Kathambari Novels
அத்தியாயம் – 11
விடிகாலை ஐந்து மணியளவில் அழைப்பு மணி அடிக்க, செண்பகம் எழுந்து வந்து கதவு திறந்தார். சிவா நின்று கொண்டிருந்தான். ஐந்து நாட்கள் கழித்து வருவேன் என்றவன் நான்கு நாள்களிலே திரும்பியிருந்தான்.
மகனைப் பார்த்ததும், “என்ன சீக்கிரமா வந்திட்ட, பாவைக்காகவா” என்று சிரித்தபடி கேட்டதும், அவனும் சிரித்துக் கொண்டான்!
“நீ வர்றது அவளுக்குத் தெரியுமா?”
“சீக்கிரமா வருவேன்னு சொல்லிருந்தேன். இவ்ளோ சீக்கிரம்னு தெரியாது. பாவை அங்கதான் இருக்காளா?” என்றபடி உள்ளே வந்தான்.
“ஆமா கண்ணா! ரெண்டு நாள் நல்லா இருந்தா. அப்புறம் ஒரு மாதிரி டல்லா தெரிஞ்சா. அதான், ‘உன் பாட்டிகூட இருந்திட்டு வா’னு சொன்னேன். போக மாட்டேன்னு சொன்னா! நான்தான், ‘சிவா ஒன்னும் சொல்ல மாட்டான். போ’னு அனுப்பி வச்சேன்”என்றவர், “குடிக்க எதுவும் வேணுமா?” என்று கேட்டார்.
“வேண்டாம் மா. ரொம்ப டயர்டா இருக்கு. ரெஸ்ட் எடுக்கணும்”
“சரி கண்ணா, தூங்கு! அப்புறமா போய் பாவையைக் கூட்டிட்டு வா” என்று சொன்னதும் அறைக்குள் சென்றான்.
அதிகாலைப் பொழுது என்பதாலும், அசதி அதிகம் இருந்ததாலும் பாவைக்கு ஒரு குறுஞ்செய்து அனுப்பிவிட்டு, சிவா தூங்கிவிட்டான்.
அன்றைய நாள் பாவை எழுந்ததும், காலை வேலைகளை முடித்து, குளித்து பூஜை அறைக்கு வந்தாள். விளக்கேற்றி சாமி கும்பிட்டு, மீண்டும் அவளது அறைக்குச் சென்றாள்.
அதன்பிறகு சற்று நேரத்திற்கு வீணை மீட்டல்! குரலுக்கான பயிற்சிகள்! ஸ்வர வரிசைகள்! சில பாடல்கள்! இவை மட்டுமே!!
பின் அலைபேசியைக் கையில் எடுத்தாள். பாண்டியனிடம் இருந்து ‘ரீச்சிடு ஹோம்’ என்ற குறுஞ்செய்தி வந்திருந்ததை வாசித்ததும் முகத்தில் முறுவல் வந்தது. அவனை அலைபேசியில் அழைத்தாள்.
பாண்டியன் உறங்க ஆரம்பித்து கொஞ்ச நேரம்தான் இருக்கும். அலைபேசி ஒலி கேட்டது. உறக்கம் கலையாமல், கண்கள் திறக்காமல் அலைபேசியை எடுத்து காதில் வைத்து, “ஹலோ” என்றான்.
“என்ன பண்றீங்க?”
ஒரு கண் மட்டும் திறந்து திரையைப் பார்த்தவன், “சொல்லு ஹனி” என்றான்.
“நீங்க சொல்லுங்க. என்ன பண்றீங்க?”
“தூங்கிக்கிட்டு இருக்கேன்”
“தூங்கிறீங்களா?? மணி ஆறரை”
“அதுக்கென்ன?”
“என்னை எப்போ கூப்பிட வருவீங்க??”
“வர்றேன் பாவை. கொஞ்ச ரெஸ்ட் எடுத்திட்டு வர்றேன்” என்றான் அசதியில்!
“ப்ச்… எப்போ??” என்றாள் அதன்பின்னும்!!
“தெரியலை! பட் செம்ம டயர்ட்!! தூங்க விடு” என்றான் தூக்க கலக்கத்தில்!
