Kathambari Novels
ராஜசேகர் வீடு!
தாரா, தேவா வந்து சேர்ந்திருந்தனர். கீதா, ஜெகன், சரத், ராஜசேகர் அவர்களை வரவேற்று, உள்ளே அழைத்து வந்திருந்தனர்.
தேவாவும் சரி… கீதாவும் சரி… எதுவும் பேசிக்கொள்ளவும் இல்லை! எதையும் வெளிக்காட்டவும் இல்லை! தாராவிற்காக கீதா… ராஜசேகருக்காக தேவா இப்படி நடந்து கொண்டனர்.
வரவேற்பறை சோஃபாவில் தாராவும், தேவாவும் அமர்ந்து கொண்டனர். ‘அது… இது’ என்று தந்து சற்றுநேரத்திற்கு அவர்களை உபசரிக்கும் படலம் நடந்தது.
இதற்கிடையே, “எங்க வீடு எப்படி இருக்கு? என்று மெல்லிய குரலில் தாரா தேவாவிடம் கேட்டாள். ‘நல்லாயிருக்கு’ என்ற பொருளில் மௌனத்துடன் கூடிய உடல்மொழி மட்டும் தேவாவிடம்.
கீதா, “தாரா வா… வந்து ரெடியாகிக்கோ” என்றார்.
“சரிம்மா” என்றவள், “தேவா, நான்…” என்று மாடியை நோக்கி கை காட்டினாள். தேவா தலையை மட்டும் ஆட்டினான்.
தாரா, கீதா மாடிப்படி ஏறிச் சென்றபின், ராஜசேகர், ஜெகன், சரத் தேவாவிடம் பேச ஆரம்பித்தனர்.
வரவேற்பு நிகழ்ச்சி!
வீட்டைச் சுற்றியிருந்த தோட்டத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நல்ல விஸ்தாரமான தோட்டம் முழுவதும் அலங்காரங்கள் மற்றும் அலங்கார விளக்குகள். ஏராளமான நாற்காலிகள்! ஒவ்வொன்றும் சாட்டின் துணியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது!!
நாற்காலிகள் வட்டவடிவில் போடப்பட்டிருந்தன. நடுவில் ஒரு மேடை. வண்ண வண்ண துணிகள் கொண்டு, மேற்கூரை போல் வடிவமைக்கப்பட்டிருந்தது.
அதிலிருந்து தொங்கும் உருளை வடிவ மஞ்சள் நிற விளக்குகள்.
இதேபோல் மேடைக்குப் பின்புறமும், பல்வேறு வேலைப்பாடுகள்! அளவாய் இருந்தது! ஆனால், மனதை அள்ளிக் கொண்டது. மேடையின் மேல், வரவேற்பு கொண்டாடத்திற்காக கேக் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
மேடை ஒட்டி முக்கிய புள்ளிகளுக்காக சோஃபாக்கள் போடப்பட்டிருந்தன.
தேவாவின் அண்ணன், அண்ணியைத் தவிர, ஹேமா மற்றும் அவள் கணவன், பாஸ்கர் தம்பதியினர்… பாபி மற்றும் சாரு வந்திருந்தனர். இவர்கள் நிகழ்ச்சி தொடங்கும் முன்பே வந்ததால்… ஹேமாவையும் சாருவையும் விசேஷமாக கீதா கவனித்தார்.
காரணம்?
தாரா, தேவா பதிவு திருமணத்தன்று ஹேமா வீட்டிற்கு வர ஆசைப்பட்டதாக ராஜசேகர் சொல்லியிருந்தார். ஆதலால் ஹேமா! சாருவின் திருமணத்திற்குப் போகவில்லை என்ற வருத்தம் கீதாவிற்கு இருந்து வந்தது. ஆதலால் சாரு!
தன் கைப்பட செய்த இனிப்புகள்… சிறு பரிசுப் பொருட்களை வழங்கி, கீதா இருவரையும் ஆசிர்வதித்தார். அதன்பின்னரே அவர் மனம் ஆறியது.
ராஜசேகரின் மருத்துவ, அரசியல் நண்பர்கள் ஒருபுறம். மருத்துவமனையில் வேலைப் பார்க்கும் மருத்துவர்கள் மற்றொரு புறம். சுற்றிலும் உறவினர்கள். இவர்கள் சூழல நிகழ்ச்சி ஆரம்பித்தது.
தாராவும், தேவாவும் கேக் வெட்டி முடித்ததும், நிகழ்ச்சி தொடங்கியது. பின், ஒவ்வொருவராக வந்து வாழ்த்துச் சொல்லிச் சென்றனர். ஒருசிலர் பரிசுப் பொருட்கள் தந்தனர்.
வாழ்த்து சொல்லும் படலம் நடந்து கொண்டிருக்கும் போதே, இரவு உணவு ஆரம்பித்தது. தோட்டத்தில் ஆங்காங்கே நின்றும், நாற்காலியில் அமர்ந்தும் சாப்பிட ஆரம்பித்தனர்.
முக்கிய புள்ளிகள் புதுமணத் தம்பதியினருக்கு வாழ்த்து மட்டும் சொல்லி, ராஜசேகரிடம் விடைபெற்றுக் கிளம்பினர்.
