Kathambari Novels
அத்தியாயம் – 10
சிவாவின் அதிர்ச்சியைக் கண்டு, “என்னாச்சு?” என்றாள் பாவை.
“நீ ஏன் பாண்டியன்னு கூப்பிடுற?”
“அதான உங்க பேரு!?”
“ஆமா” என்று தயங்கி ஒத்துக் கொண்டாலும், “ஆனா எல்லாரும் சிவானுதான் கூப்பிடுவாங்க” என்ற ஒன்றை சொல்லிப் பார்த்தான்.
“ஓ!” என்ற ஒற்றைச் சொல்லில் முடித்துவிட்டாள்.
“எனக்கு பாண்டியன்னு கூப்பிட்டா பிடிக்காது” என்று தன் விருப்பத்திற்கான கோரிக்கையை வைத்துப் பார்த்தான்.
“இது எனக்கு தெரியாதே. கல்யாணத்துக்கு முன்னாடிகூட, இந்த மாதிரிதான் நினைச்சிப்பேன். மத்தவங்ககிட்ட பேசறப்பவும் பாண்டியன்னு சொல்லிதான் பேசியிருக்கேன்”
“இனி மாத்த முடியாதா?”
“உங்களுக்கு ஏன் அந்தப் பேர் பிடிக்காது?”
“தெரியலை! ஆனா பிடிக்காது”
“சரியான காரணம் சொல்லுங்க! மாத்திக்கிறேன்”
“இல்லைனா?”
“எனக்குப் பிடிச்சிருக்கு… இருக்கட்டுமே?!” என்று தன் விருப்பத்திற்கான ஒரு கோரிக்கையை வைத்துப் பார்த்தாள். யோசித்தான். பின், ‘சரி’ என்பது போல் தலையாட்டினான்.
“தேங்க்ஸ் பாண்டியன்” என்று சந்தோஷமாக அவன்மீது சாய்ந்து கொண்டாள். கல்யாணக் களையுடன் இருப்பவளைக் களிப்புடன் கட்டிக் கொண்டான்.
அன்பின் ஆரம்பப் பாடத்தில் இருப்பவள்… கணவன் தன் விருப்பத்தை ஏற்றுக் கொண்டான் என்று ஆனந்தம் அடைந்தாள்! அன்பின் அறிவியல் பேசுபவன்… மனைவி விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்ததால் மகிழ்ச்சி அடைந்தான்!
ஆனால், ‘ஏற்றுக் கொள்ளவது’ ‘மதிப்பு கொடுப்பது’ இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு!!
சிவாவின் கண்களில் அந்த அறையின் பிரமாண்ட கண்ணாடிக் கதவுகளைத் தாண்டியிருந்த பால்கனி தெரிந்ததும், அணைத்திருந்த மனைவியைத் தள்ளி நிறுத்தி, “பாவை! என்கூட வா!” என்றான்.
“எங்க” என்று கேட்டவள், மீண்டும் அவன் அகம் இருக்கும் இடத்தில் முகம் வைத்துக் கொண்டாள்! அதுதான் ஆசை போல!!
“ப்ச்! உன்கிட்ட ஒன்னு காட்டணும் ஹனி! ப்ளீஸ் வா” என்று, மீண்டும் அவளைத் தள்ளி நிறுத்தினான்.
“எங்க?” என்றாள் நிதானமாக! “வா” என்று அவள் கைப்பிடித்து பால்கனிக்கு அழைத்துச் சென்று, ஒரு போன்சாய் மரத்தின் முன் நிற்க வைத்தான்.
“என்ன இது?” என்றாள்.
“ஹனி லோகஸ்ட்”
“ஓ! அன்னைக்கு சொன்னீங்கள?!” என்றவள், அந்தப் பால்கனி முழுவதும் பார்வையைப் படரவிட்டாள்.
அறையை விட இருமடங்கு பெரிதாக இருந்தது! முழுவதும் வெவ்வேறு வடிவ தொட்டிகளில் விதவிதமான போன்சாய் மரங்கள். சில இடத்தில் மேற்கூரை இருந்தது! சில இடங்களில் இல்லை!!
மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் ஆப்பிள்கள் தொங்குவதும், வண்ண வண்ண பூக்கள் இருப்பதும் தெரிந்தன!
“எப்படி இருக்கு?” என்று கேட்டான்.
அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல், “வீட்டுக்குள்ள… இங்க… இப்படி எல்லா இடத்திலயும் ஏன் மரமா இருக்கு?” என்று கேள்வி கேட்டாள்.
