Kathambari Novels
அத்தியாயம் – 4
இரண்டு நாட்கள் கழித்து ஒரு மாலை வேளையில் சிவா அறையில், “அண்ணா ப்ளீஸ்” என்று நளினி கெஞ்ச, “சான்ஸே இல்ல ” என்று, சிவா மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஏன் இப்படிப் பண்ற, நாலே நாலு போட்டோதான கேட்கிறேன்” என்று அவனை வேலை செய்ய விடாமல் பிடித்துக் கொண்டாள்.
“போ” என்று அவள் கையைத் தட்டிவிட்டவன், “வெளியில பிரவீன் இருக்கான். அவன்கிட்ட போய் கேளு. எடுத்து தருவான்” என்றான்.
“பிரவீன் எடுக்கிறது எனக்குப் பிடிக்காது”
“அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது”
மீண்டும், “ப்ளீஸ் ண்ணா” என்று ஆரம்பித்தாள்.
இதற்கிடையே வரவேற்பறையில் செண்பகம் பிரவீனிடம், “அவன்கிட்ட இவ என்ன கெஞ்சிக்கிட்டு இருக்கா மாப்பிள்ளை?” என்று கேட்டார்.
“ரெனோவேஷன் ஒர்க் நடக்குதுல, அது முடிஞ்சப்புறம் வால் டெகரேஷன்காக சிவாவை போட்டோஸ் எடுத்துச் தர சொல்றா!” என்ற பிரவீன், “பொண்ணு போட்டோ காட்டினீங்களா அத்தை? சிவா என்ன சொன்னான்?” என்றான்.
“அவனுக்குப் பிடிச்சிருக்கு!” என்றவர், “ஆனா பொண்ணு வீட்ல இருந்து எந்த தகவலும் வரலை” என்று கொஞ்சமே கொஞ்சம் கவலை கொண்டார்.
இதே நேரத்தில் சிவா அறையில் நளினி, “ண்ணா” என்றாள் மறுபடியும்!
“நான் போர்ட்ரைட் போட்டோக்ராபர் கிடையாது. என் கேமரா மனுஷங்களை படம் பிடிக்காது” என்று தெளிவாக மறுத்தான்.
“நம்ம பிசினஸ்-காகத்தான கேட்கிறேன்”
“அது உன் பிசினஸ்! இது என் ப்ரோஃபஷன்!”
“ண்ணா” என்று அன்புடன் அழைத்து, “எனக்காக பண்ண மாட்டியா?” என்று ஆசையாகக் கேட்டாள்.
“டூ ட்ராமட்டிக். மரியாதையா போயிடு” என்றதும், சட்டென மெத்தையில் இருந்து கோபமாக எழுந்தவள், “பாண்டியன்” என்றாள்.
சிவாவிற்கு ‘பாண்டியன்’ என்று அழைத்தாள் சுத்தமாகப் பிடிக்காது! “அப்படிக் கூப்பிடாத” என்று எச்சரித்தான்.
“அப்படித்தான் கூப்பிடுவேன். அதான உன் பேரு!” என்று வெறுப்பேற்றினாள்.
“நளினி வேண்டாம்! கோபப்படுத்தாத!”
“சரி” என்றாலும், கதவு அருகே ஓடிச் சென்று, “பாண்டியன் பாண்டியன்” என்று கூப்பிட்டுச் சிரித்தாள்.
“உன்னை” என்று கணினியைத் தூக்கி வைத்துவிட்டு எழுந்தான்.
“பாண்டியன்” என்று மீண்டும் அழைத்துவிட்டு வெளியே ஓடினவளை, “ம்மா” என்று உரக்க அழைத்துக் கொண்டே துரத்தினான்.
வெளியே வந்தவள், “பிரவீன் காப்பாத்துங்க” என்று வரவேற்பறையில் இருந்த, கணவனருகில் வந்து அமர்ந்தாள்.
“என்ன நளினி இது? வெளிய கேட்கிறவங்க என்ன நினைப்பாங்க” என்று செண்பகம் கண்டித்தார்.
“அவன் அடிக்க வர்றான் ம்மா” என்று சொல்லும் போதே, சிவா அவள் அருகில் வந்து உச்சந்தலையில் சில பல கொட்டுகள் வைத்தான்.
அண்ணன் தங்கைக்குள் இப்படி அடிக்கடி சண்டை வரும் என்பதால், பிரவீன் நடப்பதை அமைதியாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.
செண்பகம்தான்,, “சிவா அவளுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு” என்று மகனின் கையைப் பிடித்துத் தடுத்தார்.