இரு பக்க உறவுகளையும், மருத்துவமனை ஊழியர்களையும் அருகிலிருந்து அன்புடன் கவனித்தார், ராஜசேகர்.
வாழ்த்துகளும், இரவு உணவும் முடிந்ததும் ஒவ்வொருவராக விடைபெற்றனர். கடைசியில் தேவா, தாரா இருவரும் குடும்ப உறுப்பினர்களிடம் விடைபெற்று, கார் நிறுத்துமிடம் நோக்கிச் சென்றனர்.
அனைவரையும் வழி அனுப்பிவிட்ட பின், கீதாவிற்கு ஓய்வு தேவைப்பட்டதால் ஜெகன் அவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். ‘அப்பா வரட்டும்’ என்று, சரத் ராஜசேகருக்காகக் காத்திருந்தான்.
“நான் கொஞ்ச நேரம் இருந்திட்டு வர்றேன். நீ போ” என்று சரத்தை அனுப்பி வைத்தார் ராஜசேகர்.
பரந்து விரிந்த இடத்தில் நின்றுகொண்டு, சுற்றிலும் ராஜசேகர் பார்வையைச் சுழலவிட்டார். காலியாக இருந்த மேடை… நாற்காலிகளைப் பார்க்கும் போது, ஒரு தந்தையாக ராஜசேகரின் மனம் நிரம்பியிருந்தது!!
***********
தாரா, தேவா கார் நிறுத்துமிடம் வந்திருந்தார்கள். காரில் ஏறும் முன், “தாரா, ஒரு நிமிஷம்” என்றான் தேவா.
“என்ன தேவா?” என்றாள் சிரித்த முகத்துடன்!
“எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வந்தியா?”
“ம்ம்” என்றாள் முகம் மாறாமல்!
“மாமாகிட்ட??”
சட்டென முகம் மாறிவிட்டது. “வாங்க போகலாம்” என கார் கதவைத் திறக்கப் போனவளை, கைப் பிடித்து நிறுத்தினான்.
“என்ன தேவா?”
“மாமாகிட்ட சொன்னியா?”
“ப்ச் சொல்லலை”
“ஏன்?”
பதில் சொல்லாமல் நின்றாள்.
“தாரா! ஏன்னு கேட்கிறேன்”
“நான் பேசினதில்லை”
‘இன்னும் காரணம் சொல்’ என்பது போல் நின்றிருந்தான்.
“என் அப்பாகிட்டருந்து என்னய பிரிச்சிக் கூட்டிட்டு வந்ததால, அவர்கிட்ட நான் பேசினதில்லை” என்றாள், தன் செயலை நியாயப்படுத்தும் விதமாக!
“ஏன் இப்படிச் சொல்ற? எனக்கு, நீ தப்பு பண்றன்னு தோணுது”
அமைதியாக நின்றாள்.
“தாரா, போய் பேசிட்டு வா” என்றான் கொஞ்சம் கண்டிப்பாக!
“முடியாது தேவா” என்றாள் கறாராக!
“தாரா” என்று பற்களைக் கடித்துக் கொண்டு அழைத்தவன், “உனக்கு எப்படிப் புரிய வைக்க?” என்று யோசித்தான். ஓர் அமைதி நிலவியது.
“தாரா… வா, நடந்துகிட்டே பேசலாம்” என்று தோட்டத்துப் பாதைகளில் நடக்க ஆரம்பித்தான். அவளும் பின்தொடர்ந்தாள்.
சற்றுநேரம் எதையெதையோ பேசிவிட்டு, “தாரா, நீ பாபியைப் பத்தி என்ன நினைக்கிற?” என்று கேட்டான்.
“பாபிக்கு என்ன? ஹீ இஸ் சச் எ ஜெம்! அவ்ளோ கேரிங்… அவ்ளோ மெச்சூர். தன்னை சுத்தி இருக்கிறவங்கள ஹேப்பியா வச்சிப்பாரு” என்று அடுக்கிக் கொண்டே போனவள், “சிம்பிளா சொல்லணும்னா… சாரு லக்கி” என்றாள்.
“ம்ம்ம்”
“இன்னொன்னு” என்றவள், “சாருவை பார்த்துக்கிறது ஓகே. பட், மாலியைப் பார்த்துக்கிறாருனா!!? ஹீ இஸ் ரியலி கிரேட்” என்றாள்.
“ம் சரிதான்” என்றவன், “இப்ப மாமாவுக்கும் பாபிக்கும் என்ன வித்தியாசம்னு சொல்லு?” என்றான்.
அவள் நின்றாள். அவனும் நின்றான். ‘இன்னும் இவன், இந்தப் புள்ளியிலே நிற்கிறானே?!’ என்ற ரீதியில் தாரா பார்த்தாள்.
“தாரா, பதில் சொல்லு”
“சாரு சிச்சுவேஷன் வேற! என் அம்மா…” என ஆரம்பிக்க போனவளிடம், “நான், உன் அம்மா பத்தி பேசல. பாபி, மாமா பத்திதான் பேசறேன். அதனால கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு” என்று மீண்டும் அதே கேள்வியில் நின்றான்.
