Kathambari Novels
ஜீவன்
தனிமை தேடிடும் உயிர்…
தன்னலம் நிறைந்த உள்ளம்…
விரிய மறுத்திடும் இதழ்கள்…
விழிநீர் பார்க்கா விழிகள்…
மரியாதைக் கேட்டிடும் மனம்…
மகிழ்ச்சி கிடைக்காத இதயம்…
பாசங்கள் இல்லாத வாழ்க்கையின் போக்கில்,
தன்னை நேசிக்க ‘தான் மட்டுமே’ என்ற
ஒற்றை நூலில் வாழும் – இவனே ஜீவன்!
ஜீவனின் துணை எழுத்து
தனிமை தந்திடும் உற்றார்…
தன்னலம் கருதிய உறவுகள்…
விரிய மறுத்திடும் இதழ்கள்…
விழிநீர் தேங்கிய விழிகள்…
மரியாதைக் காட்டிடும் மனம்…
மகிழ்ச்சி தொலைத்த இதயம்…
பாசங்கள் மறுக்கும் உறவுகளுக்கு
இடையில்,
தந்தையின் நேசமே போதும் என்ற
ஒற்றை நூலில் வாழும் – ஓர் ஜீவன் இவள்!!
தமிழ் மொழி பேசுகின்ற செழிப்பான, எழிலான ஒரு மலைப்பிரதேசம்!
மறைபனியால் மூடப்பட்டிருந்த மலை முகடுகள். வாடைக் காற்று வானிலை தாங்காமல் கடந்து செல்லும் மேகங்கள். முகில் சென்றதும் முகம் காட்டிடும் சூரியன். அந்த இளஞ்சூடு கண்டு விலகிட்ட மூடுபனி. இதனால் தெரிகின்ற மலைப்பரப்பின் பசுமை மற்றும் காட்டு மரங்கள்.
கண்களுக்கு விருந்து படைக்கும் இயற்கை அழகு. நாசியைத் துளைத்துச் சென்றிடும் பரிசுத்தமானக் காற்றின் நறுமணம்.
காற்றுக்கு நிறம் கிடையாது என்று யார் சொன்னது? மிதந்து வரும் இங்குள்ள பனிக்காற்று பச்சை நிறம் கொண்டவை. ஏனென்றால் சுற்றியுள்ள பசுமை அப்படி இருந்தது!!
வருடம் முழுதும் மிதமான வெப்பம் மட்டுமே உணரப்படும் வானிலை. அந்த மிதமான வெப்பம்கூட ஒரு குளிர் காற்றுடனே உடலைத் தீண்டிடும்.
மலையைச் சுற்றிப் போடப்பட்டிருந்த சாலைகள். அதில் அவ்வபோது சென்று கொண்டிருந்த வாகனங்கள். சிறியதும் பெரியதும் என்று மலைச் சரிவுகளில் கட்டப்பட்டிருந்த ஓட்டு வீடுகள். அந்தச் சரிவு நிலப்பரப்பிலிருந்து அப்படியே மேலேயேறி வந்தால் சம நிலப்பரப்பு இருந்தது.
சாலைகள் என்று சொல்ல முடியாத சற்றே பெரிய பாதைகள். பாதைகளின் இரு ஓரங்களிலும் ஒன்றிரண்டு மரங்கள், பச்சை புல்வெளி நிலப்பரப்பு.
சம நிலப்பரப்பு என்பதால் சற்று பெரிய பெரிய வீடுகள் இருந்தன. வீடுகளின் வடிவங்களில் சிறு மெனக்கெடல் இருந்தது. ஆனால் பெரும் இடைவெளிக்கு இடையிலே வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அப்படி ஒரு வீட்டின் முன்னே ஐந்து சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அவ்வீட்டின் அமைப்பு கீழே நடுத்தர குடும்பத்திற்கு ஏற்றாற் போல் இருந்தது. வீட்டின் மேலே ஒரு சிறிய அறை தெரிந்தது.
விளையாட்டு மும்முரத்தில் பந்து அந்த வீட்டினுள் சென்றுவிடுவதும், அதைப் போய் உரிமையுடன் எடுத்து வருவதும், திரும்ப விளையாட்டை தொடர்வதும், என சிறுவர்கள் விடுமுறையைச் செலவழித்துக் கொண்டிருந்தனர்.