“மா, அவ பாண்டியன்னு கூப்பிடுறா” என்று அம்மாவிடம் புகார் சொன்னவன், “நீங்க எதுக்கு சிவபாண்டியன்னு பேர் வச்சிங்க” என்றான்.
“அது அப்பா ஆசையா வச்ச பேரு கண்ணா” – செண்பகம்.
“இப்ப கூப்பிடுறீங்களே கண்ணா. இந்தப் பேரையாவது வச்சிருக்கலாமே”
“ஐ கண்ணா! நல்ல பேரு” என்ற நளினி, “ஆனா கண்ணாவும் சாமி பேருதான் அண்ணா” என்று மீண்டும் அண்ணனை வம்பிழுத்தாள்.
“பிரவீன், இவளை எதுவுமே சொல்ல மாட்டியாடா” – சிவா.
உடனே செண்பகம், “சிவா!” என்று கண்டனத்துடன் அழைத்து, “அவர் இந்த வீட்டு மருமகன்! ‘டா’ போட்டு பேசாதா” என்றார்.
செண்பகம் மட்டுமல்ல மதியழகனும் இப்படித்தான். மருமகனுக்கு மரியாதை கொடுத்து நடத்த வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள்.
செண்பகம் மருமகனிடம், “மாப்பிள்ளை நீங்க இதெயெல்லாம் என்னென்னு கொஞ்சம் கேட்கணும்” என்று அமைதியாக சொன்னார்.
“அப்படி கேட்கணும்னா இவளைத்தான் முதல கேட்கணும்” என்று பிரவீன் நளினியைக் கை காட்டியதும் சிவாவும், பிரவீனும் சிரித்துக் கொண்டனர்.
“பிரவீன்” என்று நளினி உதடு சுழித்தாள்.
“என்ன நளினி இது” என்று செண்பகம் மகளைக் கண்டனமாகப் பார்த்தார்.
“அம்மா நீங்க சொன்னப்புறம், நான் அப்படிக் கூப்பிடறதே இல்லை” என்றாள் நளினி சத்தியம் செய்யாத குறையாக!
“அப்படியா மாப்பிள்ளை” என்றார் செண்பகம் மருமகனிடம்!
“ஆமா அத்தை. உங்க முன்னாடி மட்டும்!” என்று நளினியை மாட்டிவிட்டதும், மீண்டும் சிவாவும், பிரவீனும் சிரித்தனர்.
இதற்கிடையே செண்பகத்தின் செல்பேசி சத்தம் போட்டது. “இந்த நேரத்தில யாரு” என்று எடுத்துக் பார்த்தவர், அந்த இடத்தில் நடக்கும் சத்தத்தைக் கண்டு அவரது அறைக்குள் சென்று அழைப்பை ஏற்றார்.
சற்றுநேரம் கழித்து வெளியே வந்த செண்பகத்திடம், “யாரும்மா?” என்றான் சிவா, பேசிக் களைத்ததால் தண்ணீர் குடித்துக் கொண்டே!
“பொண்ணு வீட்ல இருந்துதான்” என்றதும், தண்ணீர் சிவாவின் தொண்டைக் குழிக்குள் தாண்டவம் ஆடியது.
“என்ன சொல்றாங்க?” என்றார்கள் பிரவீன், நளினி ஆர்வமாக, அவசரமாக!!
இதில் எதையும் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முடியாமல் சிவா அவஸ்த்தைப்பட்டான்!!
“அவங்க ஜாதகம் பார்த்துட்டாங்களாம். பொருத்தம் இருக்கு. பொண்ணுக்கும் பிடிச்சிருக்காம். அதான் பையனுக்குப் பிடிச்சிருக்கானு கேட்டாங்க?”
இந்த நொடியில்… அவஸ்த்தைப்பட்டவன் உள்ளம், ‘அட! அட!’ என்று ஆட்டம் போட ஆரம்பித்தது.
“அண்ணாதான் அன்னைக்கே பிடிச்சிருக்குனு சொல்லிட்டான்ல” – நளினி.
“அதை சொல்லிட்டேன் நளினி” – செண்பகம்.
“சரி, வேற என்ன சொன்னாங்கனு சொல்லுங்க”
“நாளைகழிச்சு காலையில வீட்டுக்கு வர சொல்லிருக்காங்க. நேர்ல பார்த்து கல்யாணத் தேதி பிக்ஸ் பண்ணலாம்னு அந்த அம்மா சொன்னாங்க”
“வாவ் சூப்பர்! அப்போ அண்ணாக்கு மேரேஜ்” என்று துள்ளிக் குதித்துப் போய், அண்ணன் கைகளைப் பிடித்துக் கொண்டு குதிக்க, பிரவீனும் சிவா அருகில் வந்து, “கங்கிராட்ஸ்டா” என்று சொல்லி கை கொடுத்தான்.
