Kathambari Novels
அத்தியாயம் – 25 (Final)
தாரா, தேவா, இருவரும் வீடு வந்து சேர்ந்திருந்தனர். அதே day bed couch-ல் அமர்ந்து, சற்றுநேரம் அவளுடன் பேசிக் கொண்டிருந்தான்.
மேலும் சற்று நேரத்திற்குப் பிறகு, மஞ்சத்தில் கணவன்… அவன் நெஞ்சத்தில் மனைவி… என்ற நிலையில் இருந்தனர்.
“இப்படியே தூங்கவா தேவா?” என்று இமை மூடும் நிலை குறித்துக் கேள்வி கேட்டாள்.
“தூங்கிடாத தாரா” என்று இரவின் நிலை பற்றிப் பதில் சொன்னான்.
“ரிவார்டா??” என்றாள் சுருக்கமாக!
“ய்யா ய்யா” என்றான் விருப்பமாக!
தாரா, காதலின் மூன்று வார்த்தைகள்… எட்டு எழுத்துகள்… சொன்னதற்கான வெகுமதியை தேவா தந்தான். முன்னிரவுகளில் அவன் தந்த வெகுமதியில், பின்னிரவுகளில் அவனின் முழுமையான திருமதியானாள்!
********
நாள்காட்டியின் அடுத்தடுத்து வந்த மாதங்களில்!
ஹேமாவிற்கு குழந்தை பிறந்திருந்தது. பெண் குழந்தை! சுகப் பிரசவத்திற்கு முயற்சித்தார்கள். ஆனால், முடியாமல் போனதால் அறுவைசிகிச்சை செய்து, தாய், சேய் இருவரையும் காப்பாற்றினாள் தாரா.
அன்று ஹேமாவைப் பார்க்க தேவா, பாபி மருத்துவமனை வந்திருந்தனர். அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
“கடைசில ஒரு ஃபிலைட் டிக்கெட்லயே ரெண்டு கல்யாணம், ஒரு டெலிவரினு முடிச்சிட்ட” என்றான் பாபி!
“என்னாலதான் உனக்கு கல்யாணமே நடந்திருக்கு. அதை மறந்திடாத”
இப்படியே பாபியும் ஹேமாவும் பேசிக் கொண்டிருக்க… தேவா, தன் அக்கா பிள்ளையின் பிஞ்சுக் கைகளைத் தொட்டுக் கொஞ்சிக் கொண்டிருந்தான்!
எதேச்சையாக அதைக் கண்ட ஹேமா கண்களில் ஒரு நிம்மதி! ஒரு திருப்தி!!
***********
பாபி, சாரு வீடு!
ஏறுவெயில் நேரம்!
பாபி, அவசர அவசரமாக நீதிமன்றம் கிளம்பிக் கொண்டிருந்தான். வாக்கரில் மாலியை உட்கார வைத்து, அவளுடன் பேசியபடி கோப்புகளை எடுத்து வைத்தான்.
அந்த அறையில், அவன் போகும் இடமெல்லாம் வாக்கர் உதவியுடன், அவன் பின்னேயே மாலி போய்க் கொண்டிருந்தாள். அக்கணம், பாபி அலைபேசி அடித்தது. சாருதான்!
“என்ன?” என்றான் அழைப்பை ஏற்று!
“அது பாபி…” என்று தயங்கினாள்.
“சொல்லு, எந்த ஏரியா ட்ராபிக் போலீஸ்?” என்றான் நக்கலாக!
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை” என்றாள் நறுக்கென்று!
“அப்புறமென்ன?”
“கார் டயர் பங்ச்சர் ஆயிடுச்சு! நீ வந்து கூட்டிட்டுப் போறியா?” என்றாள், சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு!
“இதுக்கு பேரு ஸெல்ப் டிரைவிங்கா? எப்ப பாரு…” என்று அவன் வாக்கியத்தை முடிக்கும் முன், “போதும் நிறுத்து. உன்னால வர முடியுமா? முடியாதா?” என்று, வருவான் என்று தெரிந்தும், வாய்ப்பு தந்து பார்த்தாள்.
“கோர்ட்ல இம்பார்ட்டண்ட் கேஸ் இருக்கு சாரு” என்று வரமறுத்து, அவளை வெறுப்பேற்றப் பார்த்தான்.
“வாதாடவா போற, பாபி? வாய்தா வாங்கத்தான போற?” என்று, அவனை வம்பிக்கிழுத்தாள்!