“இந்த அட்மாஸ்பியர் ரொம்ப பிடிக்கும். மரத்தோட வாசனை… இலையோட நிறம், காடு இதலாம் பிடிக்கும். எனக்கு நேச்சர் பிடிக்கும்” என்று சொன்னதும், பாவை சிரிக்க ஆரம்பித்தாள்.
“எதுக்குச் சிரிக்கிற?”
“இந்த மாதிரி ரூம்குள்ள நாலைஞ்சி மரத்தை வளர்த்திட்டு… காடு பிடிக்கும்னு சொல்லறீங்கள! அதான் சிரிச்சேன்!!”
அந்தக் கணத்தில் எங்கோ போய்க் கொண்டிருந்த மேகம் இங்கேயும் லேசாக தூறல் போட ஆரம்பித்தது. அதை உணர்ந்தவன், “வா அங்க போய் நிற்கலாம்” என்று மேற்கூரை போடப்பட்ட இடத்திற்கு அவளைக் கூட்டிச் சென்றான்.
அங்கே சென்றதும், “நேச்சர்னா அதுல மழையும் உண்டுதான?” என்றாள்.
“ஆமாம்”
அதற்கும் சிரித்தாள்.
“திரும்ப ஏன் சிரிக்கிற?”
“இயற்கை பிடிக்கும்னு சொல்லிட்டு நாலு தூறல் விழறதுக்குள்ள இப்படி வந்து நிக்கிறீங்க?” என்று மீண்டும் மீண்டும் அதையே சொல்லி அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு தோள்களில் தலை சாய்த்து சிரித்தாள்.
“அன்னைக்கு உன் வாய்ஸ் பத்தி அவ்ளோ கேர் எடுத்துக்கிட்ட. சரி, நனைஞ்சா த்ரோட் ப்ராப்ளம் வந்திடும்னு நானும் கேர் பண்ணேன் பார்த்தியா? நீ இதுவும் பேசுவ! இன்னமும் பேசுவ!!” என்று அவனும் சிரித்தான்.
“எனக்காகவா? என்னை கேர் பண்றீங்களா பாண்டியன்?” என்றவள் குரலில், ஏக்கத்தின் வாசனை எக்கச்சக்கமாக இருந்தது.
“இந்த டயலாக்லாம் வேண்டாம்” என்றவன், “நீ வா” என்று அவளை இழுத்துக் கொண்டு மேற்கூரையை விட்டு வெளியே வந்தான்.
“வேண்டாம் ப்ளீஸ்! நனைஞ்சிடுவேன்” என்று கெஞ்சி, திமிறிக் கொண்டு போனவளை திடமாக இழுத்துப் பிடித்து, மீண்டும் தன் அருகில் நிறுத்தினான்.
மீண்டும் மீண்டும் இது நடந்தது! ஆனால் ஒன்று! அவன் இழுத்த இழுப்பிற்கு இசைந்து கொடுப்பது போல்தான் அவள் அசைவுகள் இருந்தன! ‘வேண்டாம் என்கிறாளா? வேண்டும் என்கிறாளா?’ என்று கேட்கும் அளவிற்கு அவளது ஆர்ப்பாட்டங்கள் இருந்தன!!
“பாண்டியன் ப்ளீஸ்” என்று திரும்பத் திரும்ப பாவை கேட்க, இப்போது அவன் சிரித்தான். “ஏன் சிரிக்கிறீங்க?” என்றாள்.
“ஹனி தூறல் அப்பவே நின்னாச்சி” என்றான் அவளை விட்டுவிட்டு. பாவை நேராக நின்றாள். பின் வானத்தைப் பார்த்தாள். ‘ஆமாம்’ என்பது போல் ஓர் அசட்டுப் புன்னகை செய்தாள்.
அவளைப் பார்த்துப் புன்னைகைத்து, பால்கனி சுவரில் சாய்ந்து கொண்டான். அவன்மீது சாய்ந்து நின்று, “உங்களுக்கு ஏன் இயற்கை இவ்வளவு பிடிக்கும்னு சொல்லுங்க?” என்று கேட்டாள்.
அவள் தோளில் கை போட்டுக் கொண்டு, “நாம வாழறதுக்கு மூல காரணமே நேச்சர்தான். ஸோ பிடிக்கும்!” என்றான்.
“வாழற வாழ்க்கையில ஏதாவது பிரச்சனை வந்தா, மனசுக்கு ரிலாக்ஸ் தர்றது இசைதான்” என்றாள் சம்பந்தமில்லாமல்!
