Kathambari Novels
நேற்றே கேட்பான் என்று எதிர்பார்த்தக் கேள்வி, இன்று கேட்கிறான் என்று நினைத்தாள் தாரா. ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.
“தாரா, பதில் சொல்லு” என்று சரத்தின் குரல் அழுத்தமாக ஒலிக்கவும், மற்ற மூவரும் தாராவைப் பார்த்தனர்.
“சாரு மேரேஜ்க்கு போயிருந்தேன்” என்றாள் சாப்பிட்டுக் கொண்டே.
“இது தெரியும்ல சரத். அப்புறம் ஏன் கேட்கிற” என்று ராஜசேகர் தாராவிற்குப் பரிந்து கொண்டு வந்தார்.
“மேரேஜ் காலைலதான? அப்புறம் ஏன் மத்தியானம் நடந்த மீட்டிங் அட்டன் பண்ணலை?” என்று சரத் அடுத்தக் கேள்வி கேட்டான்.
“வெதர் நல்லா இருந்தது. கொஞ்ச நேரம் கார்ல ரைட் போயிருந்தேன்”
“மீட்டிங் இருக்குனு தெரிஞ்சும், ரைடு போற அளவுக்கு அப்படி என்ன அவசியம் வந்தது?” – சரத்.
அமைதியாக இருந்தாள் தாரா.
“அவன் கேட்கிறான்ல பதில் சொல்லு” என்று கீதா சரத்திற்காகப் பேசினார்.
தாராவையே பார்த்துக் கொண்டிருந்த ராஜசேகர், “சாப்பிடறப்ப சாப்பிட விடு. எதுக்கு இத்தனை கேள்வி கேட்கிற. அப்படி கேட்கணும்னா, ஹாஸ்பிட்டல்ல வச்சி கேளு சரத்” என்று அழுத்தமாகச் சொல்லி, அவனை அடக்கிவிட்டார்.
ஐந்து நிமிடத்திற்கு அங்கே யாரும் யாரையும் பார்க்காமல், எதுவும் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
தாரா, “கிளம்புறேன்மா” என்று எழுந்து கொள்ள போக, “ஒரு நிமிஷம் நில்லு” என்ற கீதா, அலைபேசியில் ஒரு புகைப்படத்தை எடுத்துக் காட்டினார்.
இது வழக்கமாயிற்று! இந்த பதினைந்து நாட்களில், இது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நிகழ்கிறது. அவர் சளைக்காமல் பையன் புகைப்படம் காட்டுவதும், அவள் சலிப்புடன் மறுப்பதும்… தொடர்கிறது.
இன்றும் அதே! ஒரு நொடி பார்த்துவிட்டு, மறுத்துச் சென்றுவிட்டாள்.
**********
நாட்காட்டியில் ஒரு ஆறு நாட்கள் நகர்ந்திருந்தன.
தாராவும் தேவாவும் கிடைக்கும் சொற்ப நேரங்களில் அலைபேசியில் பேசிக் கொண்டார்கள். பல நேரங்களில் அவனிடம் தாரா முற்றிலும் காதலாய் பேச ஆரம்பித்திருந்தாள்!
அந்த நேரங்களில் மிகக் கவனத்துடன் பேசினான் தேவா. காதல் ஆசையில், அவள் கொஞ்சம் அதிகப்படியாகப் பேசினால், அவன் அமைதியாகக் கடந்து சென்றான்.
‘என்று இவன் தன்னிடம் இப்படிப் பேசுவான்?’ என்ற காதல் ஏக்கம் தாராவிற்கு வந்திருந்நது!!
நேரச் செலவிடல்கள் இருந்தாலும்… தேவா கூறப் போகும் ஒரு வார்த்தையில் மட்டுமே நிரம்ப வேண்டும் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது. – காதல் உண்டியல் is feeling silly with காதல் உண்டியல்.
நாள்காட்டியில் அடுத்து ஒரு இரண்டு நாள்கள் கழிந்திருந்தன. அன்று ஞாயிற்றுக்கிழமை. காலையில் மருத்துவமனை சென்று வந்திருந்த தாரா, மதியம் வீட்டில் இருந்தாள்.
அந்தநேரம் கீதா வந்தார். ஓய்வில் இருந்தவளிடம் வந்து, ஓயாமல் திருமணம் செய்து கொள் என்று வற்புறுத்தினார். சிலநேரம் அவள் மெனக்கெடல் செய்து பதிலளித்தாள். பல நேரம் மௌனமாய் இருந்து பதில் மறுத்தாள்.
மொத்தத்தில் கீதா பேசியதில் தாரா ஓய்ந்து போயிருந்தாள். அவர் போனதும், தாராவிற்கு தேவாவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அது ஓய்ந்து போன மனதிற்கு ஒத்தடம் கொடுப்பது போல் அல்லவா!
எண்ணம் வந்ததும் அம்மாவிடம் சென்று, ‘கொஞ்ச நேரம் வெளியே போய்ட்டு வர்றேன்’ என்றாள். அவர் நிறையவே கேள்விகள் கேட்டார். அதையெல்லாம் சமாளித்துவிட்டே அவளால் கிளம்ப முடிந்தது.
தேவா அலுவலகம் இருக்கும் கட்டிடத்தின் கீழே வந்துவிட்டு, தாரா ஒருகணம் தயங்கினாள். தேவா வேலை பளுவில் இருந்தால் என்ன செய்ய என்ற தயக்கம். இவ்வளவு தூரம் வந்தாயிற்று பார்த்துவிட்டே செல்லலாம் என்று மெதுவாகப் படியேறினாள்.
அதே ஒற்றை வழிப்பாதை படிக்கட்டுகள். பின், அவன் வசிக்கும் தளம். அந்த தளத்தின் நடைகூடத்தில் நடந்து வந்தவளுக்கு, தேவா அலுவலகம் முன்னே, மிஸ்டர் அண்ட் மிஸஸ் பாஸ்கர் தம்பதியினர் நிற்பது தெரிந்தது.
‘இன்று ஏன் இவர்கள் நிற்கிறார்கள்?’ என்று யோசித்துக் கொண்டே அருகில் சென்றாள். அவர்களைப் பார்த்ததும், தெரிந்தவர்கள் என்ற ஸ்நேகத்தில் ஒரு புன்னகையும் தந்தாள்.