“அதான் உன்கிட்ட வாதாடுறேனே! போதாதா சாரு??”
“என்கிட்ட வாதடுறதுக்கா, நீ எம்.ஃபில் படிச்ச?” என்று ஏறுவெயிலில் நின்று கொண்டு எடக்காகப் பேசினாள்.
“நீ எம்எஸ் படிச்சிட்டு, கோர்ட்ல வந்தா வேலை செய்யப் போற! இப்படிப் பேசற சாரு” என்று, அவளை மடக்கினான்.
“போதும் பாபி! இப்போ வருவியா? மாட்டியா?” என்றாள் மீண்டும்!
“வர்றேன் சாரு! நீ லோகேஷன் ஷேர் பண்ணு”
“ம்ம்ம்” என்று அழைப்பைத் துண்டிக்கப் போனவளிடம், “சாரு, ஏசி போட்டுக் காருக்குள்ளே உட்கார்ந்திரு. வெயில் ஜாஸ்தியா இருக்கு” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.
அதுவரை சாருவுடன் பாபி பேசியது விளையாட்டு… கடைசியாக பேசினது, அவளுடன் அவன் வாழும் வாழ்க்கை!
“அப்பா” என்றான் பாபி.
அவர் வந்து நின்றார். சாரு நிலை சொல்லி, கிளம்புவதாகச் சொன்னான். சரியெனத் தலையசைத்தார். அமைதியைப் மட்டும் புரிந்து கொண்டவருக்கு, கேள்விச்சாதனம் உதவியால் சிற்சில சத்தங்களும் பிடிக்கிறது.
அதில் முக்கியமானது மாலியின் மழலை மொழி. பாபி சென்றதும் மாலியைத் தூக்கிக் கொண்டு, தோட்டத்திற்குச் சென்றார். இருவருக்கும் பிடித்தமான நேரமிது.
இனி சாரு, பாபி வேலை முடித்து வரும்வரை… அவர் பொறுப்பில்தான் மாலி இருப்பாள்! துணைக்கு ஆட்களும் உண்டு! ஆனாலும் அவர்தான் கவனித்துக் கொள்வார்.
தாத்தாவின் மொழி, பேத்திக்குப் புரியும். பேத்தியின் மொழி, தாத்தாவிற்குத் தெரியும். அப்படி ஒரு புரிதல் இருவருக்கும்! அது, அமைதியையும் புரிந்து கொள்ளும் அன்பு!!
**********
தாரா, தேவா வீடு!
விடுமுறை என்பதால் இருவரும் வீட்டில் இருந்தனர். காலை வேளைக்கான சமையல் தாரா செய்திருந்ததால், மதிய வேளைக்கான சமையலில் தேவா ஈடுபட்டிருந்தான்.
அக்கணம் அழைப்பு மணி ஓசை!
கதவின் இந்தப் பக்கம்!
“தாரா, போய் யாருன்னு பாரு” என்று தேவா சொல்ல, எழுந்து கதவின் அருகே வந்து… ‘யாராக இருக்கும்?’ என்று டோர் பெல் கேமராவில் பார்த்தாள்.
பார்த்தவுடனே சமயலறைக்கு ஓடிச் சென்று, “தேவா தேவா” என்று அவன் தோளைப் பிடித்துத் திருப்பினாள்.
“ப்ச், யார் வந்திருக்கா?” என்றான், அடுப்பின் மேலிருந்த பாத்திரத்திலிருந்து கண்கள் எடுக்காமல்!
“இப்போ வர்றவங்ககிட்ட, இந்த டிஷ் நான்தான் பண்ணேன்னு சொல்லணும்” என்றாள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல்!
“இப்போ உள்ளே வர்றவங்க, நான் செய்யறதைப் பார்க்க மாட்டாங்களா?”
“ஓ! அப்ப டேபிள்ல செஞ்சி வச்சத சொல்லுங்க” என்று கோரிக்கை வைத்தாள்!
‘என்னவாயிற்று’ என்பது போல் அவளை வித்தியாசமாகப் பார்த்தான்.
“அப்புறம், தாரா ரொம்ப நல்ல பொண்ணுனு சொல்லணும்!” என்று ஒரு வேண்டுகோள் வைத்தாள்!
‘எதுக்கு இதலாம்’ என்ற கேள்வியுடன், பாத்திரத்தில் இருப்பதைக் கிளறினான்!
“தென், தாரா ரொம்ப கேரிங்னு சொல்லணும்” என்று உத்தரவு பிறப்பித்தாள்!
