய வேண்டியவற்றைக் கூறிக் கொண்டிருந்தார்.
அக்கணம் மீண்டும் அழைப்புமணி ஓசை! நளினி எழுந்து சென்று கதவைத் திறந்ததும் பாவை உள்ளே வந்தாள்.
“வந்திட்டியா, யார் கொண்டு வந்து விட்டுட்டு போனா?” என்றார் செண்பகம்.
“கலை அண்ணாவும் கௌசியும்”
“வீட்டுக்கு வர சொல்லிருக்கலாமே. கூட்டுப் போறப்பவும் வரல. இப்பவும் வரல. நீ வீட்டுக்குக் கூப்பிட்டிருக்க வேண்டாமா?” என்று குறைபட்டார்.
‘என்னை கூட்டிட்டுக் கொண்டு போனதே வேணிம்மா வார்த்தைக்காக. நான் கூப்பிட்டு வருவார்களா’ என்று மனதில் தோன்ற, “அடுத்த தடவை சொல்றேன் செண்பாம்மா” என்று அறைக்குள் சென்றாள்.
வந்தவள் நேராகப் பால்கனி போக, “வா பாவை” என்றான் போன்சாய்களுடன் பொழுதைக் கழித்துக் கொண்டு இருந்த சிவா.
அவனது கவனம் தொட்டிச் செடிகளின் மீதே இருக்க, அவளோ இன்று எடுத்த புடவை நிறம், பாடப் போகும் பாடல்… என்று பேச ஆரம்பித்தாள்.
“பாவை ஒரு ரெக்வஸ்ட்” என்றான் அவளின் பேச்சின் இடையே!
“ம்ம் சொல்லுங்க”
“கன்டினியூஸா சிக்ஸ் செவன் டேய்ஸ் வொர்க்! நிறைய டென்ஷன்! கொஞ்ச ரிலாக்ஸ் ஆகணும்! அதான் இதைப் பார்த்திட்டு இருக்கேன். ஸோ… “
“நீங்க பாருங்க! நான் பேசிக்கிட்டு இருக்கேன்” என்றாள் அவன் சொன்ன, சொல்லாமல் விட்ட வார்த்தைகளைப் புரிந்து கொள்ளாமல்!
“பாவை, நான் என்ன சொல்ல வர்றேனா இது மீ-டைம்” என்றான் சுருக்கமாக!
புரியாமல் பார்த்ததும், “எனக்கான நேரம்” என்றான் இன்னும் சுருக்கமாக!
“என்ன பிரிச்சு பேசறீங்க?”
“ஹே அப்படியில்ல, கொஞ்சம் எனக்காக டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு தோணுது! ஒரு மணி நேரம் கொடு! ரிலாக்ஸ் ஆகிட்டு வந்து பேசுறேன்”
அவன் கொடுத்த விளக்கத்தை விட்டுவிட்டு, “நாம சேர்ந்து இருக்கிற நேரம் முக்கியம் இல்லையா?” என்று கேட்டாள்!
“முக்கியம்தான்! பட், வீ டைம் எவ்ளோ முக்கியமோ, அதே மாதிரி மீ டைமும் முக்கியம்” என்று தன் அன்பின் அறிவியலை எடுத்துச் சொல்லவும், அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
‘தன்னைப் புரிந்து கொள்கிறாள்’ என்ற நினைத்துக் கொண்டான்
ஒரு மணிநேரம் கழித்து அறைக்குள் வந்தான் பாண்டியன். கண்கள் மூடி, ‘ராக்கிங் சேரில்’ அமர்ந்து அசைந்தாடிக் கொண்டிருந்தாள் பாவை.
“ஹனி” என்று அவள் முன் வந்து நின்றான். கண்கள் திறக்காமலே இருந்ததும், “பாவை” என்று அவள் அசைந்தாடுவதை நிறுத்தினான்!
கண் திறந்தவளிடம், “இப்ப பேசு பாவை” என்றதும், “நீங்க பேசுனா பேசணும், போதும்னா நிறுத்திடணுமா??!” என்று ஒருமாதிரி குரலில் கேட்டாள்.
“அப்படிலாம் இல்ல பாவை” என்றவன், “போதும்னு எப்ப சொன்னேன்?” என்று யோசனையாகக் கேட்டான்.
