Kathambari Novels
அத்தியாயம் – 1
ஒரு அரங்கம்! சிறிய அரங்கம்தான்! அரங்கம் முழுதும் பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர்! கர்நாடக சங்கீதத்தை ரசிக்கும் பார்வையாளர்கள்!!
அரங்கத்தின் மேடையோரத்தில் ஆள் உயர குத்துவிளக்கு! ஆரஞ்சு வர்ண சாமந்திப்பூக்கள் சுற்றப்பட்டு தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தன! விளக்கின் திரி மற்றும் தீபத்திலிருந்து வரும் நறுமணம், அந்த மேடை முழுவதும் நடமாடிக் கொண்டிருந்தது!!
மேடையின் பின்புறம் அடர் நீல நிறத்தில் இருந்த திரைச்சீலை! அதில் மஞ்சள் மற்றும் வெள்ளை நிற செவ்வந்திப் பூக்களின் தோரணங்கள்!! மேற்புறம் ஏழு மஞ்சள் நிற விளக்குகள்! மெல்லிய கம்பியிலிருந்து சீரான இடைவெளியில் அவைகள் தொங்க விடப்பட்டிருந்தன!!
மேடை நடுவில் பெரிய சிவப்பு ஜமுக்காளம் விரித்து, கச்சேரிக்கான ஆட்கள் அமர்ந்திருந்தனர். ஒருபுறம் மிருதங்கம், வயலின். மற்றொருபுறம் வீணை மற்றும் கடம்.
நடுவில் இரு பெண்கள்!! அரையடி அகலத்தில் இருபுறமும் கரை வைத்தப் பட்டுப்புடவை! கழுத்தில் அட்டிகை! காதில் பெரிய குடை போன்ற ஜிமிக்கி! அழுந்த தலை வாரி பின்னலிட்டிருந்தனர்! அதில் அதிகமாக மல்லிகைச்சரம்! கடைசி வரிசையில் உள்ளவர்களுக்கும் முகம் பளிச்சென தெரியும்படியான ஒப்பனைகள்!!
மற்றும் மைக் அமைப்பாடுகள்!!
“செஞ்சுருட்டி ராகத்தில் அமைந்த ராமானுஜ கிளிகன்னி” என்று ஒரு பெண் சொன்னதும் கச்சேரி ஆரம்பமானது! இரு பெண்களும் சேர்ந்து பாடினர்.
“ஆதிசேஷன் அம்சமடி” என ஆரம்பித்து வலது கை போடும் தாளத்திற்கு ஏற்ப இடதுகை காற்றில் அசைந்தாட பாடுவதை, முன் வரிசையில் அமர்ந்திருந்த சிலர் பெருமையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதிலும் ஒரு வயதான பெண்மணியின் முகத்தில் பெருமை கூடுதலாகவே தெரிந்தது. அவர்கள் குருவல்லவா? ஆதலால் அந்தப் பெருமை! கூடவே நிரம்ப மகிழ்ச்சியும் தெரிந்தது. இருவரின் பாட்டி அல்லவா! அது தரும் ஆனந்தம்!!
“அரங்கனின் அடிமையடி” என்று பாடும் போது, இருவரும் தத்தம் பக்கமிருந்த இசைக் கலைஞர்களைப் பார்த்துப் புன்னகைத்துப் பாடினார்கள்.
“தேவராஜ தாசனடி” என்று ஆரம்பித்து, “சுவாமி யதிராசனடி” என்று முடிக்கும் போது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “நாரணனை காட்டினான்டி” என்று கண்களை மூடி உச்ச சாயலில் தொடங்கி, “சுவாமி யதிராசனடி” என்று முடிக்கையில் கண் திறந்தார்கள்.
“சென்னிய சூடுவாரை” என்று கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்துப் புன்னகை செய்து பாடிட, “எம்பெருமானார் திருவடிகளே சரணம்” என இருகரம் கூப்பி, ஒரு சேரச் சொல்லி சிரித்த முகத்துடன் பாடலை நிறைவு செய்தார்கள்.
அவர்கள் எழுந்ததும் அதற்கடுத்த இசை நிகழ்வுகள் தொடர்ந்தன. ஒன்றரை மணிநேரம் கடந்தபின் நிகழ்ச்சி முடிந்து, பார்வையாளர்கள் ஒவ்வொருவராக எழுந்து செல்ல ஆரம்பித்தனர்.