“ட்ரீட் வேணும் அண்ணா” என்று நளினி சொன்னதும், “மூணு பேரும் வீட்ல இருக்கோம். வெளிய போகலாமா” என்று பிரவீன் யோசனை சொன்னான்.
“கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும். அப்படியே வாங்கிட்டு வந்துடுங்க” என்றார் செண்பகம்.
“நான் போய் ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு வர்றேன்” என்று நளினி சொல்ல, “இரு நானும் வர்றேன்” என்ற பிரவீன், “சிவா, கிளம்பி வீட்டுக்கு வந்திடு” என்றான்.
‘சரி’ என்று சிவா தலையாட்டுகையில், “ண்ணா, வர்றப்ப அம்மாகிட்டருந்து லிஸ்ட் வாங்கிட்டு வா” என்றுவிட்டு நளினி கணவனுடன் கிளம்பினாள்.
செண்பகம் மகன் அருகில் வந்ததும், “அப்பாகிட்ட சொல்லிட்டீங்களா” என்று மகன் கேட்க, “ஃபோன் பண்ணி சொல்லிட்டேன்” என்றவர், “கண்ணா, உனக்கு பிடிச்சிருக்குல” என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொண்டார்.
சிரித்தபடி, “ம்” என்று தலையசைத்தவனிடம், “நீ ரூம்ல இரு. நான் லிஸ்ட் ரெடி பண்ணி கொண்டு வர்றேன்” என்று சொல்லிச் சென்றார்.
அவன் அறைக்கு வந்த சிவா நேராக ‘பிளாக் லோகஸ்ட்’ போன்சாய் அருகில் சென்றான். ‘ஹனி’ என்று அவன் உதடுகள் மூணுமுணுத்தன.
இரண்டு நாளாய் தடதடத்த மனம், இன்று தாளம் போடா ஆரம்பித்தது. அந்த தாளத்திற்கு ஏற்றவாறு, ‘ஹனி ஹனி’ என இசைப் பிரியையை பிரியத்துடன் அழைத்துப் பார்த்துக் கொண்டான்!
******************
வேணிம்மா வீடு! செண்பகத்திடம் பேசி முடித்ததும், கிருஷ்ணவேணி முகம் முழுவதும் புன்னைகையுடன் பாவையைப் பார்க்கச் சென்றார்!
பூஜை அறையிலிருந்து இருவரின் குரல் வருவது கேட்டது. உடல்நிலையையும் தாண்டி பூஜை அறையை நோக்கி வேகமாக நடந்தார். அங்கே மீனாட்சியும்,கலையும் ஒரு புறம் நின்று கொண்டிருந்தனர்.
கடவுளின் சிலைகளுக்கு முன்னர் பாவையும் கௌசியும் சம்மணம் போட்டு அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு எதிர்புறம், சங்கர் மிருதங்கத்துடன் அமர்ந்திருந்தான்.
“ரங்கராஜனை அன்பர்….” என்ற பாடலை இருவரும் ஒரே சுருதியில் பாடினர். அதற்கேற்றபடி சங்கரின் மிருதங்க தாளம்!
“அன்புடன் இன்பமாய்…” என்ற வரிகளை உணர்ந்து இருமுறை பாடிய போது, வேணிம்மா வந்து பூஜை அறை வாசலில் நின்றார்.
“பூ மாலை சாற்றினாள்…” என்று தாளத்தில் சிறு வேறுபாடு கொடுத்து சற்று வேகமாகப் பாடினார்கள். அதற்கேற்றபடி சங்கர் மிருதங்கத்தின் தாளத்தை மாற்றி அமைத்தான்.
“மாலை சாற்றினாள்…” என மீண்டும் ஒருமுறை பல்லவியைப் பாடி, பாடலை முடித்தவுடன், மூவரும் கைகூப்பி இறைவனை வணங்கிக் கொண்டார்கள்.
மீனாட்சி, கௌசிக்கும் சங்கருக்கும் விபூதி வைத்துவிட்டதும், “மீனா” என்று வேணிம்மா அழைத்தார்.
“என்னம்மா?”
“குங்குமம் எடு” என்றதும் மீனாட்சி எடுத்து தந்தார்.
பாவையின் நெற்றியில் வைத்துவிட்டு, “நாளைகழிச்சு பையன் வீட்ல இருந்து வர்றாங்க! அன்னைக்கே கல்யாணத் தேதி குறிச்சிடலாம்” என்றார் சிறு புன்னகையுடன். பின்னர், “பாவைக்கு கல்யாணம் ஆகப்போகுது” என்றார், சத்தமாகச் சிரித்துக் கொண்டு!