இதையெல்லாம் வேகமாகச் சொல்லி முடித்து, தாரா அங்கிருந்து சென்றாள். ‘அப்படி யார் வந்திருப்பாங்க?’ என கரண்டியைப் பிடித்தவாறே யோசித்தான்.
அக்கணம் போனவள் திரும்பி வந்து, “அப்புறம் இன்னொன்னு தேவா” என்று நின்றதும், “இப்ப என்ன?” என்றான்.
“நான் ஏதாவது சொல்லிட்டு, ‘இல்லையா தேவா?’னு கேட்பேன். நீங்க, ‘எஸ், யூ ஆர் கரெக்ட்’-னு சொல்லணும். ஓகேவா?” என்றாள் எதிர்பார்ப்புடன்!
அவனுக்குப் புரிந்துவிட்டது, யார் வந்திருக்கிறார்கள் என்று! சிரித்துக் கொண்டான்.
“தேவா ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.
“ஓகே, ஓகே! பட், நீ என்கிட்ட இவ்ளோ எக்ஸ்பெக்ட் பண்ற மாதிரி… நானும் உன்கிட்ட ஒன்னு எக்ஸ்பெக்ட் பண்றேன்” என்றான்.
அவனது எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்று ஒரு நொடி யோசித்தாள். யோசிப்பின் முடிவில், கணவன் கன்னத்தில் முத்தம் வைக்க ஆரம்பித்தாள்.
வேண்டுகோள் நிறைவேறிட… தூண்டுகோளாய் அமைந்திடும் படியான தரமான முத்தங்கள் அரங்கேறின… தாளிப்பு வாசனையின் ஊடே!
இன்னும் இன்னும் காரிகையின் காதல் வெள்ளமாய்… வெல்லமாய்… காதலன் கன்னத்தில் பள்ளம் விழும் வண்ணமாய்… முத்தங்கள் படையெடுத்தன!
கடைசியில், “நீங்க எக்ஸ்பெக்ட் பண்ணது கிடைச்சிருச்சா” என்ற வேறு கேட்டு நின்றாள்!
அவள் முத்தம் வைத்த இடத்தை மெத்தனமாகத் தேய்த்துக் கொடுத்து, “நாட் பேட்” என்றவன், “பட், இதான் எக்ஸ்பெக்ட் பண்ணேன்-னு எப்படிச் சொல்ற?” என்றான் குதர்க்கமாக!
“அப்போ இது இல்லையா?” என்றாள் குழப்பத்துடன்!
“ம்கூம்” என்றவன், “அவங்களை ப்ராப்பரா வெல்கம் பண்ணுனு சொல்ல நினைச்சேன்” என்றான்.
“ஓ” என்றாள் அசட்டுப் புன்னகையுடன்! நய்யாண்டி சிரிப்பைக் கையாண்டன அவனது இதழ்கள். அதைக் கண்டவள், “எக்ஸ்பெக்ட் தே அன்-எக்ஸ்பெக்ட்டடு மை மேன்” என்று வாக்கியத்தை இழுத்தாள்!
“இது அன் எக்ஸ்பெக்ட்டடு இல்லை… அஸ்யூஸ்வல் மை லேடி” என்று, அவள் வழக்கத்தை வம்பிழுத்தான். முத்தம் வைத்தவள் முறைத்து நின்றாள்.
“சீக்கிரமா போய் டோர் ஓபன் பண்ணு! இல்லைனா இதுக்கே ஆன்ட்டிகிட்ட நீ நிறைய அட்வைஸ் கேட்க வேண்டி இருக்கும்” என்று தேவா சொல்ல, “oh, my gosh!!” என்று கதவைத் திறக்க ஓடினாள்!
தேவாவை உரிமை கொண்டாடுவதில், பாஸ்கர் தம்பதிக்கும்… தாராவிற்கும் ஒரு சின்ன போட்டி நிலவும்! அலுவலகத்தில் அவர்களையும், இல்லத்தில் இவளையும்… ஆதரித்து, இவர்களிடம் மட்டும் தேவா அரசியல் செய்து கொண்டிருக்கிறான்.
கதவின் அந்தப் பக்கம்…
“பாஸ்கர்” என்ற அழைப்பில் ‘என்ன?’ என்பது போல் பார்த்தார், மிஸ்டர் பாஸ்கர்.
“இவ்ளோ நேரம் வெயிட் பண்ண வைக்கிறா. இந்த தாராக்கு குட் மேனர்ஸ்ஸே கிடையாது. இல்லையா பாஸ்கர்?” – மிஸஸ் பாஸ்கர்.