“குட் ஆஃப்டர்நூன் தாரா” என்றார்கள்.
“குட் ஆஃப்டர்நூன்” என்று சொன்னாள்.
“என்ன விஷயம்?”
“அது…” என்றவள், தேவா அலுவலகத்தைக் காட்டி, “பார்க்கணும்” என்றாள்.
“எதும் டொனேஷன் இல்லனா கேம்ப் விஷயமாவா”
“இல்லை. சும்மாதான்” என்றாள்.
அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மிஸஸ் பாஸ்கர் பேச ஆரம்பித்தார். “லிஸன் தாரா! நீயும் தேவாவும் பேசறது, எங்களுக்குத் தெரியும். ஆனா அதலாம் அவன் ஃபிரீ டைம்ல இருக்கனும். வேலை நேரத்தில இருக்க கூடாது” என்றார் கறாராக!
“இப்போ தேவா…” என்றாள் கேள்வியாக!
“ஒரு நியூஸ் சேனல் இன்டெர்வியூல இருக்கான். அதுக்கப்புறம் முக்கியமான வேலை இருக்கு”
“ஓ!” என்று சொன்னவளுக்கு ஒரு மாதிரி ஆயிற்று!
“இப்படிச் சொல்றோம்னு எங்களைத் தப்பா நினைக்காத, வேலை நேரத்தில இனி அவனை டிஸ்டர்ப் பண்ணாத” என்று சொல்லி முடித்தார்.
“ஸாரி. ஹாலிடே, ஸோ தேவா ஃப்ரீயா இருப்பாங்கன்னு நினைச்சேன்” என்று திரும்பி நடக்க ஆரம்பித்தாள். அவர்கள் சொல்லுவது சரியென தோன்றியது. எவ்வித வாக்குவாதமும் செய்யாமல் அங்கிருந்து கிளம்பினாள்.
அவள் சென்றதும், பாஸ்கர் தம்பதிகள் அலுவலகத்தின் உள்ளே சென்றனர்.
அவர்கள் சொன்னது போல் செய்தி தொலைக்காட்சிக்கான நேர்காணலில் இருந்தான். மொத்த நேர்காணலும் கல்விச்சுமை மற்றும் சிறப்பு வகுப்புகள் பற்றியது. நேர்காணல் முடிந்துவிட்டது.
“ஓகேவா” என்று கேட்டான்.
“ஓகே தேவா” என்று அவனிடம் சிலதைக் காட்டினார்கள்.
“பாடப் புத்தகங்களே வழிவிடுங்கள் மாணாக்கர்கள் முன்னேறி செல்லட்டும்! இப்படி கேப்ஷன் போட்டுக்கோங்க” என்று கேட்டுக் கொண்டான்.
“ஓகே தேவா” என்று கிளம்பத் தயாரானார்கள்.
இதற்கிடையில் பாஸ்கர் தம்பதிகள் அவனருகில் வர, “முடிஞ்சிருச்சு அங்கிள். பத்து நிமிசத்தில நாம கிளம்பிடலாம்” என்றான்.
‘சரி’ என்று மிஸ்டர் பாஸ்கர் தலையாட்டினார். “ஏன் தேவா, அந்த டாக்டரை வரச் சொல்லியிருந்தியா?” என்றார்.
பேட்டி எடுத்தவர்கள் தேவாவிடம் சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டனர். அவர்களைப் பார்த்திருந்தவன், “என்ன கேட்கிறீங்க அங்கிள், நான் சரியா கவனிக்கல” என்று கேட்டபடி சில கோப்புகளை எடுத்து வைத்தான்.
“தாராவை வரச் சொல்லிருந்தியா? அததான் கேட்கிறாரு!” – மிஸஸ் பாஸ்கர்.
“இல்லயே ஆன்ட்டி. ஏன் கேட்கிறீங்க?”
“அவ வந்திருந்தா”
“இங்கேயா அங்கிள்”
“ம்ம்ம்”
“இப்போ எங்க?”
“உனக்கு இன்டெர்வியூ போய்கிட்டிருக்கு. டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு சொன்னோம். அவ கிளம்பிட்டா”
“டிஸ்டர்ப்… ஏன் வார்த்தைலாம் சொல்றீங்க ஆன்ட்டி? அதுவும் தாராக்கிட்ட போய்” என்று ஒரு கடுகளவு கோபத்தை முகத்தில் காட்டினான்.
‘டீசன்டா அவாய்ட் பண்றேன்’ என்று சொன்னவனா இவன் என்பது போல், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
“அங்கிள், எல்லாம் எடுத்து வச்சிட்டேன். கொஞ்சம் டைம் கொடுங்க” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென வெளியேறினான்.
அவன் சென்றதும், “பாஸ்கர், “ஐ திங்க் தேவா, தாராவை லவ் பண்றான். இல்லையா?” என்றார் மிஸஸ் பாஸ்கர்.
“எஸ், யூ ஆர் கரெக்ட்” என்று சொல்லிவிட்டு, அடுத்து கிளம்ப வேண்டிய இடத்திற்கு ஆயத்தமாயினர்.
வெளியே சென்ற தேவா, அவன் வசிக்கும் தளத்தின் படிக்கட்டு வழியே கீழே பார்த்தான். இரண்டாவது தளத்தின் படிக்கட்டுகளில் அவள் இறங்கிப் போவது தெரிந்தது. கடகடவென்று இறங்க ஆரம்பித்தான். மூன்று நொடிகளில் ஓடி வந்தவன், அவள் முன் மூச்சு வாங்கியபடி முகத்தைக் காட்டி நின்றான்.
சீராக விட முடியாத சுவாசங்களின் ஊடே சிரித்தான். சின்னதாய் ஒரு சிரிப்பு சிரித்து, அவனைக் கடக்கப் போனாள்.
சட்டெனக் கைநீட்டி பாதையை மறைத்து, “என்னய பார்க்கத்தான வந்தீங்க. அப்புறம் ஏன் பார்க்காம போறீங்க?” என்றான்.