அடுத்த கால் மணிநேரத்தில் அரங்கம் காலியானது. ஆனால் இசைக் கச்சேரி நடத்தியவர்கள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் முன்வரிசையில் இருந்த வயதான பெண்மணியைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர்.
அந்த பெண்மணி கிருஷ்ணவேணி!
கர்நாடக சங்கீத இசை உலகில் முக்கியமானவர். சங்கீத கலாநிதி விருது பெற்றவர். அகவை எழுபத்தியெட்டு!
ஒரு பக்கம் மட்டும் ஜரிகை வைத்த காஞ்சிவரம் பட்டு! சுற்றியும் சிறு கற்கள் வைத்து நடுவில் பவளம் வைத்த காதணி! பெரிய பதக்கம் கொண்ட, தங்க வடம் பூட்டிய அட்டிகை! நான்கு மோதிரங்கள்! மெல்லிய தங்க வளையல்கள்!
இப்படித்தான் இருந்தார் கிருஷ்ணவேணி! இசை உலகிற்கு கிருஷ்ணாம்மா!! வயதின் காரணமாக அமர்ந்தே இருந்தார். இன்று கச்சேரி செய்தவர்களில் சிலர் அவருடன் பேசினர். சிலர் பேசுவதற்காக காத்துக் கொண்டிருந்தனர்.
இசையைப் பற்றிய பேச்சுகள்தான். தாங்கள் பாடினதைப் பற்றி, அதில் ஏதும் மாற்றம் வேண்டுமா? இப்படித்தான் பேச்சுகள் இருந்தன.
ஏனெனில் இன்று பாடிய அனைவரும் அனுபவம் இல்லாதவர்கள். முதல்முறை மேடை ஏறியவர்கள். ஆதலால் தங்களை மெருகேற்றிக் கொள்ள இத்தகைய பேச்சுகள்.
பேசுபவர்களிடம் ஒருவித மரியாதை இருந்தது. காரணம் கிருஷ்ணாம்மா சாதனை உயரம்! மேலும் கர்நாடக இசைக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட விதம் அளப்பரியது!!
ஆனால் குரல்வளை நரம்புகளில் ஏற்பட்ட கோளாறுகளினால் கடந்த இரண்டு வருடங்களாகப் பாடுவதில்லை. இது சரியாக அவர் பிரத்தியேக பயிற்சிகள் எடுத்துக் கொள்கிறார். ஆதலால் பேச முடிகிறது.
இன்று பாட முடியாமல் இருந்தாலும், இதுவரை அவர் பாடிய பாடல்கள், அவர் குரலைக் கேட்கவென நிறைந்து வழிந்த அரங்கங்கள், தென்னிந்திய அளவில் இசைக்காக வாங்கிய விருதுகள், மேடை கச்சேரிகள் என்றும், என்றென்றும் அவர் புகழை நிலைத்திருக்கச் செய்யும்!
மேலும் அது அவரது வாரிசுகளுக்கும் மதிப்பைப் பெற்றுத் தரும்!
சுற்றிலும் நின்ற கலைஞர்கள் விடைபெற்றதும் சபா உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பேச ஆரம்பித்தனர். அவர்கள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி!
தாங்கள் ஏற்பாடு செய்த கச்சேரிக்கு கிருஷ்ணாம்மா வந்திருக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சியின் காரணம்!!
அக்கணம் மேடையில் பாடிய இரு பெண்களில் ஒருத்தி வந்து, கிருஷ்ணம்மா அருகில் உரிமையுடன் அமர்ந்து கொண்டு, “கச்சேரி எப்படி இருந்தது பாட்டி?” என்றாள் இன்னும் உரிமையுடன்.
அவர் பதில் சொல்லும் முன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரில் ஒருவர் முந்திக் கொண்டு, “ரொம்ப நல்லா பாடினம்மா” என்றதும், இன்னும் சிலரும் அதையே சொன்னார்கள். சிரித்துக் கொண்டாள் அந்தப் பெண்!
அவள் கௌசல்யா கலையரசன்! சுருக்கமாக கௌசி!!