“எஸ். யூ ஆர் கரெக்ட்” என்றார் மிஸ்டர் பாஸ்கர், வழமை போல்! அதுதான் அவர் வாழ்க்கை போல்!!
**********
சென்னை விமானநிலையம், விடியற்காலை நேரம்… 3:00 மணி.
ஜெகன், மருத்துவதுறை உயர்படிப்பிற்காக வெளிநாடு செல்கிறான். அவனை வாழ்த்தி வழியனுப்ப குடும்ப சகிதமாக வந்திருந்தனர்.
பயணப்பொதிகளோடு ஜெகன் நிற்க, அவன் எதிரில் தாரா, ராஜசேகர், கீதா, சரத் நின்றிருந்தனர். ஜெகன் கண்கள் லேசாக கலங்க நின்றான்.
தாராவும் கண்கலங்கி நின்றாள்.
“அக்கா அக்கா” என்று அரற்றிக் கொண்டிருந்தான் ஜெகன். அவளுக்கு ஆறுதல் கூறியே வாழ்ந்தவன், வளர்ந்தவன்! எனவே எத்தனை பேர் பார்த்துக் கொள்ள இருந்தாலும், சட்டென மாறுவது அவனுக்கு அத்தனை எளிதல்ல!
“ஜெகன், உனக்கு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு. அதை மிஸ் பண்ண கூடாது இல்லையா?” என்று தாரா பொறுமையாக ஆரம்பித்து, அவனைத் தெம்பூட்டும் விதமாக நிறைய பேசினாள்.
ஜெகன் முகம் கொஞ்சம் தெளிவானது.
“அக்கா டெய்லி உன்கிட்ட பேசுவேன். முடிஞ்சா, ஒரு தடவை அங்க வர்றேன். நீ, உன் ஸ்டடிஸ்ல கான்சென்ட்ரேட் பண்ணு” என்று அவன் தலைகோதி, “ஆல் தி பெஸ்ட்” என்று வாழ்த்தி, அன்புடன் ஆரத்தழுவிக் கொண்டாள்.
“அக்கா” என்று தழுதழுக்கும் குரலில் அழைத்து, அவனும் ஆரத்தழுவினான்.
“ஜெகன்” என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்தாள்.
“அக்கா, நான்தான உன்னை நல்லா பார்த்துப்பேன். நான் இங்க இல்லைனா, யார் உன்னை பார்த்துப்பா?”
“தேவா மட்டும் இதைக் கேட்கணும்!” என்றான், அதுவரை அமைதியாக நின்ற சரத்!
“சரத், சும்மா இரு. அவனே பீல் பண்ணிட்டு இருக்கான்” என்றாள் தாரா.
“ஓகே” என்று தம்பி அருகில் வந்து, “ஜெகன், உன்னை நம்பி பெரிய பொறுப்பு அப்பா கொடுக்கப் போறாங்க. அதனால பொறுப்பா இருக்கணும் நீ” என்று தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டான்.
கடைசியில், “சரி-ண்ணா” என்று ஜெகனை சொல்ல வைத்தான். அதன்பின், மூவரும் துறை சார்ந்த விடயங்கள் பேசிக் கொண்டார்கள்.
இதற்கிடையே ஜெகன் வருந்துவதைக் கண்டு, “ராஜ், இது தேவையா?” என்று வருந்தும் குரலில் கீதா கேட்டார்!
“ED-லயே எத்தனை நாள் இருப்பான்? இதுவே லேட். நீ அவன்கிட்ட சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லு” என்றார், ராஜசேகர்.
“சரி ராஜ்” என்றவர், அதன்பின் யாரையும் பேச விடவில்லை.
சரியான நேரத்தில் உண்ண வேண்டும்… உறங்க வேண்டும்!! என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய வேண்டாம்? எவ்வாறு இருக்க வேண்டும்? என்று, கீதா தன் அக்கறையை… அறிவுரையை அடுக்கினார்.
சற்று நேரம் ஐவரும் பேசினார்கள். பின்னர் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு, “அக்கா தேவாகிட்ட சொல்லிடு” என்று ஜெகன் கிளம்பினான்.
அவன் சென்றதும், நால்வரும் கிளம்பும் போது… “தாரா” என்று அழைத்தார் கீதா. “என்னம்மா??” என்றாள்.
“தேவா வரலையா?”