“முத நாள் பால்கனியில உட்கார்ந்து பேசுறப்போ… சொன்னீங்க!?!”
ஞாபக அலமாரியிலிருந்து அன்றைய நிகழ்வுகளை எடுத்துப் பார்த்தவுடனே, “அன்னைக்கு சாதாரணமா பேச ஆரம்பிச்சோம். ஆனா அந்த பேச்சு போட்டி மாதிரி போனது. அது தப்பு! அதான் அப்படிச் சொன்னேன்!” என்றான்.
கவனமாகக் கணவனைப் பார்த்தாள்.
“உனக்கும் எனக்கும் பிடிச்ச ஒரு விஷயத்தை அப்படிப் பேசக் கூடாது. அதான் போதும்னு சொன்னேன்! ஓகேவா?”
‘சரி… சரியில்லை’ என்பது போல் தலையை ஆட்டினாள். புரிந்து கொள்கிறாள் என்று அவன் நிம்மதி அடைவதற்குள், “இப்போ எதுக்கு என்னை அவாய்ட் பண்ணீங்க?” என்று கேட்டாள்.
“அவாய்ட் பண்ணலை பாவை! ரொட்டின் வொர்க் பண்ணிக்கிட்டே இருந்தா, லைஃப் போரிங்கா இருக்கிற மாதிரி இருக்கும். அப்பப்போ, இந்த மாதிரி மீ டைம் எடுத்து ரிலாக்ஸ் பண்ணிக்கணும்” என்று விளக்கினான்.
‘கவனிக்கிறாளா? இல்லையா?’ என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அவள் உடல்மொழி இருந்தது.
“இப்போ பேசு! எவ்வளவு நேரம்னாலும் கேட்கிறேன்” என்றான் கரிசனமாக!
“எனக்கு இப்போ பேசத் தோணலை!” என்றாள் கண்கள் மூடிக்கொண்டு!
தன்னை, தன் நிலையை, தனதை தாரத்திற்குப் புரிய வைத்திட திண்டாடுவது போல் உணர்ந்ததால் திரும்பவும் பால்கனியில் தஞ்சம் அடைந்தான்.
வார்த்தையாடல்களற்ற நேரங்கள்!
சற்று நேரம் கழித்து உள்ளே வந்தவன், “பாவை” என்று அழைத்தவுடன் கண் திறந்தவள், “சொல்லுங்க” என்றாள்.
“பாவை நெக்ஸ்ட் ஒரு ட்ரிப் போகணும்…” என்று சொல்லி முடிக்கும் முன்னே, “என்ன இப்படிச் சொல்றீங்க? எனக்கு ரெண்டு நாள் கழிச்சு கச்சேரி இருக்கு!” என்று துள்ளி எழுந்தாள்.
“என்னை முழுசா சொல்ல விடறியா”
“சொல்லுங்க”
“கச்சேரி அன்னைக்கு காலையிலயே வந்திடுவேன்! உன்னை நான்தான் கூட்டிட்டுப் போவேன். சரியா?” என்று சொன்னான்.
சற்று முன் நடந்ததை மறந்து, “ம்ம்ம்” என்றாள் சந்தோஷமாக!
அவள் மகிழ்ச்சியைப் பார்த்தவன், “வெளியே போகலாமா” என்று கேட்க, “எங்க” என்றாள் சட்டென்று!
“எனக்கு ஃபால்ஸ் போகணும்னு ஆசை! அன்னைக்கு சொன்னேனே!! அங்க இருக்கிறப்பதான் உன்னைப்பத்தி அம்மா சொன்னாங்க! எனக்கு உன்னை அங்க கூட்டிட்டுப் போக ஆசை! ஆனா இன்னைக்கு லேட்டாயிடுச்சி”
இரண்டு முறைதான் ‘ஆசை’ என்ற சொல்லைச் சொன்னான். ஆனால் இதயம் முழுவதும் அதுதான் ஆசை என்றபடி இருந்தது, அவன் சொன்ன விதம்!
“அதலாம் வேண்டாம்! ரெண்டு நாள்ல கச்சேரி இருக்குது” என்றவள், “நாம கோவிலுக்குப் போகலாமா?” என்று கேட்டாள்.
‘எப்படி மறுக்க’ என்று தெரியாமல், “பாவை” என்று தயங்கியபடி அழைத்தான்.