“சீக்கிரம் வந்து என்னைக் கூட்டிட்டுப் போங்க. நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பேன்” என்று பாவை அழைப்பைத் தூண்டித்தாள்.
அலைபேசியை வைத்துவிட்டு பாண்டியன் தூங்கிவிட்டான். நேரம் கடந்தது. காலை போய் நண்பகல் வந்த பின்தான் எழுந்தான். அழைத்திருக்கிறாளா என்று அலைபேசியைப் பார்த்தான். அழைப்புகள் ஏதும் இல்லை.
எழுந்து குளித்துவிட்டு வந்தவனுக்கு செண்பகம் ஜூஸ் தயாரித்து கொடுத்து, “பாவை பாட்டி ஃபோன் பண்ணிருந்தாங்க. மத்தியான சாப்பாட்டுக்கு அங்க வர சொன்னாங்க சிவா!” என்றார்.
“ஓ! அப்போ நீங்களும் வர்றீங்களா ம்மா?” என்று கேட்டான்.
“ம், அவங்களைப் பார்த்திட்டு, அப்படியே பாவைய கூட்டிட்டு வந்திடுவோம்” என்றதும் இருவரும் கிளம்பினர்.
வேணிம்மா வீடு! கிரி, கிரியின் மனைவி மற்றும் கௌசி இருந்தனர். மீனாட்சி மற்றும் சங்கர் வெளியே சென்றிருந்தனர்.
கிரி, வேணிம்மா வரவேற்பறையில் பேசிக் கொண்டிருக்க, பாவை அறையில் இருந்தாள். சிறிது நேரத்தில் சிவாவும், செண்பகமும் வந்தனர். இருவரையும் பார்த்து சிரித்த முகத்துடன் வரவேற்று, “உட்காருங்க” என்றார் வேணிம்மா.
இதற்கிடையே கிரியின் மனைவியும் வந்திருந்தார்.
“கௌசி” என்று கிரி குரல் கொடுக்கவும், அறையிலிருந்து வந்தாள் கௌசி. “பாவையைக் கூப்பிடு” என்று கிரி மகளிடம் கூற, “இதோ” என்று பாவையை அழைத்து வந்தாள்.
பாவையைப் பார்த்ததும் பாண்டியன் புன்னகை செய்தான். ஆனால் அவள் அதைப் பொருட்படுத்த இல்லை! அவன் பார்வையைப் புறக்கணித்தாள்!
அதற்குள், “வாங்க. லேட்டாகிடுச்சி. சாப்பிடலாம்” என்று வேணிம்மா சொல்ல, சற்றுநேரத்தில் அனைவரும் சாப்பிட அமர்ந்து கொண்டதும் கிரி மனைவியும் பாவையும் பரிமாற ஆரம்பித்தனர்.
“பாவை நீ சாப்பிடலயா” என்று பாண்டியன் கேட்க, “அப்பவே சாப்பிட்டேன்” என்று சொல்லிவிட்டு, செண்பகத்திற்குப் பரிமாறினாள்.
“சரியான நேரத்தில சாப்பிடலைனா அசிடிட்டி வந்து, பாடுறப்போ தொந்தரவு கொடுக்கும். அதான் கரெக்ட் டைம்க்கு சாப்பிடுவா. அங்கயும் நேரத்துக்கு சாப்பிடுற மாதிரி பார்த்துக்கோங்க” என்றார் வேணிம்மா.
‘பார்த்துப்போம்’ என்பது போல் அம்மாவும் மகனும் தலையாட்டினர்.
அவர்கள் சாப்பிடும் போதே, “ரொம்ப நேரம் உட்கார்ந்திட்டேன் போல” என்று எழுந்த வேணிம்மா, “நீங்க சாப்பிடுங்க… கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு வர்றேன்” என்று நடக்க ஆரம்பித்தார்.
பாவை பின்னேயே வருவதைக் கண்டு, “அவங்களைக் கவனி! கிளம்பிறப்போ என்னை எழுப்பு” என்று அவரது அறைக்குச் சென்றார்.
சில நிமிடங்களுக்குப் பின், “சிவா, உன்கிட்ட ஒன்னு சொல்லணும்?” என்று கிரி பேசவும், ‘என்ன சொல்ல போகிறார்?’ என்ற ரீதியில் பாவை பார்த்தாள்.