“ஜாப் டூர் போயிருக்காங்க. வர்றதுக்கு, டு த்ரீ டேய்ஸ் ஆகும் ”
“அப்போ வீட்டுக்கு வந்து ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டு, ஹாஸ்பிட்டல் போகலாமே”
“இல்லம்மா. நானும் அப்பாவும் டேரைக்டா ஹாஸ்பிட்டல் போக போறோம்” என்று மறுத்துவிட்டாள்.
“ம்ம், சரி” என்று கீதா சொன்னாலும், ‘வீட்டுக்கு வந்து சாப்பிடலாமே’ என்பது போல்தான் அவர் முகம் சொல்லியது.
“ப்பா” என்றாள் தாரா.
“என்னம்மா?” என்றார் ராஜசேகர்.
“என் கார்லயே நம்ம ரெண்டு பேரும் ஹாஸ்பிட்டல் போயிடலாம்பா” என்றாள் கனிவின் கட்டளையாக!
“சரிம்மா” என்றார், அவள் கனிவிற்குக் கட்டுப்பட்டு!
“போற வழியில ஏதாவது ரெஸ்டாரன்ட்ல சாப்பிட்டலாம்” என்றாள் அன்பின் ஆணையாக!
“சரிம்மா” என்றார், அவள் அன்பிற்கு அடிபணிந்து! பின், தாராவின் காரை எடுத்து வரச் சென்றுவிட்டார்.
இனி, ‘தான் என்ன சொன்னாலும் அப்பாவும் மகளும் கேட்க மாட்டார்கள்’ என்ற இனிமையான இயலாமை தெரிந்தது கீதாவின் முகத்தில்.
இதைப் பார்த்துக் கொண்டே நின்றான் சரத். இனிமையாக இருந்தாலும், அது அம்மாவின் இயலாமை என்று மட்டுமே எடுத்துக் கொண்டான்! ஏனெனில், அதுதான் சரத்!
அவ்வாறு எடுத்துக் கொண்டவன், “ம்மா, நீங்க போய் கார்ல இருங்க” என்றான்.
“சரிடா” என்று சரத்தின் காரை நோக்கி கீதா சென்றதும், “தாரா ஒரு நிமிஷம்” என்றான்.
“என்ன சரத்?”
“வீட்டுக்கு சாப்பிட வா-னு அம்மா சொல்றாங்கள, வர மாட்டியா?” என்றான் அண்ணனின் அதிகாரக் குரலில்!
பதில் சொல்லாமல் நின்றாள்.
“இந்த நேரத்தில உனக்கு யார் ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணி வச்சிருக்காங்க?” என்று தங்கையைத் தட்டிக் கேட்டான்.
மீண்டும் பதில் செல்லவில்லை.
“ஒழுங்கா வீட்டுக்கு வந்து சாப்பிடற” என்றான் உரிமையின் உத்தரவாக! இப்படிச் சொல்லிவிட்டு சரத் சென்று விட்டான்.
இப்பொழுதெல்லாம், கீதாவிற்காக… தாராவிடம் சண்டையிடுவதும்… பின், தாராவைச் சமாதானப்படுத்த மண்டையைப் பிய்த்துக் கொள்வதும்… சரத்திற்கு வாடிக்கையாயிற்று!
ஓரிரு நிமிடங்களில் ராஜசேகர் ஓட்டி வந்த காரில் தாரா ஏறி அமர்ந்தாள். அவர் முன் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாள்.
ராஜசேகர், “என்னம்மா? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்டார்.
“திட்றான்” என்றாள் வெறுமென!
“யாரும்மா?”
“ப்பா, சரத் திட்றான். தேவையில்லாம திட்டிட்டுப் போறான்” என்றாள் செல்லம் கொஞ்சும் குரலில்!
“அவனுக்கு வேற வேலை இல்லை. விடும்மா” என்றார் சலிப்பாக! அவள் சமாதானமாகவில்லை என்பதை, அவளது முகமே சொன்னது.
“ரொம்பத் திட்டிட்டானா?”
“ம்ம்ம்” என்று தலையாட்டினாள்.
“சரிம்மா, இப்போ என்ன செய்யணும், சொல்லு? “
“நேரா வீட்டுக்குப் போய்… அம்மா கையால சாப்பிட்டு… அப்படியே சரத்தை திட்டிட்டு, அப்புறமா ஹாஸ்பிட்டல் போகலாமா?” என்றாள் யோசனையாக!
“அவ்ளோதான விடு! திட்டிடலாம்” என்று யோசிக்காமல் சொல்லி, வீட்டை நோக்கிச் காரைச் செலுத்தினார்.