“நேச்சரும் ரிலாக்ஸ் தரும்! நம்மளைச் சுத்தி ப்ளாண்ட்ஸ் இருக்கும் போது, கார்டெனிங் பண்றப்போ, காட்டுக்குள்ளே இருக்கிறப்போ… அது நம்மளை டிப்ரெஸ்ஸன் ஆகாம வச்சிக்கும். ரிலாக்ஸ் பீல் வரும்”
அவன் கைவளைவிற்குள் இரவின் குளிருக்கு இதமாக நன்றாகத் தன்னைப் பொருத்திக் கொண்டு, “எனக்கு இதைப் பத்தி எதும் தெரியாது” என்றாள்.
“நேச்சர் ரொம்ப சிம்பிள் ஹனி. எந்த ரூல்ஸும் இல்லை. ஸோ எல்லாரும் அத கொண்டாடலாம்” என்றான் எளிதாக!
“இசை பிரமாண்டமானது! அதுக்குன்னு ஒரு வரையறை இருக்கு. ஏதோ ஒரு வடிவத்தில எல்லா கொண்டாட்டத்திலயும் இசை இருக்கும்” என்றாள் பாவை எதிர்மறையாக!
“ரூல்ஸ் இல்லாததால, யார் வேணும்னாலும் நேச்சர் ரசிக்கலாம்” என்றான் விருப்பமாக!
“வரையறையைக் கத்துக்கிட்டு, அதை யார் வேணும்னாலும் ரசிக்கிற மாதிரி கொடுக்கலாம்” என்றாள் விவாதமாக!
“ஹே ஹனி! போதும்! நீ ஒன்னு சொன்னா நான் ஒன்னு சொல்லணுமா? நமக்கு பிடிச்ச விஷயங்களைப் பத்தி ஷேர் பண்ணிக்கிட்டோம்! அவ்வளவுதான்!!”
அவன் அணைப்பிலிருந்து விலகி, “பதில் சொல்ல முடியலைனதும் இப்படிப் பேசி சமாளிக்கிறீங்களா?” என்று கேட்க, “அப்படியில்லை” என்றான்.
மேலும், “நீ பேசினத வச்சி நான் தெரிஞ்சிக்கிட்டது உனக்கு மியூசிக் ரொம்ப பிடிக்குது. அதைப் புரிஞ்சிகிட்டு, அதுக்கு மதிப்பு கொடுப்பேன். அன்ட் நான் பேசினதை வச்சி எனக்கு நேச்சர் பிடிக்கும்னு தெரிஞ்சிருக்கும். உனக்கு நான் தர்ற சப்போர்ட்ட, எனக்கு நீ தரணும்னு எக்ஸ்பெக்ட் பண்ணுவேன்” என்றான்.
விழியசைக்காமல் அவன் விழிகளைப் பார்த்தபடி நின்றவளிடம், “உள்ளே போகலாமா?” என்றான்.
“போகலாம்! ஆனா நானும் உங்களைப் புரிஞ்சி நடந்துப்பேன்”
“ம்ம்” என்று உள்ளே அழைத்துச் சென்றான். அறைக்குள் வந்ததும் பாண்டியன் மெத்தையில் அமர்ந்தான். பாவை, தான் கொண்டு வந்திருந்த பெட்டிகளில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.
“இந்த நேரத்தில என்ன தேடுற?” என்று சலித்துக் கொண்டே கேட்டதும், “ஒரு நிமிஷம்” என்றவள் ஒரு பத்து நிமிடம் கழித்து, அவனருகில் வந்து அமர்ந்து, “கண்ணை மூடுங்க” என்றாள்.
“எதுக்கு?”
“ப்ளீஸ்” என்றதும் விழிகளை மூடிக் கொண்டான்.
கையில் இருந்த நகைப் பெட்டியை திறந்து, அதிலிருந்த மோதிரத்தை எடுத்து பாண்டியன் வலது கை மோதிர விரலில் போட்டுவிடப் போனாள். சட்டென்று உணர்ந்து அவன் விழி திறக்கையில், மோதிரம் விரலின் பாதி தூரத்திற்குச் சென்றிருந்தது.
“ஹே ஹனி! என்ன பண்ற?” என்கையிலே, அவனுடைய விரலில் மோதிரத்தை அணிவித்திருந்தாள். அவன் கையைத் தூக்கி அப்படியும் இப்படியும் பார்த்து, “நல்லா இருக்குதுல்ல” என்று கேட்டாள்.
“என்ன பாவை இது?”
“ரிங்! கிஃப்ட்!!”
“அது தெரியுது! பட், நான் கோல்ட் ஆர்னமெண்ட்ஸ் போட மாட்டேன்”
“ஏன்?”
“எனக்குப் பிடிக்காது பாவை”
“என்ன பண்ணாலும் பிடிக்காதுனு சொல்றீங்க, எதுதான் உங்களுக்குப் பிடிக்கும்” என்று அலுத்துக் கொண்டாள்.