இருவருக்கும் என்ன வேற்றுமை? பதிலுக்காக யோசித்தாள்! ஆனால், கிடைத்த விடை என்னவோ ஒற்றுமைதான்!! ஆதலால் அமைதியாக நின்றாள்.
“தாரா”
நிமிர்ந்து பார்த்தாள்.
“மாலி வளந்தப்புறம்… நீ மாமாகிட்ட நடந்துக்கிற மாதிரியே, அவ பாபிகிட்ட நடந்துக்கிட்டா… நீ யாரைத் தப்பு சொல்லுவ??”
இதற்கு பதில் இருக்கிறது. ஆனால், அது தன்பக்க வாதமாக வரமுடியாத பதில்! ஆகையால் அமைதியாக நின்றாள்.
“இன்னைக்கு, யாரும் உன்னைய ஒன்னும் சொல்ல மாட்டாங்க தாரா. ஆனா, சரத் ஜெகனுக்கு மேரேஜ் ஆச்சுன்னா… வர்றவங்க என்ன பேசுவாங்க? அப்ப உனக்குத்தான் கஷ்டமா இருக்கும்”
“யாராவது என்னை எதும் சொன்னா டாக்டர் சும்மா விடமாட்டார் தெரியுமா?” என்றாள் கர்வமாக!
ஆனால் அடுத்த நொடி, ‘எங்கிருந்து வந்தது தனக்கு இந்த நம்பிக்கை! சரத், ஜெகன், அம்மா… என்ற எந்த உறவும் ஏன் வரவில்லை?’ என்று யோசித்தாள்.
ஆனால், தாரா ‘டாக்டர்’ என்று விளிப்பதைப் பார்த்து, தேவாவிற்குக் கோபம் வந்ததிருந்தது. “டாக்டரா?” என்று கேட்டு, அதை வெளிப்படுத்தினான்.
அவனது குரல், அவளை யோசனையிலிருந்து மீட்டெடுத்து வந்தது.
“ஏன் தாரா, அப்பான்னு சொல்ல முடியாதா?” என்று மேலும் கோபப்பட்டான்.
மீண்டும் அமைதி தாராவிடம்!
“அப்பாக்கிட்டருந்து பிரிச்சிட்டு வந்திட்டாருன்னு சொல்றியே, இங்க கூட்டிட்டு வந்து உன்னை கஷ்டப்படுத்தினாரா?”
“அப்படியெல்லாம் எதுவும் இல்லை” என்று ராஜசேகருக்காகப் பேசினாள்.
“அப்புறம் ஏன் அவர்கிட்ட இப்படி நடந்திக்கிற?”
தாராவிடம் பதிலில்லை.
“தாரா, நீ சொல்ற… ‘என் ஃபேவரைட் கார்! நான் கட்டிற ஹாஸ்பிட்டல்! நான் வாங்கின வீடு!’ இது ஒவ்வொன்னும் கோடிக்கணக்கில இருக்கும்ல?”
“இப்போ எதுக்கு அது?”
“எங்கிருந்து வந்திச்சு அந்தப் பணம்?”
“அது என்னோட எர்னிங்ஸ்”
“இப்படிச் சம்பாதிக்கிறதுக்கு ஒரு படிப்பு தேவை! அதை யாரு கொடுத்தா?”
மீண்டும் பதிலில்லை.
“பத்திரமா பாத்துகிட்டு… பாசத்தைக் கொட்டி படிக்கச் வச்சா, நீ அவரையே தள்ளி நிக்க வச்சிப் பார்க்கிற?”
“என்னால என் அப்பா இடத்தை யாருக்குமே விட்டுத் தர முடியாது” என்றாள். எல்லா கேள்விகளுக்கும், இதுதான் அவளிடம் இருக்கும் ஒரே பதில்!
“யாருக்கும் விட்டுத் தர வேண்டாம். நானும் விட்டுத் தர சொல்லல. உன் மேல பாசம் வச்சிருக்கிற ஒருத்தரைப் புரிஞ்சிக்கிட்டியான்னு கேட்கிறேன்”
மீண்டும் பதில்லாமல் நின்றாள். ‘இத்தனை பதிலில்லா கேள்வி சூழலில்தான் நிற்கிறேனா?’ என தன்னையே கேட்டுக் கொண்டதும், அவளுக்கு ‘தன்பக்கம் நியாயமில்லையோ’ என்ற உணர்வைத் தந்தது.
“எனக்கு ஐயாவை பத்தி நல்லா தெரியும். உன்னைவிட அதிக நேரம் அவர்கூட பேசியிருக்கேன். அதை வச்சி சொல்றேன், நீ இப்படி நடந்துக்கிறது ஐயாவுக்கு சுத்தமா பிடிக்காது”
‘உன் தந்தைக்குப் பிடிக்காத ஒன்றை செய்கிறாய்’ என்ற அவனுடைய வாதம், அவளின் பிடிவாத பிடிமானத்தை அசைக்க ஆரம்பித்தது.
“உன்னைப் பார்க்கிற ஒவ்வொரு தடவையும், அவர் எவ்வளவு ஏக்கத்தோட பார்க்கிறாரு! அது உனக்குத் தெரியலையா தாரா?”