இப்போதும் ‘வீட்டு மருமகன்! ஏன் இப்படி ஒருமை விளிப்பு?’ என்று எண்ணமே வந்தது செண்பகத்திற்கு.
“சொல்லுங்க” என்றான் சிவா!
“பாவை ப்ராக்டிஸ்-க்கு கரெக்டா வர்றமாதிரி பார்த்துக்கணும்”
“கண்டிப்பா அங்கிள்! அவளுக்கு மியூசிக் பிடிச்சிருக்கு! ஸோ, என்னோட ஃபுல் சப்போர்ட் இருக்கும்”
அவன் பதில் கௌசிக்கும் கிரிக்கும் திருப்தியில்லை. “அப்போ… இனி கச்சேரி சம்பந்தமான விஷயங்களை நீங்களே பார்த்துப்பீங்களா?” என்று கேட்டார்.
“அது எனக்குத் தெரியாத ஏரியா! நான் எப்படி” என்று தயங்கியவன், “இப்ப யார் பார்த்துக்கிறா?” என்று கேட்டான்.
“ரெண்டு பேரும் சேர்ந்து பாடுறதால நான்தான் பார்த்துக்கிறேன்”
“அப்ப நீங்களே பார்த்துக்கோங்க” என பொறுப்பை அவரிடம் விட்டுவிட்டான்.
அவன் பதிலில் கௌசிக்கும் கிரிக்கும் நிறைய திருப்தியிருந்தது.
சாப்பிட்டு முடித்து சிவா கைகழுவச் சென்றான். பாவை கணவன் பின்னேயே வந்தாள். தண்ணீரில் கையைக் காட்டியபடி, “நான் காலையிலயே வரலைனு கோபமா?” என்று கேட்டான்.
“என்னோட கச்சேரி விஷயமா, இனி நீங்களே பார்க்கலாமே?!” என்று கேள்வி கேட்டு நிற்கவும், “ஓ! இது வேற!!” என்றான் சலிப்பாக!
“பதில் சொல்லுங்க” என்றாள் விடாமல்!
“எனக்கு அதைப் பத்தி எதுவும் தெரியாது. நான் எப்படி?” என்றான்.
அவன் சொல்வதும் சரிதான் என்றதால், அதை ஒத்துக் கொண்டாள். ஆனால் அடுத்த கேள்வி வைத்திருந்தாள். “எப்போ கூப்பிட வரச் சொன்னேன். இப்போ வந்திருக்கீங்க?” என்றாள்.
“சொன்னேனே பாவை! ரெஸ்ட் எடுக்கணும்னு”
அந்தப் பதிலில் திருப்தி இல்லாததால், “உங்களுக்கு என்மேல அக்கறையே இல்லை” என்று அவளே ஒரு முடிவுக்கு வந்து கொண்டாள்.
“மிச்சத்தை வீட்ல போய் பேசிக்கலாம்! கிளம்பு” என்று சொல்லி, அங்கிருந்து நகன்றதும், பாவைக்கு கஷ்டமாக இருந்தது!
இதற்கிடையே அறையிலிருந்து எழுந்து வந்த வேணிம்மா காதுகளில், பாவை சொன்ன, ‘அக்கறை இல்லை’ என்ற வார்த்தை மட்டும் விழுந்ததால் அப்படியே திரும்பிப் போய்விட்டார்.
சற்று நேரத்திற்குப் பின்… எல்லாரிடமும் விடைபெற்று பாவை, பாண்டியன் மற்றும் செண்பகம் கிளம்பினார்கள். மூவரையும் வழியனுப்ப வேணிம்மா கீழ்தளம் வரை வந்தார்.
மின்தூக்கியைத் திறந்து இறங்கியதும், “ரெண்டு பேரும் இருங்க. நான் காரை எடுத்திட்டு வர்றேன்” என்று ‘பார்க்கிங்’ நோக்கிச் சென்றான் சிவா!
அவன் சென்றதும் பொதுவாகப் பேசினர். அக்கணத்தில் நளினியிடம் இருந்து செண்பகத்திற்கு அழைப்பு வர, “பேசிட்டு வர்றேன்” என்று தள்ளிச் சென்றார். அவர் கண்பார்வையில் இருந்து மறைந்ததும், “வேணிம்மா” என்றாள் பாவை.