அதிகப்படிதான்! அதிகப்படியேதான்! ஆனால் ராஜசேகர் மகளதிகாரத்தில், இது அன்பின் பரிமாணங்கள்!!
***********
தேவா அலுவலகம்!
ஞாயிற்றுக்கிழமை, இரவு நேரம்! பணி முடிந்து, தேவாவை அழைத்துச் செல்ல தாரா வந்திருந்தாள். மற்ற நாட்களில் இப்படிக் கிடையாது. ஞாயிறுகளில் அவள் பணிச்சுமை குறைவாக இருக்கும் என்பதால் அன்று மட்டும் இப்படி!
அவன் வரும்வரைக் காத்திருக்கலாம் என்று, அலுவலகக் கட்டடத்தின் கீழே நின்று கொண்டிருந்தாள். அவனுக்காக காத்திருக்கும் வேளையிலும், அவனைத்தான் காண வேண்டும் என்று நினைத்தாள்.
அந்தநேரம் நினைவில் வந்தது, கல்விச்சுமை பற்றிய நேர்காணல்!
அலைபேசியில் நேர்காணல் காணொளியை எடுத்துப் பார்த்தாள். அவனைப் பற்றிய அறிமுகப்படலத்துடன், காணொளி தொடங்கியது. பார்க்க… பார்க்க தாரா முகத்தில் ஒரு பெருமை!
முதல் கேள்வியாக மதிப்பெண் பற்றிக் நெறியாளர் கேட்டார். ‘ஸ்டுடென்ட்ஸ் பரிட்சையில எழுதிற விஷயத்துக்காகத்தான் மதிப்பெண் இருக்கனுமே தவிர, வாழ்க்கை முழுசும், அவங்களை எடை போடற ஒரு விஷயமா இருக்க கூடாது’ என்று பதில் சொன்னான்.
அடுத்த கேள்வியை நெறியாளர் ஆரம்பிப்பதற்குள், “தாரா” என்று அழைத்துக் கொண்டு தேவா வந்தான்.
அலைபேசியைப் பைக்குள் வைத்துவிட்டு, அவனைப் பார்த்துப் புன்னகைப் புரிந்தாள். அவன் புன்னகைக்கவில்லை! மாறாக அவளைக் கரிசனமாகக் கடிந்து கொள்ள ஆரம்பித்ததான்.
“நீ… நேர வீட்டுக்குப் போயிருக்கலாம்ல! இன்னைக்கு ஒரு நாள்தான ரெஸ்ட் எடுக்க முடியும்? அப்பவும் இப்படி வந்து நின்னா? எத்தனை தடவை உனக்கு சொல்லியிருக்கேன்? சொன்னா கேட்கறதேயில்லை!” என்றான் படபடவென!
ஒரு மௌனம்… ஒரு நிமிடத்திற்கு… இருவரிடமும்!
அதன்பின், “தேவா” என்று அழைத்தாள்.
“ம்ம்ம்” என்றான், அவளைப் பாராமல்!
“என்னைப் பாருங்க” என்றாள்.
அவள் கண்களைப் பார்த்தான். சட்டென, “டசன் டைம்ஸ் ஸாரி” என்று கண் சிமிட்டினாள்! சிரித்துவிட்டான்.
அவ்வாறு தாரா மன்னிப்பு கேட்டபின், எவ்வாறு தேவாவின் மனம் கோபம் கொள்ள முடியும்?? ஆகவே சிரித்தான்!
அவளும் சிரித்து, “வாங்க போகலாம்” என்றவள், கோபியைப் பார்த்து, “நீங்க தேவா பைக் எடுத்திட்டு வீட்டுக்குப் போயிடுங்க” என்று சொல்லி, தேவாவின் பைக் சாவியை வாங்கிக் கொடுத்தாள்.
“சரி-க்கா” என சாவியை வாங்கிக்கொண்டு கிளம்பினான். இப்போதெல்லாம்
கோபிக்கு ஒரு சந்தேகம் வருகிறது. ‘தான் கார் ஓட்டுனாரா? இல்லை பைக் ஓட்டுனரா?’ என்பதுதான் அது!
கோபி சென்றதும், இருவரும் காரில் ஏறினார்கள். தாரா த்ரீ லிட்டில் வேர்ட்ஸ் பாடலை ஓடவிட்டு… ரசித்துக் கேட்க ஆரம்பித்தாள். தேவா?! பாடல் இன்னும் பிடித்தபாடில்லை! ஆனால் அவனைப் பித்தம் கொள்ள வைத்திடும் அவளது முத்தத்திற்காக… நித்தமும், இதைக் கேட்கிறான்!