அந்த வீட்டின் முன்வாசலில் அமர்ந்தபடி, விளையாட்டை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார், ஒரு பெண்மணி. சற்றே வயதான பெண்மணிதான். வீடு, அவருக்குச் சொந்தமானதுதான். அவர் தனியாக வசித்துவருகிறார்.
அப்பெண்மணியின் பெயர் வள்ளி. சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி ‘வள்ளிம்மா’ என அவரை அழைப்பார்கள். இவரின் வாரிசுகள் அயல் நாட்டின் பணமதிப்புடன் வாழ்வதால், இவர் இங்கே தனிமையுடன் வாழ்கிறார்.
இவர் வளவளவென பேசும் பழக்கம் இல்லாதவர். நறுக்கென்று நியாயமாகப் பேசுபவர். சிறிது நேரத்திற்குப்பின் வயதின் காரணமாக வள்ளிம்மா அங்கே அமர்ந்திருக்க முடியாமல், வீட்டின் உள்ளே சென்று விட்டார்.
அச்சிறுவர்களுக்கு விடுமுறை தினம் என்பதால் விளையாட்டுத் தொடர்ந்தது.
சற்று தூரம் கடிகாரத்தின் நொடி முட்கள் பயணித்தப் பின்னர், “வள்ளிம்மா… வள்ளிம்மா” என்ற குரல்களுடன் வீட்டின் கதவு வேகமாகத் தட்டப்பட்டது.
அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள்தான் கதவைத் தட்டினார்கள். கதவைத் திறந்தார் வள்ளிம்மா. சிறுவர்கள் ஏதோ ‘வேண்டி’ நிற்பது போல் தெரிந்தது.
“என்ன வேணும்?” என்றார் கதவை நன்றாகத் திறந்து கொண்டு, வெளியே வந்த வள்ளிம்மா.
“பால்கனியில பந்து விழிந்திருச்சு” – இந்த வசனம் ஒரு சிறுவனிடமிருந்து.
இதுவும் வழக்கம்தான். இவர்கள் விளையாடுவது. பந்து வீட்டின் பால்கனியில் சென்று விழுவது. வள்ளிம்மா மேல் வீட்டின் சாவியைத் தருவதும்… பந்தினை எடுத்து வந்து விளையாட்டைத் தொடர்வது.
“சாவி தாங்க” என்று ஒரே குரலில் கத்த ஆரம்பித்தனர், சிறுவர்கள்.
“ஐயோ பந்து மேல விழுந்திருச்சா. இன்னைக்கு யார் அடிச்சா?” என பேச்சை வளர்த்து, தன் தனிமைக்கு, அவர்களிடத்து தீர்வு காண விழைந்தார்.
“நான் அடிக்கல. இவன்தான்” – ஒரு சிறுவன்.
“வள்ளிம்மா சாவியைத் தாங்க” – பொறுமை இல்லாமல் மற்றொரு சிறுவன்.
சிறுவர்கள் விளையாடும் மனநிலையில் இருந்ததால், வேறு பதில் தர மாட்டார்கள் என்று புரிந்தது.
“பசங்களா மேல் வீட்டுக்கு ஆள் வந்தாச்சு. போய் வாங்கிக்கோங்க” என்று சொல்லிவிட்டு வெளி வாசலில் அமர்ந்து விட்டார். வாசலின், முன்புறத்தில் இருந்துதான் மாடிக்குச் செல்வதற்கானப் படிக்கட்டுகள் இருந்தன.
“தேங்க்ஸ் வள்ளிம்மா” என்று சொல்லியவாறு, சிறுவர்கள் படியேறி மாடிக்குச் சென்றனர்.
அந்த வீட்டின் மாடி அறை. கீழ் உள்ளது போல் பெரியது கிடையாது. ஒரே ஒரு சிறு அறை மட்டுமே. குளியலறை வசதிகூட அறையின் வெளியே மாடியின் மற்றொரு ஓரத்தில்தான் இருந்தது.