பக்கமிருந்து பார்க்கவில்லை என்றாலும், தூரத்திலிருந்து பார்த்திருக்கிறேன். ஏன் இப்படி என்று நினைத்தும் இருக்கிறேன். – தாராவின் மனநிலை!
“அவரை ஒரு மனுஷனாகூட மதிக்க மாட்டிக்க. அப்படி என்ன தப்பு பண்ணாரு”
“இப்படிச் சொல்லாதீங்க. அவர் மேல மரியாதை உண்டு. ஒரே ஒரு நாள்தான் அவர்கிட்ட கோபமா பேசிருக்கேன். அப்புறமா அப்படி பேசினதேயில்லை”
“அதான் தப்புனு சொல்றேன். அடுத்த நாளே கோபப்பட்டதுக்கு ஸாரி கேட்டுப் பேசியிருக்கலாமே?”
“ஏன் இவ்ளோ திட்டறீங்க. அதுவும் இன்னைக்கு?” என்றாள் கண்கலங்க!
“திட்டலை தாரா! திருத்தணும்னு நினைக்கிறேன்”
‘திருத்தம் செய்யும் அளவிற்கா தன் செயல்கள் இருக்கிறது?’ என்பது அவளை வருத்தம் கொள்ளச் செய்தது.
“உனக்கு அவர் மேல பாசம் இருக்கு. எப்படின்னு சொல்லவா?” என்றான், வெகு நேரத்திற்குப் பின் அமைதியான குரலில். ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“நீயும் நானும் ஹாஸ்பிட்டல்ல ஆர்க்யூ பண்ணோமே? அதான் ஃபர்ஸ்ட் டைம் நாம தனியா பேசினது. கரெக்டா??”
“ம்ம்ம்”
“எத்தனை வருசமா என்கிட்ட பேசணும்னு வெயிட் பண்ணிருப்ப! ஆனா நான், உங்க ஹாஸ்பிட்டல் பத்திக் குறை சொன்னதுமே, எல்லாத்தையும் மறந்திட்டு எப்படி என்கிட்ட ஆர்க்யூ பண்ண? ‘வி நோ வாட் இஸ் எத்திகல்’னு சொன்னேல, அதுல அந்த ‘வி’ யாரு தாரா?” என்றான் கேள்வியாக!
உண்மைதான்! மருத்துவமனை பற்றி யார் தவறாகப் பேசினாலும், தன்னால் பொறுத்துப் போக முடியாது. அது ‘ஏன்?’ என்று லேசாகப் புரிந்தது.
“இப்ப கேட்டியே ‘எங்க வீடு எப்படி இருக்கு’னு. அதுல ‘எங்க’னு சொன்னது, டாக்டர் ராஜசேகர் குடும்பத்ததான?”
‘ஆமாம்’ என மனம் சொன்னது. ஆனால் மூளை எதையோ நினைத்து முரண்டு பிடித்தது. – தாராவிற்கு!
“மேரேஜுக்கு முன்னாடி, ஐயா பத்தி நீ சொல்லாததுக்குக் காரணம் கேட்டப்ப, என்ன சொன்ன?” என்று அடுத்த கேள்வி கேட்டான்.
“சொல்லத் தோணலைனு சொன்னேன்”
“காரணம் அது இல்ல. பயம்! நம்ம அப்பாமேல இவ்ளோ பாசம் வச்சிருக்கவன், இவங்களை எப்படி பார்பானோனு உனக்கு பயம்! அன்னைக்கு உன் முகம் டல்லா இருந்ததுக்கு காரணம் அதுவும்தான்!
எல்லாம் சொன்னப்புறம்… சரத் ஜெகன்கிட்ட இதேமாதிரி பேசுவீங்களான்னு கேட்டேல? அப்போ மாமாவைப் பத்தி மனசில நினைச்சியா?” என்று, அன்று அவன் கணிப்பை… இன்று கேள்வியாகக் கேட்டான்.
தான் காதலிக்கிறவன், தன்னை இப்படிக் கணித்து வைத்திருக்கிறானே என்றொரு தோற்றம் தாராவிடம்!
“சொல்லு தாரா! நினைச்சியா? இல்லையா?”
“நினைச்சேன் தேவா… நினைச்சேன்!! முதல சரத் ஜெகன் பத்தி மட்டும்தான் நினைச்சேன். அவர் பத்தி நினைச்சதே இல்லை. ஆனா, நீங்க ரெண்டு பேரும் ரெஜிஸ்டர் ஆஃபிஸ்ல பேசினதைப் பார்த்து… உண்மை தெரிஞ்சப்புறம், நீங்க அவர்கிட்ட பேசற விதம் மாறிடுமோன்னு நினைச்சேன். அன்ட் அது அவரைக் கஷ்டப்படுத்துமோன்னு பயந்தேன்! போதுமா?” என்று சத்தமாகச் சொல்லி, சரணடைந்தாள்.
“என்னால மாமா கஷ்டப்படக் கூடாதுன்னு நினைச்சிருக்கிற. குட்! சரிதான்!! ஆனா உன்னால அவர் கஷ்டப்படுறதை மறந்திட்டேயே?!”
அவள் முகம் மாறியிருந்தது. அவள் உணர்ந்து கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தது. மேலும், உடைந்து கொண்டிருக்கிறாள் என்றும் புரிந்தது.