“இதோ” என்று அவனைக் காட்டி, “பார்த்துட்டேன்ல. அதான் போறேன்” என்று அவன் கரத்தைத் தட்டிவிட்டாள்.
“பேச வேண்டாமா?” என்று மீண்டும் பாதையின் குறுக்கே வந்து நின்றான்.
அக்கணம், ‘எப்போ பார்த்தாலும் படிக்கட்டுலயே நிக்கிறது. லவ் பண்ண வேற இடம் கிடைக்கலையா? வழிவிடுங்க” என்றொரு குரல்.
யாரிது? முதல் முதலாக தாரா தேவாவைப் பார்க்க வரும்போது, இதேமாதிரி படிக்கட்டில் அவள் கைபிடித்து நின்றானே! அப்போது கூட நான்கைந்து பேர் கடந்து சென்றார்களே! அவர்களில் ஒருவர்!!
அவர் அப்படிச் சொன்னதும் இருவரும் ஒதுங்கி நின்று வழிவிட்டார்கள்.
அவர் சென்றதும்… சிரித்துக் கொண்டே தேவா, “நாம ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு தப்பா நினைச்சிட்டாரு” என்றான்.
“அவர் நினைச்சதுல பாதி சரிதான” என்று படி இறங்கினாள்.
அவள் பின்னேயே அவனும் இறங்கினான். இருவரும் கட்டிடத்தின் வெளியே வந்தார்கள். பூட்டிய ஒரு கடை முன்பு நின்று கொண்டார்கள். அவள் முகமே சரியில்லாதது போல் இருந்தது.
“என்னாச்சு தாரா?”
‘ஒன்றுமில்லை’ என்பது போன்று இருபுறமும் தலையசைத்தாள்.
“அங்கிள் ஆன்ட்டி சொன்னதை நினைச்சி பீல் பண்றீங்களா?”
“அவங்க சொன்னது கரெக்ட்தான?” என்று சொல்லிவிட்டு, வேறு திசை நோக்கி பார்வையைத் திருப்பிக் கொண்டாள். ‘இன்னும் எத்தனை நாள்தான் இப்படி?’ என்ற எண்ணம் தாராவின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
வேறெங்குமே பார்வையைச் செலுத்தாமல்… அவளையே பார்த்தான். “தாரா, எனக்கு ரெண்டு நாள் டைம் கொடுங்க. நான் உங்க விஷயத்தில ஒரு முடிவெடுக்கிறேன்” என்றான், அவள் மனதை படித்தவனாக!
“என்ன முடிவு?” என்று அவனிடம் பார்வையைத் திருப்பினாள்.
“எனக்காக… தாரா யார்கிட்டயும் பேச்சுக் கேட்க கூடாது. அன்னைக்கு சரத் கேள்வி கேட்டாருன்னு சொன்னீங்க. இன்னைக்கு அங்கிள் ஆன்ட்டி… இப்படி. எனக்கு அது பிடிக்கலை”
“… “
“திரும்பத் திரும்ப ஃபோன்ல பேசறது, மீட் பண்ணிக்கிறது… இது எல்லாம் உங்க எதிர்பார்ப்ப அதிகப்படுத்தும். கரெக்டா?”
“… “
தீர்க்கமாக, “ஆமா, இல்ல… இது ரெண்டுல ஏதாவது ஒரு பாயின்ட்ல நான் தெளிவா இருக்கணும்” என்றான்!
“என்… என்னைப் பிடிக்கலையா?” என்றாள் தயக்கத்துடன்.
ஓரிரு நொடி தாமதத்திற்குப் பின், “தாராவ தேவாக்கு பிடிச்சிருக்கு” என்றான்.
தடாலென்று… தேவாவைக் கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டும் என்றொரு காதல் ஆசை தாராவினுள் வந்து சென்றது!
“ஆனா லைஃப் பார்ட்னர், மேரேஜ்… அப்படினு வர்றப்போ… நான் கொஞ்சம் யோசிக்கணும்” என்றான்.
“ம்ம்ம்”
“உண்மையா சொல்லனும்னா, நான் மேரேஜ் வேண்டாம்னு இருந்தேன். பட், லவ்… லவ் பெயிலியர்… இதலாம் எதிபார்க்கவேயில்லை. நீங்களா எதையும் எக்ஸ்பெக்ட் பண்ணிக்காதீங்க. நான் முடிவெடுத்திட்டு கால் பண்றேன்”
“ம்” என்றாள் தாரா. அப்போது மிஸ்டர் பாஸ்கர், ‘தேவா’ என்றுஅழைத்தார். திரும்பிப் பார்த்தான். “தேவா, நாங்க ரெடி” என்றார்.
“ஒரு நிமிசம் ஆன்ட்டி” என்றவன், “தாரா, ரொம்பவே முக்கியமான விஷயமா போறோம். சில லேன்ட் இஸ்யூஸ் அன்ட் பிள்ளைங்களோட படிப்பு! கொஞ்சம் அரசியல்… கொஞ்சம் அரசாங்கம்… நிறைய ஆர்க்யூமென்ட்ஸ்… இதெல்லாம் பார்க்கணும்” என்று கடகடவென சொன்னான்.
மீண்டும், “தேவா” என்று மிஸஸ் பாஸ்கர் அழைத்தார்.
“இதோ வர்றேன் ஆன்ட்டி” என்றவன், “ஆக்ச்சுவலா… ஒரு ரெண்டு நாள் இந்த வேலையா அலையனும். அதான் டைம் கேட்டேன்” என்றான் படபடவென்று.
“பாரவாயில்ல தேவா”
பின்னால் காத்திருக்கும் பாஸ்கர் தம்பதியினரைப் பார்த்தவாரு, “ஏன் என்னய பார்க்க வந்தீங்க? வீட்ல மேரேஜுக்கு ஃபோர்ஸ் பண்றங்களா?” என்றான்.
அவளிடமிருந்து பதில் வாராமல் போனதால், நிதானமாக அவளைத் திரும்பிப் பார்த்தான். அவள் தோற்றம் கண்டவன், “கஷ்டமாயிருக்கா? ஸாரி கண்டிப்பா போயாகனும்” என்றான், அவள் தலைகோதி தேற்றும் தொனியில்.
