Kathambari Novels
Normal Try
அடுத்த நாள். நன்றாக விடிந்திருந்தும் இன்னும் இருவரும் எழவில்லை. அந்த நேரத்தில் அழைப்பு மணி சத்தம் கேட்டதில் தேவா கண் விழித்தான்.
நேரம் எட்டு என்று சுவர் கடிகாரம் காட்டியது. மீண்டமொருமுறை அழைப்பு மணி ஓசை கேட்டது. “டோர் பெல் அடிக்கு” என்று தாராவை எழுப்பினான்.
“பைவ் மினிட்ஸ்” என்று கண் விழிக்க மறுத்தாள்.
“எட்டு மணி ஆயிடுச்சி” என்று அவன் சொன்னதும், “சவுண்ட் ஸ்லீப்” என்றபடி எழுந்தாள். அதற்குள் மீண்டும் அழைப்பு மணி அடிக்கப்பட்டது. வேகமாகச் சென்று கதவைத் திறந்தாள்.
கோபி நின்றான். “வீட்லருந்து சாப்பாடு கொடுத்துவிட்டாங்க அக்கா”
அந்தக் கூடையை வாங்கி கொண்டவள், “நீங்க வெயிட் பண்ணுங்க. நான் ஒன் அவர்ல கிளம்பி வர்றேன்” என்றாள்.
சரியென கோபி போனதும், கதவைத் தாழிட்டு வந்து கூடையைச் சாப்பாட்டு மேசையில் வைத்தாள். “தேவா, நான் ஹாஸ்பிட்டல் கிளம்பறேன். நீங்க?”
“அஸ்யூஸ்வல் ஆபிஃஸ்”
“ஓகே” என்று அறைக்குள் போனவள், அரைமணி நேரம் கழித்து வெளியே வந்ததும், இருவரும் காலை வேளை உணவு உண்ண ஆரம்பித்தனர்.
“தேவா, இது இந்த வீட்டோட இன்னொரு கீ. உங்களுக்கு” என்று ஒரு சாவியை மேசைமீது வைத்தாள்.
“நீ ஃபர்ஸ்ட்டே இந்த வீடு பத்தி சொல்லிருக்கலாம்”
“ஏன் தேவா?”
“நான் வேற ஒரு வீடு ரென்ட்டுக்கு பார்த்திருந்தேன்”
“ரியலி” என்றாள் வியப்புடன்!
“ஹே! மேரேஜ் முடிஞ்சு உன்னை ஆஃபீஸுக்கா கூட்டிட்டுப் போவேன்”
“இப்போ வேணா அங்க போயிடலாமா?”
“ம்கூம். இந்த வீடு நீ ஆசையா வாங்கியிருக்க! இங்கயே இருக்கலாம்” என்று அவள் விருப்பத்திற்கு மதிப்புக் கொடுத்தான்.
இடக்கரத்தை அவன் கன்னத்தில் வைத்து, “ஸோ கைன்ட் ஆஃப் யூ” என்றாள் வாஞ்சையுடன்! கன்னத்தில் இருந்த அவள் கரம் பற்றி முத்தம் வைத்தான்.
“oh sad!” என்றாள் வருத்தமாக!
“என்னாச்சு?” என விளங்காமல் வினவினான்.
“ஃபர்ஸ்ட் கிஸ், ஃபோர்ஹெட்ல கொடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்”
“இதான் ஃபர்ஸ்ட் கிஸ்னு எப்படிச் சொல்ற?” என்றதும், தாராவிற்குச் சாப்பாடு புரையேறிவிட்டது. அவள் தலையைத் தட்டி தண்ணீர் தந்தான்.
தண்ணீர் குடித்ததும், “எப்படி தேவா?” என்றாள் விழி விரிய!
‘நீயே யோசி’ என்பது போல் அவளைப் பார்த்திருந்தான். நேற்றைய இரவுப் பொழுதை புருவங்கள் சுருங்க யோசித்தாள். யோசிக்க யோசிக்க மெல்ல புருவத்தின் சுழிப்புகள் மறைந்தன.
“ஐ திங்க் யு காட் இட்” என்றான்.
“எஸ், பட் எதுக்கு இதெல்லாம்?”
“லவ்”
“ஓ!”
“உனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு விஷயம் பண்ணிருக்கேன். அதுக்காக லவ் யூ சொல்லேன்” என்று கெஞ்சினான்! அதைக் கண்டு கொள்ளாமல் உணவைக் கொரிக்க ஆரம்பித்தாள்.