ஆதலால், “தாரா போ. போய் பேசிட்டு வா” என்றான்.
“திடிர்னு போய் என்ன பேச தேவா?” என்றவள் குரல் சங்கடப்பட்டிருந்தது.
“போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு வா. இன்னைக்கு அது போதும்” என்றான், அவளைச் சமாதானப்படுத்தும் குரலில்!
தாராவிடம் தயக்கம்! அவருடன் தான் சகஜமாக பேசி எத்தனை வருடங்கள் ஆயிற்று? சட்டென்று முடியுமா? என யோசித்தாள்!
“தாரா, எதையும் யோசிக்காத. போ” என்றான்.
“ம்ம்ம்” என்று சொல்லி, திரும்பி நடக்கத் தொடங்கினாள்.
“தாரா… மாமா எதும் பேசினா, கொஞ்சம் பொறுமையா கேளு”
“ம்ம்ம்” என பின்னால் திரும்பி தலையாட்ட, “நான் சொன்னதுக்காக, அவரை அப்பான்னு கூப்பிட வேண்டாம். நீயா உணர்ந்து கூப்பிட்டா ஓகே” என்றான்.
ஏதும் சொல்லாமல் தாரா, வீட்டின் பிரம்மாண்ட வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்!
தாரா வரவேற்பறைக்குள் நுழையும் போது… ஜெகன் சாப்பாட்டு மேசையின் அருகே நின்றுகொண்டிருந்தான். சரத்தும், கீதாவும் சோஃபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
ராஜசேகர், அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.
தாரா வருவதை பார்த்த ஜெகன், “என்ன-க்கா எதும் மறந்திட்டியா?” என்றான்.
“என்ன வேணும்?” – கீதா.
“தாரா என்ன” – சரத்.
ஒவ்வொருவரும் ஒரு கேள்வியுடன்! யார் கேள்வியையும் தாரா கருத்தில் கொள்ளவில்லை. கண்களில் தெரிந்தது ராஜசேகரின் உருவம்!! கருத்தினில் இருந்தது, அவரின் ஏக்கப் பார்வைகள்!!
ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து, அவரை நோக்கி முன்னேறிச் சென்றாள்.
மற்றவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். அவள் தன்னை நோக்கி வருகிறாள் என்று தெரிந்ததும், ராஜசேகர் அலைபேசி பேச்சை நிறுத்திவிட்டார்.
மேலும் மேலும் அடியெடுத்து வைத்து, ராஜசேகர் அருகில் வந்து நின்றாள். அவர் எதுவும் பேச விளையவில்லை! ஆனால், பார்வை முழுதும் தாராவின் மீதுதான் இருந்தது!
“அது… அது…” என்று தயங்கினாள்.
மற்ற மூன்று பேரும் மூச்சுவிட மறந்து போய், அப்படியே… அதே இடத்திலேயே இருந்தனர்.
“அது… போயிட்டு வர்றேன்” என்று சொல்லி முடித்தாள். இரண்டு வார்த்தைகள் பேசுவதற்குள்… அவளது இருதயம் இங்கும் அங்கும் ஓடித் திரிந்த களைப்பை அடைந்தது.
‘ம்ம்ம்’ என்ற அர்த்தங்கள் மட்டும் கொண்ட தலையசைப்பு, ராஜசேகரிடம்!
இமைகள் உயர்த்தி அவரைப் பார்த்தாள். அவரின் இதயத்திலிருக்கும் ஏக்கம், இருவிழிகளின் வழி எட்டிப் பார்த்தது. எப்போதும் எட்ட நின்று பார்ப்பதுதான்! இருந்தும் இன்று இத்தனை அருகில் பார்க்கும் போது, இரண்டு வார்த்தைகள் இன்னும் பேசினால் என்ன? என்று தோன்றியது.
“ரிசெப்ஷன்… ரிசெப்ஷன்…” என்று வார்தைகளைத் தேடினாள்.
தான் ஏதாவது பேசி, அவள் பேசுவதை நிறுத்திவிட்டால்! ஆதலால் ராஜசேகர் அமைதியாக நின்றார்.
“ரிசெப்ஷன் டெக்கரேஷன் ரொம்ப நல்லா இருந்தது” என்று சொல்லிவிட்டு, மூச்சு வாங்கி கொண்டாள்.
மருத்துவமனை சார்ந்திடா விடயங்களை மகள் பேசுகிறாள். மனதை திறந்து வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார், ராஜசேகர்!
“எனக்கு பிடிச்சிருந்தது” என்றாள்.
‘சந்தோசம்’ என்பது போல் லேசாகச் சிரித்தார்.
“நான் கிளம்புறேன்” என்று சட்டெனெ திரும்பினாள்.
அவரின் கண்கள் மட்டுமல்ல! அங்கிருந்து அனைவரின் கண்களும் ‘இன்னும் கொஞ்சம் பேசு தாரா’ என்று கெஞ்சின!
இரண்டு எட்டு வைத்தவளிடம், “அப்பாகிட்ட பேச வேற ஒன்னும் இல்லையா தாரா?” என்றார் இதயத்தின் ஏக்கத்தை மறைக்க முயற்சிக்கும் குரலில்!