“என்னம்மா?”
“சங்கர் பத்தி… மத்தவங்களைப் பத்தி பாண்டியன்கிட்ட சொல்லிடவா?”
சட்டென, ‘அக்கறை இல்லை’ என்ற அவளது பேச்சு அவர் நினைவில் வர, “இப்ப வேண்டாம். ஒரு மாசத்துக்கு அப்புறம்… இல்லனா ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிகிட்ட அப்புறமா சொல்லு” என்றார்.
“மறைக்கிற மாதிரி இருக்கு” என்றாள் வேதனையுடன்!
“மறைக்கலாம் போறதில்ல” என்றவர், “இந்த கச்சேரி முடிஞ்சதும் சொல்லிடு” என்றார் அவள் வேதனையைப் பார்த்து! மேலும், “அதுவரைக்கும் இதெல்லாம் யோசிக்காம, ஒழுங்கா ப்ராக்டிஸ் பண்ணு! அது ரொம்ப முக்கியம்!!” என்று அறிவுரையும் வழங்கினார்.
பாண்டியன் வந்து கார் ‘ஹார்ன்’ அடிக்க, “கூப்பிட்றாங்க! நான் கிளம்புறேன் வேணிம்மா” என்றாள்.
“சந்தோஷமா இரு” என்று, பாவையின் உச்சி நெற்றியில் முத்தம் வைத்தார். அதற்குள், “பாவை வா! சிவா வந்திட்டான்” என்று செண்பகம் அழைத்தார்.
வேணிம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு பாவையும், செண்பகமும் காரில் ஏறினர். மூவரும் சென்றுவிட்டனர். சற்று நேரம் கார் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றார், வேணிம்மா.
சாதாரண பேச்சாகத்தான் இருக்கும் என்று சொல்லிக் கொண்டாலுமே, ‘தான், பார்த்துக் கொடுத்த வாழ்வில், பாவை சந்தோஷமாக இல்லையோ?’ என்ற ஓர் உறுத்தல் வேணிம்மாவிற்கு மனதில் வந்தது!!
செண்பகம் வீட்டிற்குள் நுழையும் போது, மதியும் பிரவீனும் இருந்தனர். “எப்ப வந்தீங்க மாப்பிள்ளை? நீங்க வருவீங்கன்னு தெரியாதே” என்று சொல்லியபடி அவர்கள் முன் வந்து நின்றார்.
“இப்பதான் அத்தை” என்றான் பிரவீன்.
“செண்பகம் மாப்பிள்ளைக்கு காஃபி” என்று மதி கூறியதும், “இதோ” என்று அவர் சமயலறைச் செல்லப் போனார்.
அக்கணத்தில் உள்ளே நுழைந்த சிவாவைப் பார்த்து, “வாடா” என்ற பிரவீன், “ஹாய்” என்றான் பாவையைப் பார்த்து!
சிவா மீதிருந்த கோபத்தில் பிரவீனின் முகமனைக் கவனிக்காமல், வேகமாக அவளது அறைக்குள் சென்றுவிட்டாள்.
செண்பகம்… மதி… சிவா… மூன்று பேருக்கும் ஒரு மாதிரி போயிற்று. அதிலும், ‘மாப்பிள்ளையிடம், ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்??’ என்ற அதிருப்தியை மதியழகன் முகத்தில் வெளிப்படுத்தினார்.
“என்னடா அப்செட்டா இருக்காளா?” என்று பாவை நடந்து கொண்ட விதத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டான் பிரவீன்! “இரு நான் பார்க்கிறேன்” என்று சிவா அறைக்குள் சென்றான்.
பாண்டியன் உள்ளே நுழைந்ததுமே, “ஏன்…” என்று ஆரம்பிக்கப் போனவளிடம், “பிரவீன் உன்கிட்ட பேசினான்ல? நீ ஏன் பேசாம வந்த? கோபம் என்மேலதான! அவன்கிட்ட ஏன் அதைக் காமிக்கிற?” என்றான்.
பாவை முழித்தாள். பின், “சாரி. நான் கவனிக்கல” என்றவள், அறையிலிருந்து வெளியே வந்து, “அண்ணா” என்று பிரவீன் அருகே போய் நின்று, “சாரி. நான் ஏதோ…” என்று, ‘என்ன சொல்லவென தெரியாமல்’ தடுமாறினாள்.