“வேணா, நான் ஃபர்ஸ்ட் சொல்றேன். நீ ரிபீட் பண்ணு” என்றவன், “லவ் யூ தாரா” என்றான்.
அவன் காதல் சொல்லும் விதம் கண்டு, “Normal Try” என்று நகைத்தாள்.
“எனக்கும் அப்படித்தான் தோணுது” என அவனும் நகைத்தான். பின், அவளை மருத்துவமனை அனுப்பிவிட்டு அவன் அலுவலகம் சென்றான்.
*************
Good Try
மதிய வேளை. மருத்துவமனை ஓய்வு நேரம் என்பதால் தாரா தன் அறையில் சோஃபாவில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.
கதவு தட்டும் சத்தம் கேட்டதும், “எஸ், கம் இன்” என்றாள். கதவு திறந்ததும் நிமிர்ந்து பார்த்தவள், “ஹே… தேவா நீங்களா? எப்போ வந்தீங்க?” என்றாள் ஆச்சரியமாக!
மூன்று நாட்களாக வேலை நிமித்தமாக தேவா வெளியூர் சென்றிருந்தால், தாராவிடம் இந்த ஆச்சரியம்.
“டூ அவர்ஸ் முன்னாடிதான்” என்றவன், “என் கூட வா, வெளியே போய்ட்டு வரலாம்” என்றான்.
“எங்கே?”
“சொன்னாதான் வருவியா? வா” என்று அவள் கைப் பிடித்து இழுத்து எழுப்ப, கையிலிருந்த புத்தகத்தை வைத்துவிட்டு, “டயர்டா தெரியறீங்க” என்றாள்.
“பரவால்ல! நீ வா. பைவ் தேர்ட்டிக்குள்ள திரும்பி வந்திடலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு… பைக் நிறுத்திய இடத்திற்குக் கூட்டிச் சென்றான்.
அவன் பைக்கை எடுப்பதைப் பார்த்தவள், “பைக்லயா தேவா?” என்றாள்.
“ம்ம்ம்” என்றான் பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டு!
“சான்சே இல்லை” என்றாள் ஏறாமல் நின்று கொண்டு!!
சைகையால், அவளை முன்னே வரச் சொன்னான். அவளும் வந்தாள். “இங்க பாரு தாரா, உனக்கு நல்ல மெமரி பவர். அதுக்காக நான் பேசினதெல்லாம் சொல்லிக் காட்டணும்னு அவசியமேயில்லை. ஓகேவா??” என்று கேட்டான்.
“கொஞ்சம் ஓகே… கொஞ்சம் ஓகே இல்ல”
“இப்போ ஓகே. ஸோ ஏறு” என்றதும், பைக்கின் பின்புறம் ஏறிக் கொண்டாள்.
மருத்துவமனை வளாகத்திலிருந்து அவர்களைச் சுமந்தபடி பைக் வெளியேறி, ஒரு பேருந்து நிறுத்தத்தில் சென்று நின்றது. தாராவை இறங்கச் சொன்னான். அவள் இறங்கிக் கொண்டாள். அருகே டீ கடையில் வண்டியை நிறுத்திவிட்டு, அவளுடன் வந்து நின்றான்.
அவன் எதுவும் சொல்லவில்லை. அவள் எதுவும் கேட்கவில்லை.
பேருந்து வந்தது. இருவரும் ஏறிக் கொண்டார்கள். மதிய வேளை என்பதால், கூட்டம் அதிகமில்லை. ஒரு இருக்கையில் தாரா அமர்ந்ததும், அவளருகில் தேவாவும் அமர வந்தான்.
‘இங்கில்லை’ என்று ஒற்றை விரலால் சைகை செய்து, முன் இருக்கையைக் காட்டி, “அங்க உட்காருங்க” என்றாள்.
“ஹலோ, பேச வேண்டாமா?”
“அங்க உட்கார்ந்து பேசினாலும் எனக்கு கேட்கும்” என்று அலப்பறை செய்தாள்!
“கேட்கும். ஆனா திரும்பிப் பேசினா எனக்கு கழுத்து வலிக்கும்”
“அவ்ளோ பெரிய ஹாஸ்பிட்டல்ல கழுத்து வலிக்கு மெடிசின் கிடைக்காதா?” என்று கேலியாக சொன்னதும், “அன்ஃபேர்” என்று சொல்லிக் கொண்டே, முன் இருக்கையில் சென்று அமர்ந்தான்.