தாரா சுதாரித்துக் கொண்டாள். ஒதுங்கி நின்று ஒத்துழைப்பு தருவது தானே தன் காதல்! இது என்ன ஒத்துழையாமை இயக்கம்!
“உங்ககூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னுதான் வந்தேன் தேவா. அதனால கஷ்டமாதான் இருக்கு. பட் நீங்க அங்க போகலனா…. இதவிட கஷ்டப்படுவேன். வேலை முடிச்சிட்டு வாங்க. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம வெயிட் பண்றேன்” என்று தன் காதலைத் தெளிவுபடுத்தி, அதைத் தெரியவும் படுத்தினாள்.
அவன் முகத்தில் ஒரு திருப்தி!
“ஒரே ஒரு ரெக்வஸ்ட்” என்றாள்.
“சொல்லுங்க”
“கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க”
“ம்ம் ஓகே! ஆனா சின்ன வயசிலருந்தே எனக்கு இது பழகிருச்சி தாரா”
“ஓ!” என்றாள் ஒன்றும் தெரியாதவள் போல!
மீண்டுமொரு முறை அவனை அழைத்தனர்.
“போங்க, நான் வெயிட் பண்றேன்” என்று அவனை வழி அனுப்பி வைத்தாள்.
அவர்கள் சென்றதும் தாராவும் கிளம்பினாள்.
மருத்துவமனை, அடுத்த நாள்!
தாரா பதற்றமாக இருந்தாள். காலையிலே ஒரு மருத்துவருடன் அவளுக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது. இது ஒரு சில நேரங்களில் நிகழ்வதுதான். அவளுக்கு இது புதிதல்ல! ஆனால் இன்று கருத்து வேறுபாடு வந்திருந்தது, குழந்தைகள் நலப் பிரிவில் இருக்கும் ஒரு மருத்துவரிடம்.
நிச்சயம் சரத்தின் காதுகளுக்கு விடயம் சென்றிருக்கும். தன்னிடம், அவன் கேள்வி கேட்பான்! அப்படிக் கேட்டால் பொறுமையாக, கோபப்படாமல் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.
பதினைந்து நிமிடங்கள் கழித்து அலைபேசி அழைத்தது. திரையில் சரத்தின் பெயர்! “ஹலோ” என்றாள் அழைப்பை ஏற்று.
“எங்க இருக்க?”
“ரூம்ல”
“கொஞ்சம் பேசணும். வா” என்று சொல்லி வைத்துவிட்டான்.
எட்டாவது தளம் சென்று, சரத்தின் அறைக் கதவைத் தட்டினாள். “ம் வா” என்ற குரல் வந்ததும், உள்ளே போனாள். சைகையிலே ‘உட்காரு’ என்று சொன்னான். அவளும் அமர்ந்துகொண்டாள்.
“நீ எதுக்கு வேற டிபார்ட்மென்ட் டாக்டர்ஸ்க்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கிற?”
எடுத்தவுடன் கேள்வி! தாராவிற்கு எரிச்சல் தந்தது. மேலும் அது கேட்கப்பட்ட முறை… அவளுக்குக் கோபத்தை வரவழைத்தது.
“அந்த பேபிக்கு இன்குபேட்டர் சப்போர்ட் தேவையில்ல. அதான் சொன்னேன்”
“நீ gynecologist-தான?? Pediatric gynecologist இல்லைல?”
இந்தக் கேள்வியில் இருவருக்கும் வாக்குவாதம் ஆரம்பித்தது! அது தொடர்ந்து தொடர்ந்து… கடைசியில், “நான் மேனேஜ்மென்ட் பெர்சன் சரத்” என்று தாரா சொன்னதில் வந்து நின்றது.
“ஓ, மேனேஜ்மென்ட் பெர்சன்! அதுக்கு டாக்டர்ஸ் மீட்டிங் அட்டன் பண்ணனும், ‘என் சர்வீஸ்’ இந்த ஹாஸ்பிட்டல்ல மட்டும்னு இருக்கணும்”
எதைச் சொல்கிறான் என்று புரிந்தது! அவள் கட்டிவரும் மருத்துவமனையை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறான்! இன்று இதற்கு ஒரு முடிவு தெரிந்தே ஆகவேண்டும் என்ற முடிவில் தாரா இருந்தாள்.
“என்ன சைலன்டா இருக்க, இப்போ பேசு”
“நான் இந்த ஹாஸ்பிட்டல்ல சர்வீஸ் பண்றது உனக்குப் பிடிக்கலயா?”
“என்ன கேட்டா… என்ன சொல்ற?” என்றவன் குரலில் எரிச்சல் இருந்தது!
“நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு” என்றாள் விடாமல்!
“இவ்ளோ பெரிய ஹாஸ்பிட்டல் இருக்கிறப்போ, வேற ஹாஸ்பிட்டல் கட்டுற!! நீ… இந்தக் கேள்வி கேட்காத”
“அது நான் என் அப்பாகாக பண்ற ஒன்னு. ஃபிரீ சர்வீஸ்காக. போதுமா?” என்று குரலை உயர்த்தினாள்.
“மெதுவா பேசு, இது ஹாஸ்பிட்டல்”
“சரி, பதில் சொல்லு” என்று சாதரணமானாள்.
“உனக்கு இங்க பொறுப்பு இருக்கிறப்ப, ஃப்ரீ சர்வீஸ்னு புது ஹாஸ்பிட்டல் ஆரம்பிச்சா, உன்னோட ஹண்ட்ரட் பர்ஸன்ட் எந்த ஹாஸ்பிட்டலுக்குனு கேள்வி வரும். அது இந்த ஹாஸ்பிட்டல் பேர பாதிக்காதா?”
‘இதுதான் இவன் பிரச்சனையா?’ என்பது போல் பார்த்தாள்.
“நீ அதிபன்னு ஒருத்தரோட கனவுக்காக யோசிக்கிறப்போ, நான் ராஜசேகர்னு ஒருத்தரோட உழைப்புக்காக யோசிக்கிறேன். அவ்வளவுதான் தாரா!”