வீட்டு கதவு பூட்டியிருந்தது. அதை ஒருமுறை தட்டினர். திறக்கப்படவில்லை. மறுமுறையும் தட்டினர், சிறுவர்கள். இம்முறை கதவு திறக்கப்பட்டது.
ஒரு மனிதன் நின்றிருந்தான். அந்த மலைப் பிரதேசத்துக்குப் புதிய மனிதன் அல்லவா! ஆதலால் சிறுவர்கள் அவனைப் பார்வையிட ஆரம்பித்தனர்.
மிருதுவான பாத அணிகள் பாதத்தை மூடியிருந்தன. மிகவும் சாதாரணமாக காட்டும் பேன்ட் மற்றும் காலர் வைத்த சட்டை. சட்டையின் முதலிரண்டு பொத்தான்கள் போடப்படவே இல்லை.
இது இன்று மட்டுமா? இல்லை என்றும் இப்படித்தானா? நாளையும் இவனைப் பின் தொடர்ந்தால், நாம் ஒரு முடிவுக்கு வந்து விடலாம்!
புருவங்கள் சுருங்கிய நிலையிலே இருந்தன. முகத்தில் ஒரு கடினத் தன்மைத் தெரிந்தது. காலணியின் மிருது தன்மையில் ஒரு பத்து சதவீதம் இருந்தாலும், முகத்தோற்றம் இலகுவாக இருக்குமோ? என்றாவது கனிவான முகம் காட்டும் போது கண்டறிந்து கொள்வோம்!!
மணிக்கட்டைக் கவ்விக் கொண்டிருந்தக் கைக்கடிகாரம் வேறு, ஒருவித இறுகுத் தன்மை உணர்த்தியது.
மேலே கூறியவை, உருவத்தைப் பற்றிய கேள்விக்கானப் பதில். இனி உள்ளம்
பற்றிய வினாக்கள் வருகின்றன. இந்த வினாவைப் பத்து மதிப்பெண் வினா என நினைத்து விரிவான விடை எழுத வேண்டாம். அது இரண்டு மதிப்பெண் கேள்விதான்.
அமீபா அளவில் கூட தன் வாழ்வில் உறவை விரும்பாத உள்ளம். நன்றாகப் பேசுவான். ஆனால், என்றுமே உதட்டிலிருந்து பேசுபவன். உள்ளத்திலிருந்து பேச மாட்டான்.
பின் குறிப்பு… உதடுகள் சிரிக்கப் பழகவில்லை.
அவ்வளவே பதில்!
இப்போது சிறுவர்கள் அறையை பார்க்க ஆரம்பித்தனர். இதுவரை காலியாக இருந்தது அல்லவா… எவ்வாறு உள்ளது என அறிய ஆவல்! ஆனால் அதற்குள், அவர்கள் முன் ஒரு சொடுக்குச் சத்தம் கேட்டது. நிமிர்ந்து அந்த மனிதனைப் பார்த்தனர்.
‘என்ன வேணும்?’ என அவன் முக பாவனை கேட்டது. திரும்பவும் பிள்ளைகள் அறைக்குள் தலையை விட்டனர்.
“ப்ச், என்ன வேணும்?’ என்று வாய் வார்த்தையாகவே கேட்டு விட்டான்.
“அண்ணா” என்று ஒரு சிறுவன் குழைவாக ஆரம்பித்தான்.
” ப்ச்… என் பேரு ஜீவன்” என்று புதியவன் சொல்லி முடிக்கும் முன், “ஓ… ஜீவன் அண்ணா…” என மற்றொரு சிறுவன் வாக்கியத்தை முடிக்கும் முன், “வெயிட்! என் பேரு ஜீவன். நீங்க ஜீவன் சாருன்னு கூப்பிடுங்க. இல்லைனா… சாருன்னு கூப்பிடுங்க” என்று குறுக்கிட்டான்.
‘ஜீவன் சார்’ எதிரில் நின்றவர்கள் அவனை உர்ரென உற்று நோக்கினார்கள்.
உண்மை என்னவென்றால், ஜீவனின் பார்வை முதலிருந்தே, அப்படித்தான் இருந்தது.