“அப்படி இல்ல…” என்று விளக்கப் போக, “எவ்ளோ ஆசை ஆசையா வாங்கினேன் தெரியுமா?” என்றவள், விருப்பத்துடன் அவன் மேல் சாய்ந்து, மெல்ல தலை நிமிர்த்தி, “எனக்காகப் போட்டுக்கோங்க” என்றாள்.
“டூ டிராமட்டிக்” என்று சொன்னாலும், “சரி” என்று ஒத்துக் கொண்டான்.
“தேங்க்ஸ், இத என்னைக்கும் கழட்டவே கூடாது” என்று அவள்மீதான அவன் அன்பிற்கு அதுதான் அளவுகோல் என்பது போல் ஒரு கட்டளை இட்டாள்.
“ஏன்? கழட்டினா என்ன?”
“உங்களுக்கு, என் மேல அன்பு இல்லைனு அர்த்தம்” என்று சொல்லி முடிக்கும் போதே, “பாரு, போட்டுவிட்ட போட்டுக்கிட்டேன்! ஆனா இந்த மாதிரி ரூல்ஸ் சொல்லாத. எனக்கு அப்படி எதுவும் கிடையாது” என்றான்.
“எனக்கு அப்படித்தான்” என்றாள் அடமாக!
“உன்மேல இருக்கிற அன்பை இப்படி ஒரு பொருளோடு கம்பேர் பண்ணாத”
“நான் அப்படித்தான்” என்றாள் மீண்டும்! அதற்கு மேல் எதுவும் பேசவில்லை! அவளையே பார்த்ததவன், “பாவை” என்ற அழைத்தான். இருமுறை அழைத்த பின்னும், அவள் பாராமல் இருக்க, “பாவை ப்ளீஸ்! முக்கியமா பேசணும்” என கெஞ்சும் குரலில் கேட்டதும், ‘என்ன?’ என்று திரும்பினாள்.
“இதுவரைக்கும் பேசினதை வச்சி சொல்றேன்… நம்ம ரெண்டு பேருக்குள்ள டிஃரென்ஸ் ஆஃப் ஒப்பீனியன் நிறைய இருக்குது” என்றதும், ‘என்ன சொல்ல வருகிறான்?’ என்பது போல் பார்த்தாள்.
“ரெண்டு பேரோட எண்ணங்கள், விருப்பங்கள்… எல்லாம் வேற வேற மாதிரி இருக்கு”
“அதனால?!” என்றாள் பதற்றமாக!
“ஏன் இவ்ளோ டென்ஷன்…” என்ற போதே, “முதல விஷயத்தை சொல்லுங்க” என்றதும், “அதனால சம்டைம்ஸ் ஆர்க்யூமென்ட்ஸ் வரலாம்” என்றான்.
“சண்டையா?” என்றாள் பயத்துடன்!
“சண்டை இல்லை. ஆர்க்யூமென்ட்! அதுவும் ஹெல்த்தி ஆர்க்யூமென்ட்!”
“ம்கூம் இல்லை! அதலாம் வராது. வரக் கூடாது” என்றாள் தொய்வான குரலில்.
“அப்படி வந்தா ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க ஈஸியா இருக்கும்” என்று தெளிவான குரலில் சொன்னான்.
‘சண்டை வந்தால் எப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்?’ என்று அவள் குழம்ப ஆரம்பிக்க, “பாவை இன்னொன்னு சொல்லணும்” என்றான்.
“ஒருநாளைக்கு எத்தனை சொல்லுவீங்க” என்று அலுத்தாலும், “சொல்லுங்க” என்றாள்.
“ஃபர்ஸ்ட் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கணும்! அதுக்கப்புறம்தான் லைஃப் ஸ்டார்ட் பண்ணனும்!! ஓகேவா?”
அவள் முகம் யோசனையாக இருக்கவும், “உனக்கு ஓகே இல்லயா” என்றான்.
“நான் அத யோசிக்கலை”
“வேறென்ன?”
“நாம சண்டை போடக் கூடாது! நீங்க என்னய கஷ்டப்படுத்தக் கூடாது” என்று அதே இடத்தில் நின்றாள்.
“அது சண்டையில்ல பாவை! ஆரோக்கியமான விவாதம்!! அப்புறம், உன்னை எப்படிக் கஷ்டப்படுத்துவேன்?” என்று அதே புள்ளியில் நின்றான்.
“தூங்கலாமா??” என்றாள்.
அவன் சரியென்றதும், மெத்தையின் ஓரத்தில் படுத்துக் கொண்டாள்.