இரண்டு மூன்று முறை பின்னால் திரும்பிப் பேசினான். அதற்குள் நடத்துனர் வந்தார். பயணச்சீட்டு வாங்கிக் கொண்டான். வாங்கியதும் பின்னே திரும்பி தாராவிடம் நீட்டினான்.
‘என்ன?’ என்பது போல் பார்த்தாள்.
“டிக்கெட்! அன்னைக்கு கேட்டியே?” என்றான்.
“செக்கிங் வந்தா என்ன செய்வீங்க?”
“இங்கதான இருக்க… நீ கொடுக்க மாட்டியா?”
“நான் தொலைச்சிட்டேனா? ஞாபகம் இருக்கிறப்ப வாங்கிக்கிறேன்”
“உன்னை” என்று ஆரம்பித்து சட்டென எழுந்து அவளருகில் வந்தமர்ந்தான். அவன் அருகாண்மை பிடித்திருந்ததால் அவள் எதுவும் சொல்லவில்லை.
அடுத்த நிறுத்தம் வந்ததும், இருந்த ஒன்றிரண்டு பிரயாணிகளும் இறங்கிக் கொண்டனர். பேருந்து கிளம்பியதும், “தாரா” என்றான்.
“ம்ம்ம்” என்றாள், எதிர்காற்றால் பறக்கும் முடிகளை எடுத்து விட்டபடி!
“லவ் யூ தாரா” என்று பயணச்சீட்டை நீட்டினான்.
அவள் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தாள். மூன்று வார்த்தைக்காக முயன்று கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது.
“எங்க? நீயும் அப்படியே லவ் யு சொல்லி, டிக்கெட்டை வாங்கிக்கோ” என்றான் எளிதாக!
மெதுவாக கை உயர்த்திக் கொண்டே வந்தாள். இருவிரல்கள் கொண்டு அவன் பிடித்திருக்கும் பயணசீட்டை வாங்கினாள். “தேவா…” என்ற அழைப்பில் அவன் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினாள்.
“ம்ம் சொல்லு” என்றான் ஏக்கமாக!
“good try தேவா” என்றாள் எடக்காக!
“எஸ்கேப் ஆகிற” என்றான் எக்கச்சக்க எரிச்சலுடன்!
அவன் நிலை கண்டு, அவள் சிரித்தாள். அவள் சிரிப்பதைக் கண்டு, அவனும் சிரித்தான். இருவருமே சிரித்தனர். சற்று நேரத்திற்குப் பின், அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
தேவா பேசிக் கொண்டிருந்தான். தாரா கேட்டுக் கொண்டிருந்தாள்.
கேட்பாரற்று கிடக்கும் பேருந்தின் இருக்கைகள்! நண்பகலைத் தாண்டியும், அனலடிக்கும் தார்ச்சாலைகள்! வெப்பக் காற்று வாரி இறைக்கும் புழுதிகள்! இதற்கிடையே, இரைச்சலாய் பேருந்து இயங்கும் சத்தம்!
வழிந்தோடும் தேவா வியர்வை துளியுடன் பேசிக்கொண்டு, அவனது பேச்சின் வாசனையை நுகர்ந்துகொண்டு, மணமுடித்தவனுடன் மதுரமான பிரயாணம் தாராவிற்கு!
************
Crazy Try
மற்றொரு நாள். இரவு ஒன்பது மணி, லவ் பக்கெட் ரெஸ்டாரன்ட். தாராவை இன்று தேவா இங்கே கூட்டி வந்திருந்தான். மேல்தள முகப்பில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.
தலைநகரத்தின் இரவுப் பொழுது. வான் தரையினில், எண்ணிலா விண்மீன் செடிகள் முளைத்திருந்தன. இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, ரெட் வெல்வெட் கேக்கைக் கொண்டு வந்து சிப்பந்தி வைத்து விட்டுப் போனார்.
“ம் சாப்பிடு” என்று கேக் இருந்த பீங்கான் தட்டை, தாரா பக்கம் நகர்த்தினான்.
ஒருமுறை உருக்கும் பார்வைகள் கொண்டு, அவனை உண்டுவிட்டு ஸ்பூனை கையில் எடுத்தாள். வெள்ளையும் சிவப்பும் கலந்திருந்த கேக்கை ஸ்பூனால் எடுத்து உண்ண ஆரம்பித்தாள்.
தாரா ருசித்துச் சாப்பிடும் விதம் கண்டு, “என்ன இப்படி சாப்பிடற?” என்றான் ஒருமாதிரி குரலில். அவன் பேசுவதைக் கண்டுகொள்ளாமல், கேக்கை ரசித்து ருசித்து உண்டு கொண்டிருந்தாள்.