திரும்பிவிட்டாள்.
“சொல்லு தாரா! அப்பாகிட்ட பேச மாட்டியா?”
‘அப்படியெல்லாம் இல்லை’ என்பது போல் மெல்ல தலை ஆட்டினாள். ஆனால், வாய் திறந்து அதை வார்த்தையாகக் கோர்க்க இயலவில்லை.
“தாரா… அப்பாவைப் பிடிக்காதா?”
அவர் இந்தக் கேள்வி கேட்பதற்குக் காரணம், அன்றைய தன் பேச்சு என்று புரிந்ததால்… மௌனமாக நின்றாள்.
“உன்னை, உன் அப்பாக்கிட்டருந்து பிரிச்சிட்டேன்னு… கோபம்!? ம்ம்ம், அப்படித்தானா?”
“கோபம் இல்லை” என்றவள் குரல் கமிறியது!
“அம்மா… சரத் ஜெகனை பார்த்துக்கிற மாதிரியே, உன்னை நான் பார்த்துக்க நினைச்சேன்! ஸ்கூல்ல நீ சரத், ஜெகன்கூட பேசி, சிரிச்சி விளையாண்டதைப் பார்த்து என்கூடவும் இப்படி ஒருநாள் பேசி சிரிப்பேன்னு நினைச்சேன். ஆனா, நீ என்னை ஏத்துக்கலைங்கிறதை… எப்போ உணர்ந்தேன் தெரியுமா?” என்று கேட்டு, நிறுத்தினார்.
அதுவரைக் குனிந்து நின்று கலக்கங்களை மறைத்துக் கொண்டிருந்த தாரா, நிமிர்ந்து பார்த்தாள்.
“உன்னை ஒவ்வொரு தடவையும் கோயம்புத்தூர் கூட்டிட்டுப் போவேன்ல… நீ அப்ப என்கிட்டருந்து ஓடிப் போய் உன் அப்பாவை…” – ராஜசேகருக்கு, அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை. ஒரு ஏக்க பெருமூச்சு மட்டுமே!
அந்த நாளில், தந்தையின் ஏக்கத்தை மட்டும் பார்த்தவளுக்கு, மறுபக்கத்தில் இப்படி இவர் ஏங்கிக் கொண்டிருந்தாரா? என்ற கேள்வி எழுந்தது.
“அப்ப புரிஞ்சிடுச்சு! உனக்கு… உன் அப்பானா எவ்ளோ பிடிக்கும்னு! என்னை ஏத்துக்கிறது உனக்கு எவ்வளவு கஷ்டம்னு தெரிஞ்சது”
‘முடியாது’ என்று தெரிந்த பிறகும், தனக்காக சரத்தை அடித்தாரா? – தாரா மனநிலை!
“ஆனா, அந்த அளவு பாசம் இல்லைனாலும், கொஞ்சமாவது என் மேல பாசமா இருப்பேன்னு நினைச்சேன்… ஆசைப்பட்டேன்”
பாசம் உண்டு! இப்போதுதான் தேவா சொன்னானே?! ஆனால் அதை எப்படி அவருக்கு எடுத்துச் சொல்ல என்று தெரியவில்லை. உணர்ச்சிகளின் பிடியில் இருந்ததால் தாராவிற்கு உரையாடல் வரவில்லை.
“இப்ப வரைக்கும் நினைச்சிக்கிட்டே இருக்கேன். அப்பப்ப நீ ஹாஸ்பிட்டல்ல ஏதாவது பேசினா, ரொம்ப சந்தோஷமா இருப்பேன்”
முகாம் நடத்த அனுமதி கேட்டபோது சிரித்தது… இதற்காகவா? – தன்னிடமே கேள்வி கேட்டுக் கொண்டாள், தாரா.
“நீ சொல்ற மாதிரி உன் அப்பாகிட்டருந்து உன்னை பிரிச்சது, என் தப்புன்னே வச்சிப்போம். அதுக்காக, இத்தனை நாள் தண்டனை கொடுத்தது போதாதா? ஒரே வீட்ல இப்படி ஒருத்தன் இருக்கிறதை கண்டுக்காம, பேசாம, அப்பான்னு கூப்பிடாம…” என்று நிறுத்தினார்.
அவருக்கு வலிப்பதைக் கூற வேண்டும். ஆனால், அது அவளுக்கு வலியைக் கொடுத்துவிடாமல் சொல்ல வேண்டும். அப்படியொரு பக்குவமான குரலில் கூறினார். அவர் வயதிற்கு ஏற்ற பக்குவம் அது!
ஆனால், தாராவின் வயது! அவர் அளவிற்கு பக்குவம் இல்லாததால் அவளுக்கு நிரம்ப வலித்தது.
“முன்னெல்லாம், நீ என்னை புரிஞ்சிப்பன்னு ஒரு நம்பிக்கை இருந்தது! ஆனா, அது இப்போ இல்லை”
அவர் குரல் அழுதது! தாடை தசைகளை இறுக்கிப் பிடித்து வைத்திருந்தார். இல்லையென்றால் அவரும் அழுதிருப்பார்!! ஆனால், அவள் கண்களில் நீர்த் தேங்க ஆரம்பித்திருந்தது!!!