பாராட்டு கிடைத்ததும் கௌசி கண்கள் கணவனைப் பார்த்தன. அவன்தான் கலையரசன்! முன் வரிசையில் அமர்ந்து மனைவி பாடுவதை ரசித்தவன். ஆறு மாதத்திற்கு முன்புதான் இருவருக்கும் திருமணம் நடந்தது.
கௌசியின் அத்தை மகன்தான்! அனைவரும் தன் மனைவி பாடினதைப் பாராட்டியதைக் கண்டு பெருமையுடன் தன் அம்மாவைப் பார்த்தான்.
கலையரசனின் அம்மா பெயர் மீனாட்சி! கிருஷ்ணாம்மாவின் மூத்த மகள்! கௌசல்யாவின் மாமியார்!!
தன் மகன், மருமகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்டு, அருகில் நின்ற தம்பியையும், தம்பி மனைவியையும் பூரிப்புடன் பார்த்தார் மீனாட்சி.
மீனாட்சியின் தம்பி கிரிதரன்! கிருஷ்ணாம்மாவின் இரண்டாவது பிள்ளை! கௌசல்யாவின் தந்தை!!
தனக்கோ, அக்காவிற்கோ கிடைக்காத பாராட்டு மகளுக்குக் கிடைக்கிறதே என்ற பெருமை அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. அதே முகத்தோடு தன் அருகில் நின்று கொண்டிருந்த மகன் சங்கரைப் பார்த்தார்.
சட்டென அவர் முகம் மாறியது!
காரணம், மகன் பார்வை சென்ற இடம்! சங்கர் பார்த்துக் கொண்டிருந்தது, கௌசியுடன் சேர்ந்து பாடினாலே ஒரு பெண்! அவளைத்தான்!!
அப்படிப் பார்ப்பதில், ‘எங்களுக்கு உடன்பாடில்லை’ என்பது போல், கிரியின் முகம் மாறியது. எங்களுக்கு என்றால்? கிரி, கிரியின் மனைவி, மீனாட்சி, கலை, கௌசி… அனைவரும் இதில் அடக்கம்!
இன்னும் சொல்லப்போனால் கிருஷ்ணாம்மாவும், அந்தப் பெண்ணும் கூட அதில் உண்டு!
ஆக! சங்கரின் காதல் ஒருதலைக் காதல்! ஆனால் சங்கர் இதையெல்லாம் கண்டுகொள்வது போல் தெரியவில்லை. அந்தப் பெண்ணை விருப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்தப் பெண்? பாட்டுப் பாடிக்கொண்டிருந்த பெண்களில் இன்னொருத்தி! கிருஷ்ணம்மாவின் பேத்தி! பெயர் தேன்பாவை!!
ஆகா! தேன்பாவை!!
எல்லாருக்கும் கிருஷ்ணாம்மா என்றால் இவளுக்கு வேணிம்மா! தேன்பாவை என்ற பெயருக்கு ஏற்றார் போலத்தான் குரலும்!
ஜரிகை வைத்தப் பட்டுப்புடவைதான் உடுத்தியிருந்தாள். கிட்டத்தட்ட கௌசி, ஏன்… இன்று பாடிய அனைவருமே இது போன்ற உடையலங்காரம்தான்.
ஆனால்,பாவையை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இரண்டு விடயங்கள்! ஒன்று கன்னத்தில் இருக்கும் உலர்ந்த, புதிதாய் மலர்ந்திருக்கும் பருக்கள். அது தனியழகு! தனித்துவமான அழகு!!
மற்றொன்று, வளையல் அணியாமல் வலது கையில் நிறைய சுற்றுகளுடன் கட்டியிருக்கும் சிவப்புக் கயிறு! இடது கையில் மட்டும் வளையல் அணிவாள். தாளம் போட இடையூறாக இருக்கும் என்பதால் வலது கையில் வளையல்கள் அணியமாட்டாள்! இதுவும் அழகு!!
இக்கணம் இவளது பார்வை மொத்தமும் கௌசி மீதே இருந்தது.
பேசிக் கொண்டிருக்கும் போதே கொஞ்சம் உடல் ஒத்துழைக்க மறுத்ததும், கிருஷ்ணாம்மா திரும்பி மகன் கிரியைப் பார்த்தார்.
அவ்வளவுதான்! சுற்றி இருந்தவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.