“நீங்க ஸ்கூல்ல வேலை பார்க்க வந்திருக்கீங்களா??” – இது ஒரு சிறுவனின் கேள்வி. முகத்தில் முறுவலுடனே கேட்டான்.
“ப்ச், இல்லை. என்ன வேணும்னு சொல்லுங்க?” – ஜீவனின் கேள்வி.
“பந்து பால்கனியில விழுந்திடிச்சு. அதை எடுத்துத் தாங்க சார்”
ஜீவன் திரும்பிப் பார்த்தான். எதுவுமே கிடப்பது போல் தெரியவில்லை. “சார், அந்தப் பக்கம் இருக்கும்” என்று அவனுக்கு இடம் சொன்னான் ஒரு சிறுவன்.
மெல்ல நடந்து சென்று பந்தை எடுத்து வந்தான் ஜீவன். அதற்குள் சிறுவர்கள் உள்ளே வந்து அறையைப் பார்வையிட்டனர். இதற்கு முன்னே இருந்ததிற்கும், இப்பொழுது இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
அறையின் ஒரு மூலையில் மரத்தாலான திவான் இருந்தது. இப்படி நீளமில்லா இடத்தில், இவ்வளவு உயரமான மனிதன் எப்படிப் படுத்துறங்க முடியும்??
பிள்ளைகளுக்குத் தோன்றியது இது!
மற்றொரு இடத்தில் சிறிய குளிர்சாதன பெட்டி இருந்தது. திறந்து பார்த்தனர். அதிக அளவில் தேநீர் பைகள் இருந்தன. ‘தேநீர், இவனது இஷ்ட பானம்’ என்று நினைத்தனர்.
சிறார்களின் முடிவு இது!
மற்றொரு ஓரத்தில் ஓர் மேசை, அதன்மேல் ஒரு மடிக்கணினி மற்றும் இரவு விளக்கு. அதனருகில் ஒரு முக்காலி கிடந்தது. இவனது வலுவான தேகத்தை, இந்த முக்காலி எப்படித் தாங்கும்??
சிறுவர்களின் சந்தேகம் இது!
ஒரே ஒரு ‘சூட்கேஸ்’ தெரிந்தது. இவ்வளவுதானா துணிமணிகள்?? மிகவும் எளிமையான மனிதன் போல!
பிள்ளைகளின் கணிப்பு இது!
இதுகூடவே பெரிய புத்தக அலமாரி இருந்தது. பக்கத்தில் சென்று பார்த்தனர். முழுதும் பொருளாதாரம் பற்றிய புத்தகங்கள். அந்த அறையில் அவனை விட உயரமாக மற்றும் அகலமாக இருந்த பொருள் அது ஒன்றுதான். மேல்மாடிக்கு குடிவந்தவனின், மேல் மாடி படு ‘ஸடிராங்க்’ போல?
சிறார்களின் சிலாகிப்பு இது!!
“பார்த்தாச்சா??” – ஜீவன்.
“ஜீவன் சார், திங்க்ஸ் எல்லாம் இனிமேதான் வருமா??” – சிறுவன்.
“ப்ச்!! அவ்ளோதான்” – ஜீவன்.
இவ்வளவு கம்மியாகவா ஒருவனின் அன்றாட தேவை? இதற்கேதும் காரணம் இருக்குமோ? இருக்கலாம்! அதை அவனாக கூறுவான் என நம்புவோமாக!
“சரி சார் பந்தைக் கொடுங்க”
“கொடுக்கிறேன். வாங்க” என அறையின் வெளியே சென்றான். சிறுவர்களும் அவனைப் பின்தொடர்ந்து வெளியே வந்தனர். அறை கதவைத் தாழிட்டான்.
“ஜீவன் சார் இப்போ கொடுங்க”
“கொடுக்கிறேன். பட் என்கூட ஒரு கேம் விளையாடனும்”
‘இது என்ன விதிமுறை??’ என்பது போன்று சிறுவர்களின் முகத் தோற்றம்.
“எங்களுக்கு கிடைச்சிருக்கிற டைம் ரொம்ப கம்மிதான். இதுல நீங்க வேற. ப்ளீஸ் அண்ணா பந்தைக் கொடுங்க” – சிறுவன்.