எழுந்து சென்று பகல் விளக்குகளை அணைத்து விட்டு, இரவு விளக்குகளைப் போட்டுவிட்டான். திரைகளை மூடிவிட்டு வந்து படுத்தவன், சுவரைப் பார்த்து படுத்திருந்தவளின் காதில், “பைவ் த்ரீ செவன் ஒன் டூ த்ரீ நைன் டூ ” என்றான்.
கண்களைக் கூடத் திறக்காமல், “இதுவரைக்கும் சொன்னதும் புரியலை! இப்ப சொல்றதும் புரியலை. மொத்தத்தில எல்லாம் வேஸ்ட்” என்றாள்.
நன்றாக சிரித்தவன், “புரியலைனா… புரிய வச்சிடுவேன். நான் இருக்கேன்ல பாவை!? பார்த்துப்பேன்” என்று நம்பிக்கை தந்தான்.
‘நீ மட்டும்தான் இருக்கிறாய்’ என்று கத்த வேண்டும் போல இருந்தது பாவைக்கு!
ஆனால் அவன் சொல்கிறானே, ‘இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று! அதனால் புரிந்துகொண்ட பின்தான், மனப் புழுக்கத்தைப் பற்றிச் சொல்ல முடியும் என்று நினைத்துக் கொண்டாள்.
மெல்ல திரும்பி அவனருகில் சென்று குப்புற படுத்திருந்தவன் முதுகில் முகம் வைத்துப் படுத்துக் கொண்டாள். அதன்பிறகு, விடியும் வரை… நிசப்தமான அறை! நிம்மதியான நித்திரை! இவை மட்டுமே!!
அடுத்த நாள் காலை! பாவை, பாண்டியன், மதியழகன் மூவரும் சப்பிட்டுக் கொண்டிருந்தனர். கச்சேரி பற்றி மதியழகன் பாவையிடம் கேட்டார். மகனும் அப்பாவும் பேசும் நிமிடங்களில் அவளையும் சேர்த்துக் கொண்டனர்.
இடையிடேயே செண்பகம் வந்து, ‘என்ன வேண்டும்’ என்று அவளிடம் கேட்டுப் பரிமாறி சென்றார். ஒவ்வொருவரின் அன்பை, அக்கறையை அனுபவித்தாள்.
தானே பரிமாறிக் கொண்டது, பேசுபவர்களைப் பார்த்தபடியே சாப்பிட்டது என்றில்லாமல், தன்னுடன் பேசுபவர்கள், தன்னைக் கவனிப்பவர்கள் என்று மிகுந்த சந்தோசத்துடன் இருந்தாள் பாவை.
“நான் கிளம்பறேன்” என்று இருவரிடமும் விடைபெற்ற மதி, சமயலறைச் சென்று மனைவியிடம் சொல்லிவிட்டு வந்து… வாசற் கதவைத் திறந்தார்.
வெளியே நளினியும் பிரவீனும் நின்றிருந்தனர். “வாங்க மாப்பிள்ளை” என்று மரியாதையுடன் மதி வரவேற்க, பிரவீன் உள்ளே வந்தான். “குட் மார்னிங் ப்பா” என்று நளினியும் உள்ளே வந்தாள்.
அவளுக்கு லேசாக தலையசைத்து, “சாப்பிடுங்க மாப்பிள்ளை” என்று சொல்ல, “அத்தைதான் கூப்பிட்டாங்க” என்று பிரவீன் சொன்னதும், “சரி… சரி” என்று மதி கிளம்பினார்.
பாண்டியன் பாவையுடன் நளினி, பிரவீன் சேர்ந்து கொண்டனர். மருமகன் வந்திருப்பது தெரிந்ததும் செண்பகம் வந்து வேண்டியதைக் கவனித்துவிட்டு சென்றார்.
பேச்சு தொடர்ந்து கொண்டிருக்கும் பொழுது, “பாண்டியன்” என்றாள் பாவை!
‘ஐயோ’ என்று அழைத்தவளைத் தவிர மற்றவர்கள் இருந்தார்கள். பாண்டியன் கூப்பிட்டவளைப் பார்த்தானோ… இல்லையோ? ஆனால் கூடப் பிறந்தவளைப் பார்த்தான்!
பாவை, “பாண்டியன்” என்று மீண்டும் அழைத்து, “அது வேணும்” என்று கை காட்ட, அவள் கேட்டதைக் எடுத்துக் கொடுத்துவிட்டு உண்ண ஆரம்பித்தான். பிரவீன் பாண்டியனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டான்.
நளினியோ, “அண்ணனுக்கு இப்படிக் கூப்பிட்டா பிடிக்காது” என்று அதிருப்தி தெரிவித்தாள் அண்ணன் மனைவியிடம்.