“அவன் சொன்னானா சாரி கேளுன்னு” என்றான் பிரவீன்.
“இல்லை. நானாதான் கேட்கிறேன்” என்று தலையைக் குனிந்து கொண்டாள்.
“பாவை உட்காரு” என்று அவன் சொன்னதும், அமர்ந்து கொண்டாள்.
பின் தயக்கத்துடன் நிமிர்ந்து, “இல்லண்ணா… அது… சாரி” என்றாள் மீண்டும்.
“ஏதோ அப்செட்ல இருக்க! புரியுது. காரணம்லாம் வேண்டாம். நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்” என்றதும், அவள் தெளிவானாள். சற்றுநேரம் பேசிவிட்டு, ‘சிவாகிட்ட சொல்லிடு’ என்று அவன் கிளம்ப, பாவை அறைக்குப் போனாள்.
பாவை உள்ளே வந்ததும், “பிரவீன் போயாச்சா” என்று பாண்டியன் கேட்க, “ம் ம்” என்றவள், “என்னை ஏன் கூப்பிட வரலை?” என்று விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தாள்!
“இப்போ நான்தான உன்னைக் கூட்டிட்டு வந்தேன்”
“நான் சொன்னவுடனே” என்ற வார்த்தையில் அழுத்தம் தந்தவள், “ஏன் கூப்பிட வரலை?” என்று கேட்டு, அவன் அருகில் வந்தமர்ந்தாள்.
“அப்பவே சொல்லிட்டேன் பாவை! டயர்டா இருந்தது. தூங்கிட்டேன்”
“நான் கால் பண்ணதும் வருவீங்கனு எதிர்பார்த்தேன். ஆனா வரலை” என்றாள் குறையாக!
“புரிஞ்சிக்கோ பாவை! உனக்காகத்தான் சீக்கிரம் வந்தேன்! ஆனா இப்படிச் சொல்ற?” என்று குறை பட்டுக் கொண்டான்.
“எனக்காகனு சொல்றீங்க, அப்போ உங்களுக்கு உடனே என்னைப் பார்க்கத் தோணலையா?” என்று கேட்க, ‘என்ன பதில் சொல்ல?’ என்றே தெரியவில்லை பாண்டியனுக்கு! அமைதியாக இருந்தான்.
“உங்களுக்கு என் மேல அக்கறையே இல்லை” என்றாள் மீண்டும்!
“அக்கறை இல்லயா? இதேதான அப்பவும் சொன்ன? எத வச்சி இத சொல்ற?”
“நீங்க லேட்டா கூப்பிட வந்தீங்க! என்னை வெயிட் பண்ண வச்சீங்க!! அதான்” என்று, அவள் பக்கத்தை மட்டும் நினைத்துப் பேசிக் கொண்டிருந்தாள்.
“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு வந்ததுக்கு போய், உன்மேல அக்கறை இல்லனு சொல்லாத!!” என்றான் தடித்தக் குரலில்!
“நீங்க கூப்பிட வருவீங்கனு, நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். நீங்க வரலை! அதான் அக்கறை இல்லைனு சொல்றேன்” என்று… தன்னைப் பற்றி மட்டுமே யோசித்து, அவளும் தடித்தக் குரலில் பேசினாள்.
இதே நேரத்தில், ‘காஃபி குடிக்கிறீங்களா?’ என்று கேட்க வந்த செண்பகத்தின் காதில் பாவை பேச்சு விழுந்தது. அப்படியே திரும்பிப் போய்விட்டார். இதை அறியாமல் உள்ளே பேச்சு தொடர்ந்தது.
“என்னய வருத்திக்கிட்டுத்தான் உன்மேல இருக்க அக்கறைய காட்டணும்னு அவசியமில்லை” என்று அன்பின் அறிவியலை அழுத்திச் சொன்னான்.
அமைதியாக இருந்தாள்.
“வேற ஏதாவது கேட்கணுமா? இல்லை பேசணுமா?” என்றான்.
‘இல்லை’ என்று தலையசைத்து, “சண்டை போடற மாதிரி இருக்கு” என்றாள்.