“ரொம்பவே கஷ்டமா இருக்கு தாரா. இப்படியே, நீ அப்பான்னு கூப்பிடாம என் வாழ்க்கை முடிஞ்சிருமோன்னு…” என்று சொல்லிவிட்டு, நடுங்கிய கைகளால் வாயை மூடிக் கொண்டு நின்றார்
“ஏன் இப்படிப் பேசறீங்க?” என்றாள் கோபமாக. பின் இரு கைகளால் அவரை அணைத்துக் கொண்டாள். மெல்ல மெல்ல கண்ணீர் சொரிய ஆரம்பித்தாள்.
உடனே சரத், ஜெகன், கீதா மூன்று பேரும் ராஜசேகர் அருகில் வந்து நின்றனர். தாராவின் அழுகை அதிகரித்தது.
“அப்பா அழறா. ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க?” என்று சரத் கண்டித்தான்.
சுற்றியிருந்தவர்கள், “தாரா அழாத” என்று அவள் கண்ணீரை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால், அவள் நிறுத்தவில்லை.
“தாரா அழாதம்மா. இனிமே அப்பா இப்படிப் பேசமாட்டேன்” என்று விலக்கி நிறுத்தி அவள் கண்ணீர் துடைக்கப் பார்த்தார். ஆனால், அவள் அழுவதையும் நிறுத்தவில்லை. பிடித்த பிடியையும் விடவில்லை. இன்னும் அவரோடு ஒண்டிக் கொண்டு அழுதாள்.
“தாரா, நீ அழுதா அப்பாவால தாங்க முடியாது. அழாத தாரா… “
சற்றும் குறையாமல் அழுது கொண்டேயிருந்தாள், தாரா!
“தாரா… அப்பாக்கு நீ-னா உயிரு. இப்படி அழாதம்மா” என்று கெஞ்சினார். இதே வார்த்தைகள், உயிர் பிரியும் தருவாயில் அதிபன் சொன்னதாக தேவா சொல்லித் தெரிந்து கொண்டிருந்தாள்.
அதே வார்த்தைகள், உயிர் வேதனையில் ராஜசேகர் சொல்லிக் கேட்கிறாள். ஏன் இந்த வரட்டுப் பிடிவாதம். அவரையும் வருத்தி! தானும் வருந்தி! மெல்ல அவரிடமிருந்து விலகினாள்.
இன்னும், ஒரு கரம் அவரை அழுத்திப் பிடித்திருந்தது… மற்றொரு கரத்தால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “ப்பா” என்று வாய் திறந்து சொல்லும் போதே, மீண்டும் அழகை வந்துவிட்டது.
அதுவரை ஆறுதல் கூறியவர்கள், அமைதியாகிவிட்டனர். மீண்டுமொரு முறை, ‘அப்பா’ என்று அழைத்துவிட்டு, கண்ணீர் வடித்தாள்.
“சரத்… அம்மா உள்ள போறேன்டா” என்று அவன் கைகளைக் கீதா பிடித்தார். அதுவரை தாரா மீதிருந்த கவனத்தை, சரத் கீதாவிடம் திருப்பினான். அவரும் கண் கலங்கியிருந்தார்.
“அம்மா… நீங்க ஏன் இப்படி?” – சரத்.
“எனக்கு… எனக்கு… இது போதும் சரத். இது போதும்” என்று உடைந்த குரலில் சொல்லிவிட்டு, அவரது அறையை நோக்கி நடக்கப் போனார்.
“ஜெகன், இவளை பார்த்துக்கோ… நான் அம்மாவ பார்த்திட்டு வர்றேன்” என்று கீதாவைக் கைப் பிடித்து அழைத்துச் சென்றான்.
அவர்கள் இருவரும் சென்றதும், இன்னும் இரண்டு மூன்று முறை ‘அப்பா’ என அழைத்தாள். ஜெகனும் எவ்வளவோ ஆறுதல் சொன்னான். ஆனால் இருவரும் கேட்கவேயில்லை.
இதுவரை உணர மறுத்த உணர்வை உணர்ந்து உழன்று கொண்டிருந்தாள் தாரா. அவள் உணர்ந்ததை உணர்ந்து ராஜசேகர் நெகிழ்ந்தார்.
சற்று நேரத்திற்குப் பின், கீதாவைத் தூங்க வைத்துவிட்டு, சரத் வந்தான். “தாரா இன்னும் ஏன் அழுதுகிட்டு இருக்க?” என்று கடிந்து கொண்டு, “ஜெகன், தண்ணீ கொண்டுவா” என்றான்.
ஜெகன் ஒரு கண்ணாடித் தம்பளரில் தண்ணீர் எடுத்து வந்து, தாராவிடம் நீட்டினான். வாங்க மறுத்துவிட்டாள். தண்ணீரை வாங்கி, “தாரா முதல இதைக் குடி” என்று தம்பளரை, அவள் கைகளில் சரத் திணித்தான்.
கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் குடிக்க ஆரம்பித்தாள். ஒரு கரம், இன்னும் ராஜசேகரைப் பிடித்திருந்தது.
சரத் சாப்பாட்டு மேசையிலிருந்த டிஸ்யூகளை எடுத்து வந்து, தாரா கண்ணீரை… கண்ணீர் கோடுகளைத் துடைத்துவிட்டான்.