“ம்ம் தெரியும்” என்றாள் பாவை!
“பிடிக்காதுன்னு தெரிஞ்சே ஏன் கூப்பிடுற?”
“எனக்கு பிடிக்கும்ல? அதான்!” என்றதும், அதற்கு மேல் ‘என்ன கேட்கவென்று?’ தெரியாததால் நளினி அமைதியாக இருந்தாள்.
பிரவீன், “இப்படிச் சொல்ல தெரியாம, எத்தனை தடவை அவன்கிட்ட கொட்டு வாங்கியிருக்கிற?” என்று மனைவியிடம் சொல்லிச் சிரித்தான்.
கணவன் சிரிப்பதைக் கண்ட நளினி அண்ணனை முறைத்தாள். ‘இவன் ஏன் இப்படி?’ என்று சிவா பிரவீனை முறைத்தான். பாவைக்குப் பெரிதாக எதுவும் புரியவில்லை!
“ம், ஃபர்ஸ்ட் சாப்பிடு” என்று சிவா தங்கைக்குப் பாரிமாறிட, விரலில் தெரிந்த மோதிரத்தைப் பார்த்தவள், அவன் மணிக்கட்டைப் பிடித்துக் கொண்டு, “இது என்ன அண்ணா?” என்றாள் நளினி.
“அது என்னோட கிஃப்ட்!” என்றாள் பாவை.
“ஓ!” என்று நளினி உண்ண ஆரம்பித்தாள்.
“வெட்டிங் அன்னைக்கு… நீ அவ்வளவு சொல்லியும், ஒரு சின்ன செயின் கூட போடா மாட்டேன்னு சொன்னான்… இப்போ பாரு” என்று பிரவீன் மீண்டும் நளினியிடம் சிவாவை மாட்டிவிட்டான்!
அவ்வளவுதான் நளினி! “ம்மா” என்று கத்திக் கொண்டே சமயலறைச் செல்ல, “ஐயோ” என்று எழுந்த பாண்டியன், “வந்து பேசிக்கிறேன் டா” என்று பிரவீனை முறைத்துவிட்டுச் சென்றான்.
செல்பவனையே பார்த்திருந்த பாவையிடம், “நீ சாப்பிடு!” என்றான் பிரவீன்!
“நளினி கோபமா போறாங்க! ரெண்டு பேரும் சண்டை போடுவாங்களோ?” என்று பயந்து போய் கேட்டாள்.
“அடிக்கடி சண்டை போடுவாங்க பாவை. கொஞ்ச நேரத்தில சமாதானமும் ஆகிடுவாங்க! இதெல்லாம் எனக்குப் பழகிடுச்சி” என்றான். “அவங்க சண்டை போடலைனாலும் நாம எதும் பேசி சண்டை வர வச்சிடனும். சரியா?” என தன் விளையாட்டிற்கு அவளையும் கூட்டுச் சேர்த்தான்.
சிரித்துக் கொண்டாள் பாவை.
“நாளைக்கு பிரீ-யா பாவை?”
“ஏன் அண்ணா கேட்கிறீங்க?”
“அம்மா சொன்னாங்க உனக்கும் சிவாவுக்கும் விருந்து வைக்கணும்னு”
“அவங்ககிட்ட கேட்கணுமே??”
“உனக்கு ஓகேவான்னு சொல்லு! அவன் ஒன்னும் சொல்ல மாட்டான். ஏதாவது சொன்னாலும், நம்ம இழுத்திட்டுப் போயிடலாம்” என்றவன், “உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு? அம்மா சூப்பரா சமைப்பாங்க. உனக்குப் பிடிச்சதை சமைக்கச் சொல்றேன்” என்றான்.
முதல் முறை அல்லவா? இப்படி ஒருவர் அவள் விருப்பமான உணவுகள் பற்றிக் கேட்பது! பதில் சொல்ல முடியாத அளவிற்குச் சந்தோசமாக இருந்தாள்!!
இன்னும் இன்னும் பேசி இருவரும் சிரித்துக் கொண்டிருந்தனர். தற்செயலாக வந்த பாண்டியன், மனம்விட்டு மனைவி சிரிப்பதை பார்த்ததும் மகிழ்ந்தான்.
ஆனால் நளினிக்கு மனதின் ஓரத்தில், ‘அண்ணன் விருப்பங்களுக்கு பாவை மதிப்பு கொடுக்கவில்லையோ?’ என்ற எண்ணம் அரிக்க ஆரம்பித்திருந்தது.
அந்த வீட்டில் முதல் நாள் இப்படித்தான் ஆரம்பித்தது பாவைக்கு!