“அந்த ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட்ல நான் தலையிட மாட்டேன். ம்ம் டிரஸ்ட் மாதிரி, இல்லைனா என்ஜீஓ… இன்னும் முடிவு பண்ணல சரத்! ஆனா எனக்கு இந்த ஹாஸ்பிட்டல்ல விட்டுப் போற ஐடியா இல்லை”
“நானும் போக சொல்லலை. தேங்க்ஸ் ஃபார் கிளாரிஃபிகேஷன்” என பேச்சை முடித்துக் கொண்டான்.
“இதைத் தவிர… என்கிட்ட பேசறதுக்கு எதுவுமே இல்லையா?” என்று கேட்டு, அவனுடன் பேச்சைத் தொடர நினைத்தாள்.
“இருக்குதே”
“அப்போ பேசு”
“அம்மா, உன்னை நினைச்சு கவலைப்படறாங்க. ஸோ மேரேஜ் பத்தி யோசி தாரா. அம்மாவோட ஹெல்த் கன்டிஷன் பத்தி நான் யோசிப்பேன். அதனால இதைச் சொல்றேன்”
“அவ்வளவுதானா!? வேற இல்லையா?”
“வேற? ஜெகன் பத்தி சொல்லணும். அவன் உன்னாலதான் எம்எஸ் படிக்கப் போகாம இருக்கான். ஸோ அவனைப் போக சொல்லி அட்வைஸ் பண்ணு”
“ம்ம்ம்”
“இப்பலாம்… அவன் ப்யூச்சர் பத்தி நான் யோசிக்கிறேன்”
“ஓகே ஓகே! புரியுது! வேற ஏதாவது?”
“வேற ஒன்னுமில்லை!”
“ஒன்னுமில்லையா!” என்றவள், “என்னைப் பத்தி எப்பவாச்சும் யோசிப்பியா சரத்?” என்றொரு கனமான கேள்வி கேட்டாள்!
அக்கணம் அவன் அமைதியை கையில் எடுத்துக் கொண்டான்.
“இல்ல யோசிச்சிருக்கியா?” என்று கேட்கையில், அவள் குரல் கனத்திருந்தது!
மீண்டும் அமைதி. ஆனால் இம்முறை கேள்விக்காக அல்ல! கேட்டவள் குரலில் இருந்த கனத்திற்காக!!
“நாம ரெண்டு பேரும் நல்லா பேசி ரொம்ப வருஷமாச்சு சரத்!! எனக்… ” என்று பாதியிலேயே நிறுத்தினாள். வருத்தம் மேலோங்கி இருந்ததால், அதற்கு மேல் பேச இயவில்லை. அவனுக்கும், அவள் வருந்துவது தெரிந்தது.
இருவருக்கும் அதிபன் மறைவிற்குப் பின் நடந்த வாக்குவாதம் நினைவிற்கு வந்தது. அதன் பின்னரே இருவரும் பேச்சைத் தவிர்த்திருந்தனர்.
“ஹாஸ்டல்ல சேர்த்துவிடுங்கனு சொன்னா… எனக்கு கோபம் வராதா?” என்று ஒருமாதிரி ஆகிப்போன குரலில் கேட்டான் சரத்.
“நீயும் சொன்னதான?! இவளை ஹாஸ்டல்ல சேர்த்துவிடுங்கனு”
“நீ அன்னைக்குச் சொன்னதை, நான் திருப்பிச் சொன்னேன்”
“நீ அப்படிச் சொன்னது ரொம்பக் கஷ்டமா இருந்திச்சு சரத். ரொம்ப” என்று மட்டியைக் கடித்துக் கொண்டு… மனதின் வலியைக் காட்டினாள்.
தாரா, இத்தனை வருடங்களாய் மனதை அரித்துக் கொண்டிருந்த வலியை அவனிடம் கொட்டிவிட்டோம் என்ற நிம்மதியில் இருந்தாள். சரத், இத்தனை வருடங்களும், இந்த வலியுடனே வாழ்ந்திருக்காளா என்று நினைக்கையில், மன நடுக்கம் கொண்டான்.
எழுந்து, அவளருகே சென்று மேசையின் மீது சாய்ந்து நின்றான்.
“தாரா”
“ம்ம்ம்”
“அன்னைக்கு ப்ராப்ளம் வேற. நீ அம்மாவைப் பேசின. நானும் பேசினேன்”
“இதே ஜெகன் பேசினா என்ன செஞ்சிருப்ப?”
“புரியலை”
“அன்னைக்கு என் இடத்தில ஜெகன் இருந்தா, என்ன செஞ்சிருப்ப?”
“ஓஹ்! நீங்கிறதால ஹாஸ்டலுக்கு அனுப்ப சொன்னதா சொல்ற! ஜெகன்னா அப்படிப் பேசியிருக்க மாட்டேன்னு சொல்ற!! இதானா உன்னோட சந்தேகம்”
அமைதியாக இருந்து ‘ஆம்’ என்று ஒத்துக் கொண்டாள்.
“நல்லா கேட்டுக்கோ. நீயில்ல! ஜெகன், அப்பா… யாரு அம்மா கஷ்டப்படுற மாதிரி பேசினாலும். நான் இப்படித்தான் நடந்திருப்பேன்”
அம்மா மேல் இவனுக்கு இவ்வளவு பாசமா? ஒருநொடி தாரா அதிர்ந்தாள்! அதேநேரம், அந்தப் பாசத்தைத் தன்னிடம் காட்டமாட்டானா என்று ஏக்கம் கொண்டாள்!!
“அன்ட் ஜெகன் அப்படிப் பேசியிருந்தா, நல்லா திட்டிருப்பேன்” – சரத்.
“அப்ப என்னை ஏன் திட்டலை சரத்? திட்டிருக்கலாமே! இப்படிப் பேசாத… தப்பு தாரா! அப்படின்னு சொல்லித் திட்டிருக்கலாமே! ஏன் திட்டலை சரத்?” என்று உரிமையாகக் கேட்டாள்.
சரத்திற்குப், ‘தங்கை’ என்ற உறவின் உரிமையை எடுத்திருக்க வேண்டுமென சொல்கிறாள் என்று புரிந்தது. அன்று நடந்ததை, அதன்பின்னர் நடந்ததையும் நினைத்துப் பார்த்தான்.