வாய் வார்த்தை இல்லாமல், வாஞ்சையுடன் தாராவின் தோள்களில் தட்டிக் கொடுத்தார் ராஜசேகர். தாரா, அவ்வளவு அழுததின் காரணமாக, இன்னும் ஏங்கிக் கொண்டிருக்கும் முதுகினை மெதுவாக நீவிவிட்டான் ஜெகன்.
இவையெல்லாம் ஆறுதல் தந்தது, தாராவிற்கு!
தாரா, அந்த வீட்டினரின் அன்பிற்குரியவள்! ராஜசேகரின் செல்லமகள்! சரத், ஜெகனின் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரியவள்! வேறென்ன சொல்ல!!
சரத் பேச ஆரம்பித்தான். “தாரா… இதுக்குப்புறம் அழக் கூடாது. இட்ஸ் யுவர் ஸ்பெஷல் டே, ஹேப்பியா இரு” என்றதும், ‘ம்ம்ம்’ என்று தலையாட்டினாள்.
“ஜெகன், ஏதாவது ஸ்வீட் எடுத்திட்டு வா” என்றார் ராஜசேகர்.
ஜெகனும் எடுத்து வந்தான். அந்த இனிப்பிலிருந்து ஒரு வில்லையை எடுத்து தாராவிற்கு ஊட்டி, “இனிமே அழக் கூடாது! கவலைப்படக்கூடாது” என்றார் அன்புடன்!
அவர் அன்பை ஏற்று, தலையை மட்டும் ஆட்டினாள். அதன்பின், ஜெகன் ஒரு வாயும், சரத் ஒரு வாயும் இனிப்பு எடுத்து ஊட்டிவிட்டனர். இனிப்பை மென்று கொண்டே ராஜசேகரை நிமிர்ந்து பார்த்தாள்.
“என்ன தாரா?”
‘ஒன்றுமில்லை’ என்று தலையசைத்து, வெகுநேரம் கழித்து சிறு புன்னகை செய்தாள். மீண்டும் அவர் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
“உன் மேரேஜ்க்கு அப்பா எந்த கிப்ஃட்டும் வாங்கித் தரலயே. உனக்கு ஏதாவது வேணுமா தாரா?”
“இப்போ எதுவும் தோணலை” என்று மட்டும் சொன்னாள்.
அழும் போது இருந்த, ‘அப்பா’ என்ற அழைப்பு… இக்கணம் இல்லை என்று உணர்ந்தார், ராஜசேகர். உணர்ச்சி வசப்பட்டுத்தான் அழைத்திருப்பாள் என்று தெரிந்தது.
இருக்கட்டும்!! கூடிய விரைவில் உரிமையுடன் அழைப்பாள், என்று நம்பிக்கை கொண்டார். “சரி என்ன வேணுமோ அப்பாகிட்ட கேளு” என்றார் சிரித்தபடி.
“ப்பா, வாங்கித் தர்றேன்னு மட்டும் சொல்லிட்டீங்க, அவ்ளோதான்! இது அதுனு கேட்டுகிட்டே இருப்பா” என்றான் சரத்.
“நான் சம்பாரிச்சது எல்லாமே அவளுக்குத்தானடா” என்றார், தாராவின் தலையை வருடியபடி!
அவர் அப்படிச் சொன்னதில், ஒரு களிப்பு! ஒரு கனிவு! கூடவே சிறிதளவு கர்வம்!! – தாராவிற்கு!
“போதும் ப்பா! வெளிய தேவா வெயிட் பண்ணுவாரு. இன்னொரு நாள் பேசலாம்” என்றான் சரத் பொறுப்பாக!
ராஜசேகர், “ஆமா தாரா! லேட்டாகுது. நீ கிளம்பு” என்று அவள் நெற்றி வருடி, உச்சி முகர்ந்தார்.
“ஜெகன், நீ தாராவைக் கூட்டிட்டுப் போய் விட்டுட்டு வா… நான் அப்பாவை ரூமுக்கு கூட்டிட்டுப் போறேன்” என்றான் சரத்.
இருவரிடமும் விடைபெற்று, தாராவும் ஜெகனும் வெளியே வந்தனர்.
அவர்கள் சென்றதும், “சரத், அப்பா இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ரொம்ப ரொம்ப…” என்று பேசிக் கொண்டே நடந்தார்.
“ம்ம்ம் புரியுதுப்பா… ” என்று அவரின் அறைக்கு அழைத்துச் சென்றான்.
வீட்டின் வெளியே! கார் அருகே நின்று கொண்டிருந்த தேவாவிடம்… தாராவை விட்டுச் சென்றான், ஜெகன்.
“கிளம்பலாமா?” என்று கேட்டான் தேவா.
‘ம்ம்’ என்று தலையசைத்துக் காரினுள் ஏறினாள்.
தேவாவும் ஏறினான். காரில் இருந்த சிறு விளக்கொளியில் தெரிந்த தாராவின் நனைந்த இமைகள் நிறைய விடயங்களை விளக்கியது. முதல் முறையாக, அவளின் நனைந்த இமைகள்… அவனுக்கு நிம்மதியைத் தந்தன.