“முடியாதா?” என்று திரும்பிப் போனவள் தோளைப் பிடித்து நிறுத்தினான். பின், “கூட்டிட்டுப் போறேன்! ஆனா…” என்று வாக்கியத்தை முடிக்கும் முன்பே, “அவ்ளோதான்!! அதோட விடுங்க” என்று புடவை தேர்ந்தெடுக்கப் போனாள்.
“பாவை நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு” என்று அவள் பக்கத்தில் போய் அவன் நிற்க, “இது ரெண்டுல எதைக் கட்டிக்கனு சொல்லுங்க?” என்று இரு புடவைகளை அவன் முன்னே நீட்டினான்.
“இதெல்லாம் உன் இஷ்டம்” என்று சொல்லியதும் சிரித்துக் கொண்டாள். பின், கடகடவென கிளம்ப ஆரம்பித்தாள்.
அவள் மகிழ்ச்சியைப் பார்த்தவன், அதற்குமேல் பேசவில்லை. “கிளம்பு! நான் நளினிகிட்ட பேசிட்டு இருக்கேன்” என்று சொல்லி வெளியே சென்றான்.
அறையில் செண்பகமும் நளினியும் பேசிக் கொண்டிருந்தார்கள்! உள்ளே வந்த சிவா சற்றுநேரம் அவர்கள் இருவருடனும் பேசினான்.
பின், “ம்மா! பாவை கோயிலுக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லிருக்கா” என்று சொன்னதும், “அண்ணா நைட் டின்னர் ஏதாவது ரெஸ்ட்டாரென்ட்ல பிளான் பண்ணு!” என்றாள் நளினி!
செண்பகம், “ஆமா சிவா. பாவைக்கும் நல்லா இருக்கும்” என்று சொல்ல, “ம்மா கச்சேரி வருதில்லையா? கண்டிப்பா வெளியில சாப்பிட மாட்டா!” என்றான் மனைவியைப் புரிந்து!
“அதுவும் சரிதான்” என்று செண்பகம் மகனைப் புரிந்து சொல்ல, “பாண்டியன்” என்று அழைத்துக் கொண்டு அறைக்குள் வந்தாள் பாவை!
கருநீல ஓரங்கள் கொண்ட அரக்கு நிறத்திலான பட்டுப்புடவை! கருவிழிகளில் கண்மை, அதரங்களில் சாயம் என்று மிதமான ஒப்பனைதான்! பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது!
நளினியைத் தவிர மற்ற இருவரின் கண்களுக்கு!
அவள் வந்த பின்பும் ஐந்து வினாடிகள் பேசிவிட்டு இருவரும் கிளம்பினார்கள்.
அவர்கள் சென்றதும், “இந்த மாதிரி என்ஜாய்மெண்டெல்லாம் அண்ணா-க்கு கிடையாதா? சும்மா எப்ப பாரு… இங்க வர மாட்டேன், அங்க வர மாட்டேன்னு சொல்றா? நீங்களும் சரின்னு சொல்றீங்க??” என்று நளினி கோபப்பட்டாள்.
அந்த கணத்தில் நளினியின் பேச்சும் கோபமும் அதிகம் என்றே தோன்றியது, செண்பகத்திற்கு!
“இன்னைக்கும் சில்க் சாரீ. அண்ணா ட்ரஸ்ஸிங் சென்ஸ் பாருங்க. அவளோட சாரீ பாருங்க!! கொஞ்சம்கூட மேட்ச் ஆகல! அண்ணா ஏன் ஒன்னும் சொல்ல மாட்டிக்கிறான்”
“அவனுக்கு வேணும்னா அவன் சொல்லிப்பான்! நீ எதுக்கு இதலாம் சொல்ற?!”
ஒரு நிமிடம் அம்மாவின் கேள்வியில் மௌனமாக இருந்தாள். பின், “வேலை இருக்கு!” என்று சொல்லிச் சென்றாள். மகளின் பேச்சில் ஒருவித மாறுபாடு தெரிந்தது. எதற்கு இது போன்ற பேச்சுகள்? என்ற கேள்வி வந்தது அவருக்கு!
**************
மஹிந்திரா தார் மனக்களிப்புடன் கிளம்பியது வீட்டிலிருந்து!
தேன்பாவை, ‘அஷ்டலெட்சுமி கோவிலுக்குப் போகலாம்’ என்றதால், பெசன்ட் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர்.