இருவருக்கும் இடையே இடைவெளி வந்தது எதனாலென தெரிந்தது. அவளை பார்த்தான். வெளியே உறுதியாக தெரிந்தாலும், உள்ளுக்குள் அவள் உடைந்து இருக்கிறாளோ என்ற உறுத்தல் வந்தது.
அவள் உச்சந்தலை வரை தன் உள்ளங்கையைக் கொண்டு வந்தான். பின்னர் என்ன நினைத்தானோ கையை பின்னோக்கி இழுத்துக் கொண்டான். ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்த தாரா நிமிர்ந்து பார்த்தாள்.
“போதும் பேசினது. போ” என்றான் அமைதியாகிப் போன குரலில்!
“சப்போஸ் எனக்கு மேனேஜ்மென்ட் பொறுப்பு இல்லாம இருந்தா, உனக்கும் எனக்கும் கேப் ரொம்ப வந்திருக்காதோ” என்ற தாராவின் கண்கள் கலங்கின.
“ஏன் இப்படியெல்லாம் நினைக்கிற?” என்றவன் குரல் கஷ்டப்பட்டது!
“எனக்கு இந்த பொறுப்பு எதும் வேண்டாம். நீயும் ஜெகனும் பார்த்துக்கோங்க”
“ஹாஸ்பிட்டல் பொறுப்பு… நம்ம மூனு பேருக்கும் ஈக்வல்தான்”
“இல்ல சரத்… ” என்று தொடங்கியவளிடம், “போதும். லஞ்ச் டைம். போ… போய் சாப்பிடு. பைவ் தேர்ட்டிக்கு விசிட்டர்ஸ் டைம் ஸ்டார்ட் ஆகிடும்ல” என்று முடித்துவிட்டான்.
“ம்ம்” என்று எழுந்து, திரும்பி நடக்க ஆரம்பித்தாள். எதையோ ஒரு நிமிடம் யோசித்தாள். பின் திரும்பி, “சரத்” என்றாள்.
“என்ன?”
“நீ சாப்பிட்டியா?” என்றொரு கேள்வி! அது, சரத்திற்கான தாராவின் கேள்வி மட்டுமல்ல! அவனுக்கான அவளின் அக்கறையும் கூட!
“இல்லை. இனிமேதான்” என்றான் பாதியாகிப் போன குரலில்.
“ஓ!” என்றவள், அப்படியே நின்றாள்.
“என்ன தாரா?” என்று மெல்ல கேட்டான்.
“வெளியில போய் சாப்பிடலாமா சரத்?” என்று மெதுவாகக் கேட்டு நின்றாள். என்ன பதில் சொல்வான்! ஒத்துக் கொள்ளவானா, மாட்டானா என்ற ரீதியில் தாரா நின்றாள்.
“எப்பவும் ஜெகன்கூடதான போவ… இன்னைக்கு என்ன… என்கிட்ட கேட்கிற?” என்று வேறொரு கேள்வி, அவளுக்காக அவனிடம் இருந்தது.
“அதான் கேட்கிறேன். நீ கூட்டிட்டுப் போறீயா?” என்று திரும்பவும் கேட்டாள்.
அவன்மீது அவளுக்கு இருக்கும் அக்கறையைக் காட்டியவள், அவனிடம் அவள் எதிர்பார்க்கின்ற ஆசையைச் சொன்னாள். அவள் அக்கறையோ, ஆசையோ இரண்டுமே அவனுக்குப் புதிதல்லவா? அமைதியாக நின்றான்.
“பக்கத்திலதான். இப்ப போனா… பைவ் தேர்ட்டிக்கு திரும்பிடலாம். ப்ளீஸ் கூட்டிட்டுப் போ சரத்?” என்று கேட்டாள்.
அவள் கேட்டவிதம், முற்றிலும் ஒரு தங்கை அண்ணனிடம் கேட்கும் விதம்! சமாதானம்… அடம்பிடிப்பு… ஆசை… உரிமை… கெஞ்சல்… பாசம்… எல்லா உணர்வுகளும் கலந்த கலவை அது!
இப்படியொரு உணர்வினில் கேட்டுக் கொண்டு நிற்பவளிடம், ஒரு அண்ணன் எப்படி முடியாதென சொல்ல முடியும்! முதலில் ஏன் ‘முடியாது’ என்று சொல்ல வேண்டும்?! சரத் சம்மதித்தான்.
“அப்ப, நான் போய்… ஜெகனைக் கூட்டிட்டு ED என்ட்ரன்ஸ்ல வெய்ட் பண்றேன். நீ வந்திரு. நம்ம மூனு பேரும் போகலாம்” என்றாள் வேகமாக!
அதுவரை அவள் முகத்தில் பரவியிருந்த அழுத்தம் குறைந்து போய், ஆனந்தம் பளிச்சிட்டது! இதில்தான் இவள் சந்தோஷம் இருக்கிறதா என்பது போல் சரத் பார்த்துக் கொண்டிருந்தான்.
“சரத், என்ன ஒன்னும் சொல்ல மாட்டிக்க?” என்று காற்றாகிப் போன குரலில் கேட்டாள்.
“நீ போ தாரா. நான் வர்றேன்” என்று சொன்னதும், தாரா சென்றாள்.
சற்று நேரத்தில் தாரா, ஜெகன் இருவரும் அவசர சிகிச்சை பிரிவு வாயிலில் நின்று கொண்டிருந்தனர்.
“நிஜமா சொல்றியா?” என்று சந்தேகமாய் ஜெகன் கேட்டான்.
“நிஜமா! கூட்டிட்டுப் போறீயானு கேட்டேன்… அவன் ஓகே சொல்லிட்டான்”
“நம்பவே முடியலை”
“வெயிட் பண்ணு. வருவான். அப்போ நம்பு!”
சற்று நேரத்தில் சரத் வந்தான். ஜெகனும், தாராவும் கார் அருகில் சென்றனர். ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்தான். கார் சன்னலைத் திறந்து, “ஏறிக்கோங்க” என்றான்.