“ப்ளீஸ் ‘என்னது’ ??” என்று கேட்டான் ஜீவன்.
“சாரி சார். ப்ளீஸ் சார். போதுமா?”
“ஜஸ்ட் ஒன் கேம்தான்” – ஜீவன்.
விளையாடாவிட்டால் பந்தை தர மாட்டான் என சிறுவர்களுக்குத் தெரிந்தது. பின்னர் அவர்களுக்குள் பேசத் தொடங்கினர். பேச்சின் முடிவில், “ஓகே சார்” என்றான் சிறுவன் ஒருவன்.
“கிழ வாங்க. ஒரு ஓவர் தாறோம்” – மற்றொரு சிறுவன்.
“கிரிக்கெட் வேண்டாம். நான் சொல்ற கேம் விளையாடலாம்” – ஜீவன்.
‘இது வேறயா??’ என்ற மனநிலையில் பிள்ளைகள்.
“சரி சொல்லுங்க சார்” – சிறுவன்.
“கேம் நேம் அப் அண்ட் டவுன்” – ஜீவன்.
“அப் அண்ட் டவுனா! அப்படின்னா??” – ஒரே குரலில் சிறுவர்கள்.
“நான் அப்-ன்னு சொன்னா, அந்த பிளேஸ்தான் சேஃப். ஸோ எல்லாரும் இங்க எதிலயாவது ஏறி நிக்கணும்” என்று சுற்றி இருந்த திண்டு, ஏணி, கதவுகளைக் கை காட்டினான்.
ஜீவன் கை சென்ற பாதைகளின் வழியே, சிறுவர்களின் பார்வைகள் சென்று வந்தது.
“டவுன்னு சொன்னா…”
“டவுன்தான் சேஃப். கீழதான் நிக்கணும். அதான?” – விளையாட்டை முதலில் புரிந்து கொண்ட சிறுவன்.
“கரெக்ட்” – ஜீவன்.
“சார்! வேண்டாம். கீழ வாங்க. கிரிக்கெட் விளையாடலாமே?” – ‘இதெல்லாம் ஒரு விளையாட்டா?’ என்ற எண்ணம் கொண்ட சிறுவன். ‘முடியாது’ என்பது போல தலையசைத்துப் பதில் எழுதினான்.
“வேணா ரெண்டு ஓவர் தர்றோம் சார்” – கொஞ்சம் தாராள மனம் கொண்ட சிறுவன்.
“பந்து வேணும்னா அப் அண்ட் டவுன் கேம் விளையாடனும்” என்றான் ஜீவன் கராராக.
வேறு வழியில்லாமல் சிறுவர்கள் விளையாட ஆரம்பித்தனர். ‘அப், டவுன்’ என சொல்வதற்கு ஏற்ப மேலே ஏறியும், கீழே இறங்கியும் தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர். இதுபோல் செய்யாமல் நின்ற சிறுவர்கள் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
சிறு பொழுதுகள் கழிந்தபின் ஜீவன் கீழே செல்லப் படியிறங்க ஆரம்பித்தான்.
“ஜீவன் சார், சார்” என அவன் பின்னேயே ஓடிவர ஆரம்பித்தனர். நான்கைந்து படிகள் சிறுவர்களைவிட முன்னே சென்றவன், சட்டென்று திரும்பி நின்றான். சிறுவர்களும் நின்றார்கள்.
அவர்களைப் பார்த்து, “கேட்ச்” என்று கிரிக்கெட் பவுலிங் போடும் பாணியில் பந்தினைத் தூக்கி எறிந்துவிட்டு… திரும்பவும் இறங்க ஆரம்பித்தான். ஜீவன் செய்த விதத்தைப் பார்க்கும் போது அத்தனை ‘ஸ்டைலாக’ இருந்தது.
இதுவும் கூட சிறுவர்களுக்குத் தோன்றியதுதான்!!
ஒரு சிறுவன் பந்தினைச் சரியாக பிடித்துக்கொண்டான். எனினும் ஜீவன்மீது சிறுவர்களுக்கு கோபம் வந்தது. விளையாட்டு நேரத்தை வீணடித்துவிட்டான் என்றதால் வந்த கோபம்!! வேகமாகக் கீழிறங்கி வந்தார்கள்.