அதற்கடுத்து வந்த நாட்கள், உறவினர்களின் உபசரிப்புகள்! உற்றார்களுடன் ஊர்சுற்றல்! புதுதம்பதிகளின் பிரத்தியேக பொழுதுகள்! இவை மட்டுமே!!
பத்து நாட்கள் இதே போல்தான் சென்றன!
அதன் பிறகான ஒரு நாளில் செண்பகத்திடம் பேசிவிட்டு, பாவை மாலை நேர காஃபியை குடித்தபடி அவர்கள் அறைக்குள் வந்தாள்! பயணப் பொதிக்குள் உடைகளை எடுப்பதில் மும்முரமாக இருந்தான் சிவா.
“என்ன பேக் பண்றீங்க?” என்று கதவைத் தாழிட்டு, அவனருகில் வந்தாள்.
அவள் குரல் கேட்ட பின்தான் நிமிர்ந்து பார்த்து, “வா ஹனி. ஒரு ட்ரிப் இருக்கு. அதுக்குத்தான் ரெடி ஆகிறேன்” என்று, அலமாரியிலிருந்து ஜாக்கெட்டை எடுத்து பயணப் பைக்குள் வைத்தான்.
“என்ன திடிர்னு?” என்றாள்.
“மேரேஜ் முடிஞ்சி பத்து நாளாயிடுச்சி, வேலை பார்க்கணும்ல”
“எப்போ கிளம்புறீங்க?” என்றவள் குரலில் முதல் பிரிவை நினைத்து வருத்தம் இருந்தது.
“நாளைக்கு கிளம்புறேன். அஞ்சு நாள் கழிச்சிதான் ரிட்டன். ஓகேவா??” என்று கை உறைகளை எடுத்து வைத்தான்.
“ம்ம்ம்” என்றாள் மனமே இல்லாமல்!
ஓரளவு எடுத்து வைத்ததால், “நீயும் வர்றியா?” என்று கேட்டு, ‘ராக்கிங் சேரி-ல்’ அமர்ந்தான். மேலும் சைகையால் அவளையும் வந்து அமரச் சொன்னான்.
“வரல. முக்கியமான கச்சேரி இருக்கு” என்று அவன் மடியில் வந்து அமர்ந்தாள்.
வாகாக வாழ்க்கைத் துணையை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு, “எப்ப” என்று கேட்டபடியே நாற்காலியில் அசைந்தாடினான்.
“பத்து நாள் கழிச்சி” என்றாள் நன்றாக அவன் மார்பில் சரிந்து அமர்ந்து!
“அப்போ வரலாமே! டிக்கெட் அரேஞ் பண்ணவா?” என்றான் ஆர்வமாக!
“ப்ராக்டிஸ் பண்ணனும்! இது ரொம்ப முக்கியமான கச்சேரி. எப்பவும் நானும் கௌசியும் பாடுவோம். இது வேற ஒருத்தர்கூட சேர்ந்து பாடப் போறோம். அவர் பெரிய லெஜென்ட்.
தர்பார் பெஸ்டிவல் தெரியுமா? அதுமாதிரி சென்னையில அரேஞ் பண்றாங்க. இதுவரைக்கும் சின்ன சின்ன சபாலதான் பாடிக்கிட்டு இருந்தோம். இது எங்க ரெண்டு பேருக்குமே நல்ல சான்ஸ். மிஸ் பண்ணக் கூடாது!”
“சூப்பர் ஹனி! நல்லா ப்ராக்டிஸ் பண்ணு! நல்லா பாடு. ஆல் தி பெஸ்ட்” என்று வாழ்த்துச் சொல்லி வல்லினமாக அணைத்துக் கொண்டான்.
“கௌசியும் நானும்னா வேணிம்மா வீட்லதான் ப்ராக்டிஸ் இருக்கும். இப்போ வேற இடத்துக்குப் போகணும்” என்றாள் அவனிடம் ஏதோ எதிர்பார்த்தது!
“வேற இடம்னா?”
“கிளாசிக்கல் வோக்கலிஸ்ட்கிட்ட ப்ராக்டிஸ் எடுக்கணும். அதனால அவங்க ஸ்டூடியோக்கு போகணும். நான் நினைச்சேன் நீங்க ப்ராக்டிஸ்க்கு என்னை கூட்டிட்டுப் போவீங்கன்னு” என்று எதிர்பார்த்ததைச் சொன்னாள்.
“ட்ரிப் இல்லைனா கண்டிப்பா கூட்டிட்டுப் போயிருப்பேன் பாவை”
“இப்போ முடியாதா?”
“அதெப்படி முடியும்?” என்றவன், “ஒரு அஞ்சு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. அதுக்கப்புறம் வந்து கூட்டிட்டுப் போறேன்” என்றான்.