“ஸ்பூனை இப்படி லிக் பண்ற? இந்த கேக் அவ்ளோ பிடிக்குமா?” என்றான்.
‘ம்ம்ம்’ என்று தலையாட்டி, “நீங்க வேணா ட்ரை பண்ணிப் பாருங்க” என்றாள் ஸ்பூனை அவன் முன் நீட்டி!
அவளிடமிருந்து ஸ்பூனை வாங்கிக் கொண்டான். அதன்பின்பு அவன் செய்த செயலைக் கண்டு, “ஹலோ” என அவன் புஜத்தில் செல்லமாகத் தட்டினாள்.
மேலும், “கேக்கை டேஸ்ட் பண்ணச் சொன்னா, ஸ்பூனை டேஸ்ட் பண்றீங்க. யூ கிரேசி” என்று சிரித்தாள். அவள் சொன்னதும் கேக் எடுத்து உண்டான்.
அவன் உண்டு முடித்ததும், “எப்படி இருக்கு?” என்றாள் விருப்பமாக!
“கேக் சுமார்தான். பட், ஸ்பூன் டேஸ்ட்டா இருக்கு” என்றான் விஷமமாக!
முதலில் அவனது விஷமப் பேச்சு அவளுக்கு விளங்கவில்லை. ஆனால் புரிந்தபின், “bad boy” என்றாள்.
“ய்யா ய்யா” என்றவன், ஸ்பூனை அவளிடம் நீட்டினான். அவனிடமிருந்து ஸ்பூனை வாங்கி, மீண்டும் கேக்கை உண்ண ஆரம்பித்தாள்.
“தாரா”
“ம்ம்ம்”
“u y o i o l e v… எங்க இதை அரேஞ்ச் பண்ணிச் சொல்லு” என்றான்.
ஒருகணம் ‘இது என்ன ஆங்கில வார்த்தை?’ என்று யோசித்தாள்.
“க்ளு கொடுக்கிறேன்… த்ரீ லிட்டில் வேர்டஸ், எயிட் லிட்டில் லெட்டர்ஸ்”
‘ஓகோ இதுக்காகத்தானா?’ என்று தயவுதாட்சண்யமே இல்லா ஒரு பார்வை, அவளிடத்தில்! ‘தயவுகூர்’ என அவன் கண்கள் அவளிடம் காதல் வாசகத்தை யாசித்தன!!
தன் டோட் பேக்கிலிருந்து, ‘ஜஸ்ட் எ ரீமைண்டர்: ஐ லவ் யூ’ என்ற புத்தகத்தை எடுத்து மேசையில் வைத்து, “crazy try” என்று மெதுவாக அவன் புறமாக அதை ஒற்றை விறலால் நகர்த்தினாள்.
“அவ்ளோதானா?” என்று அலுத்துக் கொண்டான். பின், புத்தகத்தை எடுத்துக் கொண்டு, அதன் பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தான்.
அவளோ, அவனைப் புரட்டிப் போடும் பார்வைகள் பார்த்திருந்தாள்.
உள்ளுணர்வு உந்த, கண்கள் உயர்த்தினான். பார்வையின் பொருள் மாறாமல் அவனைப் பார்த்துக் கண் சிமிட்டினாள். அவள் செயலில், அவன் சிலாகித்துப் புன்னகை சிந்தினான்.
வான் குடையின் கீழ் காதல் நிலையில் இருவரும்! வாங்கியது இனிக்கிறதா? வாழ்க்கை இனிக்கிறதா? பிரித்தறிய முடியா இன்ப நிலையில் தாரா!
**************
You are the love of my life – Dazzling Try
அன்று ஞாயிற்றுக்கிழமை! தாரா, தேவா இருவரும் வீட்டில் இருந்தனர். அவள் வரவேற்பறையில் இருந்தாள். அவன் பால்கனியில் நின்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
வரவேற்பறையில், மெல்லிய திரைச்சீலைகளின் வழியே மந்த மாருதம் வீசும் மாலை நேரம்! கருப்பு நிற டைல்ஸ்-ன் மேல், சன்னல் வழியே எட்டிப் பார்த்த மஞ்சள் வெயில்!
பெரிய அறையின் நடுவே ஆலிவ் வர்ண கார்பெட் போடப்பட்டிருந்தது. அதில் தாரா அமர்ந்திருந்தாள். சுற்றிலுமே சிறு வெள்ளை வண்ண தலையணைகள். கார்பெட்டின் அருகே வெள்ளை நிறமடிக்கப்பட்ட மண் பாத்திரத்தில் வண்ண வண்ண பூக்கள் மிதந்து கொண்டிருந்தன!