“அண்ணா தேங்க்ஸ்…” என்று இரண்டு சிறுவர்கள் சொல்லியபடி, அவனை இடித்துக் கொண்டு சென்றனர்.
“ப்ச்” – இது ஜீவன்.
“ஜீவன் அண்ணா தேங்க்ஸ்” – இன்னும் இரு சிறுவர்கள் சொல்லிச் சென்றது.
“ப்ச்” – ஜீவன்.
“ஜீவன் அங்கிள் பை” – கடைசியாக கோபத்துடன் வந்த பையன் கத்திவிட்டு, மற்றவர்கள் போல ஓடிப் போய் விட்டான்.
ஜீவன், “ஏ! சொன்னேன்ல மரியாதைக் கொடுத்துப் பேசணும்னு. ஒரு தடவை சொன்னா புரியாதா??” என்று ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டார்கள் போல, முகத்தில் அத்தனை பெரிதானக் கோபத்தைக் காண்பித்தான்.
‘ஏன்? அண்ணன், அங்கிள் இவையும் மரியாதை தரும் அழைப்புகள் தானே? இதற்கு ஏன் கோபம்?? ஏனென்றால் அவை உறவைக் குறிக்கின்ற அழைப்பு! அது அவனுக்குத் தேவையில்லை!!
அதுபோல், ஜீவன் என்றும் அழைக்க கூடாது. ஏனெனில் அது அழைப்பவருக்கு அவனிடத்து உரிமையைத் தந்துவிடும்! எனவே அதுவும் கூடாது!!
வள்ளிம்மா வாசலில்தான் இருந்தார். ஜீவன் கோபத்தைக் கண்டதும், எழுந்து நின்றார். அவன் கடைசிப்படி வந்த பின்தான் அவர் இருப்பதைக் கண்டான்.
அவர் கண்ணில் பயமும் பரிதாபமும் சரிவிகிதத்தில் தெரிந்ததோ? ஏன், தன் பின்புலம் ஓரளவிற்குத் தெரிந்ததாலோ? இப்படி எல்லாம் ஐயம் கொண்டான்.
ஆனால் வள்ளிம்மா சாதரணமாக பார்த்திருந்தார். மற்றவர்கள் போல அவர் அல்ல என்று அவனுக்குத் தெரியவில்லை.
சட்டென்று எதுவும் பிடிக்கவில்லை. வீட்டை விட்டு வெளியேறி வீதியில் நடக்க தொடங்கினான். இங்குதான் செல்ல வேண்டும் என்று எந்த இலக்கும் இல்லை என்பதால், பேன்ட் பாக்கெட்டில் கைகளை விட்டபடி இஷ்டத்திற்கு நடந்தான். பதினைந்து நிமிட நடைக்குப் பின், சமதளப் பரப்பைத் தாண்டி மலைச்சரிவு இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
சுற்றிலும் விழிகளைச் சுழல விட்டான்.
ஒரு புறம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள் நிறைந்த பள்ளத்தாக்கு. மறுபுறத்தினில் சாலையிலிருந்து சற்றே உயரத்திலிருந்த மரங்கள் நிறைந்த பகுதி. மிக மிக அருகில் தவழ்ந்து செல்கின்ற வெள்ளை மேகங்கள். தூரத்தில் தேயிலைத் தோட்டங்கள்.
இருபுறத்திற்கும் இடையே சென்ற குறுகலான பாதையில் நடப்பது அத்தனை உற்சாகம் தந்தது. பத்து நிமிடத்திற்குப்பின், மஞ்சள் வர்ணம் தீட்டப்பட்ட கல் இருக்கை இருந்தது. சற்று எட்டி நடைபோட்டு அதன் அருகில் வந்து நின்றான். கொஞ்சம் பாழடைந்த இருக்கைதான்!
இப்பொழுது இங்கிருந்தபடி விழிப் பார்வையைச் சுழல செய்தான்.