வேறு வழி!!
காரை கிளப்பும் முன்பு, “தாரா, சீட் பெல்ட்” என்றான் தேவா. தாரா, தன் சீட் பெல்ட்டை மாட்டிக் கொள்ளப் போகிறாளா?? இல்லை! இல்லவே இல்லை!!
தேவாவிற்கு சீட் பெல்ட் மாட்டிவிட்டு, அவன் கன்னத்தில் தாரா ஒரு முத்தம் வைத்தாள். அதுபோல் தாரா சீட் பெல்ட்டை மாட்டிவிட்டு… அவள் கன்னத்தில், தேவா முத்தம் வைத்தான்.
அதன் பின்னரே கார் கிளம்பியது!
இவர்களுக்கு, இது வாடிக்கை! இம்மியளவு நேரச் செலவிடல்கள் இருந்தாலும், இதயத்தின் காதலை இமாலய அளவிற்குக் கொண்டாடும் விதமாகவே இருக்கும். – காதல் உண்டியல் is feeling festive with Tara and Deva!
**********
தாரா, தேவா வீடு!
நாள்காட்டியின் தாள்கள் இரண்டு மாதங்கள் ஓடியிருந்தன!
அன்று இரவு பத்தரை! தாரா வருவதற்கு முன் தேவா வீட்டிற்கு வந்திருந்தான்.
வந்தவன், தன்னை இளைப்பாற்றிக் கொண்டு, அவர்கள் அறையின் மெத்தை மேல் அமர்ந்து புத்தகம் படிக்க ஆரம்பித்தான்.
சற்றுநேரத்திற்குப் பின் தாரா வீட்டிற்கு வந்தாள். நேராகச் சென்று, அதிபன் புகைப்படம் முன் ஒரு சில நொடிகள் நின்றாள். பின், அவர்கள் அறைக்குள் சென்றாள்.
அவள் நுழைந்ததும், “சாப்பிட்டியா தாரா” என்றான்.
“ம்ம்ம்” என்றவள், வண்ணத்தாள் சுற்றப்பட்டப் பரிசுப் பொருளை நீட்டினாள்.
“எத்தனை கிஃப்ட் தாரா?” என்று அலுத்துக் கொண்டான். இருந்தும் வாங்கிக் கொண்டான்.
ஆம்! அடிக்கடி பரிசுப் பொருட்கள்! அளவில்லா பாசங்கள்! அதுதான் தாரா!!
“ரெஃப்பிரஷ் பண்ணிட்டு வர்றேன். ஓபன் பண்ணிப் பாருங்க” என்று அவள் சென்றதும், அவன் பிரித்துப் பார்த்தான். உள்ளே ஒரு கடிகாரம் இருந்தது.
பழைய காலத்து மேசைக் கடிகாரத்தின் மாதிரியில் இருந்தது. வெளிப்புறம் முழுதும் பித்தளையின் நிறம்! உள்ளே முழுவதும் வெள்ளை நிறம். ஆனால், இலக்கங்கள் ஏதுமில்லை! அதே பித்தளை நிறத்தில் கடிகார முட்களும்!
ஒருமுறை பார்த்தான். பின் அதை மெத்தை மீது வைத்துவிட்டு, புத்தகத்தைக் கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். சற்று நேரத்தில், தாரா முகம் கழுவி உடைமாற்றிக் கொண்டு வந்தாள். அந்த அறையில் ஒளிர்ந்த விளக்குகளை அணைத்துவிட்டு, அவனருகே வந்தமர்ந்தாள்
“தாரா, புக் படிச்சிட்டு இருக்கேன்” என்று சொல்லிப் பார்த்தான்.
அதைக் கண்டு கொள்ளாமல், “கிஃப்ட் பார்த்தாச்சா?” என்று இரவு விளக்கை மட்டும் ஒளிரச் செய்தாள்.
“ம், கிளாக்-தான?” என்று அசட்டையாகச் சொன்னவன், “ஒவ்வொரு செகன்டும் உன்னை நினைக்கனுமா?” என்று வேறு கேட்டான்.
“அதெல்லாம் நான் நினைச்சிக்கிறேன். நீங்க, கிளாக்ல பேட்டரி போட்டுப் பாருங்க”
“தாரா” என்றான் அசதியாய்!