நேட் கிங் கோல், த்ரீ லிட்டில் வேர்ட்ஸ் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்.
முழுதும் கருமை நிறத்தாலான புடவை! வெந்தய நிறத்தில் முந்தானையும் ரவிக்கையும்! மொத்த கூந்தலையும் பிடிப்பானுக்குள் அடக்கியிருந்தாள்! ஒன்றிரண்டு முடிகள் இருபுறமும் தொங்கின!!
கைகளில் மட்டும் ஆடைக்கு ஒத்துப் போகும் வர்ண்ணத்தில் வளையல்கள் அடுக்காய் அணிந்திருந்தாள்! முட்டி மேல் முகம் சாய்த்து, பாடலை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
பேசிவிட்டு உள்ளே நுழைந்த தேவாவின் கண்களில் இவையாவும் விழுந்தன. சில வினாடிகள் சன்னலோரம் சாய்ந்து நின்று ரசித்துவிட்டு, அவள் முன்னே வந்து அமர்ந்தான்.
“பேசியாச்சா தேவா”
“ம்” என்றவன், “இந்த பாட்ட நிறுத்த கூடாதா? என்றான் பிடித்தமில்லாமல்!
“இன்னும் இந்த பாட்டு பிடிக்கலையா?”
“இப்பவும் அனாயிங்தான்” என்றதில் ஆரம்பித்து, சற்று நேரம் அதை இதை என்று எதையோ பேசினார்கள்.
கடைசியில் தாரா, “நீங்க எப்பவும் ஸ்பெக்ஸ் போடறீங்களே, டிஸ்டர்ப்ன்ஸா இருக்காதா?” என்று கேட்டாள்.
சில நொடிகள் யோசித்தவன், “அதை நீதான் சொல்லணும்” என்றான்.
“வாட்? நானா?? நான் எப்படி?” என்று புரியாமல் பார்த்தாள்.
சட்டென்று, அவளருகில் நெருங்கி வந்தான். ‘எதற்காக இப்படி?’ என்பது போல் அசராத பார்வைப் பார்த்தாள். “கிஸ் பண்ணிக்கட்டுமா” என்றான், அவள் முகத்தைச் சுட்டிக் காட்டி! ‘வரவேற்கிறேன்’ என்று அர்த்தத்தில் கண்கள் மூடித் திறந்தாள். அவனுக்கு அர்த்தம் புரிந்தது!
அகத்தினுள் இருந்த மொத்தக் காதலையும், அவள் முகத்தினில் சத்தங்கள் இல்லா முத்தங்கள் வைத்துத் தெரியப்படுத்தினான்.
மந்தகாசம் பேசும் புன்னகையுடன், அவளது மையல் வழிகளைப் பார்த்து, “ஸ்பெக்ஸ் டிஸ்டர்ப்ன்ஸா இருந்ததா??” என்றான்!
“இல்லை” என்றாள் சாதரணமாக!
“அதெப்படி கம்பேர் பண்ணாம சொல்ல முடியும்?” என்று கண்ணாடியைக் கழட்டினான். அவன் விருப்பம் அவளுக்கு விளங்கியது.
“இன்னொரு தடவை ம்ம்??” என்று அவளிடம் அனுமதி கேட்டான். ‘தாராளமாக’ என்பது போல் புருவங்களை உயரச் செய்தாள்.
இப்பொழுது அவள் முகத்தினில் சத்தங்கள் எழுப்பும் முத்தங்கள் வைத்தான். முத்தத்தைத் தொடர்ந்தவன் அனுமதி கோராமால் அவள் அதரத்தின் அருகே நெருங்கினான்.
சட்டென உள்ளங்கை கொண்டு, அவன் உதடுகளைத் தடுத்து நிறுத்தினாள். ‘ஏன்?’ என்று கேள்வி கேட்டன அவன் விழிகள்.
“ஒன்னு கேட்கணும் தேவா”
“இப்பவா?”
“ம்ம்ம்”
“சரி கேளு”
“த்ரீ லிட்டில் வேர்ட் பாட்டு அனாயிங்கா?” என்று, தன் விழியருகில் இருக்கும் அவன் விழியிடத்து வினா எழுப்பினாள்.
ஒரு நொடி மௌனம் நிலவியது! பின், அவள் கரத்தை விலக்கிவிட்டு, “இதைக் கேட்க வேற நேரமே கிடைக்கலையா?” என்றான் முறுவலுடன்!