இந்த இடத்திலிருந்து பார்க்கும் போது, பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள வீடுகள் தெரியவில்லை. இதற்கு எதிரே மரங்கள்!! பின்னால் செடி கொடிகள் மண்டிக் கிடக்கும் பள்ளத்தாக்கு பகுதி. அந்த இடம் இருள் பரவிய மாலை நேரம் போல் இருந்தது. நன்றாகவே குளுமை தெரிந்தது.
கல் இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு, பின்னோக்கி தலை சாய்ந்து கண்களை இறுக்க மூடினான்.
இதயம்… இயற்கையுடன் சேர்ந்து கொள்ள ஆரம்பித்தது. தனிமை அத்தனை சுகமானதாக இருந்தது. ஆயுளின் இறுதிவரை இந்த தனிமை மட்டும் அருகே இருந்தால் போதும் என்று நினைத்தான்.
தனிமை மற்றும் தன்னை சுற்றி இயற்கை தந்த பசுமை என்று இரண்டையும் ரசிக்கத் தொடங்கினான். இதயம் ரசனை கொண்டது. ஆனால் முகம் அதைப் பிரதிபலிக்கவில்லை.
கைக்கடிகாரத்தின் பெரிய முள் ஒரு அறுபது முறை நகர்ந்திருந்தது.
அக்கணத்தில் திடீரென்று ஒரு விம்மல் சத்தம். மெதுவாக கண்கள் திறந்தான். எங்கே என்று திரும்பிப் பார்த்தான். அதே கல் இருக்கையின் மற்றொரு புறம், ஒரு பெண் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
அப்பெண் பற்றி ஒரு வரியில் சொல்லிவிடலாம். அவள்… பிரம்மன் பிரத்யேக பிரயத்தனம் கொண்டு படைத்த படைப்பு. ஒரே ஒரு குறை சற்று மெலிவான தோற்றம். அழும்போது கழுத்து எலும்புகள் தெரிந்தன.
இவள், இங்குள்ள இயற்கைக்கும் இருக்கைக்கும் பழக்கப்பட்டவள் என்பதால், இந்த ஒற்றை வரி நமக்காக மட்டும்! ஜீவன் சார்? இல்லை, அவர் கருத்திற்கும் கவனத்திற்கும் இவ்வரி செல்லவில்லை!
புறங்கையாலும், சேலையின் முந்தானையாலும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அழுகை சற்றே மட்டுப்பட்டது.
ஜீவன் திரும்பவும் கண்களை மூடிக்கொண்டான். சுற்றியிருந்த உயரமான மரங்களில் வசிக்கும் புள்ளினங்களின் ‘கீச் கீச்’ என்ற சத்தம் கேட்டது. அந்த ஓசைக்கேற்ப மரங்கள் அசைவதைக்கூட அவன் மனம் உணர்ந்து. அதனுடன் லேசான தூரலும் சேர்ந்து கொண்டது.
பசுமை… பனிக்காற்று… பகல் பொழுதின் தூரல்… வேறென்ன வேண்டும்!!
இந்தப் பெண் மட்டும் அருகில் இல்லையென்றால், இதைவிட ஒரு அழகான ரம்மியமான சூழல் கிடைத்திருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.
கைக் கடிகாரத்தின் முட்கள் வெகு தூரம் ஓடிய பிறகு திரும்பவும் அழுகுரல் கேட்க ஆரம்பித்தது. ஜீவன், “ப்ச்” என்று சற்று சத்தமாகவே சொல்லிக் கண் திறந்தான்.
ஒருநாளில் எத்தனை முறை ‘ப்ச்’ என்று சொல்வீர்கள், ‘ஜீவன் சார்’. குறைத்துக் கொள்ளுங்கள். – இது நாம்.
ப்ச் என அவன் சொன்னது கேட்டதால் திரும்பிப் பார்த்தாள். ‘இவருக்கும் தான் இடைஞ்சலாக இருக்கிறோமா?’ என்று நினைத்து, “ஸாரி சார்” என்றாள்.
‘ஜீவன் சார்’ தனிமைத் தரணியை அசைக்கப் போகின்ற பெண்ணின் குரலை, முதல் முறையாகக் கேட்டான் ஜீவன்.