கோவிலின் முக்கிய அம்சங்கள், வேணிம்மாவுடன் வந்த நாட்கள், பூஜைகள், அஷ்டலெட்சுமிகளைப் பற்றிய பாடல்கள் என்று பேசிக் கொண்டே வந்தாள்.
சில நேரங்கள் அவனிடம், ‘இது தெரியுமா?’ என்று கேட்பாள். ‘ஐடியா இல்லை’ என்றதும் அவளே பேசத் துவங்குவாள். கணவனுடன் கோயிலுக்குப் போவதில் திருவிழா கடை பலூனைப் போல் சந்தோஷத்தில் மனம் பறந்தது!!
சற்று நேரத்தில் கோவிலுக்கு வந்தனர்!
“பாவை” என்று பாண்டியன் தயங்கி அழைத்ததும், “நீங்க, இன்னும் கொஞ்சம் முன்ன போய் லெஃப்ட் கட் பண்ணுங்க. பார்க்கிங் போட்டுட்டு…” என்று பாவை சொல்லும் போதே, “ஒரு நிமிஷம் சொல்றதைக் கேளு” என்றான் அழுத்தமாக!
“சொல்லுங்க” என்றாள் இன்னும் ஆனந்தம் குறையாமல்!
“நான் உள்ள வர மாட்டேன். நீ போயிட்டு வா!” என்றான் அடங்கிய குரலில்!
“புரியலை”
“எனக்கு இதுலெல்லாம் நம்பிக்கை இல்ல. நான் வெயிட் பண்றேன். நீ போயிட்டு வா” என்றான் தன்மையாக.
“என்ன இப்படிச் சொல்றீங்க? அதெப்படி நம்பிக்கை இல்லாம…” என்று பேசும் போதே முதல்நாள் பேச்சு ஞாபகத்திற்கு வந்தது. ‘இப்பவும் ஷாக்காகித்தான் நிக்கிறேன்னு’ சொன்னது இதற்காக என்று புரியவும், பேச்சை நிறுத்தினாள்.
“பாவை” என்றான் அவள் கை விரல்கள் பிடித்து! அமைதியாக இருந்தாள்.
“பாவை…” என்றவன் ஆரம்பிக்கும் போதே, “எனக்காக வாங்களேன்??!” என்று எக்கச்சக்க ஏக்கத்துடன் கேட்டாள்.
மௌனமாக இருந்தான்! அது அவன் மறுப்பு என புரிந்தது! திருவிழா முடிந்த கோவில் தெரு போல் மனதில் ஒரு வெறுமை பரவியது அவளுக்கு!!
“வீட்டுக்குப் போகலாம்” என்றாள் ஏக்கர் கணக்கில் ஏமாற்றத்துடன்!
“வேற எங்கயாவது போகலாமா?” என்று கேட்டுப் பார்த்தான்!
மௌனமாக இருந்தாள். அது அவளது மறுப்பு என்று புரிந்தது. அதற்குமேல் அவளைச் சமாதானப்படுத்த முயற்சிக்கவில்லை.
மஹிந்திரா தார் மனத்தாங்கலுடன் திரும்பியது வீட்டிற்கு!
வாசற்கதவைத் திறந்து வைத்து, வரவேற்பரையில் அமர்ந்து செண்பகமும், மதியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாகக் கதவைத் தள்ளிக் கொண்டு பாவை உள்ளே நுழைந்தாள்.
வந்த வேகத்திலே அறைக்குள்ளும் சென்றுவிட்டாள்!
செண்பகமும் மதியும், ‘இவளுக்கு என்னாயிற்று?’ என்று ரீதியில் பார்த்தனர். பின்னேயே வந்த பாண்டியனிடம், “என்ன? என்னாச்சு? அதுக்குள்ள திரும்பி வந்திட்டீங்க?” என்று செண்பகம் கேட்டார்.
“ஒன்னுமில்லம்மா! பார்க்கிறேன்” என்று அறைக்குப் போனான்.
அங்கே அவள் கோபமாக நின்று கொண்டிருந்தாள்! “பாவை என்னாச்சு?”
“சும்மாதான இருந்தேன். நீங்கதான வெளிய போகலாம்னு சொன்னீங்க” என்று இது வரைக்கும் எட்டாத டெசிபல் அளவை அவள் குரல் எட்டியது!