அடுத்த நொடி, “இதோ கிளம்பலாம் மா” என்ற கிரி, “சங்கர், போய் காரை எடுத்திட்டு வா” என்றதும், சட்டென பாவை மீதிருந்த பார்வையைத் திருப்பி, “சரிப்பா” என்றான்.
“சங்கர், பாட்டி கார் சபா முன்னாடி நிக்கணும்” என்றார் மீனாட்சி.
“ம்ம்” என்று நடக்க ஆரம்பித்தான்.
“அண்ணா” என்று கௌசி அழைத்தும், நின்று சங்கர் திரும்பிப் பார்த்தான்.
“நம்ம காரையும் எடுத்திட்டு வந்திடு. என்னால பார்க்கிங் வரைக்கும் நடக்க முடியாது” என்றாள் கௌசி.
“சரி கௌசி” என்று சங்கர் ஓடியதும்… கிரி, மீனாட்சி, கலை, கிரியின் மனைவி கௌசியின் அருகில் வந்தனர்.
“எப்படிப் பாடினேன்?” என்று கேட்டாள் கௌசி.
“உனக்கென்ன சூப்பரா பாடின” என்றான் கௌசியின் கணவன் கலை!
“திருஷ்டி சுத்திப் போடணும்” என்றார் கௌசியின் அத்தை மீனாட்சி!
“இந்தப் புடவை, நகை உனக்கு அம்சமா இருக்கு” என்றார் கௌசி அம்மா!
இதையெல்லாம் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் கௌசி அப்பா!
அந்தநொடி, “கிரி” என கிருஷ்ணாம்மா அழைத்து, “நான் பாவைகூட மெதுவா வர்றேன். நீங்க முன்னாடி போங்க” என்றதும் அனைவரும் கிளம்பினார்கள்.
பாவை என்றொரு பெண் நிற்கிறாள் என்ற எண்ணம் யாருக்கு வரவில்லை. ‘வரவே வராது’ என்பதுதான் சரியான வார்த்தைப் பிரயோகம்.
போகிறவர்களைப் பார்த்தபடியே நின்றாள் பாவை. அதிலும் முக்கியமாக கௌசியைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
“பாவை போகலாமா?” என்று வேணிம்மா கேட்டதும், ‘ம்ம்ம்’ என்று தலையை ஆட்டினாள். இருவரும் சேர்ந்து சபாவின் நுழைவாயிலுக்குச் சென்றனர்.
அரங்கத்தின் வாயிலில் கார் நின்றிருந்தது. ஓட்டுநர் இருக்கையில் சங்கர் இருந்தான். இப்போதும் பாவையைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.
காரின் பின்னிருக்கையில் கலை, கௌசி! இப்போதும் பாவையின் பார்வை கௌசி மீதே! காரின் கடைசி வரிசை இருக்கைகளில் மீனாட்சி மற்றும் கிரியின் மனைவி ஏறிக் கொண்டனர்.
முன்னிருக்கையில் கிரி ஏறியவுடன், பாவையைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கரின் தலையில் தட்டி, “கிளம்புடா” என்றதும், காரை கிளப்பினான்.
சிறிது இடைவெளியில் மற்றொரு கார் நின்றது.
“வா பாவை” என்று வேணிம்மா சொல்லவும், ‘ம்ம்’ என்று நடந்தாள். அவர்கள் இருவர் ஏறியதும் ஓட்டுநர் காரை கிளப்பினார்.
வேணிம்மா, பாவை முகம் பார்த்தார். அவள் முகம் வாடித் தெரிந்தது. ‘என்ன நினைக்கிறாள்?’ என்று புரிந்தது. அது அவருக்கு வருத்தம் தந்தது.
அவள் வலக்கரத்தினை காரின் இருக்கை மேல் வைத்திருந்தாள். மோதிரம் அணிந்த அவளது விரல்களைப் பிடித்து ஒரு அழுத்தம் கொடுத்தார், அவளது வேணிம்மா. திரும்பிப் பார்த்தாள்.
“தேன்குரலாள்… இந்தத் தேன்பாவை” என்றார் வேணிம்மா.
பாவை சிரித்துக் கொண்டாள். அவளது வேணிம்மாவின் அந்த வார்த்தைகள் போதும் அவள் வாழ்ந்திட! அவள் பாடிட!
பாவையின் அந்தச் சிரிப்பு போதும் வேணிமாவிற்கு! அவர் வருத்தம் நீங்கிட!