பாவையும் சிரித்துக் கொண்டாள்.
“கிரி எங்க?” என்றார் மகளிடம்.
“வெளியில போயிருக்கான்மா” என்று மீனாட்சி சென்றுவிட்டார்.
அவ்வளவுதான் அவரின் எதிர்வினை! வேணிம்மா அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை!! அவரின் நிலை சந்தோசம் மட்டுமே!!
மீனாட்சி கிளம்பிச் சென்றதும், ‘பாவைக்கு கல்யாணம் முடிந்தால்’ என்றதில் ஆரம்பித்து, கௌசியின் எண்ணங்களில் சில பல கேள்விகள் வந்தன.
“கௌசி வா” என்று கலை சொன்ன பின்னரே, நிகழ்விற்கு வந்தாள். பின், தன் கணவனுடன் சென்றாள். கௌசி போவதைப் பார்த்துக் கொண்டிருந்த பாவை தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
“பாவை, வா” என்று வேணிம்மா அழைத்ததும், அவர் பின்னேயே சென்றாள்.
இதற்கிடையே, ‘பாவைக்கு கல்யாணமா?’ என திகைத்துப் போய் நின்றிருந்த சங்கர், வேணிம்மா பாவை இருவரும் பூஜை அறையில் இல்லாதது உணர்ந்து வெளியே வந்து, “பாட்டி” என்று அழைத்தான்.
இருவரும் திரும்பிப் பார்த்தனர். “என்ன?” என்று கிருஷ்ணாம்மா கேட்டார்!
“நான் எந்த விதத்தில பாவைக்கு பொருத்தம் இல்லை. நான் அவளை நல்லா பார்த்துக்கிடுவேன் பாட்டி! ஏன் பாவையை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டிக்கிறீங்க?” என்று ஆற்றமாட்டாமல் கேட்டான்.
சட்டென அடித்தார். அவனுக்கு இது சகஜம் தானே! அப்படியே நின்றான்!!
“இதுக்கு முன்னாடி நீ இப்படி உளறிக்கிட்டு இருந்தது வேற. இனிமே…” என்று திட்டும் போதே, “இது உளறல் இல்ல பாட்டி! உண்மை!!” என்று திருத்தினான்.
பாவைக்குத் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது.
“வாயைமூடு! இப்ப அவளுக்கு கல்யாணம் ஆகப்போகுது. இனிமே இப்படிப் பேசாதா” என்று கண்டிப்புடன் சொன்னவர், “நீ வாம்மா” என்று பாவையை அழைத்துக் கொண்டு சென்றார்.
போகிறவர்களைப் பார்த்து நின்றவன், ‘எத்தனை அடி வாங்கினாலும், தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளப் போவதில்லை’ என்பதில் உறுதியாக இருந்தான்.
அறைக்கு வந்ததும் பாவை முகம் பார்த்து, “பையனை பிடிச்சிருக்கில?” என்று வேணிம்மா கேட்டார். ஏற்கனவே நிறைய முறை கேட்ட கேள்விதான், அவளும் ‘பிடிச்சிருக்கு’ என்று பதிலும் சொல்லிவிட்டாள். இருந்தாலும் கேட்டார்! ‘ம்ம்ம்’ என்று தலையாட்டினாள்.
சிரித்துவிட்டு, “பாட்டி கொஞ்ச நேரம் படுத்திருக்கேன். சாப்பிடப் போறப்போ கூப்பிடு” என்று படுத்தார். “அப்புறம் பாவை! என்ன புடவை கட்டணும், என்ன நகை போடணும், எல்லாம் எடுத்து வச்சிக்கோ. சரியா?” என்றார்.
‘சரி’ என்று தலையாட்டிச் சிரித்தாள். வேணிம்மா கண்ணயரவும், பாவை புடவை அலமாரியைத் திறந்து வைத்துக் கொண்டு நின்றாள்.
ஒவ்வொரு புடவையாகப் பார்த்தாள். ‘என்ன புடவை கட்டிக் கொள்ள?’ என்று நினைத்தவளுக்கு, கட்டிக்கப் போகிறவன் முகம் கண் முன் வந்து நின்றது. சிரித்துக் கொண்டாள்.
‘ஸஸ ரிரி கக ரிரி… ஸ்ஸ் நிநி தத பப’ என்று இசையை ரசித்து ராகமொயில் பாடி, இயற்கையை ரசிப்பவனை நினைத்து, ‘கக மமப கமப பாண்டியன்’ என ரசனை மொழியில் முடித்தாள்!!