இருவரும் சற்றுத் தயங்கினர். அதைக் கண்டதும் சரத் இறங்கி, “என்ன தாரா? போக வேண்டாமா?” என்று கேட்டான்.
“அண்ணா, டிரைவர் வேண்டாம்” என்றான் ஜெகன்.
“ஏன்?”
“அக்காவை வெளிய கூட்டிட்டுப் போகிறப்போ, நாம டிரைவ் பண்ணாதான் அவளுக்குப் பிடிக்கும்”
இப்படியெல்லாம் இவள் எதிர்பார்ப்பாளா என்பது போல் ஒருவித தோற்றம், சரத்திடம்! “ஏறுங்க” என்றவன், “நான் டிரைவ் பண்ணிக்கிறேன்” என்றான் ஓட்டுநரிடம். அவர் இறங்கியதும், கார் கிளம்பியது. இதுவே முதல் முறை! இப்படி மூவரும் செல்வது!!
ஒரு வணிக வளாகம். வார நாட்கள் என்பதால், அந்த உணவுக் கூடம் கூட்டமே இல்லாமல் இருந்தது. மூன்று பேரும் ஒரு இடத்தில் அமர்ந்தனர்.
“ரெஸ்டாரென்ட் போகணும்னு சொல்லிட்டு, இங்க எதுக்கு?” என்றான் சரத்.
“அக்காக்கு, இங்க இருக்கிற ஃபுட் டேஸ்ட் பிடிக்கும்” என்றான் ஜெகன்.
சாப்பாடு வாங்கி வந்து மூவரும் உண்டனர். சாப்பிடும் போது ஜெகன், தாரா பேசியும், சிரித்தும் சாப்பிடுவதைப் பார்த்தபடியே சரத் சாப்பிட்டான்.
சாப்பிட்டு முடிந்ததும், “கிளம்பலாமா?” என்றான் சரத்.
“நீ கிளம்பு ண்ணா. இவ்ளோ தூரம் வந்திட்டு, அக்கா ஷாப்பிங் பண்ணாம போக மாட்டா” – ஜெகன்.
இவன் எப்படி இவளை இவ்வளவு புரிந்து வைத்திருக்கிறான் என்று சரத் யோசித்தான்.
தாரா, “பரவால்ல ஜெகன். ஹாஸ்பிட்டல் போயிடலாம். ஷாப்பிங் பண்ணா லேட்டாகும்” என்று சரத்திற்காகப் பேசினாள்.
“அக்கா, அவன் போகட்டும்! நான் இருக்கேன்” – ஜெகன்.
“எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. நானும் இருக்கேன்” என்று தாராவிற்காக சரத் பேசிவிட்டு, முன்னே நடந்து சென்றான்.
“வா” என்று தாராவைக் கூட்டிக்கொண்டு ஜெகனும் பின் தொடர்ந்தான்.
மூவரும் ஒரு கடைக்குள் நுழைந்தனர்.
ஐந்து நிமிடங்கள் தாராவுடன் சுற்றிவிட்டு, “தாரா, நீ ஷாப்பிங் பண்ணு. நானும் அண்ணனும் இங்க உட்கார்ந்திருக்கோம்” என்றான் ஜெகன்.
அவனது ‘தாரா’ என்ற அழைப்பைக் கவனிக்காமல் ‘சரியென்று’ சென்று விட்டாள். ஆண்கள் இருவரும் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தனர்.
“தாரா-ன்னு சொல்ற. அக்கா-ன்னு மரியாதை இல்லையா?” – சரத்.
“உனக்குத் தங்கச்சினு பாசம் இருக்கா” என்று ஜெகன் பேச ஆரம்பித்தான்.
மேற்கொண்டு எதுவும் பேசாமல் சரத் அங்கிருந்த ஆங்கில மாத இதழைப் புரட்ட ஆரம்பித்தான்.
“அதிசயமா இருக்கு! நீ வந்திருக்க?” என்று ஜெகன் பேச்சைத் தொடர்ந்தான்.
“அவதான் கூட்டிட்டுப் போ-னு சொன்னா”
“அதான! உனக்கா இதெல்லாம் எங்கத் தெரியப்போகுது”
“என்னடா? அவளும் இப்படித்தான் பேசறா! நீயும் இப்படி பேசுற! என்னதான் உங்களுக்குப் பிரச்சனை?”
“அக்கா என்ன பேசினா?”
“என்னைப் பத்தி யோசிப்பியானு கேட்டா?”
“கரெக்ட். அதேதான் நானும் கேட்கிறேன்!! அவளைப் பத்தி யோசிப்பியா?”
“அவளைப் பத்தி யோசிக்காமவா, அலைன்ஸ் பார்த்துக்கிட்டு இருக்கேன்”
“அவளைப் பத்தி யோசிச்சா, நீ அலைன்ஸ் பார்த்திருக்கவே மாட்ட”
“என்ன சொல்ற ஜெகன்?” என்று புரியாமல் சரத் கேட்டான்.
“நீ, அம்மாவைப் பத்தி யோசிச்சதால அலைன்ஸ் பார்க்கிற”
“ஆமா! அவளை நினைச்சு அம்மா கஷ்டப்படுறாங்க. அதான் பார்க்கிறேன்” என்று ஒத்துக் கொண்டான்.
“ஆனா, அவ கஷ்டப்படுறாளே… அது உனக்குத் தெரியலையா?”
இன்னும் சரத்திற்குப் புரியவில்லை. அமைதியாக இருந்தான்.
“அவ லவ் பெயிலியர்னு சொல்லி… ஒரு… ஒன் மன்த் இருக்குமா?! அதுக்குள்ள வேற பையன் போட்டோவைக் கொண்டு வந்து காட்டறீங்க. அதுவும் ரெண்டு நாளைக்கு ஒரு தடவை. நல்லாவா இருக்கு”
“… “
“அம்மா பொறுப்பு வேற! அதனால அவங்க அப்படி நடந்துக்கிறது, ஓகே!! ஆனா நீ அவ ஏஜ் குரூப்தான? உனக்குப் புரியாதா? கொஞ்சம் டைம் கொடுக்க கூடாதா? அதுலருந்து அவ வெளிய வர்றதுக்கு” என்று சொல்லிவிட்டு, ஜெகன் ஒரு புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தான்.