“மெதுவா பேசு. ஹால்லதான் அம்மா அப்பா இருக்காங்க” என எச்சரித்தான்!
“நீங்க பதில் சொல்லுங்க” என்றாள் எச்சரித்ததை எதிர்த்து!
“ஆமா சொன்னேன். ஆனா கோவிலுக்குப் போகலாம்னு நீ சொன்னதும், நான் தயங்கினேன். அததான் உன்கிட்ட சொல்ல நினைச்சேன்! நீ சொல்லவிடல!”
“எவ்ளோ ஆசைப்பட்டேன் தெரியுமா?” என்றாள் குறைந்து போன குரலில்!
“நான்தான் காரணம் சொன்னேன்ல! எனக்கு இதுல நம்பிக்கை இல்லைனு”
“ஏன் எனக்காக வரக்கூடாதா?” என்று மீண்டும் கத்தினாள்!!
“அது என்னோட நம்பிக்கையைத் தாண்டி பண்ற விஷயம்!” என்று, அவனும் கத்த ஆரம்பித்தான்.
“என்னோட ஆசைக்காக ஒரு நாள் வந்தா என்ன?”
“நம்பிக்கை இல்லாத விஷயத்தை எப்படி பண்ண முடியும்? புரிஞ்சிக்கோ” என்றான் அமைதியாக!
“பண்ணலாம்!! அன்பு இருந்தா பண்ணலாம்!” என்றாள் அலட்சியமாக!
“எனக்கு உடன்பாடு இல்லாத விஷயத்தை… உனக்காக முடியும்னு சொல்லிப் பண்ணா, ஒரு டிஸ்கம்ஃபார்டபிள் பீல் வரும்!! அதுக்கு முடியாதுனு சொல்லி, ரிஞ்சிக்கோன்னு சொல்றது பெட்டர்! அதனால உன்மேல அன்பு இல்லைனு அர்த்தம் கிடையாது” என்று, அவன் அன்பின் அறிவியலை விளக்கினான்.
அடுத்தும் அவளிடம் அவன் பேச வந்தபோது, ‘ப்ச்’ என்று சலிப்புடன் அவள் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.
அவள் அசட்டையான செய்கைகளில் அவனுக்குக் கோபம் வந்துவிட்டது! “பாவை!” என்று கத்தியவன், “ஒன்னு… பேச சொல்றப்போ நீ தெளிவா பேசு!! இல்லைனா நான் பேச வர்றப்போ நின்னு கேளு!! இப்படி ரெண்டும் இல்லாம இருந்தா என்னால ஒன்னும் பண்ண முடியாது” என்றான்.
அந்தக்கணம், “சிவா” என்ற அழைப்பு, அறையின் வெளியே இருந்து வந்தது!
செண்பகம்தான்!!
இருவருமே சத்தமாகத்தான் பேசினார்கள். ஆதலால் அனைத்தும் வெளியே இருப்பவர்களுக்கும் கேட்டது. அதிலும் சிவாவின் கடைசிப் பேச்சு, அவருக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியது. எனவேதான் இந்த அழைப்பு!
தணிந்த குரலில், “ம்மா” என்றான் உள்ளேயிருந்து!
“சாப்பிட வாங்க ரெண்டு பேரும்” என்றார்!
“வந்திடுறோம்மா” என்றவன் பாவையைப் பார்த்து, “சாப்பிட வா” என்றான்.
“அப்புறமா வர்றேன்”
“கண்டிப்பா வரணும்! இல்லனா வாய்ஸ்…” என்று அவன் முடிக்கும் முன், “என் வாய்ஸ கேர் பண்ணிக்க எனக்குத் தெரியும்” என்றாள் முகத்தில் அடித்தாற் போல!
அவன் எதுவும் பேசாமல் வெளியே வந்துவிட்டான். அப்பா, அம்மாவை பார்க்க ஒருமாதிரி இருந்தது. மெதுவாக சென்று குனிந்தபடியே அமர்ந்து கொண்டான்.
அவர்களுக்கும், அவனைப் பார்க்கவே கஷ்டமாயிருந்தது. ‘எப்படி இருந்தவன், இன்று இப்படி இருக்கிறானே!?’ என்ற வலி அவர்கள் கண்களில் தெரிந்தது!