‘இல்லை’ எனத் தலையசைத்து உதட்டிற்குள் சிரித்தாள்.
“அன்ஃபேர்” என அவள் தோளில் முகம் புதைத்துச் சிரிக்கத் தொடங்கினான்.
அவனளவு இல்லையென்றாலும் அவளும் சிரித்தாள். இருந்தும், “தேவா, பதில் சொல்லுங்க” என்றாள்.
“நல்லா கேட்டுக்கோ…” என்றவன், ஒரு நிமிடத்திற்குப் பாடலைப் பாராட்டித் தள்ளினான். கடைசியில், “இட்ஸ் ஆன் அமேசிங் சாங்” என்று முடித்தான்.
‘அனாயிங்’… ‘அமேசிங்’ ஆனதால், அன்பிற்குரியவர்கள் அதரங்கள் அநியாயத்திற்கு அந்நியோன்யம் ஆயின! அதிக நேரத்திற்கு!! ஆம் அதிக நேரத்திற்குத்தான்!!!
அந்த அதிக நேரம் கழித்து, “ஸ்பெக்ஸ் டிஸ்டர்ப்ன்ஸா இருந்ததா?” என்றான் சாதரணமான குரலில்!
“நீங்க லாஸ்ட்டா கிஸ் பண்றப்ப ஸ்பெக்ஸ் போடலயே தேவா. அப்புறம் எப்படிச் சொல்ல முடியும்?” என்றாள் அவனைவிட சாதரணமான குரலில்!
“தாரா தாரா” என சிரித்தான். அவளும் சிரித்தாள்.
“ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு” என்று அறைக்குள் போனவன், திரும்பி வந்து அவளருகே அமர்ந்தான். “அந்த மோதிரத்த கழட்டு” என்றான், அவள் ரகசியம் மறைக்கும் மோதிரத்தைப் பார்த்து.
மோதிரத்தைக் கழட்டினாள். நகப்பூச்சு இடப்பட்ட விரலை, அவன் முன்னே நீட்டினாள். மோதிர விரலில், அவனது பெயர் டாட்டூவாக! ஒருகணம் அவன் உடல் சிலிர்த்தது!!
‘இதுல எனக்குப் பிடிச்ச விஷயம் இருக்கு’ என அவள் சொன்னது ஞாபகத்தில் வந்தது. கழுத்து நரம்புகள் புடைக்க உணர்ச்சிவசப்பட்டு, அவளது காதலை ரசித்தான். அவள் விரல் பிடித்து மோதிரம் அணிவித்தான்.
அவள் நெற்றியில் முத்தமிட்டு, “யூ ஆர் தே லவ் ஆஃப் மை லைஃப்” என்றான்!
“Dazzling try” என்று மட்டும் சொன்னாள். அதன்பின், அவளது கவனம் முழுதும் அந்த மோதிரத்தின் மேல்தான்.
“பிடிச்சிருக்கா?”
“ரொம்ப! இதான் உங்க லவ்வருக்கு, நீங்க வாங்கினதா சொன்ன ரிங்கா?”
“ஹலோ! உனக்குப் ப்ரோபோஸ் பண்ணிட்டு, அதை வச்சிருப்பேனா?” என்று சொன்னதும், கங்குகரையில்லா காதலைக் காட்டி அவனைப் பார்த்தாள்
“இது உனக்காக வாங்கினது” என்றான் அந்தக் காதலை கௌரவப்படுத்தும் விதமாக! அவனது தோள் வளைவினில் முகம் புதைத்தாள். வாகாக தோள் சாய்ந்திருந்தளை… வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தான்.
**********
மாலை 5:30யைத் தாண்டி நேரம் சென்று கொண்டிருந்தது.
இன்று தாரா, தேவா திருமண வரவேற்பு நிகழ்ச்சி. வேலை விடயமாக மூன்று நாள்கள் வெளியூர் சென்ற தேவா, இன்று திரும்புகிறான். அவன் வரவிற்காக, தாரா காத்திருந்தாள்.
அந்தநேரத்தில் தன்னை வரவேற்பிற்காக தயார் செய்து கொண்டிருந்தாள். சற்றுநேரத்தில் அழைப்பு மணி ஓசைக் கேட்டதும், ஓடிச் சென்று கதவைத் திறந்தாள். தேவாதான்!
“ஹாய்” என்று வீட்டிற்குள் வந்தான்.