“தேவா” என்றாள் அன்பாய்! ‘சம்மதம்’ என்பது போல் அவனும் பேட்டரி போட்டுவிட்டுப் பார்த்தான்.
கடிகாரத்தின் சின்ன முள்ளில் அவள் பெயரும், பெரிய முள்ளில் அவன் பெயரும் சிறு ஒளியுடன் மிளிர்ந்தது.
“ஓ, நம்ம பேரோடவா?” என்று கேட்டு அவளைப் பார்த்தான். அவளோ, இன்னும் நன்றாகப் பார் என்பது போல் பார்த்தாள்.
‘வேற என்ன இருக்கிறது?’ என்று கடிகாரத்தை உற்றுப் பார்க்கும் பொழுது, நொடி முள்ளில் ‘boy/girl’ என்ற எழுத்துகள் ஒளிர்ந்தன.
ஓர் அமைதி தேவாவிடம்! அது, அப்பாவான ஆனந்தம் தந்த அமைதி!! எப்படி அந்த ஆனந்தத்தை வெளிப்படுத்த என்று தெரியாத அமைதி!!
அவன் அமைதியைப் பார்த்தவள், “ஐ திங்க் யூ காட் இட்” என்றாள். மெல்ல தலையசைத்தான்.
“எவரி செகன்ட்… பாய் ஆர் கேர்ளா-ன்னு நினைச்சிக்கிட்டே இருங்க” என்று நகரப் போனவளைக் கைப் பிடித்து நிறுத்தினான். பின், தன் கைவளைக்குள் கொண்டு வந்து இருத்தினான்! இதமான ஓர் இறுக்கம் தந்தான்!!
அந்த விசாலமான அறை முழுதும் இருள் வியாபித்திருந்தது. முழுதும் கருப்பு வர்ண டைல்ஸ்ஸில், முல்லைப் பூ வெள்ளை நிறத்தில் கட்டில்!!
இரவு விளக்கின் ஒளி வெள்ளம், கட்டிலைச் சுற்றிப் போட்டிருந்த கார்பெட்டை நனைத்திருந்தது. கட்டில் மேல், தேவாவின் ஒரு கைவளைக்குள் தாரா! அவன் மறுகரத்தின் உள்ளங்கையில் கடிகாரம்! நொடிமுள் boy/girl என்று கேட்டபடி ஓடிக் கொண்டிருந்தது!!
வெகு நேரம், இருவரிடமும் அமைதி நிலவியது!
“தாரா”
“ம்ம்ம் சொல்லுங்க”
“நத்திங்” என்றான்! ஆனால், நிறைய முத்தங்கள் தந்தான். அகவாளனின் அக்களிப்பை உணர்ந்து, அவனை ஆருயிரென அணைத்துக் கொண்டாள். மீண்டும் சில நொடிகள் அமைதி!
“தேவா, என்ன ஒன்னுமே சொல்ல மாட்டிக்கீங்க?”
“என்ன சொல்லணும்?”
“ஏதாவது?”
“டாக்டர்கிட்ட செக் பண்ணியா?” என்றான் அக்கறையாக!
சட்டென அவனிடமிருந்து விலகி, “ஹலோ! நானே ஒரு gynecologist” என்றாள் அவசரமாக!
“தெரியும். பட், நீ வாங்கிற பீஸ் எனக்கு கட்டுபிடியாகாதே” என்று மீண்டும் தன் மார்பில் மனவாட்டியை மாட்டிக் கொண்டான்.
“இன்னும் நீங்க இதை மறக்கலையா?” என்று அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு சன்னமாக சிரித்தாள் தாரா!
இதயத்திலிருந்து சிரிப்பவளை இன்முகத்துடன் பார்த்துக் கொண்டே, “லவ் யூ தாரா” என்றான் இஷ்டப்பட்டு!
“லவ் யூ மை ஹார்ட் பீட், லவ் யூ மை ஹேன்ஸ்ஸம், லவ் யூ மை வேலன்டைன், லவ் யூ மை ட்ரீம் போட், லவ் யூ மை சன்ஷைன், லவ் யூ மை எவரித்திங், லவ் யூ மை ஒன் அன்ட் ஒன்லி…” என்று தாரா அடைமழை போல் இடைவிடாமல் அடுக்கிக் கொண்டே போனாள், தேவாவின் மீதான ஈடில்லா இஷ்டத்தை!!
******முற்றும்******
Thank you for reading this story. You’re welcome to explore my other stories too. 😊