சாப்பிட ஆரம்பித்தவனிடம் மதி, “மதுரையில ஒரு இடம் வருது! வாங்கலாமா சிவா?” என்று சாதாரணமாக கேட்டார்.
தண்ணீர் எடுத்துக் குடித்துக் கொண்டு, “பார்க்கலாம் ப்பா” என்றான். அம்மா அப்பாவுடன் பொதுவாகப் பேசிக்கொண்டே சற்று சகஜ நிலைக்கு வந்தான்.
இதே நேரத்தில் உள்ளே பாவை மெத்தையில் அமர்ந்திருந்தாள். அக்கணம் வேணிம்மா அழைத்தார்.உடனே அலைபேசி எடுத்து, “வேணிம்மா” என்றாள்.
“எப்படி ம்மா இருக்க?” என்று கேட்டார் எப்பொழுதும் போல்!
“ம்ம்ம் இருக்கேன்” என்றவள் குரலில் ஏதோ ஒன்று குறைந்தது!
“இன்னைக்கு வெள்ளிக் கிழமை! கோயிலுக்குப் போயிட்டு வந்தியா?”
“அவங்களுக்கு அதுலெல்லாம் நம்பிக்கை இல்லையாம்!”
“அதனால?” என்றார் கேள்வியாக!
“விடுங்க!!” என்றவள் சட்டென, “மனசு கஷ்டமா இருக்கு” என்றுவிட்டாள்.
“என்ன பாவை சொல்ற?” என்று அவர் பரிதவித்துக் கேட்கவும், ‘ஐயோ! என்ன பண்றோம்?’ என்று சுதாரித்துக் கொண்டாள்.
“வேணிம்மா! சாமி பார்க்கலைனு மனசு கஷ்டம்! வேற ஒன்னுமில்லை” என்று சமாளித்தவள், “செண்பாம்மா சாப்பிட கூப்பிட்டாங்க. அப்புறமா பேசுறேன்” என்று அலைபேசி அழைப்பைத் துண்டித்தாள்.
‘ஏன் இப்படிப் பண்ண?’ என்று லேசாக தலையில் அடித்துக் கொண்டாள். சற்று நேரம் அமர்ந்திருந்துவிட்டு சாப்பிட சென்றாள்.
அறையிலிருந்து வந்தவளிடம், “வா வந்து சாப்பிடு” என்று செண்பகம் சொல்ல, நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து சாப்பிட ஆரம்பித்த போது, “பாவை” என்று மதி அழைக்க, ‘எதற்கு?’ என்பது போல் மூவரும் அவரைப் பார்த்தனர்.
“அவனைக் கொஞ்சம் புரிஞ்சி நடந்துக்கோ…” என்று மதி பேச்சை ஆரம்பிக்கும் போதே, “புரிஞ்சிப்பா! நீங்க வாங்க” என்று செண்பகம் அவரை எழுப்பினார்.
மேலும், “சாப்பிட்டிருக்கணும்” என்று இருவரிடமும் கூறி, கணவரை அழைத்து அறைக்குச் சென்றதும், பாவை சாப்பாட்டைக் கிளறிக் கொண்டே இருந்தாள்.
உண்ணவேயில்லை.
அதைக் கண்டவன், கொஞ்சம் உணவை எடுத்து ஊட்டிவிடுவதற்காக அவளது வாயருகே கொண்டு சென்று, “கத்தினதுக்கு சாரி” என்றான்!
சட்டென பின்னே சாய்ந்து, “வேண்டாம்! நானே சாப்பிட்டுக்குவேன்” என்றாள். அதற்குமேல் பேசாமல், சாப்பிட்டு முடித்து இருவரும் அறைக்கு வந்தனர்.
“கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாமா” என்று சிவா கேட்க, “வேண்டாம், தூக்கம் வருது” என்று படுத்துக் கொண்டாள்.
பாண்டியனுக்கு உறக்கம் வரவில்லை!
பால்கனி சென்று அமர்ந்தான் சிவா. இருவருக்கும் நெருக்கம் இருப்பது போல் இருந்தாலும், ஏதோ நெருடல் இருப்பதை உணர முடிந்தது! பேசுவதைப் புரிய மறுக்கிறாள். அவளைப் புரிந்து கொள்ளலாம் என்றால் பேசவும் மறுக்கிறாள்!