“இது சண்டையா? வேற ஏதாவது கேட்கணும்னா கேளுனு சொல்றேன்”
“திரும்பவும் அதே பதில்தான் சொல்வீங்க!! எதுக்கு கேட்டுக்கிட்டு?!”
“அதே கேள்வி கேட்டா, அதே பதில்தான் சொல்ல முடியும்” என்றதும், மீண்டும் அமைதியாகிவிட்டாள்.
நன்றாக நெருங்கி அமர்ந்து, “ஹனி” என்று அன்பாக அழைத்து, அணைத்துக் கொண்டான் பாண்டியன்! சிறு பிரிவின் பின்னரான முதல் அணைப்பு!
அவளும் அவனைக் கட்டிக்கொண்டு, “ரொம்ப மிஸ் பண்ணேன்” என்றதும், ‘நானும்தான்’ என்று சொல்வது போல் அணைப்பில் ஓர் அழுத்தம் தந்தான்.
வார்த்தையாடல்கள் இல்லாத நேரங்கள்!
“நீங்க அன்னைக்கு சொன்ன மாதிரி, நமக்குள்ள சண்டை வந்திருச்சோ” என்று கேட்டாள்.
“நான் சண்டைனு சொல்லல! ஹெல்த்தி ஆர்க்கியூமென்ட்ஸ்னு சொன்னேன்”
“ரெண்டும் ஒண்ணுதான்”
“இல்ல! சண்டை போட்டா புரிஞ்சிக்க முடியாது! ஹெல்தி ஆர்க்கியூமென்ட்ஸ் இருந்தா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கலாம்” என்றதற்கு, எதும் சொல்லாமல் இருந்தவளிடம், “பேசணும்னா பேசு” என்றான் தன்மையான குரலில்!
“ம்கூம்! பேசினா, சண்டைதான் வரும்! நீங்க, என்னை வெயிட் பண்ண வச்சது கஷ்டமாயிருக்கு!!” என்று சொல்லி, கொஞ்சம் அவனிடமிருந்து விலகினாள்.
அத்தனை சொன்ன பிறகும்… அவளின் வார்த்தை பிரோயகங்களில், அவனும் கொஞ்சம் விலகிக் கொண்டான்!
அவனிடமிருந்து முழுவதுமாக விலகி எழுந்து கொண்டவளிடம், “பேசிக்கிட்டு இருக்கிறப்ப ஏன் போற?” என்று கேட்டான்.
“கச்சேரி வருதில்லையா… பிராக்டிஸ் பண்ணனும்” என்று ஜமுக்காலத்தை எடுத்துக் கொண்டு பால்கனி சென்றுவிட்டாள்.
இனி போய் பேசினாலோ… எடுத்துச் சொன்னாலோ பயிற்சிக்கு இடையூறாக இருக்கும் என்பதால், ‘பிறகு பேசிக்கலாம்’ என்று நினைத்தான்!
இருந்தாலும், ‘இப்படி புரிந்து கொள்ள மறுக்கிறாளே?’ என்று சலிப்பு வந்ததில் பெருமூச்சி விட்டு எழுந்து வெளியே வரவும், சோஃபாவில் இருந்த செண்பகம் மகனைப் பார்த்தார். அவன் முகத்தில் ஒரு அசௌகரியம் தெரிந்தது.
“வெளிய போயிட்டு வர்றேன்” என்றான் செயற்கையான புன்னைகையுடன், அந்த இயற்கை ரசிகன்!
‘சரி’ என்பது போல் தலையசைத்தார்.
சற்று நேரத்தில்… நளினி வந்திருந்தாள். செண்பகத்திடம் அவள் பேசும் குரல் கேட்டதும், பயிற்சி முடித்து பாவையும் வெளியே வந்தாள்.
‘ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க, நான் நைட்டுக்கு சமைக்கிறேன்’ என்று சொல்லி, செண்பகம் சென்றுவிட்டார். அரை மணி நேரத்திற்கு நளினியிடம் பாவை பேசிக் கொண்டிருந்துவிட்டு அறைக்குள் சென்றாள்.
நளினி சமையலறை வந்து நின்று கொள்ள, “பேசி முடிச்சாச்சா?” என்றார்.
“அவ பேசினா, நான் கேட்டுக்கிட்டு இருந்தேன்” என்றாள் எரிச்சலாக!