“அவமட்டும் அம்மாகிட்ட நடந்துக்கிற விதம் சரியா?” என்றான் சரத்.
“அவளோட அப்பாக்கிட்டருந்து அவளைப் பிரிச்சுட்டு வந்துட்டாங்கனு, அம்மா மேல ஒரு கோபம் இருக்கு”
“அது சரியானு கேட்கிறேன்”
“தெரியல அண்ணா! ஆனா சொல்றேன்னு தப்பா நினைக்காத, அவளை அவ அம்மாகிட்டருந்தும் பிரிச்சிட்ட மாதிரி தோணுது!”
“என்னடா சொல்ற?” என்று பதறியவன், “அவதான அம்மாகிட்டருந்து ஒதுங்கி நிக்கிறா. என்னமோ நான்தான் காரணம் மாதிரி சொல்ற” என்று சரத் அதே பதற்றத்துடன் பதில் கேள்வி கேட்டான்.
“அப்படியில்லை! ஆனா ரிலேஷன்ஷிப்ப பேலன்ஸ் பண்ணு. நான் சொல்றது உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்”
“என்னய சொல்ற? அவ அப்பாக்கிட்ட நடந்திக்கிறது கரெக்டா?” – சரத்.
“அப்போ அப்பா, அம்மாகிட்ட… அவ நடந்திக்கிறதை வச்சிதான், உனக்கும் அவளுக்கும் இடையில ரிலேஷன் இருக்க முடியும்னு சொல்ற”
“…”
“அவ உனக்குத் தங்கச்சி, அப்படிங்கிற எண்ணம் உனக்கு இல்லயா?”
“அதெப்படி இல்லாம போகும் ஜெகன்”
“அப்பாகிட்ட அக்கா பேசாம இருக்கிறது… எனக்கும் கஷ்டமாதான் இருக்கு. ஆனா அதையும் தாண்டி… அவ எனக்கு அக்கா”
“…”
“ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்து, ‘நீ எம்எஸ் படிக்க போ. நான் சரத்கூட ஆர்க்யூமெண்ட் பண்ணாம இருந்துப்பேன்னு’ சொன்னா”
“நீ என்ன சொன்ன?”
“உண்மையைச் சொல்லனும்னா… உன்னை நம்பி, அவளை விட்டுட்டுப் போக மனசு வரலை. அதனால, நான் எதுவும் சொல்லலை”
சரத் அடிபட்டான்! தங்கை, தம்பி என்ற இரு உறவுகளிடமும் வார்த்தைகளால் அடிவாங்கினான்!!
“இதுக்கு மேல உன்கிட்ட சொல்றதுக்கு ஒன்னுமில்ல. எது எப்படியோ, தயவுசெஞ்சி… அலைன்ஸ் பார்க்கிற ப்ராசஸ்ஸ கொஞ்சம் நிறுத்தி வைங்க” என்று எழுந்து விட்டான் ஜெகன்.
“எங்க போற?” என்று கேட்க, பணம் செலுத்துமிடத்தில் நின்று கொண்டிருந்த தாராவை கை காட்டினான். சரத்திற்குப் புரியவில்லை.
“வெளிய வந்தா, அக்காக்கு நான்தான் எல்லாம் வாங்கித் தருவேன்”
சரத் ஏதோ சொல்ல வரும்போதே, “உடனே, அவகிட்ட பணம் இல்லையானு கேட்றாத. இதுல எனக்கொரு திருப்தி, அவளுக்கு ஒரு சந்தோசம். அது உனக்கு புரியாது!” என்று தாரா நிற்குமிடம் சென்றுவிட்டான்.
ஜெகன் வந்ததும், தாரா எதுவும் சொல்லாமல் வாங்கிய பொருளை அவனிடம் கொடுத்துவிட்டு விலகிவிட்டாள். அவர்கள் இருவரையும் சரத் வித்தியாசமாக பார்த்திருந்தான்.
அதன்பின் இரவு உணவை வெளியே முடித்துவிட்டு, இரவு பத்து மணியளவில் மூவரும் வீடு வந்தனர்.
ராஜசேகர், கீதாவிற்கு பெரிய பெரிய சந்தோஷங்கள்! மூன்று பேரும் ஒன்றாக சென்று வருகின்றனர் என்று!! சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பின் அவரவர் அறைக்குச் சென்றனர்.
அறைக்கு வந்த தாரா வாங்கியதை அப்படியே போட்டுவிட்டு மெத்தையில் விழுந்தாள். எம்எஸ் படிக்கப் போக ஜெகனைச் சம்மதிக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. சரத் என்ன நினைக்கிறான் என தெரியவில்லை.
எதையெதையோ நினைத்துக் கொண்டு வந்தவளுக்கு, கடைசியில் தேவா ஞாபகம் வந்தது!
இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டிருப்பதால் கண்டிப்பாக அழைத்திருக்க மாட்டான் என்று தெரியும். இருந்தும் ஒரு ஆசை! அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்!!
அதிர்ச்சியடைந்தாள்! அத்தனை முறை அவளை அழைத்திருந்தான். ஏன்? எதற்கு? வெளியே செல்வதால்… தாரா அலைபேசியை ‘சைலன்ட் மோடில்’ போட்டிருந்ததாள். எனவே கவனிக்கவில்லை!
தேவாவிற்கு அழைப்பை ஏற்படுத்தினாள். அவன் எடுக்கவில்லை. திரும்பவும் அழைத்துப் பார்த்தாள். ‘சுவிட்ச் ஆஃப்’ என்று வந்தது. திரும்பத் திரும்ப அவள் அழைத்தாள். தொடர்பு எல்லைக்கு அப்பால் என்று வந்தது.
என்னாயிற்று இவனுக்கு? ஏதோ ஒரு வேலையாக செல்வதாக சொன்னானே? அதில் ஏதும் பிரச்சனையா? பாச உண்டியலைப் போல காதல் உண்டியலும் என்று கேள்வி கேட்டு நிறுத்தினாள்.
அதற்கு மேல் எதுவும் யோசிக்க முடியாமல் தவிக்கத் தொடங்கினாள்!