சட்டென்று கட்டி அணைக்க போனவளிடம், “முதல ரெப்பிரேஷ் பண்ணிட்டு வர்றேன்” என்று அறைக்குள் சென்றுவிட்டான்.
சில நொடிகள் கடந்தபின், “கிளம்பலாமா தாரா?” என்று கேட்டுக் கொண்டே, அவளருகில் வந்து நின்றான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன அப்படிப் பார்க்கிற?”
“ஐ கேனாட் டேக் மை ஐஸ் ஆஃப் யூ” என்றாள் ரசிப்புடன்.
சிரித்துக் கொண்டான்! தன் கரங்கள் எடுத்து, அவன் கழுத்தோடு கோர்த்துக் கொண்டு, “மிஸ் யூ ஸோ மச்” என்றாள். பின்னர் அவனது கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
“லவ் யூ-க்கே வழியில்லை… இதுல மிஸ் யூ!!” என்று சலித்துக் கொண்டு, அவள் கைகளைப் பிரித்துவிட்டான்.
முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த வருத்தம் தேவாவிற்கு! மேலும், “கிளம்பலாம்” என்று வெளியே சென்று நின்றான். அவளும் வெளியே வந்தாள். நான்கைந்து அடிகள் நடந்து வந்து, இருவரும் மின்தூக்கியில் ஏறினர்.
தளம் : 20
மின்தூக்கி உள்ளே! நல்ல விசாலமாக இடமிருந்தது. இருவரும் ஆளுக்கொரு மூலையில் நின்றனர். அவளது கவனம் முவழுதும் அவனிடம்! அவனது கவனம் முழுதும் அலைபேசியிடம்!
“தேவா”
“ம்ம்ம், சொல்லு” என்றான் தலையை நிமிர்த்தாமல்!
மூன்று நாட்களுக்குப் பின் வந்தும் முகம் பார்க்காமல் பேசுபவனைக் கண்டு எரிச்சல் வந்தது. “தேவா” என்று அழுத்தி அழைத்தாள்.
“சொல்லு தாரா… கேட்க்கிறேன்” என்றான் அசராமல்!
“நான் எப்படி இருக்கேன்னு, சொல்லவேயில்லை?” என்றவள் குரலில் கோபம் தெரிந்தது.
ஒருமுறை அவளை முழுவதும் கிரகித்தவன், “ஹீல்ஸ் போடலயா?” என்றான்.
“இந்த ஸேரிக்கு ஹீல்ஸ் சூட் ஆகாது”
“ஓ!”
“என்ன ‘ஓ!’ நான் எப்படி இருக்கேன்னு சொல்லுங்க?” என்றாள் படபடவென்று, அவன் அலைபேசியைப் பிடுங்கிக் கொண்டே! அக்கணம், மின்தூக்கி நின்று திறந்தது.
தளம் : 15
அத்தளத்தில் இரண்டு பேர் ஏறினர். ‘இனி எப்படிப் பேச?’ என நினைத்த தாரா அமைதியானாள். அலைபேசியை அவனிடம் கொடுத்து, அவன் அருகிலே நின்று கொண்டாள்.
இரண்டு நொடிகள் கழித்து, “இப்போ பதில் செல்லவா??” என்றான், அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்! ‘சொல்லுங்க’ என்று தலையை மட்டும் அசைத்தாள்.
முன் நிற்பவர்களை ஒருமுறை பார்த்தான். பின் அவள் செவியருகே குனிந்து, “நீ பிளைன் ஸேரி கட்டினா… எனக்கு ரொம்ப பிடிக்கும்!” என்றான்.
தாராவின் எண்ணத்தில்… அன்று மழை நாளில், ‘அழகா இருக்க’ என்று தேவா சொன்னது, கேஃபேயில் தேவா பார்வைகள், வீட்டினுள்ளே தேவா முத்தங்கள், என்று வேலைப்பாடில்லா புடவை கட்டிய நாட்களில்… அவனது செய்கைகள் ஞாபகத்தில் வந்து போயின!
கடைசியில் இன்றும்!!
ஆம்! இன்று கடற்கரை மணல் வர்ணத்தில், வேலைப்பாடுகள் இல்லா புடவை! காஃபி கொட்டை நிற புடவையின் கரைகள்! உதடுகளின் சாயங்கள் தாண்டா சிரிப்பு ஒன்றை அவள் சிரித்தாள்.
இது, தன் பேச்சின் மாயங்கள் என்றுணர்ந்து, அவனும் மௌனமாக புன்னகை புரிந்தான். மின்தூக்கி மீண்டும் நின்றது.