“ஏன்? என்னாச்சு?”
“மியூசிக் மியூசிக்னு… அதைப் பத்தி மட்டும்தான் பேசிக்கிட்டு இருந்தா!!”
“ஓ!” என்றார் ஈடுபாடே இல்லாமல்!
“அண்ணனாகிட்டயும் இப்படித்தான் பேசுவாளா?”
“அது எதுக்கு உனக்கு” என்றார் சட்டென்று!
“என்னம்மா, ஒரு மாதிரி இருக்கீங்க? என்னாச்சு?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்று மனதின் கலக்கத்தை மறைத்தார்!
“இல்லை ஏதோ இருக்கு! சொல்லுங்க”
“சிவா அவளுக்காகத்தான் ரெஸ்ட் எடுக்காம ட்ராவல் பண்ணி வந்திருக்கான். ஆனா இவ அதைப் புரிஞ்சிக்காம, அவனுக்கு அக்கறை இல்லைனு சொல்றா” என்றார் கவலையாக!
“என்னது? அக்கறை இல்லையா? எப்படி அவ அப்படிச் சொல்லலாம்?” என்று அண்ணனிற்காகப் பொங்கினாள்.
“அவ, இவனு பேசாத நளினி” என்றார் கண்டனமாக!
“ப்ச், என்னை விட சின்ன பொண்ணும்மா. நீங்க எதும் கேட்கலையா?” என்று கேட்க, ‘இல்லை’ என்று தலை அசைத்தார்.
“நான் வேணா கேட்கவா?”
“சும்மா இரு! அண்ணன் சமாளிச்சிப்பான்!!”
“சந்தோஷமா இருக்கத்தான் மேரேஜ் பண்ணி வச்சிருக்கு! சமாளிக்கிறதுக்கு இல்லை” என்றாள் அண்ணனுக்காக!
‘மகள் சொல்வது சரிதானோ?’ என்ற எண்ணம் வந்தது. இருந்தும், “கல்யாணம் இப்பதான ஆகியிருக்கு. சரியாயிடும்!” என்றவர் முகம் இன்னும் சரியாகாமல் இருந்தது!
“என்ன நீங்க இன்னும் ஒருமாதிரி இருக்கீங்க. வேற ஏதும் இருக்கா மா?” என்று கேட்க, பிரவீனிடம் பாவை பேசாமல் போனதைப் பற்றிச் சொன்னார்.
“இதுக்கும் அண்ணா ஒண்ணும் சொல்லலையா?”
“சொல்லிருப்பான்னு நினைக்கிறேன்! அதான் மாப்பிள்ளகிட்ட சாரி கேட்டா”
“உடனே பிரவீன், எதுக்காக சாரியெல்லாம்னு சொல்லிருப்பானே!? எப்பவும் அவன் இப்படித்தான்!” என்று பட்டென சொல்லிவிட்டு, அம்மாவைப் பார்க்க, அவர் கோபத்துடன் நின்று கொண்டிருந்தார்.
“சாரி-ம்மா! சாரி!! சட்டுன்னு மரியாதையை இல்லாம பேசிட்டேன். சாரி”
இன்னும் கோபமாகத்தான் நின்றார்.
“தனியா இருக்கும் போது பேசுற மாதிரியே சில நேரம் வந்திடுது. அதான் சாரி சொல்லிட்டேன்ல!? விடுங்க!” என்று சமாளித்தாள்!
இரவு உணவிற்கான வேலையை ஆரம்பித்தவரிடம், “இன்னும் ஏன் ஒருமாதிரி இருக்கீங்க ம்மா” என்றாள்.
“வெளிய போறப்ப சிவா முகம் ஒருமாதிரி இருந்தது! மனசு கஷ்டமாயிருச்சி. அதான் அப்பாகிட்ட ஃபோன் பண்ணி சொன்னேன்”
“அப்பாகிட்ட ஏன் மா சொன்னீங்க, அண்ணா சந்தோசமாக இல்லனா அப்பா ரொம்ப கஷ்டப்படுவாங்க” என்று வருத்தப்பட்டாள்.
“ஏன் இப்படி பண்றானு தெரியல” என்று தன்போக்கில் சொல்லிக் கொண்டே, சமையலைக் கவனிக்க ஆரம்பித்தார்!