“ப்ராக்டிஸ் நாலு நாள்தான்” என்றாள் எரிச்சலாக!
“அதனாலென்ன? நெக்ஸ்ட் டைம் கூட்டிட்டுப் போறேன்”
“நீங்க இங்கே இருக்க முடியாதா பாண்டியன்?” என்றாள் ஏக்கமாக!
“அதெப்படி இருக்க முடியும்?”
“நாலு நாளைக்கு அப்புறம் போகலாமே?”
“வின்டர் போட்டோஸ் எடுக்கணும். இந்தியால நவம்பர் டு பிப்ரவரி வின்ட்டர் சீசன். இப்போ மட்டுமில்ல! பிப்ரவரி வரைக்கும் அடிக்கடி ட்ராவல் இருக்கும். அப்பதான் மார்ச் என்டுல நடக்கப் போற நேச்சர் போட்டோகிராபி எக்சிபிட்-க்கு போட்டோஸ் அனுப்ப முடியும்”
“ஓ!”
“நீ, இங்கிருந்து போகப் போறியா? இல்லை, உங்க பாட்டி வீட்டிலருந்து போகப் போறியா?” என்று பேசுபொருளை மாற்றினான்.
“இங்கிருந்துதான்”
“சரி! உன்னை கூட்டிட்டுப் போகிறதுக்கு டிரைவர் அரேஞ் பண்றேன். வேற ஏதாவது வேணும்னாலும் கேளு. நான் போனதுக்கப்புறம் எதும் தேவைனா அம்மாகிட்ட கேளு! சரியா?”
“ம்ம்ம்”
“துணைக்கு யாராவது வரணும்னா அம்மாவைக் கூட்டிட்டுப் போ”
“நீங்க வர முடியுமா?” என்றுதான் கேட்டாள்.
“நான் இவ்ளோ சொல்றேன் திருப்பியும் அதையே கேட்கிற?” என்று பொறுமை இல்லாத குரலில் கேட்டவன், “ப்ராக்டிஸ் போகாம நீ வருவியா?!” என்றான்.
“கண்டிப்பா வர மாட்டேன்”
“அப்படித்தான் நானும்!”
“ப்ச்” என்றாள் சலிப்பாக!
“அன்னைக்கு என்னமோ நானும் உங்களைப் புரிஞ்சி நடந்துப்பேனு சொன்ன. இப்போ என்னாச்சு?”
“எதுக்குங்க நாளைக்கு? இப்பவே வேணாலும் கிளம்புங்க” என்றுவிட்டு, எழப் போனவளை எக்கிப் பிடித்து மீண்டும் தன் மீது சாய்த்துக் கொண்டான்.
“நல்லா கோபம் வருது உனக்கு”
“உங்களுக்கும்தான்”
“நீ என்னை கோபப்படுத்திற”
“அதேதான் நீங்களும் செய்றீங்க” என்று சொன்னதும் சிரித்துக் கொண்டான்.
அதன்பிறகு அக்கறை பேச்சுக்கள்! அந்நியோன்ய அளவளாவல்கள்! அசட்டுச் சிரிப்புகள்! ஆத்மார்த்த அணைப்புகள்! இவை மட்டுமே!!
அடுத்த நாள் அதிகாலையிலே சிவா கிளம்பிச் சென்றான். செண்பகம்தான் பாவைக்குத் துணையாக இருந்தார். காலையில் யோகா, நடைப்பயிற்சி செய்து வந்ததும் தேனீர் தயார் செய்து தந்தார். குளித்து முடித்து வந்ததும் காலை உணவு பரிமாறினார்.
பெரிய பிளாஸ்க்ல் வெண்ணீர், சாப்பிடுவதற்கு எண்ணெய் அதிகமில்லாத உணவு வகைகள்… என்று பாவையின் பாட்டுப் பயிற்சிக்குத் தேவையான எல்லாம் எடுத்துத் தந்து, அவளை வழியனுப்பி வைத்தார்.
இங்கே வழியனுப்புதல் என்பது வாசலில் நின்று அல்ல! கீழே சென்று, கார் ஓட்டுனரிடம் விவரம் சொல்லி… அவளை அனுப்புவது!!
செண்பகம் கவனித்தாலும்… பாவை மனதின் ஓரத்தில், ‘தன் விருப்பத்தை கணவன் நிறைவேற்றவில்லை’ என்ற ஏமாற்றம் அரிக்க ஆரம்பித்தது!
பாவையின் அந்த ஏமாற்றம்… பாண்டியன் அன்பை அளவுகோல் கொண்டு அளந்து பார்க்க ஆரம்பித்தது!!