தளம் : 12.
மேலும் இருவர் ஏறிக் கொண்டனர். ஆட்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், இப்பொழுது இடம் விசாலமானதாகத் தெரியவில்லை. மின்தூக்கி கீழிறங்க ஆரம்பித்தது.
“தேவா”
“ம்ம்ம்” என்றான் அவளை நோக்கி!
உள்ளங்கையால் உதட்டினை மறைத்துக் கொண்டு, “லவ் யூ தேவா” என்றாள், உமி பறக்கும் ஓசையில்! வேறுபுறம் திரும்பிக் கொண்டான். கேட்டவன் மனம் உல்லாசமாய் குதித்தது.
பின் குனிந்து, “இத சொல்றதுக்கு வேற இடமே கிடைக்கலையா?” என்றான் மெல்லிய குரலில்!
முன்னே நிற்பவர்களைப் பார்த்தாள். அனைவரும் அலைபேசியில் அமிழ்ந்து இருந்தனர். தேவாவைப் பார்த்து, “லவ் யூ தேவா” என்றாள் மீண்டும் மிதமான குரலில்!!
இக்கணம் மின்தூக்கி நின்றது.
தளம் : 9.
மேலும் ஒருவர் ஏறிக் கொண்டார். மின்தூக்கி கீழிறங்க ஆரம்பித்தது.
“தாரா” என்று தாழ்ந்த குரலில் அழைத்ததும், அவள் திரும்பினாள்.
“ஹீல்ஸ் போட்டிருக்கலாம்ல! கண்ணை பார்த்துச் சொல்லிருப்ப” என்று கிசுகிசுத்தான்!
அவனைக் குனிய சொல்லி சைகை செய்தாள். அவனும் லேசாக குனிந்தான். “இதெல்லாம் கண்ணைப் பார்த்து சொல்லக் கூடாது. ஹார்ட்டைப் பார்த்துச் சொல்லணும்” என்றாள், குனிந்தவன் காதிற்குள் ரகசியமாக!
நிமிர்ந்து கொண்டே, “அது சரி” என்றான் லேசான சிரிப்புடன்!
“லவ் யூ தேவானு சொல்றேன். ஒரு ரியாக்ஷனும் இல்லை”
“ரியாக்ஷன் எதுக்கு தாரா? ரீவார்டே தர்றேன். இதுக்காகதான் இத்தனை நாள் வெயிட் பண்ணேன். பட், வீட்டுக்கு வந்தப்புறம்” என்றான் கவனமாக! முன்னே நிற்பவர்கள் காதில் விழாதபடி!!
“வாவ் தேவா!” என்றாள் களிப்புடன்! முன் நிற்பவர்கள் காதிற்கு கேட்கும்படி!
அங்கிருந்த ஆட்கள் அனைவரும் அலைபேசியை விட்டுவிட்டு, ‘என்னாயிற்று இந்தப் பெண்ணிற்கு?’ என்பது போல் அவளைத் திரும்பிப் பார்த்தனர். ‘ஏன் இப்படி?’ என்பது போல் தேவாவும் பார்த்தான்.
‘ஐயோ’ என்றிருந்தது தாராவிற்கு!
“ஸாரி ஸாரி” என்று பொதுவாக கேட்டுவிட்டுக் குனிந்து கொண்டாள்.
முன்னே நின்றவர்கள்… மீண்டும் அலைபேசியைப் பார்க்க ஆரம்பித்தனர். உள்ளுக்குள் உருண்டு புரண்டு சிரிக்கிறான் என்பதை, தேவா உடல்மொழி சொன்னது.
அதன்பின் தாரா மௌனமானாள்! வாய் திறக்கவில்லை, தரைத்தளம் வரும் வரை!! கீழே வந்து, அனைவரும் இறங்கிச் சென்ற பின்னர்… சத்தமாக தேவா சிரிக்க ஆரம்பித்தான்.
அவளும் சிரித்தபடியே, “லவ் யூ தேவா” என்றாள் தித்திப்பாய், அவன் முகம் பார்த்து! அந்த தித்திப்பில் திளைத்தவன், “லவ் யூ தாரா” என்றான், அவள் முகம் பார்த்து! சிரித்தபடி இருவரும் கிளம்பினர்.
திருமணம் முடிந்தபின்… நிறைய முறை ராஜசேகர், சரத், ஜெகனை தேவா சந்தித்துவிட்டான். இதுதான் முதல் முறை கீதாவைச் சந்திக்கப்போவது!