“நான் சொல்லவா ஏன்னு?” என்று அவர் முன்வந்து நின்றதும், ‘சொல்லு’ என்பது போல் செண்பகம் பார்க்க, “நீங்களும் அண்ணனும் கொடுக்கிற இடம்! இது மேரேஜ் சேரி செலக்ட் பண்றதுல ஆரம்பிச்சது” என்றாள்.
“அதுக்கு, அது அவ மொமெண்ட்னு அண்ணன் காரணம் சொல்லிட்டான்!”
“நாங்க மூணு பேரும் சொன்ன இடத்துக்கு வரமாட்டேன்னு சொன்னது??!”
“அதுக்கு அவளே காரணம் சொல்லிட்டா! அது முடிஞ்சு போனது. அதைப் பத்தி இனிமே பேசாத!” என்றார் கண்டிப்பான குரலில்!!
“அதான் ஆரம்பம்னு சொல்றேன்” என்றதும் புரியாமல் பார்த்தார்.
“நானும் பிரவீனும் சொன்னதைக் கேட்ருக்க வேண்டாம்! அட்லீஸ்ட் அண்ணா சொன்னதையாவது கேட்டிருக்கலாமே!? என்றதும், அமைதியாக இருந்தார்.
“பாண்டியன்னு பேர், ரிங் இதெல்லாம் அண்ணா ஏன் அக்செப்ட் பண்றான்?”
“அன்னைக்கு சொன்னானே?! விட்டுக்கொடுக்கிறதுனு!!”
“அப்போ அண்ணனோட விருப்பம்!” என்றவள், “ஏன் அவ விட்டுக் கொடுக்க மாட்டாளா? அண்ணன் மட்டும்தான் விட்டுக் கொடுக்கணுமா??” என்றாள் அண்ணன் மீதான அதீத அன்பில்!!
“இது தேவையில்லாத பேச்சு! அவன் அவளுக்காக விட்டுக்கொடுக்கிறான். இதுல நாம சொல்றதுக்கு ஒன்னும் இல்லை”
“அப்போ அக்கறை இல்லைனு சொன்னது?
“புரியாம சொல்லியிருப்பா! அவனைப் புரிஞ்சிக்க அவளுக்குக் கொஞ்சம் டைம் எடுக்கும். கண்டிப்பா புரிஞ்சிப்பா! நீ கிளம்பு!!” என்றார் முடிவாக!
“ரொம்ப சப்போர்ட் பண்றீங்க!” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
என்னதான் மருமகளுக்காக பேசினாலும், மகன் புன்னகையை நினைத்துப் பார்த்த செண்பகத்திற்கு, ‘தான் பார்த்துக் கட்டி வைத்த பெண்ணுடன், மகன் சந்தோஷமாக இல்லையோ?’ என்ற எண்ணம் மனதின் ஓரத்தில் வந்தது!!
இரவு உணவிற்குப்பின் செண்பகத்திற்கு சில உதவிகள் செய்துவிட்டு, பாவை அறைக்குள் நுழைந்தாள். கண்ணாடி கதவுகளைத் தாண்டி இருந்த பால்கனி சுவற்றில் உட்கார்ந்திருக்கும் கணவன் தெரிந்தான்.
சைகையால் அழைத்தான். அவளும் சென்றாள். அருகில் நின்றாள். ஆனால் ஓய்ந்து போன மனது… அவன் மீது சாய்ந்து கொள்ள கஞ்சத்தனம் செய்தது!!
“ஏதாவது பேசணுமா பாவை?” என்று கேட்க, ‘இல்லை’ என்று தலையசைத்து, “ட்ரிப் பத்திச் சொல்லுங்க” என்றாள். ‘சரி’ என்று சொல்ல ஆரம்பித்தான்.
அவன் சென்ற இடங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாலும்… அவள் மனம் என்னவோ அவனுக்காக காத்திருந்த நிமிடத்திற்கே சென்றது.
எதையோ எதிர்பார்த்து ஏமாற்றத்தை உணர்ந்த பாவைக்கு, ‘இவனுக்கும் தன்மீது அக்கறை இல்லையோ?’ என்ற குழப்பம் மனதின் ஓரத்தில் வந்தது!!