‘என்ன செய்ய?’ என்று யோசிக்கையில், ‘அவள் பாட்டியிடம் பேசிப் பார்த்தால் என்ன?’ என்ற எண்ணம் வந்தது! பின் அதுவே சரியென்று தோன்றியது! இந்த கச்சேரி முடிந்ததும் பேச வேண்டும் என்று முடிவெடுத்தான்.
மெத்தையில் படுத்தவளுக்கும் உறக்கம் வரவில்லை. நடந்ததை யோசித்துப் பார்த்தவள், ‘இவனும் தன்னை ஒதுக்குகிறானோ? தன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்க மாட்டேன் என்கின்றானோ?’ என்று நினைத்தாள்.
மேலும், ‘இதுதான் நான்!’ என்று சொல்பவனிடம், வளர்ந்த விதத்தைப் பற்றிச் சொன்னால்… இவனிடமிருந்து கிடைக்கப் போவது அனுதாபமா? இல்லை அன்பா? என்ற சந்தேகம் வர ஆரம்பித்தது!
இதே நேரத்தில் செண்பகத்தின் அறையில், “ஏன் இப்படிப் பேசினீங்க?” என்று கணவரைக் கடிந்து கொண்டிருந்தார் செண்பகம்.
“எனக்குத் தோணுச்சு செண்பா”
“அதுக்கு?? அப்படிச் சொல்லணுமா?”
“இன்னைக்கு பாவை கத்தினது எனக்குப் பிடிக்கலை. அதான் சொன்னேன்”
“நீங்க யாரும் எதும் பேச வேண்டாம்! அவன் சமாளிச்சிப்பான்”
“அவன் சங்கடப்படறது உனக்குத் தெரியலையா? எப்படி வந்து உட்கார்ந்தான் பார்த்தியா? எனக்கு கஷ்டமா இருக்கு” என்றார் வருத்தமாக!
செண்பகத்திற்கும் வருத்தம்தான்! அமைதியாக இருந்தார்!!
“நளினி சொன்னா… சிவாவுக்கு ஏத்த மாதிரி அவ இல்லைனு” என்றார் மதி!
‘இவள் ஏன் இப்படி செய்றா?’ என்று மகள் மீது எரிச்சல் வர, “அப்படியெலாம் இல்லை” என்றார்.
“சிவாக்கு அக்கறை இல்லைனு சொன்னானு நீதான சொன்ன, இன்னைக்கு அந்தப் பொண்ணு பேசினதை நீயும் கேட்டில”
“நீங்க சொல்றதலாம் எனக்கும் தோணுது! இப்பதான கல்யாணம் ஆகிருக்கு! போக போக சரியாயிடும்! இனி இந்தமாதிரி சொல்லாதீங்க! அப்படிச் சொல்ல தோணிச்சுனா, ரெண்டு பேருக்கும் சொல்லுங்க” என்று படுத்துக் கொண்டார்.
ஆனால் உறக்கம் வரவில்லை! மருமகள் பேச்சும் பிடிக்கவில்லை! அதேபோல் மகன் கத்தியதும் பிடிக்கவில்லை!
இன்றைய நிகழ்வால், ‘இவர்கள் திருமண வாழ்வு எப்படி இருக்குமோ?’ என்ற கவலை வந்தது! இருந்தும், ‘மகன் சாமாளித்துவிடுவான்’ என்று நம்பிக்கை கொண்டார்!
இவரின் நம்பிக்கை பொய்க்கப் போகிறது!!
இதே நேரத்தில் வேணிம்மா வீட்டில்!
பாவை பேச்சைக் கேட்டவருக்கு உறக்கம் வரவில்லை.அவளின் பேச்சிற்கு ‘என்ன காரணம்?’ என்று புரியவில்லை. ஒருவேளை புகுந்த வீட்டின் சூழல் காரணமோ?? என்ற கேள்வி வந்தது!
அது, ‘இவளின் திருமண வாழ்வு எப்படி இருக்குமோ?’ என்ற கவலையைத் தந்தது! இருந்தும், ‘இங்கேயே சமாளித்து வாழ்ந்தவள், அங்கேயும் சமாளித்து விடுவாள்’ என்று நம்பிக்கை கொண்டார்!
இவரின் நம்பிக்கையும் பொய்க்கப் போகிறது!!

